பக்கங்கள்

வியாழன், 21 நவம்பர், 2019

வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2

டாக்டர் துரை.சந்திரசேகரன்

(வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாயப் புரட்சி' எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் வாசித்த கட்டுரை)

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோறு மிரந்தும் பசியராத யர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

நேர் உறக்கண்டு உளம் துடித்தேன்

ஈபுல் மாணிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர்தமைக் கண்டே கிளைத்தேன்"

என்று உயிர்கள் உற்ற வாட்டத்தை, துன்பத்தைக் கண்டு தன்னையே வருத்திக் கொண்டவரான வள்ளலார் சமுதாயம் சீர் உற அன்பை விதைத்தார். அருளை போற்றினார்; கருணையே வடிவாகி கசிந்துருகினார்; தயையுடன் உதவினார். உடல் பசிக்கும், அறிவுப்பசிக்கும் வழிகண்டு சத்திய தருமச்சாலை கண்டும், திருவருட்பா திருமுறை தந்தும் பயன் விளைவித்தார், எம்மார்க்கத்துக்கும் பொதுவான சன்மார்க்க நெறிகாட்டி, சன்மார்க்கக் கொடி நாட்டி, பேருபதேசம் செய்து வழிகாட்டினார்.

ஆம்!

"அகத்தே கருத்து புறத்தே வெளுத்து

இருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க

சங்கத்து அடைவித்திட வந்தேன்"

என்று தம்மைப்பற்றி அறிவித்துக் கொண்டு தொண்டாற்றினார்.

பசித்திரு - தனித்திரு - விழித்திரு என பறைசாற்றினார்.

"மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்

வருத்தத்தை ஒரு சிறிது எனினும்

கணணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்

கண்டும் நான் சகித்திட மாட்டேன்" என்று ஆர்ப்பரித்தார்.

வெறுக்கப்பட வேண்டியவை

மக்களிடையே ஒருமைப்பாடு தேவையெனில் எவற் றையெல்லாம் விரட்டிட வேண்டும் - வெறுத்திட வேண் டும் என்பதை வரையறை செய்கிறார் வள்ளலார். மனித சமுதாயத்தை பிரிப்பது ஜாதியும், மதமும், சமயமும் என்பதை உணர்ந்த வள்ளலார், அவற்றுக்கு எதிராக மக்களிடையே பரப்புரை செய்தார். கல்வி அறிவும், போதிய விழிப்புணர்ச்சியும் இல்லாத காலம் அப்போது. கடவுளை, மதத்தை, சமயத்தை, ஜாதியத்தை விமர்சனம் செய்வது, எதிர்த்து பிரச்சாரம் செய்வது எவ்வளவு கடினமான செயல் என்பதை நாம் உணர வேண்டும்.

நலிதரு சிறிய தெய்வங்களை நம்பி கிடந்த மக்களை வீண்பொழுது கழிக்கின்றவர்களாக, பொய்யான கலை பல புகன்றிடுவோராக சுட்டுகிறார் வள்ளலார். 'எமது தெய்வம் எமது தெய்வம்' என்று உரிமை கொண்டாடு வோருக்கு வள்ளலார் தந்த பதில் "இவற்றையெல்லாம் கண்ட காலத்திலும் பயந்தேன்", "அவையெல்லாம் சமுதாயத்தில் நலிவைத் தரக்கூடிய கருத்துக்களே தவிர வலிவினை தரக்கூடியவைகள் அல்ல" என்பதேயாகும். 19ஆம் நூற்றாண்டில் திரு வருட்பா ஆறாம் திருமுறை யில், கொடியேற்று உரையில் பேருபதேசத்தில் வள்ள லார் வலியுறுத்தியுள்ள சிந்த னைகள் புரட்சிகரமானவை - புதுமையானதும் கூட!

