பக்கங்கள்

புதன், 30 மே, 2018

கடவுள் அவசியமா?

01.07.1928- குடிஅரசிலிருந்து....

சர்வ வல்லமையுள்ள என்று சொல்லப்படுவதான ஒரு கடவுள் இருக் கின்றார் என்பதை (அது என்னது என்று புரியாவிட்டாலும்) விவகாரமில்லாமல் ஒப்புக் கொள்ளுவ தாகவே வைத்துக் கொண்டாலும் மனிதனின் வாழ்க்கைக்கு அக்கடவுளின் சம்பந்தமோ வழிபாடோ அவசியமா? அல்லது மனிதனுக்குச் சில குணங்களைக் கைக்கொண்டு அதன்படி ஒழுகும் தன்மை அவசியமா என்பதே நமது கேள்வி. அன்றியும் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தன்னை மக்கள், வழிபட வேண்டும் என்றாவது தனக்குக் கோவில் கட்ட வேண்டுமென்றாவது பூசை, அபிஷேகம், தேர், திருவிழா, உற்சவம் ஆகியவைகளைச் செய்ய வேண்டும் என்றாவது ஆசைப்படுமா? அல்லது மக்கள் சில குணங்களைக் கொண்டு மற்ற ஜீவன்களிடத்தில் இன்ன இன்ன விதமாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தால் கடவுள் என்பது வாழ்க்கைக்கு வேண்டுமா வேண்டாமா என்று விளங்காமல் போகாது. அன்றியும் அச்சர்வ வல்லமை உள்ள சாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த இவ்வளவு ஆசாமிகளும் சமயங்களும் வேண்டுமா? என்றும் அந்தச் சாமிகளை இல்லை என்பவர்களுக்கு ருஜுபடுத்த இவ்வளவு வக்கீல்கள் வேண்டுமா? என்றும் கேட்கிறோம்.

இது போலவே ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமாக உலகத்திற்கும், மக்களுக்கும், கடவுளுக்கும், சம்பந்தம் கற்பிக்கப் பட்டிருந்தாலும் புத்த மதம் என்பதில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்கங்களைத் தவிர வணக்கம் என்பதை அம்மதத் தலைவர் ஒரு சிறிதும் வலியுறுத்தியிருப்பதாகக் காணப்பட வில்லை.

அன்றியும் அவர் கடவுளைப் பற்றியோ கடவுளை வணங்குவது பற்றியோ, கடவுள் நெறி உணர்த்திய பெரியோர்களை மரியாதை செய்வது பற்றியோ கவலை கொண்டு ஒரு கடுகளவு நேரமாவது செலவழித்திருப்பதாகவும் காணக் கிடக்கவில்லை. அன்றியும் அதைப்பற்றிய வார்த்தைகளையாவது அவர் எங்காவது உபயோகித்திருப்ப தாகச் சொல்பவர்களும் காணக்கிடக்கவில்லை. அப்படிப் பட்ட ஒருவரை மதத் தலைவராகவும் அக்கொள்கையை - அம்மதத்தை அச்சமயத்தை இன்றைய தினம் உலகத் திலுள்ள மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் அதாவது 50 கோடி மக்களுக்கு மேல் தம்மதமாகவும் ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக் கின்றார்கள்.

அன்றியும் அப்படிப்பட்ட புத்தரைத் தங்கள் கடவுள் அவதார மென்றும் தீர்க்கதரிசி என்றும் பகவான் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்ற ஜனங்கள் இந்துமதம் என்பதிலே சைவமதம் என்பதிலே வைணவ மதம் என்பதிலே பல கோடிக் கணக்கானவர்கள் இருப்பதோடு அதற்குப் பல ஆதாரங்களும் வைத்துக் கொண்டிருக் கின்றார்கள். இதை யாராவது மறுக்க முன்வருகின்றார்களா?

