பக்கங்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?-4


“திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் ஜாதியினர், “பார்த்தாலே தீட்டுப்படும்’’ ஜாதியினராக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பகலில் வெளியே வர முடியாது. இவர்கள் இரவில் மட்டுமே புழங்க முடியும். தீண்டப்படாதவர்கள் நாகரிகம் எதற்கும் உரிமை படைத்தவர்கள் அல்லர். 

இதுதானா இந்துமதப் பண்பாடு’’ எனக் கேட்டார் அம்பேத்கர். “ஆதிப் பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லையே, ஏன்? ஜாதி அமைப்பு இந்து மதத்தை மேலும் பரவலாக்க முயல்வதைத் தடுக்கிறது, நான்கு வர்ணக் கோட்பாடு சூத்திரர்களை, தீண்டாதோரை கவுரவக் குறைவான வழிகளிலும் குற்ற வழிகளிலும் பொருளீட்டும் நிலைக்குத் தள்ளிவிட்டது. நால்வர்ணம் இந்துமதத்தின் அடிப்படைக் கூறு. தீண்டப்படாதோரின் விடுதலைக்கு இந்து மதத்தில், நம்பிக்கையூட்டும் வழிவகைகள் கிடையாது. எனவே, இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது’’ என எழுதிய அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

இந்துக்களின் தலைவராக பம்பாயில் அப்போதிருந்த ஜனாப்பூர் சாஸ்திரி பேசுகையில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இருக்கும் உறவு, ஒரு மனிதனுக்கும் செருப்புக்கும் இருப்பதுபோன்றதுதான் என்றாராம். இந்த உவமை துல்லியமானது என்றார் அம்பேத்கர். இத்தகைய உவமை இன்றைக்கும் பொருந்தும் வகையில்தானே இந்து மதமும் இந்துக்களும் இருக்கிறார்கள்? 

“இந்து சமுதாயம் என்பது ஜாதிகளின் வீடு. இந்துக்கள் என்போர் ஒரு மக்களினம் அல்லர். ஜாதிகளாக அமைந்த மக்கள் குழுக்களின் ஒட்டுமொத்தம் ஆவர். இதுதான் இந்து சமுதாயத்தின் தனித்தன்மை’’ என்றார் அம்பேத்கர். இதுவா இந்துத்வா? இப்படி ஓர் இந்துத்வாவாதி பேசுவாரா? பேசத்தான் முடியுமா? சாட்டையால் அடித்த மாதிரி இந்து மதத்தின் உண்மைச் சொரூபத்தைத் தோலுரித்த அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்? எவ்வளவு பெரிய மோசடியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செய்கின்றனர்?

பார்ப்பனர்களுக்குக் கீழே நான்கு ஜாதிகள் (தீண்டாதோர் உள்பட?) வந்தன என எழுதினார் அம்பேத்கர். இந்துமத ஜாதிகளின் ஆக உச்சத்தில் இருப்போரான பார்ப்பனரின் தகுதியைப் பட்டவர்த்தனமாகப் பரிகாசம் செய்தவர் எப்படி இந்துத்வா அம்பேத்கர் ஆவார்?

இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்லர். அவர்களில் 1886 பிரிவினர் உள்ளனர். திராவிட பார்ப்பனர்கள் 5, மராட்டியப் பார்ப்பனர்கள் 31, ஆந்திரப் பார்ப்பனர்கள் 16, தமிழ்ப் பார்ப்பனர்கள்11, கர்நாடகப் பார்ப்பனர்கள் 7, குர்ஜாப் பார்ப்பனர்கள் 147, கவுட பார்ப்பனர்கள் 5, சரஸ்வத பார்ப்பனர்கள் 3, பஞ்சாப் சரஸ்வதப் பார்ப்பனர்கள் 222, மலைநாட்டு சரஸ்வதப் பார்ப்பனர்கள் 35, நாட்டுப்புறப் சரஸ்வதப் பார்ப்பனர்கள் 57, காஷ்மீர் சரஸ்வதப் பார்ப்பனர்கள் 155, காஷ்மீர் பார்ப்பனர்கள் 221, சிந்து சரஸ்வதப் பார்ப்பனர்கள் 6, கன்யா குப்ஜ பார்ப்பனர்கள் 10, இதில் மிஸ்ரா, சுக்லா, திவாரி, துபே, பதக், பாண்டே, உபாத்யா, கவுபே, தீட்சித் மற்றும் வாஜ்பேயி ஆகியோர் அடக்கம்) இதிலும் பல பிரிவுகளும் உள் பிரிவுகளும் உள்ளனவாம். இவை தவிர மிஸ்ராக்கள் 41, சக்லாக்கள் 26, திவாரிகள் 38, துபேக்கள் 21, பதக்குகள் 5, பாண்டேக்கள் 25, உபாத்யாக்கள் 10, சவுபே 10, தீட்சித் 7, வாஜ்பேயி 15, கவுட பார்ப்பனர்கள் 17, உத்கல பார்ப்பனர்கள் 6, ஷாஷானி பார்ப்பனர்கள் 12, சுரோத்ரிய பார்ப்பனர் 4, மைதில்ய பார்ப்பனர் 6, மிஸ்ராக்கள் 5, தென்னிந்திய பார்ப்பனர்கள் 7, இவர்கள் தவிர மேலும் 5 பிரிவுகள். குர்ஜர் பார்ப்பனர்கள் 29.

