பக்கங்கள்

இந்து மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூலை, 2024

இந்து மதம் ஒழிவதே நல்லது! --டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

 

சுவடுகள் : இந்து மதம் ஒழிவதே நல்லது!

டிசம்பர் 01-15, 2020

-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து…)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்.

(1929இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்…)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்.’’ -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில்,

இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே, இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

நினைவு நாள்: 6 டிசம்பர், 1956.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

“நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில்...


1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது

2) அதுதான் என்னை சூத்திரன் என்றது

3) அதுதான் என்னை வேசிமகன் என்றது

4) அதுதான் என் தாயை வேசி என்றது

5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது

6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது

7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது

8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது

9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது

10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது

11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது

12) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது

13) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது

14) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது

15) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது

16) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது

17) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது

18) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது

19) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது

20) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது

21) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது

22) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது

23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது

24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது

25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது

26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது

27) அதுதான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது

28) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது

29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது

30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது

31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது

32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது

33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது

34) அதுதான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்போக்கியது

35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது

36) அதுதான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது

37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது

38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது

39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது

40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது

41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது

42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது

43) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது

44) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது

45) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது

46) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது

47) அதுதான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது

48) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது

49) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது

50) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது

51) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது

52) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது

53) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது

54) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது

55) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது

56) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது

57) அதுதான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.

58) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்குபார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடித்தால் போதும் என்றது.

59) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது

60) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது

61) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது

62) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது

63) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது

64) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது

65) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது

66) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது

67) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது

68) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது

69) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது

70) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது

71) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது

72) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது

73) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது

74) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது

75) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

76) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

77) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது

78) அதுதான் ஜாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது

79) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது

80) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது

81) அதுதான் ஜாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது

82) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது

83) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது

84) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது

85) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது

86) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது

87) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம்கருமாதிதிதிதெவசம்கோயில் திருவிழாதேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது

88) அதுதான் ஜாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது

89) அதுதான் ஜாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது

90) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது

91) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது

92) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது

93) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது

94) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது

95) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது

96) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது

97) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது

98) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது

99) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்ததுஇவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளதுஅந்த இந்து மதத்தை நாம் எதிர்க்க இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க நாம் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.”

இப்படிக்கு,

மானமுள்ள சுயமரியாதைக்காரன்,

இரா.குணசேகரன்உரத்தநாடு.

இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா ?

 

'இந்துத்துவா'பற்றி காணொலியில் தமிழர் தலைவர் "இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா?"


* கலி. பூங்குன்றன்


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'இந்துத்துவா' எனும் தொடரில் தனது இரண்டாம் நாள் சொற்பொழிவை நேற்று (7.9.2020) மாலை 6.30 மணிக்குக் காணொலி மூலம் நிகழ்த்தினார்!



இந்து மதச் சீர்திருத்த வாதிகள் போல தோற்றமளித்து, அதே நேரத்தில் இந்து மதத்தின் அடிப்படை வாதங்களான சனாதனம், வருணாசிரமத்தைக் கட்டிக் காப்பதில் கவனமாக இருந்தவர்கள் என்ற வகையில் தயானந்த சரஸ்வதி, அரவிந்தகோஷ், விவேகானந்தர், வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். என்று வரிசைப்படுத்தலாம்!


இதில் விவேகானந்தர் (இயற்பெயர் நரேந்திரன்) மிஷனரி கல்விக் கூடத்தில் படித்து ஆங்கிலத்தில் ஈர்ப்பாகப் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர் - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர்.


தொடக்கத்தில் கடவுள் உண்டா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாத Agnostic என்ற நிலையில்இருந்தார்.


பிறகு பிரம்ம சமாஜம் பக்கம் சென்றார். கடைசியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் போனார் - அவரைக்கூடத்  தொடக்கத்தில் ஒரு பைத்தியக்காரர் என்ற அளவில்தான் மதிப்பிட்டார். பிறகு எப்படியோ அவரின் சீடர் ஆனார். அதிலும்கூட அவர் தத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இராம கிருஷ்ணரோ காளிபக்தர் - இவரோ அதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.


இவர் அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் மாநாட்டில் ஆற்றிய உரைதான் பெரிதாகப் பேசப்படுகிறது.


அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரியான கருத்தினைக் கூறக் கூடியவர் - சீர்திருத்தக்காரர் போல சில இடங்களில் பேசுவார். ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படைவாதங்களை விட்டுக்கொடுக்காதவர்  அவரைப் பற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறவர் பற்றி - தந்தை பெரியாரின் கருத்து எப்படி இருக்கும்? அமெரிக்காவிலேயே அவருக்கு விழா எடுக் கிறார்களே என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது "முட்டாள்தனம் என்பது உனக்கே சொந்தமா?" என்று கேட்டார் பெரியார்.


சிகாகோவுக்கு அவர் செல்ல உதவி புரிந்தவர் இராமநாதபுரம் ராஜாதான். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு விவேகானந்தரைப் பிடிக்காது; காரணம் விவேகானந்தர் ஒரு சூத்திரர்தானே! அதனால் தான் பார்ப்பனர்கள்பற்றி சில நேரங்களில் விவேகானந்தர் கடுமையாகத் தாக்கிப் பேசியதுண்டு.


அமெரிக்க மாநாட்டில் அவர் பேசும் தலைப்பு "இந்து மதம்" என்பதுபற்றியல்ல, மாறாக 'பிராமணியம்' எனும் தலைப்பில்தான் பேசினார்.


"பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகியஇரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.


உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதைப் போதிப்பது நமது தர்மம்-


"சர்வே பவந்து சுகினஹ


சர்வே சந்து நிராமையா, சர்வே பத்ரானி


பாஷ்யந்து மாகசிஷித்துக்க


பாத்பவே, ஓம் சாந்தி,சாந்தி, சாந்தி"


எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். எல்லோரும் நோயின்றி இருக்க வேண்டும், எல்லோரும் வளத்தைக் காண வேண்டும்! யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று உபநிடதம் கூறுகிறது என்று சிகாகோ மாநாட்டில் எல்லோரும் வியக்கும்படி விவேகானந்தர் பேசினார்.


ஓரிடத்தில் இவர் பேசுவதை வைத்துக் கொண்டு இவர் இப்படிப்பட்டவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பச் சூழ்நிலையையொட்டிப் பேசக் கூடியவர்தான் இவர்.


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக இவர் ஒரு முறை தங்கி இருந்தபோது 'உங்கள் கோத்திரம் என்ன?' என்று கேட்டவர்தான் இவர்.


(திராவிடக் கோத்திரம் என்று அவர் பதிலடிகொடுத்தவர்  சுந்தரனார் என்பது சுவையானது - ஏன் ஆழமான கருத்தும்கூட!)


சங்கராச்சாரியாரை சாடியதுண்டு. சூத்திரன் சந்நியாசம் ஆகக் கூடாது என்று சங்கராச்சாரியார் சொன்னார் அல்லவா -  விவேகானந்தரும் சூத்திரர் என்பதால் சங்கராச்சாரியார்மீது கோபம்.


புத்தரையும் சங்கரரையும் அவர் ஒப்பிட்டுக் கூறும்போது - 'சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல் மிகவும் கூர்மையாய் இருந்தது. ஆனாலும் அவரிடம் அகன்ற நோக்கமில்லை. வாதத்திலே தோல்வியடைந்த புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கிய சங்கரர் எங்கே, சிறு ஆட்டுக் குட்டியின் உயிரைக் காக்க தன் உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்த புத்தர் எங்கே? என்று பேசிய இதே விவேகானந்தர்தான், புத்தரால்தான் நாட்டில் அகிம்சை உணர்வு மக்களிடம் ஏற்பட்டு சமூகம் வீழ்ச்சி அடைந்தது என்று குற்றம் சொன்னவரும் இதே விவேகானந்தர்தான்.


ஆரிய நாகரிகமே உலகில் சிறந்தது. இந்து மதத்தில் வருணதர்மம் என்பது உயர்வானது - சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்பார்.


இன்னொரு இடத்தில் இதற்கு நேர் எதிராகப் பேசுவார்.


"மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர் என்கிறார் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் ('தமிழர் மதம்'  பக்கம் 24).



விவேகானந்தர் இப்படியென்றால் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர்தான் 'இந்துத்துவா' என்ற ஒன்றை உருவாக்கியவர்.


'Hindutva'  என்ற நூலையும் இதற்காகவே எழுதியவர் - காந்தியார் கொலைக்கு மூளையாக இருந்தவர். சட்டத்தின் சந்துப் பொந்துகளில் நுழைந்து, தண்டனையிலிருந்து தப்பியவர்.


அந்தமான் சிறையில் இருந்தபோது எத்தனை முறை பிரிட்டீஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதற்குக் கணக்கு வழக்கு இல்லை - அப்படிப்பட்ட வீராதி வீராதி வீரர்தான் -  இந்த வீர சாவர்க்கார்.


இங்கிலாந்து சென்று படித்தவர். இத்தாலி சென்று மாஜினியைச் சந்தித்து வந்தவர். இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு மூலக்கரு இத்தாலிதான். ஆர்.எஸ்.எஸைத் தொடங்கிய முக்கியமானவர்களுள் ஒருவரான மூஞ்சே என்னும் பார்ப்பனர் பாசிஸ்ட் முசோலினியை நேரில் சென்று சந்தித்தவர். உங்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுவோம் என்று முசோலினியிடம் உறுதி அளித்து வந்தவர்!


இந்த சாவர்க்கார் இந்து மகா சபையின் தலைவராக 1938 முதல் 1943 வரை இருந்தவர். இவரைத் தொடர்ந்துதான் சியாமபிரசாத் முகர்ஜி அதன் தலைவராக இருந்தவர்.


இந்துத்துவா இந்துத் தேசியம் என்பதற்கு சாவர்க்கார் கொடுத்த விளக்கம் கவனிக்கத்தக்கது.


இப்படிச் சொன்ன ஒரு மதவெறியரைப்பற்றி என்ன பிரச்சாரம் என்றால் சாவர்க்கார் ஒரு நாத்திகர் என்பதுதான். இந்தக் கூட்டத்தின் தில்லுமுல்லுக்கு அளவேயில்லை.


இவர் கொடுத்த முக்கிய கோஷம்தான் "இந்து மதத்தை இராணுவமயமாக்கு! - இராணுவத்தை இந்துமயமாக்கு!" என்பதாகும்.


இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறு என்று வியாக் கியானம் செய்வார்கள். 'இந்து' என்பதை மய்யப்படுத்தி ஏன் குழப்பத்தைச் செய்யவேண்டும். வெவ்வேறு வகையில், மயக்கத்திற்கு இடம் அளிக்காத வகையில் சொற்களை உருவாக்க வேண்டியதுதானே - எதிலும் குழப்பம் - அதில் ஆதாயம் காண்பதே ஆரியம்.


இந்துமதம் என்பது ஒரு வாழ்க்கை நெறி என்றும் கூறுவார்கள். கேட்டால் உச்சநீதிமன்றமே அப்படிக் கூறி விட்டது என்பார்கள்.