மனிதனுக்கு ஏதாவது ஒருமதமோ சமயமோ வேண்டியது அவசியம் என்று யாராவது சொல்ல வருவார்களானால் புத்த மதம் என்பதும் உலகாயுத மதம் என்பதும், சூன்ய மதம் என்பதும், இயற்கை மதம் என்பதும் மதங்கள் என்று தானே சொல்லப்படுகின்றன? அப்படி இருக்கையில் அம்மதங்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டவர்கள் பலர் இருக்கலாம். எனவே அது எப்படி குற்றமுடைய தாகும். எப்படி பல மதங்களுக்கும் சமயங்களுக்கும் தலைவரும் காலமும் இல்லாமல் இருக்கின்றதோ அது போலவே இம்மதங்களில் சிலவற்றிற்கும் காலமோ தலைவரோ இல்லாமலிருக்கலாம்.

ஆகவே ஒரு மனிதன் இன்ன மதக்காரனாகவோ, இன்ன சமயக் காரனாகவோ, இன்ன கடவுளை வணங்குகின்ற வனாகவோ இருக்க வேண்டும் என்பதாகக் கட்டளை இடவும், இன்ன மதக்காரனாக இருக்கக்கூடாது என்று நிர்ப் பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு என்று கேட்கிறோம்.

மனிதனுக்கு மதம் வேண்டும் என்பது அந்தந்த மனிதனின் தனி இஷ்டத்தைப் பொறுத்ததா? அல்லது மற்றொருவனுடைய நிர்ப்பந்தமா? என்று கேட்கிறோம்.

துறவிக்கு மதம் ஏது? ஞானிக்கு சமயம் ஏது? கடவுள் ஏது? வேதாந்தத்திற்கு மதம் ஏது? கடவுள் ஏது? சகலத்தையும் துறந்தவர்தானே துறவி? சகலத்தையும் சரி என்று எண்ணு கின்றவர் தானே ஞானி?

சகலமும் மித்தை, பொய், மாய்கை என்று எண்ணுகின்றவன் தானே வேதாந்தி என்பவன்? இவைகளை உலகம் ஒப்புக் கொள்ளுகின்றதா இல்லையா? அங்ஙன மாயின் இம்மூவர்களும் நாஸ்திகர்களா என்று கேட் கின்றோம்.

உலகத்தில் துறவி ஆவதற்கோ, ஞானி ஆவதற்கோ வேதாந்தி ஆவதற்கோ எவனுக்கு உரிமை இல்லை? என்று கேட்பதோடு எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரிடம் உபதேசம் பெற்று அல்லது எந்தச் சமயத்தை ஏற்று, எந்தக் கடவுளைத் தொழுது துறவியாகவோ, வேதாந்தியாகவோ ஆக வேண்டும் என்கின்ற நிர்பந்தமுண்டா? என்று கேட்கிறோம்.

இவ்விஷயங்களை நாம் வலியுறுத்துவதால் பல நண்பர்களுக்குச் சற்று மனக்கசப்பு ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் நம் நாட்டின் விடுதலை கண்டிப்பாய் இந்த விஷயங்கள் விளக்கமாவதில்தான் இருக்கின்ற தேயொழிய வெள்ளைக்காரரிடமும், பார்ப்பனர் களிடமும் நேரில் முட்டிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்றே சொல்லுவோம்.

வெள்ளைக்கார அரசாங்க முறையும் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நமது மானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், தரித்திரத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றன என்பது சத்தியமானாலும் அவ்வக்கிரமும் ஆட்சியும் ஆதிக்கமும் இந்த மதம், கடவுள், சமயம் என்பவைகளான மூடக் கொள்கைகளின் பேரில்தான் கட்டப் பட்டிருக்கின்றது என்பது நமது முடிவு. இம்மூடக் கொள்கைகளை வைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களையும், பார்ப்பனர்களையும் பூண்டோடு அழிக்க நம்மால் முடிந்து விட்டாலும் மறுபடியும் வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர் களும் வேறு எங்காவதிருந்தோ அல்லது நமக்காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் வருவார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அன்னிய அரசாங்கமோ இல்லாமல் நம் நாட்டார்கள் என்போர்கள் அரசாண்டு வந்த காலத்திலேயே நாம் அடிமைகளாக தற்குறிகளாக தாசிமக்களாக, தீண்டாதார்களாக இருந்து வந்திருக் கின்றோம் என்பதைத் தயவு செய்து நம்புங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.