இந்த லட்சணத்தில் பார்ப்பன பாரதியார் எழுதினார். “என்னடா, இது! பறையில் 18 ஜாதியாம், நுளையில் 108 ஜாதியாம்’’ என்று! (படிக்க: பாரதியார் கட்டுரைகள்) இவன் முதுகில் 108 முடிச்சுகளை வைத்துக் கொண்டு மற்றவர்களைக் கேலி பேசினான். அம்பேத்கர் தந்துள்ள பட்டியலில் அத்தனை ஜாதிகளின் பெயர்களையும் தந்துள்ளார். (தொகுப்பு நூல்_பாகம் 10)

இப்படிப் பலவகையிலும் இந்துமத வினோதங்களையும், குரோதங்களையும் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டு, இந்துமதம் ஒழிக்கப்பட்டால் ஒழிய மக்கள் முன்னேற வழியே இல்லை என்று நிரூபித்துள்ளார் அம்பேத்கர். அவரைப் போய், இந்து மதத்தை அழிக்க நினைத்தவரல்லர் என்றும், இந்துத்வவாதி யென்றும் கூறுகின்றனர் என்றால், அறிவு நாணயம் என்பார்களே, அது கொஞ்சமாவது வேண்டாமா? அம்பேத்கரின் ஜாதி இந்துமத ஒழிப்புக் கொள்கை, கோட்பாடுகள் உலகம் எங்கும் பரவியுள்ள நிலையில், 1927 டிசம்பர் 20இல் மனுஸ்மிருதியை அம்பேத்கர் தீயிட்டுப் பொசுக்கினார். 

மகத் எனும் ஊரிலுள்ள சவுதார் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கத் தீண்டாதோருக்குள்ள உரிமையை நிலைநாட்டும் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக மனுநூல் எரிப்பு! ஒரு மாநாடு கூட்டி ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நூற்றுக் கணக்கானோர் கொளுத்தினர். ஏன் கொளுத்த வேண்டும் மனுநூலை? இதனை விளக்கி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றினார்.

“இந்து சமுதாயத்தின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கதாக, இரங்கத் தக்கதாக பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது என்று இம்மாநாடு உறுதியாகக் கருதுகிறது. சமூக அநீதியைக் கண்டும் காணாமல் பொறுத்துக் கொள்வதன்மூலம், பொய்யான சமய நம்பிக்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம், ஒரு சமுதாயம் எவ்வாறு சீரழிந்துபோகும் என்பதற்கு இந்துச் சமுதாயத்தின் இன்றைய அவலநிலை எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. எல்லா இந்துக்களுமே பிறந்தது முதல் சமமானவர்கள். சமூக அந்தஸ்தில் வேறுபாட்டை உண்டு பண்ணக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை உறுதியாக மாநாடு எதிர்க்கிறது. வன்மையாகக் கண்டிக்கிறது.’’

“ஏற்றத்தாழ்வுச் சித்தாந்தத்தை இந்து சமூக அமைப்பின் அடித்தளமாகச் சித்தரிக்கும் இந்துக்களின் எல்லா இலக்கியங்களையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன் அடியோடு நிராகரிக்கிறது.’’

“வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்துக்களில் சில வகுப்பினர் அனுபவித்துவரும் சமூக, மதச் சலுகைகளை இம்மாநாடு மறுதலிக்கிறது.’’