2011ஆம் ஆண்டு மகாராட்டிரத் தேர்தலில் சிவசேனை சார்பில் போட்டியிட்ட மனோகர் ஜோஷி 'எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இந்தியாவில் முதன் முதலாக அமையும் இந்து மாநிலம் மகாராட்டிரம் தான்' என்று பேசினார்.


தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி - இந்த அடிப்படையில் மனோகர் ஜோஷியை எதிர்த்து நின்றவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.


நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறிய ஒரு வார்த்தையைக் கொண்டு இந்து மதம்என்பது ஒரு மதம் அல்ல - வாழ்க்கை நெறி என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.


அதே நீதிபதி ஜே.எஸ். வர்மா, தான் சொன்னது வேறு - அதைத் திருத்திப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறியதும் உண்டு.


கலாச்சார, மத, அரசியல் நோக்கங்களைக் கொண்ட கலவையாக இருப்பவையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியங்களாகும். இந்து (மத) தர்மத்தையும், இந்து சமஸ்கிருத கலாச்சாரத்தையும் காத்து வளர்ப்பதையும் இந்து ராஷ்டிரா என்னும் இந்து தேசத்தை உருவாக்குவதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு இது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் உறுப்பினரான நாதுராம் கோட்சேயினால் மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, பொதுமக்களின் பார்வைக்கேனும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது அரசியல் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று 1948 ஜனவரி மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வற்புறுத்திக் கூறினார்.


 அதன் படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டத்தில் இருந்த 'இந்து ராஷ்டிரா' என்ற சொற்றொடர் இவ்வாறுதான் நீக்கப்பட்டது. இனி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முற்றிலும் ஒரு கலாச்சார அமைப்பாகவே செயல்படும் என்றும், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாது என்றும் இந்த அமைப்பு அரசுக்கு உறுதி அளித்தது.


சாவர்க்கரால் எழுதப்பட்ட 'இந்துத்துவா' என்ற நூலில் அவரால் புதியதாக உருவாக்கப்பட்ட சொல்லாடலான 'இந்துத்துவா' என்பது, இந்து மதம் மற்றும் இந்து மக்களிடையே நிலவும் ஒட்டுறவை ஒத்த  பார்வையைத் தங்கள் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள இயன்ற தனிச் சிறப்பு பெற்றதாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டுகொண்டது.


இந்துமதம்  - மதம்


இந்துத்துவா - மதத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டது அல்ல என்பது சாவர்க்கரின் கருத்து.


இந்து தேசம் என்ற ஒன்றால்


ஒரு பொதுவான கலாச்சாரத்தாலும்,


ஒரு பொதுவான வரலாற்றாலும்,


ஒரு பொதுவான தேசத்தாலும்,


ஒரு பொதுவான மதத்தினாலும்,


பண்பாடு இருப்பவர்கள் இந்துக்கள் ஆவர்.


"ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர்” என்பது சங்பரிவாரத்தின் முக்கிய அடிப்படை முழக்கமாக ஆகிவிட்டது.


இந்துத்துவாவின் மறைமுக செயல்திட்டம்.


(ஆதாரம்: வி.டி.சாவர்க்கரின்


இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 82)


இந்து என்பவன் யார்?


"இந்த தேசத்தை பாரத வர்ஷா என்றும், சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தை நாடு என்றும், புனித பூமி என்றும், தனது இந்து மதத்தின் தொட்டில் என்றும் எவன் ஒருவன்  கருதுகிறானோ அவனே இந்து என்பவன்.'


(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 38-39)


'சிந்து' என்ற சொல்லின் வளர்ச்சியைப் பற்றிய ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாம் இதுவரை சமஸ்கிருத மொழியையே சார்ந்திருந்தோம். ஆனால், தற்போதுள்ள வேறு எந்த ஒரு சொல்லையும்விட, 'சிந்துஸ்தான்' என்ற சொல்லினால், இந்து தேசம் பற்றிய கருத்து இன்னமும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட இயலும் என்பது தெரிய வந்த ஒரு காலகட்டத்தில், நமது தேடுதல் எனும் நூலின் முனையை நாம் கைவிட்டுவிட்டோம். இச்சொல்லினோடு ஆர்யவர்த்தா என்பதை இணைத்துப் பார்த்தால் தந்தை வழிக் குறுகிய ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருப்பதாக அது பொருள் தரும்; ஆனால், ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது கட்சி வண்ணம் பூசப்பட்டதுடன் தொடர்பு ஏதுமற்றதென விளக்கம் அளிப்பதாக சிந்துஸ்தான் என்ற சொல் அமைந்திருக்கிறது.


எடுத்துக்காட்டாக, ஆர்யவர்த்தா என்பது என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக்  காண்க.


நான்கு வர்ண நடைமுறை இல்லாத நாடு மிலேச்ச நாடாகும்; ஆர்யவர்த்தம் என்பது அதற்கும் வெகு தொலைவில் இருப்பதாகும்.)