நம்புவதற்கு ஏதாவது கஷ்டம் இருந்தால் நம் நாட்டில் நம்மக்களால் சாமுண்டீஸ்வரி பேராலும், பத்மநாபசாமி பேராலும், கிருஷ்ணசாமி பேராலும் ஆளப்படும் மைசூரையும், திருவாங்கூரையும், கொச்சியையும் தயவு செய்து சற்றுத் திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.

எனவே, நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண் டியது என்னவென்றால் மூடநம்பிக்கை ஒழியவேண்டும்; அறிவுக்குச் சுதந்திரமும், விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும்; சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும். இம்மூன்றும் ஏற்பட வேண்டுமானால் மதமும், சாமியும் சமயாச்சாரியார்களும் சந்திக்கு வந்து தீரவேண்டுமல்லாமல் இதற்கு வேறு பர்த்தியோ, ராஜியோ இல்லையென்றே சொல்லி இதை முடிக்கின்றோம்.

 

 

திராவிடன், இழிவு தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு, ஆரியத்திற்கு - ஆரிய மதம், கலை, ஆச்சாரம், அனுட்டானங்களுக்கு - அடிமைப்பட்ட தல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

- தந்தைபெரியார்
- விடுதலை நாளேடு, 18.5.18

திங்கள், 7 மே, 2018

இதுதான் உ.பி. அரசின் சாதனை

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி  நடை பெற்று வருகிறது. அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10ஆவது மற்றும் 12ஆவது  அரசுப் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த 29.4.2018 அன்று வெளியானது. அதில்,மாநிலத்தில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் நிகழ்ந்துள்ளது மிகப் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இந்த 150 பள்ளிகளில், 98 பள்ளிகளில் எந்த மாணவரும் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும், மேலும்  52 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருந்தது என்றும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. உ.பி.யின் காஷிப்பூர் மாவட்டத்தில்தான் அதிக அளவிலான பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், ஆக்ரா மாவட்டத்தில் 9 பள்ளிகளிலும் பூஜ்ய சதவிகித அளவிலான தேர்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் காஸிபூர், மிர்ஸாபூர், அலிகார் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சி .சதவிகிதம்  மோசமான நிலையில் இருக்கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால் அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளும் இதில் அடக்கம். மேலும் 237 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 20 சதவிகிதம் மட்டுமே என்றும் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் வினோத் குமார் ராய் தெரிவித்துள்ளார். உ.பி. அரசு கல்வித் துறையில்  எவ்வளவு அழகாக செயல்பட்டு வருகிறது என்பதை  இந்தத் தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.  மாணவர்கள் இந்த அளவு மிகவும் மோசமான முறையில் தேர்ச்சி பெறாமல் போனது இதுவே முதல் முறை ஆகும். இது சாமியார் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு நடக்கும் இரண்டாவது பொதுத்தேர்வாகும். 2016-2017 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த போது "நான் ஆட்சி ஏற்று இரண்டு மாதங்கள்தான் ஆகியுள்ளது. ஆகவே அடுத்த பொதுத்தேர்வுகளில் உ.பி. மாணவர்கள் தேர்விற்காக எனது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்" என்று கூறிய நிலையில், அவரது ஆட்சியிலே உத்தரப்பிரதேச வரலாற் றிலேயே மிகவும் மோசமான தோல்வியை பள்ளிக் கல்வித் துறை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உ.பி.யில் சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற நிலையில், இரகளையில் ஈடுபட்டு முதல் அமைச்சர் பதவியைப் பிடித்தவர் இந்த சாமியார் ஆதித்யநாத்.

