பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2016

பார்ப்பனப் பெண்ணும் துப்புரவுப் பணிப் பெண்ணும்


- அண்ணல் அம்பேத்கர்

பவுத்தத்தைப் பரப்பிய ஒரு மக்கள் இனம் உண்டென்றால் _ அவர்கள் நாகர்கள்தான் என்பதை, பவுத்த வரலாற்று இலக்கியங்களைப் படித் தவர்கள் அறிவார்கள். ஆரியர்களுடைய மிகக் கடுமையான எதிரிகள் நாகர்கள், ஆரியர்களுக்கும் -_ ஆரியர் அல்லாத வர்களுக்கும் கடுமையான போர், பல காலம் நடைபெற்றுள்ளது. நாகர்களை, வந்தேறிகளான ஆரியர்கள் எப்படி யெல்லாம் துன்புறுத்தினார்கள் என் பதை புராணங்களில்கூடக் காணலாம்.

புத்தரின் அறிவுரைகளை, நாகர்கள் நாடு முழுவதும் பரப்பினார்கள். எனவே தான், நாம் அனைவரும் நாகர்கள் எனப்பட்டோம். நாகர்கள் பெருமளவில் நாகபுரியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. எனவேதான், இந்நகரம் நாகபுரி எனப் பெயர் பெற்றுள்ளது.

நாம் தன்மானத்திற்காகவே போராடுகின்றோம். மனித இனத்தையே சரியான பாதையை நோக்கி இட்டுச் செல்ல நாம் தயாராகிக் கொண்டிருக் கின்றோம். இதற்காக எந்தத் தியாகத் தையும் செய்ய நாம் தயார். நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுப்போம். நாம் பவுத்தர்களாகி விட்ட பிறகும், நமக்குள்ள அரசியல் உரிமைகளைப் பெற்றிட என்னால் முடியும். (`பாபா சாகேப் அம்பேத்கர் வாழ்க! -_ விண் ணைப் பிளக்கும் அதிரொலியுடன் கைதட்டல்கள்).

நான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் -_ இந்துவாகச் சாக மாட்டேன் என உறுதி ஏற்றேன். நேற்று அந்த வாக்கை நிறைவேற்றினேன். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி; எல்லையற்ற இன்பம், கடுங்கொடிய நரகத்திலிருந்து விடுதலை பெற்ற உளம்பூரிக்கும் உணர்வு. கண்மூடித்தனமான தொண்டர்கள் எனக்குத் தேவை இல்லை. பவுத்த மார்க்கத்தில் இணைந்திடுபவர்கள், பவுத்த நெறிமுறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு - உளமாற உணர்ந்து பவுத்தத்தை ஏற்றிட வேண்டும். நாம் இந்துக்களாகவே இருப்பதால்தான், நம்மால் எதையும் செய்ய முடியவில்லை.
இந்து மதத்தில் இருக்கும்வரை, எவரும் முன்னேற முடியாது.

ஏற்றத் தாழ்வு என்ற கட்டுமானத்தின்மேல் கட்டப்பட்டுள்ள இந்து மதம், சிலருக்கு வேண்டுமானால் வசதியாக இருக்க லாம். குறிப்பாக, மேல் ஜாதியினருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் நிலை என்ன?

ஒரு பார்ப்பனப் பெண் -_ குழந்தையைப் பெற்றால், அவள் குழந்தையைப் பெற்ற நாள் முதலே -_ எந்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் நாற்காலி காலியாக உள்ளதோ, எப்பொழுது காலியாகுமோ என்பதைப் பற்றியே குறியாக இருக்கிறார். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் நம் சகோதரி, ஒரு குழந்தை பெற்றாள் எனில், தாம் பெற்ற குழந்தைக்கும் ஒரு துடைப்பக் கட்டை கிடைக்காதா? என்றே ஏங்கு கின்றாள்.

இப்படிப்பட்ட விந்தையான ஏற்பாடுகள், இந்து மத ஜாதி அமைப்புகள் விளைவித்துள்ள கூறுகளின் வெளிப்பாடே யாகும். இதுபோன்ற தொரு அமைப்பு முறையிலிருந்து நாம் எத்தகைய முன்னேற்றத்தைக் காண முடியும்?

பவுத்த மார்க்கத்தின் மூலம் மட்டுமே நாம் மேம்பாடு அடைய முடியும். நம்மடைய வழியில் நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். மற்ற வர்கள் அவர்களுடைய வழியில் போகட்டும்.

