பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பகுத்தறிவு வினாக்கள்


#உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

#நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

#குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

#எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

#எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

#ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

#அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

#அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

#முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

#ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

#மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

#நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

#எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

#அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

#அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

#பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

#சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

# தட்டுங்கள்! திறக்கப்படும்!!! என்றால் எதற்காக சாத்தி வைத்தீர்கள்..??? தட்டினால் தான் திறக்கும் என்று சொல்லும் கடவுள் நல்லவனா, கெட்டவனா...???

#தேடுங்கள்! தரப்படும்!!! என்றால் கண் இல்லாதவன் எப்படி தேடுவான்...??? முதலில் யார் அதை ஒளித்து வைத்தது...??? ஒளித்துவைத்தவன் பதுக்கல்காரன் தானே...???

#கேளுங்கள்! கிடைக்கும்!!! என்றால் ஊமை எப்படி கேட்பான்...??? கேட்டால் தான் கிடைக்கும் என்று சொல்லும் கடவுளை நான் ஏன் வணங்கவேண்டும்...???

#வாதை உன் கூடாரத்தை அணுகாது!!! என்றால் நான் என் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அணுகிவிடுமா...??? என் கூடாரத்தை மட்டும் அணுகாமல் இருப்பதற்கு பதிலாக மொத்த உலகத்தையும் அணுகாமல் இருந்தால் நல்லது தானே...??? அப்படி என்றால் இதை சொல்லும் கடவுளுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லையோ...???

#ஆண்டவர் உன்னைப் பிடித்துள்ள பிசாசுகளை விரட்டுவார்!!! என்றால் பிசாசு என்னைப் பிடிக்கின்ற போது ஏன் தடுக்கவில்லை...??? பிசாசுகளை உருவாக்கிவிட்டு அதை என்னை போன்றவர்களைப் பிடிக்கவும் செய்துவிட்டு ஏன் விரட்டவேண்டும்...??? அதற்குப் பதிலாக பிசாசுகளைப் படைக்காமலேயே இருந்திருக்கலாமே...???

#நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49). இது இயேசு அவர்கள் சொன்னதாக விவிலிய நூல் குறிக்கிறது. தன்னால் சுயமாய்ப் பேசத் தெரியாதவனை ஏன் நான் பின்பற்றவேண்டும்...??? தன்னால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத ஒருவனை இறைத்தூதனாக அவனது பிதா அனுப்பினார் என்றால் அந்த பிதா எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பான்...???
# சாமிக்கு அலகு குத்தி நிவர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏன் எந்த எலும்பும் இல்லாத கன்னத்தின் பகுதியில் குத்துகின்றனர்...??? கொஞ்சம் பின்னே தள்ளி காதுக்கு கீழே குத்திக்கொள்ளலாமே...??? அப்படி குத்தினால் உயிர் போய்விடும் என்று தெரிந்துதானே செய்வதில்லை...??? கன்னத்தில் அலகு குத்துவதுபோல் கழுத்திலும் குத்திக்கொள்ள துணிச்சலுண்டா...???

# இந்த அலகு குத்திக்கொள்வதைப் பரப்பியதே ஆரியப் பார்ப்பன நாய்கள் தான்... இதுவரை கடவுளை வைத்து பிழைப்பு நடத்தும் எந்த பார்ப்பனாவது அலகு குத்திக்கொண்டு ஆடியதுண்டா...???

# தீ மிதிக்கும் திருவிழாவில் எரிந்த நெருப்புத்துண்டுகளில் நடந்து போகும் பக்தர்கள் நெருப்பில் காய்ச்சிய கம்பிகளை வைத்தால் மிதித்து நடப்பார்களா...??? நெருப்பை மூட்டியதும் எரிகின்ற நெருப்பில் நடந்து செல்வார்களா...??? முடியாது! ஏன்..? இதை அறிவியல் தெளிவாக விளக்குகின்றது. விறகடுப்பில் இருந்து விழும் நெருப்புத்துண்டுகளை கையாலேயே எடுத்து உள்ளே போட முடியும். ஆனால், அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தின் மூடியைத் தொடக்கூட முடியாது. துணியை வைத்து தான் எடுக்க முடியும். நெருப்புத்துண்டை சுற்றி உருவாகிக்கொண்டிருக்கும் நீறு வெப்பத்தைக் கடத்தாது. அதனால் அதை துரிதமாக எடுத்து உள்ளே போட்டுவிட முடிகிறது. நெருப்பால் உருவாகும் வெப்பத்தை பாத்திரம் எளிதாக கடத்துகிறது. அதனால் அதை தொட்டால் சுட்டுவிடுகிறது.

