பக்கங்கள்

வியாழன், 27 ஏப்ரல், 2023

பனகல் அரசர் பி.ராமராய நிங்கார்- லண்டன் தொட்டி ஆஸ்பத்திரி

பனகல் அரசர் பி.ராமராய நிங்கார் தோற்றம் : 9.7.1866 மறைவு: 16.12.1928

2

பனகல் அரசரின் உண்மையான பெயர் பி.ராமராய நிங்கார். இவரின் பூர்வீகம் ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள “பனகல்லு” என்னும் ஊராகும். இருந்தாலும் இவருடைய பெயர் ராஜா ஆஃப் பனகல். இவர் 1866ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவர் 1892ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. (வேதியியல்) பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் மற்றும் தெலுங்கில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பம்மல் சம்பந்த முதலியார் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நல்ல படிப்பாளி, அறிவாளி, வசதி நிறைந்த ஜமீன்தார்,செல்வாக்கு நிறைந்தவர். ஜஸ்டிஸ் பிரமுகர்களில் ஒருவர். இவர் கல்வி, பொதுப் பணித்துறை ஆகியவற்றில் அநேக சீரமைப்புகளைச் செய்தார். டிசம்பர் 1920 முதல் ஜூலை 1921 வரை மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் சார்பாக மந்திரியாக இருந்தார். ஜூலை 1921 முதல் செப்டம்பர் 1926 வரை பனகல்அரசர் மதராஸ் மாகாணத்தின் முதல்வராகஇருந்தார். இவர் ஆட்சியில் அமலுக்கு வந்த முக்கியமான சட்டத்திற்கு “ஹிந்து ரிலீஜியஸ் எண்டோமெண்ட் ஆக்ட்” என்று பெயர். இவர் கீழ்ப்பாக்கத்தில் "காலேஜ் ஆஃப் இந்தியன் மெடிசன்” என்ற (நாட்டு)வைத்தியமுறைக் கல்லூரி அமைக்க உறுதுணையாக இருந்தார். இவர் நாட்டுக்குச் செய்த பணிகளைக் கவுரவிக்கும் முறையில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு கே.சி.அய்.இ. (ரி.சி.மி.ணி) நைட் கம்பானியன் ஆஃப் இண்டியன் எம்ஃபயர் என்ற விருதை அளித்தது. இவர் டிசம்பர் 16, 1928இல் இயற்கை எய்தினார்.


"லண்டன் தொட்டி ஆஸ்பத்திரி"

3

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி தற்போதுள்ள இடம் ஹைடி பார்க் தோட்டம் (Hyde Park Garden). இது, மதராஸ் மாகாண பிரதமராக இருந்த பனகல் அரசருக்கு (1921-1926), சொந்தமான இடம். இந்த இடம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வருவதற்கு முன்பு இந்திய மருத்துவப் பள்ளியாக இயங்கியது. ஸ்டான்லி மருத்துவமனையை கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி என்பதுபோல், இது ஒரு நேரத்தில் `லண்டன் தொட்டி ஆஸ்பத்திரி' என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், இந்த இடம் ஒரு காலத்தில் லாண்டன்ஸ் தோட்டம் (Landon’s Garden) என்று அழைக்கப்பட்ட இடம் - இதுவே, பிறகு லண்டன் தொட்டி என மருவி அழைக்கப்பட்டது. (Madras Miscellany, p.738)  
(ஆதாரம்: டாக்டர் சு.நரேந்திரன் எழுதியுள்ள “காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்“ என்ற நூலிலிருந்து. பக்கம் 226)

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் (27.4.1852 - 28.4.1925) தியாகராயர் பற்றி தலைவர்கள்

 

19


தியாகராயர் எப்போதும் தன்னிச்சையான குணமுடையவர். எவருடைய விருப்பு வெறுப்புகளையும் பொருட்படுத்தாது தமக்குப் பட்ட கருத்துக்களைத் தைரியத்துடன் கூறுபவர் 

21

- டாக்டர் சி. நடேசனார்.

('இந்து' நாளிதழ் -29.4.1925-  பக்கம் 4, தியாகராயர் மறைவு குறித்த இரங்கற் பேச்சு.) 

***

20
“தியாகராயர் ஒரு பெரிய மனிதர். நம் தலைமுறையில் வாழ்ந்து வரும் பெரிய மனிதர்களிலெல்லாம் பெரிய மனிதர். இன்றைய நவீன இந்தியாவில் வாழும் மனிதர்களையெல்லாம் இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தியாகராயரே அவர்களையெல்லாம் விடப் பெரிய மனிதராக விளங்குகின்றார். முதலாவதாக அவர் தம்மிடம் அண்டிக்கிடந்த பெரும்புகழை அறியாதிருந்தார். இரண்டாவதாக அவர் தம்மை எவரும் பெரிய மனிதர் என்று நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறிதும் கொண்டிராமல் இருந்தார். சாதாரண ஒழுக்கமுடைய குடிமகனாகவே பணியாற்றி வந்தார். அவர் ஒருபோதும் கர்வமோ ஆணவமோ கொண்டதில்லை. 

- பனகல் அரசர் 

தியாகராயர் மறைந்த போது ஆற்றிய இரங்கல் உரை. 

‘இந்து' நாளிதழ் 29.4.1925) 

***

22

 “தியாகராயருடன் பல ஆண்டுகளாக மிக நெருங்கிப் பழகியவன் யான். அவரைப் போன்ற ஒரு உண்மை நண்பரையோ அல்லது உறுதுணையாளரையோ இதுவரை நான் கொண்டிருந்ததில்லை” 

- ராஜா சர். அண்ணாமலை செட்டியார் 

(தென்னிந்திய வர்த்தகக் கழகம் வெள்ளிவிழா மலர்)

***

23
“1921ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு! தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறுமாத வேலை நிறுத்தம்! லார்டு வில்லிங்டன் நீலகிரியினின்றும் புறப்பட்டார். சென்னை என்ன பேசிற்று ? தொழிலாளர் தலைவர்களை நாடு கடத்த லார்டு வில்லிங்டன் வந்திருக்கிறார் என்று பேசிற்று.நாடு கடத்தல் செயலில் நடந்ததா? இல்லை. ஏன்? தியாகராயர் தலையீடு. ‘மலையாளக் குழப்பம் - ஒத்துழையாமை இவைகளிடையே நாடு கடத்தல் நிகழ்ந்தால் சென்னை என்ன ஆகும்? மாகாணம் என்ன ஆகும்? மந்திரிமார் பதவியினின்றும் விலகுதல் நேரினும் நேரும்‘ என்று செட்டியார் எடுத்துரைத்தாரென்றும், அதனால் லார்டு வில்லிங்டன் மனமாற்றமடைந்து நாடு கடத்தலை எச்சரிக்கை யளவில் நிறுத்தினாரென்றும் சொல்லப்பட்டன. இவைகளை எனக்குத் தெரிவித்தவர் டாக்டர் நடேச முதலியார், தியாகராய செட்டியாரைக் கண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டேன். ‘நீர் நல்லவர். உமது கட்சி வேகமுடையது. வேகம் அந்தரங்கத்தை வெளியிடவும் தூண்டும். ஆதலின் அந்தரங்க சம்பாஷணையை வெளியிடுதல் நல்லதன்று’ என்று கூறினார். ‘144 பலருக்கு வழங்கப்படுகிறது; எனக்கு வழங்கப்படுவதில்லை.காரணம் ‘நாடு கடத்தும் நாட்டம் என்று சொல்லப்பட்டது. அந்நாட்டத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். நீங்கள் எனக்கு நன்மை செய்யவில்லை! என்றேன். ‘நாடு கடத்தலால் உமது வாழ்வே தொலையும்; உமது எதிர்கால வாழ்க்கையைக் கருதியே யான் தடை செய்தேன்’ என்று செட்டியார் அன்று உரைத்தது எனக்கு மகிழ்ச்சியூட்டவில்லை.” 

