பக்கங்கள்

சனி, 22 செப்டம்பர், 2018

தினமலரின் அருள்வாக்கு

கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! -தினமலரின் அருள்வாக்கு

தினமலரின் அருள்வாக்கு

***கவிஞர் கலி. பூங்குன்றன்***


கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! என்று தினமலரில் ஒரு கடிதம் வெளிவந்துள்ளது.
ராமானுஜரும், பாரதியாரும் தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பூணூல் போட்டு பெரிய புரட்சியைச் செய்ததாகப் புலம்பும் பேர் வழிக்கு ஒரே ஒரு கேள்வி.
அந்த ராமானுஜரும், பாரதியாரும் அதில் ஏன் வெற்றி பெறவில்லை? அந்த ராமானு ஜரையும், பாரதியையும் பெருமைக்குரிய இடத்தில் வைத்துப் பேசும் பேர்வழிகளை நோக்கி ஒரே ஒரு கேள்வி. அந்தப் பணிகளை இப்பொழுது செய்ய ஏன் தயக்கம்?
சங்கராச்சாரியாரையும், ஜீயரையும் பார்த்துக் கேள்வி கேட்கும் திராணி - நல்ல புத்தி இவர்களுக்கு உண்டா?
காஞ்சிப் பெரியவாளே, சிறீப்பெரும்புதூர் ஜீயர் வாளே மரியாதையாக ராமானுஜரும், பாரதியாரும் மேற்கொண்ட அந்த வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள் - அப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால், இந்த வீரமணிகள் எல்லாம் இப்படித் துள்ளு வார்களா? என்று கேள்வி கேட்கும் அறிவு நாணயம் தினமலர் வகையறாக்களுக்கு உண்டா?
இவற்றிற்கெல்லாம் மூல காரணம் ஜாதிதானே. பூணூல் - கீணூல் பிரச்சினை எல்லாம் இந்தப் பாழாய்ப் போன ஜாதியால் தானே - கடவுள் படைப்பில் மேல்ஜாதி - கீழ்ஜாதி என்று எப்படி இருக்க முடியும்? எல்லாம் நாமாகப் பார்த்து செய்த ஏற்பாடு தானே!
வைஷ்ணவ பெரியவா ராமானுஜர், திருக் கச்சி நம்பி என்ற பிராமணரல்லாதாரைக் குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் - அப்படி இருக்கும்போது, சங்கர மடத்திலும், வைணவ மடத்திலும் திருக்கச்சி நம்பி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை அமர்த்த என்ன தடை? அது சாஸ்திரத் தடையாக இருந்து தொலையட்டும் - எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன - இதில் ஒரு மாற் றத்தைக் கொண்டு வந்தால் வீண் பிரச்சினை கள் தொடை தட்டி வெடித்துக் கிளம்பாதோ என்று சங்கர, ஜீயர் மடாதிபதிகளிடம் கோரிக்கை வைக்க முன்வருவார்களா?
இதே ஜீயரிடம் ஆனந்தவிகடன் சார்பில் திருவாளர் மணியன் பேட்டி கண்டபோது, என்ன சொன்னார்?
இதுதானே இன்றைய நிலை? இதற்கு நாணயமாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் திராவிடர் கழகத் தலைவரைப் பார்த்து வக்கணைப் பேசி என்ன பயன்?
இன்னவர்தான் பூணூல் போட வேண்டும் என யாரும் கூறவில்லையாம் - அடேயப்பா - பொய்யைச் சொல்லு வதற்கு இந்தப் பூணூல் கும்பல் சற்றும் வெட்கப்படாது என்பதற்கு இது ஒன்று போதாதா?
விடுதலையில் ஆதாரத்தோடு எந் தெந்த வருணத்தைச் சார்ந்தவர்கள் எத்த கைய நூலால் பூணூல் தரிக்கவேண்டும் என்பதை அவர்களின் மனுதர்ம சாஸ் திரத்திலிருந்தே எடுத்துக்காட்டப்பட்டு இருந்தது. ஜாக்கிரதையாக மறந்து போயிருந்தால், இப்பொழுதுகூட மீண்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
மனுதர்மம் - அத்தியாயம் இரண்டு; சுலோகம் 42 என்ன கூறுகிறது?
பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும்,
க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை யொத்த முறுவற் புல்லினாலும்,
வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல்லிதாகப் பின்னி மூன்று வடமா மேலே அரைஞாண் கட்ட வேண்டியது.
அடுத்த 43 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
இந்த மூன்றும், அகப்படாத காலத்தில், மேற்சொன்ன மூன்று வருண பிரம்மச்சா ரிகளுக்கும் கிரமமாக தருப்பை நாணல் சவட்டைக் கோரை - இதுகளினால் மூன்று வடம் அல்லது தங்கள் குல வழக்கப்படி அய்ந்து வடமாவது ஒரு முடியுடன் கட்ட வேண்டியது.
அதற்கடுத்த சுலோகம் (44) என்ன கூறுகிறது?
பிராமணனுக்குப் பஞ்சு நூலிலானும்,
க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும்,
வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிரா லும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்கவேண்டியது.
தினமலர் திரிநூல் கூட்டத்துக்கு ஒரே ஒரு கேள்வி.
இத்தனை சுலோகங்களிலும் எந்த இடத்திலாவது சூத்திரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட் டுமே பார்க்கலாம்.
அப்படி சொல்லியிருந்தால், அடே யப்பா எப்படியெல்லாம் சலாம் வரிசை ஆடியிருக்கும் இந்த அக்கிரகார அம்பிக் கூட்டம்!
சொல்லாதது மட்டுமல்ல, தப்பித்தவறி சூத்திரர்கள் அந்தப் பூணூலை அணிந் தால் அவர்களின் கெதி என்னவாகி இருக் குமாம்!
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டி விடவேண்டும். (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 224).
தினமலர் வகையறாக்களுக்கு இப் பொழுது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. விடுதலைக்கோ, வீரமணி அவர்க ளுக்கோ முந்திரிக் கொட்டை மாதிரி பதில் எழுத பேனாவைக் கையில் எடுப்பதற்கு முன்பு அந்த வேலை முடிந்தாகவேண்டும்.
இந்து மதத்தில் இந்த மனுதர்மம் என்பது வெறும் குப்பை - இதனை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறுவதோடு அமைந்துவிடாமல், காஞ்சிபுரத்திலோ அல்லது ஜீயர் சுவாமிகள் சஞ்சரிக்கும் இடத்திலோ ஒரு மாநாடு கூட்டி மனு தர்மத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்திட முன்வரவேண்டும்; அதற்குப் பிறகு வீரமணிகளுக்குச் சவால் விடலாம். தயாரா என்ற சவால் விட்டே கேட்கிறோம்.
