பக்கங்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

பெரியாரும் - நேதாஜியும்!




இது என்ன ஒப்பீடு என்று சிலர்  நினைக்கக்கூடும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றால், சுதந்திரப் போராட்டவீரர்-இடதுசாரி போக்குள்ளவர், காந்தியாரின் மித வாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்.

வெளிநாடு சென்று படையைத் திரட்டி பிரிட்டீஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்றத் திட்டம் போட்டவர் என்பது போன்றவைதான் எல்லோருக்கும் பரவலாகத் தெரிந்தவை.

அவரின் இன்னொரு பக்கம் எத்தகையது என்பது பெரும்பாலும் தெரியாதுஎன்பதைவிடஅவை வெளிச்சத்துக்குக்கொண்டுவரப் படாதவை என்பதுதான் கலப் படமற்ற உண்மை!

ஒருக்கால் அது வைதீகத்துக்கும், மூடத்தனத்துக்கும் எதிரான முற்போக்குச் சுணை கொண்டது என்பதால் இருட்டடிக்கவும் பட்டி ருக்கலாம்.

ஒடிசாவின் கட்டாக்கில் இந்து வங்காளி குடும்பத்தில் இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேர் - இவர் ஒன்பதாவதாக பிறந்த வைரமணி (23.1.1897). இவரின் தந்தை பிரபலமான வழக்குரைஞர். ஆச்சாரமும், ஆன்மீகமும் இவர் வீட்டில் சதா வழிந்தோடிக் கொண்டே இருக்கும்.

இரைச்சல் மிகுந்த வீடு என்று தம் நண்பர்களிடம் நேதாஜி கூறுவதுண்டாம்.

அமைதி தேவையா? ராம கிருஷ்ண மடத்திற்குப் போகும்படி வீட்டில் வற்புறுத்தியதுண்டாம். படிப்பிலும் படுசுட்டி. இலண்டன் வரை சென்று அய்.சி.எஸ். தேர்வில் நான்காம் மாணவனாக வெளிவந்தார் (1920).

தந்தைபெரியாரோடு எப்படி ஒப்பிடத்தகுந்தவர் என்ற கேள் விக்கு வரலாம்; தனது 16 ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களுடன் வட இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். காசி, அரித்துவார், பிருந்தாவனம் எனப் பல இந்து தலங்களுக்கெல்லாம் சென்றார். அந்த இடங்களில் அவர் கண்ட காட்சிகளும், கேவலங்களும் - மதத்தின்மீதும், ஆன்மீகத்தின்மீதும் அவரிடத்தில் பெரும் அதிர்ச்சியையும், வெறுப் பையும் ஏற்படுத்தின.

சந்நியாசிகள் என்று கூறிக் கொண்டு விபச்சாரிகளுடன் கூடிக் குலவியதையும், பணம், சொத்து காரணங்களுக்காக சதா சண்டையிட்டுக் கொள்வதும், ஒருவருக்கொருவர் கொலை செய்து கொள்வதும் போன்ற கொடூரங்களைக் கண்டு ‘சீ... இப்படியும் ஒரு பிழைப்பா? இதற்கு மதம் என்ற முகமூடியமா?’ என்று சிந்திக்க ஆரம்பித்தார். ஜாதி, மத காழ்ப்புணர்ச்சிகளை நேரில் கண்டு தனது ஆன்மீக ஆசைக்கு முழுக்குப் போட்டார்.

(தந்தை பெரியாரும் வட நாடு சென்று நேரில் பார்த்து அறியவில்லையா?

ஜாதிபற்றி அவரின் கருத்து என்ன? அதற்கு ஆதாரம் தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ இதழிலேயே (26.10.1930, பக்கம் 7) கிடைக்கிறது.

‘‘ஜாதியைஒழிப்பதில்நான் அதிக தீவிர நம்பிக்கை கொண் டவன். அது சம்பந்தமாக நான் என்னனாலான பிரச்சாரமும் செய்து வருகிறேன். சமத்துவம், நியாயம் போன்ற கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம், சுதந்திர இந்தியாவுக்குரியதாகும். சிலர் தீண்டாமையை மட்டும் வெறுக்கிறார்களேயொழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். (தந்தை பெரி யாரைப் போலவே இந்த இடத்தில் காந்தியாரிடமிருந்து மாறு படுவதைக் கவனிக்கவேண்டும்) அத்தகைய மனோபாவம் கொண் டவனல்ல நான். நாம் எல்லோரும் ஒன்று என்றால், மனிதனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருக்கலாகாது!’’ என்கிறார் நேதாஜி.

