பக்கங்கள்

செவ்வாய், 28 மே, 2024

புரட்சியாளர் பகத்சிங்! (கி.பி. 1907-1931)


தியாகம் : புரட்சியாளர் பகத்சிங்! (கி.பி. 1907-1931)

2022 செப்டம்பர் 16 -30 ,

பகத்சிங் என்றால் விடுதலைக்குப் பாடுபட்டவர். தீவிரச் செயல்களில் ஈடுபட்டு, மரண தண்டனை பெற்றவர். இறுதியில் தூக்கில் இடப்பட்டவர் என்ற வகையில், என்ற வரையில்தான் அவரைப் பெரும்பாலோர் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால், அவருடைய வரலாற்றில் அவை ஒரு சில பக்கங்கள். சிறு நிகழ்வுகள். உண்மையில் அவரின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும், வழிகாட்டல்களும், ஆதிக்க வர்க்கத்திற் கெதிரான அவருடைய போர்முறைகளும் இந்திய வரலாற்றில் எவரும் செய்யாதவை; வேறுபட்டவை; சரியானவை.
அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை, மனித-நேயமற்ற முதலாளிகளுக்கு எதிராகத்தான் முக்கியமாகப் போரிட்டார். “ஈவு இரக்கமற்ற இந்தச் சுரண்டல், முதலாளிகளால், இந்திய அரசு எந்திரத்தால் நடத்தப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும்…’’ என்று அவர் கூறி வந்தது அவருடைய இலக்கு என்ன என்பதைக் காட்டியது. இந்திய விடுதலைக்குப் பிறகும் அவரது போராட்டம் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகத் தொடரும் என்று அவர் அறிவுறுத்தியிருப்பது இதை உறுதி செய்கிறது.

“கம்யூனிசத்தின் தந்தை எனப்படும் கார்ல்-மார்க்ஸ் உண்மையில் கம்யூனிசக் கொள்கைகளை உருவாக்கவில்லை என்றுகூட நான் சொல்வேன். அய்ரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியே இம்மாதிரியான பலரை உருவாக்கியது. அவர்-களுள் ஒருவராக மார்க்ஸ் இருந்தார். ஆனால், அவரது காலத்தின் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் முடுக்கிவிடுவதற்கு அவரும் ஒரு கருவியாக இருந்தார்…’’ என்று சொல்லக்கூடிய தெளிவும், துணிவும் 23 வயது இளைஞருக்கு இருந்தது என்றால், அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளராக, அறிவுநுட்பம் உடையவராக, உலக வரலாற்றைக் கூர்ந்து ஆய்ந்தவராக இருக்க முடியும் என்பதை எடைபோட முடியும்.

1931ஆம் ஆண்டு பிப்ரவரியில், சிறையிலிருந்து அவர் இளம் அரசியல் தொண்டர்களுக்கு எழுதியது, அவர் ஒரு முதிர்ந்த கம்யூனிஸ்ட் என்பதைக் காட்டியது. இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் முதன்மையானவரான, சிவவர்மா, “எங்கள் அனைவரிலும் பகத்சிங்கே மார்க்ஸியத்தை மிகச் சரியாக – விரைவாக உள்வாங்கியவர்’’ என்று ஒப்புக் கொண்டு பாராட்டினார். இந்தியாவில் ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க முயன்றவர். காரணம், அப்போதிருந்த அரசியல் கட்சிகளில், எதுவும் அவருடைய நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

1931இல் ‘கனவுலகம்’ என்னும் கவிதை நூலுக்கு அவர் எழுதிய விமர்சனக் கட்டுரையில், “என்னுடைய அனைத்து முயற்சிகளுக்குப் பின்னருங்கூட, நாம் எதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான கொள்கைகளை உடைய எந்தவொரு புரட்சிகரக் கட்சியையும் என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலருடன் அவருக்கு நேரடித் தொடர்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரகசியமாகச் செயல்பட்டது போலவே, பகத்சிங்கின் புரட்சிகர இயக்கமும் தலைமறைவாகச் செயல்பட்டது. தலைமறைவு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்திருந்தனர்.