1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநில பிரதமராக வந்தபோது ஓர் உத்தரவு போட்டார் - அது என்னவென்று தெரியுமா?
இனி ஆசாரிகள் ஆச்சாரியார் என்று போடக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு - இப்படி உத்தரவு போட்டவருக்கு உடம் பெல்லாம் மூளையாம்! (ஹி... ஹி....)
தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று கூறும் கூட்டம் வக்கணையாக எழுதுவது பாரு...
'எச்சல் பொறுக்கும்  ................... க்கு
ஏப்பத்தைப் பாரு'
என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலை(க்)கிறது.
இன்னொரு பெரிய கேள்வியைக் கேட்டுவிட்டதாக சிண்டை வெளியில் எடுத்து விட்டுக் கேள்வி கேட்கிறது தினமலர்.
கி.வீரமணி ஜாதி பேதம் பார்க்காதவ ரானால், ஈ.வெ.ரா. அறக்கட்டளை தி.க. சொத்துகளுக்கு அதிகாரமிக்கவராக ஆதி திராவிடர் ஒருவரை அப்பதவியில் அமர்த்தி விட்டு, தான் விலகட்டும் பார்க்கலாம்; அப்போது அவரைப் பாராட்டலாம் என்கிறது  தினமலர்.
சபாஷ் சரியான கிடுக்கிப்பிடி - வீரமணி யைத் திணற அடித்துவிட்டதாக ஒரு நினைப்பு.
பெரியார் அறக்கட்டளையில் தாழ்த்தப் பட்டோர் இருக்கக் கூடாது; அதற்குத் தலைவராக வரக் கூடாது என்று எந்த சட்ட விதிமுறையும் கிடையாது. தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்ட தாழ்த்தப் பட்டவர் ஒருவர் தாராளமாக வரலாம் - அதற்கான தடை ஏதும் கிடையாது.
ஆனால், தினமலர் ஜெகத்குரு என்று தூக்கிச் சுமக்கும் சங்கர மடத்தில் பார்ப்ப னரைத் தவிர வேறு யாராவது சங்கராச் சாரியாராக வர முடியுமா?
பார்ப்பனர் அல்லாதார் வரக்கூடாது என்ற தடை. அங்கே இருக்கிறதா, இல் லையா? சங்கர மடத்தில் சமைக்கப்படும் மீதியான உணவைக் கூட சூத்திராள், பஞ்சமாள் சாப்பிட்டு விடக்கூடாது என்று குழிதோண்டிப் புதைக்கும் கும்பலா சமத்துவம்பற்றி எல்லாம் பேசுவது?
திராவிடர் கழகத்தைப் பொருத்த வரையில் கட்சிக்குள் ஜாதி கிடையாது. அந்த எண்ணம் உள்ள எவருக்கும் இடமும் கிடையாது. பொறுப்பில் இருப்பவர்கள் யார்? என்ன ஜாதி? என்று அறிந்திருக்கவும் கிடையாது.
இந்து மதத்தில் உள்ள எந்த ஜாதியி னரும் அதற்குப் பயிற்சி கொடுத்து கோவில் அர்ச்சகராகலாம் என்று சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு 12 பார்ப்பனர்கள் சென்றார்களே - அப் பொழுது எங்கே சென்றது இந்தத் தினமலர் கும்பல். ஜீயரும், சங்கராச்சாரியார்களும், ராஜாஜிகளும் அதற்கு எதிர்நிலை எடுத்தது ஏன்? அடியாட்கள் தேவைப்பட்டால் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்பதும், நாங்களும் இந்துக்கள்தானே - முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று விட்டோமே நாங்களும் ஏன் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கேட் டால், ஆகமங்களைக் காட்டி ஏய்ப்பதும் தானே பார்ப்பனப் புத்தி!
உண்மையான தொண்டினால் கழகத் தின் எந்த முக்கிய பொறுப்புக்கும் எவரும் வரலாம். அதுதான் இங்கு நடைமுறை.
தினமலர்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக்கூடாது.
பிராமணர்கள் உடல், பொருள் அனைத் தும் இழந்து தேச விடுதலைக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் போராடியதை மறக்க முடியுமா? என்று கேள்வி கேட்கும் தினமலருக்கு ஒரு கேள்வி. அது உண்மையாக இருந்தால், இந்து மதத்தின் நான்கு திசைகளிலும் உள்ள சங்கராச்சாரி யார்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு அறிக்கையைக் கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் - ஜீயர்கள் அவர்களோடு சேர்ந்து வரமாட்டார்கள் - அவர்கள் வேண்டு மானால், தனியாகவே அறிக்கை கொடுக் கட்டும்.
இந்து மதத்தில் நிலவும் தீண்டாமையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - தீண்டாமையையும், அதற்கு மூல வேரான ஜாதியும் ஒழிக்கப்பட வேண்டியவைதான் - இந்துக்களே இன்று முதல் இவற்றை விட்டுத் தொலையுங்கள் - இந்துக்கள் அனைவரும் சரி சமம் என்று ஒரே ஒரு அறிக்கையை வெளியிடச் செய்யுங்கள் பார்க்கலாம்.
தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியார், காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியை பாலக்காட்டில் (15.10.1927) சந்திக்கச் சென்றபோது (மாட்டுக் கொட்ட கையில்தான் காந்தியாரை உட்கார வைத் துப் பேசினார் சங்கராச்சாரியார் என்பது நினைவில் இருக்கட்டும்) காந்தியாரிடம் சங்கராச்சாரியார் என்ன பதில் சொன்னார்?
ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்க ளையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார் களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியி ருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.
(நூல்: தமிழ்நாட்டில் காந்தி, பக்கம் 576).
கடைசியாக ஒரு கேள்வி: திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரைக் கிலோ எடையில் தங்க பூணூலையும், திருப்பரங் குன்றம் சுப்பிரமணிய சாமிக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்கப் பூணூலையும், காஞ்சி சங்கராச்சாரியார் அணிவித்தாரே, சிறீரங் கம் ரங்கநாதனுக்கு ரூ.52 லட்சம் செலவில் நாராயண ஜீயரும் தங்கப் பூணூலை அணிவித்தாரே, (தினமணி, 27.2.2014) கடவுளையும் பார்ப்பன ஜாதியில் சேர்த்து விட்டதை என்ன சொல்ல! பார்ப்பானை ஒழித்தால் கடவுளும், கடவுளை ஒழித்தால் பார்ப்பானும் ஒழிந்துவிடுவான் என்பது தானே உண்மை.