(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள். பக்கம். 446)

திங்கள், 17 ஏப்ரல், 2023

பாரதி – யார்? - எதிர்வினை (104)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (104)

2022 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ஜுலை 16-31 2022

பாரதி – யார்?
நேயன்


“சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதி பாடியதை எடுத்துக்காட்டி போற்று-வோர் உண்டு.
பாரதிக்கு முன், காலத்தால் முந்தியும் கருத்தால் ஓங்கி வளர்ந்த வள்ளலார் பாடியதை யார் புகழ்ந்துரைக்கிறார்கள்? வள்ளலார் 1865ஆம் ஆண்டிலேயே ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ நிறுவியவர், அவர் பாடுகிறார்.
“சாதியு மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்’’ என்றும்,

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலா மண்மூடிப் போக” என்றும்,

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமுமக் கூட்டத்தே கூவுகின்ற கணியுங்
கள்ளமுறு மாக்கலைகள் காட்டியபல் கதியுங்
காட்சிகளுங் காட்சிதரு கதியுங் கடவுளுரு யெல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளையெனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
என்றும்,
நால்வருண மாச்சிரம மாச்சார முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணந் தோல்வருணங் கண்டறிவாரிலை நீ
விழித்திதுபா ரென்றெனுக்கு விளம்பியசற் குருவே
என்றும் சாடிய வள்ளலாரைப் பற்றிப் புகழ்வதற்கு யாரும் முன் வருவதில்லை. பதினெண் சித்தர்கள் பாடிய பாடல்க-ளெல்லாம் மூடநம்பிக்கைகளையும், முடைநாற்றம் வீசும் கடவுள் கதைகளையும் வெறுத்து ஒதுக்குவதை யாரும் நினைவூட்டுவதில்லை. “சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதி,. அவர்களுக்கு மூலமாக விளங்கும் நால் வருணத்தைப் போற்றுகிறான்.
“நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’’
என்று பாடுகிறான். நான்கினில் ஒன்று குறைந்தால் மானிடச் சாதியே செத்து மடியும் என்கிறான் பாரதி.
அய்யா அவர்கள்தான் கூறுவார், “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி’’ என்று பாடுகிறானே, ஆயிரம் சாதிகள் இருந்தால் ஆயிரம் பிளவுகள் இருக்கின்றன என்று பொருள்.
அப்போது அந்நியன் புகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பானா?’’ என்று.
எனவே, நான்கு வகுப்பும் இருக்க வேண்டும். நான்கு வகைத் தொழிலையும் பரம்பரையாய் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பாரதியை சாதி ஒழிப்புக்குப் பாடியவன் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
“பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பார முனக் காண்டே’’ – என்றும்
தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லி
சோதனை போடாண்டே
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லென்னைக்
கட்டியடி யாண்டே
ஆண்டே – கட்டியடி யாண்டே’’
எனப் பாடுகிற பாரதி ஆச்சாரியாருக்கு முன் குலத் தொழில் பற்றிப் பாடியவன் என்றுதான் கூறவேண்டும். விதிக்கு விளக்கமளிப்பதைப் போல வேறொரு பாட்டில் குறிப்பிடுகிறான்.
“மரத்தினை நட்டவன் தண்ணீர் – நன்கு
வார்த்தே ஓங்கிடச் செய்வான்’’
என்று இது மட்டுமா?
பக்தியினாலே-இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ”
என்றும் பாடுகிறான்.
“ஆயிரம் தெய்வத்தைத் தேடும் அறிவிலிகாள்” என்றவன்,
காட்டு வழிதனிலே – அண்ணே
கள்ளர் பயமிருந்தால் – எங்கள்
வீட்டுக் குடிதெய்வம் – தம்பி
வீரம்மை காக்குமடா!’’ என்றும்,
“வெள்ளைக் கமலத்திலே-அவள்
வீற்றிருப்பாள்-புகழேற்றிருப்பாள்” என்றும்,
மாகாளி, மகாசக்தி இன்னபிற தெய்வங்களையும்
பாடி மகிழ்கிறான். காடனை, மாடனை
வெறுத்த பாரதி அக்கார அடிசிலுக்குரிய தெய்வங்களைப்
புகழ்ந்து ஏற்றுகிறான்.
வேள்விகள் கோடி செய்தால்-சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்
மூளு நற்புண்ணியார் தான்-வந்து
மொய்த்திடும் சிவணியில் விளங்கி நிற்கும் என்றும்,
“ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்’’ என்றும்,

பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தெண்ணியே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டன’’
என்றும் தம் சுயசரிதையில் பாடியவன் “பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’’ என்று பாடியிருப்பது மனநோய்ப் புலவன் என்பதை நிரூபித்துக் காட்டுகிறது.
உண்ணச் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவணம் நன்கு புரிந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே’’
என்று கண்ணன் பாட்டில் கீதையின் அருள்மழையைப் பாடுவதால் “சதுர்வருணம்’’ (நால் வகைச் சாதி) போற்றும் கீதையை ஏற்றுக் கொள்ளுகிறேன் என்பதை பாரதி ஒப்புக்-கொள்ளுகிறான்.
எந்த நாடு (தேசம்) விடுதலை பெற விழைகிறான் பாரதி தெரியுமா?
“எங்கள் ஆரிய பூமியெனும் பயிர்
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்’’ என்றும்,
“பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
அய்யுற வின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்” என்றும்,
“வேதம் முடையதிந்த நாடு-நல்ல வீரர்
பிறந்த திந்த நாடு” என்றும்,
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்’’
என்றும் பாடிய பாரதி இந்துமதம் பற்றியும் பாடுகிறான்.
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமை தனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்
தந்து புகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காவைக் குடியூர் தனிலே சால”
என்று சனாதன மதத்தையே போற்றுகிறான். எனவே, பாரதி யார்? என்று வினவினால் பாரதி சாதியைச் சாடுவது போல் நான்கு வருணம் போற்றியவன்.
அவன் ஆயிரம் தெய்வங்களை வெறுத்தது போல் பாடி ஆரியக் கடவுள்களைப் புகழ்ந்து பாடியவன்.
உயர்வு தாழ்வு கூடாது என்று பாடியவன் சாதிக்கு வித்திடும் கீதையைப் போற்றுகிறான். வேதத்தையும், வேள்விகளையும் போற்றுகிறான். இவைதாம் தமிழர்கள் ‘தன்மானம்’ இழக்கக் காரணமாக இருந்தவை. இவற்றைப் போற்றுகின்ற பாரதி என்ற பார்ப்பான் எப்படி ‘தன்மானம்’ பற்றி தமிழர்களுக்குப் பாடினான் என்று கூறமுடியும்?
எனவே, பாரதி ஓர் இந்துமதப் பற்றாளன். அவன் பாடிய பாடல்கள் ஆரிய பூமியையும், கீதை உபதேசத்தையும் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.
பாரதி சாடியதாக எவரேனும் எண்ணினால் ‘வஞ்சப் புகழ்ச்சி’ அணிகொண்டு பாடியிருக்கிறான் எனக் கொள்ள வேண்டும்.
ஆரியத்தின் அடிவருடிகள் விழா எடுக்கலாம். அதற்காகப் பகுத்தறிவுவாதிகளைச் சாடுவது இருக்கும் இடத்திற்கு அழகல்ல.
இவை பற்றித்தான் இராவண காவியம் பாடிய பெரும் புலவர் குழந்தை அவர்கள் காவியத்தின் ஓரிடத்தில் பாடுகிறார்.
“நீறு பூத்த நெருப்பன தீயரை
வேறு பார்த்து விலக்கிவை யாதுநற்
சோறு பார்த்துச் சுவைத்துண வைத்ததாற்
கூறு பார்த்துத் தமிழரைக் கொன்றனர்”
என்று தெளிந்து பாடியதை வள்ளுவனும் “செப்பின் புணர்ச்சி போல்’’ எனும் உவமையால் சுட்டுகிறான்.
செப்பின் புணர்ச்சிபோல் உள்ள அயலரின் செப்பிடு வித்தையை உணரும் நாள் எந்நாளோ அந்நாளே பாரதி_யார்? என உணரும் நாளாகும். பாரதி மட்டுமன்றி இன்றைய ஆட்சிச் சாரதியும் உள்ளடக்கம்.
– தஞ்சை ஆடலரசன்

இரட்டைமலை ஆர்.சீனிவாசன்

 

வரலாற்றுச் சுவடு : இரட்டைமலை ஆர்.சீனிவாசன்

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

1893ஆம் ஆண்டே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காக “பறையன்” என்னும் பெயரில் ஒருவர் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார் என்று எண்ணும்போது “யார் அந்த மாமனிதர்?” என்று கேட்கத்தான் தோன்றும். அந்த மாமனிதர் வேறு யாரும் அல்லர்; – அவர்தான் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் அவர்கள்.
அவருடைய பிறந்த நாள் 7.-7.-1859.

1891-ஆம் ஆண்டில் ஆதிதிராவிட மகாஜன சபையைத் தொடங்கினார். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி தேவை என்பதை வலியுறுத்தினார். காந்தியாரின் கருத்துக்கு எதிர்க்கருத்தையும் அங்கு எடுத்து வைத்தார்.
சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தபோது, பானகல் அரசர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் வரலாற்றுத் திருப்பம் வாய்ந்ததாகும். அத்தீர்மானம் ஆணையாகவும் பிறப்பிக்கப்பட்டது.

அந்த அரசு ஆணை இதோ:
எந்தப் பொதுச்சாலையிலோ, தெருவிலோ அல்லது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாக இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவையாய் இருந்தாலும் அல்லது பொதுவர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள இலாகாக்களுக்கும் அனுப்பியது.

கையொப்பம்:
பி.எல்.மூர்.
அரசாங்கச் செயலாளர்
இந்தச் சாதனைச் சரித்திரம் படைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், நீதிக்கட்சி அரசையும் நினைப்பதும், போற்றுவதும் _ நாம் நன்றியுணர்வு என்னும் பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை வெளிப்படுத்துவதாகும்.

பானகல் அரசர்!

 

வரலாற்றுச் சுவடு: பானகல் அரசர்!

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

பானகல் அரசர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இராமராய நிங்காரு. அவர்களின் பிறந்த நாள் ஜூலை 9, 1866. சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகால நீதிக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வமும், செய்த ஆக்க ரீதியான செயல்களும் அளப்பரியன!

அந்தக் காலகட்டத்தில் எல்லோரும் வங்காள நிருவாகத்தைத்தான் புகழ்வார்களாம்! வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ _- எதைச் செய்கிறதோ, அதையேதான் நாளை இந்தியாவின் பிற பாகங்களும் நினைக்கும், செய்யும் என்று சொல்லப்பட்டது. அதை மாற்றி அமைத்தவர் பானகல் அரசர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்டார். அந்த அளவுக்கு பானகல் நிருவாகம் மேன்மை பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை என்பது வெள்ளைக்காரர்கள், அடுத்துப் பார்ப்பனர்களின் கைகளில் கெட்டியாக இருந்தது. இதற்கொரு முடிவு காண வேண்டும் என்பதற்காக சர்ஜன் ஜெனரலின் செயலாளராக (Personal Asst.) ஒரு பார்ப்பனரல்லாதாரை பானகல் அரசர் நியமனம் செய்தார். சர்.சி.பி. இராமசாமி அய்யரும், கே.சீனிவாச அய்யங்காரும் அதனை எதிர்த்துக் கூக்குரல் போட்டனர். பானகல் அரசரோ அதை இலட்சியம் செய்யவே இல்லை.

சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவை அடியோடு அழிந்து போகப் போகிறது என்கிற காலகட்டத்தில் அவற்றிற்கெல்லாம் புத்துயிர் கொடுத்தார். கிராமப் பகுதியில் ஏழை – எளிய மக்களுக்கு இலவச மருத்துவ உதவி கிடைப்பதற்காக (Rural Medical Scheme) புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்.
“கடவுள் ஆபத்தில் இருக்கிறார் – மதம் ஆபத்திலிருக்கிறது’’ என்று பார்ப்பன ஏடுகள் எல்லாம் ஒப்பாரி வைத்தன. அவர் உண்மையில் ராஜா அல்ல; அரசரும் அல்ல; பார்ப்பனரல்லாதாருக்கு அவர் ஆற்றிய தொண்டின் காரணமாக “ராஜா’’ என்று அழைக்கப்பட்டார்.

“ஒரு யுத்தம் முனைந்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்துத் திரும்பியபோது, சேனாதிபதி இறந்துபோய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில், அப்போர் வீரர்களின் மனம் எப்படித் துடிக்குமோ அதுபோல் – நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்-கள்’’ என்று பானகல் அரசரின் மறைவு குறித்து தந்தை பெரியார் துடிதுடித்தார் என்றால், அப்பெருமகனாரின் சிறப்புக்கு வேறு என்ன அணிகலன் தேவை! வாழ்க பானகல் அரசர்!

