பக்கங்கள்

கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 நவம்பர், 2024

அண்ணாவின் கடவுள் மறுப்பு! கலைஞரின் ஆத்மா மறுப்பு

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

அண்ணாவின் கடவுள் மறுப்பு

“மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு இன்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை. மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்குவதாகும். எப்படியென்றால், “ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ?” என்பது மத நூற்றுணிபாகும். எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும் – தந்தையாயும் – எல்லாமாயும் – எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியாமையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும், அதற்குச் சட்டமியற்றவேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது! கடற் சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது இயற்கைக்கு மாறுபட்டதாகாது. என்றாலும், அது பலருக்கு வியப்பைத் தருகின்றது. காரணம்: கடற்சிப்பியில் முத்து என்ற ஒரு மதிப்புடைய பொருள் இருக்கிறதென்பதை அதனை அறிந்தான் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும். ஆனால் “நமது” கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற்சிப்பி முத்து போல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்பவருமன்று.

ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாதுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், என்ன தன்மையோடு இருக்கிறதென்று, அறிந்தான் ஒருவன் அதனை அறியார்க்கு அறிவிக்க வேண்டும். அங்ஙனமின்றி எல்லாமாய் – எங்குமாய் – அணுவுக்கணுவாய் – அகண்டமாய் – எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை, ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை. ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதாமொரு கருவியாலோ – அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும். ஆனால், கடவுள், அளப்பரும் இயல்பினதாய்-மறை முதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அளவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனாவானா? அதன் கவுரவத்தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா? அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப்படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந்தாலன்றி முடியுமா?

 ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவானாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டுமன்றோ! எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் ‘கடவுள், என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்ட தாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் என்பது மத நூலார் கொள்கை. எனவே, காண முடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது. அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போலக் கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூற்கள் இடந்தருவதில்லையே! கடவுள் இல்லாத இடமே இல்லை என்பது தான் அந்த நூற்களின் முடிந்த முடிவாகும். எனவே கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்து விடுமென்றும் கருதும் ‘நிறைமதியாளனும்’ மணற் சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.

இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, ‘தேடினால் கிடைப்பார்!’ என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கை களை நம்பி, அவ்வழி சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பியுள்ளனர். பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலாயினோர் அவ்வழிபோய் மீண்ட பலருட் சிலராவார். ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன் றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளைத் தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மதநூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள், தாங்கள் கருதிப்போன கடவுள்’ காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்! எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ, அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருககிறது- வருகிறது. ஆனால் உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக்கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால், பொய்யைப் பொய் எனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது.இதனால் உண்மைகளை உருவாக்குவதற்குப் பெருமுயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும, இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமை யாது வேண்டப் படுகின்றது. இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றிபெற்று வருவது கண்கூடு. காரணம்! மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறி வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலமாக விளங்குகிறது என்க.

– ‘திராவிட நாடு’ 2-1-1949

————-

சிறப்புக் கட்டுரை

கலைஞரின் ஆத்மா மறுப்பு
உள்ளபடியே எனக்கு ஆவியில் நம்பிக்கை கிடையாது. அதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் கூட இன்று அதில் வேறுபடக் கூறுகிறார்கள்.
தந்தை இறந்துவிட்டால் ஆண்டுதோறும் தெவசம் கொடுக்கவேண்டுமென்று சொல்கிறார்கள். ஏனென்று கேட்டால் அவர்களுடைய ஆவி இருந்து, நாம் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் என்று சொல்கிறார்கள். அவர்களே உன்னுடைய தந்தை இன்ன பிறவியாக பிறந்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள்.
ஒன்று மறுபிறவியை மறுக்க வேண்டும்; அல்லது ஆவியை மறுக்கவேண்டும்.
மறுபிறவி என்று சொன்ன பிறகு ஆவி என்று ஒன்று எப்படி இருக்கமுடியும்? ஆவிக்குக் கொடுப்பதற்காக தெவசம், திதி என்று நாம் கொடுப்பதெல்லாம் எங்கே போகிறது என்று எனக்குத் தெரியும்.
இன்னும் யாராவது இறந்துவிட்டால் இன்னார் சிவ லோகபதவி அடைந்துவிட்டார் என்று போடுகிறார்கள். மனிதனுக்கு இறந்தும் பதவி ஆசை விடவில்லை என்பதற்கு இது உதாரணம். வைகுண்டபதவி அடைந்து விட்டார் என்றும் போடுகிறார்கள். எல்லோரையுமே இப்படி போட்டுவிட்டால் யார் தான் நரகலோகத்திற்குப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
பொய் பேசுபவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று சொன்னால், பத்திரிகை போடுகிறவர்கள் தவறாக- பொய்யாக – சிவலோகத்திற்குப் போவதாகப் போடுவதே பொய்; அதுவே ஒரு குற்றச்சாட்டு.

