பக்கங்கள்

சனி, 26 டிசம்பர், 2015

”கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே!”

அமெரிக்க உளவியல் சங்க ஆய்வு முடிவு!


வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது.
ஆய்வும் முடிவும் கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள்
கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும்  தாங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள் மிகுந்த கவலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், உணர்ச்சிவயப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களாகவும், இயல்புக்கு மாறாக கற்பனை உலகில் உலவுபவர்களாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். 5 ஆண்டு கால ஆய்வின் முடிவாக சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கடவுள் நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். மத நம்பிக்கையில் உள்ள இரண்டுவிதமான நடவடிக்கைகள் முற்றிலும் உண்மை நிலைக்கு தொடர்பற்று முரணாகவே இருந்து வருகின்றன.
பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரியூஸ்
உளவியல் பேராசிரியர் டாக்டர் லில்லியன் ஆண்ட் ரியூஸ் கூறுகையில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகளால் உயிரிழக்கிறார்கள். அந்தக் கருத்தை மறுத்து, கடவுள் அவர்களைக் காப்பார் என்று கடைசிவரை நம்புகிறார்கள். ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதில் முடிவை எடுக்க தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள்.
குருதிக்கொடை ஏற்காத மனக்கோளாறு
ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் எந்த சூழலிலும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் அடுத்தவர் ரத்தத்தைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதேமேல் என்பார்கள். அவ்வப்போது பலரும் ஆவிகளைக் கண்டதாகக் கூறிக் கொள்வார்கள். உண்மைக்கு மாறானவைகளாக உள்ள இவ்வாறான நிலையை மனக் கோளாறுகளின் அடையாளமாகவே பார்க்க முடியும்.
கடவுளின் கோபம் எனும் மூடநம்பிக்கை
கடவுளின் கோபத்தால் குழப்பம், அழிவு, இறப்பு, நூற்றாண்டுகளாக போர்கள் ஏற்படுவதாக மத நம்பிக்கையாளர்கள் கருதுகிறார்கள். உயிரைக் காக்க கட்டாய சிகிச்சை
மத நம்பிக்கைகளால், மத காரணங்களால், மத சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல்,  அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தேவையான முடிவை எட்ட முடியாதவர்களுக்கு,  மத நம்பிக்கையின் பேரால் சிகிச்சை பெற மறுப்பவர்களின்  உயிரைக் காப்பதற்காக எந்த நிலையிலும், மருத்துவர்கள் கட்டாய சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம் என்று மருத்துவர்களுக்கு முழு உரிமையை அளித்திட சட்டம் இயற்றவுள்ளனர்.
விரைவில் இந்த ஆய்வு குறித்த முழு விவரங்கள் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின்மூலம் வெளியிடப்படும் என்றும் அச்சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் www.thenewsnerd.com எனும் இணையத்தில் மருத்துவச் செய்தித் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும், தகவல்களும் எவ்வளவு சரியானவை,- துல்லியமானவை என்பதை  விரைவில் உலகம் அறியப் போகிறது. இதற்கான சரியான பரிசோதனைக் கூடம் (Laboratory) ஒன்று உண்டு என்றால், அது இந்த இந்தியத் திருநாடுதான்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வரும் ஆந்திர மாநிலம், கோதாவரி மகா புஷ்கர நீராடலில் 81 லட்சம் பேர் கூடினர் - கடந்த ஒரு வாரமாக நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 30-க்கும் மேல் என்ற கொடுமையான கோர நிகழ்வுக்குப் பின்னரும் கூட்டம் அங்கே சென்றுள்ளது என்பது கடவுள் நம்பிக்கை முற்றிலும் ஒரு மன நோய் - என்பதைக் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகுத்தறிவாளர்கள் பரப்ப வேண்டும் என்று ஆசிரியர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்கள்.
உண்மை,1-15.10.15

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

நிர்வாணப் பெண்கள்!

ஒரிசா மாநிலம் தன்சாரண்யா என்ற காட்டுப் பகுதியில்  மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆண்கள் உடை உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் மட்டும் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அதற்குக் காரணம் கீழ்க்கண்ட மூடநம்பிக்கையாகும்.
ராமனுடன் சீதை இந்த காட்டில்தான் தங்கினாளாம். தனது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஒரு அருவியில் சீதை குளிக்கச் சென்றாளாம். அந்த உடைகளை அக்காட்டில் இருந்த பெண்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். குளித்து விட்டுக் கரையேறிய சீதை உடைகளின்றி நிர்வாணமாக நின்றாளாம். உடனே அந்தப் பெண்களுக்கு சாபமிட்டாளாம்.
என்னுடைய உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டீர்கள் இனிமேல் இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்தால் அவன் கணவன் இறந்து போய் விடுவான் என்று சாபமிட்டாளாம். அதிலிருந்து அந்தப் பகுதியில் எந்தப் பெண்ணும் உடை அணியாமல் நிர்வாணமாய் திரிகிறார்களாம். இப்பொழுது அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு இடுப்பில் சிறுதுணியைச் சுற்றிக் கொள்ளச் செய்துள்ளனர்.
மூடநம்பிக்கையின் கேவலத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

மதம் என்றாலே எனக்கு ஒருவித வெறுப்பு; அடிக்கடி மதத்தைக் கண்டித்திருக் கிறேன். அதை உருத்தெரி யாமல் ஒழித்துக்கட்ட வேண் டுமென்று ஆசைப்பட்டிருக் கிறேன். மதம் என்றால் குருட்டு நம்பிக்கை, பிற் போக்குத்தனம், பிடிவாத மான வெறித்தனம், மூடப்பழக்கம், சுரண்டல், சுயநலத்தைப் பாதுகாத்தல் என்பதுதான் என் முடிவு.
- ஜவகர்லால் நேரு, (சுயசரிதை, பக்கம் 374)
-விடுதலை,29.8.14

சனி, 12 டிசம்பர், 2015

பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?
தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி. அதை ராத்திரி அறுத்தாய்விட்டது.
குழந்தை: எனக்குத் தெரியவில்லையே!
தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை.
குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?
தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!
குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரை யாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்?  அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!


குடிஅரசு, 1-4-1928
-விடுதலை,13.6.14

பாதிரி காட்டிய படங்கள்


பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப்பட்டி ருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.
ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக்கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார்.
அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கையில்லாதவர்கள், ஆண்டவனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.
-விடுதலை,13.6.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சந்தேகம் சார்!


சார் ஒரு சந்தேகம்!
என்னடா சந்தேகம்?
சரஸ்வதி எங்கு இருக்கிறாள்?
வெண்டாமரையில்!
அது எங்கே இருக்கிறது சார்?
பிரம்மாவின் நாவில்!
பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?
மகாவிஷ்ணுவின் தொப்புட் கொடியில்! (வயிற்றில் உதித்தார்)
மகாவிஷ்ணு எங்கு இருக்கிறார்?
ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல்!
அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?
திருப்பாற்கடலில் உள்ளது.!
திருப்பாற்கடல் எங்கு உள்ளது சார்?
....?....?...? ஏய், நீ ஒரு கருப்புச் சட்டை..... நாத்திகன்... பகுத்தறிவுக்காரன்.. இரு இரு... உன்னை பரீட்சையில் கவனித்துக் கொள்கிறேன்.
-சி.பூபாலன், சி.இராசசேகரன்
சென்னை-40
-விடுதலை,6.3.15

கலைவாணர் போட்ட மந்திரம்

 
எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.
அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.
அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவலை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.
உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.
அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார்.  எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார். இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.
அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்
நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன்.  இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.
இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.
கேட்டவர்: உடுமலை நடராசன்
கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலை வாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி
இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடு மலை வட்டம். நாள்: 11.4.1981
-விடுதலை,27.2.15

செவ்வாய், 8 டிசம்பர், 2015

கே.எம்.பணிக்கர் கூற்று!


ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!
ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள்.
இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.
- ஜம்மு - காஷ்மீர்  பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.


சிந்தனைத் துளிகள்!

 • ‘மனத்திருப்தி என்பது இயற்கை யாகவே நம்மிடம் உள்ள் செல்வம்; ஆடம்பரம்  நாமே தேடிக் கொள்ளும் வறுமை.’
 - சாக்ரட்டீஸ்
 • ‘மனிதன் - ஆம்; அவனால் ஒரு புழு, பூச்சியைக் கூட படைக்க முடியாது. ஆனால், எண்ணற்ற கடவுள்களை அவன் இன்னும் படைத்துக் கொண்டே இருக்கிறான்’
  - மண்டெய்ன்
 • ‘எதிர்ப்பின் மூலமே உண்மையான மனிதன் உருவாகிறான். காற்றை எதிர்த்து மேலே செல்லும் காற்றாடி போல அவன் எதிர்ப்பைத் தாக்கித் தாக்கி முன் னேறுகிறான்.’
- ஹென்றிஜேம்ஸ்
-விடுதலை,27.11.15

ஆண்டவனைப் படைத்ததே மனிதன்தான்!

என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்கு அப்பால் எந்தக் கருத்துக்களும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் மனிதன் தான் - மனிதன் ஒருவன்தான் - எல்லா பொருட்களையும், எல்லா கருத்துகளையும் படைப்பவன். அற்புதங் களைச் செய்பவன் மனிதன் ஒருவனே.
இயற்கையின் சக்திகளை ஆட்சி கொள்கிற எதிர்கால எஜமானன் மனிதனே. மனிதனின் உழைப்புத்தான் - மனிதனின் திறமை மிக்க கைகள் தான் - இவ்வுலகில் உள்ள அழகான பொருட்கள் அனைத்தையும் சிருஷ்டித்துள்ளன. கலையின் வரலாறும், விஞ்ஞானத்தின் வரலாறும், தொழில் நுணுக்க இயலின் வரலாறும் இதை நமக்கு மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
மனிதனின் பகுத்தறிவுக்கும், மனிதனின் கற்பனைக்கும், மனிதனின் ஊக்கத்துக்கும் உருவகமாக இருப்பவற்றைத் தவிர, வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. எனவே தான், நான் மனிதனை வணங்கு கிறேன்.
போட்டோ பிடிக்கும் கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால், யதார்த்தத்தில் இருப்பதை காமரா படம் பிடித்துக் காட்டுகிறது.
ஆனால், கடவுள் என்பதோ சர்வ ஞானமும், சர்வ சக்தியும் பெற்று பரம நியாயத்துடன் நடந்து கொள்ள விரும்புகிற, சக்தி பெற்றிருக்க முடிகிற ஒரு புருஷனாக தன்னைப் பற்றி தானே புனைந்து கொண்ட ஒரு மனிதனைக் காட்டுகிற போட்டோ படமேயாகும்.
- மாக்ஸிம் கார்க்கி
-விடுதலை,27.11.15

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

புரட்சிக்கவிஞரின் நகைச்சுவை

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஜனோபகாரிகள்
மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்: (தோட்டியைக் காட்டி) இவர் யார்?
உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகிறார்.
மே.இந்: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?
உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.
மே.இந்: திரும்பவும் சலவை செய்துவந்து கொடுப்பாரா?
உள்: ஆமா!
மே.இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?
உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக்கொண்டு
         போகிறார்.
மே.இந்: சமையல் செய்து கொண்டுவந்து கொடுப்பாரா?
உள்: திரும்பக் கொடுப்பதில்லை.
மே.இந்: அடித்துக்கொண்டா போகிறான்?
உள்: ஆம்.
மே.இந்: அடித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?
உள்: ஆம், ஆம்!
மே.இந்: அடித்துக் கொண்டா......
உள்: ஓய், எத்தனை தரம் சொல்லுவது! அடித்துக் கொண்டுதான்
        போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான்! ஆயிரம் வருடமாக இப்படி!
ராகு காலப் பயன்
ஒருவன்: நான் ராகு காலத்தில் வெளிக் கிளம்பினதால்தான், பத்து ரூபாய்
                நோட்டு விழுந்துவிட்டது.
மற்றவன்: நான் ராகு காலத்தில்தான் அந்தப் பத்து ரூபாய் நோட்டைக் கண்டெடுத்தேன்!
வேடத்தின் பயன்
சு.ம.காரன்: பண்டித அய்யர்வாள்! உலோகம் என்றால் என்ன?
அய்யர்: பூமிக்குப் பெயர்_பொன், வெள்ளி இவைகளுக்கும் பெயர்.
சு.ம.: உலோக குரு என்பதிலுள்ள உலோகத்திற்குப் பின்னைய அர்த்தமே பொருத்தம்.
அய்யர்: அவைகளுக்காகத்தானே......
பயனற்றதால் வணங்கப்படுகிறது
ஒருவன்: எல்லாப் பக்ஷிகளும் இருக்க, ஆழ்வார் (பருந்து) மாத்திரம்
                வணங்கப்படுவதற்குக் காரணம் தெரியுமா?
பிறன்: தெரியும்! அது கறிக்கு உதவாது.
ஒரு விஷயம் புரிந்தது
சோமசுந்தரக் கடவுள் மதுரையில் கல் யானையைக் கரும்பு தின்னச் செய்தார்.
இப்போதும் பார்ப்பனர் கல் சாமிகளைச் சோறு தின்னச் செய்கிறார்கள். இவ்விரு
விஷயத்தில் ஒரு விஷயம் புரிந்து போயிற்று. இந்த அய்யர், சாமி தின்பதாகத்
தாமே அடித்துக் கொண்டு போகிறார் _ அந்த அய்யர், கரும்பைக் கக்கத்தில்
வைத்துக்கொண்டு போனதை யாரும் பார்த்ததில்லை.
சர்வம் விஷ்ணுமயம்
பாகவதர்: அப்பா, சர்வம் விஷ்ணுமயம் ஜகத் அல்லவா?
சிஷ்யன்: பன்றி மலந்தின்னுவதை, நான் வராகவதாரம் பூமியைப்
பெயர்த்தெடுப்பதாகவே காண்கிறேன். மச்சாவதாரத்தைத்தான், என் வயிற்றில்
 செலுத்துகிறேன்!
சாமிக்குக் காது செவிடு
அன்பர்: செட்டிமேல் சாமி வந்திருக்கிறது. நீ நினைத்திருப்பதைக் கேள்.
கேட்க வந்தவர்: சுவாமி! நான் ஒன்றை நினைத்து வந்திருக்கிறேன்.
சாமி: என்ன?
கேட்க வந்தவர்: பணம் காணாமல் போயிற்று. எப்போது அகப்படும்?
சாமி: சீக்கிரம் சௌக்யமாய்விடும்.
கேட்க வந்தவர்: இதென்ன அய்யா, சாமி இப்படிச் சொல்லுகிறதே?
அன்பர்: அவருக்குக் காது செவிடு! நீ கூவிக் கேட்கவில்லை.
-உண்மை இதழ்,16-30.4.15

செவ்வாய், 1 டிசம்பர், 2015

உங்களுக்குத் தெரியுமா?

