பக்கங்கள்

காட்டுவாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காட்டுவாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பழங்குடியினர் காட்டுவாசிகளா? இழிவு படுத்தும் பா.ஜ.க.!

 

பாணன்

பழங்குடியின சமூகங்களை ஆதிவாசிகளுக்குப் பதிலாக ‘வனவாசி’ என்று  மோடி மற்றும் பா.ஜ.க குறிப்பிடுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ள நிலையில், அந்த வார்த்தைகளுக்கு வித்தியாசம் என்ன, அவற்றின் பயன்பாட்டின் வரலாறு என்ன? என்பதைக் காண்போம்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 21.11.2022 அன்று பழங்குடியின சமூகத்திற்காக பா.ஜ.க. மற்றும் அதன் சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘வனவாசி’ என்ற சொல்லை, காங்கிரசால் பயன்படுத்தப்படும் ‘ஆதிவாசி’ என்ற சொல்லுடன் வேறுபடுத்தி கேள்வி எழுப்பினார்.

“பா.ஜ.க.,வினர் உங்களை ஆதிவாசி என்று அழைப்பதில்லை. அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்? வனவாசி (காட்டுவாசி)  என்கின்றனர். நீங்கள் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ வேண்டும், உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வேண்டும், விமானத்தில் பறக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்கள்,” என்று பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறினார்

பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியல் பழங்குடியினர் அல்லது “அனுசுசித் ஜன்ஜாதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை ‘மூல்நிவாசி/ஆதிவாசி’ என்று குறிப்பிடுகின்றனர், அதாவது ‘முதல் குடிமக்கள்’. இது பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

காட்டுவாசிகள் என்று பொருள்படும் ‘வனவாசி’ என்பது சங் பரிவாரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த சங் பரிவார் அமைப்புகள் பழங்குடியினர் பகுதிகளில் “கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க” பரவலாக செயல்படுகிறது. ஓரங்கட்டப்பட்ட பழங்குடி சமூகம் வர்ணாஸ்ரம கட்டமைப்பிற்கு வெளியே உள்ளவர்களாக கருதப்படுவதால், அவர்களை காட்டுவாசிகள் என்றே கூறிவந்தனர்

பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் ஹிந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களையும் உள்ளே இழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களுள் முக்கியமானவரான ராமகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, எம்.எஸ். கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, டிசம்பர் 26, 1952 அன்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை (ABVKA) நிறுவினார்.

பழங்குடியினரின் ‘ஹிந்துமயமாக்கலில்’ சங் பரிவார் முதன்மை கவனம் செலுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது அவசியம் என்று கூறியும், அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக்கூறி ஏமாற்றியது.  ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வெற்றிகளைப் பெற உதவியது.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்த இந்திய துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை, ஆர்.எஸ்.எஸ்.எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. 

பல ஆண்டுகளாக பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிய சங் பரிவார் தலைவரும், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஹர்ஷ் சவுகான், வனவாசி என்ற சொல் 1952 இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நிறுவப்பட்டது என்கிறார்

காட்டுவாசி என்பது பெருமைக்குரிய வார்த்தையாம்

“காடுகளில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக வனவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமாயணத்தில் கூட, காடுகளில் வாழும் சமூகங்களை அடையாளம் காண இந்தக் குறிப்பு உள்ளது. வனவாசி என்ற பதம் காட்டுவாசிகளைப் பற்றிய சரியான கருத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இது பெருமைக்குரிய வார்த்தையாகும்” என்று ஹர்ஷ் சவுஹான்  கூறினார்.

“ஆதிவாசிகள் என்ற சொல் 1930களில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தியாவின் சூழலில் அது தவறு. அமெரிக்காவில் பழங்குடியினர் என்ற சொல் பழங்குடியினருக்கு அவர்களின் அடையாளத்தைப் பெற பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால், வனவாசி எளிமையான வார்த்தை - அவர்கள் வனவாசிகள் என்பதை உணர்த்துகிறது” என்று ஹர்ஷ் சவுகான் விளக்கினார்.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்களின் போது, ​​ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா, “ஆதிவாசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தினார், மேலும் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது “பஞ்சாதி” ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜெய்பால் சிங் முண்டா பின்னர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பழங்குடியின பிரதிநிதியாக ஆனார்.