# தீயில் தன் உடலை வருத்துவதுதான் நிவர்த்திக்கடன் என்றால் மிகச்சிறப்பாக தீக்குளிக்கலாமே...??? இல்லையென்றால், குறைந்தபட்சம் நெருப்பில் சுட்ட கம்பிகளை தரையில் கிடத்தி அவைகளின்மீது நடந்து நிவர்த்திக்கடனைச் செலுத்தலாமே...??? இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் இல்லையா...??? காட்டுமிராண்டித்தனம் இல்லையா...??? எந்த பார்ப்பனனாவது தீ மிதித்து நிவர்த்திக்கடன் செலுத்திக் கண்டதுண்டா...??? குறைந்தபட்சம் மொட்டையாவது அடித்ததுண்டா...???

# உலகத்தைக் கடவுள் தான் படைச்சார் என்று சொல்லுவார்கள்! அப்படியென்றால் அந்த கடவுளை யார் படைத்தார் என்று கேட்டால் கடவுளை யாரும் படைக்க முடியாது. கடவுள் தானக தோன்றியவர் என்று சொல்வார்கள். கடவுள் தானக தோன்றுவார் என்றால் உலகமும் தானாக தோன்றாதா...???

# பிள்ளையாருக்கு இந்த நாடு முழுதும் பால் ஊற்றி வழிபடுகிறீர்களே! எந்த ஒரு இடத்திலயாவது ஒரு பசித்த பச்சிளங்குழந்தைக்கு ஒரு பிள்ளையாராவது((அது தான் நிறைய பிள்ளையார்கள் உண்டே! அந்த பிள்ளையார் இந்த பிள்ளையார் என்று))பால் கொடுத்ததுண்டா...???

# ஒரு இந்து, இயேசு கிறித்துவையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு கிறித்தவர், இந்துக்கடவுள்களையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு முகமதியர், இந்துக்கடவுள்களையும் இயேசு கிறித்துவையும் நம்புவதில்லை! ஒரு நாத்திகர் இவற்றில் எவற்றையும் நம்புவதில்லை!!!

# கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்றால் உலகின் ஒருபகுதி நல்ல வளமாகவும் மறு ஒருபகுதி பாலைவனமாகவும் இருப்பது ஏன்...??? எல்லாம் சேர்ந்ததுதான் உலகம் என்று சொல்வார்களானால், பாலைவனத்தில் ஏன் உயிர்களைப் படைத்து வாட்டியெடுக்க வேண்டும்...???

# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள்தான் படைத்தார், படைக்கின்றார், படைப்பார் என்றால் குருடன், செவிடன், முடவன், அரவாணி, பிச்சைக்காரன், விலைமாதுக்கள் என்று ஏன் படைக்கவேண்டும்...???

# கடவுளை வணங்கினால் பாவங்களை மன்னிப்பார் என்றால் நான் பாவம் செய்யும்போது தடுக்காமல் செய்யவிட்டுவிட்டு ஏன் மன்னிப்பு கேட்க வைத்து மன்னிக்க வேண்டும்...???

# மதுக்கடைக்கு உந்துருளியில் செல்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு தடுக்காமல் அவர்கள் மது அருந்திவிட்டு வரும்போது அவர்களிடம் தண்டம் கேட்கும் காவல்துறையைவிடவும் கேடுகெட்டவரா கடவுள்...???

# மனிதனைப் படைத்த கடவுள் பாவம் செய்யும் மனநிலையை அவன் சிந்தனையில் ஏன் செலுத்தவேண்டும்...???

# செய்த பாவத்திற்கு உண்டான தண்டனை என்றால் பிறக்கும்போதே ஒரு குழந்தை என்ன பாவம் செய்தது...??? அதை ஏன் கண்பார்வை இல்லாமலோ, கேட்கும் திறம் இல்லாமலோ, கை கால்கள் இல்லாமலோ படைக்க வேண்டும்...???

# கடவுளின்றி இந்த உலகில் அணுவளவும் அசையாது என்றால் செய்த பாவத்திற்கு முதல் கரணியம் கடவுள் தானே...???

# முதல் குற்றவாளிக்கு என்ன தண்டனை...??? யார் கொடுப்பது...???

# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள் தான் படைத்தார் என்றால் எந்த ஆடும் மாடும் புலியும் சிங்கமும் கரடியும் தக்காளியும் மிளகாயும் ஏன் கடவுளை வணங்குவதேயில்லை...??? மனிதன் மட்டும் ஏன் விழுந்து விழுந்து வணங்குகிறான்...??? ஏன் என்றால் ஒரு சாரார் எந்த வேலையும் செய்யாமல் கடவுள் பெயரால் ஏமாற்றி வாழவே இந்த புளுகு மூட்டைகளை எல்லாம் உங்கள் சிந்தையில் செலுத்திவிட்டனர்...!!!