இவர் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மதச் சச்சரவுகளும், ஜாதிக் கலவரங்களும் தான் தலைதூக்கி நிற்கின்றன. ஒருக்கால் இவற்றைத்தான் தன் ஆட்சியின் சாதனையாகக் கூறுவார் போலும்!

அரசு அலுவலகங்களுக்கெல்லாம் காவி வண்ணம் பூசுதல் என்பதில் ஆரம்பித்து வேறு வளர்ச்சித் திட்டம் எதிலும் கவனம் செலுத்தாத சீரழிவு ஆட்சிக்குப் பெயர்தான் சாமியார் ஆதித்யநாத் ஆட்சி!

நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஜேபிக்குத் தோல்வியைக் கொடுத்து சாமியார் ஆட்சிக்கு மக்கள் தக்கப் பாடம் கற்பித்தனர்.

போதும் போதாதற்கு 10ஆம் வகுப்பு அரசு தேர்வில் பூஜ்ஜியம் வெற்றி!

கல்வி தானே நல்லாட்சிக்கான நற்சான்றுப் பத்திரம்! அதிலே பூஜ்ஜியம் என்றால் ஆட்சியே பூஜ்ஜியம் என்றுதான் பொருள்.

2019 மக்களவைத் தேர்தலில் உ.பி. மக்கள் மரண அடியைப் பிஜேபிக்குக் கொடுக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.
- விடுதலை நாளேடு, 5.5.18

இந்து மதக் கோயில்களுக்குள் ஏன் வேறுபாடு?

அயோக்கியன்


கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் - புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். ("குடிஅரசு", 18.5.1930)

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் என்றாலே பார்ப்பனிய மேலாண்மைமிக்க கோயில்களுள் ஒன்றாக இருந்து வருவதாகும். அந்தக் கோயிலில் வழங்கப்படுகின்ற பிரசாதத்தை இந்துக்கள் அல்லாதவர்களும் பெற்றுக்கொண்டு சாப்பிடலாம் என்று கோயில் நிர்வாகம் கூறிவிட்டது என்றதும் பரவாயில்லையே, கோயில்களில் மதப் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டதோ என்று பாராட்டத் தோன்றும்.