“பொதுச் சாலைகளையும், கிணறு, குளம் போன்றவற்றையும் பொதுக் கோயில்களையும் இதர எல்லாப் பொது வசதிகளையும் எவரும் பயன்படுத்திக் கொள்வதற்கு எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது. இடைஞ்சல் செய்பவர்களையும் இடையூறு விளைவிப்பவர் களையும் மக்களின் விரோதிகள் என இம்மாநாடு கருதுகிறது.’’

“இந்து ஜாதி அமைப்பு முறை சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது. பிறப்பை  அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மக்களின் ஒப்புதலைப் பெற்றதாக இருக்கிறது. இத்தகைய ஜாதி அமைப்பை இம்மாநாடு ஏற்க மறுக்கிறது.’’

வேறு பல மதங்கள் காலப்போக்கில் அழிந்துபோன நிலையிலும் இந்து மதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருவதைப் பார்த்தால் _ அந்த மதங்களில் இல்லாத ஒன்று _ ஜாதி அமைப்பு இந்து மதத்தில் மட்டுமே இருப்பதுதான் அதன் தனித்தன்மை என்ற “தெய்வத்தின் குரலை’’ நினைத்துக் கொள்ளுங்கள். பூரி சங்கராச்சாரியின் கருத்தான தீண்டாமை ஷேமகரமானது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். காஞ்சி, பூரி சங்கராச்சாரிகளின் தீய கருத்துகளை மனதில் கொண்டுதானே இந்த மறுதலிப்புக் கருத்துகள்? எப்படி அம்பேத்கர் இந்துத்வ அம்பேத்கர் ஆவார்? 

(கேள்விகள் தொடரும்)


-சு.அறிவுக்கரசு


-உண்மைஇதழ்,16-31.7.17

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?-3


இதுதான் பாரதப் பெருமை

புத்தர் தம் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கிய காலத்தின் சமூக, அரசியல், ஆன்மிகத் துறைகளில் வரம்பு மீறிய ஒழுக்கக் கேட்டில் ஆரிய இனம் மூழ்கித் திளைத்தது. மது அருந்துவதுபோல் சூதாட்டமும் ஆரியரிடையே பரவிக் கிடந்தது. 

இவற்றை மாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பல. அதனால்தான் புத்தரைச் சீர்திருத்தவாதி என்றார் அம்பேத்கர். பிரம்ம ஜலசுத்தா எனும் நூல் புத்தரின் முயற்சிகளை விவரிக்கிறது. முன்மாதிரியாக வாழ்ந்தவர் மட்டுமல்லர், புத்தர். சமூகத்தில் வாழ்ந்த சாதாரண மனிதர்களையும் நல்வழிப்படுத்த முயன்றவர் புத்தர். பழம்பெரும் ஆரிய நாகரிக அலங்கோலங்களை அம்பலப்படுத்தி புத்தநெறியைப் பெற்றவர் டாக்டர் அம்பேத்கர். (படிக்க அவரது தொகுப்பு நூல் -_ தொகுதி 7)

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

இந்துமத நூல்களை ஏற்காதவர்

1. மனுஸ்மிருதி, 2. கீதை, 3.அத்வைத் ஆதிசங்கரனின் வேதாந்தம், 4.மகாபாரதம், 5.ராமாயணம், 6.புராணங்கள் இவற்றுள் காலத்தால் முந்தியது. 

மனுஸ்மிருதி, இதனை எழுதியவர் சுமதி பார்காவா எழுதிய ஆண்டு கி.மு.185! மவுரிய வம்ச மன்னர் பிரகத்ரனை அவனது தளபதியான பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கன் பின்னாலிருந்து கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பின்னால் எழுதப்பட்டது. 

கீதை கி.பி.2ஆம் நுற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதாக பேராசிரியர் கார்பே கூறுகிறார். கி.பி.467இல் குப்த பாலாத்தியன் அரியணை ஏறிய பிறகு எழுதப்பட்டது கீதை என்பது பேராசிரியர் கோசாம்பியின் கருத்து. மகாபாரதம் வியாசரால் எழுதப்பட்டது. 