நமக்கென ஒரு புதிய மார்க்கத்தை நாம் கண்டுள்ளோம். இந்த நாள் ஒரு நம்பிக்கைக்குரிய நாள். வெற்றிக்கு வழிகண்ட நாள். வளமான வாழ்விற்கு வழி கண்ட நாள். மாபெரும் விடுதலை நாள். இவ்வழி ஏதோ புதிய வழி அல்ல. இவ்வழி வேறு எங்கிருந்தோ இங்கு இறக்குமதி செய்யப்பட்டதுமல்ல. இம் மார்க்கம் இங்கிருந்தே தோன்றியது தான்.பவுத்தம், இந்தியாவில் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலை பெற்றிருக்கிறது. புத்தரின் அறிவுரைகள் காலத்தால் அழிக்கப்படாதவை.

15.10.1956 அன்று, நாகபுரியில்  நிகழ்த்திய பேருரை. (இதே இடத்தில்தான் 14.10.1956 அன்று பத்து லட்சம் மக்களுடன் அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவினார்)

ரிக் வேதத்தில் தமிழ்ச்சொல்

பழம் என்ற திராவிடச் சொல் ரிக் வேதத்தில்  இடம் பெற்றுள்ளது. (Ripe Fruit)  ரிக் (20). ரிக் வேதத்தில் உள்ள வேளாண் தொடர்பான சொற்கள் சீதா, சிரா, பலம் போன்ற சொற்கள் பிற அய்ரோப்பிய மொழிகளில் இல்லை. ஆகவே ஆசிய மொழிகளுக்கு முந்திய  (Pre-Arya)  திராவிட மொழிச்சொற்கள் இவை என கருதப்பட வேண்டும்.

ஆதாரம்: ஆரியரைத் தேடி (ஆங்கிலம்)

ஆசிரியர்: ஆர்.எஸ். சர்மா, தகவல்: சக்குபாய்

-விடுதலை ஞா.ம.,5.7.14

திருக்குறளும் - பார்ப்பனர்களும்!


- பெரும்புலவர் சீனிவாசன்

திருக்குறளை பிதற்றல் நூல் என்று சொன்னவர்களும் உண்டு. அவர்கள் யார்? எத்தகையவர்? என்பதை விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

திருக்குறளின் பெருமை

திருக்குறள் நூல் உலகத்தார் அனைவ ராலும் போற்றிப் புகழப்படுகிறது. பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலா வருகிறது. நடுவு நிலையாக நீதி களைக் கூறுகிறது. தவறான பழக்க வழக் கங்களைக் கண்டிக்கிறது. உலகத்திற்கே பொதுவான நீதிகளைக் கூறுவதன்றி ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு பிரி வினர்க்கோ தனித்து நீதி கூறப்படுவ தில்லை.

உலகு என்னும் சொல் சுமார் அய்ம்பது இடங்களுக்கு மேல் இந்நூலில் கையாளப்படுகிறது. தமிழ் என்றோ தமிழ்நாடு என்றோ சொல்லப்படுவதாக இந்நூலில் எங்கும் காணமுடியாது.

திருக்குறள் ஆட்சி

திருக்குறளை எடுத்தாளாத புலவர் களே இல்லை எனக்கூறலாம். புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலிய பண்டைய நூல்களில் திருக்குறளைப் பொன்னே போல் எடுத்துப் பொதிந்து வைத்துள்ளனர் -மணிமேகலையில்.

தெய்வந்தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழையெனப்

பொய்யில் புலவர் பொருளுரை தேறாய்
எனத் திருக்குறளை எடுத்தாளுவ தோடு வள்ளுவரைப் பொய்யில் புலவர் என்றும், பொருள் பொதித்த உரை என்றும் போற்றப்பட்டுள்ளமை காண்க.

கம்பர் சுமார் 500 குறட்பாக்களைத் தம் நூலில் அமைத்துப் பாடியுள்ளார். சில இடங்களில் குறளுக்கும் புத்துரையும் கூறியுள்ளார். மகாவித்துவான் ச.தண்ட பாணி தேசிகர் அவர்களால் இது தனி நூலாக வெளிவந்துள்ளது.

இடைக்காலத்தார் செய்த கேடு

இவ்வளவு பெருமை வாய்ந்த குறள் நூலுக்கு இடைக்காலத்தார் சிலர் பல கேடுகளைப் புரிந்துள்ளனர். அவர்களுள் பரிமேலழகரும் ஒருவர். பரிமேலழகரை யான் மதித்து வருகிறேன். அவர் உரை போன்று எழுதுவது அரிது. இருப்பினும் பரிமேலழகர் வட மொழியாளருக்கு அடிமையாகி ஒரு பத்து விழுக்காடு குறளுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித் துள்ளார். தாம் எழுதும் நூல் அவதாரி கையில் அறத்திற்கு விளக்கம் கூற வந்தவர்.

