பக்கங்கள்

புதன், 21 நவம்பர், 2018

திருவண்ணாமலை தீபம்: பேராசிரியரின் பொருளாதாரப் பார்வை தீபமும் - திகைப்பும்



(1947இல் விடுதலையில் வெளியான (கார்த்திகை 7 விய ஆண்டு) 'தீபமும் திகைப்பும்' என்னும் பேராசிரியரின் திருவண்ணாமலை தீபம் பற்றிய கட்டுரை. தம்முடைய கட்டுரையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட தாழம்பூப் பிரச்சினை புராண வரலாற்றினை எடுத்துக்கூறிச் செயற்கைத் தீபம் ஏன் ஏற்றவேண்டும் என்று வினா எழுப்பி, ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழா வெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் பல மடங்கு ஒளியைத் தரக்கூடிய மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை மக்களுடைய பொருளுக்கு அழிவில்லாமல் செய்யட்டும். உற்சவ காலங்களில் தீவட்டிக்கு பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் இது மட்டும் எப்படித் தவறாகும்? அனல் விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர் விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும்போதும், தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது என்று தீபத் திருநாள் கொண்டாடுபவர்களுக்கு மாற்றுச் சிந்தனை அளிக்கிறார். தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது. தீபத்தைப் போற்ற வேண்டாம் என்று முடிக்கிறார்.)


கார்த்திகை நெருங்கி விட்டது! வீடுகளிலெல்லாம் அகல் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி வைப்பார்கள். இரவு முழுவதுங்கூட விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றிய படி இருப்பர், செல்வர்கள் வீடுகளிலே பணியாட்களும் பிறரும். அந்நாளிலே திருவண்ணாமலையிலே தீபம். மலையுச்சியிலே பெருங்கொப்பரை, அது நிறையக் கற்பூரத்துடன் கலந்த நெய், மேலும் மேலும் நெய்யும் திரியும் கொட்டிய வண்ணம் பக்தர்களின் கூட்டம்! தமிழகத்தில் உள்ள பெருவாரியான கோவில்களிலேயும் அந்தந்தக் கடவுள்களின் பொருள் நிலைக்கேற்ற வண்ணம் கார்த்திகை கொண்டாடப்பட்டே வருகின்றது.

தீபத்திற்காக ஆயிரக்கணக்கான கிலோ மணக்கும் நெய்யும், நூற்றுக்கணக்கான (கேஸ்) பெட்டி கற்பூரமும், கட்டுக்கணக்கிலே திரி நூலும் எரிக்கப்படுகின்றன. வீடுகளிலே ஏற்றப்படும் கோடிக்கணக்கான கை விளக் குகளால் ஆயிரக்கணக்கான குடங்கள் அளவுள்ள எண்ணெய் வீணாக எரிகிறது. தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால், அவர்களது போக்குவரத்துக்காக ரயிலுக்குச் செலவிடும் தொகையும், வெளியூர்களில் தங்குவதால் ஏற்படும் செலவுத் தொகையும் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் பொருள் இழப்பும் ஏராளம்!

நாசப்பட்டியல்


இவ்வளவு பெருங்கூட்டமான மக்கள் ஆண்டிலே ஓரிரண்டு நாட்கள் திருவண்ணாமலையிலே வந்து குவிவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலே கட்டப் பட்டுள்ள சத்திரங்களும், மடங்களும், பாக்கி இருக்கும் முன்னூற்று அறுபத்து மூன்று நாட்களும் பயன்படாமல் வீணாகக் கிடப்பதால் (சில சோம்பேறிகளுக்கு உறை யுள் ஆவதைத் தவிர) அதற்காகக் செலவழிக்கப்பட்ட மூலதனம் பாழாகின்றது. இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் திரளுவதால் இலாபம் அடையும் (கொள்ளையடித்து வாழும்) கோயிற் பூனைகள், செல்வம் மிக்க செட்டியார் இனத்தாரையும், பிற தமிழரையும் தூண்டிவிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வெள்ளியிலே வாகனம், நூதனரதம், அற்புத கல்யாண மண்டபம், ஈஸ்வரனுக்குப் பொன்னிலே கவசம், அம்மனுக்கு வைர ஒட்டியாணம் புதிய கோபுரக் கும்பா பிஷேகம், வேத வியாகர்ண பாடசாலை என்பவைகளை அமைக்கச் செய்வதாலும், அவைகளின் விளம்பரத்தின் மூலம் ஏராளமான மக்களை திரளச்செய்து அந்த பெருங் கூட்டத்தால் பெருங்கொள்ளை கொண்டு கவலையின்றி வாழ்வதற்கு வழிசெய்து கொள்ளுந் தன்மையாலும், ஏற்படும் பொருள் இழப்பு ஏராளம். எவ்வகையானும் தமிழர் கோடிக் கணக்கிலே பொருளைக் கொட்டியழவும் தமிழரின் வளம் கெட்ட ழியவும் காரணமாகின்றது கார்த்திகை தீபம்.