பார்ப்பனர்களிலேயே உயரமான பீடாதிபதியாக இருக்கக்கூடிய லோகக் குரு ஒருவரின் மனப்பான்மையே இப்படி பச்சை யாக தீண்டாமையை வலுவாகப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது, தினமலர்க் கும்பல் எந்தப் பார்ப்பனரை நம்பச் சொல்லு கிறது என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் அரிய கேள்வியே!
******************************************************************************************

இதுதான் இந்து மதத்தின் ‘ஜாதி பாராமைக்கான’ இலட்சணமா?


கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே... அதைப் பற்றி?

சங்கராச்சாரி: அர்ச்சனை நடந்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரி இல்லை.

கேள்வி: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்கு பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி அவர்களுக்கு ஏற்படலாமே?

சங்கராச்சாரி: அவர்களுக்கு தகுதி இல்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றி விவாதத்திற்கே இடமில்லை.

கேள்வி: ‘சாதுர்வர்ணயம்மயா சிருஷ்டம்’ என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றிச் சுவாமிகள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சங்கராச்சாரி: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

கேள்வி: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியர் கூறுகிறார்?

சங்கராச்சாரி: 
இக்காலத்துக் குணகர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குணகர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சுலோகத்தில் சொல்லப்படும் குணகர்மா முற்பிறவி சம்பந்தப்பட்ட குணகர்மாவாகும். ஒரு பிராமணன் தன்னுடைய கடமைகளைச் செய்யாவிட்டால் அடுத்த பிறவியில் கடவுள் அவனைத் தண்டிப்பார்.




- பூரி சங்கராச்சாரியாரிடம் மணியன் பேட்டி,
‘ஆனந்த விகடன்’, 16.6.1974

                ------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 22-9-2018  ‘விடுதலை’ ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

லவ் ஜிகாத்! விவேகானந்தர் -125



மத மாற்றத்துக்கும், கீழ் மைக்கும் யார் பொறுப்பாளி? இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதி கம் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல் வது அறிவுடைமை ஆகாது.

நம்நாட்டிலுள்ள ஜமீன் தார்களிடமிருந்தும், புரோகிதர் களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந் துக்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறினார்கள்.

வங்காளத்தில்விவசாயி களுக்கிடையில் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற் குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவ சாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார்களுடைய கொடு மையிலிருந்து விலகிக் கொள் வதற்காக இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.

தோட்டிகளையும், பறை யர்களையும் இன்றைய இழி நிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு:

அவர்கள் கீழ்நிலை அடை வதற்குஆங்கிலேயர்கள்பொறுப் பாளிகள் அல்லர்.

அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப் பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும், நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப் பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர் களும் இருக்கிறார்கள்.

மேலும் நாம் சோம்பேறி களாக விருக்கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சாகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை . ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையில்லுள்ள மக்களைப் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.''

(தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு, கார்த்திகை மாதம் சக் கரம் -31 ஆரம் - 10).

இவ்வளவையும் சொல்லி இருப்பவர் யார் தெரியுமா?