1.   நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்று இருந்ததைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இதன் பொருள் என்ன? பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாக வேண்டும் என்பது தானே!
இக்கொடுமை பனகல் அரசர் கொண்டு வந்த தமிழ்நாடு பல்கலைகழகச் சட்டம் மூலம் நீக்கப்பட்டது.

2.       எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் இராசகோபாலாச்சாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமாந்தூராரையும், டாக்டர் சுப்பராயனையும் தரையில் பாய் போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

3.    1940ஆம் ஆண்டுகளில் - சென்னை வில்லிவாக்கத்தில் - தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை - அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
-உண்மை,நவம்பர்,டிசம்பர்-2015

திங்கள், 16 நவம்பர், 2015

தனிமை தரும் மன உனர்வே பேய்த்தோற்றம் - க.அருள்மொழி

பேய் இருக்கா? இல்லையா? பேய் அல்லது பிசாசு அல்லது கடவுள்(?) எதுவாக இருந்தாலும் அதைப் பார்த்ததாகக் கூறுவதற்கு  உணரப்பட்ட இருப்பு (sensed presence) என்று உளவியலாளர்கள்  கூறுகிறார்கள். இதுபோன்று உணரப்படுதல் பொதுவாக, தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள், மிக அசாதாரணமான சூழலில் தனியாக இருக்கும்போது ஏற்படுவதாகும்.
இது, சூழ்நிலையின் தன்மை, மன அழுத்தத்தின் தீவிரத்தன்மை, துணைக்கு உள்ளவர்களின் பலம் அல்லது பலவீனம் ஆகியவற்றைப் பொறுத்து, பேய்களைப் பார்ப்பது, என்பது தெளிவற்றதாகவோ தெளிவானதாகவோ இருக்கும்!
சிலருக்கு ரத்தமும் சதையுமாகக் கோரமாகக் காட்சியளிக்கலாம். சிலர்  தங்கள் முன்னோர்களைப் பார்த்ததாகச் சொல்வார்கள். சிலர் ஆவி போன்ற உருவத்தைப் பார்த்ததாகச் சொல்வார்கள், சிலர்  கடவுள் நேரில் வந்ததாகச் சொல்வார்கள்.
அது இருப்பதாக உணர்வதற்கு, உடல் கோளாறு, சமூகச் சூழலில் மாற்றம், குளிர்ச்சியான சூழல் போன்றவை ஒரே நேரத்தில் அமைவது, முக்கியக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாகவும், ஆக்ஸிஜன் பற்றாக் குறையாலும் சலிப்பான மனநிலையாலும் ஹார்மோன்களின் தூண்டல்களாலும் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் அது இருப்பதாக உணரப்படுகிறது.
சூழலியல் உளவியலாளர் பீட்டர் சீட்பெல்ட் (Peter Suedfeld) என்பவர், சில சூழல்களைச் செயற்கையாக உருவாக்குவதன் மூலமாக இதுபோன்ற மாயக் காட்சிகளை சிலர் உணரும்படி செய்யலாம் என்கிறார்.
பொதுவாகத்  தன்னந்தனிமையில், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் இருப்பவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்படுவதுண்டு.
தனியாகக் கடலில் கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பலருக்கும் மாயத் தோற்றங்கள் ஏற்படுவதுண்டு. நம்மூர் லாரி ஓட்டுனர்கள் அனேகம்பேர் பேயைப் பார்த்ததாகச் சொல்வார்கள். ஏனென்றால், இரவு நேரங்களில் தூக்கம் கெட்டுச் செல்வதோடு, ஆள் நடமாட்டமில்லாத பலவிதமான சூழல்கள் கொண்ட சாலைகளில் அவர்கள் செல்வது அவர்களுக்கு மாயக்காட்சிகளை உருவாக்குவது இயல்பே! வழிவழியாகப் பல பேய்க் கதைகளைக் கேட்பதும் முக்கியக் காரணம்.
ஜோஷ்வா ஸ்லோகம் என்பவர் 1895 முதல் 1898 வரை மூன்று ஆண்டுகளில், முதன்முதலாகத் தனியாகக் கடலில் படகில் சுற்றி வந்தவர். அவர், 1492இல் கொலம்பஸ் குழுவினர் பயணம் செய்தக் கப்பல்களில் ஒன்றான பின்டா (Pinta) என்ற கப்பலின் மாலுமியைக் கடலில்  பார்த்ததாகவும் பேசியதாகவும் கூறினார்.(உளறினார்) அப்போது அவர், (ஜோஷ்வா ஸ்லோகம்) உணவுக் கோளாறால் (Food Poisoning)   உடல்நலம் கெட்டிருந்தார் என்பதையும் சொன்னார். மாலுமிகள், மலையேறுபவர்கள், துருவங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள் போன்றவர்கள் இதுபோன்ற,(யாரோ பின் தொடர்வது போலவும்,யாரோ அபயக் குரல் எழுப்புவதுபோலவும் உணர்ந்ததாக) கதைகளைச் சொல்வது வாடிக்கையே! காரணம், தனிமை, உடல்நலமில்லாமை, போதிய சத்தான உணவில்லாமையால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் என்பது விளங்கும். கூட்டமாக இருக்கும் இடத்தில் பேயைப் பார்த்ததாக யாராவது சொல்லியிருக்கிறார்களா? தனிமையிலும், ஆபத்தான இடங்களிலும் இருப்பவர்கள்தான்  அதைப் பார்த்ததாகச் சொல்வார்கள்.
தன் அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டுத் தனிமையில் வாடும் அனுதாபத்துக்கு உரியவர்களுக்கு இதுபோன்ற, மாயத் தோற்றங்கள் அடிக்கடி ஏற்படும். இழப்பும், தனிமையும் மன அழுத்தத்தின் அளவை அதிகரிப்பதால், உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, பிழையானக் காட்சிகளை உணர்கிறார்கள். மதங்களின் பாதிப்பு!
மதரீதியானச் சிந்தனைத் தாக்கங்களும் மாயக் காட்சிகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. தியானங்கள் என்ற பெயரில், ஏதேனும் ஒரு உருவத்தை (கடவுளை) நினைத்துக் கொள்ளச் சொல்லிப் பழக்கப்படுத்தப்பட்டவர்களுக்கு  அவர்கள் தியானத்தில் கற்பனை செய்யும் உருவம் உண்மையில் வந்ததுபோல் உணர்வார்கள். ஏன், மோசஸ், ஜீசஸ், முகமது போன்ற மதத் தலைவர்கள் தாங்கள், பாலைவனத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது, சில அமானுஷ்ய உருவங்களைச் சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையில். (உண்ணா)விரதம், நீண்டகால தியானம், உடலை வருத்தும் பிரார்த்தனைகள் போன்றவற்றால் மாயக் காட்சிகளை ஏற்படுத்துவதில் மதங்களின் பங்கு மிக முக்கியம்.
பேய், பிசாசு, அல்லது கடவுள் அல்லது வேற்றுலகவாசி  என எதுவாக இருந்தாலும், அவற்றை நம்பாதவர்கள் அவற்றைக் காணவே முடியாது. ஆனால், அதை நம்புகிறவர்கள் அதைப் பார்த்ததாகச் சொல்வது உண்மை! ஆம்! அவர்கள் உண்மையில் பார்க்கிறார்கள்; ஆனால் உண்மையில் அது இல்லை.
ஒரு சிலர் இதுபோன்ற கதைகளை நம்புபவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்படியென்றால். ஓரிடத்தில், சட்டவிரோதமான செயலைச் செய்வதற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள், அந்த இடத்திற்கு வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் பேய் நடமாட்டம் இருக்கிறது, அதை நானே பார்த்திருக்கிறேன் என்று அளந்து விடுவார்கள். இதனால் மற்றவர்களின் தொல்லையில்லாமல் அவர்களின் தொழிலைச் செய்ய முடியும்.
நடு இரவில், வீடு விட்டு வீடு பாயும் மைனர்கள் இதுபோன்றக் கதைகளை நிறைய பரப்புவதுண்டு.
(தொடரும்...)