பொருள் பாழாக்கப்படுவதைத் தவிர மக்களுக்கு ஏற்படும் தொல்லையும், தொத்து நோயும், துயரும் பெருந்துன்பமும் அளவற்றவை என்பதோடு, அவர்களுடைய அறிவு அழியுந்தன்மையே திகைப்பை விளைப்பதாம்!

இது பற்றிய புராணக்கதை யாவருக்கும் தெரிந்ததே! இதன்படி மும்மூர்த்திகள் சந்திக்கின்றனர். ஏன்? எங்கே? எப்பொழுது? யாருக்கும் தெரியாது. மும்மூர்த்திகளிலே ஒருவர் சிவன், அவரே முழுமுதற் கடவுள் என சைவ மதத்தினர் கூறுவர்! அவர் ஏன் மற்ற சாதாரணக் கடவுளரைச் சந்திக்க வேண்டும்? நமக்குத் தெரியாது! சந்திப்பது ஒப்புரிமை படைத்தவர்களிடத்திலேயே நிகழ்வது இயற்கை. முழுமுதற் கடவுளின் உயர்வை எடுத்துக்காட்ட வந்த இக்கதையில் சிவனைக்காண மற்றிருவரும் சென்ற போது இவை நிகழ்ந்ததாகவாவது கூறியிருக்கலாம். அவ்வாறும் இல்லை. சந்தித்த இடத்திலேயே யார் பெரியவன் என்ற விவாதம் ஏன் தோன்றவேண்டும்? எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது பிரம்மாவும், விஷ்ணுவும், அப்-பொழுதே யார் பெரியவன் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பியதின் விளைவா? மற்ற புராணங்களின்படி விஷ்ணுவின் மகன் பிரம்மா என்ற கதையிருக்க சந்தித்தபோது திடீரென்று சந்தேகம் பிறப்பானேன், தந்தைக்கும் மகனுக்குமே? யார் பெரியவர், என்ற விவாதம் மூர்த்திகளிடையிலே நடப்பானேன்? முக்காலத்தையும் உணரும் மூர்த்திகள் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதையே உணர வில்லை! சந்தித்தால் சச்சரவு ஏற்படும் என்பதை மட்டும்தான் உணரவில்லையா? அன்றி இவைகளை எதிர்பார்த்தேதான் சந்தித்தார்களா? அப்படியானால் முடிவும் அவர்கள் அறிந்ததேதானா? அதற்கு ஏன் ஒவ்வொரு புதுஉருவிலே தோன்ற வேண்டும்? நாமறியோம் என்பது மட்டுமல்ல; மும்மூர்த்திகளேகூட யாரை, எங்கே, எப்பொழுது சந்திக்கவேண்டும் என்ற நிர்ணயமில்லாமலும், ஏன் சந்திக்கவேண்டும் என்ற சிந்தனை இல்லாமலும், என்ன விளையும் என்பதை அறியாமலுமேதான் இருந்திருக்கவேண்டும்!

இது நிற்க. யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையிலே வாதம் ஏற்பட்டதே தவிர, கதையின்படி யார் பெரியவர் என்ற முடிவு காணப்பட வில்லை. இடையிலே சிவனார் ஜோதியாகி வானளா வினார்! இருவருக்கும் பெரியவருமானார்! அவ்வளவு தான்!

