பக்கங்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2018

சர்வம் பார்ப்பன மயம், திருவாங்கூர்


22.11.1931 , குடி அரசிலிருந்து...புதிய மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன் திருவாங்கூர் சமஸ்தானக் குடிமக்களுக்கு இனியேனும் உண்மையான சுதந்திரம் உண்டாகும் என்று நம்பினோம். இதற்கு அறிகுறியாக கப்பற் பிரயாணம் செய்து அந்நியநாடு சென்று வந்தவர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த கோயில்களுக்குள் அவர்களும், போகலாம், என்று முன்னி ருந்த தடை நீக்கப்பட்டது.

இதைக்கொண்டு, இனி திருவாங்கூர் மக்கள் வைதிகக் கொடுமையிலிருந்தும் நீக்கப்படுவார்கள்போலும் என்றும் சந்தோஷப்பட்டோம். ஆனால், இப்பொழுது சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களை மேன்மை தங்கிய மகரா ஜாவுக்கு அரசியல் ஆலோசனை கூறும் உத்தியோகதராக நியமிக்கப்பட்ட திலிருந்து கப்பலேறி அந்நியநாடுகளுக்குச் சென்று வந்த சர்.சி.பி.ரா. அய்யர் அவர்கள் கோயிலுக்குள் போவதற்கு தடை இருக்கக் கூடாது என்பதற்காகவே முன் இருந்த தடை நீக்கப்பட்டது என்றே நினைக்க வேண்டிய திருக்கிறது.  அன்றியும் இப்பொழுது இருக்கும் மகாராஜா அவர்கள் ஒரு சமயம் சர். சி.பி.ரா. அய்யர் அவர்களுடன் இங்கிலாந்து முதலிய தேசங்களுக்குப் பிரயாணம் செய்து வந்தால், அப்பொழுது மகாராஜா கோயிலுக்குள் போவ தற்கு யாதொரு தடையுமில்லாமலிருப்பதற்கு முன்னேற் பாடாக இக்காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் நினைக்கவேண்டியிருக்கிறது.

அன்றியும் இப்பொழுது பட்டத்திற்கு வந்திருக்கும் மகாராஜா அவர்கள் காலத்தில் முன்னிருந்ததைக் காட்டிலும் இன்னும் பார்ப்பன ஆதிக்கம் அதிகப்பட்டு உறுதிப்படும் என்றும் கருதி திருவாங்கூர் பிரஜைகளின் சார்பாக இரக்கப்படுகிறோம், இவ்வாறு நடக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன், முன்பே திரு. சுப்பிரமணிய அய்யர் என்னும் பார்ப்பனர் திவானாயிருக்க, சர்.சி.பி.ராமசாமி அய்யரும் அரசியல் ஆலோசனை கூறும் அதிகாரியானார். ஆகவே, இப்பொழுது திருவாங்கூர் ராஜ்யம் இரண்டு பார்ப்பன அதிகாரிகளின் வசம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருவாங்கூர் சமஸ்தானம் பார்ப்பனர்களின் அதி காரத்தில் அகப்பட்டு, அச்சமஸ்தான மக்கள் பார்ப் பனியத்தால் நசுக்குண்டு கிடப்பது இன்று அல்லது நேற்று முதல் நடைபெறும் விஷயம் அல்ல; நூற்றுக்கணக்கான வருஷங் களாகவே இப்படி இருந்து வருகின்றது. இதைக் கீழ்வரும் விஷயத்தால் தெளிவாய்த் தெரிந்து கொள்ளலாம். 1817 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டுவரையிலும் திருவாங்கூர் திவான் உத்தியோகத்தை 24 பேர் வகித்து வந்திருக்கின்றனர். இந்த 24 பேர்களில் திரு. நாணுப்பிள்ளை என்பவர் 1877 முதல் 1880 வரையில் 3 வருஷமும், இப்பொழுது சென்னை அரசாங்கத்தில் சட்ட மந்திரியாய் இருக்கும் திரு.கிருஷ்ணன் நாயர். 1914 முதல் 1920 வரை 6 வருஷமும், திரு வாட் என்னும் அய்ரோப்பியர் 1925 முதல் 1929 வரை 4 வருஷமும் திவானாக இருந்திருக்கின்றனர். இவர்கள் திவானாக இருந்த 13  வருஷங்கள் போகபாக்கி 101 வருஷங் களும் பார்ப்பனர்களே திவான்களாக இருந்து வந்திருக் கின்றனர். இந்தக் கணக்கைப் பார்த்தாலே திருவாங்கூர் ராஜ்யம் எப்பொழுதும் பார்ப்பனமயம் என்பதில் ஏதேனும் தவறு உண்டா?