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கீழ்ப்பாக்கத்து இதழின் கீழ்மை!

 

சிந்தனைக்களம் : கீழ்ப்பாக்கத்து இதழின் கீழ்மை!

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்து-கொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய இதழ்கள் பலவற்றின் போக்காக-வுள்ளது.
கீழ்ப்பாக்கத்திலிருந்து வெளிவரும் அந்த இதழ் ஒருகாலத்தில் இந்திய நாட்டிலேயே மிகுதியாக விற்பனையாகும் இதழாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. நூலிழையில் தமிழர் மேலாண்மையிலிருந்து தடம் மாறித் தமிழ், தமிழர் என்றாலேயே கசப்பும் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்து வோரிடம் தற்போது சிக்கிக்கொண்டுள்ளது.
நேரடியாகத் தமிழின வெறுப்பை வெளிப்படுத்துவதுடன் மக்கள் மன்றத்தில் செல்வாக்குப் பெற்றுவிட்ட எழுத்தாளர்களின் வழுவும் பிழையும் மலிந்த கூற்றுகளை மறுபதிப்புச் செய்து, தமிழியக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வது இந்த இதழுக்கு மிக விருப்பமான பொழுதுபோக்கு.
தமிழ்நாட்டின் திரைப் பாவலர்களுள் உண்மையாகவே அரசோச்சிவந்த உடுமலை நாராயணகவி, இனிய தமிழ்நடையில் இசைப் பாடல்களை யாத்தளித்த காமாட்சிநாதன், அனைவர் உதடுகளையும் தம் கவிதையின் உறைவிடமாக மாற்றிய பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், தெள்ளுதமிழ்ப் பாக்களைத் துள்ளும் சந்தத்தில் படைத்த கா.மு.செரீஃப், படிமம், குறியீடு ஆகியவற்றைத் திரைப் பாடல்களிலேயே வழங்கமுடியும் என மெய்ப்பித்துக் காட்டிய கம்பதாசன், அணிநலன் செறிந்த பாக்களைத் திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்த முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கிய கு.மா.பாலசுப்பிரமணியம், எளிமையும் இனிமையும் கருத்தோட்டமும் கைகோத்து வரும் பாடல்களை வழங்கிய மருதகாசி எனப் பல்வேறு கவிஞர்கள் திரைப்பாக்களிலேயே முதிர்ச்சியும் கலைநயமும் தவழச் செய்த அருஞ்செயல் தமிழ்நாட்டின் தனிப் பெருமை-களில் ஒன்றாகும். எனினும் ஒரு பாவலரை மட்டுமே தமிழர் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள்.
அந்தப் பாவலரின் திரைப்பாடல்திறம் சிறப்பு வாய்ந்தது என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கில்லை. ஆயினும் அவர் தமிழ்ப்புலமை மிக்கவர் எனக் கருதுதல் பிழை. தம்மைத் தமிழுக்கு அதிகாரியாகக் கருதி அவர் குமுதவாய் திறந்து மொழிந்த “உளறல்களை” இந்த இதழ் இப்போது வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. 12.1.2022 நாளிட்டு வெளிவந்துள்ள இதழில் ஒரே கல்லில் இரு மாங்காய்களாகக் குறளையும் தமிழியக்கத்தையும் பழித்துரைத்த அவர் பிழையுரையை வெளியிட்டு மகிழ்ச்சி யடைந்துள்ளது.
தனித்தமிழ் “உண்மையான பொருளைத் தருவதில்லை’’ என்பது அந்தப் பாவலரின் கண்டுபிடிப்பு. இதற்குச் சான்றாகப் பல சொற்களைக் கூறி, இறுதியில் தமிழ்நாட்டு அரசு தன் இலச்சினையில் பொறித்திருக்கும் “வாய்மையே வெல்லும்’’ என்னும் தொடரில் குற்றம் கண்டுபிடித்துள்ளார்.
‘சத்யமேவ ஜயதே’ என்பதை ‘வாய்மையே வெல்லும்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்கிறார்.
சத்தியம் என்றால் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் நேர்மையாக இருத்தல் என்று பொருள்.
‘வாய்மை’ என்பது ‘வாய்ச்சொல் நேர்மை’ என்பதை மட்டும் குறிக்கும் என்கிறார்.
தம் கூற்றுக்குத் துணையாக,
“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்’’ -(குறள் 291) எனும் குறளை மேற்கோளாகக் காட்டுகிறார். இக்குறள்மூலம் மூன்றில் ஒரு பங்குதான் அவர் வாய்மையைப் புரிந்துகொண்டுள்ளார்.
மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் பொய்யாமையைக் கடைப்பிடித்தலே வாய்மையாகும்.
“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்’’ (குறள் 294)
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.’’ (குறள் 295)
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையான் காணப் படும்’’ (குறள் 298)
என்னும் குறள்பாக்களின் மூலம் உள்ளம், மனம், அகம் என மூன்று நிலைகளில் மனத்தால் பொய்யாமை, காத்தல், வாய்மை என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.””
“வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்” (குறள் 291)
“பொய்ம்மையும் வாய்மைஇடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’’ (குறள் 292)
என்னும் குறள்பாக்களில் மொழி(வாக்கு)வழி வாய்மை நுவலப்பட்டுள்ளது.
“பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்’’
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று’’
என்னும் குறள்பாக்களின் வழிச் செயலால் வாய்மை காத்தல் கூறப்படுகிறது.
ஏனைய குறள்பாக்கள் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் வாய்மையறம் போற்றலை வலியுறுத்து-கின்றன. எனினும் எவ்விடத்தும் வாய்மை என்பதை “வாய்ச்சொல் நேர்மை’’யாகக் குறள் குறுக்கிக் குறைத்துக் காட்டியதாகக் கருதவோ வரையறுக்கவோ இல்லை.
வாய்மை தலையாய அறம்; அந்த அறம் ஏனைய அறங்களுக்கெல்லாம் தலைமைதாங்கும் சிறப்பு வாய்ந்தது என்பதே வள்ளுவர் கருத்து.
ஆங்கிலத்தில் Truthfulness, Veracity எனப்படுவதே வாய்மை, பொய்யாமை எனத் தமிழில் போற்றத்தக்கது. “வாய்மையே வெல்லும்’’ எனத் தமிழில் கூறப்படுவதைக் குறைகூறுவதன் உள்நோக்கம் அரசியல் காழ்ப்புணர்வு என்பது வெளிப்படை.
மறைந்த ஒரு கவிஞர் தமது வாழ்நாளிலேயே மறந்த ஒரு கூற்றுக்கு மறுவாழ்வு தந்து தமிழ் மறுமலர்ச்சி அடைய வழி வகுத்த தனித்தமிழ் இயக்கத்தைப் பழித்துரைக்கக் கீழ்ப்பாக்கத்தார் முயல்வது தகாது.
விற்பனை குறைந்து வருவாய் சரிந்துவரும் வேளையில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வகையில் தமிழ்ப்பகை வளர்ப்பது மடமையிலும் மடமை.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி - எதிர்வினை (102)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (102)