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், இந்திய நாட்டு மக்களைச் சுரண்டாமல் தடுக்க வேண்டும் என்றால், அவர்களைச் சுரண்ட அனுமதிக்கும் இந்திய முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களே இந்திய மக்களின் பிரதான எதிரிகள். அந்த முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைத் தட்டியெழுப்புவதே, பகத்சிங்கின் நோக்கம். இன்றுள்ள இளைஞர்கள் அப்பணியைச் செய்வதே பகத்சிங்கிற்குச் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும். மற்றபடி அவர் படத்திற்கு மாலையிடுவதும், மரியாதை செலுத்துவதும், புகழ்ந்து பேசுவதும் செய்வதால் எந்தப் பயனும் ஏற்படாது.
பகத்சிங்கின் இந்த மறுபக்கத்தை மக்களுக்குக் காட்ட பலரும் தவறியுள்ளனர். எனவே, பகத்சிங்கின் உண்மையான இலக்கு, சிந்தனை அவரது போராட்ட முறை, அவரது பல்துறை, மற்றும் பல பிரச்சினைகள் சார்ந்த வழிகாட்டுதல்கள் என்ன என்பதனை ஒவ்வொரு இந்தியனும், ஏன் ஒவ்வொரு மனிதநேயப் புரட்சியாளனும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

சுயமரியாதைச் சுடரொளி: புலவர் குழந்தை


சுயமரியாதைச் சுடரொளி: புலவர் குழந்தை

ஆரியர் செருக்கறுத்து திராவிடர் தலைநிமிர தன்மான இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் போர்ப்படை தளபதிகளாய் மிளிர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்-களில் தலையாய இடத்தில் வைத்துப் போற்றப்-பட வேண்டியவர் புலவர் குழந்தை என்று சொன்னால் அது மிகையாகாது. புலவர் குழந்தை அவர்கள் பன்முகத் திறனாளர். இளமையிலேயே ‘பா’ புனையும் ஆற்றலுடையோராய்த் திகழ்ந்தார்.
1.7.1906ஆம் ஆண்டு முத்துசாமி _ சின்னம்மையாருக்கு ஒரே மகனாகப் பிறந்த இவர், தாமே முயன்று படித்து 1934ஆம் ஆண்டு புலவராகத் தேறினார். 39 ஆண்டுகள் மாணவச் செல்வங்களிடை அறிவொளி பரப்பும் ஆசிரியப் பணியாற்றினார்.

தமிழ்ப் புலவர்கள் பலரும் தன்மான உணர்ச்சியும், பகுத்தறிவுச் சிந்தனையும் இன்றி மூடநம்பிக்கை மிக்கவர்களாய் இருப்பது குறித்து அவர்கள் மீது வெறுப்புற்றிருந்த தந்தை பெரியார் அவர்களாலேயே போற்றப்பட்டவர்; தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழர்தம் உயர்ச்சிக்கும் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டவர் இவர்.
இந்தித் திணிப்பு வந்த போதெல்லாம் அதை எதிர்த்துப் போரிடுவதில் முனைப்புக் காட்டியவர். 1938, 1948 ஆண்டுகளில் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பங்கு கொண்டதோடு, இந்தி எதிர்ப்புப் பாடல்களையும் எழுதி எழுச்சியூட்டினார்.
‘தமிழ்நாடு தமிழருக்கே’’ என்று வேட்டி, புடவை கறைகளில் அச்சிடச் செய்து தமிழ்நாடெங்கும் அனுப்பி தமிழ், தமிழர் உணர்வை ஊட்டினார்.
தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்று, மத மறுப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை தகர்ப்பு, இன உணர்வு, தன்மான உணர்வு ஊட்டல் போன்றவற்றை முனைப்போடு செய்தார். 1930ஆம் ஆண்டு ‘ஞானசூரியன்’ இதழ் ஆசிரியரான சிவானந்த சரஸ்வதி என்பவருடன் ‘கடவுள் இல்லை’ என்று நான்கு நாள்கள் சொற்போர் நடத்தி வெற்றி பெற்ற சிறப்புக்குரியவர்.