– முதலமைச்சர் கலைஞர்,
8-9-1972 சங்கரதாஸ் சுவாமிகள் விழாவில்


புதன், 10 ஜூலை, 2019

நம்மைப் பிடிக்காத “பரம்பரை”



வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ்நாட்டில் உள்ள இந்திரா காங்கிரசாரும், அ.தி.மு.க.வினரும், சில பத்திரிகைகளும் - நம்மைப் பரம்பரையாகவே பிடிக்காத பத்திரிகையாளர்கள், ஏனென்றால் வேறு சில அரசியல் கட்சிகள் தமது கட்சிக்கு திராவிட இயக்கப் பெயரை வைத்திருந்தாலும்கூட பெரியாருடைய கொள்கைகளை வேராகவும், பேரறிஞர் அண்ணாவி னுடைய கொள்கைகள் அந்த வேரின் சக்தியாகவும் இருக்கின்ற ஒரே திராவிட இயக்கம் தி.மு.கழகம்தான் (கைதட்டல்) என்பதை இங்கிருக்கின்ற நம் மைவிட மிக அதிகமாக உணர்ந்திருப்பவர்கள் இந்த நாட்டிலே உள்ள சில பத்திரிகைகாரர்கள்; அவர்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு கூட்டம். எந்தக் கூட்டம் என்று நான் சொல்ல விரும்ப வில்லை. நான் ஒரு அடி பாய்ந்தால் பதினாறு அடி பாயக்கூடிய கவிஞர் குடியரசுகளெல்லாம் இங்கே இருக்கிற காரணத்தால் நான் அவர்களைப் பற்றி சொல்ல விரும்பவில்லை.

- தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர்.

- விடுதலை: 7.1.1991, பக்கம் 1
-  விடுதலை ஞாயிறு மலர், 11.5.19

இதிகாசத் திரைகளை கிழித்து, புராண மேடுகளைக் களைவோம்!



"இந்த நாடு குபேரபுரியல்ல - இங்கே குபேரனைக் கட வுள் என்று சொன்னாலும் இங்கே கலைமகள் படிப் புக்குக் கடவுள் மகாலட்சுமி செல்வத்துக்கு கடவுள் என்று போற்றினாலும் இங்கே படிப்பிலும் செல்வத் திலும் நாம் சாதாரணம்!


மகாலட்சுமியை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா குபேர புரி - இங்கே நாம் வறுமைக் காட்டிலே இருக்கிறோம். அப் படிப்பட்ட மக்களை இயன்ற அளவுக்குக் கை தூக்கிவிட வேண்டும்.


இதிகாசத்திரைகள் கிழியட்டும்


அவர்களைக் கைதூக்கி விட இந்த நாட்டில் உள்ள இதிகாசத் துறைகளைக் விழித்து புராணமேடுகளைக் களைந்து, தான் மனிதன் என்கின்ற தன்மான உணர் வோடு புறப்பட வேண்டும் என்பது முதற்கட்டம்.


இரண்டாவது கட்டம் அவன் பொருளாதாரத்திலே உயரவேண்டும். அவனுக் கென்று ஒரு வீடு நல்ல வாழ்வு என்ற நிலைமைகளை உருவாக்க வேண்டும். அவன் ஏழையாக, விவசாயியாக தாழ்த்தப்பட்டவனாக இருந்தாலும் உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லப்ப டுவர்களால் மிரட்டப்படாத அளவுக்கு பணக் காரர்களால் வேட் டையாடப் படாமல் அவன் வாழ்க்கையை வசதியாக நடத்தவேண்டுமேயானால் சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் அவனை உயர்த்தியாக வேண்டும் - இந்த உணர்வுகளை வெற்றி கரமாகச் செயல்படுத்த எங்களுக்கு ஆயுதமே - அல்லாமல் ஆட்சியே எங்களுக்கு லட்சியமல்ல!