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி
நேயன்

பாட்டுத் துறையில் பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதை கொஞ்சம் சொல்லித்தான் ஆகல் வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனையாற்றலை வேண்டு-மானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால், கற்பனையாற்றல் இருப்பவர்-களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்-களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் பயிற்சியையும் சொல்லாற்றலையும், இயற்கை யீடுபாட்டையும் உலகியலறிவையும், மெய்யுணர்ச்சியையும் பொறுத்து அமைவது. கற்பனைத்திறன் பொதுவாக எல்லாரிடத்தும் இருக்கும். மொழிப் பயிற்சியோ, சொல்லாற்றலோ, உலகியலறிவோ, மெய்யுணர்ச்சியோ, இலக்கியப் பயிற்சியோ எல்லாரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவை பயிற்சியினாலும் கல்வியினாலுமே கைவருவனவாகும். இயற்கை ஈடுபாடோ சூழலால் அமைவதாகும்.
பாரதியாரிடம் கற்பனையாற்றலும் அதை வெளிப்படுத்தும் உணர்ச்சியும் ஓரளவு இருந்தன என்று சொல்லலாமே தவிர, மொழிப் பயிற்சியும், சொல்லாற்றலும், இலக்கியப் பயிற்சியும் அவ்வளவு மிகுந்திருந்தனவாகச் சொல்ல முடியாது. உலகியலறிவும், மெய்யுணர்ச்சியும் அவ்வளவு சிறப்புற விளங்கியிருந்தன என்றும் பாராட்ட முடியாது. இயற்கை ஈடுபாடும் ஓரளவே இருந்தது, ஆனால் அவர் கம்பனுக்கும் மேல், இளங்கோவுக்கும் மேல் பாராட்டப் பெறுவதன் நோக்கமெல்லாம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு இருக்க முடியாது. பாட்டுத்திறத்தில் பாரதிதாசன் அவரைப் பலவகையிலும் வென்றிருக்கின்றார். ஆனால் அவர் ஒரு தமிழர்; அதுவும் தன்மான எழுச்சியுள்ள தனித்தமிழர் என்பதற்காகவே ஆரியப் பார்ப்பனராலும் நம் வீடணத் தமிழர்களாலும் அழுத்தி வைக்கப் பெற்றுள்ளார்.
தமிழ் இலக்கிய வுலகில் கம்பனைப் போல் கற்பனை வளம் படைத்தவர்களைக் காணமுடியாது. இளங்கோ போல் மொழி வளம் மிக்கவர்களும் அருமையே. ஆனால், கம்பனுக்கு விழா எடுப்பது போல் பாரதியாருக்கும் விழா எடுப்பது, போட்டி போட்டுக் கொண்டு செய்யும் ஓர் இன எழுச்சி ஈடுபாடே யொழிய, இலக்கியச் சிறப்பான ஒரு செயலன்று. தேசியப் பாவலர் என்பதில் வேறு ஆரியச் சூழ்ச்சி புதைந்து கிடக்கிறது.

கம்பனுக்கு விழா எடுப்பதிலுங்கூட ஆரியப் பார்ப்பனர்க்கே மிகுந்த அக்கறையுண்டு என்பதும் இன்னொரு வேடிக்கை. அவன் இராமாயணத்தை எழுதினான் என்பதே அவன் பாராட்டப் பெறுவதற்குத் தலையாய ஒரு கரணியம். ஏனெனில், இராமாயணத்தில் தான் வேறு எந்த நூலையும் விடத் தமிழர் இழிவு செய்யப் பெற்றுள்ளனர். அதனால் பார்ப்பனர்க்கு அதில் ஈடுபாடு மிகுதி. இதற்காகவே கம்பனும், ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே பாரதியாரும் பாராட்டப் பெறுகின்றனர். பார்ப்பான் ஒரு துறையில் உள்ள ஒருவனைப் பாராட்ட வேண்டுமானால் முதலில் அவன் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அல்லது அவன் ஒரு பார்ப்பன அடிமையாகவேனும் இருத்தல் வேண்டும். இவ்விரண்டு தகுதியும் ஒருவனிடம் இல்லையானால் அவன் பனைமர உயரத்தவன் என்றால் குட்டையன் என்பான்; பரந்த முடித் தலையன் ஆனாலும் மொட்டையன் என்பான்.
பாரதியாரின் பாட்டு ஆராய்ச்சியைப் பிறிதொருகால் பார்ப்போம். இக்கால் அவர் தமிழைப் பற்றி மிகச் சிறப்பாகப் பாடியிருக்-கின்றார்; தமிழ்மொழிக்கு மிகப்பெருமை சேர்த்திருக்கின்றார் என்று தமிழர்களே பாராட்டுகின்றனரே, அந்தப் பாராட்டில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை மட்டும் பார்ப்போம். அவர் தமிழ் உரைநடை இது.
“ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் கட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு”
– பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்
இவ்வாறான ஒரு நடையைப் பாரதியார் எழுதினால் என்ன? யார் எழுதினால் என்ன? இதனால் தமிழ்மொழிக்கு ஆக்கம் ஏற்படும் என்று எவராவது சொல்லமுடியுமா? தம் வடமொழி கலந்த நடை, ‘நம்மவர்க்குப் பிரியந் தருவதாகும்” என்று வேறு பாரதியார் குறிப்பிடுகின்றார். அவர் கண்ணோட்டத்தில் இவ்விந்திய நாடும் இங்குள்ள மக்களும் எவ்வாறு கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் உரையால் அறியலாம்.
“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளி-யாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்-களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்-திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்”
– பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்
மேலே காட்டப்பெற்ற இரு குறிப்புகளே பாரதியார் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் இனத்தைப் பற்றியும் என்ன கருத்துக் கொண்டிருந்திருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டப் போதுமான சான்று-களாகும். ‘ஒரு நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு உயர்வு தாழ்வுகளுக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் தாம் பொறுப்பாளிகள்’ என்றால் மானமுள்ள எந்தத் தமிழன் அவரை வெறும் பாட்டுத் திறனுக்காகவோ கற்பனைத் திறனுக்காகவோ பாராட்டுவான்? தன் மொழியைப் பற்றியும் இனத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும், அவை யழிக்கப் பெற்ற வரலாறு பற்றியும் அவை புதுப்பிக்கப் பெற வேண்டிய முயற்சி பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாத ஆரிய அடிமைகளே அவரை ஒரு பாவலர் என்பதற்காகப் பாராட்டுவார்கள். வெறும் பாவலர் என்பதற்காகப் பாராட்டுப் பெற வேண்டியவர்கள் நம் இனத்தில் ஏராளம்! தடுக்கி விழுந்ததற் கெல்லாம் பாட்டு உண்டு. இங்கே, தமிழ் இலக்கியங்களில் உள்ள பாட்டுச்செறிவு போல் வேறு இந்திய மொழிகள் எவற்றிலும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை. பாவலர்களுக்குப் பஞ்சம் என்றும் இருந்ததில்லை . எனவே, அதற்காகப் பாரதியாரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய தேவையும் நமக்கு இல்லை.
பாவலன் ஒருவனால் எதிர்காலத்திற்குக் கிடைத்த கருத்துகள் எவை? அவற்றால் அந்த மொழிக்கும், மக்களுக்கும், அந்நாட்டுக்கும் வந்து சேரும் பயன்கள் எவை? – என்பன பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டுமே தவிர, ஒருவர் ஒரு பாவலர் என்பதால் மட்டுமே நமக்குப் பெருமை வந்து விடப் போவதில்லை.
பாரதியாரின் உள்ளம் ஆரியர்க்காக எண்ணிய உள்ளம்; அவர் இந்த நாட்டை ஆரிய நாடு என்பதனாலேயே பெருமை கொள்வதாக அவர் பாடல்கள் தெரிவிக்கின்றன. பின்வரும் பாடலடிகளைப் பாருங்கள்.
“பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்று அறி”
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்”
“சித்த மயம் இவ் வுலகம்; உறுதிநம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்
அத்தனை யும் வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்”
-“எம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவி”
-“வீரிய வடிவம் – என்ன
வீரிய வடிவம் – இந்த
ஆரியன் நெஞ்சம், அயர்ந்ததென் விந்தை!”
“எங்கள் ஆரிய பூமி”
“ஆரிய பூமியில் நாரிய ரும்நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்”
“உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே”
“ஆதிமறை தோன்றியதால் ஆரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு”
_ எப்படி? பாரதியாருக்கு இது தமிழ் நாடாகவோ இந்தியாவாகவோ படவில்லை. அப்படிப்பட்டாலும் அவருக்குச் சொல்ல விருப்பமில்லை.
(தொடரும்…)