 (- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115 )


அதனால், இவற்றின் முடிவுகளைத் தொகுத்துக் காணும்போது, சிந்து முதல்  - இந்துக்களிலிருந்து கடல்கள் வரையிலான பூமியை தனது முன்னோர்களின் நிலமாக, தந்தை நிலமாக (பித்ரு) என்று எவன் ஒருவன் காண்கிறானோ, வேதகால சப்த சிந்துவில் தனது தோற்ற மூலத்தில் இருந்து வந்த இனத்தின் ரத்தத்தை எவன் பாரம்பரியமாக வரித்திருக்கிறானோ, கற்றறிந்து கொள்ள வேண்டியவைகளை  அதிகமாக எவன் கற்றறிந்து கொண்டானோ, அவனே இந்து என்று அறியப்படும் மனிதனானான். அவர்களது பொது செம்மொழியான சமஸ்கிருதத்தில் முக்கியமாக விவரிக்கப் பட்டுள்ள இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்றிருப்பதாகவும், பொதுவான வரலாறு ஒன்றின் பிரதிநிதி யாகத்தான் இருப்பதாகவும்,பொதுவான இலக்கியம், கலை, கட்டக்கலை, சட்டம், நீதிநெறி சடங்குகள் சம்பிரதாயங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், புனிதவேள்விகள் ஆகியவற்றைத் தான் பெற்றிருப்பதாகவும் எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அனைத்துக்கும் மேலாக, சிந்துஸ்தான் என்னும் இந்த பூமியை தனது புனித பூமியாக (புண்யபூ)வும், வருமுன் உரைப்போர்கள், சமயக்குருமார்கள், மடாதிபதிகள், கடவுள் மனிதர்களின் பூமியாகவும், பக்தியும், தலயாத்திரையும் மிகுந்து விளங்கும் பூமியாகவும் காண்பதாக எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.


ஒரு பொதுவான தேசம் (ராஷ்டிரா), ஒரு பொதுவான இனம் (ஜாதி), பொதுவான ஒரு கலாச்சாரம் (சமஸ்கிருதம்) ஆகியவை அனைத்தும் இந்துத்துவாவுக்கு முக்கியமாகத் தேவைப்படும் அம்சம்களாகும்.


இந்த  அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தொகுத்து சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூறுவதானால் சிந்துஸ்தான் என்பது பித்ருபூமியாக மட்டுமல்லாமல், புண்ய பூமியாகவும் எவன் ஒருவனுக்கு இருக்கிறதோ அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.


இந்துத்துவாவின் முதல் இரண்டு முக்கியமான தேவைகளான தேசம் மற்றும் ஜாதி என்பவை பித்ருபூமி என்ற சொல்லினால் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப் படுவதாகவும், சுட்டிக் காட்டப்படுவதாகவும் உள்ளது. மூன்றாவது முக்கியத் தேவையான சமஸ்கிருதம் (கலாச்சாரம்) என்பது புண்யபூமி என்ற சொல்லினால் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு புண்ய பூமியை உருவாக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் கொண்டாட்டங்கள், புனித வேள்விகள் என்னும் சமஸ்காரங்கள் உள்ளிட்டவை அடங்கிய சமஸ்கிருத மொழி மதிப்பு மிகுந்ததாகும்.


(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115)


சதுர்வர்ணாய விய வஸ்தாடன


யாஸ் மின்தேஷ் ஹிக நாபித் யத்தே


தாம்மிலேச்ச தேஷ்தாம்


ஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே


The Land where the system of four varnas does not exit should be known as the mellach country arya vart lies away from it.


எந்த நாட்டில் நான்கு வருணம் இல்லையோ, அந்த நாடு மிலோச்சர்களின் நாடு என்று பொருள் -


இதுதான் சாவர்க்கார் கூறும் ஹிந்துத்துவா.


அய்ந்தாவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் - அவர் எழுதிய 'ஞான கங்கை' (Bunch of Thoughts) முக்கியமானதாகும்.


இந்து ராஷ்டிரம் இதன் கொள்கையாகும். முசுலிம்களுக்கு ஒரு பாகிஸ்தான் என்பதுபோல இந்துக்களுக்கு ஒரு நாடு இந்தியா என்பதே அவர்களின் அடிப்படை!


இந்துக்கள் அல்லாதாருக்கு இங்கு வேலையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு.


அண்மையில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இந்தியாவில் உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்த வர்களானாலும் அவர்கள் இந்துக்களே என்று சொல்ல வில்லையா!


'ஞான கங்கை' நூலை எழுதிய கோல்வால்கர் இன்னொரு நூலையும் எழுதியுள்ளார்.


"We or our nationhood defined" என்பது அந்த நூலாகும். அந்த நூலில் மிக மிக வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.


"இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது.  அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்" என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றால் இதற்குப் பெயர்தான் இந்துப் பாசிசம் என்பது!


இப்பொழுது ஆர்.எஸ்.எசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? கோல்வால்கரின் நூல்களை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறும் நிலை ஏற்பட்டு விட்டது.


(நாளை சந்திப்போம்)

இந்து மதம் என்பது உண்டா? -1


காணொலியில் தமிழர் தலைவர் இந்து மதம் என்பது உண்டா?


* கலி. பூங்குன்றன்


இந்துத்துவா என்னும் தொடர் சொற்பொழிவை நேற்று மாலை 6.30 மணிக்குக் (6.7.2020) காணொலி மூலம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடங்கினார்.



இந்துத்துவா, இந்து மதம் பற்றி பல நூல்களை எடுத்த எடுப்பில் அறிமுகப்படுத்தி வைத்தார் 'ஹிந்துத்வா' (Hindutva) எனும் தலைப்பில் ஜோதிர் மாயி ஷர்மா அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல்.


இன்னொரு நூல் பேராசிரியர் பத்திரிகையாளர் பிரஜ் ரஞ்சன் அவர்களால் ஆங்கிலத்தில் (De Brahmanising History: Dominance and Resistance in Indian Society) எழுதப்பட்ட நூல் - க. பூரணச்சந்திரன் அவர் களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது (வரலாற்றில் பிராமண நீக்கம்). மூன்றாவது நூல் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்டு உயிர்மைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.


நான்காவது நூல் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.  இறையன் அவர்களால் எழுதப்பட்ட "இல்லாத இந்து மதம்" என்ற நூல்: இது திராவிடர் கழக (இயக்க) வெளியீடாகும்.