சுதேச சமஸ்தானமாகவும், பார்ப்பன ஆதிக்க ராஜ்ய மாகவும், பத்மநாபசுவாமி என்னும் கடவுளின் ராஜ்ய மாகவும் இருக்கும் அந்தச் சமஸ்தானம் எந்த நிலையிலிருக் கிறது? 40 லட்சம் ஜனத்தொகையுள்ள அந்த சமஸ்தானத்தில் சுமார் 20 லட்சம் பேர் முகமதியர், கிறிஸ்தவர் முதலிய அந்நியமதத்தினராகவும், சுமார் 12.5  லட்சம் மக்கள் தீண்டக் கூடாதவர்களாயும், பார்க்கக் கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாதவர் களாகவும் இருக்கின்றார்கள் இவை போக சுமார் 7.5 லட்சம்  இந்துக்கள் என்பவர்களே பத்மநாபக் கடவுளின் அரசாங்கமாகிய இந்து ராஜ்யத்தில் இருக்கிறார் களென்றால் இதை என்ன ராஜ்யம் என்று சொல்லுவது? பார்ப்பனர்களின் அதிகாரத்தின் காரணமாக - பார்ப்பனீயமாகிய இந்து மதக் கொடுமை காரணமாக. இந்துமதத்திலிருந்து விலகியவர்கள் தான் இப்பொழுது அச்சமஸ்தானத்தில் இருக்கும் 20 லட்சம் வேறு மதக்காரர்களும் என்பதை யார் இல்லை யென்று சொல்ல முடியும்? இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத் தால் தானே இன்று 12.5 லட்சம் பேர் தீண்டத் தகாதவர் களாகவும், பார்க்கக் கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும், மிருகத்திலும் கேடாக மதிக்கப்பெற்று கொடுமை செய்யப்பட்டுக் கிடக்கிறார்கள்? இவர்களும் அந்நிய மதத்தினர்களாக ஆகி விட்டால் இவ்வளவு கொடுமைக்கு ஆளா வார்களா?

இந்த இழிவான நிலையில் உள்ள இச்சமஸ்தானம், எல்லா மக்களும் கண் விழித்துச் சுயமரியாதை உணர்ச்சி பெற்று வருகிற இந்நாளிலுமா பார்ப்பனர் வசமும் பார்ப்பனிய வசமும் சிக்கித் துன்பப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்? என்ற உணர்ச்சியுடன் திருவாங்கூர்ப் பிரஜைகள் அனை வரும், சர். சி.பி.ரா. அய்யரின் நியமனத்தைச் சரியான காரணங்களுடன் கண்டித்துத் தீர்மானங்கள் செய்வதை நாம்  பாராட்டுகிறோம்.

இதோடு மற்றொரு வதந்தியும் உலாவுகிறதென்று அறிகிறோம். அதாவது, இப்பொழுதுள்ள திவான், திரு.சுப்பிர மணிய அய்யர் திவான் பதவியை விட்டு விலகியவுடன், அப்பதவிக்கு, சென்னையில் உள்ள திரு.டி.ஆர்.வெங்கட்ட ராம சாஸ்திரி அவர்களும், மற்றும், இரண்டு பெரிய இந்திய அரசாங்க உத்தியோகஸ்தர்களும் முயற்சி செய்கிறார்களாம்.  இவ்வாறு முயற்சி செய்து கொண்டிருக்கும், திரு.டி.ஆர்.வெங்கட்டராம சாஸ்திரியார் அவர்களோ, அல்லது வேறு ஒரு சாஸ்திரியார் அல்லது  அய்யர் அல்லது அய்யங்கார் அல்லது  ஆச்சாரியாரோ திவானாக வந்தால் திருவாங்கூர் ராஜ்யம் இன்னும் மோசமான பார்ப்பன ராஜ்யமாக ஆகவேண்டி யதைத் தவிர வேறு வழியில்லை என்பது உறுதியான விஷயமாகும்.