புரட்சிக் கருத்துகள்கூட போதை உளறல்களே! - எதிர்வினை (101)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (101)

2022 மற்றவர்கள் ஜூன் 1-15 2022

புரட்சிக் கருத்துகள்கூட போதை உளறல்களே!
நேயன்

ஜாதிக்கு எதிராகவோ, பெண்ணுரிமைக்கு ஆதரவாகவோ, பார்ப்பனர்களைக் கண்டித்தோ பாரதி பாடிய சில வரிகள்கூட, சந்தர்ப்ப நிர்ப்பந்தத்தாலும், போதை உச்சமடைந்த தாலுமாகும்!
“ஒரு தகர டப்பாவிலிருந்து ஒரு லேகியத்தை ஆளுக்கு ஓர் எலுமிச்சங்காயளவு எடுத்து வாயில் போட்டனர். ‘அது என்ன?’ என்று கேட்டேன். ‘அது மோட்சத்திற்குப் போகும் மருந்து’ என்றார் மாமா(பாரதி). ‘பாவிகளா, எலுமிச்சங்காயளவா?’ என்றேன். ‘உனக்குப் பயந்துதான் இச்சிறிய அளவு கொள்கிறோம்’ என்றார் மாமா’’ என்று வ.உ.சி வருத்தப்பட்டிருக்கிறார். ( ‘வ.உ.சி.யும் பாரதியும்’ _ நூல்)
இப்படிப்பட்ட போதை ஆசாமியான பாரதி, போதையின் உச்சத்தில் பலவற்றை உளறியும் இருக்கிறார்.
“இந்தியாவிலுள்ள முஸ்லிம், கிறித்துவர் அனை வரும் ஹிந்துக்களே!’’ என்று பாரதி சொன்னதற்கு, ‘ஹிந்துக்கள்’ என்ற சொல்லை இந்தியாவில் பிறந்தவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லி யிருக்கிறார். அதை ஒரு சமயச் சொல்லாகச் சொல்லவில்லை’’ என்று விளக்கம் கூறுகிறார்கள் பாரதியின் வழக்குரைஞர்கள்.
“சதுர் வேதங்கள் மெய்யான சாஸ்திரங்கள்
எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்க
கூறும் துப்பான மதத்தினையே ஹிந்து
மதமெனப் புவியோர் சொல்லுவாரே!
அருமையுறு பொருள்களெல்லாம் மிக அரிதாய்
தனைச்சாரும் அன்பர்க்கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்து மதப் பெற்றி தன்னை
கருதியதன் சொற்படியிங் கொழுகாத
மக்களெல்லாம் கவலை யென்னும்
ஒரு நரகக் குழியதனில் வீழ்ந்து தவித்
தழிகின்றார் ஓய்விலாமே’’
என்கிறார் பாரதி. இந்துமத நெறிகளைப் பின்பற்றாததால்தான் மக்கள் துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர் என்கிறார். அதே பாரதி,
“தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்
திக்கை வணங்கும் துலுக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் ஏசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.’’
இந்த இரண்டில் பாரதியின் நிலைப்பாடு எது? மத நல்லிணக்கம் பேசும் அதே பாரதி இந்து மதமே உயர்ந்தது, கிறித்துவர்களால் இந்து மதம் அழிகிறது என்கிறார்! இந்த இரட்டை நிலைப்பாட்டிற்குப் பெயர் என்ன?
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்த பாரதி, இந்தி தேசிய மொழியாக வரவேண்டும் என்று ஒரு கட்டத்திலும், சமஸ்கிருதம் தேசிய மொழியாக வரவேண்டும் என்று இன்னொரு கட்டத்திலும் கூறியுள்ளார். இதைத்தான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கூறுகிறது என்று ஒப்பிட்டுக் காட்டுகிறோம்.
ஆனால், இந்த உண்மையை மறைத்து பாரதி வழக்குரைஞர்கள் எப்படி முட்டுக் கொடுக்கிறார்கள் தெரியுமா?
எடுத்துக்காட்டாக, ஜாகர் என்பவர் கூறுவதைக் கீழே படியுங்கள்.
“ஒரே நேரத்தில் தேசியக் கவிஞனாகவும், மாநிலக் கவிஞனாகவும் இயங்கி வந்த பாரதி, தேசிய மொழியாக ஆங்கிலம் வருவதை விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் ‘இந்தி’யை பொதுப் பாஷையாக்க வேண்டும் எனக் கூறும் பாரதி, இன்னொரு கட்டத்தில் ‘சமஸ்கிருதத்தை’ பொது பாஷையாக்க வேண்டும் எனக் கூறுகிறான். இதற்குப் பலமான அரசியல் பின்னணி உண்டு. இந்திய தேசிய அரசியலில் காந்தியின் செல்வாக்கு ஓங்கி இருந்த கட்டத்தில், இந்தியைத் தேசிய மொழி ஆக்க வேண்டும் எனும் காந்தியின் குரலை வழிமொழிகிறான். பின்னர் காந்தியிடம் வேறுபட்டு, அரவிந்தரின் ஆளுமைக்குள் வந்தபின் அரவிந்தருக்குப் பிடித்தமான சமஸ்கிருதத்தை பொதுப் பாஷையாக்க வேண்டுமென்கிறான்.