# கடவுளை மறுப்பது என்பது பகுத்தறிவே கிடையாது! அது முட்டாள்தனத்தை, மூடத்தனத்தை மறுக்கும் முயற்சி மட்டுமே!
-கட்செவி, தாம்பரம் மாவட்டம்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?-7

இந்து மதத்தை ஆரிய மதம் என்றும் சனாதன மதம் என்றும் கூறலாம் என்றார் காலம் சென்ற காஞ்சீபுரம் சங்கராச்சாரி விழுப்புரம் சாமிநாதன்! சனாதனம் என்றால் “என்றென்றும் முன்பே இருந்துவருவது’’ என்பது பொருள் என்று குல்லுகபட்டர் பொருள் கூறுகிறார், மனு அதிகாரம்! சுலோகம் 22_23க்குப் பொருள் கூறும்போது! அதாவது முந்தைய கல்பகாலத்திலிருந்தே இருப்பதாம். 71 மகாயுகங்கள் கொண்டது கல்பம். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்நான்கும் 43,12,000 ஆண்டுகளாகும். இவை முடிந்து மகரயுகம் நிறைவடைகிறது. இம்மாதிரி 71 மகாயுகங்கள் கொண்டது கல்பம் என்கிறார்கள். இவர்கள் புளுகுக்கு அளவே கிடையாது. அவ்வளவு காலத்து மதமாம் இந்துமதம். அம்மதத்தின் வேதங்களும் பிரமாவினால் மனதில் வைக்கப்பட்டு அக்னி, வாயு, சூரியன் ஆகியோரின் மூலம் வெளிக் கொணரப்பட்டதாம். ஆனால், ரிக் வேதத்தின் புருஷ சூக்தப்படியான கதை வேறு; புருஷ என்ற (கற்பனை) பிராணியைக் கொன்று யாகம் செய்தபோது யாககுண்டத்தில் இருந்து தோன்றியவை ரிக், சாம, யஜூர் வேதங்கள் என்கிறார்கள். ஒரே செய்தியைப் பலவிதமாகப் புளுகும் மதமே இந்து மதம்.

வேதங்களின் தோற்றம் பற்றி பதினொரு வகையான விளக்கங்களும் உள்ளன. இதுவே புதிர். ஏன் இவற்றைப் படைத்துப் பார்ப்பனர்கள் ஒன்றுக்கொன்று இணக்கமற்ற, குழப்பமான விளக்கங்களைத் தந்தார்கள்? வேதங்களை அபவுருஷேயம் என்கிறார்கள். புருஷர்களால் படைக்கப்பட்டவையல்ல என்பதாம். என்றாலும் வேதங்கள் பொய்யாதவை என்கிறார்கள். ஆபஸ்தம்பர் எனும் ரிஷி வேதங்களுக்கு எந்த அதிகாரமும் தரவில்லை. ஒரு சபையில் உறுப்பினராவதற்குரிய தகுதிகளில் ஒன்றாக வேதம் படித்திருப்பதைக் கூறுகிறார். பிறகு எதற்காக வேதங்கள்? வேதங்களுக்கு ஏன் மரியாதை? வேதங்களை மீற முடியாதவை என்று எப்படிக் கூறுகிறார்கள்?

“வருங்கால உலகத்தில் இன்பம் அனுபவித்தல் என்பதே இருக்காது என்றால் ஏன் யாகங்களைச் செய்ய வேண்டும்?’’ என்று சார்வாகர்கள் கேட்டதில் என்ன தவறு? என்று கேட்டார் அம்பேத்கர். “அக்னிகோத்ரம் மூன்று வேதங்கள், சன்யாசம், திரிதண்டம் சாம்பலைப் பூசிக்கொள்வது எல்லாமே ஆண்மையும் அறிவும் இல்லாதவர்களின் வயிறு வளர்க்கும் வழிகளே’’ என்றவர் சார்வாகர்களின் அறிவாசான் பிருகஸ்பதி.
ரிக் வேதத்தில் என்ன இருக்கிறது? அறநெறி பற்றி ஏதாவது உள்ளதா? எமனும் அவனது தங்கை எமியும் பேசிக்கொள்வதாக வேதம் கூறுகிறது.