உதாரணமாக சர்.சி.பி.ராஅய்யர் அவர்களின் யோக்கி யதையைச் பார்த்தாலே இது விளங்கும். முதலாவது, திரு. அய்யர், தன் அதிகாரத்தால் செய்யக்கூடிய எந்த உத்தியோகங்களையும், நன்மைகளையும், தன் இனத்தார் களாகிய பார்ப்பனர்களுக்கு மாத்திரம் செய்யக்கூடியவர் என்பது நாம் அறிந்த சங்கதி, இரண்டாவது, எல்லாமக்களும் சம சுதந்திரம் பெற்றுச் சகோதரர்களாய் வாழ வேண்டும் என்னும் சமதர்மக் கொள்கைக்கு எதிரான வருணாசிரம தரும வகுப்பினரைச் சேர்ந்தவர் என்பது யாவருக்கும் தெரிந்த செய்தி மூன்றாவது, அவர் எப்பொழுதும் பிரிட்டிஷ்காராருக்குச் செல்லப்பிள்ளையாக நடந்து தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ளக்கூடியவர், என்பது அவருடைய அரசியல் நாடகம் அறிந்தவர்களுக்கு நன்றாய்த் தெரியும். இதனால் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து சுதேச சமதானத்திற்குப் போகும் எந்த பார்ப்பனரும், பெரும்பாலும், இதே மாதிரியான யோக்கியதை உள்ளவராகத்தான் இருப்பார்கள். ஆகையால் திவாங்கூர் பிரஜைகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இத்தகைய விஷயங்களை, இந்திய அரசாங்கத்தாருக்கும், மேன்மை தாங்கிய மகாரா ஜாவுக்கும் எடுத்துக்காட்டிப் பரிகாரம் தேடிக்கொள்ளும்படி அவர்களுக்கு நினைப்பூட்டி, நாமும் இந்தச் சமஸ்தானம் பார்ப் பனருக்கும், பார்ப்பனியத்திற்கும் அடிமைப்பட்டு வருவதைப் பலமாகக் கண்டிக்கிறோம்

- விடுதலை நாளேடு, 27.7.18

'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் கோயங்கா குமாஸ்தா குருமூர்த்திக்கு மூளைக் கோளாறா?

**மஞ்சை வசந்தன்**


நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கும் பெண் குழந்தை களுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்புணர்ச்சியும், கொலைகளும் நடக்கின்றன.

இதைத் தடுக்க ஆன்மீகச் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்! நாத்திக மாயையிலிருந்து வெளிவர வேண்டும் என்று  துக்ளக் இதழில் (24.07.2018) இந்தப் பித்தலாட்டப் பேர்வழி தீர்வு கூறியுள்ளார்.

அடடே... ஆராய்ச்சி சிகாமணியே! நாட்டில் நடக்கும் பாலுறவு வன்புணர்வுகள் பலவும் சாமியார்களும், சங்பரிவார் அமைப்புகளும்தானே செய்கின்றனர்! உமக்குத் தெரியாதா? அவர்களெல்லாம் யார்? அதிதீவிர பக்தர்கள் அல்லவா?

இதோ பார் பட்டியல்:

ஆன்மீகப் போர்வையில் அன்றாடம் கொடுமைகள்:


நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான  வன் புணர்ச்சிகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் அதில் பெரும்பகுதி சாமியார்களால் நிகழ்த்தப்படுகின்றன. சாமியாரில், சங்கராச்சாரி முதல் சாதாரண சாமியார் வரை அடக்கம்.

காலஞ்சென்ற காஞ்சிபுரம் ஜெயேந்திர சங்கராச்சாரி:

இந்தியாவில் பந்தா காட்டிய உயர்நிலைச் சாமியார் காஞ்சிபுரத்துக் காமகோடி பீடத்தில் காட்சித் தருபவர் தான் காமகோடி. நல்ல பொருத்தமான பெயர்! காமம் கரைபுரண்டு நுங்கும் நுரையுமாய் பொங்கிவழிவது மட்டுமல்லாமல், கொலை, குத்து, வெட்டு என்று எல்லாம் அங்கு அரங்கேற, காமகோடி -  காமகேடி என்று ஆகி விட்டது.

இதோ சில:

தண்டத்தைப் போட்டுவிட்டு பெண்ணோடு ஓடியவர்!