இன்னொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மேற்கூறிய செயல்கள் யாவும் அறிவு நிலைப்பட்டதல்ல உணர்ச்சி நிலைப்பட்டவை. இவை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாரதிக்கு இருந்த பற்றை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.’’
இந்த வாதத்தில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? தேசியக் கவி, மாநிலக் கவி என்பதெல்லாம்இவர்கள் கொடுத்துக்கொண்ட பட்டங்கள். எந்தத் தகுதியில் பாரதி தேசியக் கவி? எந்த வகையில் மாநிலக் கவி? இதுவே விவாதத்திற்குரியது. தேசியக் கவி என்றால், ஆங்கிலம் வரக்கூடாது என்று ஏன் கூறவேண்டும்? இந்தி பொதுப்பாஷை என்பது எதன் அடிப்படையில்? ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமே பேசும் சமஸ்கிருதம் எப்படி இந்தியாவின் தேசிய மொழியாக முடியும்? இதில் என்ன நேர்மையுள்ளது? பாரதி, காந்தியை ஆதரிப்பதற்கும், அரவிந்தரை ஏற்றுக் கொள்வதற்கும், இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியும், சமஸ்கிருதமும் வரவேண்டும் என்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது?
பாரதியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பத்தான் இந்தியாவின் தேசிய மொழி தீர்மானிக்கப்பட வேண்டுமா?
இதைவிட நகைப்பிற்குரிய வாதம் என்னவென்றால் பாரதியின் செயல்கள் அறிவு வயப்பட்டதல்லவாம்; உணர்ச்சி வயப்பட்டதாம். இதன்மூலம் பாரதிக்கு இருந்த தமிழ்ப் பற்றும் சமஸ்கிருதப் பற்றும் வெளிப்படுகிறதாம். சமஸ்கிருதப் பற்று வெளிப்படுகிறது என்பது சரி. தேசிய மொழியாக இந்தியும் சமஸ்கிருதமும் வரவேண்டும் என்பதில் தமிழ்ப்பற்று எப்படி வெளிப்படும்?
எல்லாம் ஒரே உளறல். இப்படிப்பட்ட உளறல் பேர்வழிகள்தான் பாரதியை தேசிய கவியாக்கியவர்கள்; முற்போக்குவாதியாய்க் காட்டி முட்டுக் கொடுப்பவர்கள்.
ஆக, பாரதியின் தேசியக் கவி பிம்பம் ஒரு புனைவு, கட்டமைப்பு, கற்பனை என்பதே உண்மை. ஜாகர் போன்றவர்களால் முட்டுக் கொடுத்து நிலைநிறுத்தப்படுபவை.
மேற்படி ஜாகர், பொதுவுடைமை இயக்கத்தவரின் தப்பான மதிப்பீட்டிற்குக் கூட இதேபோல முட்டுக் கொடுக்கிறார்.
“ஒரு பொருளை அல்லது ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்தி, ஒரு கட்டுக்கோப்பான தளத்தில் இயங்கச் செய்த பெருமை பொருள்முதல் வாதத்திற்கு உண்டு. அதனடிப்படையிலேயே மார்க்சியர்கள் அணுகியுள்ளனர்’’ என்கிறார்.
பொருள்முதல்வாதத்தின் சிறப்பு பற்றி ஜாகர் கூறுவது மிகச் சரி. ஆனால், அந்த அடிப்படை-யில் பாரதியை பொதுவுடைமைவாதிகள் அணுகி, ஆய்ந்துள்ளனர் என்பது தவறு.
மேற்கண்ட பொருள்முதல்வாத வரையறைப்-படி பாரதியின் படைப்புகளைப் படிக்கும் எவரும், அவரை ஓர் சனாதனவாதி, சந்தர்ப்பவாதி, முற்போக்குப் போர்வையில் ஆரிய, சமஸ்கிருத ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றவர், விருப்பு, வெறுப்புகளுடன் செயல்பட்டவர், பொதுவுடைமை எதிர்ப்பாளர், புரட்சியையும் விரும்பாதவர் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்க பாரதியை முற்போக்காளராய், புரட்சியாளராய், பொதுவுடைமைவாதியாய் பொதுவுடைமை இயக்கத்தினர் காட்டுகிறார்கள் என்றால் அது தன் நெஞ்சறிய பொய்யுரைப்பது என்பதாகும்.
பொருள்முதல்வாத வரையறைப்படி பாரதியைப் பகுத்தாய்ந்து, பட்டியல் இட்டு, அவரை சமதர்மவாதியாய், முற்போக்காளராய், புரட்சியாளராய் நிலைநிறுத்திக் காட்டத் தயாரா? என்று நான் சவால் விட்டுக் கூற விரும்புகிறேன். அப்படி அவர்கள் பட்டியல் இட்டால் நான் அவர்களுடன் விவாதித்து உண்மையை உலகுக்கு உறுதி செய்யத் தயாராய் உள்ளேன்.
(தொடரும்…)

பாரதியின் வழக்குரைஞர்கள்! - எதிர்வினை (100)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (100)

