பக்கங்கள்

புதன், 28 ஜூன், 2017

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?“பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள இந்து சமூக சித்தாந்தத்தை நான் நிராகரிக்கிறேன்’’ என்று 3.10.1954இல் அகில இந்திய வானொலியில் பேசினார். 

அப்படியிருக்க, அவர் வாழ்ந்தபோது மட்டுமல்ல. இறந்தபோதும் இந்துவாகவே இருந்தார் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய திரிபுவாதம்? ஆங்கிலேயர் காலத்திலிருந்து சட்டம் தரும் விளக்கம் ‘இந்து’ என்பதற்கு என்னவென்றால், யூத, கிறித்துவ, இசுலாமிய, பார்சி மதங்களைத் தவிர மற்றைய மதங்கள் அனைத்தும் என்று பொருள்படும். அத்தகைய இந்து சட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் சில திருத்தங்களைத் தந்தார். 

பிறகு அது ஏற்கப்படவில்லை. திருத்தம் தரும்போது புது மதம் என பெயர் சூட்டும் பிரச்சினை வராது.

இந்து மதமா?

இந்தியாவில் உள்ள ஜைன, பவுத்த மதங்கள் அவைதீக மதங்கள் எனப்படும். அதாவது வேதங்களை ஏற்க மறுத்த மதங்கள். எந்த மதமும் இல்லாத காலத்தில் வேதமதமாகிய ஷண்மதங்கள் உருவாக்கப்பட்டன. 

சைவம், வைணவம், கவுமாரம், காணபத்யம், சாக்தம், சிரேவம் என்பவை அவை. இவற்றை ஒன்றாக்கியவன் வில்லியம் ஜோன்ஸ் என்பான். அவன் சூட்டியதுதான் இந்து என்பது. இந்து எனும் பெயர் வந்தே 218 ஆண்டுகள்தான் ஆகின்றன. 

எனவே, இந்து மதத்தில் இருந்து பிரிந்து தோற்றுவிக்கப்பட்டவை சமணமும் சாக்கியமும் என்பது தப்பு. சமணமும் சாக்கியமும் ஆரிய மதங்களின் கருத்தை ஏற்க மறுத்தவர்களின் திரளைக் கொண்டது. எனவே, இந்து மதத்தின் கிளைகள் என்ற  ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிரச்சாரம் பித்தலாட்டமானது. விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பட்டபோது 1964இல் கொடுக்கப்பட்ட திரிபுவாத வியாக்யானம் அது.

இந்து மதத்தை அழிக்க வேண்டும்

1936இல் பஞ்சாப், ஜட்பட்தோடக் மண்டலில் தலைமை உரை ஆற்றுவதற்காக அம்பேத்கர் தயாரித்த உரையை மேற்கோள் காட்டி அவர் இந்துத்வா அம்பேத்கர் என்கின்றனர்! 

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சொற்களை / வாக்கியங்-களைப் பொறுக்கி எடுத்து மேற்கோள் காட்டுகிறார்கள். இது மோசடி.

“இந்து சமூக அமைப்பை சீர்திருத்தம் செய்வது எப்படி?’’ என்ற கேள்வியை எழுப்பியவர்,
“ஜாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையுமே வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். 

ஸ்ருதிகளையும் ஸ்மிருதி-களையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும். வேறு எதுவும் பயன் தராது. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு’’ என்றவர் அம்பேத்கர். (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு _ தொகுதி 1 _ பக்கம் 109)
ஸ்ருதி, ஸ்மிருதி ஆகியவற்றை அடிப்படை-யாகக் கொண்ட மதம் இந்துமதம் தானே! அதைத் தானே அழிக்க வேண்டும் என்றார் பாபாசாகேப். 

புண்புரையோடிச் சீழ்பிடித்துச் சாகும் நிலைக்குப் போயுள்ள இந்து மதத்தை அழிக்கத்தான் சொன்னார். மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று ஜாதி ஒழிப்புச் சங்கத்தில் பேசுவதை சங்கத்தார் ஏற்க மறுத்தனர். மதத்தை நீக்கக் கோரினர். பாபாசாகேப் ஒரு சொல்லைக்கூட நீக்க முடியாது என்று கறாராகக் கூறிவிட்டார். 

மாநாட்டுக்கும் போக மறுத்துவிட்டார். தம் ஆங்கில உரையை நூலாக வெளியிட்டார். பெரியார் அதனைத் தமிழில் மொழி-பெயர்த்துக் ‘குடிஅரசில்’ வெளியிட்டார். நூலாகவும் பல பதிப்புகளை வெளியிட்டார்.

ஜாதியை ஒழிக்கும் வழி எனும் இந்நூல் பற்றி காந்தியார் தம் பத்திரிகையில் ஏதோ எழுதினார். அம்பேத்கர் பதில் எழுதும் போது காந்தியாரை, “முன்னேறுவதற்குப் பதில் பின்னடைந்திருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டார். எள்ளல் நடையில் நிறைய எழுதப்பட்ட பெரிய கடிதம் அது.


