பக்கங்கள்

அய்யப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அய்யப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2024

அய்யப்பன் கோயில் – தெரியாத உண்மைகள்

விடுதலை ஞாயிறு மலர்
Published November 25, 2023

பாணன்

புத்தரை வணங்கிய அரச குடும்ப இளவரசனே அய்யப்பன்

சபரிமலை அய்யப்பன் ஒரு அரசர்.. கடவுள் அல்ல.. அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே. அய்யப்பன் கோயில் – தெரியாத உண்மைகள் பல. கேரளா சபரிமலையில் உள்ள அய்யப்பன், உண்மையில் புராண கதை அல்ல, அது வரலாற்று பூர்வமான- உண்மை. ஆனால் அந்த உண்மை இந்து பக்தர்கள் விரும்பும் உண்மை அல்ல, அய்யப்பன் உண்மையில் இந்து கடவுள் அல்ல, அது ஒரு பவுத்த கோயில், அதை விட வினோதம் என்னவென்றால், அய்யப்பனே புத்தரை வணங்கி வந்த ஒரு அரசகுடும்ப இளவரசன் என்பது தான். இங்கு சொல்லப்பட்டிருப்பது, கற்பனை அல்ல, பந்தள அரசவம்சத்தில் வந்த, கேசரி பாலக்ருஷ்ண பிள்ளை எழுதிய ‘Followers’, மற்றும் ‘ஈழவர் செம்பாட்டு’ என்ற நூல்களில் இருந்து பெரும்பகுதியும், நலன்கல் கிருஷ்ணபிள்ளை மற்றும் டாக்டர்.எஸ்.கே.நாயர் ஆகியோரின் புத்தகங்களிலிருந்தும், ஜம்னாதாஸ் எழுதிய ‘திருப்பதி புத்தர் கோயிலே’ என்ற புத்தகத்திலிருந்தும் சொல்லப்படும் வரலாறே அய்யப்பன். புராண கதைகளை சுருக்கமாக பார்த்தால், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்தவன், கழுத்தில் மணியுடன் காட்டில் குழந்தையாக பந்தள ராஜனால் கண்டெடுக்கப் பட்டு, அவனிடம் வாழ்கிறான் (காது கேளாத வாய்பேச முடியாத குருவின் மகனை குணப்படுத்துகிறான்.)

அய்யப்பனின் உண்மை வரலாறு

(கேரள கிருஸ்த்துவ மதத்தின் தாக்கம்), சின்னம்மாவின் சூழ்ச்சியால் காட்டுக்கு புலிப்பால் கொண்டு வர போகிறான், அங்கே மகிஷியை கொல்கிறான், பின்னர் உதயணன் என்ற கொள்ளையனை கொல்கிறான், பின் சபரி மலையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறான். உண்மையிலேயே நான் படித்த புராண கதைகளில் அந்த கதாசிரியரின் ஒரு தனித்துவ முத்திரை (Author’s Personal Touch) இல்லாத கதை இதுவென்று தான் சொல்வேன். அய்யப்பனின் உண்மை வரலாறு என்னவென்று பார்ப்போம், இதற்கு முன் பாலக்காட்டில் நம்பூத்ரிகள் அந்நாட்டு மன்னனால் விரட்டி அடிக்கப் பட்ட வரலாறில் நாம் கி.பி.1200இல் சடவர்ம  சுந்தரபாண்டியன் மற்றும் சடவர்ம வீரபாண்டியன் இருவருக்கும் ஏற்பட்ட வாரிசு தகராறில் மாலிக்காபூர் (உண்மையில் மாலிக்காபூர் இஸ்லாமிய மதத்தை தழுவிய குசராத்தி பார்ப்பனன்), அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாக வேலை பார்த்து பின்னர் படைதளபதியாக உள்ளே நுழைந்து பஞ்சாயத்து செய்ததை பார்த்தோம். இதில் தோற்று ஓடிய வீரபாண்டியனும் அவனது குழுவும் கேரளா நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