1986இல் ஜெயேந்திரர் தண்டத்தைப் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடினார். ஒரு மாதத்திற்கு மேல் குடும்பம் நடத்தினார். ஓடிப்போன இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சிபிஅய் கொண்டு தேடிக் கண்டு பிடித்தனர். பின்னர் தலைக்காவிரிக்குப் போய் அந்தப் பெண்ணைப் பிரிந்து வந்த தகவல்கள் அப்போது ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்திகள்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் புகார்


"1992ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண் ணும் (இவர்தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத் தியவர்) மடத்துக்குச் சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றிப் பேசினார்.

நான் தலைகுனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீக வாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரி யாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாகப் பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற் புறுத்தினார். என்னால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் 'நீயெல்லாம் மனுஷனா' என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வாரப் பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதேபோல போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி அவர்கள் எனக்குப் பல தொல்லைகள் கொடுத்தார்கள்."

தினபூமியில் (5.12.2004) அன்று வெளிவந்த செய்தி!


"காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித் துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நடிகைகளில் சொர்ண மால்யா முக்கியமானவர்."

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சி கரமான தகவல்கள்:

லீலாவுடன் அரட்டை:


"நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் நண்பர் விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும், ஜெயேந்திரருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

1995ஆம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்த கல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந் திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்க வைக்கப்பட் டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண் டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசி னார். இதைத் தொடர்ந்து சரஸ் வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட் டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக் கடி காஞ்சி மடத்துக்குச் சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில் ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போன தால், என்னை சங்கரா கல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

மதிய நேரத்தில் பெண்களுடன்:


ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்புகள் இருந்தன. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன் அவர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பிரேமா: மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை யின் இயக்குநர் நடராஜனின் மனைவி பிரேமா, அய்தராபாத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி: மருத்துவமனையில் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந் திரருடன் பார்த்திருக்கிறேன்.

மடத்துக்குச் சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியையும் ஜெயேந்திரருடன் பார்த் திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்."

என்ன குருமூர்த்தியாரே உங்கள் தலைமை பீடத்தின் கதை இன்னும் நீளும் அப்போதைய நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களைப் புரட்டினால் நாற்றம் அடிக்கும்.

ஆசாராம் பாபு:


குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். ஆசாராம் பாபு வடஇந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்.

மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், 72 வயதான ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரைக் கேட்டுக் கொண் டனர். புகாரையும் அங்கு அனுப்பினர்.

உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அவர், சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13.08.2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார்.

அப்போது ஆசாரம் பாபு தன்னை மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து மைனர் பெண் 22-.08.2013 மாலை புகார் அளித்தார். இவன் பல மைனர் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றான். அவனுடைய குற்றச் செயல் களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டான்.

ரஜினீஷ் குரோவா:


இவன் பிரசாதம் என்ற பெயரில் மயக்க பிஸ்கட்டு களைக் கொடுத்து, பெண்களை வன்புணர்ச்சி செய்தவன்.

ஜெய்பூரில் இரு பெண்களை இவ்வாறு வன்புணர்ச்சி செய்தான். இதுசார்ந்த படங்கள் ஊடகங்களில் வெளி வந்து பரபரப்பாகியது.

22 வயதுடைய பெண் ஜெய்பூர் காவல் நிலையத்தில் இச்சாமியாருக்கு எதிராய்ப் புகார் அளித்தார்.

சந்தோஷ் மாதவன் (சாமி அமிர்த் சைத்தன்யா)


இந்தக் கேடிக்கு ரிச்சர்டு என்ற ரவுடி நெருங்கிய நண்பன். அவன் எல்லா வகையிலும் இந்த ஆளுக்கு உதவியாய் இருந்தான். இந்த நிலையில் ரிச்சர்டுக்கும் ஜக்கிக்கும் நடந்த வியாபார மோதலில் அந்தப் பெண் மாயமாக, ரிச்சர்டு கொலை செய்யப்பட்டான்.

ஆணுறுப்பு அறுக்கப்பட்ட சிறீஹரி கணேஸானந்தா தீர்த்தபதா சாமியார்!


அண்மையில் உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியின் நாயகன். கேரள மாநிலம் கோலாஞ்சேரியைச் சேர்ந்த சிறீஹரி என்பவன், அந்த ஊரில் டீக்கடை நடத்தி வந்தான்.

இளம் பெண்ணை 16 வயது முதல் வன்புணர்வு செய்து 7 ஆண்டுகள் கொடுமைப்படுத்தினான்.