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் வழங்கப்படுகின்ற பிரசாதத்தை இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் சாப்பிடலாமாம். ஆனால், பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோயிலுக்குள் பிரசாதம் அளிக்கப்படுகின்ற பகுதிக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது எனும் உத்தரவு கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் கோயிலுக்கு வெளிப்புறமாக  பிரசாதம் உண்ணுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 500 பேர் அமர்ந்து உண்ணும் அளவிற்கு  ஊட்டுப்புரா எனும் உணவருந்துமிடம் குருவாயூர் கோயில்  தேவஸ்வம் நிர்வாகத்தின் சார்பில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோயிலுக்குள்  பேண்ட், சட்டை, காலணி அணிந்து செல்லவும் மறுக்கப்பட்ட நிலையில் உணவருந்தும் பகுதிக்கு அணிந்து செல்வதற்கு தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவு அருந்துமிடமாக இரண்டு கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பழைமையானதாக உள்ள ஒன்று இந்துக்களுக்கு மட்டும் என்றும், கோயிலில் பின்பற்றப்பட்டு வருகின்ற பழைமையான  நடைமுறையின்படி, அப்பகுதிக்குள் பேண்ட், சட்டை காலணிகள் அணிந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள உண்ணுமிடத்தில் எல்லோரும் உணவருந்தலாம். புதிய உணவுக்கூடத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. சாப்பிடுவதற்காக மட்டுமே வேகமாக வருபவர்களுக்கு வாய்ப்பாக கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் நோக்கம் என்ன வென்றால், அனைவருக்கும் உணவு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்  என்று கோயில் நிர்வாகி பிரவீன் கூறுகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு ஆண்டுக்கு ஏழு லட்சம் பேர் செல்கிறார்கள்.  கேரள மாநில அரசு சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினர்களை உள்ளடக்கி, குருவாயூர் தேவஸ்வம் நிர்வாகக் குழு கோயில் நிர்வாகத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தலைமை அர்ச்சகர் (தந்த்ரி) தினேசன் நம்பூத்ரி கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாத வர்களையும் அனுமதிக்கும் பரிந்துரையை அளித்தார். கேரள மாநில இடதுசாரி அரசின் அமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சியினரும் அப்பரிந்துரையை வரவேற்றனர். இந்துக்கள் அல்லாதாரை கோயிலுக்குள் அனுமதிப்பது என்பது எப்போதுமே விவாதத்துக்குரியதாக இருந்து வருகிறது. இந்துமத பக்திப்பாடல்களை பாடிவருபவரான கே.ஜே.ஏசுதாஸ் கோயில்களுக்கு செல்லவேண்டும் என்பதில் விருப்பம் தெரிவித்து வருபவராவார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வரான ஏசுதாஸ் இந்து மத நம்பிக்கை உள்ளவராகவே கூறிவந்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்துவரான பாடகர் கே.ஜே ஏசுதாஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருவனந் தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலுக்குச்  சென்றார். அப்போது, அவரிடம் உறுதிமொழிப்பத்திரம் பெற்றுக்கொண்ட பின்னரே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப் பட்டது. அவர் அளித்த உறுதிமொழிப்பத்திரத்தில், இந்துமத நம்பிக்கை கொண்டவர் என்றும், கோயிலுக்குள் சென்று தரிசித்திட விரும்புவதாகவும் தெரிவித்திட வலியுறுத்தப்பட்டு அதன்படியே அவர் குறிப்பிட்டார். அதன் பின்னரே அவர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குள் செல்வதற்கு பாடகர் கே.ஜே.ஏசுதாசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைப் போன்று, திரும்பத்திரும்ப அவர் கோரிக்கை விடுத்தபோதிலும், குருவாயூர் கோயிலுக்குள் செல்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய  பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் கூறியதாவது: கரப்பான் பூச்சியாகவோ, ஈ ஆகவோ நான் பிறந்திருந்தால் குருவாயூர் கோயிலுக்குள் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

இந் நிலையில் குருவாயூர் கோயில் நிர்வாகி பிரவீன் கூறியதாவது:

கோயிலின் பழைமையான நடைமுறைகளை நாங்கள் இன்னமும் கடைப்பிடித்து வருகிறோம். இப்போதைக்கு நாங்கள் மாற்றங்கள் எதையும் செய்வதாக இல்லை என்றார்.

ஓர் இந்துக் கோயிலில் அனுமதி - இன்னொரு இந்துக் கோயிலில் அனுமதி மறுப்பு? இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

கடவுள் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் இல்லையா? இல்லை என்றால் ஒரு மதத்துக் கடவுள் இன் னொரு மதக்காரனுக்கு இல்லை என்று ஆகிவிடவில்லையா?

அப்படியானால் ஒரு மதத்துக்காரன் இன்னொரு மதக்காரனுக்கு நாத்திகன் தானே!

கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்ற தந்தை பெரியார் அவர்களின் கணிப்புதான் என்னே!