அங்கே பந்தள நாட்டில் கைபுலத்தம்பன் என்ற மன்னன் அவர்களுக்கு அடைக்கலம் தந்தான். கைபுலத்தம்பன் வாரிசு இல்லாமல் இறந்து போக நாயர்கள், தமக்குள் ஏற்பட்ட சண்டையில், யாருக்கும் வேண்டாம், பாண்டியனே  மன்னனாக இருக்கட்டும் என்று அவனுக்கு முடிசூட்டுகின்றனர். கி.பி. 1300-களில், பஞ்சம் காரணமாக பாண்டிய நாட்டிலிருந்து சிறு படை களோடு, கொள்ளையடிக்க கேரள காட்டுப் பகுதிக்கு வருகிறான் உதயணன் என்ற பாண்டிய மறவர் வீரன். இவன் அங்கு தலப்பாரா, இஞ்சிப்பாரா, கரிமலா ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டி  வருவோர் போவோரிடம் கொள்ளை அடித்து வருகிறான். இந்த பாதை, பழங்காலத்திலிருந்தே, கடல் வழியே வரும் அராபிய ராவுத்தர்கள் (இஸ்லாம் வருவதற்கு முன் குதிரை வணிகர்களின் பெயர்), முண்டகாயம், இடுக்கி, பந்தனம்திட்ட பகுதிகளில் வெள்ளாளர்கள் (விவசாய குடிகள்) வியாபாரத்திற்கு பயன் படுத்தி வந்த  பாதையாகும். சபரிமலையில் இருந்த புத்த கோயிலின் பழைய பெயர், அவலயோகிச்வர விகாரம், அங்கே மக்கள் வழி பட்ட தெய்வம் தர்ம சாஸ்தா என்ற அவலயோகிச்வர சிறீபுத்தர்.

உதயணன் பந்தள நாட்டைக் கொள்ளையடித்து இளவரசியைக் கடத்தினான்

சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகளின் பேர்கள் பெரும்பாலும் பள்ளி, காவு என்ற சொல்லை கொண்டிருக்கும் கருநாகப்பள்ளி, பள்ளிக்கால், பரணிக்காவு, புத்தனுர்(போத்தனூர்). சாத்தன், புத்தஞ்சன், சாச்த்தவு போன்ற பெயர்கள் புத்தரை குறிக்கும் சொற்களே. முன்னர் சொல்லப்பட்ட கொள்ளையன் உதயணன், பலமுறை அவலயோகிச்வர விகாரத்தை கொள்ளையடிப்பது வழக்கம், அங்கே அருகே இருந்த அலங்காடு, அம்பலப்புழா என்ற இரண்டு ஊர்மக்கள் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டையில் இருந்தது. உதயணனுக்கு, தன் கொள்ளை வேட்டைக்கு வசதியாக இருந்தது. ஒருமுறை உதயணன், பந்தள நாட்டிக்கு வந்தான், (பந்தளம் – பத்து தளம் – பத்து ஊர்களை கொண்ட ஒரு சிறு நாடு), அவன் வந்த போது நாட்டில், அரசன் மற்றும் முக்கிய வீரர்கள் யாரும் இல்லை. 

வயதான தளபதி காம்பிள்ளில் பணிக்கர் மட்டுமே இருந்தார். வந்த உதயணன் அரசனின் தங்கையான இளவரசியையும் தூக்கி செல்கிறான். அவளை காதலித்து வந்த பணிக்கரின் மகன், உதயணன் கோட்டைக்குள் ரகசியமாக புகுந்து அவளை மீட்கிறான். ஆனால் தப்பித்த இளவரசி நாட்டுக்கு திரும்பினால் தான் ‘புனிதம்’ இல்லாதவள் என்று நம்பூதிரிகள் சொல்லுவார்கள் என சொல்ல இருவரும், பொன்னம்பலமேடு காட்டுப் பகுதிக்குள் சென்று வசிக்கிறார்கள், அவர்களுக்கு அய்யப்பன் என்ற மகன் பிறக்கிறான். இங்கு அவர்களுக்கு பெரிதும் உதவுவது பெரிசெரி பிள்ளை என்ற வேளாளகுல தலைவன், இவரே பின்நாளில் அய்யப்பனின் மாமன் என்று  அழைக்கப்படுகிறார். அய்யப்பன் பிறகு செம்பொறா குருகுலத்தில் களரி பயின்று வருகிறான். பிறகு ஒரு நாள் பந்தள ராஜா, பொன்னம்பலமேடு பகுதியில் வேட்டைக்கு வரும் போது, தன தங்கையை பார்த்துவிட, எனக்கும் வாரிசு இல்லை, என் மருமகன் தான், இனி நாட்டை ஆளவேண்டும் என்று கூறி அழைத்து செல்கிறான்.