ஜெயம் எனும் தலைப்புதான் அந்நூலுக்கு இடப்பட்டது. இரண்டாம் பதிப்பில் பெயர் பாரதம் என்பதாக மாற்றப்பட்டது. இதனை வைசம்பாயணர் வெளியிட்டார். வியாசரின் மாணவர்கள் பலரும் பாரதத்தை வெளியிட்டுள்ளனர். சவுதி என்பவர் மூன்றாம் பதிப்பாக மகாபாரதம் என்ற தலைப்பில் வெளியிட்டார். வியாசரின் ஜெயம் 8800 பாடல்கள் கொண்டது. 

வைசம்பாயணரின் பாரதம் 24000 பாடல்களைக் கொண்டிருந்தது. சவுதியின் மகாபாரதம் 96 ஆயிரத்து 836 பாடல்கள் கொண்டது. அவரவர் கைச்சரக்கு கலக்கப்பட்டு இவ்வளவில் பெரிதாகியுள்ளது.

பேராசிரியர் ஹாப்கின்ஸ் என்பாரின் கருத்துப்படி கி.பி.200க்கும் கி.பி.400க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. ராமாயணமும்கூட பாரதக் கதைக் காலத்தில்-தான் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். திரேதாயுகம், துவாபரயுகம் என்றெல்லாம் புளுகுவதை ஏற்காமல் இப்படிக் கூறியவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

வேதாந்தத்திற்கு உரைகள் ஏன் அய்ந்து விதமாக எழுதப்பட்டன? சங்கராச்சாரியார் வேதாந்தங்கள் அத்வைதத்தைப் போதிக்கிறது என்றார். இராமானுஜர் விசிஷ்டாத்வைதமே என்றார். மத்துவாச்சாரி துவைதமே என்றார். நிம்பார்காச்சாரியார் சுத்தாத்வைதத்தையே வேதாந்தங்கள் கூறுகின்றன என்றார். 

வல்லபாச்சாரியார் துவைதாவைதத்தே கூறுகின்றன என்றார். ஆனையைப் பார்த்த குருடர்களைப் போல, ஏன் அய்ந்து விதமான உரைகள், விளக்கங்கள்? நுணுகிப் பார்த்தால் சங்கராச்சாரி கூறியது ஒரு மாதிரியாகவும் மற்ற நான்கு பேரின் விளக்கங்கள் வேறு மாதிரியாகவும் உள்ளனவே ஏன்? வேதாந்த சூத்திரங்கள் பலமுறை திருத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளனவே, ஏன்?

வேதங்களின் முடிவுகள் ஏன் முரண்பட்டு நிற்கின்றன? என்ற கேள்விகளைக் கேட்டவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

மகாபாரதத்தில் ஹுனர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. கி.பி.455இல் ஸ்கந்த குப்தன் ஹுனர்களைத் தோற்கடித்தான் என்பது வரலாறு. கி.பி.528 வரையிலும்கூட ஹுனர்களின் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. மகாபாரதத்தின் 190ஆம் அத்தியாயம் பாடல் 29இல் இந்த உலகமே இஸ்லாமிய உலகமாக மாறிவிடும். 

இதனால் யாகங்கள், புனிதச் சடங்குகள், சமய விழாக்கள் எதுவுமே இல்லாமல் போய்விடும் என்கிறது. என்றால் இஸ்லாமிய மார்க்கம் வலுப்பெற்ற பிறகு எழுதப்பட்டதுதானே பாரதம்? கி.பி.500க்குப் பிறகுதானே எழுதப்-பட்டிருக்கக் கூடும்?

“வேள்விகள், சமய விழாக்கள் முதலியன இனி இஸ்லாம் இல்லாமற் செய்து விடும்’’ என பாரதம் கூறுவது எதிர்காலத்தைக் குறிப்பிடு-வதல்ல, நிகழ்கால விளைவைக் கூறுகிறது’’ என்கிறார் அம்பேத்கர். மேலும், பாடல் 59இல் விரசாலர்களால் ஒடுக்கப்பட்ட பார்ப்பனர்கள், பயத்தால் நடுங்கித் தங்களைக் காப்பாற்ற யாருமே இல்லை என்பதை உணர்ந்து துக்கத்தோடும் துயரத்தோடும் மனவேதனை-யோடும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து அலைந்தார்கள்’’ எனக் கூறுகிறது. என்றால் இசுலாமியப் படையெடுப்புக்குப் பின்னரே பாரதம் எழுதப்பட்டது என்று அம்பேத்கர் கூறுகிறார். 