பொய் மூர்த்திகள்


இது கிடக்க. ஜோதியாய் நின்ற பெருமான் அடியையும், முடியையும் காணச் சொன்ன போது எப்படிப் பேசினாரோ? அந்த முகந் தெரிந்தால் பிரம்மா - முடியைக் காண்பதும் கடினமாமோ? அசரீரியாகச் சொன்னதாக வைத்துக் கொள்வோம்! அடிமுடியைக் காண விரும்பிய இருவரும் பன்றியும் அன்னமுமாய் உருவெடுப்பானேன்? பன்றியாக பலமுறை உருவெடுத்த பழக்கத்தால் திருமால்தான் உடனே பன்றி வடிவெடுத்தார்! பிரம்மாவாவது ஏன் உயரப் பறக்கக் கூடிய கருடனாக உருவெடுக்கக் கூடாதோ? தெரியவில்லையென்றோ முடியவில்லை என்றோ கருத முடியுமா? இருந்ததென்றால் இரு மூர்த்திகளும் தங்களின் இயற்கை உருவத்தைவிட இதற்கேற்ற புது வடிவெடுத்துங்கூட காணமுடியாத காரணமென்ன? ஜோதி யென்றால் அடிமுடி இல்லாதது என்றால் - முழுமுதற் கடவுளல்லவா? எனவே அடிமுடி இல்லாத ஜோதியாகி நின்றார் என்றால் - இல்லாத அடியையும் முடியையும் காணும்படி கூறியது பொய்யல்லவா? அடி முடி இருந்ததென்றால்- இருவரும் காணாததால் காண இயலாததால்  மூர்த்திகள், படைப்பவர், காப்பவர் என்று பேசப்படுவது முழுப்பொய்யல்லவா? பின் விஷ்ணுவிற்கு மட்டும் கோயில்களேன்? பிரம்மாவைவிட எக்காரணத் தாலே விஷ்ணு கடவுளென்று கருதப்படமுடியும்?

விஷ்ணுவுக்கோ, பிரம்மாவுக்கோ கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தும் திறமையிருந்தாலும் தாங்களும் ஜோதியாகி - (தீயாகி) ஜோதியிலே கலந்து அய்க்கியமாகி அடியையோ முடியையோ மட்டுமல்ல; அடி முடி இரண்டையுமே கண்டு திரும்பி வெளிவந்திருக்கலாம். அப்படியானால் சிவன் பெருமை நிலைக்காதே என் றெண்ணிய புராணீகர், விஷ்ணுவை பன்றியாக்கி, பிரம்மாவை அன்னமாக்கி, அரன் பெருமையைத் தடுத்தாட் கொண்டார் போலும்!

தாழம்பூ பிரச்சினை


இனி பிரம்மா முடியைத் தேடச்சென்றபோது வந்த தாழம்பூ முடியிலிருந்து வந்ததென்றால், முடியிருந்த தென்றாகிறது! அப்படியானால் பிரம்மாவால் ஏன் அடையமுடியவில்லை? அவரால் அடைய முடியவில்லை யென்றால் தாழம்பூவால் மட்டும் கீழ்நோக்கி அவ்வளவு தூரம் வர முடிந்தது? தாழம்பூ தானாக வரவில்லையென்றால் - அது அசேதனம், சேதனமென்று, தானாக இயங்குவ தென்று இயற்கையின் தன்மைக் கேற்ப இயல்வது. எனவேதான் கீழே விழுந்தது என்றால் அன்னப் பறவையிடம் எப்படி பேசமுடிந்தது? பொய் சாட்சி கூறியதுதான் எப்படி ? அது கூறவில்லை, அன்னப்-பறவை அடையாளமாகக் கொண்டு வந்த தென்றால், தாழம்பூவைத் தண்டிப்பானேன்? தாழம்பூவைச் சிவனார் தண்டித்ததினின்றும் அது தலையிலே இருந்தது என்பதைச் சிவனார் ஒப்புக் கொண்டதாகத் தானே பொருள்? அப்படியானால் ஜோதியின் முடியிலே தாழம்பூவோ தாழைச் செடியோ எப்படியிருக்க முடியும்? எரிந்து சாம்ப லாய்ப் போயிருக்காதா? ஜோதியான போது இறைவன் இவைகளை நீக்கிவிட்டாரா? பிறகு தாழையின் கதி யென்ன? ஜோதியிலே கங்கை, சந்திரன் முதலானோர் தங்கி இருப்பதனால் ஒரு தாழம்பூ ஏன் விழவேண்டும்? இறைவன் தலையிலே சூட்டப்பட்டு விட்டால் பின் என்றும் அழியாது என்ற கூற்று பொய்ப்பதன்றோ? அதுவன்றி இறைவன் முடியினின்று விழும்போது தாழை பொய் சொல்லிற்றென்றால் சிவனின் மகத் துவந்தான் என்ன?