உடுமலைப்பேட்டையில் முதல்வர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து

- விடுதலை: 2.2.1975, பக்கம் 1

-  விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

வெள்ளி, 16 நவம்பர், 2018

விஜயபாரதத்தின் விலா எலும்பை முறிக்கும் பதில்கள் கலைஞருக்குப் பாரத ரத்னா கேட்பது ஓவரான ஒன்றா?



* மின்சாரம்

கேள்வி 1 :  விஜயபாரதத்தில் ஈ.வே.ரா.வை "பெரியார்" என்று குறிப்பிடுவதில்லையே ஏன்?

பதில்: அவர் திராவிட இயக்கத்தினருக்குப் பெரியாராக இருக்கலாம். விஜயபாரதத்தைப் பொறுத்தவரையில் அவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தான்.

நமது சாட்டை: அப்படியா! ஜாதியை ஒழிப்ப தற்காகப் பணியாற்றிய தலைவர் & 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் பட்டத்தைத் தூக்கி எறிந்தவர். அப்படிப்பட்ட தலைவரை ஜாதியைச் சேர்த்து வெளியிடுவதுதான் விஜயபாரதத்தின் நிலைப்பாடு என்றால் இது விஜய பாரதத்தின் அறிவு, நாணயமற்ற தன்மையையும், ஜாதி இருந்தால் தான் பார்ப்பன உயர் ஜாதித் தன்மையை நிலை நிறுத்த முடியும் என்ற ஆதிக்கத் திமிரை யும்தான் வெளிப்படுத்துகிறது.

இந்தக் கொள்கையுடைய கட்சி மக்களிடையே சமத்துவத்தை விரும்புமா? இப்படியே தொடர்ந்து இந்தக் கும்பல் எழுதி வரட்டும், பேசியும் வரட்டும். கொஞ்ச, நஞ்சம் இருக்கும் கட்சியும் காலா வதியாகக் கடைக்கால் போடுகிறார்கள் என்று பொருள்.

"விஜயபாரதம்" பெரியார் என்று சொல்லாததால் அவரின் மரியாதை குறைந்து போய் விடாது. மாறாக இப்படி எழுதுபவர்களின் மரியாதைதான் - (அப்படி ஒன்று இருந்தால்) காற்றில் பறந்தே போகும்.

பெண்கள் மாநாடு கூட்டி (1938 நவம்பர் 7) கொடுத்த பட்டம் அது. லோகக் குரு என்று தனக்குத்தானே சூட்டிக் கொள்ளும் பட்டமல்ல.

ஜாதி எல்லாம் நாங்கள் பார்ப்ப தில்லை என்று எந்தக் காவிப் பேர் வழியாவது சொன்னால் அவரின் முகத்தில் இந்த விஜய பாரதத்தைத் தூக்கி எறியுங்கள்.

கேள்வி 2: பிராமணர்கள் தமிழர்களா?

பதில்: தி.க.காரன் அகராதியில் அவர்கள் தமிழர்கள் இல்லை. ஆனால் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வார்கள். அதாவது தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிற பிராமணர் தமிழன் இல்லை. கிறிஸ்தவர், ரம்ஜான், பக்ரீத் கொண் டாடுபவன் தமிழன்... இது எப்படியிருக்கு...!

நமது சாட்டை: தமிழர்களில் பிராமணன் ஏது? தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்பவன் எப்படி தமிழனா வான்? தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்வதன் வழி இந்நாட்டுக்குரிய தமிழர் களை சூத்திரன் &- பஞ்சமன் & பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மகன் என்று சொல்பவன்  எப்படி தமிழனாக இருக்க முடியும்?

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்ச கனாகக் கூடாது, தமிழ் வழிபாட்டு மொழியாகக் கூடாது என்பவன் எப்படி தமிழன் ஆவான்?