2022 கட்டுரைகள் மே 16-31 2022

பாரதியின் வழக்குரைஞர்கள்!
நேயன்

பாரதி பிறப்பதற்கு முன்பே, மராட்டிய மாநிலத்தில் கோலோச்சிய ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் மகாத்மா ஜோதிராவ் பூலே (1827_1890) உறுதியுடன் தீவிரமாகப் போராடினார். ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்ததுபோலவே, அவர்களுடைய புராணங்கள், சாஸ்திரங்கள், சனாதன தர்மங்கள், சடங்குகள் போன்றவற்றையும் கடுமையாக எதிர்த்தார். ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி வளர்ச்சி, உழைப்பாளர் உரிமை போன்றவற்றிற்கு அவரும் அவருடைய துணைவர் சாவித்திரியும் களத்தில் இறங்கி தொண்டாற்றி, வெற்றியும் பெற்றனர்.
பாரதி காலத்திலே, கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியில், சாணார் சமுதாய மக்களால் தோள்சீலைப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. நாராயணகுரு ஜாதிக்கு எதிராய் வலுவான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.
அதேபோல் அய்யா வைகுண்டர், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய்க் கடுமையாகக் கருத்துகள் கூறி, மக்களைத் திரட்டியுள்ளார். சாஸ்திர, சம்பிரதாயங்களைத் தகர்த்து தன்மானத்தோடு வாழ வழிகாட்டி-யுள்ளார்.
ஆனால், அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த பாரதி வர்ணாஸ்ரமம், சனாதனம், சாஸ்திரம் இவற்றை ஆதரித்ததோடு, ஜாதிக் கொடுமைகளை அலட்சியப்படுத்தியும் கருத்துகள் வெளியிட்டுள்ளார்.
“ஜாதி பேதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எல்லாத் தேசங்களிலும் உள்ளது. இந்தியாவில் கொஞ்சம் தீவிரமாகவும், விநோதமாகவும் மாற்றுவதற்கு கஷ்டமாகவும் உள்ளது’’ என்கிறார் பாரதி. இது உண்மைக்கு மாறான பொய்யான கருத்து. ஜாதிமுறை இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதே உண்மை! மேலும், சனாதன தர்மத்தில் உள்ள ஜாதிகள், சூரிய ஜோதியில் காணப்படும் ஏழு வர்ணங்கள் போலவே அவசியத் தன்மை கொண்டவை. ஜாதி அழிவுக்குக் கருவியாகாது’’ என்கிறார் பாரதி. (பாரதி புதையல், பாகம் -2, பக்கம் 180)
பாரதியை முற்போக்காளராய்க் காட்ட முட்டுக் கொடுக்கின்ற ஆள்கள் ஒருபக்கம் என்றால், மோசடியாக அவர் கவிதைகளில் திருத்தங்கள் செய்தும் பாரதியை முற்போக்காளராய்க் காட்டுகின்றனர்.
எடுத்துக்காட்டாக,
“வேத முடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்’’
என்ற பாடல். இதில் உள்ள “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்ற வரியை எடுத்துக்கொண்டு, பாரதி ஜாதியை மறுத்தார், வெறுத்தார், எதிர்த்தார் என்கின்றனர்.
ஆனால், உண்மை என்ன?
1915 பிப்ரவரி ‘ஞானபானு’ இதழில் ‘ஜாதி உயர்வு இல்லை பாப்பா’’ என்றுதான் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. அதாவது ஜாதியில் உயர்வு இல்லை என்பதே பாரதியின் நிலைப்பாடு. ஆனால், ஜாதி வேண்டும் என்பதே அவர் கொள்கை. அதன்படியே, “ஜாதி உயர்வு இல்லை பாப்பா’’ என்று பாரதி எழுதியுள்ளார். ஆனால், இதை பின்னால், “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று திருத்தி மோசடி செய்துள்ளனர்.
பாரதி எழுதிய கீழ்க்கண்ட பாடலை ஆய்வு செய்தால் இதை உறுதி செய்யலாம்.
“நாலு வகுப்பும் இங்கொன்றே –

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் மற்றும் வீரத் தமிழன்னை டாக்டர் தருமாம்பாள்!

தமிழறிஞர்கள்

2022 மற்றவர்கள் மே 16-31 2022

பன்மொழிப் புலவர்
கா.அப்பாதுரையார்
மறைவு: 26.5.1989

திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன சாதித்தது என்று கேட்கும் அறிவுச் செவிடர்களின் செவிப்பறை கிழியும் அளவுக்கு அறிவு நூல்களை ஆய்ந்து தந்த புலவர் பெருமக்கள் வரிசையில் அப்பாதுரையாருக்குத் தனிச் சிம்மாசனமும் வைர மகுடமும் உண்டு.
தந்தை பெரியாரின் சீடர், திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர்.
திராவிட இயக்கத்தோடு அப்பாதுரையார் மிகவும் நெருக்கமாக ஆனதற்குப் புரட்சிக்கவிஞர் முக்கிய காரணமாவார்.
‘விடுதலை’, ‘லிபரேட்டர்’ ஏடுகளுடன் அப்பாதுரையார் அவர்களுக்கு நெருக்கம் அதிகமாகும்.
‘செந்தமிழ்ச் செல்வம்’, ‘கலைமாமணி’ விருதுகள் தமிழ்நாடு அரசால் இவருக்கு அளிக்கப்பட்டன.
5.6.1983 அன்று சென்னை பெரியார் திடலில், ‘சங்கராச்சாரி யார்?’ என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அன்று அக்கூட்டத்திற்கு அப்பாதுரையார் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அதில் திடுக்கிடும் ஓர்அரிய தகவலை வெளியிட்டார். ‘‘ஆதிசங்கரர் கடைசியாக எழுதிய நூல் ‘மனேசாப் பஞ்சகம்’ என்பதாகும். அதில் ஒரு சுலோகம் கடவுளை எதிர்ப்பது. அதன் காரணமாக ஆதிசங்கரர் உயிரோடு வைத்துப் புதைத்துக் கொல்லப்பட்டார்’’ என்ற தகவலைக் கூறினார். (‘விடுதலை’ 15.6.1983)
அப்பாதுரையார் அவர்கள் பற்றி ‘அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார்’ என்னும் அரிய நூலை ‘முகம்’ மாமணி எழுதியுள்ளார். அதனைப் பாராட்டி பேராசிரியர் வெள்ளையன் பகுத்தறிவு இலக்கிய அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ரூ.10 ஆயிரம் பரிசளித்தார்.

வீரத் தமிழன்னை
டாக்டர் தருமாம்பாள்!
மறைவு: 21.5.1959

 

டாக்டர் தருமாம்பாள் சித்த வைத்தியத்தில் தேர்ந்த மருத்துவர்; தஞ்சை கரந்தையில் பிறந்தவர் (1890) இவரது பொது நலத் தொண்டைப் பாராட்டி ‘வீரத் தமிழன்னை’ என்ற பட்டம் ஒரு விழாவில் டாக்டர் அ.சிதம்பரநாதன் அவர்களால் வழங்கப்பட்டது (1951).
சிறந்த சீர்திருத்தவாதி, பெரியபாளையத்தில் வேப்பந்தழை உடுத்தி பெண்கள் நிர்வாணமாகக் கோயிலை வலம் வருவதைத் தடுக்க நேரில் சென்று பிரச்சாரம் செய்தவர்.
மொழிப் போரில் முதன் முதலில் பெண்கள் சிறைக் கோட்டம் நுழைந்தது 1938ஆம் ஆண்டு டாக்டர் தருமாம்பாள், தலைமையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள் பாலசுந்தரம், மலர்முகத்தம்மையார், சீதம்மாள் (டாக்டர் தருமாம்பாள் மருமகள்) மூன்று வயதுடைய மங்கையர்க்கரசி, ஒரு வயதுடைய நச்சியார்க்கினியன் (குழந்தை) ஆகியோர் சிறைப்பட்டனர்.
காவல்துறை அதிகாரி (தாய்மார்களைப் பார்த்து): நீங்கள் இவ்விடத்தைவிட்டு அகலுங்கள்!
தாய்மார்கள்: முடியாது; இந்தி ஒழியும் வரை இவ்விடத்தை விட்டுப் போக மாட்டோம்!
காவல்துறை அதிகாரி: அப்படியானால் சிறைச் சாலைதான்.
தாய்மார்கள்: அழைக்கட்டுமே! அதற்குத்தானே காத்துக் கிடக்கிறோம்.
கைது செய்யப்பட்டு சிறைக் கோட்டம் சென்றனர். ஆறு வாரம் கடுங்காவல் தண்டனை.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்குத் தோன்றாத் துணையாக இருந்தவர். சென்னை மாணவர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒன்பது ஆண்டுகள் தாங்கிப் பிடித்தவர்;
சென்னை தங்கசாலையை ‘தருமாம்பாள் சாலை’ என்று மாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்.