1 1/2 அடி உருவம் ஏன்




இறைவன் ஜோதியாய் நின்றதால்தான் அண்ணா மலையே தேயுஸ்தலம் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொண்டால் பின் ஏன் தீபம் ஏற்றுகின்றனர்? அரனுடைய அடிமுடிகளை அரியும் அயனுமே காணமுடியவில்லை யென்றால், அடி முடி இரண்டையுமே எவரும் காணக் கூடிய வகையிலே தீபம் அமைப்பதன் அர்த்த மென்ன? அல்லது அத்தீபத்தைத் கண்டவுடனேயே, மக்கள் இறைவனின் செந்தழல் மேனியையும் அடிமுடி காண இயலா விண்ணுயர ஓங்கிய உயர்வையும் உணர்கின்றனர் என்றால், தீப விழா நடைபெறும் அதே இடத்தில் அருணாசலேஸ்வரருக்கு ஒன்றரை அடி உயரத்தில் சிலை (விக்ரகம்) எதற்காக? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தீபம் ஒளி விட்டும் சிவனாரின் இலிங்க வடிவமும், மூர்த்தி வடிவமும், ஒரு காலைத் தூக்கியருளும் நடராசரும், பொன்முடி தரித்த சுந்தரேசுவரரும் எதைக் காட்டுகின்றன? அடிமுடியற்ற கடவுளைக் காட்ட தீபம் என்றால் தாளம் தவறாமல் அடி வைத்துச் சதிராடும் சாமிக்கும், இசை கேட்டுருகித் தலை(முடி)யசைக்கும் சாமிக்கும் சிலை எதற்காக? தீபம் கண்ட மக்களுக்கு, தீபத்தின் தத்துவம் பேசும் தொண்டர்கட்கும் விக்ரக வணக்கந்தான் எதற்-காக? அண்ணாமலை தீபத்தைக் கண்டு ஜோதி வடிவைக் கொண்டு. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்ததை மக்கள் உணர்ந்து கொண்டால் தீபந்தான் எதற்கு? இவைகளை மக்கள் உணர்தல் எளிதோ, ஞானிகளன்றோ உணரவல்லார் எனின், தீபத்தின் பெயரால் மக்களின் பொருள் பாழாக்கப்படுவானேன்?

அகல் விளக்கிலெல்லாம், மின்மினியின் ஒளியைக் காண்பதாகக் கூறும் பக்தர்கள் அண்ணா-மலைக்கே ஆண்டு தோறும் செல்வானேன்?

அறிவுடைமையாகுமா ?


அகில உலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த முழுமுதற் கடவுள் ஜோதிவடிவினன் என்பதை உலகோருக்கு உணர்த்தவேண்டுமானால், உலகில் பகல் முழுவதும் விளங்கும் பகலவனையே அதற்கு ஒர் அடையாளமாக்கியிருக்கலாம்! அகல் விளக்குக்கு எண்ணெய்யோ, தீபத்திற்கு நெய்யுந்திரியுமோ வீணாகாது. இவை வீணாவது பற்றிக் கவலையில்லை யென்றே கருதினாலும், அரியும் அயனும் அளவிட முடியாத அரன் என்று எடுத்துக்காட்ட எழுதப்பட்ட இறைவன், அவரவர்கள் பொருள் வலிவுக்கேற்பவும், சேர்ந்த நெய், சூடம், திரி இவைகளுக்கேற்பவும் அளவிடப்படுவது அறிவுடைமையாகுமோ?