அந்தக் காலம்

உலகெலாம் உணர்ந்து ஓதர்க்கரியவனாக கடவுளைப் பற்றிய பார்வை மக்கள் மனதில் ஆழமாக படிந்திருந்த காலத்தில் தெய்வங்கள் பலப்பல என்று சிந்தை செய்யக் கூடாது என்பது முற்போக்கான விஷயம்தானே! மக்களின் உள்ளத்தில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை, புராண - இதிகாச பழமைக் கருத்துக்களை, அறிவை மயக்கும் அறியாமைக் கருத்துக்களை கலை உரைத்த கற்பனை களாகக் கண்ட வள்ளலார் அப்படிப்பட்ட கண்மூடித்தன மான கருத்துக்களையெல்லாம் மண்மூடிடச் செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். அவைகளை வலியுறுத்தியோரை புதைக்கப்பட வேண்டிய கருத்துக் களை விதைத்துக் கொண்டிருக்கும் வீணர்கள் என்றார்.

"நலிதருசிறிய தெய்வம் அய்யோ

நாட்டிலே பல பெயர் நாட்டிப்

பலிதர ஆடுபன்றி குக்குடங்கள்

பலிகடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவுங்கண்டே

புந்திநொந்து உளம் நடுக்குற்றேன்

கலி உறு சிறிய தெய்வம் கோயில்

கண்ட காலத்திலும் பயந்தேன்"

படிப்போர் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் வள்ளலார் ஆக்கிய மேற்கண்ட பாடல் உணர்த்துவது என்ன? கடவுளுக்கு ஆடுகடா பூசையா? குக்குடங்கள் படையலா? பலியிடுவதற்கு இந்த உயிர்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டு உள்ளம் நடுங்கினேன் என்கிறாரே வள்ளலார். உயிர்கள் மீது அவர் கொண்டிருந்த கருணையின் அன்பின் வெளிப்பாடல்லவா இந்தப் பாடல்! இப்படிப்பட்ட தெய்வங்களை, கோயில்களை கண்ட காலத்திலும் அஞ்சியவராக தன்னை ஆளாக்கிக் கொள்ளும் வள்ளலாரின் அறிவுநெறி தான் எம்மார்க்கத்துக்கும் பொதுவான சன்மார்க்கம் எனும் நெறியாகும்.

பலி தரலாமா?

வள்ளலாரையே 'கடவுள்' என எண்ணி தொழுதிடும் அன்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரை மனிதநேய தத்துவத்தின் வழிகாட்டியாகக் கொள்ளாமல், கருணைமிக்க அவரின் சிந்தனைகளை எண்ணிப்பாராமல் பூசத்திருநாளில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக வழி படுகிறார்களே என்னே கொடுமை! இன்னமும் கிராமப் புறங்களில் குலதெய்வ வழிபாடு என்று சொல்லி விலங் குகளை, பறவைகளை பலிதரக் கூடியவர்கள் இருக்கி றார்களே - அது வள்ளலாரின் கொள்கைக்கு எதிரான செயல்பாடு அல்லவா?

"தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்பு கின்றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும்

பொய்ச்சமயாதியை மெச்சுகின்றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்

மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்"

"வெறிக்கும் சமயக்குழியில் விழ

விரைந்தேன் றன்னை விழாத வகை

வறிக்கும் ஒரு பேர் அறிவே"

"மதத்திலே சமய வழக்கிலே மாயை

மருட்டிலே இருட்டிலே மறவாக்

கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது

கழிக்கின்றார்..."

அறிவே பிரதானம்...

அறிவுதான் தம்மை சமயக் குழியில் விழாமல் காப்பாற்றியது என்றும், மதத்திலும், சமயத்திலும் மனதை வைத்து அச்சத்திலும், அறியாமையிலும் உழலும் மக்களை வீண் பொழுது கழிக்கின்றவர்களாகவும் வள்ளலார் உரைப்பது 19ஆம் நூற்றாண்டில் புதுமைக் கருத்துக்கள் தானே!

எத்தனை எத்தனை தெய்வங்கள் மக்களின் சிந்தனையில்! ஒன்றா - இரண்டா? முப்பத்து முக்கோடி சாமிகள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிமார், அறுபத்து மூன்று நாயன்மார்கள், பனிரெண்டு ஆழ்வார்கள், கின்னரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலகர்கள் அடடா... எத்தனை எத்தனை சாமிகள்? அத்தோடு விட்டார்களா? சொர்க்கம் - நரகம் என்று இறுதியில் மனிதன் சேரக்கூடிய இடம் ஆக 'ரிசர்வேஷன்' செய்யப்படுவது வேறு! புராண - இதிகாச - சாஸ்திர சம்பிரதாயங்கள் என்று எத்தனை எத் தனை கலைகள்... இவையெல்லாம் பொய்கள் என்கிறாரே வள்ளலார். சமயவாதிகள் பொய்யர்கள் என்கிறாரே...