இந்துமதம் இந்து மதம் என்று சொல்லுகிறார்களே - அப்படியொரு பெயர் இந்துமத ஆதாரங்களில் உண்டா என்ற வெடிக்குண்டுக் கேள்வியைத் தூக்கிப் போட்டார்.


ஆரிய மதம், பிராமண மதம், சனாதன மதம் என்ற வழங்கப்பட்டு வந்திருக்கிறதே தவிர  ஹிந்து மதம் என்று எங்கேயும் காணோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு இந்த இந்து மதவாதிகள், சங்பரிவார்கள் எதிரிகளாக நிறுத்தும், கிறித்தவர்கள்தான் - வெள்ளைக்காரர்கள்தான் இந்து மதம் என்ற பெயரைக் கொடுத்தவர்கள் ஆவார்கள்.


இதனை பார்ப்பனர் மஹா பெரியவாள் என்று போற்றும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார்.


"நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக் காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ஹிந்துப் பெயரை வைத்திருக்கா விட்டால், ஒவ்வொரு ஊரிலும், சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார், உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போதைக்கு ஹிந்து சமூகம் என்ற பொதுப் பெயரில் சொல்லப்பட்டும் சமுதாயத்தை இப்படிஏழெட்டாக தனித்தனி மதம் என்று பிரித்து விட்டால், அதற்கப்புறம் ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போன்ற மதஸ்தவர்கள் தான் அதிகத் தொகையாக இருப்பார்கள். அதாவது இப்போது தேசத்தில் இரண்டு பகுதிகளில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பது போல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாகிஸ்தானாகியிருக்கும். எத்தனைக் கிருத்திருமங்கள் செய்து, பாகிஸ்தானைப் பிரித்த வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு 'ஹிந்து' என்ற பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும்படியான நன்மையையே செய்திருக்கிறான்" என்று சீனியர் சங்கராச்சாரியார் சொன்னதுண்டே ஒப்புக் கொண்டதும் உண்டே! (ஆதாரம்: 'தெய்வத்தில் குரல்' முதல் பாகம் பக்கம் 267, 268)


இத்தகைய ஆதாரங்களை எடுத்து வைத்த தலைவர் ஆசிரியர் அவர்கள் 'ஹிந்து' என்ற சொல்லுக்கு உயர்நீதிமன்றம் என்ன சொன்னது என்பதையும் ஆதாரத்துடன் கூறினார்.


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் பி.வி.ராஜமன்னார் கூறியதுதான் அது.


"When I speak of Hinduism, I am actually conscious of the vague connotation of that word. Hinduism is not a religion in the sense in which  we understand it is not India in origin, nor was it ever used by the Hindus as the same name of their religion. But the word has come to stay"


(Michael vs Venkatesan case - MLJ 239/1952)


"இந்து மதம் என்று குறிப்பிடுகையில், அச்சொல் எவ்வளவு தோராயமானதொரு நிலையைக் குறிக்கிறது என்பதை நான் அறிவேன். நாம் அறிந்த வகையில் அது ஒரு மதம் என்றே சொல்ல முடியாது. இந்துக்கள் என்பவர்கள் இந்தச் சொல்லையே அம்மதத்தினைக் குறிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. என்றாலும் அச்சொல் நடைமுறைக்கு வந்து விட்டது" என்று  ஒரு நீதிபதியே குறிப்பிட்டுச் சொன்னார் என்றால் இதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.


அதோடு இன்னொரு முக்கிய தகவலையும் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.


1893ஆம் ஆண்டு விவேகானந்தர் அமெரிக்கா சென்றார் - சிகாகோ நகரில் இந்து மதத்தைப்பற்றி சும்மா பிளந்து தள்ளினார் என்று நீட்டி முழங்குகிறார்களே - அதன் உண்மைத் தன்மை என்ன? அங்கு நடைபெற்றது "இந்துமதம்" என்ற பெயரில் நடைபெற்ற மாநாடுதானா?


அங்குப் பேசப்பட்ட மதங்கள் பற்றிய பெயர்களின் பட்டியல் என்ன கூறுகிறது?


(1) Buddhism (பவுத்தம்)


(2) Shintoism (ஷிந்தோயிசம் ஜப்பான்)


(3) Brahminism (பிராமணியம்)


(4) Judaism (யூதம்)


(5) Christianity (கிறித்துவம்)


(6) Mohammedanism (இஸ்லாம்)


இந்தப் பட்டியலில் பிராமண மதம் - பிராமணீசம் என்று கூறப்பட்டுள்ளதே தவிர ஹிந்து மதம் என்று குறிப்பிடப்பட வில்லையே!  இதற்கு என்ன பதில்?


அடுக்கடுக்கான வினாக்களையும், தரவுகளையும் எடுத்துரைத்தார் கழகத் தலைவர்.


இதற்கிடையே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் என்ற பெயரில் சில சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.


தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், விவேகானந்தர்,  போன்ற சீர்திருத்தக்காரர்கள் என்றெல்லாம் பேசப்படு பவர்கள் உண்மையில் அவர்கள்  செய்தவை சமூக சீர்திருத்தம் அல்ல - இந்து சமய சீர்திருத்தங்களே!


இவர்களின் நோக்கமெல்லாம் இந்து மதத்தை  சர்ச்சைகளிலிருந்து காப்பாற்றுவதே!


எடுத்துக்காட்டாக தயானந்த சரஸ்வதியை எடுத்துக் கொண்டால் அவதாரங்கள் உண்மையல்ல என்றார், புரோகிதர்களை ஏற்கவில்லை. பார்ப்பனர்களைக் கேலி செய்திருக்கிறார், மதச் சின்னங்கள் அணிவதை நையாண்டி செய்திருக்கிறார்.