அண்ணாமலையே ஜோதிவடிவென்றும், அதற்கு அடையாளமாகவே அதன் மேல் தீபமென்றும் கூறினால், ஜோதி வடிவு ஜோதியை ஏன் இழந்தது என்பதையும், முன்பொரு காலத்தில் ஜோதியாகத்தான் இருந்த தென்றால்,அதுவே நெருப்பாக நின்று மாறிவிட்ட பிறகு எதற்காக செயற்கைத் தீபம் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழாவெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை  மக்களுடைய பொருளுக்கு அழிவில் லாமல் செய்யப்-படும் உற்சவகாலங்களில் தீவட்டிக்குப் பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் அது மட்டும் எப்படித் தவறாகும்? அகல்விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர்விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போது தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது?

ஆனால், தீபமோ வழக்கம் போல் வந்து போகிறது! தமிழர் பொருளோ என்றைக்கும் எரிகிற நெருப்பிலே எண்ணெய்யாகிறது! தமிழர் வாழ்வோ இன்றளவும் அறியாமை இருளிலே அழிவுறுகின்றது! இந்நிலையை உணர்ந்ததாலேயே தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது! தீபத்தைப் போற்ற-வேண்டாம்! திகைப்புற்றே கலங்க வேண்டாம்!

- விடுதலை நாளேடு, 21.11.18

வெள்ளி, 16 நவம்பர், 2018

விஜயபாரதத்தின் விலா எலும்பை முறிக்கும் பதில்கள் கலைஞருக்குப் பாரத ரத்னா கேட்பது ஓவரான ஒன்றா?



* மின்சாரம்

கேள்வி 1 :  விஜயபாரதத்தில் ஈ.வே.ரா.வை "பெரியார்" என்று குறிப்பிடுவதில்லையே ஏன்?

பதில்: அவர் திராவிட இயக்கத்தினருக்குப் பெரியாராக இருக்கலாம். விஜயபாரதத்தைப் பொறுத்தவரையில் அவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தான்.

நமது சாட்டை: அப்படியா! ஜாதியை ஒழிப்ப தற்காகப் பணியாற்றிய தலைவர் & 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் பட்டத்தைத் தூக்கி எறிந்தவர். அப்படிப்பட்ட தலைவரை ஜாதியைச் சேர்த்து வெளியிடுவதுதான் விஜயபாரதத்தின் நிலைப்பாடு என்றால் இது விஜய பாரதத்தின் அறிவு, நாணயமற்ற தன்மையையும், ஜாதி இருந்தால் தான் பார்ப்பன உயர் ஜாதித் தன்மையை நிலை நிறுத்த முடியும் என்ற ஆதிக்கத் திமிரை யும்தான் வெளிப்படுத்துகிறது.

இந்தக் கொள்கையுடைய கட்சி மக்களிடையே சமத்துவத்தை விரும்புமா? இப்படியே தொடர்ந்து இந்தக் கும்பல் எழுதி வரட்டும், பேசியும் வரட்டும். கொஞ்ச, நஞ்சம் இருக்கும் கட்சியும் காலா வதியாகக் கடைக்கால் போடுகிறார்கள் என்று பொருள்.

"விஜயபாரதம்" பெரியார் என்று சொல்லாததால் அவரின் மரியாதை குறைந்து போய் விடாது. மாறாக இப்படி எழுதுபவர்களின் மரியாதைதான் - (அப்படி ஒன்று இருந்தால்) காற்றில் பறந்தே போகும்.

பெண்கள் மாநாடு கூட்டி (1938 நவம்பர் 7) கொடுத்த பட்டம் அது. லோகக் குரு என்று தனக்குத்தானே சூட்டிக் கொள்ளும் பட்டமல்ல.

ஜாதி எல்லாம் நாங்கள் பார்ப்ப தில்லை என்று எந்தக் காவிப் பேர் வழியாவது சொன்னால் அவரின் முகத்தில் இந்த விஜய பாரதத்தைத் தூக்கி எறியுங்கள்.

கேள்வி 2: பிராமணர்கள் தமிழர்களா?

பதில்: தி.க.காரன் அகராதியில் அவர்கள் தமிழர்கள் இல்லை. ஆனால் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வார்கள். அதாவது தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிற பிராமணர் தமிழன் இல்லை. கிறிஸ்தவர், ரம்ஜான், பக்ரீத் கொண் டாடுபவன் தமிழன்... இது எப்படியிருக்கு...!