அதாவது  கி.பி.1200க்குப் பின் எழுதப்-பட்டதுதான் பாரதம் என்றாகிறது. அப்படியானால் பாரதக் கதை, பாரதப் பண்பாடு எல்லாமே மோசடி என்றாகிறது. பாரதக் கதாபாத்திரங்களின் வாழ்வு பாரத மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது என்று கூறிப் பெருமைப்படும் ஆர்.எஸ்.எஸ். வகையறா என்ன சொல்லும்?

இராமாயணத்தைப் பற்றி ஆய்வு செய்து அம்பேத்கர் எழுதியது என்னவென்றால் அதுவும் பாரதம் போன்றே மூன்று பிறப்பு எடுத்து விளங்கிவருகிறது. ராமனின் மனைவி சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால் நடந்த போரைப் பற்றிய சிறிய கதையாகவே இருந்தது. 

இரண்டாம் பதிப்பில் அக்கதையே நீதிநெறிக் கதையாக வடிவமைக்கப்பட்டது. மூன்றாம் கதையைப் பலவித தொன்மங்கள், தத்துவங்கள், கலை போன்றவை அடங்கிய பெருநூலாகக் காட்சியளிக்கிறது வால்மீகி எனும் கீழ்ஜாதி வேடன் எழுதியது என்கிறார்கள். 

பாரதக் கதையை மீனவனான வியாசன் எழுதியதாகக் கதை. ராமாயணக் கதையைத் தழுவிப் பல்வேறு மொழிகளிலும் பலரும் எழுதியுள்ளனர். தமிழில் கம்பனும் இந்தியில் துளசிதாசனும் எழுதி-யுள்ளனர். 

ராமன் கதாபாத்திரத்தைத் தெய்வமாக்கி, அவதாரம் ஆக்கி அதற்குரிய கற்பனைகளைக் கலந்து அறிவு ஏற்காத சம்பவங்களைக் கோத்து கம்பராமாயணம் எழுதியதைப் போலவே துளசிதாசனும் செய்துள்ளான். 

தமிழர்கள் கம்ப ராமாயணத்தை மட்டுமே படித்துவிட்டு ராமனைக் கடவுளாக நம்புவதைப் போலவே வடவரும் துளசி-தாசனின் ராமசரிதமானஸை மட்டுமே படித்துவிட்டு ராமனை வழிபடத் தொடங்கினர். பாரதம் எழுதிய பின்னர்தான் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டது எனத் தெளிவாகக் கூறுகிறார். 

இதையெல்லாம் பார்த்தால் அம்பேத்கர் எப்படி இந்துத்வவாதி ஆவார்?
தொல்பழங்கதைகள் எனப் பொருள்படும் புராணங்கள் 18 என்றும், உபபுராணங்கள் 18 என்றும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் ஒரே புராணம்தான் என்கிறார் அம்பேத்கர். அரசன் யாகம் செய்யும்போது பத்தாம்பிகாளி புராணம்படிக்க வேண்டும் என்கிற விதியாம். 

இந்த ஆதிபுராணத்தை செய்தவர் வியாசராம். அவரது மாணவரான ரோமஹர்ஷனர் என்பவருக்கு வியாசர் மீதிப் புராணங்களை உபதேசித்து அவர்தான் 18 புராணங்களாக ஆக்கியவராம். 

ரோஹேர்ஷனரிடம் பாடம் கேட்ட அவரது மாணவர்கள் ஆறுபேர்களில், கஷ்யபர், சவர்னி, வைசம்பாயனர் ஆகிய மூவரும் இந்தப் புராணங்களை விரிவுபடுத்திப் பதிப்பித்தனர். இவ்வாறு நான்குமுறை புராணங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 

இந்தப் புராணங்களில் விஷணு வணக்கம் பற்றி 5ம் சிவனை வணங்குவது பற்றி 8ம் ஒரு புராணம் பிரம்மா பற்றியும் ஒரு புராணம் சூரியனை வணங்குவது பற்றியும் இரண்டு புராணங்கள் தேவி (பெண் கடவுள்) வணக்கம் பற்றியும் ஒன்று கணபதி பற்றியும் பேசுகின்றன.