“வா! என்னுடன் உறவு கொள்ள வா. சிறந்தவரான நம் தந்தையின் சந்ததியைத் தோற்றுவிக்க வா’’ என்கிறாளாம். அண்ணன் மறுக்கிறானாம். தங்கையோ மீண்டும், என் உடலை அனுபவிக்க வா என்று அண்ணனை அழைக்கிறாள். அண்ணன் மறுக்கிறான். “உன்னுடன் ஒரே படுக்கையில் படுக்க ஆசையாக உள்ளது. வண்டிச் சக்கரங்களைப் போல இருவரும் முனைந்து செயல்படுவோம், வா’’ எனக் கூப்பிடுகிறாள். உன் உடலை என் உடலுடன் பிணைத்துக்கொள் என்று வற்புறுத்துகிறாள். யமன், “நான் என் சகோதரியுடன் இணைய மாட்டேன். வேறு யாருடனும் நீ சேர்ந்து கொள்’’ என்கிறான். இந்த அசிங்கமான உரையாடல் மேலும் ஆபாசமாகத் தொடர்கிறது வேதத்தில்! இதில்தான் இந்துமதப் பெருமை உள்ளதாம்!

வாயு தேவனைத் தங்களுடன் சோமபானம்    அருந்தக் கூப்பிடும் பாடல்கள் ஏராளம். இதே குடிகார அழைப்பு அக்னிக் கடவுளுக்கும் விடப்படுகிறது. இந்திரனையும் சோமபானம் குடிக்க அழைக்கிறார்கள். இவையெல்லாம் மாதிரிக்காக. ரிக் வேதம் முழுவதும் இதே பிரதாபங்கள்தான். சூரியனுக்கும் புஷனுக்கும் நடந்த உரையாடலும் (மண்டலம் 10, 85, 37) இந்திராணிக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலும் (மண்டலம் 10, 86, 6) ஆபாசத்தின் உச்சம்.

ரிக் வேதத்தின் நார்த்தனைப் பகுதியில்கூட அறநெறிக் கருத்துகள் கிடையாது. ஆக, வேதங்களில் என்ன உள்ளது பெருமைப்பட்டுக் கொள்வதற்கு?

அதர்வண வேதத்தில் முழுக்கவும் மந்திரங்களும் வசிய சமாச்சாரங்களும்தான். காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவற்றிற்கும் காரணம் மின்னலாம். மின்னலுக்கு ஒரு பிரார்த்தனை. எல்லா நோய்களுக்கும் மந்திர வசியமாம். எலும்பு முறிவுக்கும் மந்திர வசியமாம். ஆண்மை பெருக மந்திர வசியமாம். மனைவியை அடைய, கணவனை கைக்குள் போட்டுக்கொள்ள மந்திரமாம். ஆணின் ஆண்மையை அழித்திட மந்திரமாம். பெண் கருத்தரிக்காமல் தடுத்திட மந்திரமாம். நூற்றுக்கணக்கான வசிய மந்திரங்கள் அடங்கியது அதர்வண வேதம். நோய்களை உடல் உறுப்புகளிலிருந்து வெளியேற்ற மந்திரங்கள் உள்ளன.

வேதங்களில் ஆன்மிக ரீதியிலோ, அறநெறி ரீதியிலோ மனிதனை உயர்த்தும் பண்பு கொண்டவை எதுவும் இல்லை. இருப்பினும் வேதங்கள் உயர்வானவை என்று கூறும் நிலைக்கு இந்துமதத்தவர்கள் ஏன் முயற்சி செய்கிறார்கள்? என்று கேட்ட டாக்டர் அம்பேத்கரா இந்துத்வ அம்பேத்கர்?

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி-8)

வேதங்களை உயர்ந்தவை எனக் காட்டிட பார்ப்பனர்கள் முயன்று தோற்ற பிறகு, வேதங்களைவிடவும் ஸ்மிருதிகளுக்கு உயர் அதிகாரம் உண்டு என்று கதைக்கத் தொடங்கினர். வேதங்களை மிகவும் தாழ்வான நிலைக்குத் தூக்கிப் போடக் காரணி எது? குமாரிலபட்டர் மிகவும் தந்திரமாக வாதிட்டார்: ஸ்ருதிகளில் காணாமல் போனவைதான் ஸ்மிருதிகளில் வைக்கப்பட்டுள்ளன என்றார். ஆகவே ஏற்க வேண்டும் என வாதிட்டுள்ளார்.