தந்தை பெரியார்- நேதாஜி ஒப் பீடு சரியானதுதானே!

- மயிலாடன்

 -விடுதலை,24.1.17

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது.    - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது.   
- ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும்.    - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.
- நேரு

இங்கர்சால் கூற்று!


மதாசாரியார்கள், குருக்கள், இறைவன் புதல்வர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள். அவர்களில் பலர் தொழில் செய்வதில்லை; கைத் தொழில் செய்யவில்லை.

பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காக பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள்.

மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களை படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், என்றும் துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள். -ராபர்ட் இங்கர்சால்
-விடுதலை,19.9.14

வெள்ளி, 27 ஜனவரி, 2017

சிந்தனை முத்துகள்


எது சோஷலிசம்? - தந்தை பெரியார்



மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சோஷலிச உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணம் பிறவியில் மேல் - கீழ் எனும்படியான ஜாதிபேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு ஜாதிபேத ஒழிப்பு என்ற சமுதாய சோஷலிசம் பற்றிச் சொல்லி, பிறகு பொருளாதார சோஷலிசம் பற்றி சொன்னால்தான் உணர்ச்சி உண்டாக்க முடிகிறது.

ஆகவே பொருளாதார சோஷலிசத்துக்காக வேண்டியே ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், ஜாதியை ஒழிப்பதற்கு அதன் ஆதாரமாகவுள்ள மதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகிறோம்.

மனிதரில் சிலரை மேல் ஜாதியாக்கி பாடுபடாமல் ஊரார் உழைப்பில் உண்டு கொழுக்கும்படியும், மற்ற பலரைக் கீழ் ஜாதியாக்கி அவர்கள் பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாளியாய், கட்டக் கந்தையற்று குந்த குடிசையற்று இருக்கும் படி செய்தது கடவுள் என்றால் அக்கடவுளைவிட அயோக்கியன் உலகில் வேறு யார் இருக்க முடியும்? அப்படிப்பட்ட அயோக்கியக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், விடுதலை -16.9.1970

யாருக்கு லாபம்?

பரமசிவம் அருள்புரிய வந்து வந்து போவார்:
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தானமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும் போகும்!
மகரிஷிகள் கோயில்களும் - இவைகள் கதாசாரம்,
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

- புரட்சிக்கவிஞர், திராவிடன் 14.1.1950, பொங்கல்மலர்

வளர்ச்சியைத்
தடுப்பது எது?



பல நூற்றாண்டாக ஜாதி முறை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடு என்றே கருதுகிறேன். அதுவே இந்தியாவைப் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்தியது மட்டுமின்றி, அது இந்தியாவை கேவலபடுத்திக் காட்டியதுடன் வெளிநாட்டுப்படை எடுப்பாளரிடம் நம்மை அடிமைகளாக்கி விட்டது. ஏனெனில் ஜாதியே நம்மைப் பிளவுபடுத்தும் சாதனமாகும். பெரும்பாலான நமது மக்களை சாதி கேவலப்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்தான் இக்கேவலத்தைச் சுமத்தினர் பலர். இக்கேவலத்தை ஏற்றுக் கொண்டோம். இன்றைய உலகத்தில் ஜாதிக்கு இடமே கிடையாது. அது இன்று இருக்குமானால் நமது சோஷலிச - சமதர்ம -லட்சியத்தை நாம் அடைவதைத் தடைப்படுத்தவே செய்யும்.

இந்தியா தனது மதமவுடிகங்களை களைந்து, விஞ்ஞான பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங்களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச்சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.  -ஜவகர்லால் நேரு

மதத்தின் குத்துச்சண்டை!

உலகக் குத்துச்சண்டை மாவீரனாகிய முகம்மது அலியையும் மதத்தின் கொடுமை விடவில்லை. கிருஸ்துவக் குடும்பத்திலே பிறந்த அவர், தன்னை கறுப்பு மனிதன் என்று வெள்ளை இனம் இழித்துப் பழித்ததைக் கண்டு தாள முடியாமல், தன்னை முஸ்லிமாக மாற்றிக் கொண்டார். மதம் மாறி விட்டார் என்றதும் மதவாதிகளின் ஆத்திரம் பன்மடங்காக ஆகிவிட்டது. எப்படியும் அலியை ஒழித்துக் கட்டுவது என்று திட்டம் தீட்டினார்கள்.