- விடுதலை நாளேடு, 4.5.18

வெள்ளி, 4 மே, 2018

திருந்தாது இந்த ஜென்மங்கள் மீண்டும் பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பேரணி நடத்திய பாஜகவினர்லக்னோ, ஏப்.29 உத்தரப்பிரதேசம் உன்னாவ் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன் கொடுமை செய்ததாகக் கைது செய்யப் பட்டுஇருக்கும்பாஜகசட்டமன்றஉறுப் பினர் குல்தீப் சிங் செங்காரருக்கு ஆதர வாக பாஜகவினர், பேரணி நடத்தி இருக் கிறார்கள். பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் குடும்பத்தோடு உத்தரப்பிரதேச முதல்வரின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார். அப்போதும் எம்.எல்.ஏ. குல்தீப்மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், காவல் துறையினரும் அந்த பெண்ணின் தந்தை பாப்பு என்ற சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். இதனால் சுரேந்திர சிங் காவல் நிலையத்திலேயே மரணமடைந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங் கார் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.  இந்தநிலையில்குல்தீப்சிங்செங்கார ருக்கு ஆதரவாக உன்னாவ் மாவட்ட பாஜகவினர், பேரணி நடத்தி இருக்கிறார்கள். இந்தப் பேரணிக்கு அந்தப் பகுதியின் பாஜக உறுப்பினரும், பஞ்சாயத்து தலைவருமான அனுஜ்குமார் தலைமை வகித்து இருக்கிறார். அரசியல் பழிவாங்கும் நிகழ்விற்காக, இந்த புகார் குல்தீப் மீது போடப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஊர் மக்களை மிரட்டி, அந்த பேரணியில் நடந்து வர சொல்லி இருக்கிறார்கள். அதே போல் குல்தீப்பிற்கு ஆதரவாக கூச்சலிடவும் சொல்லியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஜனவரி மாதம்8 வயது சிறுமி கோவில் பார்ப்பனப் பூசாரி, அவரது மகன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்குஆளாக்கப்பட்டுகொல் லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தச் சென்ற போது ஜம்மு காஷ்மீர் பாஜக அமைச்சர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள், இந்து எக்தா மஞ்ச் அமைப்பின் பிரமுகர்கள் வழக்குரைஞர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தினர்.இந்தப் பேரணியில் வந்தே மாதரம் பாரத்மாதாகி ஜே, போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது, மேலும் பாஜக கொடியுடன் தேசியக் கொடியையும் ஏந்திச் சென்றனர். தற்போதும் அதே போல் பாஜகவினர் உன்னாவில் பேரணி நடத்தி பாரத் மாதாகி ஜே என்றும் ஜெய்சிறீராம் என்றும் முழக்கமிட்டவாறு சென்றனர்.

-  விடுதலை நாளேடு, 29.4.18

செவ்வாய், 1 மே, 2018

இராமானுஜர் சாதி ஒழிப்புப் போராளியா?

இப்போது ராமானுஜரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால் தற்போது ராமானுஜரின் ஆயிரமாவது அவதார விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஸ்ரீபெரும்புதுரில் நடைபெறும் இந்த விழாவுக்கு நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களிலும் மின்தடை ஏற்பட்டு விடக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்திரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கத் துப்பில்லாத அரசு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், கார்ப்ரேட் சாமியார்களின் பணம் கொழிக்கும் மடங்களுக்கும், மக்களிடையே மூட நம்பிக்கையைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் வழங்க உத்திரவிடும் அயோக்கியத்தனத்தைச் சுட்டிக்காட்டத்தான். அத்தோடு தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பன கும்பலின் புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தவும் தான்.

ராமானுஜரை ஒரு சாதிய எதிர்ப்பாளனாகக் காட்ட அவரது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் ‘குரு பரம்பரை’ என்ற நூலில் குறிப்பிடப்படுகின்றது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழக வைணவர்களிடையே உள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. இந்நூலில் உள்ள கதைகள் நம்பமுடியாதனவாய் உள்ளன என்பதை இந்நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் தன்னுடைய முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தக் குருபரம்பரை கதையில் கூறப்பட்ட ராமானுஜர் பற்றிய செய்திகள் அனைத்தும் வாய்மொழி அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அதற்கு எந்தவித அடிப்படை சான்றும் கிடையாது. ராமானுஜர் எழுதியதாக சொல்லப்படும் எந்த நூலிலும் மேற்படி பார்ப்பன அடிவருடிகள் சொல்லும் எந்தக் கதையும் கிடையாது.