தமிழர்களில் மதமற்றவர்கள் உண்டு. பல மதங்களைச் சார்ந்தவர்கள் உண்டு. பல்வேறு மதங்களில் இருப்பதாலேயே அவர்கள் தமிழர்கள் அல்லர் என்று கூற முடியுமா?

ஆனால் தமிழன் தன்னை இந்து என்று மட்டும் சொல்லக் கூடாது; இந்து என்று ஒப்புக் கொண்டால் "விஜயபாரதம்" நம்பும் அந்த வருணதர்மப்படி, ஜாதித் தர்மப்படி தங்களை சூத்திரன் &- வேசி மகன் என்று ஏற்றுக் கொள்ள நேரிடும் &- தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களைப் பஞ்சமர்கள் என்று ஒப்புக் கொள்ளும் இழிவுதானே வந்துசேரும்.

கேள்வி: 3 ஈ.வே.ரா. சிலைமீது செருப்பு வீசும் சம்பவங்கள் தொடர்கிறதே?

பதில்: தவறுதான், கண்டிக்கப்பட வேண்டியதே. ஆனால் இப்போது இதற்காக கூச்சல் போடுகிறவர்கள் பிள்ளையார் படத்திற்கும், ராமர் படத்திற்கும் செருப்பு மாலை போட்டபோது வேடிக்கை பார்த்தார்களே... அது நியாயமா?

நமது சாட்டை: ராமனுக்குச் செருப்பு மாலை பற்றிப் பரப்பப்படும் அக்கப்போரின் பின்னணி என்ன?

சேலத்தில் 1971இல் திராவிடர் கழகத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடும், அதனை யொட்டி ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் ட்ரக்கில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்ட தந்தை பெரியார்மீது செருப்பை வீசியவர்கள் ஜன சங்கத்துக்காரர்கள் அல்லவா? - அதனுடைய எதிர்வினை தான் ராமனுக்கு செருப்பு மாலை.

ஒன்றை மறைத்து இன்னொன்றைப் 'பூதாகரப் படுத்துவது' 'பூதேவர்களான' பார்ப்பனர்களுக்குக் கை வந்த கலையாகும்.

இன்னொன்றும் முக்கியம். தவமிருந்த சம்பூகன் சூத்திரன் என்பதற்காக அவன் தலையை வாளால் வெட்டிக் கொன்றானே; அதனை எப்படி நியாயப் படுத்தும் விஜயபாரதங்கள்? கொலையைவிட செருப்படி ராமனுக்குச் சாதாரணம்தான்.

ஆமாம் -& ஈரோட்டை அடுத்த சதுமுகையில் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டவர்கள் யார்? கருப்புச் சட்டைக்காரர்கள் என்று பழி சுமத்தியவர்கள் யார்? காவல்துறை வகையாகக் கவனித்த நிலையில் அந்தக் காரியத்தைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் என்று அம்பலமாகிடவில்லையா?

கேள்வி: 4 கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது கொடுக்க வேண்டும் என்கிறார்களே?

பதில்: இது ரொம்ப ஓவரா தெரியுமே.

நமது சாட்டை: கலைஞருக்கு பாரத ரத்னா கொடுத்தால் விருதுக்குத்தான் பெருமை. எம்.ஜி.ஆருக்குப் பாரத ரத்னா விருது. ஆனால் அவருக்குத் தலைவராக இருந்த அண்ணாவுக்கு இந்த விருது அளிக்கப்படவில்லை.  பாரத ரத்னா பஜனையில் சுண்டல் கொடுப்பது மாதிரியாகி விட்டதே! கிரிக்கெட் விளையாட்டுக்காரர்   டெண் டுல்கர் வரை பாரத ரத்னா அளிக்கப்பட்டு அந்த விருதின் "கவுரவம்" 'டக்கவுட்' ஆகி விட்டதே!

பச்சை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரும், பனாரசில் இந்துக் கல்லூரி நிறுவனருமான மண்ணுருண்டை மதன் மோகன் மாளவியாவுக்கே பாரத ரத்னா வழங்கியாயிற்று... இந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில்!

-என்ன அந்த "மண்ணுருண்டை" முத்திரை தெரியுமா? ஓர் இந்துவாக இருக்கக் கூடியவன் கடலைத் தாண்டிப் போகக் கூடாதாம். அதனால் இலண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கடலைத் தாண்டிப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்து ஒரு உருண்டை மண்ணையும் எடுத்துச் சென்றார் (தோஷம் கழிக்கத் தானாம்). பார்ப்பனர்கள் நினைத்தால் சாஸ்திரங்களையும் உண்டாக்கு வார்கள்; அவர்களின் வசதிக்கேற்ப தோஷத்தைக் கழிக்க இதுபோன்ற  மலிவான நிவாரணங்களையும் கைவசம் ரெடியாக வைத்திருப்பார்கள். மாளவியா போன்ற மண்ணுருண்டைகளுக்குக் கொடுக்கப் பட்ட பாரத ரத்னா கலைஞருக்குக் கொடுக்கப் படாததே மேல்!

இவர்கள்தான் கலைஞருக்கு - & ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கிறார்களாம்!

-  விடுதலை நாளேடு, 16.11.18

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

அண்ணாமலைக்கு அரோகரா!

கலைஞர்

 

 


“ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!’’

“ஓய்! பல தலை! வீண்ஜம்பம் அடிக்காதீர். உமது பெருமையை மற்ற தலைகளிடம் சொல்லிக் களிப்படையும், வைகுண்ட வாசனிடமா வீராப்பு! வெகு நன்று!’’

“ஆத்திரப்பட்டு ஆடாதே தம்பீ! நீ மோகினி உருவம் எடுத்து சிவனோடு கலவி செய்த காரணத்திற்காக உனக்கு மதிப்பு தர முடியாது!’’

“மகளையே காதலித்து, கரடியைக் கூடிய மகானுபாவரே! மூடும் உமது நாலு வாய்களையும்! எனது சங்கின் முழக்கத்திலே_சக்கரத்தின் வீச்சிலே வீழ்ச்சி பெறுவாய், நினைவிருக்கட்டும்.’’

தேவலோகத்திலே _ ஆமாம் _ மனிதரினும் மேம்பட்ட முப்பத்துமுக்கோடி தேவர்கள் வாழும் புண்ய பூமியிலே ஒரு சச்சரவு! யாருக்கும் யாருக்கும்? சாட்சாத் பிர்மாவுக்கும் விஷ்ணுவுக்குந்தான்! சிருஷ்டி கர்த்தாவுக்கும் ஸ்ரீயப்பதிக்கும் ஏற்பட்ட சச்சரவில் நடந்த சம்பாஷனை இது. இதன் சாரம் என்ன? யார் பெரியவர் என்பது! படைப்புத் தொழில் புரியும் பிரமன் பெரியவனா? காத்தல் வேலை செய்யும் விஷ்ணு பெரியவனா என்ற தர்க்கம் முற்றுகிறது. இவர்களுடைய சண்டையில் இவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளின் சாயம் வெளுத்ததே தவிர, தீர்ப்புக் கிடைக்கவில்லை. தேவலோகத்திலா? அதுவும் தேவாதி தேவர்களுக்குள்ளா சண்டை என்று சந்தேகம் ஏற்படலாம். தேவர் உலகத்தில் சண்டை மட்டுமல்ல வழக்குகள் பல வண்டி வண்டியாக உண்டு! அங்கு மாத்திரம் கோர்ட்டுகள் ஏற்படுத்தி விசாரணை நடத்தியிருந்தால், பரமசிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் கற்பழித்த வழக்கு, பிருந்தையை விஷ்ணு பலாத்காரம் செய்த வழக்கு, அகல்யையை இந்திரன் கற்பழித்த வழக்கு, சப்தகன்னியரை அக்னி பகவான் சூறையாடிய வழக்கு, குரு பத்தினியை சந்திரன் கூடிய வழக்கு, எண்ணாயிரம் சமணர் வழக்கு, இன்னோரன்ன வழக்குகள், கருவழித்த குற்றங்கள், திருட்டுக்கேசுகள் முதலியன நடைபெற்று தீர்ப்புகள் வந்திருக்கும். பூலோகத்தில் இறந்து சொர்க்கத்திற்குச் செல்லும் வக்கீல்களுக்கும் அங்கு நல்ல சான்சு கிடைத்திருக்கும்.

மேற்கண்ட வழக்குகளில் ஒன்றாகத் தான் பிர்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவன் என்ற வழக்கு ஆரம்பமாயிற்று! இதைத் தீர்த்துவைக்க சிவனார் வந்து சேர்கிறார். வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பு கூறுவது சங்கடமாகி விடுகிறது. உடனே ஆகாயமளாவ ஜோதியாகக் கிளம்புகிறார். அந்த ஜோதியின் முடியை ஒருவரும், அடியை ஒருவரும் கண்டு திரும்பவேண்டும். யார் முதலில் திரும்புகிறாரோ அவரே பெரியவர் என்று சிவனார் முடிவு கூறிவிடுகிறார். முடியை நோக்கி பிர்மா அன்னப்பறவை உருவில் பறந்தார், பன்றி உருவமெடுத்து அடியைக்காண பரந்தாமன் பாதாளத்தைக் குடைய ஆரம்பித்தார். இருவரும் வெற்றியை அணுக முடியவில்லை. மேலே பறந்துகொண்டிருக்கும் பிர்மாவுக்கு எதிரில் ஒரு தாழம்பூ மேலே இருந்து கீழேவந்து கொண்டு இருந்தது. “ஓ! தாழம்பூவே எங்கிருந்து வருகிறாய்?’’ என்றார் பிர்மா. “சிவபெருமானின் சடாமுடியிலிருந்து வருகிறேன்’’ என்றது தாழம்பூ!

“நான் சிவனின் முடியைத் தேடிப் போகிறேன். என்னால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் அவரது முடியைக் கண்டுவிட்டதாக ஒரு பொய்சாட்சி சொல்லுகிறாயா?’’ என்று கெஞ்சினார் பிர்மா?

பொய் சாட்சி சொல்லத் தாழம்பூ ஒத்துக் கொண்டது. அதன்படி சிவனிடம் சென்று நான் முடியைக் கண்டு விட்டேன் என்று பிர்மா கூறினார். அதற்கு தாழம்பூ, “ஆம்! நானும் பார்த்தேன்’’ என்று சாட்சியம் கூறிற்று. பாதாளத்தை நோக்கிப் பன்றி உருவிற் சென்ற விஷ்ணு, நாரத முனிவரை சந்தித்துத் தன் முயற்சியில் வெற்றியடைய முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு தோல்வியோடு திரும்பினார். பரமசிவன், பிர்மாவும் தாழம்பூவும் பொய் கூறியதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு சாபம் அளித்தார். இதிலிருந்து பிர்ம, விஷ்ணுக்களின் கர்வம் அடங்கியதோடு, சிவனே யாவரிலும் பெரியவர் என்ற தீர்ப்பும் கூறப்பட்டது. சண்டையிட்டவர் வெட்கித்  தலை குனிந்தனர்.

இது அருணாசல புராணம். தீப ஒளித் திருவிழா நடக்கப்போகிற திருவண்ணாமலை ஸ்தலத்தின் திருப்புராணத்தில் காணப்படும் ஆபாசங்களில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் நாளை நடக்க இருக்கும் கார்த்திகை தீபத்திற்குப் பலப்பல அய்தீகங்கள் உண்டு! சிவன் சில அசுரர்களை நெற்றிக் கண்ணால் எரித்துவிட்டதாகவும் அதுவே சொக்கப்பானைத் திருநாள் என்றும் ஒரு புராணம் கூறுகிறது. மற்றொரு புராணத்தில், அக்கினிதேவன், சப்த கன்னியர்களைக் கண்டு காமுற்றதாகவும், அதனைக் கண்ட அவன் மனைவி சுவாகா தேவி, அருந்ததி கற்புடையவளானதால் அவள் உருவத்தை தவிர மற்ற ஆறு கன்னிகைகளின் உருவத்தை எடுத்து அக்கினி பகவானின் ஆசையைத் தீர்த்ததாகவும், அந்த ஆறு உருவங்களும் கார்த்திகைப் பெண்களாகி, அவர்கள் முருகனுக்குப் பாலூட்டியதால் முருகனுக்கு ‘கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பிறகு அந்தப்பெண்கள் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறியதாகவும், அதுவே கார்த்திகை விரதத்திற்குக் காரணமென்றும் மற்றொரு புராணம் சொல்லுகிறது. மாபலி சக்கரவர்த்தி பற்றி மற்றொரு புராணமும் உண்டு!

இம்மாதிரியே, இந்த நாட்டில் நடைபெறும் பண்டிகைகளுக்கும், உற்சவங்களுக்கும் ஆயிரக்கணக்கான_ ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகளில் யாராவது ஒரு அசுரன் கொல்லப்பட்ட செய்தியும் அல்லது தேவர்களுக்குள் நடந்த அற்பத்தனமான, ஆபாசமான தகராறும் அதுவுமில்லையானால் ஒரு வஞ்சத்தையும், விபசாரத்தையும் வளர்க்கும் புராணமும் காணப்படுமேயல்லாது, சிறிதாவது அறிவுக்குப் பொருத்தமான, ஒழுக்கமான நிகழ்ச்சிகளைக் காண முடியாது. இவைகளை சிந்தித்துப் பார்க்க இந்நாட்டு மக்களுக்கு நேரமோ, நினைப்போ இருப்பதில்லை. எதையெடுத்தாலும் முன்னோர்கள் வார்த்தை என்ற முலாம் பூசப்பட்டு பழக்கவழக்கம் என்ற பசப்பு மொழி பேசப்படுகிறதே தவிர, மனிதராக வாழ முயற்சிப்பதே கிடையாது!

இம்மாதிரி ஆபாசக் கதைகளின் போல் மாதத்திற்கொரு பண்டிகை மாதத்திற்கொரு உற்சவ திருநாள் அதற்காக பல ஆபாச ஆட்டங்கள்! ஆடம்பரமான செலவுகள்! கண்டவர் சிரிக்கும் காட்டுமிராண்டி நடவடிக்கைகள்! இவைகள் தான், ஞானத்தில் சிறந்தது சுதந்திர தாகமெடுத்து சுயராஜ்யத்திற்கு ஏன்? பொது உடமைக்கும் தயாரான சூரர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இந்த நாட்டிலே நடைபெறுகின்றன!

பாட்டாளி மக்களின் பச்சைக் குழந்தைகளின் வறண்ட தலைக்கு ஒரு துளி எண்ணெய் கிடையாது. திருவண்ணாமலைத் தீபத்திற்கு ஆயிரக்கணக்கான நெய் டின்கள் உடைக்கப்படுகின்றன. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த நாட்டு மாதர்களுக்கு ஒரு முழத்துணி கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஆனால், அண்ணாமலை தீபத்திற்குப் பீஸ் பீஸாகத் துணிகள் கொளுத்தப்படுகின்றன. பசித்த மக்களுக்கு ஒரு பிடி சோறு கிடையாது. ஆனால், அந்தப் பரமபிதாவுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு வறுமையால் வாடும் மக்களுடைய வயிறு எரிகிறது. அங்கு, அண்ணாமலையில் ஆடம்பரத்தோடு அறியாமை நெருப்பு எரிகிறது. அதற்கு நெய் வார்க்கப்படுகிறது. அந்தோ! கொடுமை! கொடுமை!

திராவிட மக்களுடைய உணர்வுக் கழனியிலே அறியாமையை நீராகப் பாய்ச்சி, மூடப் புராணீகப் பழக்கவழக்கங்களை பயிராக வளர்த்து, அவ்வப்போது முளைக்கும் ஆராய்சிகளைக் களை என்று கழறி பயமெனும் அரிவாளால் களைந்து தங்கள் சுயநலத்துக்கேற்ற வசதிகளை விளைவாகப் பெற்று பிழைப்பை அறுவடை செய்து பார்ப்பனரும், பணக்காரரும், படித்தவரும் வாழ்கின்றனர். இவர்களுடைய ஒப்புதல் முறிந்து கூட்டுச்சுரண்டல் முறை ஒழிய வேண்டுமானால் திராவிடர் தன்மானம் பெற  வேண்டும். அதுவன்றி அண்ணாமலைக்கு அரோகரா! போட்டுக் கொண்டேயிருந்தால் பழைய கற்காலத்தை நோக்கிக் கட்டை வண்டிப் பிரயாணத்தை கட்டுசாத மூட்டையோடு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உணர்வார்களா திராவிடர்கள்? உணர்ந்து ஆவன செய்வார்களா?

- (‘குடிஅரசு’- 17.11.1945)

- உண்மை இதழ், 1-15.6.!8