ஸ்மிருதிகள் வேதங்களைவிட உயர்வு என்றில்லாவிட்டாலும் அவற்றை வேதங்களுக்குச் சமமாக வைத்திட அத்ரி ஸ்மிருதி கடைபிடிக்கும் வழி _ ஸ்மிருதிகளை மதிக்காதவர்கள் சாபத்துக்கு உள்ளாவார்கள் என்கிறார் அத்ரி. வேதம் மட்டும் கற்று ஸ்மிருதிகளைத் தாழ்வாகக் கருதினால் அவன்  21 தலைமுறைகளுக்கு விலங்குப் பிறவியே எடுப்பான் எனச் சபிக்கிறது. ஸ்மிருதிகளுக்கு அடுத்து புராணங்கள். இந்தப் புராணங்கள் 18ஆம் உபபுராணங்கள் 18ஆக 36ஆம் சுருதியில் சேர்க்கப்படாமல் இருந்தன. காலப்போக்கில் அவை வேதங்களைவிட உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டன. பிறகு ஸ்மிருதிகள் அதனை அடுத்து புராணங்கள், கடைசியாகத் தந்திரங்கள் என்றாக்கி அனைத்திற்கும் கீழே வேதங்கள் வைக்கப்பட்டன. எனவே, வேதங்கள் புனிதம் என்ற நிலைமாற்றப்பட்டுப் புடலங்காய் என்றாக்கப்பட்டது.

இம்மாதிரி வேதங்களை அக்குஅக்காகப் பிரித்தெறிந்து பிய்த்து எறிந்து அவை புனிதமுமல்ல புடலங்காயுமல்ல என்று எண்பித்த டாக்டர் அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

ஒன்றும் இல்லாத பொருளாகிவிட்ட வேதங்களுக்கு அந்தம் (முடிவு) எனப்படும் வேதாந்தமும் வேதங்களின் சாரம் எனப்படும் இருபொருள் தரும் வேதாந்தம் வந்தது. உபநிஷத்களுக்கு வேதாந்தம் என்றும் பெயர். இத்தகைய உபநிஷத்களில் ஒன்றான கடோபநிஷத் கூறுவதைப் பார்க்கலாம்.’’ தந்தை தந்தையல்ல. தாய் தாயல்ல _ உலகங்கள் உலகங்களல்ல. கடவுள்கள் கடவுள்களல்ல. வேதங்கள் வேதங்களல்ல. வேள்விகள் வேள்விகளல்ல. அந்நிலையில் திருடன் திருடனல்ல. கருவை அழிப்பவன் கருவை அழிப்பவனல்ல. பவுலகசன்  பவுலகசனல்ல. பக்தன் பகதனல்ல. புனிதனுக்கு புண்ணியத்துடனோ பாவத்துடனோ அனுகூலமான உறவோ அனுகூலமில்லாத உறவோ கிடையாது. ஏனென்றால் மனத்தின் துயரங்கள் எல்லாம் கடந்து விடுகின்றன’’ என்கிறது. (தொகுப்பு நூல் பாகம் 8, பக்கம் 85)

ஏதாவது விளங்குகிறதா? விளங்கினால் அது சித்தாந்தம். விளங்காவிட்டால் அது வேதாந்தம் என்றார் கவிஞர் கண்ணதாசன். இவர்தான் இந்து மதத்தை அர்த்தமுள்ள மதம் என்றவர். அவரே இப்படி எழுதினார் என்றால்... முகலாயர் ஆண்ட காலத்தில் அல்லா உபநிஷத் என ஒன்றைப் பார்ப்பனர்கள் எழுதினார்கள். என்றால் உபநிஷத்களின் பொய்மையைப் புரிந்து கொள்ளலாம். வேதப் பார்ப்பனர்கள் உபநிஷத்களுக்கு மிகக் குறைந்த மரியாதையை அளித்தார்கள் என்றும் வேதங்களும் உபநிஷத்களும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன என்றும் டாக்டர் அம்பேத்கர் எழுதினார். இவர் எப்படி இந்துத்வர் ஆவார்?

யாகங்கள் செய்வது அவசியமா? ஆம்! என்கின்றன வேதங்கள் _ தேவையற்றது என்கின்றன உபநிஷத்கள். வேதம் படித்தவர்கள் யாகம் செய்யலாம். உபநிஷத்களைப் படித்தோர் யாகம் செய்வதுபற்றி அறியாதவர்கள். இப்படிக் கூறிய பாதராயணர் தம்முடைய வேதாந்த சாஸ்திரத்தில் உபநிஷத்களுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்கிற அம்பேத்கர் எப்படி இந்துத்துவ அம்பேத்கர் ஆவார்? (தொகுப்பு நூல், பாகம் 8, பக்கம் 91, 93). 