"தூக்கமும் துயரமும் அச்சமும் மடமும்

தொலைந்தன தொலைந்தன எனைவிட்டு

ஏக்கமும் விளையும் மாயையும் இருளும்

இரிந்தன ஒழிந்தன முழுதும்

ஆக்கமும் அருளும் அறிவும் மெய்அன்பும்

அழிவுறா உடம்பும் மெய்இன்ப

ஊக்கமும் எனையே உற்றன உலகீர்

உண்மை இவ்வாசகம் உணர்மின்"

"எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந்

தம்முயிர் போலெண்ணி யுள்ளே

யொத்துரிமை யுடையவரா யுவக்கின்றார்

யாவரவருளந்தான் சுத்த சித்தம்"

உண்மை அறிவுடையோர் யார் என்றால் உயிர்களிடத்தில் வேறுபாடு காட்டாமல் எந்த உயிரையும் தமதுயிர் போல எண்ணி ஒத்த உரிமை உடையவர்கள் எனக்கருதி நடந்து கொள்ள கூடியவர்களே என்கிறார் வள்ளலார். மடமைத் தன்மையும், பயமும், துன்பதுயரங்களும் தொலைந்தனவாம்; மருட்டும் மாயையும் அறியாமை இருளும் ஒழிந்தனவாம்; ஆக்கம், அருள், இன்பம், அன்பு, அறிவு அனைத்தும் பற்றினவாம் வள்ளலாரிடம் என்று சொல்லும்போது எவை எவை மனிதனை பற்றிட வேண்டும், எவை எவை மனிதனை விட்டு நீங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

வேறுபாடு ஏன்?

"வரையில் உயரகுலம் என்றும் தாழ்ந்தகுலம் என்றும்

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக் காண்கின்றீர்

புரை உறுநும் குலங்கள் எல்லாம் புழுக்குலம் என்றறிந்தே"

உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்று வகுத்துரைத்த வர்களை நோக்கி வினா தொடுக்கிறார் வள்ளலார். அனைவருமே சாகத்தானே செய்கின்றனர். அப்படி யென்றால் மேல், கீழ் எப்படி என்கிறார். எல்லோரும் ஓர்குலம் என்பதே வள்ளலாரின் முடிவு.

"சாதிமதம் சமயமுதல சங்கற்ப

விகற்பம் எல்லாம் தவிர்ந்துபோக"

"மதமெனும் பேய் பிடித்தாட! ஆடுகின்றோர்

தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே"

"சாதிசம யங்களிலே விதிபல வகுத்த

சாத்திரக் குப்பைகள் எலாம் பாத்திரம் அன்று"

"பேருற்ற உலகில் உறு சமயமத நெறியெலாம்

பேய்பிடிப் புற்ற பிச்சுப்

பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல

பேதம்உற்று அங்கும் இங்கும்

போர்உற்று இறந்து வீண் போயினார் - இன்றும் வீண்

போகாதபடி விரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்க நெறி காட்டு"

சமுதாயச் சிந்தனைகள்...

மதத்தை, சமயத்தை, ஜாதியத்தை எதிர்த்து வள்ள லார் மொழிந்துள்ள கருத்துக்கள் அருட்பா பாடல்களாக மேலே பார்த்தீர்கள். அவரின் பாடல்களில் குறிப்பாக சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளாக, புரட்சி மொழி களாக திகழ்பவை ஜாதி, மத, சமய கண்டனப் பாடல்களே என்றால் மிகையில்லை. உரைநடையில் வள்ளலார் வலியுறுத்தி உள்ள கருத்துக்களுள் மிகுதியானவை இவையே ஆகும்.