அமெரிக்கா - சிகாகோவில் இந்து மதம்பற்றி உரையாற்றிய 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடும் இந் துத்துவாவாதிகளே - அந்த விவேகானந்தர்தான்!

லவ் ஜிகாத்' பேசி என்ன பயன்?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 14.9.18

பாரதியார் ? பாரதி - யார் ?


October 15, 2008

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...

Real Face !!!

Reeeeeel Face !!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!

என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக கட்டமைத்து, எழுதியும் பேசியும் வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை தன்னுடைய தேவியாக புகழ்ந்தவர் பாரதி..

3. மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்களே என்று விளித்து எழுதப்பட்ட கடிதங்களில், தான் ஒரு பார்ப்பணராக இருப்பதால் தன்னுடைய உடலுக்கு சிறை வாழ்வு ஒத்துவராது என்று கூறி தன்னுடைய சாதியை வெளிப்படுத்தியும், அந்த சாதியால் ஏதாவது பிஸ்கெட் துண்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் வாழ்ந்த "குடுமி" பாரதி...ஒரு முறை இருமுறை அல்ல, பல்வேறு மன்னிப்பு கடிதங்களை நாளாந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பி கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் பாரதி..

4. 1916 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில், ஆங்கிலேயர்களே, இந்தியாவை விட்டு போய்விடாதீர்கள் என்று அற்புதமான கட்டுரையை எழுதியவர் இந்த பாரதி..

5. தன்னுடைய தந்தையார் வறுமையில் வாடியதை எழுத்தில் எப்படி வடித்தார் தெரியுமா பாரதி ? மனு தர்மப்படி வியர்வை சிந்தி பார்ப்பணர் உழைப்பது அநீதி, அப்படிப்பட்ட அநீதி தன்னுடைய தந்தையாருக்கு நேர்ந்துவிட்டது என்று எழுதினார். இவரா தேசியக்கவிஞர் ? இவரா சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடினார் ?

6. 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' என்று வருணபேதத்துக்கு ஆதரவாக எழுதிய இவரை எந்த குடுமி குரூப்பில் சேர்த்தாலும் பிட் ஆகிவிடுவார் என்று நான் நினைக்கிறேன்...நீங்க ?

7. "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று எழுதி தன்னுடைய கொண்டையை வெளிப்படையாக காட்டியவர்தானே இந்த பாரதி ?

8. "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" என்று சொன்னவர் பாரதி. இவரை ஆர்.எஸ்.எஸ்ஸிலோ, பஜ்ரங் தள் இயக்கத்திலோ கொண்டாடுவதன் அர்த்தம் இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

9. 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' என்று தலித் மக்களை பார்த்து சொன்ன பாரதியின் முண்டாசுக்குள் இருந்தது சாதீயப்பற்றல்ல...சாதீயப்புற்று !!!

10. பாரதி எப்போது எக்குத்தப்பாக மாட்டினாலும் அவரை சிறை மீட்பது, வேலை கொடுப்பது, வைத்து பராமரிப்பது கீழ்க்கண்டவர்களே..நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர், மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார்....இவர்கள் அனைவரும் பார்ப்பனீயத்திலும் சாதி வெறியிலும் ஊறியவர்கள்...வேறொன்று சொல்ல விரும்பவில்லை, வாசிக்கும் நீங்களே பாரதியின் டவுசரை உருவிக்கொள்ளுங்கள்...

11. இஸ்லாமியர்களை பற்றிய பாரதீயின் டெபனிஷன் : "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" அவ்ளோதான்...ஏன் பாரதீய ஜனதா பார்ட்டி பாரதீயை கொண்டாடாது ? "தீ" என்று ஒரு எழுத்தை அழுத்தியது, தீமையை குறிக்க. வேறொன்று நினைக்காதீர்...

12. திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று டென்ஷனாகிய பாரதிக்கு வெள்ளை நிறத்திலொரு பூனை என்று மதநல்லினக்கத்தை பொய்யாக வலியுறுத்துவதற்கு பதில் ஒரு மண்ணாங்கட்டியும் எழுதாமல் இருந்திருக்கலாம்...

13. "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது....ஒரிஸ்ஸாவில் பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் கலவரக்காரர்களுக்கு ஆதார விதை இதுபோன்றவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் தானே...நினைவிருக்கட்டும், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு.

14. கடலூர் சிறையில் இருந்து பாரதி எழுதிய "புரச்சி" கடிதம்.

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************

நன்றி போர்முரசு வலைப்பூ : http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

சான்றாதார நூல்கள்:

1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====
நன்றி, கற்பக விநாயகம்!

தமிழ் ஆர்வம் என்றால் இங்கே பெரும்பாலானோருக்கு..."எனக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் தெரியுமா" என்பார்கள்...அவர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருக்க காண்கிறேன்...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய மணிரத்தினம் ( Rajeev Menon) ஒரு க்ராஸ்பெல்ட். அவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பாரதியார் கவிதைகள் சொன்னது நல்லாத்தான் இருந்தது...ஐ மீன் ஒன்லீ ஐஸ்வர்யா ராய்.

பாரதி-யாரின் உண்மை முகத்தை பார்க்க உதவிய போர்முரசு வலைப்பூவுக்கு நன்றி...நன்றி ஸ்பார்டகஸ்.......இணையத்தில் தரவுகளை தேடியபோது ஒரே பதிவு...ஒன் ஷாட் ஆக போர்முரசு வலைப்பூ கிடைத்தது...நன்றி...!!!