அச்சாமியாரின் கொடுமை தாங்க முடியாத அப்பெண் அவனது ஆணுறுப்பையே அறுத்து எறிந்துவிட்டாள்.

சேலத்து சாமியார் நாகராஜன்:


பெண்களை மயக்கி பாலியல் வன்முறை செய்த,  சாமியாரை, சேலத்தில், காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன், (வயது 54) வீட்டில் கோவில் ஏற்படுத்தி, மாந்த்ரீகத் தொழில் செய்து வந்தார். ஜோதிடம் மட்டுமின்றி, மனோவசியம் செய்து நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி, பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜோதிடம் பார்க்க வந்த பெண்களை, சாமியார் நாகராஜன் மயக்கி, பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந் தது. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை படம் எடுத்து, மிரட்டுவதாகவும் தெரிய வந்தது.  விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்களை, பாலியல் வன்முறை செய்ததோடு, படம் பிடித்து, கைப்பேசியில் மிரட்டல் விடுத்ததும், பணம், நகைகளை பறித்ததும், தெரிய வந்தது. இதையடுத்து, சாமியார் நாகராஜனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்த பாதிரியார் கைது


கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கன்டந்திட்டா பகுதியில் தென் னிந்திய திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் பைபிள் வகுப் புக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுமி சென்றாள்.

தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக அங்கு வந்த அவளது தந்தை, அந்த சிறுமியை அங்கு பணியாற்றும் பாதிரியார் பாலியல் வன்முறை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் அடிப்ப டையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவலர்கள் பாதிரியார் தேவராஜ்(65) என்பவரை கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

சாமியார் குர்மீத் ராம் ரகீம்:


அரியானா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், தேரா சச்சா சவுதா ஆன்மீக அமைப்பின் தலைமை சாமியார் குர்மீத் ராம் ரகீம்  சிங் (50). இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் சீடர்கள் இருவர், சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். 1999ஆம் ஆண்டு முதல் 2001  வரை சாமியார் தங்களை மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக கடந்த 2002இல் புகார் அளித்தனர்.

குற்றவாளிக்கு ஆதரவாக வன்முறைகள்


கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அரியானாவின் பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில்,  சாமியார் குர்மீத் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜகதீப் சிங், தண்டனை விவரம் 28ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவித்தார். இதைத்  தொடர்ந்து சாமியார் குர்மீத், ரோடக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.தீர்ப்பு வெளியானதும், அரியானாவில் வன்முறை வெறி யாட்டங்கள் நடந்தன. சாமி யாரின் ஆதரவாளர்கள், பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தை சுற்றிய  பகுதியிலும், ஆசிரம தலைமையகம் அமைந் துள்ள சிர்சா மாவட்டத்திலும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள், கடைகள் அடித்து  நொறுக்கப் பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த வன்முறையில் 38 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துணை ராணுவம் குவிக்கப்பட்டும், 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டும் அரியானாவில் நடந்த பயங்கர வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. பஞ்சாப் - அரி யானா  உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாமியார் குர்மீத் அடைத்து வைக் கப்பட்டுள்ள சுனாரியா சிறையில் சிறப்பு சிபிஅய் நீதிமன்றம் அமைக்கப் பட்டது. இரயில் நிலையம்,  பேருந்து  நிலையம் உள் ளிட்ட பொது இடங் களில் காவலர்கள்  குவிக்கப்பட் டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் அளவிற்கு குற்றவாளிகளின் கொடுமை கோலோச்சியது!

கருவறையை காமக்கூடமாக்கிய அர்ச்சகன் தேவநாதன்!


நாத்திகத்தால்தான் நாடு கெட்டுவிட்டது, ஆன் மிகத்தை வளர்த்தே ஒழுக்கத்தை, பண்பாட்டைக் காக்க வேண்டும் என்று கூறும் குருமூர்த்தியே, தேவநாதன் தெரியாதா?

கடவுளுக்கு அன்றாடம் பூசை செய்பவன். காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறையில் பல பெண் களுடன் உடலுறவு கொண்டவன். அது மட்டுமா அந்த உடலுறவுக் காட்சிகளைப் படமாக எடுத்து வைத்துக் கொண்டு விரும்பும்போது போட்டுப் பார்த்து இரசிப்பானாம்?