கடவுள் - மதக்கருத்துக்களுக்கு ஆதரவாக வாதிடு வோர் "மனிதர்களை நெறிப்படுத்திடத்தான், ஒன்றுபடுத் திடத்தான், ஒழுக்கவாதிகளாக உருவாக்கிடத்தான் மதங் களும், சமயங்களும் உருவாக்கப்பட்டன" என்பார்கள். ஆனால் இன்று நாம் பார்க்கும் உலகில் போர்கள் ஏன்? எதனால்? என்றால் மதங்களால் தான் என்பதே விடையாகக் கிடைக்கும். நாடுகளுக்குள்ளே - சச்சர வுகள், மனிதர்களுக்குள்ளே மோதல்கள் எல்லாவற்றுக் கும் முதன்மைக் காரணியாக காட்சி தருவது மதமே. ஜாதிக்கோட்பாடே, மதக்கருத்துக்களே இன்றைய இந்தியத் துணைக்கண்டத்தின் வளர்ச் சிக்குத் தடை.. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. ஜாதிக் கலவரங் களும், மதவெறிக் கலவரங்களும் மனித அழகியலை அழிக்கின்றன. காரல்மார்க்ஸ் கூறுவார், "மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிர்களின் துயரப்பெரு மூச்சு; இதயம் இல்லாத உலகத்தின் இதயம். உயிரற்ற நிலைகளின் உயிர். மக்களுக்கு மயக்கம் ஏற்படுத்தும் அபின் போன் றது" என்று, "கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதனை வெறுப்பதும்; கடவுளை தொழுவதும்தான் மதக்கோட் பாடுகள்" என்று இங்கர்சால் கூறியதும் நினைவில் கொள்ளத்தக்கதே!

அடுத்த நூற்றாண்டுக்கு...

"மதம் மனிதனை மிருகமாக்கும்

ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்"

என்று பெரியார் கூறியதும், "மதம் அற்ற இடத்தி லேதான் மனித சமத்துவம் நிலை பெறமுடியும்" என்ற தும் கூட 19ஆம் நூற்றாண்டில் வள்ளலாரின் அறி வுறுத்தலை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் சென்ற புரட்சிக் கருத்துக்களே ஆகும்.

சமுதாய ஒற்றுமைக்கு ஜாதி, மத, சமயக் கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மதம் எனும் பேய் பிடித்து ஆட வேண்டாம் என்றும், ஜாதி மதக்கருத்துக்கள் எல்லாம் சாத்திரக் குப்பைகள் என்றும், சமய மத நெறி யெலாம் பிள்ளை விளையாட்டு என்றும், மனிதர்கள் வேறுபட்டு நின்று போரிட்டுக் கொள்ளும் வீண் கருத் தாக்கம் என்றும் வள்ளலார் அறிவுறுத்திய பாங்கு எந்த அளவு மனித நலத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அக்கறையைக் காட்டுகிறது. ஜாதிக்கும், சமயத்துக்கும், மதத் துக்கும் எதிராக சமர் செய்ய வேண்டியவர்கள் சன் மார்க்கிகள் என்பதை உணர வேண்டும்.

- (தொடரும்)

- விடுதலை நாளேடு 14 11 19

வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! (2)

டாக்டர் துரை.சந்திரசேகரன்

(வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாயப் புரட்சி' எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் வாசித்த கட்டுரை)

நேற்றையத் தொடர்ச்சி...

வீண்வாதம்

"பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்

சென்னெறி அறிந்திலர் செறி இருள் அடைந்தனர்

ஆதலின் இனி நீ

புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும்வான்

புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்

தன்னெறி செலுத்துக"

"சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போங்காட்ட நேராகவே"

"வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறீயீர் - சூதாகச்

சொன்ன அலால் உண்மைவெளி தோன்ற உரைத்தலிலை

என்ன பயனோ இவை"

சாத்திரக் குப்பை

மனு சாத்திரங்கள் முதல் வாஸ்து சாஸ்திரம் வரை, அனைத்து சாஸ்திரங்களும் தடுமாற்றம் ஏற்படுத்தக் கூடியனவே தவிர நல் வழிகாட்டங் கூடியன அல்ல என்பது அருளாளர் வள்ளலாரின் அருமையான கருத்து. மக்களைப் பிரிக்கவும், வேற்றுமையை ஓங்கச் செய்ய வுமே அவைகள் உதவும். எனவே இதுவரை பரவியுள்ள பல்நெறி சமய - மதக்கருத்துக்கள் மன்பதைக்கு பவநெறி கருத்துக்களே ஆகும். அறியாமை இருள் மட்டுமே அதனால் நிறைந்தது. பொது நெறியான அருள்நெறியான உண்மை சன்மார்க்க நெறி நின்று ஒழுக வாரீர் என்று அழைத்தவர் வள்ளலார்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளு வனின் கருத்தே வள்ளலார் கருத்து.