ஒரு நாள் தனது இல்லத்திற்கு சாப்பிட தனது குரு திருக்கச்சி நம்பியை ராமானுஜர் அழைத்திருக்கின்றார். அதை நம்பி அவரும் ராமானுஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டிருக்கின்றார். ஆனால் ராமானுஜர் மனைவி அவர் சாப்பிட்ட இலையைக் கையால் எடுக்காமல் கோலால் தள்ளி அவர் உட்கார்ந்த இடத்தை சாணத்தால் மொழுகி சுத்தப்படுத்தி இருக்கின்றார். இதைப் பார்த்த ராமானுஜர் கொதித்துப்போய் அவர் மனைவியை அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு துறவறம் மேற்கொண்டார் என்று சொல்கின்றார்கள். இந்தக் கதையில் எங்கே சாதிக்கு எதிரான குரல் ஒலிக்கின்றது எனத் தெரியவில்லை. ராமானுஜம் தன் மனைவியிடம் “நீ எப்படி அவர் இலையைக் கோலால் தள்ளிவிடலாம், அதுவும் எனக்கு சாதி மீது நம்பிக்கை கிடையாது என உனக்குத் தெரியாதா, இதைப் பார்த்தால் ஊர் உலகம் என்னுடைய சாதி எதிர்ப்பு கருத்தைப் பற்றி கேலி பேசாதா” என சொல்லி அவரின் மனைவியைத் திட்டியதாக எந்தக் குறிப்பும் இல்லை.ஆனால் இதை எல்லாம் வைத்துக்கொண்டு ராமானுஜர் ஒரு சாதிய எதிர்ப்பாளர் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும்? சம்மந்தப்பட்ட ராமானுஜர் சாதிக்கு எதிராகப் பேசியதாக ஒரு வார்த்தை கூட கதையில் பதிவாகவில்லையே.

அதுமட்டும் அல்லாமல் ராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யத்தில் ஆன்ம விடுதலை என்பது அந்தணர், வைசியர்,சத்ரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. அது சூத்திரர்களுக்கு என்றும் கிடையாது என்று கூறியிருக்கின்றார். எனவே ராமானுஜர் அடிப்படையில் தான் ஒரு சாதி வெறியன் என்பதை அவரே அவருடைய நூலில் ஒப்புக் கொண்டிருக்கின்றார்.

அடுத்து அவரை சோழ மன்னனான முதலாம் குலோத்துங்கச் சோழன் கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் செய்தியைப் பார்க்கலாம். இது ராமானுஜர் திருவரங்கம் கோயிலில் வாழ்ந்த போது நடந்ததாக சொல்லப்படுகின்றது. முதலாம் குலோத்துங்கன் ஒரு ஏட்டில் “சிவாத் பரதரம் நாஸ்தி” (சிவத்தைக் காட்டிலும் மேலானது எதுவும் இல்லை) என்று எழுதி அதில் பண்டிதர்கள் அனைவரையும் கைச்சாத்து இடும்படி கட்டளையிட்டதாகவும், வைணவரான ராமானுஜர் அதில் கைச்சாத்து இடாமல் தனக்குப் பதில் தனது சீடரான கூரத்தாழ்வாரை தன்னைப்போலவே வேடமிட்டு அனுப்பி வைத்தாகவும் அவர் அங்கு சென்று “குருணிக்கு மேல் பதக்கு உண்டு” என்று எழுதி கைச்சாத்து இட்டதாகவும், ஆனால் குருணி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு ஒன்று படி போல ஒரு முகத்தல் அளவை, மற்றொன்று சிவன் என்பதாகும். இந்த அறிய உண்மையைக் கண்டுபிடித்த மன்னன் கூரத்தாழ்வானின் கண்களை பிடிங்கிவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய சந்நியாச ஆடைகளைக் களைந்து வெள்ளை உடை தரித்து ராமானுஜர் கர்நாடகத்திற்குத் தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகின்றது.