ஆய்வாளர்கள் சொல்வது என்ன? உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள், மனித இயல் ஆய்வாளர்கள் ஆகியோர், மைக்கேல் ஷெர்மெர் (Michael Shermer) என்பவர் எழுதிய, மக்கள் ஏன் இயற்கைக்குப் புறம்பானவற்றை நம்புகிறார்கள்? என்ற நூலின் அடிப்படையில் பல கருத்துகளைச் சொல்லி-யிருக்கிறார்கள்.
மைக்கேல் ஷெர்மெர், இயற்கையைக் கடந்த, தெய்வீகமான, விஷயங்களில் நம்பிக்கை-யில்லாதவர். அவர், மரபுவழி செயல்களை உளவியல் கண்ணோட்டத்தில், விளக்கியுள்ளார். நிலையற்ற சூழ்நிலைகளால், வாழ்க்கை அச்சுறுத்தலான நிலைக்குள்ளாவதால், மூடநம்பிக்கைகளும்  குழப்பங்களும் மக்களுக்கு ஏற்படுகின்றது. மறுபிறவி நம்பிக்கைகளோ, சொர்க்கலோகம் பற்றிய நம்பிக்கையோ அவர்களுக்கு ஒருவித சந்தோஷத்தைக் கொடுக்கிறது. புராணங்கள், மதங்கள், அமானுஷ்யங்கள் எல்லாமே அறிவியல் வளர்வதற்கு முன் உண்டானவை. பகுத்தறிவு வளர்ந்த பின்னர் இதுபோன்ற கதைகள் அல்லது கடவுள்கள் புதிதாகத் தோன்றவில்லை என்பதை கவனிக்க வேண்டும். முழுமையான அறிவியல் அறிவு இல்லாத இடங்களில் இதுபோன்ற பொய் நம்பிக்கைகள் வளர்வது தவிர்க்க முடியாததாகிறது. சிலர், ESP (Extrasensory perception)  புலனுக்கப்பால் உள்ள புலன்காட்சி என்றும், சிலர் அடையாளம் தெரியாத பொருள் UFO (Unidentified flying object) என்றும் அறிவியல் போர்வையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வென்டி கமினேர் என்ற சமூகவியல் ஆய்வாளர், மறுபிறவி கலாச்சாரம்,  மத நிறுவனங்களைச் சார்ந்து வாழ்தல் ஆகியவற்றின் விளைவுதான் 'அமானுஷ்யங்கள் மீதான நம்பிக்கை என்று, Sleeping with Extra Terrestrials என்ற நூலில் விவரிக்கிறார். மேலும் முற்பிறவிப் பயன், நமக்கும் மேலான ஒரு சக்தி போன்ற நம்பிக்கைகளால் நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது மூளையினால் யோசிப்பதைவிட்டு, இதயத்தால்(!) யோசிக்கிறோம். உண்மைக் காரணங்களைக் கண்டுபிடிக்காத நிலையில் (மூட)நம்பிக்கை வெளிப்படுகிறது. சிலர் தன்னைத்தானே கடவுள் என்று உண்மையிலேயே நம்புகிறார்கள். புராணங்களை நம்புவதால் இதுபோன்ற மாயத் தோற்றங்களை மக்கள் உண்மையென நினைக்கிறார்கள்.
மனித இனஇயல் அறிஞர்கள் நாம் ஏன் நம்புகிறோம் என்பதை நன்கு விளக்குகிறார்கள். பரிணாம வளர்ச்சி, நம்மை கட்டுப்படுத்தி (conditioning) வைத்திருக்கிறது. அதாவது, உறுதியாகச் சொல்ல முடியாதவற்றையெல்லாம், அப்படி நம்பு என்று சொல்கிறது. இது ஒரு உயிர்வாழும் உத்தியாகச் செயல்பட்டது. அதாவது, தூரத்தில் தெரியும் கருப்பு உருவம், வெறும் பாறைதான் என்று நினைப்பதைவிட  பசி கொண்ட கரடி என்று நம்பி, அருகில் போகாமல்  உஷாராக  இருக்கலாம். இப்படியே தலைமுறை தலைமுறையாக உண்மையைக் கண்டறியாமலே, இருட்டில் அசையும் வெள்ளைத் துணி பேயாகவே நம்மைப் பின் தொடர்கிறது. மேலும் உண்மையை எல்லோரும் உணர்ந்துவிட்டால் சுவாரஸ்யம் இல்லாமல் போகுமே!?
பயம் பதட்டம் அல்லது, மோசமான பொருளாதார  சூழல், அவசரமாக ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளச் செய்கிறது. கன்னி மேரி ஏசுவைப் பெற்றதுபோல ஏதேனும் அதிசயம் நடக்காதா என்று நம்புவது போல்தான் கடவுள் நம்பிக்கையும் பேய் நம்பிக்கையும். சில நல்ல பேய்களைப் (பரிசுத்த ஆவி) பற்றிய நம்பிக்கைகள் வளர்ந்துள்ளதும் அதனால்தான்.
Jhon F.Schumaker என்பவர், மாயாஜாலம், மதம் மற்றும் எல்லாவிதமான உண்மைக்கு மாறான வடிவங்களும் மனிதன் என்னும் விலங்கு வாழும் சூழலுக்கு ஏற்ப, மாறுபட்ட, தனித்தன்மை கொண்டதாகும். என்கிறார். அப்படி நம்பிக்கை என்ற பெயரில் ஏற்றுக்கொள்வது, பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. வழக்கமான, காரண காரிய  சிந்தனையைக் காட்டிலும், மூடநம்பிக்கைகளால் புராணங்களும் கடவுள்களும் தோன்றியிருப்பது பலருக்கும் பிழைப்பைக் கொடுத்திருக்கிறது அல்லவா? மாயத் தோற்றங்களை உருவாக்குவதால் தன்னைப் பெரிய ஆளாக ஆக்கிக் கொள்ளலாம்; மதிப்பை அதிகரித்துக் கொள்ளலாம்; அதிகாரம் உள்ளவராக ஆக்கிக் கொள்ளலாம் என்பதோடு, அறிஞனாக காட்டிக் கொள்ளலாம்.
schizophrenics எனப்படும் மனப்பிளவு நோய் உள்ளவர்களுக்கு மாயக் குரல் கேட்பதும், மாயக் காட்சிகள், திரிபுக் காட்சிகள் தெரிவதும் வழக்கமானது. அவர்களின் அருகில் யாரோ இருப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
அறிவியலாளர்கள் மாயக்காட்சிகள் என்பது நரம்பியல் நோய்க் காரணமாகவே மாயக்காட்சிகள் உருவாவதைத் தெரிவித்து-வந்துள்ளனர். ஆனால்,   மூளையின் எந்தப் பகுதியில் அந்த மாயக் காட்சிகள் தூண்டப்படுகின்றன என்பதை மிகத் துல்லியமாக அறிய முடியாமலிருந்தது.
இப்போது, Olaf Blanke மற்றும் அவரது, சகாக்கள் யாரோ இருப்பதாக உணர்வதை (Feeling of Presence)  உண்டாக்கும் மூளையின் பகுதியைச் சரியாகக் குறிப்பிட்டிருப்பதோடு, நல்ல நிலையிலுள்ள மனிதர்களுக்கு பேய் பயத்தைக் காட்டும் ஒரு ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கண்டு-பிடிப்பின் மூலம் மாயத் தோற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிந்து-கொள்வதோடு, அந்த நோயை குணமாக்கும் வழியையும் எளிதாக்கலாம்!
2006 ஆம் ஆண்டில், Olaf Blanke  வலிப்பு நோயாளிக்கு மூளையின் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதியை (temporoparietal junction) மின்சாரத்தின் மூலம் தூண்டுவதன் மூலம் மாயக்காட்சியை உருவாக்க முடியும் என்று நிருபித்தார். மூளையின்  temporoparietal junction என்ற அந்தப் பகுதி நம் உடலின்  உணர்வு மற்றும் அசைவு ஆகியவற்றை மூளையோடு தொடர்புபடுத்தும் பகுதியாகும். மேலும் schizophrenics எனப்படும் மனப்பிளவு நோய் உள்ளவர்களுக்கு அது மிகையாக வேலை செய்வதும் கண்டறியப்-பட்டது.
மேலும் சுவையான தகவலையும் அவர் கண்டுபிடித்துள்ளார். உணரப்படும் காட்சிகள் நோயாளியின் உடல் இருக்கும் நிலையிலேயே கண்ணாடி பிம்பம்போல் உணரப்படுகிறது என்பதுதான் அது! அதாவது, நோயாளி உட்கார்ந்து கொண்டிருந்தால், அந்த உருவமும் உட்கார்ந்து கொண்டிருக்கும்!
உடல் உணர்வதை நரம்பு செல்கள் மூளையோடு சரியாக ஒருங்கினைக்காத நிலையில் மாயக் காட்சிகள் தோன்றுவதாக Giulio Rognini என்பவர் கூறுகிறார்.
மாயத் தோற்றங்கள் மூளையின் மூன்று பகுதிகளில் ஏற்படும் காயங்களால் ஏற்படுகின்றன. முக்கியமாக, Frontoparictal Cortox    என்ற பகுதி பாதிப்படையும்போது. பேய் பிசாசுகள், அருவங்கள், கடவுள்கள் எனப்-படுபவை எல்லாக் கலாச்சார சமூகங்களிலும் காணப்படுகிறது. உண்மையில் யாரும் அருகில் இல்லாத நிலையில் இருப்பதாக உணர்வது மூளையின் கவர்ச்சிகரமான கற்பனை. இது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்தில் உள்ள புனித நூல்கள், கற்பனை காவியங்கள் கதைகள் போன்றவற்றைச் சார்ந்து இருக்கும்.
நரம்பியல் மற்றும் உளவியல் பிணியாளர்கள் அடிக்கடி மாயக் காட்சிகளைக் காண்கிறார்கள். நல்ல நிலையில் இருப்பவர்கள், அசாதாரணமான சூழலில் யாரோ இருப்பதாக உணர்கிறார்கள்!
மனநல பாதிப்பே பேய்களும் பிசாசுகளும் இருக்கிறது என்று நம்பக் காரணம். பகலிலும் ஒருவருக்கு மேற்பட்டவர்களும் இருக்கும்போது பேய் வராததற்குக் காரணம் என்ன?
தனியாக இருக்கும்போது பேய் வருவதற்கு, மன பிராந்திதான் காரணம்!
மன பிராந்தி, மது பிராந்தி இரண்டும் மனிதர்க்குக் கேடு!
உண்மை இதழ்,15-31.8.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

