பக்கங்கள்

திங்கள், 23 அக்டோபர், 2023

முதலமைச்சராக இருந்த முதல் தமிழர் டாக்டர் ப.சுப்பராயன்!

தமிழ்ச் சான்றோர்களை நினைவுபடுத்துதல் முதலமைச்சராக இருந்த முதல் தமிழர் டாக்டர் ப.சுப்பராயன்!

3

ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக் கண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், ஆங்கில அரசாங்கத்தால் தத்தெடுக்கப்பட்டு, படிக்க வைக்கப்பட்டவர்.

இங்கிலாந்தில் நேரு, அம்பேத் கார் போன்றவர்களுடன் சட்டம் படித்து, முனைவர் பட்டம் பெற்றவர்!

படித்து முடித்ததும், பிரிட்டன் பிரதமருக்கு உதவிச் செயலாளராக நியமனம் பெற்ற தமிழன்! மற்ற எவரையும் விட சமூக நீதிக்காகப் பெரும் பாடுபட்டவர். டில்லியில் அமைச்சராக இருந்த போது, தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் வளர்ச்சிக்காக உதவியவர்!

தமிழ் மொழிப்பற்றும், இனப்பற்றும் மிகுதியாகக் கொண்டிருந்தவர். அரசுப் பொறுப்பில் இருந்த காலத்தில் தனது கையொப்பத்தைத் தமிழில் பதித்தவர்.

நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி சிறையில் இருந்தபோது கைதிகளுக்குத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருமானுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட தமிழ் பெருந்தகை!

திருவள்ளுவருக்கு நாடாளுமன்றத்தில் உருவப்படம் வைக்கக் காரணமாக இருந்தவர்.

எண்ணற்ற தமிழ்ச் சான்றோர்களுக்குத் அஞ்சல்தலை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியவர்.

செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டைத் தொடங்கி வைக்க, பெரியார் அவர்களால் அழைக்கப்பட்டவர்.

இந்தியாவில் ஆட்சி மொழியாக மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமே நீடிக்கலாம் என்ற முடிவை அரசாங்கம் எடுப்பதற்கு, டாக்டர் சுப்பராயனின் ஆணித்தரமான வாதமும், அறிக்கையும் முக்கிய காரணங்களாகும்.

1927இல் சென்னை இராசதானியின் பிரதம அமைச்சராக இருந்தபோது, ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து, நிறைவேற்றி, தன்னுடைய 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும். தனக்கென ஒரு சதுரஅடி நிலம் கூட வைத்துக் கொள்ளாமல், அரசாங்கத்திற்கு கொடுத்து. வாழ்க்கையில் இருப்பவர்கட்கு, எடுத்துக்காட்டாக வாழ்ந்து, தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த குடும்பத்திற்குச் சொந்தக்காரர்.

நாட்டின் முதன்முறையாக, தங்கும் வசதி கொண்ட அண்ணா மலை பல்கலைக்கழகம் உருவாகிடக் காரணமானவர். அதற்காக 1928இல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசு நிதி 27 இலட்சம் ரூபாய் ஒதுக்கி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தை உருவாக்கிய தமிழ்மகன்,

தனது துணைவியாரோடு, எளிமையாக வாழ்ந்து, திறமை, நேர்மையுடன் மூன்று தலைமுறைகள் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரவையில் பங்கு பெற்று, நாட்டிற்கு உழைத்து, அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த குடும்பத்திற்குச் சொந்தக்காரர்.

இந்தியத் அஞ்சல் துறையில் முதன்முதலாக தமிழ்மொழியை அறிமுகப்படுத்திய தமிழ்ப் பெருமகன்!

அனைத்திற்கும் மேலாக இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முதலாக முதலமைச்சராகப் பதவி வகித்த முதல் தமிழர் டாக்டர் ப.சுப்பராயன்!

உதிரத்தோடு ஊறிப்போன தாய்மொழிப்பற்றும் இன உணர்வும் கொண்டு விளங்கிய டாக்டர் சுப்பராயன் போன்ற உன்னதமான தமிழ்ச் சான்றோர்களை நினைவு கூர்ந்து, போற்றாத தமிழ்ச் சமுதாயத்தை நினைத்தால்...! நெஞ்சு பொறுக்குதில்லையே!

டாக்டர் சுப்பராயனின் மூத்த மகன் பரமசிவம் குமாரமங்கலம் இந்திய இராணுவ ஜெனரலாக இருந்தார். இன்னொரு மகன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மத்திய அமைச்சராக இருந்து விமான விபத்தில் இறந்த மோகன் குமாரமங்கலம். சுப்பராயணின் மகள் பார்வதி கிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகராக இருந்தார்.

- டி.கே. சுப்பிரமணியன்