“பல கமிட்டிகள் செய்த எந்த மொழிபெயர்ப்பிலும் ‘ஆதிவாசி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இது எப்படி நடந்தது? ஏன் என்று கேட்கிறேன், அது செய்யப்படவில்லை. ‘ஆதிவாசி’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படவில்லை, ‘பஞ்சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ஏன்? நமது பழங்குடியினரில் பெரும்பாலானோர் காடுகளில் வாழ்வதில்லை. பட்டியல் பழங்குடியினரின் மொழி பெயர்ப்பு வார்த்தை ‘ஆதிவாசி’யாக இருக்க வேண்டும் என்று உங்கள் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதிவாசி என்ற சொல்லுக்கு அருள் உண்டு. பஞ்சாதி என்ற இந்த பழைய தவறான அடைமொழி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை, ஏனெனில் சமீப காலம் வரை அது ஒரு நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் குறிக்கிறது, ”என்று ஜெய்பால் சிங் முண்டா கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மிகவும் கவனமாக மீனவர்களையும் வனவாசி என்ற பட்டியலில் சேர்க்க ரகசிய திட்டம் தீட்டி வருகிறது. அதாவது 4 வருண அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள் அனைவருமே மனிதர்களோடு வாழத்தகுதி அற்றவர்கள் என்ற பார்வையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டுள்ளது., 

காரணம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் இவர்களுக்கு தொண்டூழியம் செய்ய சூத்திரர், ஆனால் தற்போது பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள்(பார்ப்பனர் அல்லாதோர்) மட்டுமே என்று அவர்களே கூறுகின்றனர். இதற்கான கலியுகத்தில் நீதி கேட்டுப்போகும், பிராமணன் போஜனத்திற்கு உத்தியோகம் பார்ப்பான், சூத்திரன் தனது தருமத்திற்கான காரியத்தைச்செய்யமாட்டான் என்று உபநிடதம் கூறுவதாக பஜனைக்கோஷ்டி பார்ப்பனர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். 

 இப்போது சூத்திரர்கள் அல்லாத பழங்குடியினரை சேர்த்தால் வர்ணாஸ்ரம முறையில் குழப்பம் ஏற்படும் ஆகையால் அவர்களை மக்கள் வாழாத பகுதி(காடு)களில் வசிப்பவர்கள் காட்டுவாசிகள்(வனவாசி) என்று அழைக்கின்றனார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவு

ஒடிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் கிழக்கு மற்றும் மலைப்பகுதி மாவட்டங்கள், கிழக்கு மகாராட்டிரா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறமல் இருக்கவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கவும் `வன்வாசி கல்யாண்’ என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெரும் நிதியை ஒதுக்கி பழங்குடியின கிராமம் கிராமாக சென்று கிளைகளை திறந்துள்ளது. 

ஒருபுறம் இவர்களை வன்வாசி என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் வனங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று வருகிறது. குஜராத்தில் மூன்று ஆண்டுகள் பெண் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் சிங்கங்கள் வாழும் கிர்காடுகளின் 250 ஏக்கர் நிலத்தை தனது மகளின் நிறுவனத்திற்கு சொற்ப விலைக்கு விற்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார். அவரது மகளோ சுரங்க முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய்களுக்கு நிலத்தை விற்றுவிட்டார். இந்த பிரச்சினை பெரிதாகி அவர் பதவி விலக நேரிட்டது. அந்த நிலங்கள் விற்கும் போது அந்த நிலங்களில் வழ்ந்த பழங்குடியினரின் நிலங்களும் சுரங்க முதலாளிகளின் வசமாகின. 

இன்றுவரை அந்தப்பழங்குடியினர் வாழ்வாதாரமின்றி மூதாதையார்கள் வாழ்ந்த நிலத்தில் அடிமைகளைப்போல் சுரங்க முதலாளிகளின் தயவில் வாழ்ந்து வரும் பெரும் அவலம் நீடிக்கிறது. 

பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொறுத்தவரை இன்றும் பழங்குடியினர் காட்டுவாசிகள் அதனால் தான் அவர்களை மோடி முதல் மோகன் பாகவத் வரை வன்வாசி(காட்டுவாசி) என்று அழைத்துவருகின்றனர்.