ஒருமுறை, காட்டெருமைகளின் தொல்லை அதிகமாக இருக்க, அய்யப்பன் அவற்றை விரட்ட, சிலகாலம் தங்கி வேட்டையாடிய இடமே எரிமேலி (எருமை கொல்லி) பகுதி. இறுதியாக உதயணனை அழித்து, அவலயோகிச்வர விகாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தன் பொறுப்பை நிறைவேற்ற அய்யப்பன் முடிவுசெய்கிறான். உதயணன் இதற்குள் பெரும்  பலத்துடன் வளர்ந்து விட்டதால், தனியாக முடியாது என்று சுற்றி உள்ள மற்ற அரசர்களின் உதவியை நாடுகிறான், முதலில் காயம்குளம் அரசனை நாடுகிறார், அவர் தன மக்கள் கடற்கொள்ளையரால் அவதிப்படுவதாகவும், அவர்களை அடக்கினால், தான் உதவ தயார் என்று கூறுகிறார். காரணவர் என்ற அந்த நாட்டின் படைத்தலைவனின் உதவியோடு, அய்யப்பன் கடற்கொள்ளையரை வெல்கிறான்.

அய்யப்ப பக்தர்களின் சரம்குத்தி பழக்கத்திற்குக் காரணம் என்ன?

அந்த கொள்ளையர் தலைவன் வாவர் என்ற பெயர் கொண்ட இஸ்லாமியன், அய்யப்பன் அவனின் வீரத்தை மெச்சி தன் படைகளுடன் சேர்த்து கொள்கிறான். பின்னர், நட்பு அரசர்கள் படைகளுடன், பந்தள நாட்டின் தலைமை தளபதி கடுத்தநாயர், வில்லன், மல்லன் என்ற இருசிறந்த வீரர்கள் மற்றும் வாவர் ஆகியோரின் தலைமையில் பெரும் படையை சேர்த்துக்கொண்டு உதயணனை அழிக்க புறப்படுகிறான். தன் படைகளை மூன்று பிரிவுகளாக அய்யப்பன் பிரிக்கிறார். 1. வாவரின் தலைமையில் ஆலங்காட்டு யோகம் 2. கடுத்தநாயர் தலைமையில் அம்பலப்புழா யோகம் 3. வில்லன் மல்லன்  தலைமையில் பந்தளநாடு யோகம் என்பவை அவற்றின் பெயர்கள். ஆலங்காட்டு யோகம் மற்றும் அம்பலப்புழா யோகம் படைகள் போரிட்டதையே இன்று பெட்டதுள்ளல் என்ற பழக்கமாக மாறிவிட்டது. சண்டைக்குப் புறப்பட்ட படைகள் அவலயோகிச்வர விகாரத்தை நெருங்கிய போது, அமைதியான கோயிலின் அருகே செல்லும் போது போர்கருவிகளை எடுத்து செல்லக் கூடாது என்று அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே வைத்து விட்டு செல்ல சொல்லப்பட்டது. அதுவே இன்று பக்தர்களின் சரம்குத்தி என்ற பழக்கமாக மாறிவிட்டது.

இம்மூன்று படைகளும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று திசைகளிலிருந்து தாக்க நாலாவது திசையில் அரபிக்கடல் வழிமறிக்க இறுதியாக கொள்ளையன் உதயணன் கொல்லப்படுகிறான். அவலயோகிச்வர விகாரத்தை புனரமைத்து, புதிய அவலயோகிச்வரர் சிலையை நிர்மாணிக்கும் வரை இப்போது சபரி மலையில் மணிமண்டபம் இருக்கும் இடத்தில் அமர்ந்து மேற்பார்வை செய்துவந்தான். பின்னர் தன் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்தான் 1300இல்  நடந்த இந்த வரலாறு எப்போது புராணமாக மாற்றப்பட்டது என சரிவர தெரியவில்லை.

ஆனாலும் சபரி மலை தர்ம சாஸ்தா கோயில் என்பதை அங்கே உள்ள வழக்கங்களை கொண்டு அறியலாம்.

