பக்கங்கள்

வியாழன், 30 மே, 2019

ஊடகத் துறையை சார்ந்தவர்களைப் பார்த்து "எந்த ஜாதி" என்று கேட்பதா? தமிழர் தலைவர் கண்டனம்சென்னை, மே 29  ஊடகத் துறையை சார்ந்தவர் களைப் பார்த்து என்ன ஜாதி என்று கேட் டதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.

நேற்று (28.5.2019)  சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: ஆளுங்கட்சியில் இருக் கின்ற அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க.,வோ, தே.மு.தி.க.வோ, புதிய தமிழ கம் கட்சியாக இருந்தாலும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்களிடம் என்ன ஜாதி என்று கேட்கின்ற பட்சத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் இன்னும் ஜாதி அரசியல் நடந்துகொண்டிருக்கிறதா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே இப்படிப் பட்டவர்களின் ஜாதி அடையாள த்தைக் கண்டு, அதையே மூலதனமாக்கிக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்களை மக்கள் புறந்தள்ளிவிட்டனர், தோல்வியினுடைய பிரதிபலிப்பு என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல், ஊடகத் தோழர்களைப் பார்த்து, ஜாதி என்ன? என்று கேள்வி கேட்டதற்குபெரியார் பிறந்த மண் இத்தகையவர்களை ப் புறக்கணிக்கும்.

இனிமேல் எந்த ஊடகங்களாக இருந் தாலும், அவர்கள் ஜாதியைப்பற்றி பேசுவது, இன்னும் சிலர், அந்த ஊடகத் துறையில் இருக்கும் பெண்களைப்பற்றி கொச்சைப் படுத்துவது, நீதிமன்றத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டிருப்பது, பிறகு ஆட்சியாளர்கள் அவர்களைப் பாதுகாப் பது என்ற பழைய நிலை காரணமாகத்தான் இந்தத் துணிச்சல் வருகிறது. இந்த எண் ணமே இருக்கக்கூடாது. ஊடகத் தோழர்க ளுக்கும் இது நினைவில் இருக்கவேண்டும். அவர்களை நீங்களும் புறக்கணிக்க வேண்டும்.

செய்தியாளர்: ஊடகத் துறையிலேயே இப்படி அவர்கள் நடக்கும்பொழுது, மக்கள் மத்தியில் அவர்கள் எப்படி இருப்பார்கள்?

தமிழர் தலைவர்: மக்கள் அவர்களை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தீர்ப்பு.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களி டையே கூறினார்.

-  விடுதலை நாளேடு, 29.5.19

திங்கள், 20 மே, 2019

ஆர்.எஸ்.எஸின் அடிவருடி அண்ணா தி.மு.க.வே - அண்ணாவை அவமதிக்காதே!மின்சாரம்


அண்ணாவின் பெயரிலே கட்சியை வைத் துள்ள அண்ணாதிமுக பிரகஸ்பதிகளே!

அந்த அண்ணா இந்து என்பது பற்றி என்ன பேசினார், எழுதினார் என்பது தெரியுமா?

அண்ணா என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளாமலேயே அண்ணாவின் பெயரில் கட்சி ஒரு கேடா? அண்ணாவின் உருவம் கட்சியின் கொடியில் ஒரு கேடா?

இதோ அண்ணா பேசுகிறார் - அண்ணா திமுக பிரகஸ்பதிகளே கேளுங்கள்! கேளுங்கள்!!

"நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல!  நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மி டையே தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக் கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை "இந்து" என்று கூறிக்கொள்ள முடியும்? மூடமதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத் திரன் என்று கூறிக்கொள்ள எப்படித் தான் மனம் இடந்தரும்? எப்படித் தான் துணியும்?

"இந்து மதம்" என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடு வாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் எனத் தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து, கொடுமைக்கு ஆளாக்கும் "இந்து மார்க்கத்தில்" போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்று ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்!! இழிவைத் தேடார்!!!"

- அண்ணா எழுதிய 'ஆரிய மாயை' பக்கம் 32, 33

அதிப்பிரசங்க அதிமுகவினரே! அமைச்சராக இருக்கக்கூடிய பிரகஸ்பதிகளே! 'இந்து' மதம் பற்றி அண்ணாவின் இந்தக் கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?

அண்ணாவைத் தூக்கி எறிந்து அக்கிரகார திமுக என்று பெயர் சூட்டிக் கொள்ளப் போகிறீர்களா?