"காணப்பா சாதிபேதம் எங்கட்கில்லை

கருத்துடனே எங்கள் குலம் சுக்கிலம்தான் - மைந்தா

தோணப்பா தோணாமல் சாதி மதம்

சொல்லுவோர் சுருக்கமாகச் சுருண்டு போவார்"

"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்"

"பறைச்சியாவ தேதடா, பணத்தியாவ தேதடா

இறைச்சி தோல் எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ

பனத்தி போகம் வேறெதோ

பறைச்சி போகம் வேறெதோ

பகுந்து பாரும் உம்முளே"

என்றும் கருத்துக்களை விதைத்த சித்தர்களின் அறிவுக் கருத்துக்களே வள்ளலாரின் கருத்துக்கள்.

சூதான வேதம்

வேதத்தில் இல்லாத கருத்துக்களே இல்லை என்று பொய்வாதம் பேசுகின்றார் பலர். உண்மையில் வேதத் தில் அசிங்கமும், ஆபாசக் கருத்துக்களும், கொலை பாதகச் சுலோகங்களும் மட்டுமே உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மறுப்புக் கருத்துக்களே, பார்ப்பனீய பாதுகாப்புக் கருத்துக்களே வேதங்களில் மிளிர்ந்து காணப்படுகின்றன. பார்ப்பனர்களுக்குத் தங்களை அடிமைகளாக ஒப்புக் கொடுக்காதவர்கள் மீதான துவேஷமே வேதங்களில் விரவிக்கிடக்கின்றன.

"அக்னியே! எங்களை துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்துவிடு!"

"இந்திரா! சத்ரு சேனையை மயக்கம் செய்க. கண்களைப் பிடுங்கு; அவனைக் கொல்; எலும்புகளை நொறுக்கு; அவன் ஜீவனற்றவனாகுக; அவன் சுவாசம் நீங்குக"

"இந்திரனே! வஜ்ஜிராயுதத்தால் அவர்கள் சிரங்களை துண்டித்திடுக"

"எங்கள் எதிரிகளை ருத்ரன் நாசம் செய்க!"

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுலோகங்கள் அனைத் தும் அதர்வண வேதத்தில் உள்ளவைதான்!

இப்படி வேத மந்திரங்கள் முழுக்கவும் பார்ப்பன ரல்லாத மக்கள் மீது வெறுப்புதான். முழுக்கவும் பார்ப் பனர் சுயநலம்தான் மிகுந்திருக்கிறது. அதனால்தான் வள்ளலார் எந்தப் பயனுமில்லாத வேதங்கள் அனைத் தும் சூதாகச் சொன்னவை என்றார்.

மண்மூடிப் போகட்டும்

"புல்லலா மனத்தேன் என்னிலும் சமயம்

புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்

சொல்லவா பிறரைத்  துதிக்கவா சிறிதோர்

சொப்பனத் தாயினும் நினையேன்"

"மலைவுறு சமயவலை அகப்பட்டே மதி மயங்கினேன்"

"இருளான மலம் அறுத்து

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்

வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போக..."

"மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற வேரென்றும் மற்றவர்கள் வாழும்

பதமென்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்க

பட்ட அனுப வங்கள் என்றும் பற்பலவா விரிந்த

விதம் ஒன்றுந் தெரியாது மயங்கினனே"

வள்ளலார் மதிமயங்கி இருந்த காலமாக அவர் மதத்தை, சமயத்தை ஏற்றுக் கொண்டிருந்த காலத்தை குறிப்பிடுகிறார். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுமெனில் மருளினை இருளினை ஏற்படுத்தும் மார்க்கங்கள் எல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்கிறார். அதுவும் வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகட்டும் என்கிறார். சமயங்களை அடிமைப்படுத்தும் வலை என்கிறார், பொய்நெறி என்கிறார். அவரின் சிந்தனைகள் இன்றைக்கும் வழிகாட்டும் நெறிகளாக நின்று உண்மையை போதிக்கின்றன.