புராணங்களை யார் எழுதியது? பார்ப்பனர் படித்தவர். பார்ப்பனரல்லாத படித்தவர் சூதர்கள். சூதர்களே புராணங்களை எழுதும் உரிமை படைத்தவர்களாக இருந்தனர். திடீரெனப் பார்ப்பனர்கள் அதற்கு உரிமை கொண்டாடி தமதாக்கிக் கொண்டனர். ஏற்கெனவே எழுதப்பட்டவற்றில் சிறுசிறு மாற்றங்கள் செய்தனர்.

மவுரிய வம்ச மன்னான பிரகத்ரனைக் கொன்ற புஷ்யமித்திரன் எனும் பார்ப்பனன்-தான் பார்ப்பனியக் கருத்தாக்கத்தின் கர்த்தா. பார்ப்பனியத்தின் வெற்றி அக்கால இலக்கியங்-களில் எதிரொலித்தது. பாரதம், ராமாயணம், புராணங்கள் எல்லாமே அதன் விளைவுதான். அதிலும் ஓர் ஒற்றுமை _ மகாபாரதத்தில் 18 பருவங்கள் கீதையில் 18 அத்தியாயங்கள். புராணங்கள் 18 என ஒரே 18 மயம். இது தற்செயலா? திட்டமிட்டதா?

இப்படி இந்துமத இலக்கியங்களின் அடிமடியில் கைவைத்து அம்பலப்படுத்திய அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

“நான்கு வருணத்தை புத்தர் எதிர்த்தார். வருண தர்மத்தை எதிர்த்து புத்தர் அசைக்க முடியாத உவமைகளைக் கையாண்டார். சதுர்வர்ணக் கோட்பாடு கட்டுக்குலைந்தது. சூத்திரர்களும் பெண்களும் சன்னியாசிகளாக முடிந்தது. 

புத்தர் காலம் அறிவொளி வீசிய காலம். பகுத்தறிவு கோலோச்சிய காலம். வேதங்களில் சொல்லப்-பட்டிருக்கிறது என்பதாலாயே, பிறப்பின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்ட சதுர்வர்ணக் கோட்பாட்டை எவர் ஏற்பர்?... ஒரு கொலை வழக்கில் வழக்குரைஞராக கிருஷ்ணன் ஆஜராகி கீதையில் கூறப்பட்ட வாதத்தைக் கூறி கொலையன்று என்றால்... கிருஷ்ணன் இருக்க வேண்டிய இடம் பைத்தியக்காரர் மருத்துவமனை-தான் என்றே சொல்வார்கள்’’ என்றெழுதியவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

கீதையின் பித்தலாட்டத்தைத் தோலுரித்து வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய பாபாசாகேப் அம்பேத்கர் எப்படி இந்துத்வர் ஆவார்? அறிவோடு சிந்திக்க வேண்டும்.

அண்மைக்கால இந்தியாவில் நடந்த கொடுமைகளையும் அத்பேத்கர் பட்டியல் இட்டுக் காண்பித்துள்ளாரே! 1901இல் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் “சமூக வரிசைப்படி வகைப்படுத்தும்’’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஜாதியின் அடிப் படையில் கணக்கெடுப்பதை உயர்ஜாதியினர் எதிர்த்தனர். ஏன்? ஜாதிதான் இந்திய சமூக அமைப்புக்கு அடிப்படை. 

இந்து ஒருவன் ஒரு ஜாதியில் பிறக்கிறான். ஜாதிதான் அவனுடைய சமய, சமூக, பொருளாதார, குடும்ப வாழ்க்கையை தொட்டில் முதல் சுடுகாடு வரை முடிவு செய்கிறது.

கேரளாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் ‘உப்பு’ என்ற சொல்லை உச்சரிக்கக் கூடாதாம். புளிச்சாட்டன் என்றுதான் கூறவேண்டும். 1936இல் நவம்பர் மாத வாக்கில் மலபாரில் ஒத்தப்பாலம் ஊரில் சிவராமன் எனும் ஈழவர் உப்பு கேட்டதற்காகக் கடைக்காரர் அந்த 17 வயது ஈழவ இளைஞனை அடித்துக் கொன்று விட்டார். (ஏடு, பம்பாய் சமாச்சார் 04.11.1936) இந்தக் கொடுமை இந்துமதத்தின் தர்ம விதிகளின்படி நடந்துள்ளது.