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித் தலுமாம்

என எழுதியுள்ளார், மனு என்ன யாவ ருக்கும் பொதுவான நூலா? பார்ப்பனர் களுக்கு மட்டும் சாதகமான நூலாகும். நெருப்பில் பொசுக்கப்பட வேண்டிய நூலாகும். அதனாலன்றோ மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள்.

வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ, மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி?

என்று கூறினார், மனுநூலைப் படிப் பார்களோ என்னாமல் நினைப்பார்களோ என வினவினார். நினைத்தாலே மனம் கெட்டுப்போகும் எனக்குறிப்பிட்டார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்னும் குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகர் எப்படித்தான் மனுநூலை ஏற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. மேலும் வள்ளுவர் வடநூல் முறையை உட்கொண்டு இவ்வாறு கூறினார் எனப் பலவிடங்களில் குறிப்பிடுகிறார்.

கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட் பாக்களின் உரையை நோக்குக. 434, 501, 648, 924, 993 காமத்துப்பால் அவதாரிகை, 1330 ஆக 7 இடங்கள்.

சில இடங்களில், அரசன் புரோகிதர் களைத் துணையாகக் கொள்ள வேண்டும் - என எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பவர்களாம். இதுவும் தேவையற்ற உரையாகும். கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட்பா உரைகளைக் காண்க.

442, 45 அதி - அவதாரிகை, 501

முதலில் புரோகிதர்களை நாட்டை விட்டு ஒழியுங்கள், அவர்களால் நாடு கெட்டது போதும்

- விவேகானந்தர் வாக்கு.

இவை போன்ற இடங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிற குறட்பாக்களுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையைக் கற்போமானால் திருவள்ளுவருடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

முற்காலத்தில் நூலுக்கு அரங்கேற்றம் என வைத்துப் பல புலவர்கள் முன்னி லையில் நூலை எடுத்துக் கூற வேண்டும். அவைப் புலவோர் குற்றம் கண்டு கூறு வாராயின் நூலாசிரியர் அவற்றைத் திருத் திக் கொள்ளுதல் வேண்டும் இல்லையேல் சமாதானம் கூற வேண்டும் அதன் பின்னரே நூல் வெளிவரும். அதுபோன்று உரைக்கும் அரங்கேற்றம் வைத்திருப்பார் களானால் மேற்சொல்லப்பட்ட குறை களெல்லாம் நீக்கப்பட்டிருக்கும். ஏனோ அவ்வாறு செய்தார்களில்லை.

வைணவ மதத்து ஆழ்வார்கள் பன்னிருவரில் திருமங்கையாழ்வார் என்பவர் ஒருவர். இவர் ஆறு நூல்கள் இயற்றியுள்ளார். அவையாவன:

பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந் தாண்டகம் சிறிய திருமடல் பெரிய திருமடல் - என்பன வாம்.

இவற்றுள்  இறுதியிலுள்ள இரு நூல் களும் அகப்பொருள் நூலாகும். மட லேறுதல் அகப்பொருள் நூலுள் ஒரு துறையாகும்.

அஃதாவது, தலைவியைக் களவுப் புணர்ச்சியில் புணர்ந்து பிரிந்த தலைமகன் தோழியை இரந்தும் தன்குறை நிறைவேறப் பெறாமல் சேட்படுக்கப் பட்டான். பிரிவுத்துயரால் ஆற்றாமை விஞ்சியது. அதனால் நாணம் முதலிய வற்றை விட்டு தலைவியின் வடிவையும், ஊரையும் பேரையும், தனது ஊரையும் பேரையும் ஒரு படத்தில் எழுதி, அச்சித் திரப் படத்தைக் கையிற்கொண்டு, பனை மடலினால் ஒரு குதிரை உருவம் செய் வித்து, அதன்மீதுதான் ஏறிக்கொண்டு, அதனைப்பிறரால் இழுக்கச் செய்து வீதிவழியே பலருங்கூடும் பொது இடங்களில் சுற்றி வருவான்.

இக்கடுந்தொழிலைக் கண்ட உற்றார் உறவினர் மனமிரங்கி அத்தலைவியை தலைவனுக்கு மணம் செய்து கொடுப்பர்.

ஆடவர்கள் இவ்வாறு மடலேறலாமே யன்றி, பெண்கள் எவ்வளவு காமம் மீதூர்ந்தாலும் மடலேறுதல் கூடாது என தமிழிலக்கணம் விதித்துக் கூறுகிறது.