இவன் யார்? பக்தன் மட்டுமல்ல. பகவானுக்கே பூசை செய்யும் ஆள். கோயில் கருவறையில் இருப்பவன்! கோயில் கருவறையையே பள்ளியறையாக்கினானே! உம் பக்தி வளர்த்த பண்பாடு இதுதானா?

ஆக, இந்த நிகழ்வுகள் காட்டுவது என்ன? உங்கள் பக்தியாலும் பயன் இல்லை! உங்கள் பகவானுக்கும் இதைக் தடுக்கும் சக்தி இல்லை என்பதுதானே!

அவன் மட்டுமா?

ஆண்டாள் கோயிலுக்குள் ஆனந்த லீலைகள்:


ஆண்டாளைப் பற்றி ஆய்வுக் கட்டுரை படித்த கவிஞர் வைரமுத்துவை வறுத்து எடுத்தார்களே! அந்த ஆண்டாள் கோயிலிலே உங்கள் ஆள் செய்த காரியம் என்ன?

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அக்கோயி லின் கருவறைக்குள், அர்ச்சகன் பத்ரி பட்டாச்சாரி செய்த லீலைகள் என்ன?

அக்கோயிலின் கருவறையில் வைத்தே பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளானே!

என்ன, ஆன்மிக ஆடிட்டரே! உங்கள் பக்தியின் பலன் இப்படிச் சந்தி சிரிக்கையில், பக்தி பரவினால் ஒழுக்கம் வரும் என்கிறீர்களே! இது அசல் பித்தலாட்ட, மோசடிப் பிரச்சாரம் அல்லவா? இன்று நாட்டில் நடக்கும் எல்லாக் கொடுமைகளுக்கும், கொள்ளைகளுக்கும்  அடிப்படை யானது பக்தர்கள் செய்வதுதானே!

ஆர்.எஸ்.எஸ். கொடியவர்களின் அடாவடி வன்புணர்வுகள்:


குஜராத்: 14 பேர் படுகொலை,  பாலியல் வன்முறை செய்த சங் பரிவாரைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் உறுதி!

விவரம் வருமாறு:

குஜராத்தில் மோடி ஆட்சியின்போது, பில்கிஸ் பானு என்ற முஸ்லிம் இளம் பெண்ணின் 3 வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரே இடத்தில் வைத்து சங்-பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

6 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவும், 12 பேர் கொண்ட சங்-பரிவாரக் கூட்டத்தால், மிகக் கொடூரமான முறையில் கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் 2008ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆசிஃபா - ஜம்மு காஷ்மீர்


ஆசிஃபா கொலை வழக்கில் ஒரு இந்து கோவில் மய்யமாக உள்ளது. இந்தக் கோவிலின் பாதுகாவலனான சஞ்சீவ் ராம் என்பவன், பக்கர்வால் சமூகத்தின் மீது வன் முறைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். அதற்காகத் தான் அவனுடைய நண்பர்களின் உதவியைக் கொண்டு ஆசிஃபாவை கடத்தி, கற்பழித்துக் கொன்றுள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது

ஆக, இந்துமதக் கோயில்கள் காவிக் கூட்டத்தின் கொலைக் கூடாரமாக, காவிக் கூட்டத்தின் வன்புணர்ச்சி நிலையங்களாக மாறி வருகின்ற நிலையில் ஆன்மிகத் தால் ஒழுக்கம் வளர்ப்போம் என்பது சரிதானா?

மாறாக, எந்த நாத்திகன் இப்படிப்பட்ட குற்றத்தைச் செய்தான் காட்ட முடியுமா? உண்மை இப்படி இருக்க மோசடியாய் - உண்மைக்கு மாறாய் பகுத்தறிவுப் பிரச்சாரத் திற்கு எதிராய்க் கருத்துக்கூறும் உமக்கு என்ன மூளைக் கோளாறா?

- விடுதலை நாளேடு, 27.7.18

செவ்வாய், 24 ஜூலை, 2018

விவேகானந்தர்?

விவேகானந்தர் அமெரிக் காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை பிரபலமாக் கப்பட்ட ஒன்றுதான். அதன் 125ஆம் ஆண்டையொட்டி இராம கிருஷ்ண மடம் சிறு கதைப் போட்டியை அறிவித் துள்ளது. போட்டியில்  வந் துள்ளது.