அதே நேரத்தில் வருணாசிரமம், சனாதனம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்.


எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி   சமஸ்கிருதம் எனகிறார். வேதத்தில் இல்லாத விஞ்ஞானம் வேறு எங்கும் இல்லை என்கிறார்.இது ஏமாற்று வேலை யல்லாமல் சீர்திருத்தம் என்று கருத முடியுமா? குஜராத் பார்ப்பனரான  இவர் 59 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்.


வங்காளத்தைச் சேர்ந்தவர் அரவிந்தர். வெளிநாடு எல்லாம் சென்று படித்தவர் தான் - சனாதனத்துக்கு எதிரான பிரிட்டனை எதிர்க்க வேண்டும் என்று கூறி இந்தியாவுக்குள் இருந்தால் கைது செய்யப்படலாம் என்பதற்காக பிரஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பாண்டிச்சேரிக்குச் சென்று ஆசிரமம் அமைத்தவர். சீர்திருத்தம் பேசினாலும் இந்து மத அடிப்படை வாதியாகவே வாழந்தவர்.


இந்து மதத்திலும் சீர்திருத்தத்திற்கு இடம் உண்டு என்று சொல்லி, அதே நேரத்தில் இந்து மதத்தின் ஆணிவேரான சனாதனத்தையும் வருணதர்மத்தையும் காப்பாற்றக் கூடிய ஏமாற்றுக்காரர்கள் இவர்கள் என்று படம் பிடித்துக் காட்டினார் தமிழர் தலைவர்.


இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்று பேச ஆரம்பித்துள்ளனர்.


இதற்கு ஆரம்பப் புள்ளி வைத்தார் வி.டி. சாவர்க்கர். இதைப்பற்றி எல்லாம் தொடர்ந்து பேசுவோம் என்று கூறி முதல்நாள் சொற்பொழிவை நிறைவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

இந்து மதம் ஒழிவதே நல்லது!-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

திங்கள், 15 ஜூலை, 2019

சில செய்திகளும் சிந்தனைகளும் இந்து மதத்தின் யோக்கியதை இதுதான்!



மின்சாரம்


கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந் திருப்பவர் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. அந்தக் கடவு ளுக்குக் கோயில் ஏன் - மனைவி ஏன் - வைப்பாட்டி ஏன் - குழந்தைக் குட்டிகள் ஏன் - உருவமேயற்ற கடவுளுக்குப் பெண்டாட்டி யும், வைப்பாட்டியும் எப்படி வரும் - எங்கிருந்து குதித்தது என்று நியாயமான அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டால் அடேயப்பா! என்னமாய் கோபம் கொப் பளிக்கிறது, உடலெல்லாம் வியர்க்கிறது, கண்கள் எல்லாம் கோபமேறி குதிக்கிறது.

இன்னொரு கூத்தைக் கேளுங்கள்! கேளுங்கள்!! எல்லார்க்கும் கடவுள் என்று சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுளை சிலையாக்கிக் கோயில் கட்டி அதற்குள் கர்ப்பக்கிரகம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்குள் பூட்டி வைக்கும் போக்கிரித் தனத்தை என்னவென்று சொல்லுவது?

மேலும் ஒரு குட்டிச் செய்தியைக் கேளுங்கய்யா, கேளுங்கய்யா... அந்தக் கடவுளுக்கும் மதச் சாயம்! இன்னொரு மதக்காரன் எங்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சண்டியர்த்தனம் செய்வ தில் கில்லாடி இந்த இந்து மதக்காரர்கள்தான். அப்படியென்றால் கடவுள் உலகக் கடவுள் இல்லையா? எல்லா மக்களுக்கும் கடவுள் இல்லையா? இதெல்லாம் லோக்கல் கடவுள் தானா என்று கேட்காமல் இருக்க முடியுமா? அதையும் கேட்டால் “இந்தக் கருப்புச் சட்டைக்காரனுக்கு இதுதான் வேலை” என்று பற்களை நரநரவென்று கடிக்கிறார் கள்.

கேடுகெட்டதனத்தையும், கோளாறு களையும் செய்வதெல்லாம் அவர்கள் - கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.

இப்பொழுது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களை வடக்கே இரண்டு கோயில்களில் பிடரியைப் பிடித்துத் தள்ளாத குறைதான்.

குடியரசுத் தலைவர் என்றால் சாதாரணமா? முப்படைகளுக்கும் தலைவர் அவர்தான். அதெல்லாம் அங்கே - இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று சவுண்டிகள் திமிர் முறிக்கிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல?

சரி - அதிலாவது ஓர் ஒழுங்கு முறை இருக்கிறதா?

இவற்றையெல்லாம் விட இன்னும் ஒரு வேடிக்கையைக் கேளுங்கள்! கேளுங்கள்!! வேடிக்கை என்று சொல்லக் கூடாது - கொடுமை, மகா மகா கொடுமை!

சொந்த மதத்துக்காரர்களைக் கூட கோயிலுக்குள் விடாத மதம் பிடித்த மனி தர்கள் இந்து மதத்தில்தான் இருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடிமகன் - முப்படைகளுக்கும் தலைவராக இருக் கக்கூடிய குடியரசுத் தலைவரைக்கூடக் கோயிலுக்குள் விடமாட்டார்கள்.

வெள்ளைக்காரக் கவர்னர் மவுண்ட் பேட்டன் 'பூரி' ஜெகந்நாத் கோயிலுக்குள் “தாட்-பூட்” என்று கோட்டு-டை அணிந்து சென்றால் அவருக்குச் சிகப்புக் கம்பள விரிப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய உலக மேதை அண்ணல் அம் பேத்கரும் தான் மவுண்ட்பேட்டனோடு சென்றார்.