திராவிடத்தை வெட்டி எறிந்து ஆர்.எஸ்.எஸ். லேபிளை ஒட்டிக் கொள்ளப் போகிறீர்களா?

திராவிடர் கழகத் தலைவரை இழித்துப் பேசும் அடக் கோமாளியே! பெரியார் சொன்னதையும், அண்ணா சொன்னதையும்தான் வீரமணியும் எடுத்துச் சொல்லி வருகிறார்.

அப்படி இருக்கும்போது வீரமணி அவர் களைச் சாடுவதாக நினைத்துக் கொண்டு, அண் ணாவை அவமதிக்கிறீர்களா?

அண்ணா சொன்னாரே - அந்த முறையில் அந்த "இந்து" என்ற பாம்பை எடுத்துப் படுக்கை யில் விட்டுக் கொள்ளப் போகிறீர்களா?

அண்ணா சொன்னாரே - அந்த "இந்து" என்ற விஷத்தை எடுத்து உணவில் சேர்க்கப் போகிறீர்களா?

பதில் சொல்லுங்கள், பதில் சொல்லுங்கள் - பதவிப் பித்தர்களே!

பெரியார் கருத்தையும், அண்ணாவின் கருத்தையும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சொன்னால் கோபம் வருகிறது. அதிலும் அண்ணா தி.மு.க. அமைச்சருக்கு என்றால், இவர்கள் அண்ணாவின் தம்பிகளா? ஆர்.எஸ்.எஸின் தரகர்களா?

அறிவு நாணயத்தோடு பதில் சொல்லிவிட்டு அண்ணா திமுகவின் ஆசாமிகள் திமிர் முறிக்கட்டும்!

ஆர்.எஸ்.எஸின் எடுபிடியாக இருந்து, முஸ் லீம்கள் மீது பாய்ந்து குதறும் பரிதாபத்துக்குரிய அண்ணா திமுகவினரே - இதுபற்றியும் உங்கள் கட்சியில் பெயர் சூட்டப்பட்டிருக்கும் அண்ணா என்ன எழுதினார் தெரியுமா?

இதோ அண்ணா பேசுகிறார் கேண்மின்! கேண்மின்!!

“இந்துக்களுக்குள் எந்தக் காரணத்தாலாவது மனக்கசப்பு இருந்தால் அதை நமக்குள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு வகுப்பார் தாங்கள் இந்துக்களே அல்ல என்று முஸ்லீம்களோடு சேர்ந்து ஒத்துழைப்பதா?” என்று திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரியார் கேட்கிறார்.

இந்துக்களுக்குள் தகராறு என்ற தத்துவம் மறைந்து வெகு நாட்களாகிவிட்டது! “நானும் இந்து தானே, என்னை ஏன் கொடுமைப் படுத்து கிறீர்? ஏன் தாழ்ந்த ஜாதி என்று கூறுகிறீர்?” என்று கைகூப்பிக் கேட்டபோது, நெஞ்சம் திறக்கவில்லை!

பிறகே நாம் யோசித்தோம், ஒரு சிறு கூட்டம் நம்மை இங்ஙனம் கொடுமைப்படுத்தக் காரணம் என்ன என்ற உண்மை விளங்கிற்று. இது இனப்போராட்டம் என்பது தெரிந்தது. அவர்கள் ஆரியர் - நாம் திராவிடர்! அதே ஆராய்ச்சியே, முஸ்லீம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க் கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே திராவிட - இஸ்லாமிய கூட்டுப்படை கிளம்பிற்று.

சாஸ்திரியார் கூறுவதுபோல், திராவிட நாட்டிலி ருந்து ஆரியரை ஓட்ட அல்ல; ஆரியத்தை ஓட்ட! அதற்கு முஸ்லீம்களுடன் ஒத்துழைப்பதா? என்கிறார் சாஸ்திரியார். ஆம்! அமெரியிடம் ஒத்துழைக்கிறீர்; நீர் அதை மறக்க வேண்டா மென்று சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம். ஆங்கி லேயரும் - ஆரியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது! திராவிடரும் - இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது!"

- அண்ணாவின் 'ஆரிய மாயை' பக். 29

இதற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-சின் அடுப்பங் கரையில் நின்று கொண்டு இஸ்லாமியரைத் தாக்கப் போகிறீர்களா?

