மதச்சடங்கால் மூலதனத்தை இழந்த பரிதாபம்!

ஒரு ரூபாய் கற்பூரம் எட்டு  மீனவர்களின் வாழ்க்கையை எரித்துவிட்ட கொடுமை!!

 சென்னை, டிச. 23  ஒரு ரூபாய் கற்பூரம் 8 மீனவர்களின் வாழ்க்கையை எரித்துவிட்டது.

அதன் விவரம் வருமாறு:

காசிமேட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தனது சக மீனவர்களுடன் சேர்ந்து நவீன ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகு ஒன்றை வாங்கி இருந்தார். சுமார் 90 லட்சம் மதிப்புள்ள இந்த படகில் நீண்ட நாள்கள் கடலில் தங்கி இருக்க தேவையான பொருட்கள்,  அதிக அளவு டீசல் சேமித்து வைக்கும் வசதி, சூரிய மின்சார பேட்டரி, பெரியவகை மீன்களை படகில் ஏற்றுவதற்கு கிரேன் மற்றும் பதப்படுத்தி வைக்கும் சிறப்பு பெட்டிகள் என பல வசதிகள் கொண்ட இந்த விசைப்படகு முதல் முறையாக கடலில் இறங்குவதற்கு முன்பு பூஜை செய்ய திருவொற்றியூரைச் சேர்ந்த பார்ப்பனர் ஒருவரை அழைத்திருந்தனர். அவரும் பூஜை செய்துவிட்டு தேங்காயில் கற்பூரம் ஒன்றை ஏற்றி மீனவர் ஒருவரிடம் கொடுத்து படகில் ஏறி சுற்றி வரக் கூறினார்.  அவரும் எரியும் கற்பூரத்துடன் கூடிய தேங்காயுடன் படகில் ஏறி சுற்றிக்கொண்டு இருந்த போது, படகு லேசாக ஆடியது. இதனால் ஏற்பட்ட தடுமாற்றத்தில் தேங்காயில் எரிந்துகொண்டு இருந்த கற்பூரம் உருண்டு நேராக எஞ்சின் இருந்த பகுதியில் விழுந்துவிட்டது, அங்கு  பல லிட்டர் டீசல் கேன்கள் வைக்கப்பட்டிருந்ததால் உடனடியாக தீபிடித்துக் கொண்டது. டீசல் கேன்களில் தீ பிடித்ததால் எளிதில் அணைக்க முடியாமல் போகவே படகில் இருந்த இரண்டு பேர் கடலில் குதித்தனர்.  பூஜை செய்துகொண்டு இருந்த பார்ப்பனர் பூஜை பொருள்களோடு அங்கிருந்து ஓடிவிட, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள் முழு படகும் எரிந்து சாம்பலானது. பைபர் பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டையால் செய்த படகு என்பதால், தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தும் எதுவுமே மிஞ்சவில்லை.

 ஒரு ரூபாய் கற்பூரத்தால் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள படகை இழந்ததோடு மட்டுமல்லாமல்  பெரும் தொகை கடனாளியாகவும் தற்போது மாறிவிட்டனர்.

 பொதுவாக கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மீனவர்கள் அதிகம் பேர் கிறிஸ்தவ மதத்தினராக உள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் இடையே பிளவை ஏற்படுத்த   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துமதக் கலாச்சாரம் என்ற பெயரில் மீனவர்கள் மீது வலுக்காட்டயமாக திணித்த புதிய படகுகளுக்கு பூஜை போடுவது, மீன்பிடிக்கச் செல்லும் போது யாகம் செய்வது, கடல்தேவி வழிபாடு போன்ற சமீபத்திய சடங்குகளால் தற்போது 90  லட்ச ரூபாய் மதிப்புள்ள படகு எரிந்து சாம்பலானது.