புராண, இதிகாச, வேத கருத்துக்கள் இந்திரஜால கருத்துக்கள் -  அதாவது ஏமாற்று கருத்துக்கள் என்பதே வள்ளலாரின் கருத்து. இவைகள் விதித்த நெறி முழுவதும் சூதாகச் சொன்னவைகளே. அறிவுதான் இவற்றின் உண்மையை உள்ளதை உள்ளபடி உணர காரணம் ஆயிற்று என்கிறார் வள்ளலார். பாடலைப் பாருங்கள்:

வெற்றுச் சொற்கள் இவை

"இயல்வேதா கமங்கள் புராணங்கள் இதிகாசம்

இவை முதலா இந்திரசாலம் கடையாய் உரைப்பர்"

"வேதநெறி  ஆகமத்தின் நெறி பவுராணங்கள்

விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே சித்தமே"

"கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக"

வள்ளலாரைப் போல வேதங்களை, இதிகாச புராணங்களை வெறுத்தொதுக்கியவர்கள் அப்போது இல்லை என்றே சொல்லலாம். வேத பாராயணங்கள் வெற்றுச் சொற்கள் என்பதுணர்ந்து விமர்சனம் செய் தவர் அவர்.

இப்படிப்பட்ட வெறுப்பை மட்டுமே விதைக்கும், வேத - இதிகாச - புராண கருத்துக்கள், கலை - காவியம் என்ற பேரால் புகுத்தப்பட்ட கருத்துக்கள் முழுவதுமே கற்பனைகள். அந்தக் கற்பனைக் கருத்துக்கள் ஏற்படுத் திய கண்மூடி வழக்கங்கள் அனைத்தும் மண்மூடிப் போகட்டும் என்கிறார் வள்ளலார். புத்தாக்கச் சிந் தனைகள் தானே இவை; புரட்சிக் கருத்துக்கள் தானே பத்தொன்பதாம் நூற்றாண்டில்!

சமயக்கூட்டம் என்பது கொள்ளைவினைக் கூட் டுறவால் கூட்டப்பெற்ற கூட்டம். அக்கூட்டத்தே கூவுகின்ற கள்ளமுறும்  கலைகள் காட்டிடும் கதியும், காட்சிகளும், அந்த காட்சிகள் ஏற்படுத்திய கடவுளரும் பிள்ளை விளையாட்டு என்கிறார் வள்ளலார். ஆம்! சிறுபிள்ளைகளாக நாம் இருந்தபோது சிறிய சிறிய பொம்மைகளை வைத்து விளையாடினோம்.பெரிய வர்களானதும் பெரிய பெரிய பொம்மைகளை (கடவுளர் உருவங்களை) வைத்து விளையாடுகிறோம்... உண்மை தானே வள்ளலாரின் கூற்று! இதோ படியுங்கள்...

நால்வருண மோசடி

"கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்

காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம்

பிள்ளைவிளை யாட்டென நன்கு அறிவித் தனையே..."

"நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம்

நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே..."

வேதங்கள் விளைத்தவை நால்வருணக் கோட்பாடு; மனு சாத்திரம் உரைத்தது வருணாசிரமம்; கீதை பகன்றது பாழும் நால்வருண வேற்றுமை விதைகள்.

"முகத்திலே பிறந்தவன் பிராமணன்

தோளிலே பிறந்தவன் சத்ரியன்

இடுப்பிலே பிறந்தவன் வைசியன்

காலிலே பிறந்தவன் சூத்திரன்"

இதுதான் நால் வருணம். நானே படைத்தேன் என்று பகவான் (!) கிருஷ்ணன் சொன்னதாக (சதுர்வர்ணம் மாய சிருஷ்டம்) கீதா உபதேசம் உபதேசிக்கிறது. பிரம்மா படைத்ததாக உரிமை கோருகிறது மனுசாத்திரம். இப் படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் பிள்ளை விளையாட்டே என்று வருணாசிரமக் கோட்பாட்டை தகர்த்து எறிகிறார் வள்ளலார்.

உயர்ந்த நெறி...