அரசியலரங்கம், நெருஞ்சிப் பழகம், உலகப் பெரியோன் கென்னடி, திருஞானச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகிய செய்யுள் நூல்களையும், ‘திருக்குறள்’ குழந்தையுரை, ‘தொல்காப்பியப் பொருளதிகார உரை’, ‘நீதிக் களஞ்சிய உரை’ ஆகிய உரை நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கண நூல்களாக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’, ‘நன்னூல்’ ஆகியவையும் உரைநடை நூல்களாக ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’, ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ ‘பூவாமுல்லை’, ‘கொங்கு நாடு’, ‘தமிழக வரலாறு’, ‘அருந்தமிழ் விருத்தி’, ‘அருந்தமிழ் அமிழ்து’, ‘தமிழ் வாழ்க’, ‘கொங்கு நாடும் தமிழும்’, ‘சங்கத் தமிழ்ச் செல்வம்’, ‘ஒன்றே குலம்’, ‘அண்ணல் காந்தி’, ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்’ ‘தீரன் சின்னமலை (நாடகம்)’ போன்றவை இவரது படைப்புகளாகும். இந்நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

இத்தனை நூல்களை இவர் இயற்றியிருந்தாலும், புலவர் குழந்தை என்று சொல்லும்போதே தமிழ் மக்கள் நினைவில் மின்னுவது இவர் படைத்த ‘இராவண காவியம்’ நூலேயாகும்.
1946இல் வெளிவந்த இந்த நூலை அன்றைய காங்கிரஸ் அரசு 1948இல் தடை செய்தது. இத்தடை பற்றி தந்தை பெரியார் கூறும்போது, ‘இராவண காவியம்’ கூடாது என்கிற மத நடுநிலையாளர்கள் முதலில் ‘இராமாயணத்தை’ அல்லவா தடை செய்ய வேண்டும் என்று கூறினார். ஈரோடு மாநாட்டில் இத்தடை நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தையும் தந்தை பெரியார் நிறைவேற்றினார். ஆனால், 1971இல் கலைஞர் அரசால்தான் இத்தடை நீக்கப்பட்டது.
அவர்தம் இரு மகள்களுக்கும் ‘சமரசம்’, ‘சமத்துவம்’ எனப் பெயர் சூட்டி தன் சமத்துவ வேட்கையை வெளிப்படுத்தினார். தன்மான இயக்கத்தின் தனிப் பெருஞ்சுடரான புலவர் குழந்தை அவர்கள் 22.9.1972இல் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!

சுயமரியாதைச் சுடரொளி: இராமச்சந்திரனார்


சுயமரியாதைச் சுடரொளி: இராமச்சந்திரனார்

2022 செப்டம்பர் 16 -30 
உண்மை இதழ்

பிறப்பு: 16.9.1884 மறைவு: 26.2.1933
சிவகங்கைச் சீமையிலே வசதி வாய்ப்புமிக்க குடும்பத்திலே பிறந்தவர் இராமச்சந்திர சேர்வை. அந்தக் காலகட்டத்திலேயே பி.ஏ, பி.எல். படித்தவர் என்றால், அதன் சிறப்பைப்பற்றி எடுத்துரைக்கத் தேவையில்லை.
சுயமரியாதை இயக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். 1929-இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த ‘சேர்வை’ என்ற ஜாதி வாலை ஒட்ட நறுக்கி வீதியிலே வீசி எறிந்த செம்மல் அவர்! சுயமரியாதை மாநாடுகளில் எல்லாம் பங்கு கொண்டவர்; பல மாநாடுகளுக்குத் தலைமை வகித்தவரும்கூட! நெல்லையில் சுயமரியாதை மாநாடு (21.7.1929); அம்மாநாட்டின் தலைவர் இவர்தான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் துப்பாக்கி வரை ஏந்திய ஏந்தலிவர். தாலுகா போர்டு தலைவராகவும் இருந்து அருந்தொண்டாற்றினார்.