மெக்கா அருகே நெரிசல்: 725 பேர் பலி


சவுதி, செப். 25_ மெக்கா அருகே மினாவில் வியாழக் கிழமை ஏற்பட்ட நெரிச லில் சிக்கி ஹஜ் பயணிகள் 725 பேர் பலியாகினர். 860க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
"சாத்தான் மீது கல்லெ றிதல்' நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளச் சென்ற போது வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு (இந்திய நேரப் படி காலை 11.30) திடீர் நெரிசல் ஏற் பட்டது. இது தொடர்பாக சவூதி உள் நாட்டுப் பாது காப்பு அமைச்சகம் தெரி வித்ததாவது: "சாத்தான் மீது கல்லெறிதல்' நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இந்த நெரிசல் விபத்து நேரிடவில்லை.
அந்த இடத்தைச் சென் றடைய அமைக்கப்பட்டு உள்ள ஜமராத் பாலத்தின் முகப்புப் பகுதியில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 717 பேர் உயிரிழந்தனர்.  அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணி யில் 4,000 பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அவசர மருத் துவ உதவி அளிக்க 220 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.
விபத்து நடந்த இடத்தி லேயே இரண்டு முதலு தவி முகாம்கள் அமைக் கப்பட்டு, காயமடைந்தவர் களுக்கு மருத்துவ உதவி கள் வழங்கப்பட்டு வரு கின்றன. ஏற்கெனவே "சாத் தானின் மீது கல்லெறிதல்' நிகழ்ச்சியில் கலந்து கொண் டவர்களும், அந்த நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வந்து கொண்டிருப்பவர்களும் மாற்று வழிகளில் அனுப் பப்பட்டனர்.  திடீர் நெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து உடனடி யாக எந்தத் தகவலும் இல்லை என சவூதி உள் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
4 பேர் இந்தியர்கள்
பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. இதில் 2 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள  நிலை யில், மூன்றாவதாக கேர ளாவின் திரிச்சூர் மாவட் டத்திற்குட்பட்ட கொடுங் கலூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவரும்,
நான் காவதாக தெலுங்கானா மாநிலத்தின் அய்தராபாத் துக்கு அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிபி ஜான் என்கிற பெண்மனியும் பலியாகியி ருப்பதாக அந்தந்த மாநி லத்தைச் சேர்ந்த அதிகா ரிகள் பத்திரிக்கையாளர்க ளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள் 1.5 லட்சம் பேர் நடப்பு ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட தாக கூறப்படுகிறது. நெரி சலில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

ஹஜ் புனித பயணத்தின் போது
இதுவரை நடந்த விபத்துகள்

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்கனவே பல முறை விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-
1975ஆ-ம் ஆண்டு டிசம்பர்: ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 200-க்கும் அதிகமானோர் பலி.
1987ஆ-ம் ஆண்டு ஜூலை: ஈரானிய போராட் டக்காரர்களுக்கும் சவுதி அரேபிய காவல் துறை யினருக்கும் இடையே நடந்த மோதலில் 400-க்கும் அதிகமாக ஈரானிய யாத்ரீகர்கள் பலி.
1990-ஆம் ஆண்டு ஜூலை: மெக்கா அருகே உள்ள அல்-முசீம் குகைப்பாதையில் நடந்த விபத்தில் 1,426 பயணிகள் உயிர் இழந்தனர்.
1994-ஆம் ஆண்டு மே: மினாவில் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 பயணிகள் பலி.
1997-ஆம் ஆண்டு ஏப்ரல்: மினாவில் ஹஜ் பயணி கள் தங்கி இருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 343 பயணிகள் சாவு.
1998-ஆம் ஆண்டு ஏப்ரல்: நெரிசலில் சிக்கி 119 பேர் பலி.
2004-ஆம் ஆண்டு பிப்ரவரி: ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் இறந்தனர்.
2006ஆ-ம் ஆண்டு ஜனவரி: ஜமாரத் பாலத்தின் கிழக்கு நுழைவாயில் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 362 பேர் சாவு.
2015 செப்டம்பர் 11ஆம் தேதி: மெக்கா பெரிய மசூதியில் கிரேன் சரிந்து விழுந்ததில் 115 பேர்
விடுதலை,25.9.15