உங்களின் ஒவ்வொரு அசைவும் அண்ணா வுக்கு எதிரானது - அண்ணாவை அவமதிக்கக் கூடியது.

வேண்டும் என்றால் ஒன்று செய்யலாம்; கட்சி யிலிருந்து அண்ணாவின் பெயரை அகற்றிடலாம்; கொடியிலிருந்து அண்ணாவின் உருவத்தையும் நீக்கி விடலாம். என்ன செய்ய உத்தேசம்?

- விடுதலை நாளேடு, 15.5.19

படத்திறப்பு விழாவினால் பலன் என்ன?

10.01.1948 - குடிஅரசிலிருந்து....

நாம் உருவப்படத் திறப்புவிழா நடத் துவது என்பது பூஜை செய்யவோ, தேங்காய் பழம் ஆராதனை செய்து விழுந்து கும் பிட்டுப் பக்தி செய்து நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த் தனை செய்யவோ, நாம் செய்த செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளு கிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக் கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும் எப்படிப்பட்ட படத்திற் கும் பூஜை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், ரதம், விமானம், சப்பரம் ஆகிய வை களிலோ வைத்து ஊர்வலம், ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ ஆகவும் அல்ல. ஆனால் மற்ற எதற்கு என்றால் மனித சமுக நலனுக்குச் சுயநல மில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரதிப் பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால் தன் பொரு ளால் தன் பொறுப்பென்று கருதித் தொண் டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங் களையும், தொண்டையும் எடுத்துச் சொல் வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரி யத்தைப் பின்பற்ற வேண்டும். பின்பற்ற மாட்டார்களா? என்பதற்காகவேதான் மனித சமுக நலனுக்குப் பிரதி பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத் தைப் பிரசாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவே தான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

தியாகர், பனகாலின் சிறப்புகள்


நாம் அடிக்கடி தியாகராயர் - நாயர், பனகால் அரசர், நடேசன் முதலியவர்கள் படத்திறப்பு விழா செய்கின்றோம். எதற்காக? அவர்களது கொள்கை எண் ணம், தொண்டு ஆகியவைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தானே. மற்றபடி இவர்கள் எல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பல தேசியத் தலைவர்கள் என்பவர்களைப் போன்று, மக்களுக்கு மோட்சம் காட்டும் பக்தியைப் பற்றிப் பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி புகழ் பெற்றவர்களோ, செத்த பின் கடவு ளானவர்களோ, கடவுளுடன் - கலந்தவர் களோ அல்ல. பாமரர்களிடம் பேரும் புகழும் பெற்ற மகான்களுமல்ல. தங்களைக் கோவிலிலும், பூஜை வீட்டிலும் வைத்துப் பூஜிக்கும்படியான மாதிரியில் நடந்து கொண்டவர் களுமல்ல. அவர்கள் வெகு தைரியமாய்ப் பழைய பழக்க வழக்கங் களையும், மூட மக்களிடமும், சுயநலச் சூழ்ச்சிக்காரர் களிடமும் மிகவும் செல் வாக்குப் பெற்று இருக் கும் பழைய கொள் கைகளையும், உணர்ச்சிகளையும் தகர்த் தெறிந்து மக்களுக்குச் சமத்துவ உணர்ச்சி யையும், மனிதத் தன்மையையும் உதிக்கப் பாடுபட்டவர்கள். அப்படிப் பாடுபட்ட எவரும் அவர்களது வாழ்நாள்களில் கஷ்டப்பட்டும் பாமர மக்களால் தூற்றப் பட்டும் துன்பப் படுத்தப்பட்டவர் களு மாகவே இருப்பார்கள்.

நிகழ்காலம் நிந்திக்கும்


எதிர்காலம் ஏற்கும்


உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப் பட்டார். கவுதம புத்தர் என்பவர் ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். யேசு கிறிஸ்து விக்கிரகாராதனை, கோவில் பூஜை முதலிய வைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற் காக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். முகமது நபி அநேக மூடப்பழக்க வழக்கங் களையும், பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்த தற்காகப் பல சங்கடப் படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும், மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன் னவர்களும், அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப் படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப்பட்டு இருந் தாலும், இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப் படுகிறார்கள். கோடிக்கணக்கான பேர் களால் பின்பற்றப்படுகிறார்கள். அது போலவே தான் முன் கூறப்பட்ட பெரியார் களும், நாங்களும் இன்று எங்கள் அபிப் பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக் கப்பட்டு அல்லல் பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக் கூடியதாயும், பாராட்டக் கூடியதாயும் மக்களை ஞான வழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறோம். இல்லா விட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத் திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும் பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற் கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