நன்றி!

http://tvpravi.blogspot.com/2008/10/blog-post_14.html?m=1

வியாழன், 6 செப்டம்பர், 2018

எது "காலாவதியான சிந்தனை?"

.க.வுக்கு அறிவுரை சொல்லுவதற்கு - சம்மன் இல்லாமல் ஆஜராவதில் முந்திரிக்கொட்டையாக முறுக்கிக் கொண்டு கிளம்புவதில் முதலிடத்தில் 'துக்ளக்' இருக்கிறது - அதன் ஆசிரியர் திருவாளர் குருமூர்த்தி அய்யர் இருக்கிறார்.

இதற்கு முன்பும் கூட இதுகுறித்து 'விடுதலை' எழுதியதுண்டு. 'திருவாளர் குருமூர்த்தி அவர்களே - உங்கள் அறிவுரை திமுகவுக்குத் தேவையில்லை!' என்று எழுதியதுண்டு.

ஆனாலும் தொடர்ந்து அதே வேலையை அது செய்து கொண்டுதான் இருக்கிறது.

திமுக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் - கலைஞரோடு அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தப் பழைய போக்கிலிருந்து மாறவேண்டும்; அப்படி மாறினால்தான் அவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வரமுடியும் என்று கருத்துத் தானம் செய்து கொண்டு வருகிறது.

கேள்வி: சமீபத்தில் ஈரோட்டில் நடந்த திமுக மண்டல மாநாடு பற்றி தங்கள் கருத்தென்ன?

துக்ளக் பதில்: சடங்கு போல நடந்திருக்கிறது என்று தோனுது அது. பெரிய உற்சாகமோ, புத்துணர்வோ, புதிய சிந்தனையோ, புதிய உத்தியோ இருந்தது போன்று தெரியவில்லை. திமுக முன்னே செல்வதற்குப் பதில் பல காலம் பின்னே சென்று தி.க.வின் நிலையைத் தழுவுவது போல் தோன்றுகிறது என்று எழுதியது 'துக்ளக்'.

காஞ்சிபுரம், ஏப். 17- தமிழகத்துக்கு ஆன்மிக அரசியல் தான் தேவை என 'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக கடந்த 9ஆம் தேதி முதல் தக்ஷிண காளி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தப்பட்டு வருகின்றன. புதன் கிழமை வரை நடைபெற உள்ள இந்த ஹோமத்தை ஸ்தானிகர் நடராஜ சாஸ்திரி நடத்தி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹோமத்தில் 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி பங்கேற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்துக்குத் தற்போதைய தேவை ஆன்மிக அரசியல்தான். ஆன்மிக அரசியலை யார் பேசினாலும் அவர்கள் தேவை என்று குறிப்பிட்டார் ('தினமணி', 18.4.2018, பக். 5).                                                                                                         

ஃ ஃ ஃ ஃ ஃ


சொன்னவர் உங்கள் மூதறிஞர்

திராவிட இயக்கத்தவர்கள் அரசியல் எதிரிகளை தரக்குறைவாகப் பேசுவார்கள், கலைஞரும் அப்படிதான் என்று கலைஞர்மீது அவதூறுக் கணைகள் வீசப்படும் கட்டுரை ஒன்று இவ்வார 'துக்ளக்'கில் இடம் பெற்றது.

பெரியார், அண்ணா, கலைஞர் பிம்பங்களை உடைக்கப் போகிறார்களாம். அதையும்தான் சந்திப்போமே.

உங்கள் ஜெகத் குருவின் காம கஷாய வேட்டி தான் ஆகாயத்தில் பறந்ததே - விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டுப் பேசியதை விடவா?

வேலைக்குச் செல்லும் பெண்களை ஒழுக்கக் குறைவானவர்கள் என்று காஞ்சிபுரத்து ஜெயேந்திரர் கூறியதை விடவா?

நேருவின் அழகில் மயங்கிப் பெண்கள் ஓட்டுப் போட்டு விடுகிறார்கள் என்று உங்கள் ஆச்சாரியார் (ராஜாஜி) கூறியதை விடவா?

நாத்திக அரசியல், தமிழ்ப் பிரிவினைவாதம் போன்ற தனது பழைய பாணியிலிருந்து திமுக மாறினால் அதற்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது, தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்பது வெளிப்படை ('துக்ளக்', 14.3.2018, பக். 15)

ஃ ஃ ஃ ஃ ஃ


திமுகவின் காலாவதியான சிந்தனைகளையும், சித்தாந்தங்களையும் ஒதுக்கிவிட்டு, காலத்திற்கேற்றாற்போல ஸ்டாலின் திமுகவை மாற்றினால் திமுக மாநில அளவிலான தேசிய கட்சியாக மறுஜென்மம் எடுக்கும். தமிழகத்துக்கு நல்லது, பாரத நாட்டுக்கும் நல்லது ('துக்ளக்', 12.9.2018, பக். 5).

திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவக் கொள்கைகளைத் திமுக தொடர்ந்து கடைபிடிக்கும்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் பயணம் தொடரும் என்று திரும்பத் திரும்ப சொன்னதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் துக்ளக் - ஏன், இந்த வார இதழில் கூட -  (12.9.2018) பழைய பஞ்சாங்கத்தையே திருப்பித் திருப்பி எழுதுவது எப்படி? “முதலையும், மூர்க்கனும் கொண்டது விடான்” என்ற தன்மையிலே எழுதுகோல் பிடிப்பானேன்?