அம்பேத்கரைப் பற்றிய புரட்டு

இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டியது என அம்பேத்கர் பேசவில்லை, என்று அடிக்கடி கூறுகிறார்கள். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தால் கேட்போர் மெய் என நினைக்கத் தூண்டும் என்ற வகையில் இட்லரின் விளம்பர மந்திரி கோயபல்ஸ் கடைப்பிடித்த தந்திரத்தை இவர்களும் கையாள்கிறார்கள். 

ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் அச்சிடப்பட்ட நூல்களாக இருக்கின்றன என்பதையும் அவற்றை எவரும் எளிதில் படித்து உண்மையை உணரலாம் என்பதும் அவர்கள் புத்தியில் படவில்லையோ? 

சாஸ்திரங்களும் வேதங்களும் ஒழிக

சாஸ்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றின் அதிகாரத்தை அழிக்க வேண்டும்’’ என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர் தொகுதி 1, நூல் பக்கம் 101). “ஜாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையும் நீங்கள் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும் ஸ்மிருதி-களையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும்.’’ (அதே நூல் பக்கம் 109) எனவே, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லவில்லை என்பது பொய் அல்லவா?

“இந்துமதம் என்பது என்ன? அது தத்துவங்களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா? இந்து மதம், வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால் யாகம், சமூகம், அரசியல், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிகள், ஒழுங்கு முறைகள் ஆகிய எல்லாம் கலந்த தொகுப்பாகவே இருக்கிறது... வேதங்களில் தர்மம் என்ற சொல் பெரும்பாலும் மதக் கட்டளைகளையும் சடங்குகளையும் குறிப்பதாகவே பயன்படுத்தப் பட்டுள்ளது. எளிமையாகச் சொன்னால், இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியான வகுப்பு ஒழுக்க முறையே. 

இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். அந்த சட்டங்கள் நேற்றும் இன்றும் இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. இவை ஒரு வகுப்புக்கு இருப்பது போல் இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப் பட்டிருப்பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது.

என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக்கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகும் அல்லவா? எனவே இப்படிப் பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. (அதே நூல் பக்கம் 111) இப்படிப்பட்ட, மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல. 

இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதை மதம் என்ற பொய்ப் பெயர் சூட்டியிருக்கும் முகமூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்றே நான் கருதுகிறேன். “ஒரு தடவைக்கு மேல் இரு தடவை மதத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிறார் அம்பேத்கர். 

இதற்கான காரணகாரியங்களையும் விளக்கிச் சொல்லியிருக்கிறார். இத்தனைக்குப் பின்பும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பேசுவது முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயலும் மடத்தனமான காரியம்தான். இந்துக்களின் கூட்டத்தில் இந்துக்களின் மதம் தொடர்பாகப் பேசும் கடைசிக் கூட்டமாக இது இருக்கக் கூடும் என்று கூறியே 1936இல் அண்ணல் பேசினார். அதனை மறைத்தும் திரித்தும் எழுதியும் பேசியும் பித்தலாட்டம் செய்கின்றனர்.

விக்கிரகங்களை உடையுங்கள்

இந்துமதம் என்பதன் முக்கிய வழிபாட்டு முறை விக்கிரக வழிபாடுதான். கடைத் தரத்தில் உள்ள பக்தர்களுக்குத்தான் சிலை உருவ வழிபாடு அவசியப்படுகிறது என்றார் விவேகானந்தர் எனப்படும் நரேந்திரன். இந்துக்களில் எல்லாருமே கடைசித் தரத்திலுள்ள கடவுள் பக்தர்கள்தான். 

எனவே இவர்களுக்கு சிலை வணக்கம் தேவை. அந்தத் தேவையை இந்துமதம் மட்டுமே நிரப்புகிறது. உலகில் ஏனைய மதங்கள் சிலை (உருவ) வழிபாட்டை ஒழித்துவிட்டன. இந்து மதத்தால் அதனை ஒழிக்க முடியாது. ஆனால் அம்பேத்கரோ திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். நான் விக்கிரகங்களை வழிபடுபவன் அல்லன். 

அவற்றை உடைப்-பதில் நம்பிக்கை உடையவன்’’ என்று 1943இல் எழுதியிருக்கிறார் (மார்ச் 15இல்) தொகுப்பு 1 பக்கம் 288) இதற்குப் பிறகும் இந்துத்துவ அம்பேத்கர் என்பதா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அம்பேத்கரின் முயற்சி

இந்து சட்டத்தில் பார்ப்பன, சத்திரிய, வைசியர் எனும் பூணூல் அணியும் தகுதிபெற்ற (சவர்ண) ஜாதியினருக்கும், பூணூல் அணியக் கூடாத (அவர்ண) சூத்திர ஜாதியினர்க்கும் பாகுபாடு காட்டப் பட்டிருப்பதுவும், ஆண்கள், பெண்கள் இருவர்க்குமிடையே கூடப் பாகுபாடு உள்ளதும் தெரிந்த செய்திதான். இது புதிய இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 15க்கு எதிரானது என்பதால், ஒரே சீரான இந்து சட்டம் மிகவும் அவசியம். சட்ட முன்வரைவை எதிர்த்தவர்கள் இதனை உணர்ந்து கொள்ளாமலே எதிர்த்தார்கள் என்பதை டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்-காட்டினார்.