எத்திசை மருங்கினும் மகடூஉ மடன் மேற் பொற்புடை நெறிமை இன்மையான                           (தொல் - 981)
எண்ணில் காமம் எரிப்பினும் மடல் மேற் செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணலது இல்லையே
(சீவகசிந்தாமணி)
மேற்கண்ட கருத்தை ஒட்டியே திரு வள்ளுவரும்
கடலன்ன காமம் உழந்தும் மடலே றாப் பெண்ணின் பெருந்தக்க தில்
(குறள் - 1137)

கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர் தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல, மிக்க தகுதியினையுடைய பிறப்பு உலகத்து இல்லை.

(பரிமேலழகர்)

இக்குறட்பாவின் கருத்தைத் திருமங்கை  ஆழ்வார் தமது பெரிய திருமடல் என்னும் நூலில் பொன்னே போல் போற் றிப்பதிய வைத்துள்ளார். அப்பகுதி யாவது,

- மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்போல் மன்னும் மடலூ ரார் என்பதோர் வாசகமும் தென்னு ரையில் கேட்டறிவ துண்டு (கண்ணி - 38, 39)

தென்னுரையில் கேட்டறிவதுண்டு - என்பதற்கு என்ன பொருள்? தென்னாட்டுத் தமிழ் மொழியின் கண் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கேட்டு அறிந்ததுண்டு என்பதாம். பெரிய திருமடலில் கூறப் படும் தலைவி வடமொழி கற்ற தலைவி யாவாள். அதனால் கற்றறிந்ததுண்டு எனக் கூறாமல் கேட்டறிவதுண்டு எனக் கூறினாள்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு பலர் உரை எழுதியுள்ளனர். முழுதும் மணிப் பிரவாள நடையே. மணியும் முத்தும் கலந்ததுபோலத் தமிழும் வடமொழியும் கலந்து எழுதிய நடையே மணிப்பிரவாள நடையாம். இக்கலப்பு நடையைப் பரிதிமாற் கலைஞர் ஆபாச நடை என ஒதுக்குவார்.

பெரியவாச்சான் பிள்ளை உரை

பெரியவாச்சான் பிள்ளை என்பவர் ஒரு வைணவப் பார்ப்பனர் (அய்யங்கார்) நாலாயிரம் பாடல்களுக்கும் மணிப்பிர வாள நடையில் இவர் ஒருவரே உரையெழுதியவர். மற்றையோர் சில சில பகுதிகளுக்கே உரை எழுதினர். சோழ நாட்டில் திருப்பனந்தாளுக்கு அண்மை யில் உள்ள சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிள்ளை என்பது அவருக்குக் கொடுத்த பட்டம் போலும்.

இவர் மேற்கண்ட பெரிய திருமடல் கண்ணிக்கு உரை கூறும் போது,
தென்னுரையில் கேட்டறிவதுண்டு - என்பதற்கு மிலேச்சசாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு - என எழுதியுள்ளார். என்னே கொடுமை! இதை எப்படித் தாங்கிக்கொள்வது!

தமிழ்மொழி மிலேச்ச சாதி மொழி யாம். திருக்குறள் மிலேச்ச சாதி நூலாம். மடலேறுதல் பெண்களுக்கு வழக்க மில்லை என விதி வகுத்த தொல்காப்பியர் மொழி மிலேச்ச சாதி பிதற்றும் தமிழா கிறது.

திருக்குறளின்மீது இவர்களுக்கு ஏன் காழ்ப்பு உணர்ச்சி தோன்றுகிறது? மனு நீதி போலத்திருக்குறள் அவர்களுக்குச் சார் பாக நீதி கூறவில்லை. பல குறட் பாக்களில் அவர்களுக்கு எதிர்ப்பாகவும் கூறுகிறது.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று                            (குறள் - 249)

இக்குறட்பாவை அவர்கள் ஏற் பார்களா? பிறர் பொருளால் கேள்வி செய்தே தம் வயிற்றை வளர்ப்பவர்கள் எப்படி ஏற்பார்கள்? இதனுடைய சூதினை அறியாத நம் பண்டைய அரசர்களும் ஏமாந்து பல வேள்விகளைச் செய்து பெயர் பெற்றார்கள் என அறி கிறோம். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் பெயர்களைக் காண்க.

மணிப்பிரவாள நடையில் உரையெழு தும்போது, பல இடங்களில் வேதத்திலி ருந்தும், கீதையிலிருந்தும் மேற்கோள் காட்டி - இவ்வாறு விசேட தருமம் கூறு கிறது எனவும் அடுத்துத் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி - இவ்வாறு சாமானிய தருமம் கூறுகிறது எனவும் எழுதியுள்ளார்கள். வேதம், கீதை தெய்வம் கூறியதாம்.

வேதத்தைப்பற்றி வள்ளலார் கூறி யதைக் கீழ்க்காண்க.