பவுத்த நிகழ்வுகள் அனைத்தும் விஷ்ணு, அய்யப்பன் கதைகளாக மாற்றப்பட்ட கயமைத்தனம்

எடுத்துக்காடாக தர்மம் (அ) தம்மம் என்பது புத்தமத வார்த்தையே, புத்தமத நூலான அமரகோசம் “சத்தா தேவ மனுசானாம்” சாத்தான் என்றால் புத்தர் என்று சொல்கிறது. பழைய புராண நூலான விஷ்ணு புராணத்தில் அய்யப்பனை பற்றிய எந்த குறிப்பும் இல்லை ஆனால், பிற்காலத்தில் எழுதப்பட்ட சிறீமத் பாகவதத்தில் அய்யப்பன் வருகிறார், இதிலிருந்து நாம் அறிவது பிற்காலத்தில் பாகவதத்தில் அய்யப்பன் சேர்க்கப்படிருக்க வேண்டும் அல்லது பாகவதமே 1400-பின் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். அய்யப்பன் கையில் காட்டும் சின் முத்திரையை, உலகில் உள்ள எல்லா புத்தர் சிலைகளிலும் காண முடியும். அய்யப்பனின் ஆயுதங்கள் எல்லாமே போதிசத்துவரின் ஆயுதங்களே.  பிரபல வரலாற்று ஆசிரியர் வானமாமலை கூறுவது என்னவென்றால், புத்தமதம், தமிழ்நாட்டில் அழியவில்லை பவுத்த கதைகள் அனைத்தும் விஷ்ணு கதைகளாக மாற்றப்பட்டுவிட்டன, அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே. இவை எல்லாவற்றையும் கடந்து அய்யப்பன் கோயில் வழி பாட்டில் ஒருவித சமத்துவத்தை காணலாம், எல்லா ஜாதியினரும் தன குழுவுக்கு குருசாமி ஆகலாம், தீவிரமான விரதங்கள், விரதம் இருக்கும் ஒரு பார்ப்பானை காட்டுங்கள் பார்போம். 

பத்மசம்கிதை என்ற வேதபுராண நூல், அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய வேண்டியது பரசவா என்னும் சூத்திரனாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், அதையும் பார்ப்பனர் ஏமாற்றி அவர்களே எடுத்துக் கொண்டார்கள். இதில் மற்றும் ஒரு வேடிக்கை என்னவென்றால், கேரளாவில் இருக்கும் கோயிலில், தலைமுறை தலைமுறையாய் பூஜை செய்பவர்கள் ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு பார்ப்பனர், விஜயநகர பேரரசை கடைசி வம்சமான அரவிடு வம்சத்தினரான நாயக்கர்கள் ஆண்ட போது இந்த அவலயோகிச்வரர் இந்து அய்யப்பனாக மாற்றப்பட்டிருக்கலாம்.

பவுத்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே சபரிமலை அய்யப்பன் கோயில்

இதற்கும் ஒரு கதை உண்டு. பரசுராமன் ஆந்திர தேசத்தில் இருந்து இரண்டு பார்ப்பனரை அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய கூட்டிவந்தான், அவர்களை ஆற்றை கடந்து வர சொன்ன போது, ஒரு பார்ப்பான் தண்ணியின் மீது ஏறி நடந்துவந்தான், அவனை பரசுராமன் தாரைநேன்னிள்ளார் என்றான், அடுத்தவன் ஆற்றுநீரை இரண்டாக பிளந்து நிற்கச்செய்து அடியிலிருந்த மண் தரையில் நடந்து வந்தான் அவனை தாளமண் என்று அழைத்து நீ தான் உயர்ந்தவன். எனவே, நீ தான் அய்யப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றான். அன்று முதல் இன்றுவரை தாளமண் குடும்பத்தினரே அங்கு பூஜை செய்து வருகின்றனர். 1821இல் பந்தளம் ராஜ்ஜியத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் சேர்க்கும்போது, சுமார் 48 கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சேர்க்கப்பட்ட போது சபரி மலையும் சேர்க்கபடுகிறது. பின்னர் இப்போது அங்கிருக்கும் சிலையே 1910இல் தான் நிறுவப்படுகிறது. 1975இல் அங்கிருந்த கோயில் தீக்கிரையாகிறது (அல்லது ஆக்கப்பட்டதா எனத் தெரியாது) அதன் பின் இப்போது நாம் பார்க்கும் வடிவில் கோயில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு அதன் பழைய பவுத்த அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது.

திங்கள், 29 அக்டோபர், 2018

அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் அனுமதி: வழக்குத் தொடுத்தவர்கள் யார்? இதோ ஆதாரம்!

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதா? அய்யய்யோ இது என்ன அநியாயம்! சம்பிரதாயங்களைச் சாம்பலாக்கலாமா?