விவேகானந்தர் பார்ப் பனர்கள் பற்றியும், ஜாதி வருண தர்மம் பற்றியும்கூட ஏராளமாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.

அதையும் கொஞ்சம் கேட்கலாமே!

"ஏ பிராமணர்களே, பரம் பரை காரணமாக பிராமணர் களுக்குக் கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால், பிராம ணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக் காதீர்கள்; எல்லாவற்றையம் கீழ் ஜாதியினருக்காகச் செல விடுங்கள். உதவியற்றவர் களுக்குக் கொடுங்கள். ஏனெ னில் அவர்களுக்குத்தான் எல்லா செல்வமும் தேவைப் படுகிறது. பிராமணன் பிறவி யிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவியிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும், ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும், பகுத்தறிவுமாகும்." (பக்கம் 139,140 ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு - 'கொழும்பு முதல் அல்மோராவரை').

மேலும் 1901 மார்ச் 31ஆம் நாள் டாக்காவில் பகோஜ் பள்ளியின் திறந்தவெளி மைதானத்தில் விவேகானந்தர் பேசியதின் கடைசிப் பகுதி என்னவென்றுப் பார்ப்போம். "பிராமணர்களுக்கு ஒரு வார்த்தை: உங்கள் குலப் பெருமையும், பாரம்பரியப் பெருமிதமும் வீணே. அதை விட்டொழியுங்கள். உங்கள் சாஸ்திரத்தின்படி  பார்த்தால் இப்போது உங்களிடம் பிரா மணத்துவம் இல்லை. ஏனெ னில் நீண்ட காலமாக நீங்கள் மிலேச்ச அரசின்கீழ் வாழ்ந்து விட்டீர்கள், உங்கள் முன் னோரின் வார்த்தைகளில் உங் களுக்கு  நம்பிக்கையிருக்குமா னால், இந்தக் கணமே தூஷாக்கினியில் (உமியைக் குவித்து வைத்து மூட்டுகின்ற தீ) பிரவேசித்து உங்கள் பாவத்திற்குப் பிராயசித்தம் செய்து கொள்ளுங்கள். குமா ரில பட்டர் அதையே செய்தார். பவுத்தர்களை ஒழிக்க அவர் விரும்பினார். எனவே முதலில் பவுத்தர் ஆனார்.

பின்னர் பலரை வாதத்தில் வென்றார்; பலரது மரணத் திற்குக் காரணமானார். தமது பாவங்களைக் கழுவுவதற்காக துஷாக்கினியில் வீழ்ந்து உடலை மாய்த்துக் கொண்டார். அதற்கான நெஞ்சத் துணிவு உங்களுக்கு இல்லாவிடில் உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள், எல்லோ ருக்கும் உதவிக்கரம் நீட் டுங்கள், அறிவின் கதவைத் திறவுங்கள். தாழ்த்தப்பட்ட பாமர மக்களின் நியாயமான உரிமைகளையும், சலுகை களையும் மீண்டும் ஒரு முறை வழங்குங்கள்." (அதே நூல் பக்கம் 583).

எந்த விவேகானந்தர் மடம் விவேகானந்தருக்காகப் போட்டி நடத்துகிறதோ, அதே விவேகானந்தர் மடம் வெளி யிட்ட நூல்களிலிருந்துதான் இவை! சிந்திப்பீர்!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 22.7.18

கோல்வால்கரும் RSS சித்தாந்தமும்

கோல்வால்கரும் RSS சித்தாந்தமும் - ஒரு கேவலமான பிறவிகள் தான் RSS காவிகும்பல்..

ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களின் வேத புத்தகம் என்று கூறிக்கொள்வது அவர்களது தலைவரான கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவும் இருக்க முடியாது. ஒருபோதும் மறுக்கவும் மாட்டார்கள்.

அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறான். எப்படிப்பட்ட இந்து ராஷ்டிரம்? கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் லட்சணம் என்ன தெரியுமா? இதோ படியுங்கள்.

“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர்.

ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார்.

அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை?’ என்று கேட்கிறார்.

அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”

கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறான். கோல்வாக்கர். அது மட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறான். இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும். இதை பின்பற்றுபவர்கள் தான் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும், சாதிய அமைப்பிற்கு எதிராக போராடுபவர்கள் என்று சொன்னால் நம்மால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

ஆதாரம் - (கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)