திருவரங்கம் கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த எண்பது கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் அதில் ஒரு கல்வெட்டில் கூட இந்தச் செய்தி பதிவாகவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள செய்தி எல்லாம் கோயிலுக்குச் சொந்தமான நிலம், தங்கம், கால்நடைகள் பற்றியும் வழிபாட்டிற்கான செலவுகள் பற்றியுமே உள்ளது. மேலும் இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்கனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றது. ‘கோயில் ஒழுகு’ என்ற நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார், ராமானுஜரைக் கொல்ல முதலாம் குலோத்துங்கன் முயற்சி செய்தான் என்பதை மறுத்துள்ளார். இதனால் குழம்பிப் போன வரலாற்றுப் பொய்யர்கள் உடனே முதலாம் குலோத்துங்கன் கிடையாது, இரண்டாம் குலோத்துங்கன் என கதைவிட ஆரம்பித்து விட்டார்கள்.

ராமானுஜர் 1017இல் பிறந்தார் என்பதை பொதுவாக வைணவ வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். ராமானுஜர் 120 வயதுவரையும் வாழ்ந்ததாகவும், தன்மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க அவர் கர்நாடகா தப்பிச்சென்று அங்கே 12 ஆண்டுகள் வாழ்ந்தாகவும், பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி அவர் தன்னுடைய சாதிய எதிர்ப்புப் பணியை செவ்வனே செய்ததாகவும், பிறகு தன்னுடைய 120வது வயதில் மண்டையைப் போட்டதாகவும் நம்புகின்றார்கள். இதிலே கேலிக்கூத்தானது என்னவென்றால் 1133இல் தான் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி பொறுப்புக்கு வருகின்றான். அதன் படி பார்த்தால் ராமானுஜருக்கு வயது 116. தள்ளிவிட்டாலே செத்துப்போகும் நிலையில் இருந்த ஒரு கிழவனை இரண்டாம் குலோத்துங்கன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதும், அதற்குப் பயந்து அந்தக் கிழவன் கர்நாடகம் தப்பிச் சென்றான் என்பதும், பிறகு 12 ஆண்டுகள் கழித்து திரும்ப வந்தான் என்பதும் குமாரசாமி கணக்கைவிட மோசமான கணக்காகும். இருந்தாலும் இங்கிருக்கும் பார்ப்பன அடிவருடி கும்பல்கள் இதே கதையைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப சொல்லி மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அவர் கூறிய வாழ்வியல் நெறி என்னவென்றால் “இறைவன், உயிர், பொருள் ஆகிய மூன்றும் உண்மை. அதே வேளையில் இம்மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு ஒன்றில் இணைந்துள்ளன. அந்த ஒன்றே பிரும்மம் என்பது. எனவே தனிமனித ஆன்மா ஒரு நாளும் பிரம்மமாக முடியாது என்றாலும் பிரம்மத்தை சரணடைவதன் மூலம் மோட்ச நிலையை அடைய முடியும்" என்பதுதான் சாரமாக ராமானுஜரின் கருத்து. தினம் தினம் உழைத்துச் சோறு தின்னக்கூடிய மக்களால் எளிதில் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் நாள் கணக்கில், வருடக்கணக்கில் உழைக்காமல் ஓசியில் உண்டகட்டி வாங்கித் தின்பவராக இருக்க வேண்டும். அதனால் இராமாஜர் கண்டுபிடித்த அந்த உண்மையைப் பற்றி ஆழமாக நாம் உள்ளே போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்திய சமூகத்தில் அறிவியல் சிந்தனை காயடிக்கப்பட்டதற்குச் சங்கரருக்கு எந்த அளவிற்குப் பங்குண்டோ அதே அளவிற்கு இந்த ராமானுஜர் என்ற பார்ப்பனனுக்கும் பங்குண்டு.

- செ.கார்கி
- பாலமுருகன்,  முகநூல் பதிவு, 2.5.2017