மதுரா மாவட்டம் கோஹனா எனும் கிராமத்தில் பார்ப்பனர்களுக்கும் ஜாட் எனும் உயர்ஜாதியினர்க்கும் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்தமைக்காகவும் செத்த மாட்டை அப்புறப்படுத்தக் கூலி கேட்டதற்காகவும் தீண்டாதார் ஜாதவ் ஜாதியினரில் குடிநீர் கிணற்றில் மனித மலத்தைக் கொட்டினர். 

இதனைத் தடுத்த ஜாதவ்கள் தடியால் அடிக்கப்பட்ட கொடுமை. ஆறு வீடுகளை எரித்தனர். 18 பேர் காயமடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்ட கொடுமையை 1938 டிசம்பரில் வெளிவந்த ஜீவன் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தீண்டாதோர்க்கு இழைக்கப்பட்ட  நூற்றுக்-கணக்கான வன்கொடுமைகளை வெளிப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்தியவர் அம்பேத்கர்.

“ஜாதி முறையின் நீட்சிதான் தீண்டாமை என்றார் அம்பேத்கர். ஜாதியை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. ஜாதியும் தீண்டாமையும் வெவ்வேறல்ல. 

இரண்டும் ஒன்றைவிட்டு மற்றது பிரிக்க முடியாதவை. ஜாதியும் தீண்டாமையும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன. சேர்ந்தேதான் வீழும்’’ என்றவர் அம்பேத்கர். காந்தியார் போன்றவர்கள் தீண்டாமை மனிதகுலத்திற்கு எதிரான பாவம் என்பதோடு நிறுத்திவிட்டார். 

பாவம் செய்வதற்கு ஜாதிதான் காரணம் என்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று பேசவில்லை. அவர் நிலையே அப்படி என்றால்... மற்றவர்கள் பற்றிப் பேசவே வேண்டாம்.


“குலம் தாழ்த்தி, உயர்ச்சி சொல்லல் பாவம்’’ என்றுகூட ஒரு தமிழ்ப் புலவன் பாடியிருக்கிறான். இவர்கள் எல்லாம் ஜாதி ஒழிய வேண்டும் எனக் கூறவே இல்லை; கூறவும் மாட்டார்கள். 

காரணம் என்னவெனில் ஜாதி ஒழித்தால் இந்து மதமே ஒழிந்து போகும். ஏனெனில் ஜாதிகளின் தொகுப்புதான் இந்து மதம்.

“தீண்டாதோரிடம் காட்டப்படும் பாரபட்சங்கள் இந்துக்களின் தீண்டப்படாதவர் களுக்கெதிரான பாரபட்சங்கள், இந்துக்களின் உள்ளத்தில் ஆழ்ந்து வேர் ஊன்றியுள்ள வலுவான உணர்வுகள் கூட்டங்களிலும் நிருவாகத்திலும் பிரதிபலிக்கின்றன. 

சுதந்திரமான ஓர் உலகில் தீண்டப்படாதோர் தங்கள் தலைக்குமேல் உயர்ந்து இந்து சமூக முறைக்கு ஆபத்தாகிவிடுவார்கள் என்று இந்து மக்கள் மனதில் தோன்றிய அச்சத்தால்தான் இத்தகைய பாரபட்சங்கள் நிலைத்து நிற்கின்றன. 

இந்து சமூக முறைமை நீடிக்கும்வரை தீண்டப்படாதவர்களுக்-கெதிரான பாரபட்சங்களும் தொடர்ந்து இருக்கும்’’ எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்? தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதிகள் ஒழிக்கப்பட்டால், இந்துமத முறைமைகள் கலகலத்துப் போய் இறுதியில் இந்து மதமே ஒழிந்துபோகும். 

கடவுள்கள் எனும் கற்பனையைக் கட்டமைத்து மக்களிடையே அச்சுறுத்திப் பின் அதனைப் பிரபலப்படுத்தவும், கட்டிக் காப்பாற்றவும் கட்டமைக்கப்பட்டதான நிறுவனமே மதம். 

இல்லாவிட்டால் இத்தனை மதங்கள் உலகில் இருக்கக் காரணங்களே இல்லை. அந்த வகையில் இந்து மதம் ஒழிந்து போவதைப் பற்றிக் கவலையே கொள்ளாத அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? 

(கேள்விகள் தொடரும்...)


-சு அறியுக்கரசு


-உண்மை இதழ்,1-15.7.17