உயர்ந்த நெறியை போதித்த வள்ளலாரின் நெறியினின்று வாழ முற்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும், வேதங்களை, இதிகாச, புராணங்களை, சாத்திரங்களை வெறுத்து ஒதுக்கி வாழ வேண்டும். இவற்றின் சாரங்கள் அனைத்தும் வெறும் குப்பைகள். இவற்றை புன்செய் நிலத்தில் எருவாக்கிப் போட வேண்டும். ஜாதி, சமய, மத வழக்கங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். ஏனென்றால் அவெயெல்லாம் சூதாகச் சொல்லப் பட்டவை.

வீணே அழியாதீர்...

"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே"

"எய்வகை சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்

எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வமென்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென்றறீயிர்"

"சாதிகுலம் என்றும் சமய மதம் என்றும் உப

நீதியில் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிக்க வேதியர்தம்

வாலாட்டடந் தீர்ந்தனவே மற்று"

வேதியரின் வாயாட்டம்

ஜாதிகுலம் என்பதோ, சமய மதமென்பதோ, உபநிடதங்கள் என்பதோ வெறும் பேயாட்டம். அதாவது கற்பனை. இந்த கற்பனை எல்லாம் நிலையென வலி யுறுத்தியவர்கள் வேதியர்களே. அவர்களின் வாயாட்டம் இனியும் எடுபடாது - தீர்ந்தனவே என்கிறார் வள்ளலார். (வாயாட்டம் மட்டுமன்று வாலாட்டமும் இருக்கிறது - அதனை விரட்டியாக வேண்டும்.)

ஜாதியிலும், மதங்களிலும், சமயநெறிகளிலும், சாத்திரங்களிலும், கோத்திரச் சண்டையிலும் விருப்புற்று அலையும் மக்களைப் பார்த்து வள்ளலார் சொல்கிறார் "அலைந்து அலைந்து அழியாதீர்கள் - மனிதருக்கு அழகல்ல" என்று அறிவுறுத்துகிறார்.

மதங்களும், சாத்திரங்களும் எடுத்துரைத்த தெய் வங்களை எல்லாம் எமது எமது என கொண்டாடு கின்றீர்கள். கடவுள் ஒருவரே என்று உணர மறுக்கிறீர்கள் என்று 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் திருமூலரின் கருத்தை வழிமொழிகிறார் வள்ளலார்.

இதோ வள்ளலாரின் உச்சமான திருமுறை பாடல்கள்:

"சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்"

"இருட்சாதித் தத்துவச் சாத்திரக்குப்பை

இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம

வழக்கமெலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக..."

"சாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு அறியேன்

சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன்"

"கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலனொன்றுங் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்..."

"சாதியை நீள் சமயத்தை மதத்தையெலாம் விடுவித்தேன்

சாதி மதம் சமயமெனும் சழக்கையும் விட்டேன்"

இன்றைக்கும் நாட்டை பீடித்து பிற்போக்குத் தனத்தில் மூழ்கச் செய்யவும், மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும், மனிதனைவிட மாடுகளுக்கு மகத்துவம் பேசவும் ஆன நிலையும், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேசம் என்ற தேசிய இனங்களின் உணர்வுகளும் உரிமைகளும் மறுக்கப்படவுமான முடிவும் நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத்தும்? மதப்பித்தம் தலைக்கேறி மனிததத்துவம் சிதைக்கப்படும் நிலையில் அன்பும், கருணையும் நிறைந்த வள்ளலாரின் கருத்துக்கள் அவசியம் தேவையாகிறது. வாடிய பயிரைக் கண்டபோது வாடிய உள்ளம் பெற்றவர் வள்ளலார். பயிர் வாடியபோதே வாட்டம் அடைந்த வள்ளலார் மனித உயிர் வாடும் சூழலில் இன்றைக்கும் தேவைப்படுகிறார். அவரின் அறிவுக் கருத்துக்கள், ஒருமைப்பாட்டுக் கருத்துக்கள் அவசியமாகின்றன. ஜாதியும், மதமும் சமயமும் சாத்திரக் குப்பையும் தவிர்ப்போம்! மாந்தநேயம் தழைத்திட உழைப்போம்!!

(முற்றும்)

-  விடுதலை நாளேடு 15 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக