பக்கங்கள்

திங்கள், 30 மே, 2016

மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான்(1931 - புதுவை முரசிலிருந்து)
ஏசுவானவர் பாவிகளை ரட்சிக்கும் பொருட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்று கிறித்துவப் பாதிரிமார்கள் உபன்யாசம் செய்கிறார்கள். “ஏழைகளைக் காப்பாற்றும் பொருட்டு தனது ரத்தத்தைச் சிந்தினார்” என்று பிரசங்கம் செய்கிறார்கள். நமது ஜனங்களும் அதை நம்புகிறார்கள். எப்படியோ 60 லட்சம் கிறிஸ்துவர்களும் இந்தியாவில் சேர்ந்து விட்டார்கள். அதைப்பற்றி நமக்கு எள்ளளவும் கவலை கிடையாது.
ஏனெனில் இந்த 60 லட்சம் பேர்களும் இந்துமதத்தில் இருந்து சாதித்ததைவிட அதிக மாகவோ, குறைவாகவோ கிறிஸ்துமதத்திலும் சாதித்து விடப் போவதில்லையென்பதே நமது அபிப்பிராயம்.
வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்ததைவிட சற்று மதவெறி அதிகம் பிடிக்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் எதற்கெடுத்தாலும் சைத்தான் என்று சொல்லி விடலாம் இதைத் தவிர வேறு பகுத்தறிவோ அனுபவ முதிர்ச்சியோ கிறிஸ்துமதத்தில்  அதிகமாய்க் கிடைத்துவிடும் என்று நாம் சிறிதுகூட சந்தேகிக்கவில்லை.
ஆகவே கிறிஸ்து மதத்திற்கு இருக்கும் பணக் கொழுப்பும் அரசாங்க ஆதரவும் இருக்கும் வரையில் அது அவ்வளவு பயமில்லாமல் இருக்கலாம்!. இருந்து விட்டு போகட்டும் ஒன்றும் மூழ்கிப் போகாது ஆனால் நாம் கேட்பதெல்லாம் ஒரு விஷயந்தான். கிறிஸ்துவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறார்களா?
உனது ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று வேதநூல் .. உனது மேலங்கியை எடுத்துக்  கொண்டவனுக்கு உனது கோட்டையும் கொடுக்கத் தயங் காதே என்று கூறுகிறது ஆனால் என்ன நடக்கிறது? எவ னாவது பாதிரிமார்கள் புரட்டை எடுத்துச் சொன்னால் அவன்மீது மான நஷ்ட வழக்கு தொடரலாமா அவனது ஆயுதத்தைப் பிடுங்கலாமா அவனைக் கஷ்டப்படுத்தலாமா என்று யோசனை போகிறதே தவிர யோக்கியமாய், நாணயமாய், மனுஷத் தன்மையோடு சுயஅறிவோடு பதில் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
மிஸ். மேயோ இந்து மதத்தைப் பற்றி இடித்துக் கூறியபோது இந்துமதப் பித்தர்கள் எப்படி தலைகால் தெரியாமல் காய்ச்சின எண்ணையில் போட்ட எள்ளுப் பொட்டணம் மாதிரி துள்ளினார்களோ அதைப்போலவே தான் நமது கிறிஸ்துவ சகோதரர்களும் குதிக்கிறார்கள். சக்கரைகளுக்கும், ஜோசப்பு களுக்கும், செல்வங்களுக்கும், அற்புத ஆரோக்கியசாமி களுக்கும் ஆவேசம் வந்து விட்டது. ஒரு மதத்திலும் சேராத நம்மைப் போன்றவர்களுக்கே, எங்கே 2ஆவது ஏசு  கிறிஸ்து திடீரென்று வந்து எல்லோரையும் அழித்து விடு வாரோ என்று பயமாயிருக்கிறது! பாவம்!
ஆஹா என்ன வேடிக்கை பல நூறு வருஷங்களா பரம் பரையாய் கிறிஸ்துவர்களாக இருந்த தேசங்களும் மக்களும் கிறிஸ்து மதத்தை புறக்கணித்து விட்டு சும்மாயிருக்கும்போது நேற்று செட்டியாராயிருந்தவர்களும் 2 நாளைக்கு முந்தி உடையார்களாய் இருந்தவர்களும் இன்றும் கூட அந்த அநாகரீகப் பட்டங்களை தங்கள் புனித மார்க்கத்தைச் சேர்ந்த பெயர்களோடு கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருக்கி றவர்களும் ஏதோ உலகத்திற்கே அபாயம் வந்துவிட்டது போல் சீறிவிழுவதும் தலைவிரி கோலமாய் ஆடுவதும் ஒரு வெட்ககரமான காரியமாகவே இருக்கிறது.
கிறிஸ்துவத் தலைவர்களே! பாதிரிமார்களே! ஏன் இத்தனை ஆத்திரம்? உங்கள் மதத்தில் சிறிது கூட அப்பு அழுக்கு இல்லையென்றால் எந்த காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் உபயோகப்படக்கூடியது என்றால் எல்லா உண்மைகளும் உடையது என்றால் புனிதமான மார்க்க மென்றால், கடவுள் அருள் பெற்றவர்களாலேயே ஸ்தாபிக்கப் பட்டது என்றால் இந்த சுயமரியாதை இயக்கமோ இந்த பகுத்தறிவு இயக்கமோ, இந்த ரஷியாவோ இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் அதை ஒரு அங்குலமாவது நகர்த்த முடியுமா?
அப்படியிருக்க உங்களுக்கென்ன ஆவேசம்? அன்று மோஸசைப் போல் ஒரு ஆள் கடவுளுக்குத் தூதுபோகக் கிடைக்கமாட்டானா? அன்றி கிறிஸ்துவக் கடவுள் கொஞ்சம் கண் திறந்து பார்த்தால் (இப்போது கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை) போதாதா? இந்த  அறிவு இயக்கத்தார் எல்லாம் அழிந்துவிட மாட்டார் களா? அப்படியிருக்க நமது நாடார்,
முதலியார், வாண்டையார், உடையார் கிறிஸ்துவர்களுக்கு மாத்திரம் ஏன் இத்தனை ஆத்திரம் வரவேண்டுமென்பது நமக்கு விளங்கவில்லை கிறிஸ்து மதமே உண்மையான கொள்கைகளையுடைய மதமென்றால் தானாகவே நிலை பெற்று விடுமல்லவா?
ஓ! ஒரு வேளை இப்படியிருக்கலாம்! கடவுளின் பத்துக் கட்டளைகளுள், நான் ஒரு பொறுமையான கடவுள், மற்றொரு கடவுளை மனிதர் வணங்குவதைப் பொறுக்க மாட்டேன். ஒருவன் இவ்வாறு செய்தால் அவனுடைய மூன்றாவது நான்காவது தலைமுறைவரையில் துன்பப் படுத்துவேன் என்று கிறிஸ்துக் கடவுள் சொல்லியிருக்கிறாரல்லவா? அத னால் தான் கிறிஸ்துப் பாதிரிகளும் தலைவர்களும் பதறுகிறார்கள்.
மதம் ஒழிந்த மனிதனே, மனித சமுதாயத்திற்குப் பயன்படுவான்.
-விடுதலை,4.3.16