(கேள்விகள் தொடரும்...) 
 - சு.அறிவுக்கரசு

-உண்மை இதழ், 1-15.9.17

 


அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?-8இந்து மதத்தில், கடவுள்கள் பல உள்ளன. ஏனைய மதங்களைப் போல ஒரு கடவுள் கிடையாது. “ஏகம் ஸத்; பகுதாவதந்தி’’ என்று சொல்லிக் கொண்டாலும் நிறைய கடவுள்கள். ஓரிடத்தில் 33 கோடி கடவுள்கள் உள்ளன என்றுள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், அஷ்டதிக்குப் பாலகர்கள் என்றெல்லாம் இந்து மதத்தில் வணங்குவதற்கு உரிய தகுதி படைத்தோர் எனக் கூறப்படும் சொல்லடை உண்டு. “இந்து மதத்தின் புதிர்கள்’’ என்ற தலைப்பின் கீழ் எழுதும் டாக்டர் அம்பேத்கர், “ஒரு காலத்தில் பிரம்மாவே, சிவனையும் விஷ்ணுவையும் விட மிக உயர்ந்த கடவுளாக இருந்ததாகத் தோன்றுகிறது. பிரம்மாதான் பிரபஞ்சத்தைப் படைப்பவர் _ முதல் பிரஜாபதி ஆவார். அவர்தான் சிவனை உண்டாக்கினார் (விஷ்ணு புராணத்தில் உள்ளவாறு) அவர் விஷ்ணுவுக்கு எஜமானர். அவர் கட்டளைப்படியே விஷ்ணு உலகத்தைக் காக்கிறார்... ஒரு கட்டத்தில் பிரம்மாவுக்கு சிவனிடமும் விஷ்ணுவிடமும் மோதல் ஏற்பட்டு மிக உயர்ந்த கடவுள் என்ற நிலையை இழந்துவிட்டார்... வராகம், மச்சம் ஆகிய இரண்டு அவதாரங்களை பிரம்மா எடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், விஷ்ணுவை வணங்கியவர்கள், ஏற்க மறுத்து விஷ்ணுவின் அவதாரம் என்றாக்கிவிட்டனர். பின்னர் விஷ்ணு 22 அவதாரங்கள் எடுத்தது என்று எழுதி விட்டனர். (தொகுப்பு நூல்: பாகம் 8, பக்கம் 96, 97) பக்கம் 98இல் சிவனின் அடியையும் முடியையும் தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் அலைந்த கதையில் பிரம்மா பொய் சொன்னதால் பிரம்மா தன் ஸ்தானத்தை இழந்ததுடன் வழிபாட்டு உரிமையையும் இழந்தார் என்ற நிலையைக் குறிப்பிடுகிறார். பக்கம் 99இல் விஷ்ணுவின் அவதாரங்களாகிய ராமனும் பரசுராமனும் மோதிக் கொண்ட கதையைக் குறிப்பிட்டுவிட்டு, விஷ்ணுவே பிரம்மாவைப் படைத்தவராகி விட்டதாக எழுதுகிறார். சிவனையும் சிவலிங்கத்தையும் வழிபடும் சாதாரண சிவபக்தனாகி விட்டதாகவும் எழுதுகிறார். சிவனின் வேலைக்காரனாகி சிவனின் தேர்ப்பாகனாகப் பணியாற்றினார் என்ற செய்தியையும் எழுதியுள்ளார். இறுதியாகத் தன் மகளான சரசுவதியை அடைய ஆசைப்பட்டு மனைவியாக்கிக் கொண்ட கதையைக் குறிப்பிட்டு பிரம்மா கேவலப்பட்டு முற்றிலுமாகப் பழிக்கப்பட்டவரானார் என்று எழுதியுள்ளார். (மேற்படி நூல்: பக்கம் 99_101) திரிமூர்த்தியில் பிரம்மா பெயரளவில் மட்டுமே வெறும் மூர்த்தியாக இருக்கிறார் என்று எள்ளி நகையாடுகிற டாக்டர் அம்பேத்கரா இந்துத்துவர்?