வியட்நாம் போரில் அவரைக் கட்டாயமாக அமெரிக்க இராணுவத்தில் சேர உத்திரவு பிறப்பித்தனர். அலி மறுக்கவே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலே தள்ளப்பட்டார்.

சிந்தனை முத்துகள்

ணிபொருத்தமில்லாதவைகளைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவன் ஆதாரமின்றி பேசுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளுவதுதான் மத நம்பிக்கை.

- ஆம்ப்ரோசுபியர்ஸ் - அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்.

சந்நியாசி என்பவன் திருத்தியும் புகழ்ந்தும் கூறப்படும் ஒரு மாண்டுபோன பாவி!

ஓர் எசமான், ஓர் எசமானி, இரண்டு அடிமைகள். ஆக மொத்தம் இரண்டே பேர் கொண்ட சமூகத்தின் நிலைமை - அதுதான் திருமணம்.

மன்னிப்புக் கேட்பது மீண்டும் தவறு செய்வதற் காகப் போடப்படும் அடிக்கல்.

சமாதானம் என்பது பன்னாட்டு விவகாரங்களில் இரண்டு போர்க்காலங்களுக்கு இடையே உள்ள ஏமாற்றுங் காலம்.
-ஜோஷ் பில்லிங்ஸ் என்னும் புனைப் பெயர் கொண்ட அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்.

மதங்கள் பைத்தியக்காரத்தனமாகப் காமச் சுவைகளையே சுற்றி வருகின்றன.
- கூர்மான்ட் ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்

குற்றமற்றவனாக இருப்பதை விட குற்றம் கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
- பெஞ்சமின் டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்.

மருத்துவன் நோயைத் தீர்க்கிறான். ஆண்டவன் நன்றியைப் பெறுகிறான்.
-பீடர்ஃபின்லே, அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்

பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்காமலேயே மத வழிபாட்டிலுள்ள அபத்தங்களை அம்பலப் படுத்தலாம்.
- அனடோல் ஃரான்ஸ் - அமெரிக்க எழுத்தாளர்

அற்புதம் என்பது காணாதவர்கள் கண்டதாகச் சொன்னதைக் கேட்பவர்கள் வர்ணிக்கும் கற்பனை நிகழ்ச்சியே.

குழந்தைக்குப் பாடம் சொல்லித் தருவதன் குறிக்கோள் - ஆசிரியர் துணையின்றி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான்.

மனிதன், ஆண்டவனின் ஓர் அற்புதப் படைப்பு அப்படிச் சொல்வது யார்? மனிதன் தான்!
- எல்பர்ட்ஹப்பர்ட், அமெரிக்க எழுத்தாளர்

மதம் மனிதனை நாகரிகம் அடையச் செய்யவில்லை. மனிதன் தான் மதத்தை நாகரிகப்படுத்தி வருகிறான்.
- ராபர்ட் க்ரீன் இங்கர்சால்

என்ன பரிதாபம்! ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று யாருக்குமே தெரிவதில்லை - பிரம்மச் சாரியைத் தவிர!
- ஜார்ஜ் கோல்மன், ஆங்கில நாடகாசிரியர்

ஏழு மொழிகள்




1. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

3. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

4. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

5. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

6. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்

7. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித் தின்ன அரசியல்
- தந்தை பெரியார்

தந்தை பெரியார் பொன்மொழிகள்

தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக, இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும்.  மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை

சாத்தாணியின் புரோகிதம்




நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.


 


அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு

 

 


இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும் போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்கு மணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின் றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்த பிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

.- விடுதலை16.5.14


செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்




திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூடநம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத் திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?

2) அது எது?

3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?

4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?

5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?

6) அதற்கு ஆதாரம் யாது?

7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?

8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப்படையாகக் கொண்டதா?

9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?

10) ஒரு தன்மையா?

11) ஒரு குணமா?

12) சிவனுக்கு உருவம் சொல்லப்படுகிறதே- அது ஏன்?

13)    அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?

14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக்கான பெயர்கள் வட மொழியில் இருப்பானேன்?

15) ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கும் அவர் களது பெண்டு பிள்ளைகளுக்கும் வேறு வேறு  பெயர்கள் ஏன்?

16) சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

17)  ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள்ளுகின்றதா? மறுக்கின்றதா?

18) சைவ சமயாச்சாரியர்கள் என்பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்வி களையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக் கின்றனரா?

19)    சமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய் தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?

20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?

21)  சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?

22)    சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?

23)    சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர் களையும் துன்புறுத்தியதேன்?

24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?

25)    வடமொழிக் கதைகளையும் வடமொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர் களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?

26)    சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?

27) எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன?

28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?

29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?

30) விக்ரக ஆராதனை உண்டா?

31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?

32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?

33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?

34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?

35) சைவக் கோயில்களில் இப்போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுகின்றதா?

36)    அது சைவத்திற்கு முரணானது அல்லவா?

37)    முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?

38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?

39)    ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது  ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?

40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது?

41)    பிள்ளையார் என்ற ஒரு கடவுளுக்குச் சைவத்தில் இடம் இருக்கின்றதா?

42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள் ளுகின்றனரா?

43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?

44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகா புராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?

45)    நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

46)    அவை தனித்தனி கடவுள்களா?

47)    நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?

48)    மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

49) சமணர்கள் கழுவேற்றப்பட்டதைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?

50) திருநீறு எதற்காகப் பூசுவது?

51)    இலிங்கத்திற்கும், ஆவுடையாருக்கும் சொல் லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?

52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?

53)    இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?

54) கைலயங்கிரி எது? சுப்பிரமணியன் எது? கந்தன் எது? குமரன் எது?

55)    மலையரசன் மகனென்றால் என்ன?

56)    இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவை களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

57) இவை இப்படியே நடக்க வேண்டியது தானா?

58)    இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?

59)    அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்பலாமா? அல்லது இப் படியே இருக்க வேண்டுமா?

60)    சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண் டார்களா?

61)    மறுபிறப்பை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

62)    திதிகளை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

63)    பிராமணர்களை ஒப்புக்கொள்ளுகின்றார்களா?

64)    சமயாச்சாரிகளின் அற்புதங்களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ்வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என்பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

67) சைவர்களுக்குச் சரியான முறை எது?

68)    சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?

69)    வருணாசிரமம் உண்டா?

70)    உண்டென்றால் ஆதாரம் எது?

71)    இல்லை என்றால் ஆதாரம் எது?

72) இப்பொழுது அமலில் இருப்பதற்குக் காரணம் என்ன?

73)    சைவ மடங்கள் எதற்கு?

74) அவை இதுவரைச் சாதித்த தென்ன?

75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?

76)    இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?

77)    இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சம யத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?

78)    அருகதை உடையவர் யார்?

79)    பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல் களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

நன்றி: திராவிட நாடு இதழ் 16.1.1944

-விடுதலை,15.9.14

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை

எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே! மொட்டை அடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருட னாவது ஓடிவிடுகிறார்களே! அப்படியிருக்க உங்கள் தலை மயிரைத்தானா சாமி கேட்கும்?

உங்கள் கணவன்மாரை காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே!  எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷன் போதாதென்று ஆறாவது புருஷனையும் விரும்பிய துரோபதியம் மாளைப்போய் கும்பிடுகிறீர்களே!

அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே! உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷன் வேண்டும் என்று வரம் கேட்கவா அந்தப்படி செய்கிறீர்கள்?

திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

விடுதலை (3.6.1976)
(பத்திரிகை சென்சார் காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் கத்தரித்து எறியப்பட்ட அய்யாவின் அறிவுரை. )

புத்தர் அறிவுரைகள்

இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.

------------------------

உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.

------------------------

கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.

------------------------

முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.

------------------------

பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.

ஆள் இல்லை!

...... முன்பு புராண இதிகாசங்களைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். பின்பு படித்தவர்கள் கூறினால் விளங்கிக் கொள்வார்கள்.

.... போகிற போக்கைப் பார்த்தால் வீடு தேடிப் போய் சொன்னாலும் கேட்க ஆள் அகப்படாது எனத் தோன்றுகிறது.

- கிருபானந்தவாரியார்
(10.6.1979 ஆனந்த விகடன், பக்கம் 55)

-விடுதலை,22.8.14