நமது சாட்டை: தமிழர்களில் பிராமணன் ஏது? தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்பவன் எப்படி தமிழனா வான்? தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்வதன் வழி இந்நாட்டுக்குரிய தமிழர் களை சூத்திரன் &- பஞ்சமன் & பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மகன் என்று சொல்பவன்  எப்படி தமிழனாக இருக்க முடியும்?

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்ச கனாகக் கூடாது, தமிழ் வழிபாட்டு மொழியாகக் கூடாது என்பவன் எப்படி தமிழன் ஆவான்?

தமிழர்களில் மதமற்றவர்கள் உண்டு. பல மதங்களைச் சார்ந்தவர்கள் உண்டு. பல்வேறு மதங்களில் இருப்பதாலேயே அவர்கள் தமிழர்கள் அல்லர் என்று கூற முடியுமா?

ஆனால் தமிழன் தன்னை இந்து என்று மட்டும் சொல்லக் கூடாது; இந்து என்று ஒப்புக் கொண்டால் "விஜயபாரதம்" நம்பும் அந்த வருணதர்மப்படி, ஜாதித் தர்மப்படி தங்களை சூத்திரன் &- வேசி மகன் என்று ஏற்றுக் கொள்ள நேரிடும் &- தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களைப் பஞ்சமர்கள் என்று ஒப்புக் கொள்ளும் இழிவுதானே வந்துசேரும்.

கேள்வி: 3 ஈ.வே.ரா. சிலைமீது செருப்பு வீசும் சம்பவங்கள் தொடர்கிறதே?

பதில்: தவறுதான், கண்டிக்கப்பட வேண்டியதே. ஆனால் இப்போது இதற்காக கூச்சல் போடுகிறவர்கள் பிள்ளையார் படத்திற்கும், ராமர் படத்திற்கும் செருப்பு மாலை போட்டபோது வேடிக்கை பார்த்தார்களே... அது நியாயமா?

நமது சாட்டை: ராமனுக்குச் செருப்பு மாலை பற்றிப் பரப்பப்படும் அக்கப்போரின் பின்னணி என்ன?

சேலத்தில் 1971இல் திராவிடர் கழகத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடும், அதனை யொட்டி ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் ட்ரக்கில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்ட தந்தை பெரியார்மீது செருப்பை வீசியவர்கள் ஜன சங்கத்துக்காரர்கள் அல்லவா? - அதனுடைய எதிர்வினை தான் ராமனுக்கு செருப்பு மாலை.

ஒன்றை மறைத்து இன்னொன்றைப் 'பூதாகரப் படுத்துவது' 'பூதேவர்களான' பார்ப்பனர்களுக்குக் கை வந்த கலையாகும்.

இன்னொன்றும் முக்கியம். தவமிருந்த சம்பூகன் சூத்திரன் என்பதற்காக அவன் தலையை வாளால் வெட்டிக் கொன்றானே; அதனை எப்படி நியாயப் படுத்தும் விஜயபாரதங்கள்? கொலையைவிட செருப்படி ராமனுக்குச் சாதாரணம்தான்.

ஆமாம் -& ஈரோட்டை அடுத்த சதுமுகையில் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டவர்கள் யார்? கருப்புச் சட்டைக்காரர்கள் என்று பழி சுமத்தியவர்கள் யார்? காவல்துறை வகையாகக் கவனித்த நிலையில் அந்தக் காரியத்தைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் என்று அம்பலமாகிடவில்லையா?

கேள்வி: 4 கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது கொடுக்க வேண்டும் என்கிறார்களே?

பதில்: இது ரொம்ப ஓவரா தெரியுமே.

நமது சாட்டை: கலைஞருக்கு பாரத ரத்னா கொடுத்தால் விருதுக்குத்தான் பெருமை. எம்.ஜி.ஆருக்குப் பாரத ரத்னா விருது. ஆனால் அவருக்குத் தலைவராக இருந்த அண்ணாவுக்கு இந்த விருது அளிக்கப்படவில்லை.  பாரத ரத்னா பஜனையில் சுண்டல் கொடுப்பது மாதிரியாகி விட்டதே! கிரிக்கெட் விளையாட்டுக்காரர்   டெண் டுல்கர் வரை பாரத ரத்னா அளிக்கப்பட்டு அந்த விருதின் "கவுரவம்" 'டக்கவுட்' ஆகி விட்டதே!