புதன், 25 மே, 2016

கடவுள் அழாது என் செய்யும்?

தென்னிந்தியாவிலுள்ள சில கோவில்களிலும், வட இந்தியாவிலுள்ள சிலகோவில்களிலுமுள்ள சுவாமிகளின் (விக்ரகங்களின்) கண்ணிலிருந்து கண்ணீர் வடிவதாக சில மாதங்கட்கு முன்னர் பத்திரிகையில் பார்த்தேன். சில பகுத் தறிவுவாதிகள் இவைகளெல்லாம் சுத்தப்புரட்டு என்றனர். என்னமோ எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு இருக்கக்கூடாது என்ற அய்யமுண்டானது கடைசியில் ஓர் முடிவுக்கு வந்தேன்.
இத்தெய்வங்கள் விஷயம் கண்டிப்பாய் உண்மை யாகத்தானிருக்கும். ஏன் கிரேதாயுகம், திரேதாயுகம் துவாபர யுகங்கள் தெய்வம் மனிதரையாண்டு வந்தது. இந்தக் கலியுகத்தில் மனிதன் தெய்வத்தை அடக்கியாளத் துணிந்து விட்டான். பழைய யுகங்களில் இத்தெய்வங்கள் யதேச்சையாய் காடுகளிலும், நாடுகளிலும் உலாவிக்கொண்டு சுதந்திரமாய்க் குடித்து வெறித்து ஆடு, மாடு மனிதர்களைக் கொன்றுதின்று பல மனைவிகளை மணந்து கொண்டதும் போதாதென்று அகலிகை, பிருந்தை, சரஸ்வதி, தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் முதலிய பெண்களையும் பல பக்தர்களின் மனைவியையும் பலவித தந்திரோ பாயங்களாலும் பலாத் காரத்தாலும் புணர்ந்து இன்பம் துய்த்துக்கொண்டிருந்த தோடமையாது.
ஆயிரக்கணக்கான தேவதாசிகளையும் தானும் தன்னை நம்பி வந்த பக்தர்களும் அனுபவித்துக் கொண்டிருந்திருக்க இக்கலிகால மக்கள் கடவுளுக்கென்று ஒருவரும் பொட்டுக் கட்டகூடாது தாசியென்றொரு கூட்டம் இருந்து விபசாரம் செய்தாலே தண்டிக்க வேண்டும் என்றும் சட்டம் செய்து வருவதோடு ஒருவன் ஒரு மனைவிக்கு மேல் கல்யாணம் செய்யக்கூடாது என்று சட்டஞ் செய்யமுயற்சிப்பதும் பிறர் மனைவி சோதரியை பலாத்காரமாகவோ,
வஞ்சனையாகவோ அபகரித்துச்செல்பவர்களுக்கு, 10 வருஷம் தண்டிக்கப்படும் செய்திகளும், கடவுள் செய்த லீலா வினோதத் திரு விளையாடல்களெல்லாம். விபசாரம், அயோக்கியத்தனம் என்று கூறுவதோடு அக்கடவுளைக் கண்டால் கழுத்தை அறுப்பேன் என்றும் அத்திருவிளையாடல் புராணங்களை யெல்லாம் சுட்டெரிக்க வேண்டும் என்று பகுத்தறிவுவாதிகள் பேசுவதையும் எழுதுவதையும் அறிந்தும் கடவுள்கள் அழாது என்னதான் செய்யும்?
சிறீ ரெங்கநாதர்
விவாகரத்து செய்வாரா?
முஸ்லிம் வைதீக அறிஞர்கள் தங்கள் வேதப்படி ஒரு முஸ்லிம் ஒர் கிறிஸ்தவப்பெண்ணை மணந்துகொள்ளலாம் என்கின்றனர். சீர்திருத்தவாதிகளான முஸ்லீம்களோ விக்ரக வணக்கஞ் செய்யாத எந்த மதப்பெண்ணையும் நாங்கள் மணந்து கொள்ளலாம் - ஆனால் ஒரு முஸ்லிம் பெண் பிற மதஸ்தனைக் கல்யாணம் பண்ணுவது கூடாது என்றுதான் குர்ஆன் கூறுகிறது என்று கூறுகிறார்கள்.
எனவேதான் ஜாதி, மத வித்தியாசமின்றி தமிழர்கள் (இந்து முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் மணந்து கொள்ளலாம் என்று ஒர்தீர்மானம் மலேயாவிலுள்ள கோலககன்சாரில் கூடிய அகில மலேயா நான்காவது சீர்திருத்த மாநாட்டில் கொண்டு வந்த பொழுது முஸ்லீம்கள் பலமாக எதிர்த்ததின் பலனாக பிரேரேபித்தவரால் அத்தீர்மானம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் தமிழர்களின் ஒரு பகுதியாரின் தெய்வமாகிய சிறீ ரெங்கநாதர் ஒர் துலுக்கப்பெண்ணை மணந்து நீண்ட நாளாக வாழ்த்துவரும் பொழுது அவரது அடிச் சுவட்டைப் பின்பற்றி ஒழுகும் மக்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுப்பதும், எதிர்ப்பதும் நியாயமாகுமா?
உண்மையில் அது தங்கள் மதத்திற்கு விரோதமாயிருக்கிறது என்று முஸ்லிம்கள் கருதினால் சிறீ ரெங்கநாதர் செய்கையைத் தண்டித்துப் பெருங்கிளர்ச்சி செய்து சிறீ ரெங்நாதர் விவாகரத்து செய்து கொள்ளும்படி இந்தப் பிரிட்டிஷ் கோர்ட்டிலோ அல்லது தேவலோகக் கோர்ட்டிலோ ஒரு தாவா தொடர்ந்து விவாஹரத்து வெற்றி பெற்று விட்டால் துலுக்க நாச்சியார் விக்ரகத்தை சிறீ ரெங்கம் கோவிலிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் துலுக்கப்பெண்ணும் இந்து ஆணும் கலப்பு மணம் செய்து கொள்ளலாம் என்ற விஷயத்தை எவரும் பேசவே பயப்படுவார்கள் எனவே சிறீரெங்கநாதரை விவாஹரத்து செய்யும்படி  கோர முஸ்லிம்கள் முன் வருவார்களா?   


-விடுதலை,1.4.16

ஞாயிறு, 22 மே, 2016

மோட்சம் வேண்டுமா?

 
இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால்  அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?
இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர் களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.
அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள்.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப் பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.
ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?
பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய் திருக்கிறீர்களே.
அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தி யங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?
- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

பிராமணர்களின் உதடுகளில் உலாவுவது என்ன?
நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில்  அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?)
இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான். நாளை அவன் செல்வனும், கற்றறி வாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொரு வரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.
நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியா வெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர்  உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்? நாமும் மனிதர் களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற் காகவும் நாம் என்ன செய்கின்றோம்,
நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா? அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங் களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவு கின்றது?
நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப் பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது;
மற்றெங்குமன்று....
அன்பும் நல்லெண்ணமுமடைய
உங்கள் விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன்  குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.
-விடுதலை,29.1.16