ஏன்? ஏன்?

குருமூர்த்தி வகையறாக்களுக்கு ஒரு தகவல். சமூக சீர்திருத்தம், மறுமலர்ச்சி  காண விரும்பிய புத்தர் முதல் மகாத்மா பாபுலே, நாராயணகுரு, வேமண்ணா, தந்தை பெரியார், அம்பேத்கர் உள்பட அனைவரும் பார்ப்பன எதிர்ப்பாளர்களாக இருந்தார்களே ஏன்?

எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? 1971இல் சேலத்தில் அடிபட்டும் இன்னும் புத்தி கொள்முதல் பெறவில்லையே ஏன்? பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்பாரே தந்தை பெரியார் - அதுதானோ?

“எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி, காலத்தால் நலிந்து வரும் தி.மு.க.வின் சிந்தனைகளிலும், சித்தாந்தங்க ளிலும் ஸ்டாலின் மாறுதல் கொண்டு வரவேண்டும். நாத்திகம், திராவிடம், தமிழ் தீவிர வாதம், ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு, மாநில சுயாட்சி போர்வையில் பிரிவினை வாதம் போன்ற சித்தாந்தங்களையும், சின்னங்களையும், அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்வது போல தொட்டு, அதனால் வரும் பாதிப்புகளை தன்னுடைய திறமையாலும், நாவன்மையாலும் சமாளித்து வந்தார் கருணாநிதி. கருணாநிதியின் அந்த யுக்தி அரசியலால், காலாவதியான அந்த சிந்தனைகளும், சித்தாந்தங்களும் தி.மு.க.வின் அடையாளங்களாகவும், பிம்பங்களாகவும் ஆகி விட்டிருக்கின்றன. தங்களுக்கு அது ஏற்புடையது இல்லை என்றாலும், தி.மு.க.வின் அந்த பிம்ப சிந்தனைகளைப் பெரும்பாலான தி.மு.க.வினர் கருணாநிதிக்காக சகித்துக் கொண்டனர் என்பதுதான் உண்மை. காலத்துக்கு ஒவ்வாத அந்த பிம்ப கொள்கைகளை ஸ்டாலின் ஒதுக்க வேண்டும். அவர் தலைவரானவுடன் ‘தி.மு.க. கடவுளை எதிர்க்கும் கட்சி அல்ல’ என்று பேசியது வரவேற்கத்தக்கது. அவர் அத்துடன் நிற்காமல் நாத்திகம் என்பது தனிமனிதக் கொள்கை , அது தி.மு.க. வின் முகமல்ல என்று கூறவேண்டும்''.  ('துக்ளக்', 12.9.2018, பக். 4)

நாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு, மாநில சுயாட்சி, திராவிடம் என்பதெல்லாம் பார்ப்பனர் பார்வையில் எப்பொழுதுமே தீவிரவாதமாகத்தான் தோன்றும்.

அவர்கள் பார்வையில் இவையெல்லாம் பிற்போக்கு - காலாவதியானவை. இராமாயணம், மகாபாரதம், மனுதர்மம், கீதை பற்றி 'துக்ளக்'கில் இன்றுவரை பக்கம் பக்கமாக எழுதுவது எல்லாம் முற்போக்கு! காலாவதியாகாத கங்கு பட்டர் தத்துவம்.

பிர்மா என்ற ஆண் கடவுளின் முகத்தில் பிரசவம் ஆனது என்பதுதான் அவர்கள் பார்வையில் விஞ்ஞானத் தத்துவம்.

பார்ப்பனர்கள் இன்னும் ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் வர்ணாசிரம திமிரிலேயே மிதக்கிறார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

இன்றுவரை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் பூணூலைப் புதுப்பிக்கிறார்களே - இதன் பொருள் என்ன? நாங்கள் பிர்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர்கள் - நாங்கள் துவி ஜாதியினர் (இருபிறப்பாளர்) என்பதால் ஒவ்வொரு ஆவணி அவிட்டத்தின் போதும் பூணூலை அணிகிறோம் - புதுப்பிக்கிறோம்.

நீங்களோ பிறப்பில் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள்!

அதைத்தான் எங்கள் ஹிந்து மதம் கூறுகிறது - மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது - வேண்டுமானால் மனுதர்மம் அத்தியாயம்  எட்டு 415ஆம் சுலோகத்தைப் பாருங்கள்.

தேவடியாள் மகன் என்பது உட்பட சூத்திரன் ஏழு வகைப்படுவான் என்பதை ஒப்புக் கொண்டே தீரவேண்டும்.

மனுதர்மத்தின் அதே அத்தியாயம் 413ஆம் சுலோகத்தையும் கண்டிப்பாகப் படியுங்கள்.

பிராமணன் சம்பளம் கொடுத்தேனும், கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில் அவன் பிராமணனின், வேலைக்காகவே பிராமணனால் சிருஷ்டிக் கப்பட்டவன் என்கிற இந்த ஹிந்து மதத்தை எதிர்த்தால், மனுதர்மத்தை எரித்தால் நாங்கள் தீவிரவாதிகளா?

எந்தப் பொருளில் அவர்கள் சொன்னாலும் நாங்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தான். அதற்காகப் பெருமையே படுகிறோம். தீவிரமாகப் பாடுபடுங்கள் தோழர்களே என்று சொல்லுவதில்லையா - அதே போல்தான்.