நீதிக்கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு அன்றைய பிரதம அமைச்சர் முனிசாமி நாயுடு அவர்கள் அழைப்பு விடுத்தபோது, தந்தை பெரியார் அவர்களின் ஆலோசனையை ஏற்று பதவிப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் சுயமரியாதைத் தொண்டினை தந்தை பெரியார் பாதையில் தொடர்ந்த தொண்டறத்தின் இலக்கணம் இவர்.
தென் மாநிலச் சீமையிலே கொடிகட்டிப் பறந்த இந்தப் பெருமகனாரைக் காங்கிரசின் பக்கம் ஈர்க்கத் திட்டமிட்டனர். மதுரை வைத்திய-நாதய்யர்தான் அந்தத் தூண்டிலைப் போட்டவர். அந்தச் சிவகங்கைச் சிங்கம் என்ன சொன்னது தெரியுமா? மனிதருள் ஏற்ற தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் சின்னமான பூணூலைத் தாங்கள் அகற்றினால் நாங்கள் காங்கிரசில் சேருகிறோம் என்று பொறி பறக்கப் பதிலடி கொடுத்தார்.

இந்தத் தன்மான இயக்கத் தளபதி 49 வயதிலேயே பிப்ரவரி 26இல் (1933) மரணத்தைத் தழுவினார் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். அவர் மறைவு குறித்து தந்தை பெரியார் கூறிய ஒன்றே அந்தப் பெருமகனாரின் பெருமைக்குரிய சாசனமாகும்.
“தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின்வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது மிகமிக அரிதேயாகும்’’ என்றாரே அய்யா!
எத்தகைய சீலர் அவர்! இவருடைய அருமை மகள்தான் நம்மோடு வாழ்ந்து மறைந்த சுயமரியாதை மூதாட்டி சிவகங்கை ராமஇலக்குமி அம்மாள் ஆவார்கள். இவரின் பிரகடனப்படுத்தப்பட்ட பொன்மொழி என்ன தெரியுமா? இந்தக் கையால் எந்த ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன் என்பதுதான்! .

மேயர் ந.சிவராஜ்


மேயர் ந.சிவராஜ்

2022 செப்டம்பர் 16 -30 
உண்மை இதழ்

பட்டியலின மக்களின் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்விப்பதில் நாட்டம் கொண்டு அதற்காகவே பணியாற்றிய தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ந.சிவராஜ் அவர்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1925இல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
1918ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10ஆம் நாள் சுயமரியாதை இயக்க வீராங்கனையான மீனாம்பாள் அவர்களைத் திருமணம் செய்து-கொண்டார். தந்தை பெரியார் முன்னின்று நடத்திய முதலாம் மீனாம்பாள் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெண்களைத் திரட்டி தீவிரமாகப் போராடியவர்.
சிவராஜ் நீதிக்கட்சியின் தொடக்க காலம் முதலே அக்கட்சியின் ஆதரவாளர் ஆவார். பல சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் நீதிக்கட்சி மாநாடுகளிலும் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார்.

அம்பேத்கரும் இரட்டைமலை சீனுவாசனும் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்து-கொண்டு பட்டியல் பிரிவு மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துப் போராடியபோது அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடெடுத்து சென்னை மாகாணத்தில் செயல்பட்டார்.
1937இல் சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பதவியை விட்டுவிலகி முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 1942இல் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை அம்பேத்கர் உருவாக்கியபோது சிவராஜை அதன் அகில இந்தியத் தலைவராக நியமித்தார். அதன் மூலம் அகில இந்தியாவுக்கும் அறிமுகமான ஒரு பட்டியல் இன மக்களின் உரிமைப் போராளியாக உருவெடுத்தார். அம்பேத்கருடன் நெருக்கமாகி சமூகப் பணி-களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அம்பேத்கர் மறைவுக்கு முன் செப்டம்பர் 26ஆம் நாள் 1956இல் இந்தியக் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது அதன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலின மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் தலைமகனாக அறியப்பட்டார்.

ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்ற சென்னை பச்சையப்பன் கல்லூரி மரபினை மாற்ற அக்கல்லூரி அறக்கட்டளையின் மீது வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தொடர்ந்து போராடி வந்த நிலையில் 1928ஆம் ஆண்டு முதல் அக்கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர் சேர்க்கைக்கு இவ்வழக்கு வாய்ப்பாக இருந்தது.
தென்னார்க்காடு மாவட்டம் வெள்ளையன்-குப்பம் படையாச்சிகள் குற்றப் பரம்பரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று 7.8.1935 அன்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.