புகழப்பட்டோர் கண்ட பயன்


நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப் படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்துப் பக்தி செலுத்தி புகழும் படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப் பின் பயன் பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்க வில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமுகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருஜுவும் இதுவரை கிடைத்த தில்லை நாம் அறிய ஒரு காலத்தில் திலகர் புகழப் பட்டார். பெசண்ட் அம்மையார் புகழப் பெற்றார், காந்தியும் புகழப் படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரி யர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்ட தாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் தெய்வீகம் கற்பிக்கப் பட்டார்கள். பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களாலெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காண்கின்றதா? இவர்கள் எல்லாம் புராணங் களுக்கும் புதிய உரை எழுதுகிற உரையா சிரியர்கள் போல் தோன்றிப் பாமரர் களுடைய பக்திக்கும், பூஜைக்கும், பாராட்டு தலுக்கும் ஆளாகி முட்டாள்தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகின்றோமே என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் சாகின்றார்கள், சாகப் போகின்றவர்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே தவிர, கண் கண்ட பயன் என்ன என்று பாருங்கள்?

தொல்லைபட்டோரால்


தோன்றிய நன்மை


இன்று உண்மையில் மனித சமுகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல், உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத் துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால், அவை அனைத் தும் ஒரு காலத்திலோ, நேற்றோ, இன்றோ கல்லடிபட்டுக் கொல்லப்பட்டு, கையடிப் பட்டு, தொல்லைபட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களா லேதான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயரவேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்ல. ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி, அவர்கள் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து அம்மாதிரியான உள்ளம் பெற்று சமுகத்துக்குத் தொண்டாற்ற முற்பட வேண்டும் என்பதற்காகவே, அவர்களது உருவப்படத்திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக்கொள் கிறோம்.

-  விடுதலை நாளேடு, 18.5.19

ஞாயிறு, 19 மே, 2019

பெற்ற அனுபவத்தைப் பேசுகிறார் தோழர் அழகிரி


இத்தாலி ஒரு மாஜினியையும் ஒரு கேரிபால்டியையும் பெற்றதுண்டு. ஜெர்மனி ஒரு மார்க்ஸையும், ப்ரான்ஸ் ஒரு ரூஷோவையும், ரஷியா ஒரு லெனினையும், அமெரிக்கா ஒரு லிங்கனையும் பெற்றதுண்டு. ஆனால், அவர்களது சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் வேறு. அவர்களைப் போல் நம் திராவிட நாட்டில் ஆயிரம் கேரிபால்டிகள் தோன்றியிருந்தால்கூட, இவ்வாரியம் அவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கும் காந்தியாரின்  வருணாசிரமப் பிரசாரத்தை எதிர்த்தோ, ஆரிய நயவஞ்சகச் சூழ்ச்சிகளை எதிர்த்தோ, அல்லது நம்மவர்களின் உடைமையிலுள்ள பிரீதியையும் எதிர்த்தோ, அவர்களால் ஒரு நாள் கூட ஜீவித்திருக்க முடியாது. பகுத்தறிதல் பாவம் என்று நினைத்திருந்த மக்களிடையே, அவர்கள் பிறந்தார்களில்லை. மோட்ச நரகத்தைக் காட்டி மோசடி செய்யும் மக்களிடையே அவர்கள் பிறந்தார்களில்லை. ஆகவேதான், அவர்கள் விரைவில் வெற்றி கண்டார்கள். ஆனால், நம் பெரியார் பிறந்த இடமோ அப்படிப்பட்டதல்ல. அவனன்றி ஓரணுவும் அசையாது காண் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்த மக்களிடையே பிறந்தார் இவர். கடவுளை வணங்காமலிருந்தால் கயமை, சாஸ்திரங்களைத் தகர்த்தால் நாத்திகம், புராணங்களை நம்பாமல் இருத்தல் நரகத்திற்கு வழி செய்து கொள்ளல், அயோக்கிய அன்னக் காவடிப் பார்ப்பனர்கள்தான் இந்நாட்டின் பூதேவர்கள் என்று நம்பியிருந்த மக்களிடையே பிறந்தார் நம் பெரியார். அப்படி வாழ்ந்த நம்மைப் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்படி செய்து, ஆதாரங்கள் பல காட்டி நம்மைத் தலைநிமிர்ந்து நடக்கும்படி செய்தார் நம் பெரியார்.
17.01.1948- குடிஅரசிலிருந்து...
- விடுதலை நாளேடு, 11.5.19