வேதாந்தம் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாந்தத்தின் விளைவு அறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மை நெறிதோன்றவிலை என்ன பயனோ இவை.

கீதையைப் பற்றி சிவஞான சித்தியார் கூறுவதைக் கீழ்க்காண்க.

பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக் கூர்த்த அம்பாலே எய்து கொன்றரசாளேன் என்ன தேர்த் தனிலிருந்து மாயை செய்து மால்கொல்லச் செப்பும் வார்த்தை நூலாக்கிக் கொண்டாய்...

(அருணந்தி சிவாச்சாரியார்)

வைணவர்களில் தமிழராகப் பிறந்தவர்களும், இச்சூதுவாதினைப் புரிந்து கொள்ளாமல் தம் மொழியை விட வடமொழி மேலானது எனவும், வட மொழியாளர் தெய்வப்பிறப்பினர் எனவும் நம்பி அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். நம்மையும் நமது நூலையும் இகழ்ந்து பேசியும் எழுதியும் வருபவர்களைப் புகழ்ந்து பேசியும் எழுதியும் வரு கிறார்கள்.

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று கூறிய பாரதியார் பாவடியை நோக்குக.

திருவள்ளுவரும், புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை (குறள் - 966)

என்று கூறினார். மானம் இல்லாதவரே தம்மை இகழ்வார் பின் சென்று அடிமை களாயிருப்பர். அதனால் புகழும் உண் டாகாது எனக்கூறினார். புரட்சிக்கவிஞரும்,

அறையுமிவை பெருந்தமிழர் ஆழ்ந்த நெடும் தூக்கத்தின் பயனே அன்றோ?

எனக்கூறி வருந்தினார்.

இனியாவது யாருக்கும் அடிமை யாகாமல் விழிப்பு நிலையோடு வாழ முயல்வோமாக.

பெரியாரும் திருக்குறளும்

திருக்குறள் நெடுங்காலமாக புலவர் கள் மத்தியிலேயே வழங்கி வந்தது. பாமரர்கள் மத்தியிலேயே வழங்கி வந்தது. பாமரர்கள் மத்தியிலும் அந்நூல் சென்று சேரவேண்டும் என்னும் எண்ணம் முதன்முதலில் பெரியார் அவர்களுக்கே உதித்தது. அதற்காகப் பல மாநாடுகள் கூட்டித் திருக்குறளை எங்கும் பரவச் செய்தார்.

குறளுக்குப் பண்டையோர் தவறான பொருள் செய்திருப்பரேல் அவற்றையெல்லாம் மாற்றி உண்மைப் பொருளைக்கூறி தமிழர்கள் மனத்தில் பதியவைத்தார். இன்றைய தினம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறு குழந்தைகளிடம் கேட்டாலும்  இரண்டு திருக்குறளாவது சொல்லும், இவ்வாறு திருக்குறள் நூல் பட்டிதொட்டியெங்கும் பரவி வருவது தமிழ்ப் பகைவர்களுக்குப் பிடிக்குமா? அதனால் அந்நூலுக்கு மறைமுகமாக பல மாசுகளை உண்டாக்கி வந்தனர்.

ஆகவே திருக்குறள் எங்கும் பரவுவதற்கு முதற்காரணமாய் இருந்த பெரியார் அவர்களை நாம் என்றும் மறவாது நினைவு கூர்வோமாக!

-விடுதலை,31.5.14

வெள்ளி, 30 டிசம்பர், 2016

விசித்திரமான நம்பிக்கை

மனித இன தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நிபுணரான மலனோ விஸ்கி பசிபிக் தீவுகளின் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த டிராபிரியண்டர்களைப் பற்றி ரமான செய்திகளை வெளியிடுகிறார்.

மணமான பிறகு கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சுமார் மூன்று ஆண்டுக்காலம் படகில் பயணம் செய்து கொண்டேயிருப்பான். கணவன் வீடு திரும்பும் காலத்தில் ஒன்றோ அல்லது பல குழந்தைகளோ மனைவிக்கு ஏற்பட்டிருப்பதைக் காண்பான். ஆனால் இதுகுறித்து கணவன் மனைவி யிடையே எந்த சச்சரவும் உண்டாகாது. குற்றம் சாட்டவும் மாட்டார்கள்.

காரணம் குழந்தை பிறப்பதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமில்லையென்றே அவர்கள் நினைத்தார்கள். பழங்குடி மக்களுக்கு தெரிந்தது எல்லாம் ஏதோ ஒரு இறந்த குழந்தையின் ஆவிதான் அவர்களுடைய மனைவி மார்களின் வயிற்றினுள் புகுந்து கொள்வதால் கர்ப்பம் ஏற்படுகிறது என்பதுதான். இத்தகைய விசித்திரமான நம்பிக்கை காரணமாகவே - கர்ப்பம் ஏற்பட அவர்களிடையே பலதரப்பட்ட மந்திர உச்சாடனங்களும், சடங்குகளும் தோற்றுவிக்கப்பட்டி ருந்தன.