தீவிரவாதிகள் என்றால் வன்முறையாளர்கள் என்று பொருளல்ல. போலீஸ்காரன் தாக்கினால் அவன் முகத்தைப் பார்க்காதே. முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்ன தலைவரின் தொண்டர்கள் கருஞ்சட்டையினர்.

“இரத்தப் பரிசோதனை செய்து ஆரியர் - திராவிடர் என்று நாங்கள் பிரித்துப் பேசவில்லை. கலாச்சார - பண்பாட்டுப் பேதத்தால்தான்.

இந்து மகாஸ்தாபனம் கூறட்டுமே இன்று - 'இனி இந்த நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடோ, வகுப்புப் பிரிவோ, அவ்வேறுபாட்டை வலியுறுத்தும் சட்டங்களோ, சாஸ்திரங்களோ, புராணங்களோ இருக்க அனுமதியோம்; இவை அனைத்தையும் ஒழிக்கவே இனி நாங்கள் பாடுபடப்போகிறோம்'' என்று; உடனே எங்கள் கழகத்தைக் கலைத்துவிட்டு இந்து மகா சபையில் சேர்ந்து விடுகிறோமே.

அதற்கு மாறாக இன்று வரைக்கும் இந்த இழிவு போக்கும் முயற்சியை 'பிராமண' உயர்ஜாதி மக்கள் தடுத்துக் கொண்டுதானே வந்திருக்கிறார்கள். இராமனாக வந்து, கிருஷ்ணனாக வந்து, நரசிம்மனாக வந்து, சீர்திருத்தப் பெரியோர்களைக் கொன்ற திருக்கூட்டந்தானே இக்கூட்டம். தெய்வீக சக்திகளின் பெயரால் அவர்களைக் கொன்றது - நரகத்தின் பெயரால் மக்களைப் பயமுறுத்தி மூடநம்பிக்கைகளை வளர்த்து விட்டது - அதனால் தான் பகுத்தறிவு வளர முடியாமற் போய்விட்டது.

எந்தப் பகுத்தறிவுவாதிகளையும் இத்திருக் கூட்டம் முதலில் அழிக்கப்பார்க்கும், அழிக்க முடியாவிட்டால், அவனை மனிதனுக்கு மேலாகப் புகழ்ந்து பேசி, அவன் காரியத்தில் இறங்கும் சமயம் பார்த்து, அவனைப் 'பகவான் திருவடி' நிழலில் சேர்த்துவிடும் அவ்வளவுதான். காந்தியார் நிலை அது தான்” என்று இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் வேலூரில் பேசினாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ('விடுதலை', 15.3.1948).

இன்று வரை பார்ப்பனர்களின் நிலைப்பாடு இதுதானே! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுப்பது யார்?

கோயிலில் வழிபாட்டு மொழி தமிழ் என்றால் 'துக்ளக்' துள்ளி எழுந்து தலையங்கம் தீட்டுகிறதே - தமிழில் சொன்னால் பொருள் இருக்கும் - அருள் இருக்காது - அஃது சமஸ்கிருத ஒலியில்தான் இருக்கும் என்று எழுதவில்லையா? ('துக்ளக்', 18.11.1998).

பூஜை வேளையில் பெரியவாள் (சங்கராச்சாரியார்) நீஷப் பாஷை பேச மாட்டார் என்ற நிலை இன்றும் இருக்கவில்லையா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய போது குத்துக் கல்லாக உட்கார்ந்தவர் யார்? மக்களுக்குத் தெரியாதா? திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோவில் தங்கப் பூணூல் அணிவித்து ஏழுமலையானும் எங்கள் ஜாதிக்காரன்தான் என்று காட்டவில்லையா காஞ்சி ஜெயேந்திரர்?

கோயில்களில் சமஸ்கிருத அர்ச்சனையை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாட்டு பக்தர்களிடம் போய் 'சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாதே' என்று ஸ்டாலின் சொல்லத் தயாரா? ('துக்ளக்', 1.11.2017) என்று சவால் விடுகிறார் குருமூர்த்தி அய்யர்.

இப்படி சொல்பவர்கள் தான் திருந்தியவர்கள் - முற்போக்கு வாதிகள் - பழசுகளை மறந்து விட்டுப் புதிய பாதையில் பாதம் பதிப்பவர்களாம்!

52 லட்சம் ரூபாய் மதிப்பில் சீறீரங்க நாதனுக்கு வைரப்பூண் பூட்டவில்லையா நாராயண ஜீயர்? கர்ப்ப கிரகக் கடவுளும் சாமி, அர்ச்சகப் பார்ப்பானும் சாமி என்று சொல்லுவதன் சூட்சுமம் புரிகிறதா?

In fact, in one occasion, Rajaji proudly said that he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan, April (1), 1978).

முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணனாக இருப்பதில்தான் பெருமையாம் - இப்படிப்பட்டவர் ராஜாஜிதான் மூதறிஞராம்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழி தேவை என்று சொன்னால் - அது திராவிடம் - பிற்போக்கு கொள்கை - பழைய வாதம் என்று சொல்லக்கூடிய திமிர் இந்த பஞ்சகச்சங்களுக்கு வந்திருக்கிறது என்றால், அந்த அளவுக்குத் தமிழர்கள் சொரணை இழந்து போய்விட்டார்கள் என்ற கணக்கு இந்த கைபர் கணவாய்க் கூட்டத்துக்கு.