வித்தியாசங்களின் வேர்

- பெரியார்

10.01.1948 - குடிஅரசிலிருந்து...
சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ்வித் தியாசங்களைப் போக்கிக் கொண்டு போகவேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரிய மல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்கா மலிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை மாத்திரம் வெட்டினால், மறுபடியும் அது நன்றாய்த் துளிர்த்து தழைத்துக் கொண்டுதான் இருக்கும். எனவே உற்பத்தி தானமாகிய பார்ப்பனர்களிடமிருந்து அதை ஒழிக்க வேண்டும். அவர்களால்தான் இவ்வித்தியாசங்கள் பரவுகின்றன.
உதாரணமாக எங்கள் வீட்டிற்கு முன் ஒரு குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பனச் சகோதரி வரும்போது ஒரு சுண்டைக்காய் பிரமாணம் புளியும், பஞ்சபாத்திரத்தில் தண்ணீரும் கொண்டு வந்து குழாயைப் புளியால் விளக்கிக் கழுவி, பின்பு தண்ணீர் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தாள். இதைப் பார்த்த நம் சகோதரிகள் நெல்லிக்காய் அளவு புளியும், ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து புளியால் விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள். இதைக் கண்ணுற்ற நம் முகமதிய சகோதரிகளும் கொளு மிச்சங்காய் அளவு புளியும், முக்கால் குடம் தண் ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள். அந்த முகமதிய சகோதரியை தடுத்து உங்கள் மதத்திற்கு வித்தியாசமில்லையே; நீங்கள் கூட ஏன் இப்படிக் கழுவித் தண்ணீர் பிடிக்கிறீர்கள்? என்றால், எனக்கு என்ன தெரியும்? இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ என்று கருதி நான் செய்து வருகிறேன் என்கிறாள். இவ்வளவுக்கும் காரணமாயிருந்தவர்கள் யார் என்று பாருங்கள். பார்ப்பனர்கள் இப்படிச் செய்யாதிருந்தால் இவ்வித வழக்கங்கள் பரவ வழியில்லை.

- விடுதலை நாளேடு, 11.5.19

நாகரிகமும் நமது கடமையும் - 1


- பெரியார்
10.01.1948 - குடிஅரசிலிருந்து...
நாகரிகம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளே, பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் நாகரிகம் என்பதற்கு ஒவ்வொரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ், குறளில் நாகரிகம் என்கிற வார்த்தை வள்ளு வரால் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாட்சண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாக வும் எனக்கு ஞாபகம்.
நாகரிகமும், மக்களின் மாறுதல்களும்
நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக்கொண்டு பேசினாலும் மக்கள் சமுகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லாப் பாவனைகளிலும் பெரிதும் மாறுப்பட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கின்றது என்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு திரீகளும் - தெருக்களில் தெருக் கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளைத் தூக்கிப்பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம் இப்பொழுதோ என்றால், ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்றுதான் கருதுகிறோம்.
பற்றுகளை விடுத்துப் பார்ப்பீர் உண்மையை!
நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும் பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்த விதப் பற்றுதலும் இல்லாமல், அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டுச் சுயேச்சையாகக் சீர்தூக்கிப் பார்த்தால் தான், விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள் ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.
ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவசிவா என்று ஜெபிப்பதுதான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்தமானங்கள், மேல் சொன்ன விஷயத்தைக் கேலி செய்கின்றது.
புருஷன், பெண் ஜாதி என்கிற இரு சாரர் களை எடுத்துக் கொண்டாலும், முன்பு கல் என்றாலும் கணவன்,  புல் என்றாலும் புருஷன்  என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமை யென்று நடந்துவந்த பெண்களைப் பற்றிப் பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால், இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாய் இருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்ததும், சம உரிமையும், சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம். முன்பு புராணத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் வித்வத்தன் மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகிப் பரிகசிக்கத்தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந் ததைச் சிலாக்கித்துப் பேசினோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும் - விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுனர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.
இடம் காலங்களுக்கு
ஏற்ப நாகரிகம்
நாகரிகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும் - காலப்போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. கால தேச வர்த்தமான - வழக்கத்தையே ஒட்டி நாகரிகம் காணப்படுகிறது.
காலப் போக்கானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை-ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும் - புரட்சி ஏற்படவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்கள். எது நாகரிகமென்று கருதுகின்றோமோ, அது பெருத்த அஜீரணத் துக்கு வந்து விடுகிறது. மீண்டும் அந்த நிலை மையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கிறது. ஒரு விஷயமானது வாய்ச் சாமர்த்தியத் தினால் செலாவணியாகி விடும். அது மெய்யோ, பொய்யோ - சரியோ - தப்போ எப்படியும் இருக்கலாம்.
நாகரிகத்தின் முடிவு
நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடு பட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண் டுமா? என்கின்ற கேள்விகள் எழுந்து மக்கள் சமுகம் கஷ்டம் தியாகமின்றி-நலம் பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங் களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாகப் பாவிக்கப் பட்டிருந்தது, பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப் பட்டு, அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு, இராட்டை சுற்றுவதும் - தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம்,ஜாதி) பற்றுதலுமில்லாத பொது மனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஒரு காலத்தில் தேசம் - தேசியம் - தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம்.
தொடரும்...
 - விடுதலை நாளேடு, 11.5.19