பச்சை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரும், பனாரசில் இந்துக் கல்லூரி நிறுவனருமான மண்ணுருண்டை மதன் மோகன் மாளவியாவுக்கே பாரத ரத்னா வழங்கியாயிற்று... இந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில்!

-என்ன அந்த "மண்ணுருண்டை" முத்திரை தெரியுமா? ஓர் இந்துவாக இருக்கக் கூடியவன் கடலைத் தாண்டிப் போகக் கூடாதாம். அதனால் இலண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கடலைத் தாண்டிப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்து ஒரு உருண்டை மண்ணையும் எடுத்துச் சென்றார் (தோஷம் கழிக்கத் தானாம்). பார்ப்பனர்கள் நினைத்தால் சாஸ்திரங்களையும் உண்டாக்கு வார்கள்; அவர்களின் வசதிக்கேற்ப தோஷத்தைக் கழிக்க இதுபோன்ற  மலிவான நிவாரணங்களையும் கைவசம் ரெடியாக வைத்திருப்பார்கள். மாளவியா போன்ற மண்ணுருண்டைகளுக்குக் கொடுக்கப் பட்ட பாரத ரத்னா கலைஞருக்குக் கொடுக்கப் படாததே மேல்!

இவர்கள்தான் கலைஞருக்கு - & ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கிறார்களாம்!

-  விடுதலை நாளேடு, 16.11.18

வியாழன், 8 நவம்பர், 2018

பறத்தல் என் உரிமை!



நீங்கள் பேராசிரியையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து ஓய்வுபெற்றவர். பல பேராசிரியர்கள் கல்வியாளர் களாகவும் விருதுகளை வாங்கித் தரும் ஏஜெண்டாகவும் இருக்கிறார்களே?

பேராசிரியப்  பெருமக்களில் பலர் இலக்கியங்களைப் பொழிப்புரை, பதவுரை என்ற அளவில் மட்டுமே பார்க்கின்றனர். இலக்கியங்களின் பின்னணியை, அதன் வரலாற்றை, உட்பொருளை, சமகாலத்துக்கான கருத்துகளைப் பார்ப்பதே இல்லை. அதனால்தான் அவர்களால் அந்த நிலையில் இருந்து எழுந்து படைப்பாளியாக முடியவில்லை. பயிற்றுவிக்கும்போதே ஆசிரியர் என்ற உணர்வே இன்றி இலக்கிய மனிதராகவே  ஒன்றி நின்று பயிற்றுவிப்பதுதான் எனது பழக்கம். இலக்கியம் எழுந்த காலத்துக்குள் புகுந்து அக்கால மனிதராகவே மாறி மாணவியரை வகுப்பறை என்ற உணர்வின்றி அழைத்துச் சென்றுவிடுவேன்.

உங்கள் எழுத்தில் தொடர்ந்து  பெரியாரை வலியுறுத்து வதற்கான காரணம்?



பெரியார், பெண் விடுதலைக்கான வரையறையைச் சரியான கோணத்தில் சிந்தித்துத் துணிச்சலுடன் கூறி யவர். சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கச் சரியான தீர்வுகளை வழங்கியவர். ஆனால், இத்தீர்வுகளுக்கான அவருடைய அணுகுமுறைகளையே இன்றும் பின்பற்று கிறோமே தவிர, இலக்கை எட்ட அடுத்த கட்டத்துக்கு நகராமலும் இருக்கிறோம் என்பது என் கருத்து. இதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவரைப் பேசாமல் எப்படி இருக்க முடியும்?

திருமணம் என்ற நிறுவன அமைப்பை உடைத்து வெளியேறுவதுதான் குடும்பம் என்னும் கட்ட மைப்பைக் குலைப்பதுதான் பெண்ணுரிமை என்று சிலர் பேசுவது பற்றி?