திங்கள், 9 நவம்பர், 2015

சாமி ஆடுதல் - சிங்காரவேலர்


குடங்களை சிங்காரித்து அவைகளை தலைமேலேந்திக் கொண்டு அதற்குக் கரகம் எனப் பெயரிட்டு தெருக்களில் ஆடித்திரியும் வேடிக்கையை நமது நாட்டில் அன்றாடம் பார்க்கலாம். அதனுடன் தெய்வம் ஆடுவதுமுண்டு.
தெய்வம் ஆடுவதென்றால் ஒரு புருஷனோ, பெண்ணோ தன் மேல் சாமி வந்ததாகச் சாதாரணஸ்மரணையை மறந்து, வேறுவிதமாகப் பேசுவதும் ஆடுவதுமான காட்சி சாமி ஆடல் அல்லது தெய்வமாடல் என வழங்கும். இவ்விதமாக சில மனிதர்கள் நடிப்பதை மெஞ்ஞானத்தில் (Artificial) அதாவது, தானே வரவழைத்துக் கொண்டு ஓர்வித வெறி என்பர்.
சாதாரண ஹிஸ்டிரியாவில் மூர்ச்சை அடக்க வலி வருவதுண்டு. காக்காய் வலி என்ற நோவும் இந்த நரம்பு நோயைப் பற்றியதே. அதே மாதிரியாகவே ஒருவன் தானாகவே வரவழைத்துக் கொள்ளும் இவ்வித வலியைத் தான் நமது நாட்டுப் பாமர ஜனங்கள் சாமி ஆடுகிறது சாமி பேசுகிறது, சாமி விமர்ச்சித்தது என்று பயபக்தியோடு சொல்கின்றனர்.
இந்த வலியை வரவழைத்துக் கொள்வதற்குத் தகுந்த ஆடம்பரங்கள் செய்வதுண்டு. உடுக்கை, சிலம்பு, கரகம், வேப்பிலை, மேளம், தாளம், விபூதி, மணி முதலிய (Accompaniments)  ஆடம்பரங்கள் கூடவே இருக்கின்றன. இத்தியாதி ஆடம்பரத்தில் சில நரம்பு வியாதியுடையோர் எளிதில் ஓர்வித மயக்கம் அடைகின்றனர்.
இவ்வித வலியில் (எக்சைட்மெண்ட்) விழுந்தோரை ஆயிரக்கணக்காக அல்லாசாமி பண்டிகையில் ஆலி, ஜூலா என்ற சப்தத்திற்கு ஏற்றவாறு சிறிய பையன்களும், இந்த மயக்கத்தை வரவழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் மேல் மஞ்சள், சாம்பிராணித்தூளை வாரி வாரி எறிகின்றனர்.
அல்லாசாமி கோஷத்தில் யாருக்குத்தான் இவ்வித வலியுண்டாகாமல் இருக்கும்? ஒருவனைப் பார்க்க மற்றொரு வனுக்கு தொத்து வியாதியைப் போல் இந்த வலி தொத்திக் கொள்வதுண்டு அதே மாதிரியாகவே இந்தப் பண்டிகையில் மாரடித்துக் கொள்ளும் பயங்கரமான காட்சியொன்றுண்டு.
மூடநம்பிக்கையால் தங்களை மறந்து மதவெறியால் தூண்டப்பட்டு இரத்தம் ஒழுக மாரை அடித்துக் கொள்ளு கின்றனர். ஒருவன் தானே கோபத்தை வரவழைத்துக் கொண்டு தன்னையே அடித்துக் கொள்ளும் பாவனையை யொத்தது இவ்வித தெய்வமாடலும் சாமி ஆடலும் மாரடித்துக் கொள்ளலும் என அறிக. இந்த விபரீத நிலைமையில் உளறும் சொற்களை தெய்வ வாக்கென நம்புகின்றார்கள்.
அம்மா ஆடு கேட்கிறாளாம்!
உண்மையாகவே ஒருவனுக்கு ஜன்னி நோய் பிறந்தால் தாறுமாறாக அவன் உளறுவான். இவ்வித உளறலைப் பேயின் வாக்கெனக் கொள்ளுவதுமுண்டு. காட்டுமிராண்டி நிலைமையில் நிற்கும் கூட்டங்களில் ஜன்னி கண்டவனை அடித்துக் கொன்றுமிருக்கிறார்கள். அதனால் தானே ஜன்னி யை உண்டாக்கிக் கொண்டு உடுக்கை, சிலம்புகளுக்குத் தக்கப்படி ஆடிக் கொண்டு தாறுமாறாக உளறுவானேயாகில் அதனைத் தெய்வ வாக்காக கருதி அதன்படி நடக்க எத்தனிக்கின்றார்கள்.
அம்மா ஆடு கேட்கின்றாள் என்றால் ஆடுகளைக் காவு இடுகின்றார்கள். கோழி கேட்கின்றாள் என்றால் கோழி காவு கொடுக்கின்றார்கள். இவ்விதமாக சில கொடூர செய்கை களையும் அம்மா சொன்னாளெனவும், சாமி சொல்லிற்று எனவும் நம்பி செய்து விடுகிறார்கள். இத்தியாதி கொடிய மூடநம்பிக்கைகளால் சில இடங்களில் கொலைகளும் நடந்திருப்பதைப் படிக்கின்றோம்.
நான் இருக்கும் மீன் பிடிக்கும் குப்பத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பந்துக்களில் ஒரு பெண்ணானவள் பிள்ளை பெற்ற பிறகு சரியான சிகிச்சையின்றி ஜன்னி பிறக்கவும், அவளுக்குப் பேய் பிடித்துக் கொண்டதென்று தெய்வம் வந்தவள் சொன்னதாக செருப்பாலும், முறத்தாலும் அந்த நோயாளியை அடித்துக் கொன்றார்கள்.
அதே மாதிரியாகவே நோயில் மெலிந்த பெண்களை தெய்வம் ஆடுகின்றவள் சொல்லைக் கேட்டு கடலில் முழுக வைப்பதும் தெய்வம் ஆட வைப்பதும், அடி தண்டமிட்டு நடக்கச் சொல்வதும், உடுக்கைச் சிலம்புடன் வெகுதூரம் நடந்து பிரார்த்தனை செலுத்துவதுமான கொடுமையான வேலைகளைச் செய்யச் சொன்னதின் பயனாக எத்தனை சிறு பெண்கள் மாண்டனர்.
இத்தியாதி கொடிய பழக்கங்கள் மூட பக்தியால் நேரிடுவதைக் கண்டறிந்து அதனைப் போக்கும் நல்லவழிகளைத் தேடாமல் சிவ சிவ என்று முணு முணுப்பதும் ஆன்மா உண்டா என்று வீண் வாதமிடுவதும் கர்மம் உண்டா என்று வாதிப்பதுமான பயனற்ற செயல்களைச் செய்து காலம் கழிப்பதா மானுஷீகமெனக் கேட்கின்றேன்.
வீண் காலம் கழிக்கும் மதவாதிகள்
சைவ கூட்டங்களிலும், வைணவ கோஷ்டியிலும், காலட்சேபங் களிலும், கிறிஸ்துவ சபைகளிலும், புத்த கூட்டங்களிலும் நமது புத்திக்கு எட்டாத கற்பனைகளைப் பற்றி பேசி வாதித்து வீண் காலத்தைக் கழிக்கின்றனரே ஒழிய மற்றபடி உயிரை இவ்வுலகில் வீணே மடியாமல் செய்வதற்கு வேண்டிய பரிகாரங்களைத் தேடி உழைக்காத காட்சியைக் காண மனம் புண்படுகிறது.
அரசாங்கம் மூட நம்பிக்கைக்கு ஆதரவு
துர்ப்பழக்கங்களால் மடியும் மக்களுக்கு நமது நாட்டில் கணக்கே இல்லை. எத்தனை குடும்பங்கள் இத்தியாதி மூட நம்பிக்கைகளால் நாசமடைந்தன.
காட்டுமிராண்டிப் பழக்கங்கள், நாகரீக மற்ற வழக்கங்கள், உலகமெங்கும் அங்கும் மிங்கும் பரவியிருந்த போதிலும், நமது இந்திய நாட்டில் மாத்திரம் இக்கொடிய மூட பழக்கவழக்கங்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அரசாங்கமும் இம்மூட வழக்கங்களுக்கு ஜாடையாகவே இருந்து வருகின்றது.
கடுமையான சட்ட திட்டங்களால் இம்மகா பாதகங்களைத் தடுப்பதை காணோம். இதற்கொரு காரணமுண்டு. அதுயா தெனில், இம்மூடப்பழக்கங்களை மதச்சார்பாக அனுஷ்டித்து வருவதால் மதநடு நிலைமை என்ற மூடத்திட்டத்திற்கு விரோதமாகாமல் பார்க்கின்றனர். சதி என்னும் துர்ப் பழக்கத்தைச் சட்ட திட்டத்தால் நிறுத்தினார்கள்.
(அதாவது, உடன்கட்டை ஏறுவது சென்ற 100 ஆண்டிற்கு முந்தியே தடுக்கப்பட்டது) ஏன்; தெய்வமாடுவதையும், காவு கொடுப் பதையும், ஆலி ஜூலா என்று மூர்ச்சித்துப் போவதையும், மந்திர தந்திரங்கள் செய்வதையும், பில்லி, சூனியம் வைப்பதையும், நல்ல சகுனம், கெட்ட சகுனமென்பதையும் சட்டதிட்டங்களால் நிறுத்தலாகாது.
உடன் கட்டை ஏறிமடிவது ஏகதேசம். ஆனால் சரியான சிகிச்சையின்றி இந்தக் கும்பம் போடுவதினாலும், தெய்வமாடு வதிலும், மந்திரம் செய்வதினாலும் மடியும் ஏழை மக்கள் ஆயிரக்கணக்கென்று சொல்லலாம். இதனைத் தடுப்பார் இவ் வுலகில் (இந்தியாவில்) யாருமில்லையா?
சுயமரியாதையோருக்கு இதை விட முக்கிய வேலை என்ன இருக்கிறது?
-விடுதலை,2.10.15