ஞாயிறு, 5 மே, 2019

கொலை களம்: கோவிலுக்குள் புகுந்து பூசாரி அடித்துக் கொலை!

கம்பம், மே 5  கம்பம் அருகே கோவிலுக்குள் புகுந்து பூசாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட் டத்தில்  சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த சுருளி அருவியில் குளிப்ப தற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுருளி அருவியில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்த மான பூதநாராயணன் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், சங்கிலி கருப்பசாமி கோவில் கைலாசநாதர் கோவில், போன்ற கோவில்களுக்கும்  பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பூத நாராயணன் கோவிலில் உள்ள உண்டி யலை உடைப்பதற்காக அடையாளம் தெரியாத 2  நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அப்போது கோவிலுக்குள் பூசாரியான சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த மலையன் (வயது 70), திண்டுக்கல் மாவட்டம் சிறீராமபுரத்தைச் சேர்ந்த பால சுப்பிரமணி (59) ஆகிய இருவரும் கோவி லுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் பூசாரிகள் எழுந்து அவர்களை தடுக்க முயன்றனர். இத னால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர் அருகில் இருந்த இரும்பு கம்பியால் பூசாரி மலையனின் தலையில் பலமாக தாக்கினர்.
இதை பார்த்த மற்றொரு பூசாரி பால சுப்பிரமணி தடுக்க முயன்றார். அவ ரையும் கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மலையன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ராயப்பன் பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாஸ்கரன், உத்தமபாளையம்  காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டி, கம்பம் ஆய்வாளர் பொன்னிவளவன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த பாலசுப்பிர மணியை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலையனின் உடலை உடற் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். கோவிலுக்குள் புகுந்து பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட் டது அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
- விடுதலை நாளேடு, 5.5.19

புதன், 1 மே, 2019

பக்தி படுத்தும் பாடு!