விஷ்ணுவுக்கு ஆயிரம் பெயர்களாம் (சஹஸ்ரநாமம்). அதுபோலவே சிவனுக்கு ஆயிரம் பெயர்களைக் கொடுத்தனராம். சிவன் தலையில் கங்கைநதி உற்பத்தியாகிப் பாய்வதாக ஒரு கதை. இதற்குப் போட்டியாக வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாதங்களில் பட்டு கங்கை சிவனின் தலையில் தேங்கியதாக மற்றொரு கதை. அதைப் போலவே, பால்கடலைத் தேவர்களும், அசரர்களும் சேர்ந்து கடைந்தபோது, பூமிக்குக் கீழ் ஆமை(அவதாரம் எடுத்து)யாகப் படுத்துப் பூமியைக் காத்தார் விஷ்ணு என்று ஒரு கதை. இதன்பின் இணைப்பாக சிவனின் ஆள்கள் எழுதிய கதைதான் கடலில் ஆலகால விஷம் வந்தது, அதை சிவன் உண்டார் என்றும் கூறப்படுவது! மற்றொரு கதை! தவம் இருந்து வரம் கேட்ட அக்ரூரன் என்பான் மூவுலகங்களில் உள்ள எந்தப் பிராணிக்கும் தன் உயிரைக் கொல்லும் சக்தி கூடாது என்றானாம். விஷ்ணு தந்துவிட்டதாம். பயந்துபோன தேவர்கள் ஓடிஒளிந்து பதுங்கி வாழ நேர்ந்ததால் வரம் கொடுத்த விஷ்ணு நொந்து கொதித்துப் போயிருந்த நேரத்தில் சகல வல்லமையுள்ள மகாதேவர் அவனது கண்களில் உற்பத்தியானதாம். இந்தக் கதைக்கு மாற்றாக, பஸ்மாசுரனுக்கு சிவன் வரம் கொடுத்த கதையில் சிவன் தலையில் கை வைத்துச் சோதனை செய்து பார்க்க பஸ்மாசுரன் முயன்ற கதையையும் விஷ்ணு பெண் (மோகினி) அவதாரம் எடுத்து சிவனைக் காப்பாற்றிய கதையையும் குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.

கிருஷ்ணன் எனும் கடவுள்தான் பூரியில் ஜகன்னாத் என்ற பெயரில் கோயில் கட்டிக் கும்பிடப்படுகிறது. சர்வம் ஜகன்னாதம் என்பார்கள். என்றால், எந்த வேற்றுமையும் அற்ற இடமாம். இங்குதான் அண்ணனான கிருஷ்ணன் தன் தங்கை சுபத்ராவுடன் உடல் உறவு கொண்ட ஊர்! இப்பேர்பட்ட பாதகம் செய்த பகவான் கிருஷ்ணன் நான்கு பேர்களில் புராணங்களில் உண்டு. ஒரு கிருஷ்ணன் சத்தியவதியின் மகன். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாமவன் சுபத்ராவின் சகோதரன். அர்ஜுனின் நண்பன்/மைத்துனன். மூன்றாம் கிருஷ்ணன் என்பவன் வசுதேவ_தேவகி தம்பதியின் மகன். மதுராவில் வாழ்ந்தவன். நான்காம் கிருஷ்ணன் யசோதா _ நந்தகோபன் தம்பதியரால் வளர்க்கப்பட்டவன். சிசுபாலனைக் கொலை செய்தவன். இப்படிப்பட்டவன்தான் பகவத் கீதையின்படி மிகப் பெரிய கடவுள். அல்லா ஹூ அக்பர்! எல்லாக் கடவுளையும் விடப் பெரியவர்! என்று கிண்டல் தொனியில் அம்பேத்கர் எழுதுகிறார். அப்பேர்ப்பட்ட கிருஷ்ணன், மகாபாரதத்தின்-படி, சிவனை வழிபட்டு வரங்களைக் கேட்பவராக கீழிறக்கம் செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். இவர் எப்படி இந்துத்வா அம்பேத்கர் ஆவார்?

ஆரியர்களின் வாழ்க்கையில் ஆண்_பெண் உறவுகள் தளர்த்தியானதாகவே இருந்தன. சகோதரன் சகோதரியுடனும், தாய் மகனுடனும், தகப்பன் மகளுடனும் தாத்தா பேத்தியுடனும் உடலுறவு கொண்ட முறை வழக்கமாக இருந்துள்ளது. பழங்கால ஆரியர்கள் குடிகாரர்களாகவும் இருந்தார்கள். பெண்களும் குடித்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் இரவில் நான்கு/எட்டு பெண்களுக்கு மதுவை ஊற்றிக் குடிக்கச் செய்து நடனமாடிக் களிக்க வேண்டும் என்று கவுஷிதாகி கிருஹ்ய சூத்திரம் 1.11.1942 கூறுகிறதை ஆதாரங்காட்டுகிறார். இராமாயணம் உத்தர காண்டம் ராமனும் சீதையும் மது அருந்துவதைக் கூறுவதைக் குறிப்பிட்டும் கிருஷ்ணனும் அர்ஜூனனும் மது குடிப்பதை பாரதக் கதை உத்யோக பர்வம் கூறுவதையும் ஆதாரங் காட்டுகிறார்.