ஒரு பழங்குடி மக்கள் பெரும் அளவு வாழைப் பழங்களைச் சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஆணின் உறுப்பு போல வாழைப்பழம் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். வேறு பழங்குடி மக்களோ நல்ல முத்து அல்லது நவரத்தினங்களில் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அசந்தி பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு நதிக்குச் சென்று, அதில் வசிக்கும் புனிதமாகக் கருதப்படும் பாம்பு ஒன்றை பிடித்து அதைக் கொன்று நீரை எடுத்து உடலில் தெளித்துக் கொண்டால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். இந்தியாவிலும், நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏராளமான நாகர் சிலைகளை அரச மரங்களினடியில் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் சனஸ்டா இன பண்டை மக்களிடையே மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இறந்தவர்களின் ஆவி வசிப்பதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் ஒரு பெண் அடிக்கடி சென்று வருவதால் கர்ப்பம் தரிக்கலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

மொரோக்கோ நாட்டில் மணமக்களை முதல் இரவுக்காகப் படுக்கைக்குச் செல்லும் போது உறவினர்கள் அவர்கள் முன்னால் முட்டைகளை உடைப்பார்கள். இப்படிச் செய்தால் கன்னிமைத்திரை எளிதில் கிழியும் என்று கருதுகிறார்கள்.

-விடுதலை,6.6.14

வெள்ளி, 23 டிசம்பர், 2016

கோயிலுக்கு செல்ல முயன்ற தாழ்த்தப்பட்ட முதியவரை உயிரோடு எரித்துக் கொன்ற கொடுமை

கான்பூர், அக்.2_ உத் தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரிலிருந்து சுமார் 140கி.மீ. தொலைவில் ஹமீர்பூர் மற்றும் ஜலான் மாவட்டத்தில் பிலாகான் உள்ளது. அங்குள்ள மைதானி பாபா கோயிலில் வழி படுவதற்காக சென்ற தாழ்த் தப்பட்ட 90 வயதான முதியவர் ஜாதி வெறியர் களால் தடுத்துநிறுத்தப் பட்டார். மேலும், அவர் கோடரியால் தாக்கப்பட் டும், தீ வைத்து எரிக்கப் பட்டும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான சிம்மா (90) தன் மனைவி மற்றும் மகன் துர்ஜான் ஆகியோருடன் செல்ல முயன்றார். அப்போது சஞ்சய் திவாரி என்பவன் அவ ரைத் தடுத்து நிறுத்தி னான்.ஆனால், அவர் அதைப் பொருட்படுத்த வில்லை. சஞ்சய் திவாரி கோடரியால் அவரைத் தாக்கினான். அப்போது அவரை விட்டுவிடுமாறு அவர் மனைவி கதறினார். ஆனாலும், திவாரி விடா மல் தொடர்ந்து தாக்கி, சிம் மாமீது மண்ணெண் ணெயை ஊற்றி தீவைத்து எரித்துவிட்டான். அவர் அதே இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார்.

பிலாகான் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராள மானவர்கள் முன்னிலை யில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. அவரைத்தாக்கி எரித்த திவாரியை அங்கே கூடி யிருந்தவர்கள் சுற்றி வளைத்துப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவன்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவனைக் கைது செய் தனர்.

அப்பகுதியில் இருந் தவர்கள் அவன் அப்போது அதிகமாகக் குடித்திருந் தான் என்றனர்.

அப்பகுதியைச் சேர்ந் தவரான அமெரிக்க, இந்திய வர்த்தக குழுவின் தலைவர் முகேஷ் அகி கூறுகையில்: திவாரி மற்றும் அவனுக்கு உதவியதான இருவர் பெயரும் வழக்கில் பதி வாகி உள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்றார்.
-விடுதலை,3.10.15
.

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இஸ்லாமியர்களுக்கு...


24.8.1930 - குடிஅரசிலிருந்து..
இஸ்லாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப்படலாம், பொறாமைப்படலாம். அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத்திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலான வர்களாகவும் இருக் கிறார்கள்.
இதற்கு காரணம் அவர்கள் மதக் கொள்கையேயாகும். அதாவது சமத்து வமும், சகோதரத்துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்தசுத்தமாய் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள்.
ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினே கிதர்களையும், இதரர்களையும், குழந்தை களையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவை சாத்துவான்.
இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கிறது. ஆகவே மதக் கொள் கைகளின் உயர்வு, தாழ்வுகளை பலனில் இருந்து பார்த்தறி கின்றதா? அல்லது நாமே எழுதி வைத்துக்  கொண்டதிலிருந்து அறிகின்றதா?
இஸ்லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டி இருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றன.
இந்துக் கோயில்களில் தப்புக் கொட் டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக்கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல என்றும் சகவாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறுதல்கள் என்றும் சொல்லலாம். அது போதிய சமாதான மாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக் காரர்களும் இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோட்சம் தேடிக் கொள்ள நாம் யாத்தி ரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும் என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள் ளுகிறேன்.
ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீ மாவது பட்டினியாகவும் தொழில் இல்லா மலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அதுதான் யோக்கியமான பணக்காரனின் லட்சியமாகும். இந்த குணங்கள் இல்லாத பணக்காரன் கொள் ளைக்காரனுக்குச் சமானமானவனே யா வான்.
தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் தங்கள் மதம் உயர்ந்த மதம் என்று சொல்லிக் கொண்டி ருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப் படுகின்ற இழிவுபடுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க்கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைபடுத்த முயற்சி செய்யவேண்டும். தாங்கள் அனுபவிக்கும் சமத்துவ இன்பத் தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப்படுகின்ற மக்கள் யாவரும்  அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கி யமான மனிதனுக்கும் தலையாய தாகும். அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களே யாவார்கள்.
-விடுதலை,9.12.16

கடவுள் ஒருவர் இருந்தால்!

28.9.1930 - குடிஅரசிலிருந்து...
கடவுள் உண்டா? இல்லையா? என்று கேட்பதும்,
கடவுளை ஒப்புக் கொள்ளுகிறாயா இல்லையா என்று கேட்பதும், கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒரு வருக்குகொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்?
ஒருவர் பணக்காரனாகவும் ஒருவர் ஏழையாகவும் ஏன் இருக்க வேண்டும்?
ஒருவர் கூன், குருடு, நொண்டி, குஷ்ட ரோகி முதலியவனாயும், ஒருவன் நல்ல திட சரீரியாகவும் ஏன் இருக்க வேண்டும்?
ஒருவனுக்கு ஏன் பத்துப் பிள்ளை? ஒருவனுக்கு ஏன் நாலு பிள்ளை? ஒருவனுக்கு ஏன் பிள்ளை இல்லை? என்றும்
இருவர் ஒரே காலத்தில் தனித்தனியாக வியாபாரம் ஆரம்பித்தால் ஒருவர் நஷ்டமும், ஒருவர் லாபமும் ஏன் அடையவேண்டும்? என்பது போன்ற கேள்விகள் கேட்டு அதன் மூலம் மேல்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.
இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலால் வாயை அடைக்க வேண்டுமானால் இம்மாதிரியாக தோற்றங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் காணப் படுவதாலேயே (மேல் கண்ட குணமுடைய) கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லி விடலாம்.
எப்படியெனில் சர்வசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்று போலவே சிருஷ்டித்திருக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப் படுவதாலேயே சர்வசக்தியும் சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பதுதான் பதிலாகும்.
ஏனெனில், நொண்டிக்கும், முடவனுக்கும், நல்ல வனுக்கும், கஷ்டப்படு பவனுக்கும், கஷ்டப்படுத்துகிற வனுக்கும் கடவுளே காரணதனாயிருந்தால் கடவுளை சர்வ தயாபரத்துவமுடையவனென்றும் பாரபட்சமில்லாத சர்வசமத்துவ குணமுடைய வனென்றும் எப்படிச் சொல்ல முடியும்? இந்தப்படி பகுத்தறிவைக் கொண்டு சொல்லக் கூடிய சமாதானங்கள் ஒரு புறமிருக்க ஆராய்ச்சியைக் கொண்டு அறியக் கூடிய சமாதானங்களைப் பற்றி சற்று கவனிப்போம். ஒரே கையால் கை நிறைய அரிசியை அள்ளி அள்ளி வேறாய் வைத்து ஒவ்வொரு தடவை அள்ளி அரிசியைத் தனித் தனியாய் எண்ணிப் பார்த்தால் அவற்றுள் ஒன்றுக்கொன்று எண்ணிக்கை வித்தியாசமிருப் பானேன்? அதே மனிதன் அதே கையால் அதே நிமிஷத்தில் அதே குவிய லிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படுகின்றது? ஒரே பூமியில், ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதைகள் சில முளைத்தும், சில முளைக்காமலும் முளைத்தனவைகளில் சில வளராமல் கூளையாகவும், சில அதிக உயரமாகவும், சில அதிகமான மணிகள் கொண்ட கதிராகவும் சில குறைவான மணிகள் (தானியங்கள்) கொண்ட கதிராகவும் சில முளைத்து நன்றாய் தளைத்தும் ஒரு மணி கூட இல்லாத வெறும் கதிராகவும் இருக்கக் காரணம் என்ன? ஒருவினாடியில் ஒருபூமியில் நட்ட செடிகள் ஒன்று பல கிளைகளுடனும், ஒன்று சுவல்ப்ப கிளைகளும் வளரு வதும் ஒன்று பதினாயி ரக்கணக்காக காய்ப்பதும், ஒன்று நூற்றுக்கணக்காக காய்ப்பதும், ஒன்று பூ விட்டு எல்லாம் கருகி உதிர்ந்து விடுவதும் ஒன்று பூ விடாமலும் பிஞ்சு விடாமலும் வறடாயிருப்பதும் என்ன காரணம்? கடவுள் ஒருவர் இருந்தால் இவைகள் எல்லாம் அதனதன் இனத்தில் ஏன் ஒன்றுபோல் இருக்கக் கூடாது?
ஒரு சமயம் கடவுளே இந்தப்படி செய்திருப்பார் என்று சொல்வதானால் அம்மரம் செடி தானியம் முதலியன வைகள் இப்படி பலன் அடைவதற்குக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ அதுதான் மனிதர்களைப் பற்றிய சம்பந்தமான கேள்விகளுக்கும் சமாதானம் என்பது தானாகவே புலப்படும்.