என்ன ஆச்சர்யம் தெரியுமா? மவுண்ட் பேட்டனுக்கு அனுமதி, அண்ணல் அம் பேத்கருக்குத் தடை!

ஏன், அம்பேத்கர் இந்து இல்லையா? அது தெரியாதா உங்களுக்கு... இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் யார் தெரியுமா? அவர்ணஸ்தர்கள் - நான்கு வருணங்களுக் குள் வராதவர்களாம். அதனால்தான் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் ஏதோ அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற நேரங்களில் மட்டும் இந்துக்களே ஒன்று சேருங்கள்! என்று தாழ்த்தப்பட்ட வர்களையும் சேர்த்து அழைப்பார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களாகி விடுவார்கள்.

பூரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் அனுமதிக்கப்படாததை பெரும் பிரச்சினையாக்கி திராவிடர் கழகம் கண் டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியதுண்டு. இந்த நிலையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி.

குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரம் 28.6.2018  அன்று பூரிமாவட்ட ஆட்சியாள ருக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் “பூரிஜெகந்நாத் கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி மற்றும் மகளை கோயிலுக்குள் விடாமல் முக்கிய வாயிலில் இருந்த அர்ச்சகர்கள் அவரைத் தள்ளி விட்டார்கள் என்றும், தடுமாறி விழுந்த குடியரசுத்தலைவரை அவரது மனைவி மற்றும் மகள் தூக்கிவிட்டார்கள் என்றும், கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து அவரைத் தள்ளிவிட்டு அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தரவேண்டும்“ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது,

29.6.2018 அன்று அனைத்து ஊடகங்களிலும் இந்தச்செய்தி வந்திருந் தது, இதற்கு நேரடியாக யாரும் பதில் கூறவில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் யாரோ ஒருவர்  வங்கமொழிப் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி யிருந்தார். “அதில் குடியரசுத்தலைவரை தள்ளிவிட்டது, அவரை கோயிலுக்குள் விடாமல் அவமதித்தது தொடர்பாக எதுவும் குறிப்பிடாமல் இந்துக் கோயில் களில் இந்துக்கள் அல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நுழைய அனு மதிப்பது புனிதத்தைக் கெடுத்துவிடும் என்று கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்டவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் புனிதம் பாதுகாக்கப்பட்டது என்றும் எழுதி இதுதான் இந்துமதத்தின் சிறப்பு! ஆகையால் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துதமதம் அதன் செழுமை மாறாமல் உள்ளது” என்று எழுதியிருந்தார்.



இதையே ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப் பினர் ராஜேஷ் சின்கா (பாஜக மாநிலங் களவை உறுப்பினர்)  மேற்கோள்காட்டி  “யாராக இருந்தாலும் அவர்களுக்காக கோயிலில் அனுமதி கொடுக்க அது ஒன்றும் பொழுதுபோக்குத் தலமல்ல - புனிதத்தலம்! இந்துக்களுக்கு மட்டுமே உரித்தான சில இடங்களில் நுழையும் அனுமதி பிறருக்கு எந்த விதத்திலும் கொடுக்கப்படாது, அது எவ்வளவு பெரிய அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் சரி” என்று கூறியிருந்தார்.



குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்து என்று அனைவரும் நினைத்திருந் தார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ அவர் இந்து அல்ல என்று மறைமுகமாக ராகேஷ் சின்கா மூலம் கூறிவிட்டது,

பூரி ஜெகந்நாத் ரதயாத்திரை 4.7.2019-லிருந்து துவங்கியுள்ளது, இந்த யாத்திரை யின் துவக்கவிழாவில் குஜராத்தைச் சேர்ந்த முதல்வர் விஜய் ரூபானி, அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி கலந்து கொண் டார்கள்.



கலந்துகொள்வது குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் விஜய் ரூபானி, மற்றும் அமித்ஷா இருவருமே இந்துக்கள் இல்லை. இவர்கள் பார்சி மற்றும் ஜெயின் மதத்த வர்கள்

இந்திராகாந்தி பார்சி மதத்தவரை திருமணம் செய்தார், அவர் காஷ்மீரப் பார்ப்பனர். சோனியா காந்தி பிறப்பால் கிறிஸ்தவரானாலும், ராஜீவ் காந்தியை திருமணம் செய்த காரணத்தால் அவர் இந்துவே.  இருப்பினும் அவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை. ராம்நாத் கோவிந் இந்துதான், ஆனால் அவர் பட்டியல் இனத்தவராகையால் அனுமதி மறுக்கப்பட்டார்

ஆனால் பிற மதத்தவர்களான அமித்ஷா, விஜய் ரூபானி இருவருமே கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

பாஜக தலைவர் அமித்ஷா கடவுளை விட மிகவும் சக்திவாய்ந்தவராகிவிட்டார் போலும்,

ரதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு ஊடகவியலாளர் களிடம் பேசிய அமித்ஷா ”இங்கிருந்து ஜெகந்நாத் ரதம் புறப்பட்டது, அதே போல் இங்கிருந்து நாங்களும் புறப்படுகிறோம், அது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா முழு வதும் வெற்றியைப் பெற்ற பிறகு எங்கள் பயணம் முடியும்” என்று கூறியுள்ளார்.   தென்னிந்தியா அமித்ஷா பரிவாரங்களை வரவேற்கத் தயாராகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டாலும் பூரி கோயிலுக்குள் அனுமதியில்லை. ஆனால் பார்சி மதத்தைச் சேர்ந்த அமித்ஷாவுக்கு சாங்கோபாங்கோமாக பெருத்த வரவேற்பு. ஏனிப்படி? இவருக்கு மட்டும் ஆகமம் ஒடுங்கி குனிந்து வரவேற்பு கொடுத்தது எப்படி? ஆமாம் உள்துறை அமைச்சரா யிற்றே - அவரிடம் சேட்டை செய்தால் விளைவு வேறு விதமாக ஆகிவிடாதா?