ரிஷி, ராஜா, குரு ஆகியோர் வரும்போது மதுபர்க்கம் படைத்து விருந்தளிக்க வேண்டுமாம். இந்த மதுபர்க்கத்தில் மாமிசம் இல்லாமல் இருக்கக் கூடாது என்றே கூறுகிறது. மானவ கிருஹ்ய சூத்திரம் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். ரிக் வேதசூத்ரம் க்ஷிமிமிமி 101-5இன்படி மதுபர்க்கத்தில் இறைச்சி இருந்தே ஆக வேண்டுமாம்!

கள் உண்ணாமை என்று 10 பாடல்களை எழுதி வைத்து இருப்பவர்கள் திராவிடர்கள். சூதாடுவதைப் பற்றியும் 10 பாடல்கள். ஒழுக்கம், பிறன்மனை நோக்காமை போன்றவை பற்றியும் கண்டிப்பான பாடல்கள். புலால் உண்ணாதவர்-களை எல்லா உயிர்களும் தொழும் என்று பத்துப் பாடல்கள். எனவே, ஆரிய நாகரிகத்திற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் திராவிடர்கள் (நாகர்கள்) என்பதை எண்பித்தவர் அம்பேத்கர். அவர் எப்படி இந்துத்வர்?

ஹிம்சை முறையில் பலி கேட்கும் கடவுள் காளி. சிவனின் மனைவி. சிவனுக்கு இம்முறையிலான பலி கிடையாது. கணவன் அஹிம்சா முறையில் வழிபடப்படுகிறான். மனைவி ஹிம்சை முறையில் வழிபடப் படுகிறாள். இதுவும் ஹிந்து மதத்தின் புதிர். இப்படிப்பட்ட வழிபாட்டு முறையைப் பார்ப்பனர்கள் ஏன் ஏற்படுத்தினார்கள் என்ற கேள்வியை எழுப்பிய அம்பேத்கர் எப்படி இந்துத்வர்?

இந்திரன், வருணன், அக்னி போன்றவை வேதகாலக் கடவுள்கள். அவை மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டு வேறு மூன்று கடவுள்கள் புகுத்தப்பட்டன. அவற்றிலும் ஒன்று பிரம்மா கழித்துக் கட்டப்பட்டு விஷ்ணுவும் சிவனும் மட்டுமே முகாமை! என்றாலும் திரிமூர்த்தி (ஜிக்ஷீவீஸீவீtஹ்) எனக் கூறிக் கொள்கிறார்கள். இப்படி சிவனும் விஷ்ணுவும் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டு வணங்கப்படுவதற்கும் காரணியர்கள் பார்ப்பனர்களே! இவர்கள் ஏன் தங்கள் பக்தியை, விசுவாசத்தை மாற்றிக் கொண்டார்கள்? ஆன்மீக ரீதியான மாற்றமா? வர்த்தக ரீதியானதா? என்று கேட்டவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

ஆராய்ச்சியின்படி சிவன் வேதத்தில் இல்லை ஆரியரல்லாதாரின கடவுளே! எப்படி சிவனைப் பார்ப்பனர்கள் ஏற்றார்கள்? என்று கேட்டவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

ஆண்குறி வழிபாட்டில் ஏகபோகமாக இருந்த விஷ்ணு அகற்றப்பட்டது ஏன்? லிங்க வழிபாட்டில் சிவன் புகுத்தப்பட்டது எப்படி? இதுவும் பார்ப்பனர் விளையாட்டுகளில் ஒன்றுதானே! என்ற அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

இந்து மதத்தின் பொய்ம்மைகள், குழப்பங்கள், பழிவாங்கல்கள் போன்ற அனைத்துக்கும் பார்ப்பனர்களையே குற்றம் சாற்றுகிறார் டாக்டர் அம்பேத்கர். இதனால் தோலுரிக்கப்-பட்டுப் பங்கப்பட்ட பார்ப்பனர்கள் _ குறிப்பாக மராத்தி சித்பவன் பார்ப்பனர்கள் _ அம்பேத்கரைக் கொன்றுவிடத் திட்டம் போட்டார்கள் 1948இல் இந்திய சட்ட அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த “இந்து கோட் பில்’’ தொடர்பாக ஏற்பட்ட மத, ஜாதிவெறியின் காரணமாக 11.12.1949இல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். அம்பேத்கர் உருவ பொம்மையை ஆர்எஸ்எஸ் ஆண்கள் கொளுத்தினர். புதுடில்லியில் பல பகுதிகளில் டாக்டர் அம்பேத்கரை எதிர்த்து 79 கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தினார்கள்.

இப்போது அம்பேத்கர் இந்துத்வவாதிகளுக்கு  இனிக்கிறார்? எப்படி? எவ்வளவோ இருக்கின்றன!

(கேள்விகள் தொடரும்...)

- சு.அறிவுக்கரசு
-உண்மை இதழ், 16-30.9. 17