-விடுதலை,9.12.16

வெள்ளி, 2 டிசம்பர், 2016

வீண் செலவால் தரித்திரம்

17-8-1930, குடிஅரசிலிருந்து....

பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப்படு கிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான்.

10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடுகிறான். இவையன்றியும் சில்லரைச் சடங்குகளும், சில்லரைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல்வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திரவான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல்லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள்.

உற்சவங்கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரணமாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக்கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும்  ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த்தால் எந்த காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது.

திருச்சிராபள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆற்காடு ஜில்லா அருணாசலம், செங்கற்பட்டு வரதராஜ உடையவர்; சென்னப் பட்டினம் கபாலீசர், சித்தூர் வெங்கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு திருப்பதி கோயிலில் 20 வட்ச ரூபாய் காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூ வட்டி அடையலாம்.

இந்த ஜனங்கள் காணிக்கைகள் உண்டியலில் கொடுத்தல் போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு  செய்து விடுகிறார்கள். திருப் பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லாவிற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?

தலைக்கு  நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய அய்ரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண் டரை அணா செலவு செய்யக் கற்ற பிறகுதான். இத்த னைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம்.

நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நெட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட்களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்தத் தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய்யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், கடவுள் தந்தார் என்கிறான். ஏழையானவன் கடவுள் நமக்குக் கொடுக்க வில்லை என்று நினைக்கிறான். ஏழை மக்கள் கடவுள் கொடுக்கவில்லை என்கின்றார்களே யொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்பதில்லை. எதற்கும் கடவுள் செய்வான் என்ற கொள்கையே இருக்கிறது.

செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோக மாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர்களால் சாமிக்கும், கோயில்களுக்கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல் தாசி மேளம் ஏற்படுத்தல் மரக்கட்டைகளின் மேல் பொம்மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5,000,10,000 பேர் இழுப்பதில் பணத்தைப் பாழ் செய்கிறார்கள். இது மோட்சமாம்! இப்படியெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டு கும்பிடுவது மில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால் மருத்துவ ஆபத்திரி கல்வி அபிவிருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான்.

குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத்திரிக்காகவும் கொடுப்பான். இத்துட னில்லாமல் அவன் தன் நாட்டையும் படிக்க வைத்தப் பின் நம் நாட்டிலுள்ள ஏழைகளும், அனாதை களும் உயர்த்தப்படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறான். தொழிற்சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளை களையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பு கிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலையில் நம் செல்வத்தைப் பாழாக்குகிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.
-விடுதலை,2.12.16

ஆலயங் கட்டியவர்கள் கதி


17-8-1930, குடிஅரசிலிருந்து....

தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக்காரன் தான் சொத்துக்கு கொடுக்கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தைகள் பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள்.  அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட்டாதே என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது.

அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்?  இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண்யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப் பட்டது முதல் மனிதன் அயோக்கியனானான்.

இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக்காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும்.

இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லாமற் போய் விட்டது. தான் மோட்ச மார்க்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.

-விடுதலை,2.12.16