ஒவ்வொருக் கோயிலுக்கென்றும் ஒவ்வொரு சம்பிர தாயம் உள்ளனவே. உரிமை முழக்கம் என்றால் அதனை உருக்குலையச் செய்யலாமா?

கடவுள் இல்லை என்று கூறும் தி.க.வும், கம்யூனிஸ் டுகளும் இதில் மூக்கை நுழைக்கலாமா?

சட்டமும், தீர்ப்பும் என்ன சொல்லுகின்றன என்பது முக்கியமல்ல. சம்பிரதாயங்களும், சாஸ்திரங்களும் என்ன சொல்லுகின்றன என்பதுதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!" என்று அடேயப்பா! ஆகாயத்துக்கும், பூமிக்கும் குதித்துவரும் ஆன்மிகப் போர்வையில் ஒளிந்திருக்கும் பார்ப்பனர்களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் முகத்தி ரையைக் கிழிக்கும் வண்ணம் ஆதாரம் என்ற ஏ.கே.47 துப்பாக்கி இதோ வெடிக்கிறது - வெடிக்கிறது!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களும் போக அனுமதி வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர்கள் யார் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ்.தான் பக்கா - ஆர்.எஸ்.எஸ்தான்! ஆர்.எஸ்.எஸின் மகளிர் பிரிவான ராஷ்டிரிய சேவிகா சமிதி என்பதுதான்.

இதன் முக்கிய குறிக்கோள் என்ன தெரியுமா? இந்துப் பெண்களை ஒருங்கிணைத்து இந்துத்துவா கொள்கைகள் மூலம் இந்துக் கலாச்சாரத்தையும், இந்து மரபுகளையும் மீட்டெடுப்பது தான் இதன் நோக்கமும் - போக்கும்!

வழக்கைத் தொடுத்த அந்தப் பெண்மணிகள் யார்? அவர்கள் வகித்த பொறுப்பென்ன? இதோ:

ராஷ்டிரிய சேவிகா சமிதியின் இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பிரேரனாகுமாரி, பசரிஜா சேத் மற்றும் மகளிர் உரிமை செயல்பாட்டாளர்கள் லட்சுமி சாஸ்திரி, சுதாபால் இவர்கள்தாம் 2006 ஜூலை மாதம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்கள்.

வழக்குத் தொடுத்த நிலையில் டில்லியில் செய்தி யாளர்களிடம் அவர்கள் பேசியது என்ன?



இதோ:

"சபரிமலையில் 1987-ஆம் ஆண்டு  கன்னட நடிகை ஜெயமாலா என்பவர் கோவிலில் நுழைந்தார் என்பதற்காக அவரது கோவில் நுழைவு குறித்து பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பின; ஒரு பெண் கோவிலில் நுழைவது தவறா? கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது, ஒரு பெண் நுழைவதைத் தடை செய்வது என்பது அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியாகும். சமூகம் இன்றளவும் பழைமையில் ஊறி இருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு ஏதுவுமில்லை. நாங்கள் இது குறித்து எங்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தோம். அதன் படி இன்று வழக்கைத் தொடர்ந்தோம்"

"ஆன்மிகம் என்பது பால்வேறுபாடுகளுடன் கூடியது அல்ல, கோவிலில் பெண்கள் நுழையக்கூடாது என்று கூறுவதும் ஒரு தீண்டாமைக் கொடுமை ஆகும். அது இந்திய அரசமைப்புச் சட்டம் 17-அய் அவமதிக்கும் செயலாகும்.

மேலும் நாங்கள் இதை கேரள பெண்களுடன் தொடர்புபடுத்தியும் பார்க்கவில்லை. பெண்களின் உரிமை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 15-இல் அனைவருக்கும் உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதை நாம் பின்பற்றவேண்டும்" என்று கூறினர்.