இந்திரா காந்திக்கும், சோனியா காந்திக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.

நேபாள நாட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் எதிர்ப்பு


சோனியா கோயிலுக்குள் நுழையத் தடை




நேபாள தலைநகரான காட்மாண்டு வில் அண்மையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சார்க் கூட்டம் நடந்தது. அப்போது நேபாளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதி கோவிலுக்குச் சென்று தரி சனம் நடத்த ராஜீவ்காந்தியும், சோனியா வும் விரும்பினார்கள். பிரதமரின் அதி காரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய முயற்சி செய்யும் போது, பசுபதிகோவிலின் பார்ப்பன அர்ச்சகர்கள், சோனியாகாந் தியை கோயிலுக்குள் அனுமதிக்க முடி யாது; காரணம், அவர் இந்து அல்ல என்று கூறிவிட்டார்கள். சோனியா பிறப்பால் இந்து அல்ல என்றாலும், அவர் ஒரு ‘இந்து’வாகத் தான் வாழ்ந்து கொண்டிருக் கிறார் என்று அதிகாரிகள் கூறினார்கள். அதை பார்ப்பன அர்ச்சகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு, நேபாள மன்னரின் முக்கிய அதிகாரிகளின் சிபாரி சையும், இந்திய அதிகாரிகள் பயன்படுத் திப் பார்த்தனர். அப்போதும் ஒன்றும் முடியவில்லை.

“இந்திராகாந்தியே - அவர் ஒரு பார்சி என்பதால், இந்தியாவில் உள்ள ஒரு கோயிலுக்குள் அனுமதி மறுத்தார்கள். (இந்திராவின் கணவர் பிரோஸ் காந்தி ஒரு பார்சிக்காரர்) நேபாள மன்னர் பிரேந் திரா ஒரு முறை தென்னாட்டுக் கோயிலுக் குள் சென்று வழிபட விரும்பியபோது, சட்டை இல்லாமல் தான் உள்ளே வர வேண்டும் என்று அர்ச்சகர்கள் கூறி விட்டார்கள். ஆனால் நேபாள சம்பிர தாயப்படி, மன்னர்கள் சட்டை இல்லாமல்  தரிசனம் செய்யக்கூடாது. எனவே மன் னர் அந்தக் கோயிலுக்குள் செல் லாமலே திரும்பிவிட்டார்’’ என்று நேபாள பார்ப் பன அர்ச்சகர்கள் இந்திய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்கள். ‘ராஜீவ் காந்தி வேண்டுமானால் வரட்டும்; சோனியாவை அனுமதிக்க முடியாது’ என்று அர்ச்சகப் பார்ப்பனர்கள் உறுதியாக தெரிவித்ததைத் தொடர்ந்து, ராஜீவ்காந்திக்கு கோபம் வந்து விட்டது. 'எனது மனைவியை அனு மதிக்கவில்லையானால், நானும் அந்தக் கோயிலுக்கு வர முடியாது’ என்று கூறி விட்டார். இதைக் கேட்ட நேபாள நாட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் ‘ராஜீவைக் கூட நாங்கள் எப்படி கோயிலுக்குள் அழைக்க முடியும்? அவரும் இந்து அல்லவே; பார்சிதானே?’ என்று கூறி விட்டார்கள்.

- 'இண்டியன் அப்சர்வர்', நவ 8, 1987

உலகப் பவுத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஒருமுறை கேரளா வந்தார். அப்பொழுது எல்லா மதக்கோயில்களுக்கும் செல்ல அவர் விரும்பினார்.

செயின்ட் ஜோசப் கத்தீட்ரல் சர்ச் ஆர்வ முடன் வரவேற்றது. சாதாரணமாக அல்ல, சிகப்புக் கம்பள வரவேற்பு. பாளையம் மசூ தியில் தொழுவதற்கு இமாம் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதுடன் காலை விருந்துக்கும் அழைப்புக் கொடுத்தனர்.

எல்லாம் சரிதான், திருவனந்தபுரம் தேவஸ்தானம் என்ன செய்தது?

தேவஸ்தானம் என்றால் சாதாரணமா? இந்துக்கடவுளை மேய்க்கும் மேலாண் மைக்காரர்கள் அல்லவா அவர்கள்.

தலாய்லாமா தம் சம்பிரதாய உடை களை எல்லாம் களைந்து, செருப்புகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எங்கள் இந்துக் கோயிலில் அனுமதி கிடையாது - கிடையாது என்று கறாராகவே மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துச் சொல்லி விட்டனர் தேவஸ்தான அதிகாரிகளாம் 'பெருமான்'கள்.

என்ன காரணமாம்? அவர்கள் இந்து மதத்தை ஏற்காதவர்களாம்.

மதம் மனிதர்களைப் பிளக்கிறது - அதுவும் இந்து மதம் இதன் உச்சம்! கடவு ளும் தன் பங்குக்கு பிரிவினையைத்தான் ஏற்படுத்துகிறது.

இதன் பொருள் என்ன? மனித குலம் ஒன்றாக பகை யொழிந்து சகோதரத்துவம் பேண வேண்டுமானால் இந்தப் பாழாய்ப் போன கடவுளும், மதமும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் - ஆம், ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

கடவுளை மற!

மனிதனை நினை!

- தந்தை பெரியார்

- விடுதலை ஞாயிறு மலர், 13.7.19