பக்தியின் பெயரால்  16 வயது சிறுவன் உயிரிழப்பு
சாமியார் உள்பட 2 பேர் கைது
கண்ணமங்கலம்,ஏப்.22, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி. விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து  வருகிறார்கள். இவர்களது மகன் தனநாராயணன்(16), 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோயில், கோயில்களாக சென்று வழிபாடு  செய்தும், தியானத்தில் இருந்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரிகிருஷ்ணன் மகனுக்கு மனநலன் பாதித்திருக்கலாம் என்று கருதி வேலூர் மருத்து வமனைக்கு அழைத்து வந்தாராம். மருத்துவர்கள், சிறு வனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அனுப்பி யுள்ளனர். தனநாராயணன்  தன்னை யாராவது துறவியிடம் அழைத்து சென்றால் சரியாகிவிடும் என்று கூறினாராம்.
அதன்படி அவரை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அவரிடம் தனிமையில் பேசிவிட்டு வந்தது முதல் தனநாராயணன் தனது வீடு, விவசாய நிலத்தின் அருகில் உள்ள கிணறு  பகுதியில் தியானம் செய்து வந்தாராம்.  இந்நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி தனநாராயணன் கிணற்றடியில் கிருஷ்ணரின் உருவப்படத்தையும், தனது உருவத்தையும்  வரைந்து விட்டு கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவல்  அறிந்த தீயணைப்பு  வீரர்கள் விரைந்து வந்து தனநாராயணனை உடலை 3 மணி நேரத்துக்கு பின்னர்  மீட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த சாமியார் ஒருவர் அங்கு விரைந்து வந்து சிறுவனின் நாடியை பிடித்து பார்த்து,  யோகநிலையில்  (நீரில் அமர்ந்தபடியே) ஜலசமாதியாகிவிட்டார் என்று கூறியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.  இதையடுத்து பள்ளம் தோண்டி உறைகள் வைத்து குழியில் விபூதி நிரப்பப்பட்டு தனநாராயணன் சடலத்தை பத்மாசன நிலையில் அடக்கம் செய்தார்களாம்.   சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் இதுகுறித்து சந்தவாசல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் விசாரணை: இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் விசாரணை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ‘சிறுவனின் பெற்றோரை விசாரணைக்கு  அழைத்துள்ளோம்’ என்றார்.
சாமியார் உள்பட இருவர் கைது: படவேடு அருகே ஜலசமாதி அடைந்த 16 வயது சிறுவனின் உடலை தோண்டி எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலை 9 மணியளவில் சிறுவனின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராவுக்கு உட்படுத்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். சிறுவன் நீர்சமாதி அடைந்த விவகாரம் தொடர்பாக சாமியார் பழனி மற்றும் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயில் தங்கத் தேர் பீடம் உடைந்து
பக்தர்மீது விழுந்ததால் படுகாயம்
திருவண்ணாமலை, ஏப்.22, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வேண்டுதலுக்காக தங்கத்தேர் இழுத்து சென்றபோது, தேர் உச்சியிலிருந்து பீடத்துடன் கலசம் உடைந்து கீழே விழுந்ததில் ஒருவர் படுகாயம்  அடைந்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று, நேர்த்திக்கடனுக்காக கட்டண தொகையை செலுத்தி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து  வருகின்றனர். சுமார் 16 அடி உயர தங்கத்தேர் கடந்த 2006இல்  ரூ. 87 லட்சம் மதிப்பில் புதிதாக வடிவ மைக்கப்பட்டது. நேற்று பக்தர்கள் குழுவினர் தங்கத்தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்த வந்தனர். அதன்படி காலை 9.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேருக்கு 3ஆம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் அருகே பூஜை செய்து  வழிபட்டனர்.பின்னர், அங்கிருந்து தேரை இழுத்தனர். சுமார் 30 அடி தூரம் வந்தநிலையில், சம்மந்த விநாயகர் சன்னதி எதிரே, திடீரென தங்கத்தேரின் உச்சியில் இருந்த தங்க கலசம் பீடத்தோடு உடைந்து கீழே விழுந்தது.


அப்போது, தேர்  அருகே நின்றிருந்த வேட்டவலம் சாலை பசுங்கரையை சேர்ந்த மணிவண்ணன் (26) என்பவர் மீது கலசம் விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.  உடனடியாக அவருக்கு கோயிலில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  கீழே விழுந்த பீடத்துடன் கூடிய கலசத்தை கோயில் ஊழியர்கள் உடனடியாக  எடுத்து சென்று துணி சுற்றி அறையில்  வைத்து பூட்டினர்.  பின்னர் பவனி முடிந்ததும் அவசர, அவசரமாக தேர் நிறுத்தப்படும் அறைக்கு இழுத்து சென்று வைத்து அனைத்து கதவுகளையும் அடைத்து, பக்கவாட்டு ஜன்னல்களை துணிகளை கொண்டு மறைத்து வைத்தனர். தங்கத்தேரின் உச்சியிலிருந்த கலசம் சரியாக பொருத்தப்படாமல் கழன்று கீழே விழுந்ததா? அல்லது கேபிள் ஒயர் தடுத்ததால் உடைந்து விழுந்ததா? என்பது உடனடியாக தெரியவில்லை.
- விடுதலை நாளேடு, 22.4.19