வெள்ளி, 2 அக்டோபர், 2015

தலித் மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதி

கருநாடக மாநில கிராமத்தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: தலித் மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதி
குருவங்கா, ஜூலை 21_ கருநாடகத்தின் குருவங்கா கிராமத் தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், கிராம பொதுக் குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கவும், கோயிலுக்குள் நுழையவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள குருவங்கா கிராம பொதுக் குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க வும், கோயிலுக்குள் நுழை யவும் அனுமதி மறுக்கப் பட்டு வந்தனர்.
இதையடுத்து ஹாசன் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி என்.ஆர். புருஷோத்தம், மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளர் பீமசங்கர் எஸ். குல்ட் உள்ளிட்ட அதிகா ரிகள் குருவங்கா கிராமத் துக்கு சென்று பெரும் பான்மை வகுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குருவங் காவில் உள்ள பொதுக் குளம் அனைவருக்கும் சொந்தமானது. இந்த குளத்து நீரை தலித் மக் கள் தொடக் கூடாது என ஊர் கட்டுப்பாடு விதிப் பது சட்டப்படி குற்றம். இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையடுத்து தலித் மக்களை அழைத்து வந்து குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். இதேபோல் அங்குள்ள மஹாதேவரய்யா கோயி லுக்குள் தலித் மக்கள் நுழைந்து வழிபாடு நடத் தவும் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி என்.ஆர். புருஷோத்தம் கூறும் போது, தலித் மக்கள் தற்போது அச்சமின்றில் குளத்தில் இறங்கி தண் ணீர் எடுக்கின்றனர். இதை தடுக்க முயன்றால் அவர் கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-விடுதலை,21.7.15

  ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

  சீர்திருத்தத்தை வரவேற்கிறது கிறித்துவ மதம்


  வாடிகன், செப்.11_ கிறித்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவில் திருமண விலக்கு அளிப்பதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  மண விலக்கு விரைவாகவும், எளி தாகவும் இணையர்களுக்கு கிடைத்திட பிஷப்புகள் உதவிடவேண்டும் என்றும்  போப் பிரான்சிஸ்  அறிவுறுத்தி உள்ளார்.
  கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு கவலையளிப்பதாக மணவிலக்கு பிரச்சினை இருந்துவந்தது. கிறித்தவ சர்ச்சுகளால் அங்கீகரிக்கப்படாத மண விலக்கு பெற்றவர்கள் 120 கோடிபேர் உள்ளனர்.  போப் பிரான்சிஸ் காலத் தில் இம்மதம் பெருமளவிலான மாற்றத்தை கண்டுள்ளது. நூற்றாண்டு காலத்தைக் கடந்தபின்னர் கருணை மிகுந்த முடிவாக இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  கிறித்தவ கத்தோலிக்கர்களுக்கு மணவிலக்கு அளிப்பதில் போப் செய்துள்ள மாற்றங்கள் குறித்து மோடூ புரோப்ரியோ எனும் பாதிரியார் குறிப் பிடுகையில், மண விலக்கு பெறுவது சிக்கலான  அதிகப்படியான செலவாக வும் இருப்பதாக கருதப்பட்டுவந்த நிலையில், போப்  புரட்சிகரமான மாற் றங்களை ஏற்படுத்தி உள்ளார்.   மதத் தில் குறிப்பிட்டுள்ளபடி, திருமணம் என்பது பிரிக்கப்படக் கூடாதது என்று இருந்ததை மாற்றுவதற்கு தாமாகவே போப் பிரான்சிஸ் பெருமுயற்சி எடுத்துள்ளார்.
  மணவிலக்கு அளிக்கும் முடிவில் கிறித்துவ சபையினரின் நடுவர் மன்றம் விசாரணை மேற்கொண்டு மறுஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்ததை போப் நீக்கிவிட்டார். மண விலக்கு வழக்குகளில் விரைந்து தீர்ப்பு அளிக்க ஏதுவாக, பிஷப்புகளின் அதி காரத்தை, விசாரணை செய்யும் நீதி பதிக்கே மாற்றி அளித்துள்ளார். இதன் மூலம் நீதிபதிகள் தெளிவான தீர்ப்பு களை விரைவாக வழங்க முடியும் என்றார்.
  போப் அளித்துள்ள மாற்றங்களுக் கான அறிக்கையின் தலைப்பாக கடவுள் இயேசு, கருணைமிக்க நீதிபதி என்று குறிப்பிட்டுள்ளனர். திருமணம் என்பது குறித்து கடந்த காலங்களில் வெறுமைக்கான ஆணையாக குறிப் பிடப்பட்டது.
  சர்ச்சு விதிகளின் கீழ் திருமணம் குறித்து விதிகளை வகுப்பது என்பது செல்லாததற்கு முக்கிய காரணம் கருத்து சுதந்திர விருப்பம், உளவியல் முதிர்ச்சி, வெளிப்படையாக குழந்தைகளைப் பெற் றுக்கொள்வதில் ஈடுபாடின்மை ஆகிய வையே முக்கிய காரணிகளாக இருந்தன.
  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மணவிலக்கு அளிப்பதுகுறித்த முடிவை எட்டுவதற்காக அவருக்கு ஆலோ சனைகள் வழங்குவதற்காக வல்லுநர் குழுவை அமைத்தார். மண விலக்கு கோரும் இணையர்க்கு மணவிலக்கை வழங்குவதற்குத் தேவையான நடை முறைகள், விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும், அவர்களின் திருமண முறிவு அல்லது மணவிலக்கு செல்லத்தக்கதா? என்பதில் நீண்ட காலமாக இருட்டறையில் அய்யத்துக்கு இடமாகி, ஒடுக்குமுறையாக இருந்து விடக்கூடாது.
  இந்தப் பிரச்சினையில் சட்டம் ஏற் படுத்த போப்பின் தலைமை ஆலோச கராகப் பணியாற்றியவரான கர்டினல் பிரான்செஸ்கோ கோகோபால்மேரியோ கூறும்போது, 45 நாள்களில் பிஷப்புகள் எளிமையான நடைமுறைகளைப் பின்பற்றி தீர்வு காண வேண்டும். மணவிலக்கு கோருபவர்களுக்கு தீர்வு காண்பதில் நடைமுறைகளைப் பின் பற்றுவதில் கடந்த காலங்களில் பல ஆண்டுகள் ஆயின. ஆனால், தற்போது மணமுறிவு குறித்த புதிய சட்டத்தின் படி, போப் மண முறிவை ஆதரிப்பதாக அல்ல, ஆனால் மணமுறிவு கோருப வர்களுக்கு விரைந்த நடவடிக்கையை எடுப்பதற்கு வழி ஏற்படுத்தி உள்ளார் என்று  குறிப்பிட்டுள்ளார்.
  ஏற்கெனவே, மண முறிவு கோரும் வழக்குகளில் ஆயிரம் டாலர்கள் வழக்கு கட்டணமாக இருந்தது. தற்போது அது முற்றிலும் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு வழக்கு களாக உள்ளவை உள்ளூர் நீதிமன்றத் தில் முடித்துக்கொள்ளவும், மிகவும் சிக்கலான வழக்குகள்  மட்டும் வாடி கனில் உள்ள சிறப்பு நீதிமன்றமான ரோடாவில் நடத்திக்கொள்ள வேண் டும் என்று புதிய சட்டத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.
  வாடிகன் நீதிமன்றத்தின் தலைவர் மோன்சைனர் பியோ விடோ பிண்டோ மணமுறிவு சட்டம்குறித்து கூறும்போது, 1740ஆம் ஆண்டு முதல் 1758ஆம் ஆண்டு வரை ஆட்சிபுரிந்த 14ஆம் பெனடிக்ட் காலத்துக்குப்பிறகு தற்பொழுதுதான் மணமுறிவு குறித்த புதிய சட்டத்தில் ஏராளமான மாற்றங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார். பாஸ்டன் கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ் பிரெட்ஸ்கி கூறும்போது, முறிந்து போன திருமணத்தால்,  மிகுந்த தொல்லைகளை அனுபவித்து வரும் 10ஆயிரம் இணையர்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று போப் கிறித்தவ சபை நடத்துவோருக்கு (பாஸ்டர்களுக்கு) அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
  கிறித்தவர்களிடையே மத ரீதியாக, மிகவும் கவலையளிப்பதாக இருந்து வந்த இப்பிரச்சினையில், சர்ச்சுக்கு வெளியே மண விலக்கு மற்றும் மறு மணம் புரிந்துகொண்டுள்ள கத்தோலிக் கர்கள் பலரும் சீர்திருத்தத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
  நடைமுறைகளில் மண முறிவு ஏற்பட்டு மறுமணம் புரிந்துகொண்ட கத்தோலிக்கர்களின் முன்னதாக செய்து கொண்ட திருமணம் நீடிப்பதான பொருளில் இருந்து வந்தமையால், மறுமணம் பாவமானதாக கருதப்பட் டது.  புதிய சட்டத்தால், அவர்கள் மத அங்கீகாரமும், மன்னிப்பும் பெறுவதற்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
  சட்டப்படியான மணமுறிவு பெற விரும்பியவர்களுக்கு மணமுறிவு வழங்கிட பின்பற்றப்பட்ட நடைமுறை மிகுந்த சிரமமாக இருந்தது. இணையர் மற்றும் மத போதகர்களாக இருப்ப வர்கள் தொடர்ந்து இதுகுறித்து கிறித் தவ மதத் தலைவர்களுக்கு மாற்றம் கோரி, புகார்களைத் தெரிவித்து வந்தனர்.
  அமெரிக்கா  மற்றும ஜெர்மனி போன்ற நாடுகளில் மண முறிவு பெற்ற வர்கள் மற்றும் மறுமணம் புரிந்து கொண்டவர்கள் சர்ச்சு நடவடிக்கை களில் முழுமையாக பங்கேற்க விரும்பி யுள்ளனர். இதுதான் மிகப்பெரிய விவாதமாக இருந்தது. இந்தியாவின் மக்கள் தொகையில் 1.55 விழுக்காட் டளவில் கிறித்தவர்கள் உள்ளனர்.
  இம்மாதத்தில் அமெரிக்க அய்க்கிய நாடுகளுக்கு முக்கிய பயணமாக போப் செல்கிறார். அப்போது 2014ஆம் ஆண்டு முதல் பன்னாட்டளவில் உள்ள மணமுறிவு கோருபவர்களில் பாதி அளவில் 23,000 மண முறிவு நிகழ்வுகளை போப் நடத்த உள்ளார் என்று  ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத் தில் அப்போஸ்தலர்களுக்கான ஆய்வு மய்யம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புகின்ற பெண்களுக்கு மதத்தின் சட்டம் எளிதாக்கப்பட்டு பெண்களின் கருக்கலைப்பு உரிமை குறித்து போப் செய்த மாற்றங்கள் வெளியான ஒரு வாரத்தில் மணமுறிவு சீர்திருத்தம் செய்துள்ளார். கிறித்தவ சர்ச்சுகளில் டிசம்பரில் தொடங்கப்பட உள்ள கருணை ஆண்டு விழாவையொட்டி போப் பிரான்சிஸ் இம்மாற்றங்களை செய்து வருகிறார். போப்  செய்து வரும் மாற்றங்கள்  கிறித்தவர்களிடையேயும், பெண்ணுரிமை, மனித உரிமை செயற் பாட்டாளர்கள் மத்தியிலும் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  -விடுதலை.11.9.15