பெங்களூரு திருவள்ளுவர் சிலை  திறப்புப் பற்றி சோவின் கருத்தென்ன?

கேள்வி: பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் - தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான், கன்னட வெறியர் கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தாலே போதுமே. ('துக்ளக்', 19.8.2009, பக். 3)

இப்படி எழுதுபவர்கள் திருந்தத் தேவையில்லையாம்.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படு வதற்குக் காரணமாக இருந்த கலைஞரும், திராவிட இயக்கமும் திருந்த வேண்டுமாம் - ஏன் இன்னும்அந்தப் பழைய காலாவதியான திராவிட சித்தாந்தம் என்று சிண்டுகள் சீறுகின்றனர் -

மத்தியிலே நரேந்திர மோடி தலைமையில் அதிகாரம் வந்தாலும் வந்தது. இந்த சிறுநரிகள் எல்லாம் தங்களை சிங்கங்களாக நினைத்துக் கொண்டு கர்சிக்க ஆரம்பித்துள்ளன. திராவிட இயக்கத்துக்குப் புத்திமதி சொல்லும் அளவுக்கு இந்தப் பூதேவர்கள் பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புகின்றனர்.

காஞ்சி சங்கரமடத்தில் இன்று என்ன 'சூப்'? என்ன பொரியல்? குருமூர்த்தி ஆத்தில் இன்றைக்கு வெண்டைக்காய் குழம்பு - கத்திரிக்காய் கூட்டு வைக்க வேண்டும் என்று கூட நாங்கள் சொல்லலாமா?

திமுகவுக்கு வீரமணியும், வைகோவும் துவாரபாலகராக ('துக்ளக்', 13.6.2018 பக். 10) இருப்பதில் என்ன ஆச்சரியம்? அக்கிரகாரத்துக்கு நாடித்துடிப்பு அதிகரிப்பதேன்?

திராவிட இயக்கம் தோன்றி நூற்றாண்டைக் கடந்து விட்டது. அதன் சித்தாந்தம்தான் பார்ப்பனர்களைக் கூட பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை ஒட்ட நறுக்கிக் கொள்ளச் செய்திருக்கிறது.

அக்ரகாரத்தில் 'மொட்டைப் பாப்பாத்தி' என்ற நிலை இல்லாமல் செய்திருக்கிறது.

பாரதீய ஜனதாவிற்கும் நோட்டாவுக்கும்தான் இங்குப் போட்டி. 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு தான் பார்ப்பனர்.

அருப்புக் கோட்டையில் உங்கள் மூதறிஞர் என்ன பேசினார்?

ராஜாஜி பேசும்போது இடைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடிகொடுக்க வேண்டும், அதுவும் செருப்படிபோல் விழ வேண் டும் என்று பேசினார். இவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்டு “செங்காங் கடை யில் ஆச்சாரியார்” எனும் தலைப்பில் 'விடுதலை' தலையங்கம் தீட்டியதுண்டு (14.4.1964).

இதே ராஜாஜி சென்னை கடற்கரையில் கறுப்புக் காக்கையைக் கல்லால் அடித்து வீழ்த்தினால் மற்ற காக்கைகள் தானாக ஓடிவிடும் என்று காமராசரை மறைமுகமாக சாடினாரே! (27.2.1966).

இதெல்லாம் தகுதிமிக்க தரமிக்க சொல்லா டல்களா!

கடைசியில் உங்கள் ராஜாஜியே ஒப்புக் கொண்டு விட்டார்.

'தேவர்கள் - அரக்கர்கள் போராட்டமே தமிழ்நாட்டின் நிலை' - சி.இராஜகோபாலாச்சாரியார் (18.9.1953). திருவொற்றியூர்

இதை ஒப்புக்கொள்ள ஏன் தயக்கம்?

நீங்கள் மகாத்மாவாக்கினீர்களே அந்த காந்தியார் என்ன சொன்னார்?

“பிராமணர்கள் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமை காரணமாக தங்களுக்கும், மற்றவர் களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேற்றுமை கொடூரமானது ('தி இந்து', 23.8.1920).

மாற்றம் ஒன்றுதான் மாறாதது - மனுவாதிகளே மாறித் தொலையுங்கள். இல்லாவிட்டால் இப்பொழுது கிடைத்துள்ள அந்த ஒரு சட்டமன்ற இடம் கூடக் கிடைத்திடாது.

திராவிட இயக்கத்தை சீண்டச் சீண்ட கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

குருமூர்த்தி அய்யர்வாளே! உங்கள் குருநாதர் 'சோ' ராமசாமியே தன்னை ஒரு அரசியல் புரோக்கர் என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் (ஆனந்த விகடன், 1.2.2012).

நீவீர் எப்படி?

நாங்கள் அப்படிதான் இருப்போம் - இன்றும் ஆவணி அவிட்டம் கொண்டாடிக் கொண்டுதான் இருப்போம் - இன்னும் வேதம், இராமாயணம், மகாபாரதம், கீதை, மனுதர்மம், மகாத்மியம் பாடிக் கொண்டுதான் இருப்போம் - உங்களது சுயமரியாதை, பகுத்தறிவு, திராவிட சித்தாந்தம் எல்லாம் காலாவதியானவை; நீங்கள்தான் திருந்த வேண்டும் என்று இறுமாப்போடு அரட்டை அடிப்பீர்களே யானால், திருத்தப்படுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!

 

- கலி.பூங்குன்றன்

-  விடுதலை நாளேடு, 5.9.18