பக்கங்கள்

வெள்ளி, 22 மார்ச், 2019

துக்ளக்’கே கூறு! அவமானமா? பெருமையா?

மின்சாரம்


கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால், இன்று பாரத நாடு எப்படி இருக்கும்?

பதில்: ஆர்.எஸ்.எஸ். இல்லை என்றால், நம் நாட்டில் ஹிந்துக்கள் தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளவே அவமானபட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த விதத்தில் ஆர்.எஸ்.எஸ். சாதனை மகத்தானது.

- ‘துக்ளக்’ 6-3-2019

பக்கம் 15

ஏன் இதையும் சேர்த்துக் கொள்ளலாமே- காந்தியார் என்ற மனிதர் உயிரோடு இருந்திருப்பார்.

காமராசரைப் பட்டப்பகலில் கொலை செய்யும் முயற்சியும் நடந்திருக்காது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்காது. குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்படாமல் தப்பித்து இருப்பார்கள்.

மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது - மாலேகான் குண்டுவெடிப்பும் நடந்திருக்காது, அஜ்மீர் தர்கா மீதான குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மீது குண்டுவெடிப்பு, நாசிக் -அய்தராபாத் குண்டு வெடிப்புகள் நடந்திருக்காது என்று எழுத வேண்டியதுதானே - ஏன் நிறுத்தி விட்டீர் - இந்த வகையில் எழுத இன்னும் ஏராளம் உண்டே!

ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளவே அவமானப்பட்டு கொண்டிருப்பார்கள் என்று கண்ணீர் ஆற்றைக் கரை புரள ஓட வைக்கும் ‘துக்ளக்’கையும், குருமூர்த்தி அய்யர் வாளையும் பார்த்துக் கேட்கிறோம்!

ஹிந்துக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அவமானப் படுவதாகக் கூறும் ‘துக்ளக்’கே, குருமூர்த்தியே.

ஹிந்து என்று கூறிக் கொள்ளவதாலேயே ஏற்படும் அவமானத்தைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்ததுண்டா? இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களாகிய பார்ப்பனர் அல்லாதார் இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு மிஞ்சுவது என்ன?

பெருமைக்குரிய மனிதன் என்ற மகுடமா?  அல்லது சிறுமைக்குரிய சீழ்பிடித்த நிலையா?

ஹிந்து என்று நீட்டி முழங்குகிறீர்களே! அந்த ஹிந்து என்பதற்கு என்ன பொருள்?

இந்து என்றால் யார்?

பாரசீகம் என்ன சொல்லுகிறது?

In Persian, says our author, the word means slave, and according to Islam, all those who did not embrace Islam were termed as slaves. (Dayanand Saraswati Aur Unka Kaam, edited by Lala Lajpat Rai, published in Lahore, 1898, in the Introduction)

பாரசீகத்திலிருந்து வந்த அரபு, மற்றும் பார்ஸி மக்கள் தங்கள் பகுதியான மத்திய ஆசியாவில் இருந்து இந்தியத் தீபகற்பத்திற்குள் நுழைந்த மக்களை (ஆரியர்களை) அடிமைகள், நாடோடிகள் என்று குறிக்கும் சொல்லாக ஹிந்த் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். அவர் களது மதநூல்களிலும் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தியுள் ளனர். (லாலா லஜ்பத் ராய் எழுதிய 'தயானந்த சரஸ்வதி - அவரது பணிகள்' என்ற நூலின் முன்னுரையில் எழுதியது).

Furthermore, a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964, gives the meaning of the word Hindu as “chore [thief], dakoo [dacoit], raahzan [waylayer), and ghulam [slave].” In another dictionary.

இதன் பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழைமையான பார்சி டிக்ஸ்னரி நீண்ட இடை வெளிக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்சி பதிப்பகம் ஒன்றில் மறுபதிப்பானது.

அதில் இந்து என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமானது திருடன் (வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் பிடுங்கி ஓடுபவன்),

கொள்ளைக்காரன் (இருவர் - அதற்கு மேல் சேர்ந்து கொள்ளையடிப்பவர்கள்), பிறருக்கு எப்போதும் தொல்லை கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும்போது பிடிபட்டு தண்டனைக் குள்ளாக்கப்பட்டு வாழ் நாள் முழுவதும் அடிமைச் சேவகம் புரிபவர்கள்) என்ற பல்வேறு அளவுகளில் பொருள் கொடுத் துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளதே, இதற்கு என்ன பதில்?

“என்சைக்ளோப் பீடியா” என்ன சொல்லுகிறது?

“இந்து மதம் என்பது ஒரு சமுக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது. இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் அல்லது வேறு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக் கின்றன.


இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால், இந்த வரையறை வேலை மேலும் திருப்தி யற்றதாயிருக்கின்றது.”

(என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 889)

ஆர்.எஸ்.எஸ். இல்லை என்றால், நம் நாட்டில் ஹிந்துக்கள் தங்களை ஹிந்து என்று கூறிக் கொள்ளவே அவமானப்பட்டுக் கொண்டிருப்பார்கள்என்று மூக்கால் அழும் குருமூர்த்தியார் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்?

ஹிந்து என்று சொல்லுவதுதான் அவ மானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு வகையில் ஹிந்து என்று பார்ப்பனர் அல்லாதார் தன்னை ஏற்றுக் கொண்டால் அவன் அவமானப்படு வதைத் தவிர வேறு வழியில்லையே.

அவன் பிறவியிலேயே சூத்திரனாகி விடுகிறான் - விளங்கும்படிச் சொல்ல வேண்டுமானால் வேசி மகன் ஆகி விடுகிறான்.

ஆதாரம் வேண்டுமானால் ஹிந்து மதத்தின் முக்கிய ஸ்மிருதியான மனு தர்மத்தைப் புரட்டினாலே புரட்டர்களின் உண்மையை அறிந்து கொள்ளலாமே!

மனுதர்மம் எட்டாம் அத்தியாயம் 415ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?

சூத்திரன் ஏழுவகைப்படுவான். 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2. யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்கிறவன். 4. விபசாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப் பட்டவன், 7. தலைமுறை தலைமுறையாக ஊழியன் செய்கிறவன் என்று சொல்லுகிறது மனுதர்மம்; இந்த இழிவை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இதனைப் பெருமையாகக் கருத வேண்டும் என்பதுதான் ‘துக்ளக்’கின் எதிர்ப்பார்ப்பா?

உமது ஹிந்துமதத்தை ஏற்றுக் கொண்டால் பெண்களின் கெதி (பார்ப்பனப் பெண்கள் உட்பட) என்னாவது?

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய் துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17).

தன் தாயையே இப்படி அசிங்கப்படுத்தும் ஹிந்து மதம் பற்றி குருமூர்த்திகளுக்குக் கவலை இல்லை என்றால் இவர்கள் எதற்காக அவமானப்பட போகிறார்கள்?

யார் இளித்தவாயர்கள்?


கேள்வி: ஒரு ஹிந்துவாய் இருந்தும் ஸ்டாலின் பிற மதங்களை விட்டு விட்டு ஹிந்து மதச் சடங்குகளையும், செயல்களையும் கிண்டலடிப்பது ஏன்?

பதில்: ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள், வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பதால்தான் (‘துக்ளக்’ 6.3.2019, பக்கம் 16)

இதன் மூலம் மறைமுகமாக குருமூர்த்தி வன்முறையைத் தூண்டுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் - வேசி மக்கள் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக இழிவுபடுத்தி வைத்திருந்த கூட்டத்தை பிராமணன், பெரிய ஜாதி என்று ஏற்றுக் கொண்டு இருந்தானே - இதைவிட இளிச்சவாய்த்தனம் வேறு என்ன  தான் இருக்க முடியும்?

நியாயமாக இவர்கள்தானே வன்முறையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். எவ்வளவு இளிச்சவாயர்கள் இந்தப் பார்ப்பனர் அல்லதார் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தால் இந்த 2019லும் இதனை எதிர்த்துப் பேசுவோர் மீது வன்முறையைத் தூண்டும் படி எழுதுவார்?

பிஜேபி ஆட்சி மத்தியில் வந்தாலும் வந்தது, கிராப்புக்குள் ஒளிய வைத்திருந்த சிண்டுகளை வெளியே எடுத்து விட்டு வீண் வம்புக்கு வருகிறார்கள் - இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த ஆட்டமெல்லாம் பார்ப்போம்!

-  விடுதலை ஞாயிறு மலர், 2.3.19

வியாழன், 21 மார்ச், 2019

ஒழுக்கம்கெட்டது பெரியாராலா - 'பெரியவாளா'லா?

'துக்ளக்' ஏட்டை எப்படியோ அபகரித்துக் கொண்ட திருவாளர் குருமூர்த்தி அய்யருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் ஃபோபியா (PHOBIA) பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது.

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் 'பேய்' என்பார்களே - அந்த நிலைதான் அவருக்கு. பொள்ளாச்சி நகரத்தில் நடைபெற்ற பெண்கள் மீதான வன்கொடுமைமீது நாடே கோபத்தில் எரிமலையாய்த் தகித்துக் கொண்டிருக்கிறது.

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந் தாலும் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற குரல் உரத்த குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அந்தக் கயவர்களைக் காப்பாற்றுவதற்காக, திசை திருப்பும் திரிநூல் வேலையில் இந்தக் கோயங்கா வீட்டு மாஜிக் கணக்கப்பிள்ளை இறங்கி இருக்கிறார்.

பொள்ளாச்சி கலாச்சாரக் சீரழிவிற்கு விதைப் போட்டது ஈ.வெ.ரா. காலத்தில்தான் என்கிறார்.

காரணம் அவர்தான் பெண்களுக்குக் கற்புத் தேவை யில்லை என்று சொன்னார். அவருக்குப் பின் அவர் காட்டிய வழியில் பண்பாட்டைக் கெடுப்பதையே அடிப்படையாகக் கொண்டு கட்சி நடத்தி வருபவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி-  அவ்வப்போது, 'பெண்களுக்குத் தாலி எதற்கு?' என்று கூறி பெண்கள் தாலியைக் கழற்றி வீசுவதன் மூலம் கணவனிடமிருந்து பெண்களுக்கு விடுதலை கிடைத்து விடுகிறது என்பது அவர் கண்டுபிடிப்பு (துக்ளக், 27.3.2019 பக். 6) என்று எழுதித் தள்ளி இருக்கிறார்.

இவர் சொல்லுவதைப் பார்த்தால் காஞ்சிபுரம் மச்சேஸ் வரர் கோயில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன் கோயில் கர்ப்பக் கிரகத்தைப் பள்ளியறையாக மாற்றி, கர்ப்பக் கிரகம் என்ற பெயருக்குப் பொருத்தமாக கர்ப்பத்தை உண்டாக்கும் லீலையில் ஈடுபட்டானே - அவன், பெரியாரின் பேச்சையும் வீரமணியின் எழுத்தையும் அறிந்தபின்தான் நடந்து கொண்டான் என்று சொன்னாலும் சொல்லுவார்.

கற்பைப் பற்றி பெரியார் சொல்வது என்ன?

கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது - கூடவே கூடாது. வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற் காகவும் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்ற கற்பு மடத்தனம். அடிமைப்படுத்துவதில் - ஆசை மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும், நாணயமும், பொறுப்பும் இல்வே இல்லை.

(நூல்: வாழ்க்கைத் துணை நலம்' 13ஆம் பதிப்பு, பக்கம் 35)

கற்பைப்பற்றி பெரியார் சொல்லும் கருத்து இதுதான். பெண்களுக்குதான் கற்பு - ஆணுக்கு அல்ல என்று சொல்லுவது என்ன யோக்கியதை?  ஆண் சம்பந்தமின்றி பெண்ணின் கற்பு கெடுகிறதா?

உண்மை இவ்வாறு இருக்க குருமூர்த்தி தந்தை பெரியார் கருத்தைத் திரித்துக் கூறுவது அசல் பித்தலாட்டமே!

உண்மையைச் சொல்லப்போனால் அந்தக் காஞ்சிபுரத்துக் காரன் காஞ்சி மடாதிபதி - அவர்களின் ஜெகத் குரு ஜெயேந்திர சரஸ்வதியின் அருள்வாக்குப் பெற்று தான் அப்படி நடந்து கொண்டிருப்பான் என்பதைவிட அவரைப் பார்த்துத்தான் - அவர் வழியில் இந்த லீலையில் ஈடுபட்டிருப்பான்.

பொள்ளாச்சியில் தங்கள் காம வெறிக்குப் பலியாகிய அந்தப் பெண்களின் நிர்வாணத்தைப் படம் எடுத்து எடுத்து, அதனைக் காட்டிக் காட்டி மீண்டும் மீண்டும் அந்தப் பெண்களை வேட்டையாடினார்களே கயவர்கள், அவர்கள் கூட இந்த காஞ்சிக் கயவன் தேவநாதனிடமிருந்து தான் கற்றிருக்க வேண்டும்.

காஞ்சிபுரம்தான் அப்படி என்றால் ஜீயர் குடியிருக்கிறாரே சிறீவில்லிபுத்தூரில் - அந்த ஆண்டாள் குடி கொண்ட அந்த ஊரில் பத்ரிநாத் என்ற பார்ப்பான் கோயில் கருவறைக்குள் காமரசம் குடித்தானே - அவன் யார் வழியில் நின்று அந்த லீலையை நடத்தினான்?

குஜராத் மாநிலம் தபோய் - வட்தால் சுவாமி நாரா யணன் கோயில் அர்ச்சகப் பார்ப்பனன் சந்த், தேங்வல்லம் ஆகிய பார்ப்பனர்கள் அக்கோயிலுக்கு வரும் பக்தை களைக் கோயிலுக்குள்ளிருக்கும் அர்ச்சகப் பார்ப்பனர் களின் குடியிருப்பில் வைத்துச் சூறையாடினார்களே - அதனை சந்தேஷ் எனும் இணையதளமும் வெளியிட்டு சிரிப்பாய்ச் சிரித்ததே அந்த அர்ச்சகப் பார்ப்பனக் கயவர்கள் கற்றுக் கொண்ட இடம் 'காம'கோடிகளிடத்திலா?

சோவுக்கு'ப் பதில் சொல்வாரா குருமூர்த்தி?

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியா வதற்குப் பொய்யை அருள் வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மை யாகவே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

- துக்ளக்' 26.10.2016, பக்கம் 23

ஆன்மிகத்தின் யோக்கியதை இந்தத் தரத்தில் இருக்கிறது -குருமூர்த்திகளின் வழிகாட்டி சோ' ராமசாமி இதை துக்ளக்கில்' எழுதியிருக்கிறாரே, குருமூர்த்திகளே! உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய்ப் புதைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

அட, அது கிடக்கட்டும் இவர்களின் வாத்தியாரான 'லோகக் குரு' காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காஞ்சி சங்கரமடத்தை பள்ளியறையாக்கி 'பலான' வேலையில் ஈடுபட்டாரே அவரும் பெரியார், வீரமணி ஆகியோரின் பேச்சுகளைக் கேட்டு கெட்டுப் போனவர் தானா?

பிரபல எழுத்தாளரான அக்கிரகாரத்துப் பெண்மணி அனுராதா ரமணன் சொன்னது நினைவிருக்கிறதா - குருமூர்த்தி வாளே!

காஞ்சிமடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதே, தன் கையைப் பிடித்து இழுத்தார் சங்கராச்சாரியார் என்று கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தாரே - அதற்குப் பிறகாவது அந்தக் காஞ்சி சங்கரனை மடத்திலிருந்து 'வெளியே போ' என்று எந்த அக்கிரகாரராத்திலிருந்து ஒரு குரலாவது கொடுத்த துண்டா?

இதில் என்ன வெட்கக்கேடு என்றால், அய்யயோ... ஒழுக்கம் கெட்டு போகிறதே என்று மூக்கால் அழும் இந்தக் குருமூர்த்தி அய்யர்தான் இந்த விடயத்தில் சங்கராச்சாரி யாருக்கு வக்காலத்து வாங்கி பாதிக்கப்பட்ட பெண்ணான அனுராதா ரமணனைப் பற்றிப் பொய்யும் புனை சுருட்டுமாக அபாண்டச் சேற்றை வாரி இறைத்து இதே 'துக்ளக்'கில் எழுதவில்லையா?

குருமூர்த்தியாருக்கு பதிலடி கொடுத்து அனுராதா ரமணன் சீறி எழவில்லையா? அதற்கு ஒரு வரி பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்த இந்த வெட்கம் கெட்டது களுக்குப் பேனா ஒரு கேடா?

பொள்ளாச்சிக்கு முந்தியது காஞ்சி மடத்தின் பொல்லா சம்பவமாயிற்றே!

பட்டப்பகலில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப் பட்டாரே, அந்த சங்கரராமன் உயிரோடு இருந்தபோது சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் எழுதி "ஜெயேந்திரரின்  ஆன்மீகமும் அரசியலும்" - எம்.ஆர்.ரகுநாதன் என்று ஒரு நூல் வெளிவந்துள்ளதே - அதில் காஞ்சி ஜெகத் குரு ஜெயேந்திர சரஸ்வதியின் கும் மாளமும், லீலைகளும் வண்டி வண்டியாகக் கப்பலேற்றப் பட்டுள்ளதே - அந்த ஜெயேந்திரர் கற்றுக் கொண்டது எல்லாம் தாருகாவனத்து ரிஷிப் பெண்களின் கற்பைச் சூறையாடிய சிவனிடத்திலிருந்தா? அல்லது பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாண்ட பிர்மாவிடமிருந்தா?

அல்லது தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பக்தனுக்கு மோட்சம் அளித்தானே சிவன் - அந்தத் திருவிளையாடல் புராணத்து மாபாதகம் தீர்ந்த படலத்தின் பாடத்தைப் பிடித்து மோட்சம் போக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டாரா காஞ்சி சங்கராச்சாரியார்?

அய்வருக்கும் தேவியாக இருந்ததோடு ஆறாவது,  கர்ணனையும் கண்ணடித்த ஒரு பெண்தானே ஆரியக் கண்ணோட்டத்தில் அழியாத பத்தினி?

உடம்பில் நெய்யைத் தேய்த்துக் கொண்டு குழந்தை பெறுவதற்காக யாருடனும் உடலுறவு கொள்ளலாம் என்பது தானே இந்து சாஸ்திரம்!

சிவன் - பார்வதி கல்யாணத்தில் புரோகித வேலை பார்த்த பிர்மா, பார்வதியின் சேலை விலகிய நிலையில் நிலை தடுமாறி என்ன செய்தான்? எழுதவே கை கூசுகிறதே!

உண்மையைச் சொல்லப்போனால்  கேடு கெட்டு இத்தகைய கேவலத்தில் ஈடுபடுவதற்கே காரணம் இந்த இந்து மதம் தான். அதன் ஒவ்வொரு செதிலுமே ஆபாசத்தின் முடைநாற்ற மெடுக்கும் சாக்கடைக் குட்டைதானே - மறுக்க முடியுமா?

இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு, இந்துக் கடவுள்களையும்  ஏற்றுக் கொண்டவன் ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டிய அவசியமில்லையே! - 12 வருடங்கள் பாவம் செய்து விட்டு, 12 வருடத்துக்கு ஒரு முறை கும்பகோணத்தில் வரும் மகா மகத்தில் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால், பாவங்கள் அந்தச் க்ஷணமே ஓட்டம் பிடித்து விடும் என்று சொல்லுகிற மதத்தில் ஒழுக்கத்தோடு வாழ்பவன் தானே பைத்தியக் காரனாக இருக்க முடியும்!

தந்தை பெரியார் யார் தெரியுமா?

"ஒழுக்கம் பொதுச் சொத்து - பக்தி தனிச் சொத்து" என்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் (24.11.1964) பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சொன்னது மட்டுமல்ல - வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்! புரட்சிக்கவிஞர் மொழியில் சொல்ல வேண்டுமானால் "மிக்க பண்பின் குடியிருப்பு" - அவர்தாம் பெரியார்!

ராஜாஜிக்கே பொறுக்க முடியவில்லையே!

"வியாசர் விருந்து!" என்ற தலைப்பிலும், "சக்கரவர்த்தித் திருமகன்" என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் கல்கி'யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.

"சதாசிவம்! எனக்கு பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

(கல்கி' 4.10.2009, பக்கம் 72)

இதன் பொருள் என்ன?

பாகவதம் என்ற பகவான் நூலே ஒழுக்கக் கேடானது - ஆபாசமானது - கடவுள் லீலைகள் எல்லை கடந்தது என்றால், இவற்றை நம்பும், மதிக்கும், துதிக்கும் மக்களின் ஒழுக்கத்தின் நிலை என்னாவது?

நினைவிருக்கட்டும், சொல்லுபவர் ராஜாஜி!

ஆனால் இவர்களின் சீனியர் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" ('கல்கி', 8.4.1958).

ஒழுக்கம் முக்கியம் என்கிற பெரியார் எங்கே? ஒழுக்கம் முக்கியமல்ல. கடவுள்தான் முக்கியம் என்கிற 'பெரிய வாள்' எங்கே?

அப்படியாக இவர்கள் சொல்லும் அந்தக் கடவுளே ஒழுக்கம் உடையதாக இல்லையே.

பெற்ற மகளையே பெண்டாண்டவன் இவர்தானே படைப்புக் கடவுள்.

சலந்திரன் மனைவி விருந்தை மீது மோகம் கொண்டு சலந்திரனை சூதால் கொன்று, அவனைப் போல வேடம் கொண்டு விருந்தையைச் சூறையாடிய மகா விஷ்ணு தானே இந்து மதத்தின் காத்தல் கடவுள்! தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் கற்பை அழித்த சிவன்தானே இவர்களின் அழிக்கும் கடவுள்!

ஹிந்து மதத்தில் மும்மூர்த்தி கடவுள்களும் இந்த யோக்கிய தையில் இருக்க, இந்தக் கடவுள்கள் மீது பக்தி இருப்பது தான் முக்கியம் என்று பார்ப்பனர்களின் லோகக்குரு கூறுகிறார் என்றால் அப்படிக் கூறுகிறவர்களின் ஒழுக்கத்தைத்தான் எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

இதுவரை துக்ளக் எடுத்துக் கொடுத்து 'விடுதலை' திருப்பி யடித்த ஒன்றுக்காவது 'துக்ளக்' பதில் அளித்ததுண்டா? திராணி இருந்தால் இந்தக் கட்டுரைக்குப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!

ஏனென்றால் இன்னும் அவிழ்த்துக் கொட்ட எம்மிடம் டன் கணக்கில் ஆதாரங்கள் உண்டே!

-  விடுதலை நாளேடு, 20.3.19

திங்கள், 18 மார்ச், 2019

காரல் மார்க்ஸ்ஆதிகாலத்துக்குச் சென்று ஆராய்ந்தால், நம்ப முடியாத கட்டுக்கதைகள்மூலம் இந்தி யாவில் தொல்லைகளைத் துவக்கி வைத்தவர்கள் பார்ப் பனர்கள்தான். உலகில் கிருஸ்தவ சகாப்தம் உதயமாவதற்கு முன்பே, இந்தக் காரியங்களைச் செய்தவர்கள் அவர்கள். கிரா மங்களில் உண்டாக்கப்பட்ட சிறுசிறு வகுப்புகள், ஜாதி பிரி வினைகளாலும், உயர்வு - தாழ்வுப் பிரிவினைகளாலும் அடிமைப்படுத்தப்பட்டன. இந்தப் பேதங்கள் மனிதனை வெளியிலிருக்கும் நிலைமை களுக்கு அடிமையாக்கின. சூழ்நிலைகளை ஆட்டிப் படைக்கவேண்டியவன் அவைகளுக்கு அடிபணிய நேர்ந்தது. இதனால் தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டிய சமுதாயம் மாறாத நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இத னால் மிருகங்களை வணங்க வேண்டியவனானான். இயற் கையைக் கட்டி ஆளவேண்டிய மனிதன், குரங்கை அனுமான் என்றும், பசுவை சப்பலா என்றும் நம்பிக்கொண்டு அடிபணிந்து கும்பிடலானான்.

- காரல் மார்க்ஸ்

('British Rule in India' என்ற நூலில்)

‘‘Compare with the preceding the utterance of Manava Dharma Sastra Chapter X, S.62'' Desertion of life without reward, for the save of preserving a priest or a cow may cause the beautitude of those base - born tribes.''

ஆதாரம்: (Karlmarx - Capital Vol.II Page 241)

மனுதர்ம சாத்திரம் பத்தா வது அத்தியாயம் 62 ஆம் சுலோகத்தை எடுத்துக்காட்டி, காரல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: பார்ப்பான், பசு இவர்களைப் புரக்கும் பொருட்டு கூலி பெறாமலேயே, உயிரைத் தியாகம் செய்வதே, சூத்திரர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் மார்க்கமாகும்.''

இந்த நாட்டில் சமனிலை, சமத்துவ ஒப்புரவு சமுதாயம் உருவாவதற்குக் கண்டிப்பாக வருண ஜாதி அமைப்புகளும், பார்ப்பனியமும் முற்றிலும் வேர றுக்கப்பட்டு மிச்சசொச்சம் ஏது மில்லாமல் எரித்து, அவற் றின் சாம்பலை பல்லாயிரம் அடி களுக்குக் கீழ்ப் புதைப்பது அவ சியம்.

இன்றைக்குக்கூட இந்துராஜ் ஜியம் அமைப்போம் என்று கூறும் ஒரு சக்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டிருப்பதும், அவற்றின் நடவடிக்கைகள் எல் லாம் பார்ப்பனியத்தைத் தூக்கி நிறுத்துவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்; தந்தை பெரியாரும், மார்க்சும் இந்துத்துவாவின் வேர் எங்கிருக்கிறது என்று சொன்னது இப்பொழுது நடைமுறையில் கண்ணெதிரே ராமராஜ்ஜியம் என்பது சூத்திரன், சம்புகன், இராம அவதாரம் எடுத்துக் கொல் லப்பட்டதையும் கவனத்தில் கொள்க!

- மயிலாடன்

(இன்று மார்க்ஸ் நினைவு நாள் 1883)

- விடுதலை நாளேடு, 14.3.19