பக்கங்கள்

சனி, 27 பிப்ரவரி, 2021

கடவுளை பற்றி காமராசர்



“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?. அரேபியாவிலே இருக்கிறவன் “அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான், அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.
யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான். மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?. இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”
தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?” என்று வினாத் தொடுத்தேன்.
தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “ டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?. ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும் ,
கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்” என்று விளக்கினார்.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .
தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?, ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு , மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்யமாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்” என்றார்.
கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?, இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” இது நான்.
“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?, எல்லாம் பார்பர் ஷாப் (Barber Shop ) காரன் செட்-அப் அப்புடீன்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
“அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?” என்று கேட்டேன்.
“அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம
வாழ்த்தும்னேன்!!!”
காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.
சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து “ஏன் பள்ளிக்கூடம் போகலியா?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.
நன்றி : திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்) தமிழ் ஓவியாவின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது
- தமிழ் ராஜேந்திரன் முகநூல் பக்கம்

வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஜோதிராவ் பூலே : இந்தியாவின் முதல் மகாத்மா

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

இந்து மதம் ஒழிவதே நல்லது!-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

’இந்துவாக நான் இருக்க முடியாது’

மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்

தமிழறிஞர் கா.சு. பிள்ளை

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

பாரதி பாடல் புரட்டு – பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம்


அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான ன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரஸ் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து, அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியைக் காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத்தின்பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால், இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.

இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்திவைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க.

இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும், நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.

 - தந்தை பெரியார்- “ குடிஅரசு”, கட்டுரை, 10.02.1929 –

நூல்: “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி – 8 பக்கம் 38-39

பாரதி ஆராய்ச்சி அறிவாளியா? இயற்கைவாத கவியா? அவர் ஒரு புராண பண்டிதரே

 

நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதின் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவார்களாக.

பாரதிக்குக் கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமு முள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரஞ் செய்கிறபடி எந்த விதத்திலும், சமீப காலத்தில் தோன்றி மறைந்து போன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப்பற்றி இவ்வளவு கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்.

முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். எப்படியென்றால் ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்ப் பழக்கமுடையவனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி, அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்கு தாராளமாய் இருக்கின்றன.

பாரதியின் அறிவு

பாரதி, ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும். “எல்லோரும் ஓர் இனம்” என்றும் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்; நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமரமக்கள் புகழ்வதற்குக் காரணம் அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும் மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக்கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும். எப்படி யென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவைகளை அப்படியே தழுவி அவைகளில் அடங்கியிருக்கும் விஷயங்களை, இக்காலத்து தேவைகளை அதில் கலக்கி அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக்காட்டி அவர் பாடல் செய்திருப்பதேயாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களைப் பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?

பாரதி அநேக பாடல்களைக் குடி வெறியில் பாடியிருக்கிறாரே தவிர நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். பெண்களைப்பற்றி வானமளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால் பெண்களைப் பற்றி அவருடைய அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் “பெண்களின் கூட்டமடி” என்று தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது. 

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும் இந்தியா அவர்களுக்குச் சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக யாராவது அவரைப் பற்றி நினைத்துக்கொள்ள “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே,” “தமிழ் மொழி போல் எங்கும் காணோம்” என்று சொல்லப்படுமானால், இப்பாட்டுகள் போல் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்துக் காட்ட முடியுமே தவிர, அதிகமில்லை யென்றும், அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி யென்றும்தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர் அபின், கஞ்சா, சாராயம் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாகவே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லவயமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ஆதாரமான சொற்களை அவர் தேசீயப் பாடல்களிலிருந்து மட்டும் இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

பாட்டின் தலைப்பும் அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.

வந்தேமாதரம் – ஆரிய பூமியில்.

பாரத நாடு – யாகத்திலே தவ வேகத்திலே.

நாட்டு வணக்கம் – துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே.

பாரததேசம் – மந்திரங் கற்போம், வினைத் தந்திரங் கற்போம் (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)

தொழில் – பிரம்மதேவன் கலையிங்கு நீரே விண்ணினின்று எமை வானவர் காப்பார்.

எங்கள் நாடு – என்னரு முபநிட நூல்கள் எங்கள் நூலே  உன்னத ஆரிய நாடெங்கள் நாடே

வந்தேமாதர மொழிபெயர்ப்பு – காலமெல்லிதழ்களிற் களித்திடுங் காலை நீ.

எங்கள் தாய் – நாவினில் வேதமுடையவள், வெண்மை வளரிமையாசலந் தந்த விறன் மகளாமெங்கள் தாய்.

பாரதமாதா – முன்னையிலங்கை அரக்கர் அழிய, ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள், போர்க்களத்தே பரஞானமெய்க் கீதை.

திருப்பள்ளியெழுச்சி – தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன.

தசாங்கம் – ஆரிய நாடென்றே யறி.

நவரத்தினமாலை – ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே (சமஸ்கிருதம்)

மகாத்மாவின் துவஜம்:- ஆரியக் காட்சி ஓர் ஆனந்தமன்றோ, செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்தீக்கண், மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின் சேவடிக்கேயணி செய்திடு துளுவர். (ஆரியருக்கு அடிமைகள்)

லஜபதிராய் – ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடெந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு, ஆரியர் தம் தர்மநிலை ஆதரிப்பான், ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த.

திலகர்:- அன்போடோதும் பெயருடை யாரியன்.

கிருஷ்ணன் துதி:- எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும், எங்களாரிய பூமியெனும்,

கிருஷ்ணன் ஸ்தோத்திரம்:- ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே, ஆரிய நீயுநின் துறமறந்தாயோ, வெஞ்செய லரக்கரை வீட்டிடுவோனே வீரசிகாமணி, ஆரியர்கோனே.

ஆங்கிலப் பயிற்சி:- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை, இயல்புணர்த்திய சங்கரனேற்றமும், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், நாட்டுக்கல்வி – மந்திர வேதத்தின் பேரொலி,
தமிழ்த்தாய்:- உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் (சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)

புதுவருஷம்:- ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்.

என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே – பார்ப்பனீயத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார்.

ஆகவே பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும் பார்ப்பன சூழ்ச்சி, பார்ப்பன ஆதிக்கப் புத்தி ஆகியவைகளில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரது குணங்களைப் பற்றியும் மற்றும் அவரது சரித்திரத்தைப் பற்றியும் கவிபாடுவதில் அவருக்குள்ள கற்பனை அலங்காரம், பகுத்தறிவுக்கு ஏற்ற இயற்கை வருணணை அற்றதன்மை ஆகியவைகளைப் பற்றியும் பிறிதொரு சமயம் விவரிப்பேன். அவசரப்படுபவர்கள் “நவமணி” வருஷ மலரில் கண்டு கொள்ளலாம்..

- தந்தைபெரியார் – “குடி அரசு” – 17.10.1937

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

கு.வெ.கி.ஆசான்

வியாழன், 18 பிப்ரவரி, 2021

பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா?

பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா?

சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

திராவிடர் என்றால் ‘தீ’யாய் சுடுவது ஏன்?

புத்தமதமும் இந்திய சமுதாயமும்(1)&(2)