இவர்கள் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 2006-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதாடிய ஆர்.எஸ்.எஸ் பெண் அமைப்பின் அமைப்பாளரும், ஒருங்கிணைப் பாளருமான பிரேரனா குமாரி வாதிட்ட போது, "இது ஒரு ஆரோக்கியமான விவாதமாகும். உச்சநீதிமன்றம் கோவில் களில் அனைவரும் நுழைவது தொடர்பாக வழக்கை சிறப்பு கவனமெடுத்து விசாரிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் "கோவில் என்பது அனைவருக்கும் பொது வானது, அங்கு ஆண், பெண் என்ற பாகுபாடு கூடாது, அங்கு பழங்கதைகளைக்கூறி மூடநம்பிக்கைகு இடம் கொடுக்கக்கூடாது, கடவுள் எப்போதும் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறியது இல்லை. பெண் ஒருவர் கோவிலுக்குச்செல்கிறார் என்றால் அதைத் தடுக்க தனிமனிதருக்கோ, அமைப்பிற்கோ உரிமை இல்லை.. அப்படிச்செய்வது தவறான வழிகாட்டுதலுக்கு எடுத்துக் காட்டாகிவிடும். அப்படி நடக்க விடக்கூடாது, பல்வேறு உரிமைப்போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது, சபரி மலைக் கோவில் விவகாரத்திலும் உரிமைப்போராட்டம் வெற்றி பெற வேண்டும். இதில் நீதிமன்றம் உத்தரவிட்டு நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும்" என்று கூறினர்.

இந்தப் பேட்டியைப் படிக்கும் வாசகர்களே உங்களுக்குத் தோன்றுவது என்ன?

பேட்டியளித்தது திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரரா என்ற சந்தேகம் வருகிறதா இல்லையா?

இவ்வளவையும் பேசிவிட்டு, வழக்கும் தொடுத்து விட்டு இன்றைக்கு இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பார்ப்பனர் வட்டாரம் பல்டி என்றால் சாதாரண பல்டியல்ல - அந்தர் பல்டி அடிக்கின்றனர் என்றால், இந்தக் கூட்டத்தின் அறிவு நாணயத்தை எண்ணி, எள்ளி நகையாடுங்கள்!

இவர்கள் எந்த மோசமான எல்லைக்கும் செல்லக் கூடிய "ஏய்ப்பர்கள்" என்பது விளங்கிடவில்லையா?

கோணிப்புளுகன் கோயபல்சும் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டுமல்லவா! இந்த வழக்கைத் தொடுப்பதற்கு முன் ஆர்.எஸ்.எஸின் முக்கியமானவர்களையெல்லாம் கலந்து ஆலோசித்தோம் என்று ஊசியைக் குத்திப் பலூனை வெடிக்கச் செய்துள்ளாரே!

இதன் மூலம் ஆர்.எஸ்.எஸின் முக்கிய தலைவர்களின் யோக்கியதையும் கிழிந்து தொங்கிடவில்லையா!

வழக்குப் போட்டது யார்? எப்பொழுது போட்டார்கள் ஆதாரம் உண்டா? என்று சமூக வலைதளங்களில் நீட்டி முழங்கும் - மார்தட்டும் அறிவு ஜீவிகள்(?) இதற்குப் பிறகாவது மன்னிப்புக் கேட்க வேண்டாம் (அதுதான் அவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கலாயிற்றே!) மரியாதை யாக உண்மையை ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸில் உள்ள அப்பாவி தமிழர்களோ புரிந்து கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த உடனடியாக அதனை உச்சி முகர்ந்து வரவேற்றவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. "மிகச் சிறந்த தீர்ப்பு! ஒரு ஜாதி அல்லது பாலினத்திற்கான மதமாக இல்லாமல் எல்லோரையும் உள்ளடக்கியதாக இந்து மதம் மாறுவதற்கு இது வழி வகுக்கிறது" என்று கருத்துச் சொன்னாரே - இதற்கு என்ன பதில்? பிஜேபியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் சோபா சுரேந்திரன் எல்லா அம்சங்களையும் பரிசீலித்தே உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்று கூறவில்லையா! மக்கள் மறதி என்ற நினைப்பா?

திராவிடர் கழகமோ, அதன் தலைவரோ, 'விடுதலையோ' எதையும் ஆதாரமில்லாமல் ஒரே ஒரு வார்த்தையைக்கூட எழுதாது என்பதைத் தெரிந்து கொள்க!



அடையாளம் காண்பீர்!


"பெண் ஒருவர் கோயிலுக்குள் செல்லுகிறார் என்றால் அதைத் தடுக்க தனி மனிதருக்கோ அமைப்பிற்கோ உரிமையில்லை; அப்படி செய்வது  தவறான வழி காட்டுதலுக்கு எடுத்துக்காட்டாகி விடும்; சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் இப்படி டில்லியில் பேட்டியும் கொடுத்தனர்! கொடுத்தனர்!!

- கலி. பூங்குன்றன்

 - விடுதலை நாளேடு, 27.10.18