குடும்பம் என்ற கட்டமைப்பை உடைக்கத் தேவையில்லை.  இது தவறான பெண்ணியம். குடும்பத்துக்குள் ஆண் - பெண் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். நீண்ட கால நோய்க்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்வதைப் போன்றது இது. வீட்டு வேலைகள்,  குழந்தை வளர்ப்பு போன்றவற்றைச் சமமாகப் பகிர்ந்து கொள்வதுடன், பெண் என்பவள் குடும்பத்திலும் ஒரு தனி அலகு (ஹிழிமிஜி) என்று கருதினாலே போதும். பெண்ணின் இருப்பை (சுயம்) ஆண்கள்  ஆதிக்க உணர்வின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நான் உறுதியான குரலில் சொல்கிறேன், சமநிலையே பெண் விடுதலை!

சபரி மலையில்  பெண்களுக்கு அனுமதி என்ற நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு பெண்ணாக  இந்தத் தீர்ப்பை முழுமையாக, மனதார வரவேற்கிறேன். இன்னும் சொல்லப்போனால்  ஒரு கோயிலுக்குள் போவதற்கு நீதிமன்ற அனுமதி தேவையே இல்லை. பெண்களின் பிறப்புரிமை இது.

இன்றைய பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதெல்லாம் அந்தப் பெண்களின் உடை அதற்கு  ஒரு காரணம் என்று சொல்லும் ஆண்களின் பிலாக்கணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உடை என்பது அவரவர் விருப்பம். பெண்களைப் பாலியல் பொருளாகவே பார்ப்பதால் உடைகளில் அவர்கள்  பெண்களைப் பார்க்கிறார்கள். உடம்பு முழுக்கப் போர்த்திக்கொண்டு இருக்கும் பெண் களும் தானே இதுபோன்ற நிலைக்கு ஆளாகின்றனர்?

உங்கள்  பல கருத்துகளில் தமிழ்த் தேசியம் என்பது மய்ய இழையாக இருக்கிறதே?

தமிழ்த் தேசியம் என்பது கூட்டாட்சியை வலிமைப் படுத்தும் ஒன்றே. உரிமைகள் இல்லாத வாழ்வு வளமான வாழ்வில்லை. மொழி உரிமையும் இன உரிமையும் தமிழ்த் தேசியத்தில்தான் உள்ளதாக நான் கருதுவதால் தான் அதன் தேவையை  வலியுறுத்துகிறேன்.

இதுவரை நீங்கள் எழுதியிருக்கும் நூல்கள் பற்றி?

சமீபத்தில் வெளியிட்ட, புறநானூறு தமிழரின் பேரிலக்கியம், காதல் வள்ளுவன், என் விளக்கில் உன் இருள் ஆகிய மூன்று நூல்களையும் சேர்த்து இதுவரையில் 12 நூல்களை எழுதியுள்ளேன். ராஜம் கிருஷ்ணனின் புதினங்களில் சமுதாய மாற்றம் என்ற என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுதான் முதல் புத்தகம். இந்த நூல்களில் கோவை ஞானியின் கவிதை இயல் கொள்கைகள், எஸ்.பொன்னுதுரையின் படைப் பும் படைப்பாளுமையும், நானும் என் தமிழும் ஆகிய நூல்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

செவித்திறனையும் பேச்சுத் திறனையும் இழந்த பிறகு இவ்வுலகை எப்படி உணர்கிறீர்கள்?

புறத்தே அமைதி. அகத்தில் இரைச்சல். பகிர்தல், சொல்லிடல் இன்றி வெறுமையாகவும் வறுமை யாகவும்தான் உள்ளது. ஆனால், என் மொழி என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது.

திடீரென்று உங்களுக்குச் செவித்திறன் வந்தால் என்ன கேட்க விரும்புவீர்கள்?

தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளை... கூடவே  எனக்குப் பிடித்த  ஏ.எம்.ராஜா - ஜிக்கியின் பாடல்களை!

நீங்கள் எழுதியவற்றில் உங்களுக்குப் பிடித்த வரிகள்? வானம் பொது... பறப்பது என் உரிமை! - மானா பாஸ்கரன்

நன்றி: இந்து தமிழ் திசை

பெண் இன்று - 4.11.2018

- விடுதலை நாளேடு, 4.11.18