புதிய அரசமைப்புச் சட்டக் கூறு 13இன்படி பழைய, முரணான சட்டங்கள் செல்லாதவை ஆகிவிடும்; ஆதலால் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டே ஆகவேண்டும் என்றும் சட்ட அமைச்சர் வாதிட்டார்.

சட்டமுன் வரைவை மீண்டும் மக்கள் கருத்தறிய சுற்றுக்கு விடப்பட வேண்டும் எனும் தீர்மானம் தோல்வியடைந்தது. அதுபோலவே, மீண்டும் பொறுக்குக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் எனும் மற்றொரு தீர்மானமும் தோல்வி அடைந்தது. இந்தத் தீர்மானத்தை 5 பேர் மட்டுமே ஆதரித்த நிலையில் தோற்றது. சட்டமுன் வரைவு பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பேதம் பேசும் இந்து மதம்

இந்து மதம் பிறப்பினால் மேல்_கீழ் பாகுபாடு காட்டும் மதம். பூணூல் அணியக் கூடிய ஜாதிகள் என்றும், பூணூல் அணியக் கூடாத சூத்திர, பஞ்சம ஜாதிகள் என்றும், பாகுபாடு காட்டும் மதம் (இன்றளவும்கூட) ஒரு மதத்தைச் சார்ந்தவர்களிலேயும் ஆண் உயர்வு என்றும், பெண் மட்டம் என்றும் கூறும் மதம். 

வர்ணப் பாகுபாட்டுக்கு அப்பால் உள்ளவர் எனப்படும் அவர்ணஸ்தராகிய சூத்திரர்களும் பெண்களும் பாபயோனியில் பிறந்தவர்கள் எனக் கேவலப்-படுத்தும் மதம். இப்படிப்பட்ட கேவலங்களி-லிருந்து அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல்படியாகச் சட்டம் கொண்டு வந்தவர் அம்பேத்கர். மாறாதது எனப்படும் இந்து மதச் சட்டங்களை மாற்றிடச் செய்யும் சட்டம் கொண்டு வந்தவர் அவர். அம்பேத்கர் எப்படி இந்துத்வர் ஆவார்? 

“தீண்டாமையை ஒழிப்பது மட்டுமே போதாது. நால்வருணத்தை அழித்திட வேண்டும்’’ என்றார் அம்பேத்கர், விநாயக தாமோதர சவர்க்காருக்கு எழுதிய கடிதத்தில்! “இந்து என்பவன் யார் என்ற விளக்கத்தில், நால் வருணத்தை ஏற்க வேண்டும், பசுவை வணங்க வேண்டும், நீர்க்கடன் செய்ய வேண்டும்’’ என்றார் பாய் பரம்வீர்.

பிணத்தைப் புதைக்காமல் எரித்துவிட்டு, வருடந்தோறும் திவசம் தரவேண்டும். அதன் மூலம் புரோகிதப் பார்ப்பனர் வருமானம் பெற வழி-செய்வதுவே நீர்க்கடன் என்பது. நால் வருணத்தை அழிப்பதுதான் இலட்சியம் எனப் பணியாற்றிய அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?
டாக்டர் அம்பேத்கர் கொண்டுவந்த இந்து சட்டத் தொகுப்பு மசோதா பற்றி நடந்த விவாதங்களைச் சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டிப் பேசப்பட்டவற்றில் சிலரின் பேச்சுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். 

இந்துமதப் பழமைவாதிகளைவிடத் தீவிரமாகச் சாடிய நசீருதீன் அகமது என்பவரையும், தர்ம நிர்ணய மண்டல் என்ற அமைப்பு மசோதாவை ஆதரித்ததாகக் கூறுகிறார்கள். 

இந்த அமைப்பு, “மிகச் சிறந்த அறிவாளர்களாலும் வைதீகர்-களாலும்’’ நடத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதன் தலைவர், செயலாளர் போன்ற பொறுப்பாளர்களின் பெயர் போன்ற விவரங்களைத் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக மிகச் சிறந்த அறிவாளர்கள் என்கிறார்கள். இவர்களோடு வைதீகர்களும் இடம் பெற்றிருந்தனர் என்கிறார்கள். 

வைதீர்கள் அங்கம் பெற்ற மிகச் சிறந்த அறிவாளர்களைக் கொண்டதாக ஓர் அமைப்பு இருக்க முடியுமா? அறிவுக் கொழுந்தாகத்தானே இருக்கும்? அல்லது உலக்கைக் கொழுந்தாகத் தானே இருக்கும்? அத்தகைய அமைப்பு வரவேற்றதாம்! ஆகவே அம்பேத்கர் இந்துத்வராம்! நல்ல நகைச்சுவைதான்! 

(கேள்விகள் தொடரும்...)


- சு. அறிவுக்கரசு


-உண்மை,16-30.6.17