இவர் 1926 முதல் 1936 முடிய இருந்த நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
20.11.1945 அன்று சென்னை மாநகர மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார்.
1957 தேர்தலில் இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பில் தி.மு.க. கூட்டணியில் திருப்பெரும்புதூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக செப்டம்பர் 1964இல் தில்லி சென்றார். தில்லியில் இருந்தபோதே அதே செப்டம்பர் 29ஆம் நாள் அதிகாலை 5:30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்தியா ஆரிய பூமியா? -எதிர்வினை (107)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (107)

செப்டம்பர் 1-15-2022 உண்மை இதழ்

இந்தியா ஆரிய பூமியா?
நேயன்

ஆரியப் பார்ப்பனர்களின் மோசடிகளுக்கும், திரிபுகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், கற்பனை வரலாறுகளுக்கும் அவ்வப்போது முட்டுக் கொடுத்து, அவை உண்மையானவை, சரியானவை என்பதுபோலக் காட்டுவதற்கு, காலந்தோறும் ஆரிய இனத்தின் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் முயற்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் போலித்-தனத்தையும், பொய்யுரைகளையும் அவ்வப்-போது முறியடித்து, மூக்குடைத்தாலும், அவர்கள் தங்களின் மோசடி முயற்சிகளை மட்டும் கைவிடுவதே இல்லை. அப்படிப்பட்ட மோசடிப் பிரச்சாரத்திற்கு இக்காலத்தில், முனைந்து நிற்பவர்தான் இந்த அரவிந்தன் நீலகண்டன் என்பவர். இவர், 2014 காலகட்டத்தில், அம்பேத்கரும் பெரியாரும் கருத்தால் எதிர்நிலையில் நின்றவர்கள். அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டவர்கள் என்று எழுதியிருந்தார். அதற்கு நாம் முறையான, சரியான மறுப்பைக் கூறி அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். முதன்மை நோக்கங்களில், கருத்துகளில் ஒத்துப்போகக் கூடியவர்கள் என்பதை உறுதி செய்தோம்.
அதே அரவிந்தன் நீலகண்டன் அதே காலகட்டத்தில், “ஆழி பெரிது’ என்று ஒரு நூலையும் எழுதி வெளியிட்டுள்ளனர். “இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா’’ என்று அதற்கு அறிமுகமும் அட்டையிலேயே செய்துள்ளார்.

அந்த நூலில் 52 தலைப்புகளில் அவரது பித்தலாட்ட, திரிபு வேலைகளையெல்லாம் செய்துள்ளார். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய சில தலைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் ஆரிய பூமி என்னும் தலைப்பை ஆய்வோம். இந்தத் தலைப்பிலே, எடுத்த எடுப்பிலே ஒரு மாபெரும் பொய்யைச் சொல்கிறார்.
“சுவாமி விவேகாநந்தரும், பாபாசாஹிப் அம்பேத்கரும் மட்டுமல்ல; வேதங்களை ஆழ்ந்து படித்த தமிழ்க்கவி சுப்பிரமணிய பாரதியும், ஆரியப் படையெடுப்பு வாதத்தைத் தெளிவாக மறுத்தார். இத்தனைக்கும், பாரதி தமது பாடல்களில் பல இடங்களில் ‘ஆரிய’ எனும் பதத்தினைப் பயன்படுத்தியுள்ளார். தாம் எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலில் ‘ஆரிய பூமி’ என்றே பாரதத்தைப் புகழ்கிறார். தமிழ்மொழியை உருவாக்கிய அகத்திய மாமுனியை ‘ஆரியன்’ எனக் குறிப்பிடுகிறார். குரு கோவிந்தசிம்மன் ஆற்றிய வீர உரையைக் கவிதையாக்கித் தந்த பாரதி, அப்பாடலில் பாரத சமுதாயம் முழுமையும் “ஆரிய ஜாதி’’ எனக் குறிப்பிடுகிறார்.

மகாகவியின் பார்வையில் “ஆரிய’’ என்னும் பதத்துக்குப் பொருள் என்ன? இதோ அவரது வார்த்தைகளிலேயே அதைக் காணலாம்.
“நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் _இவைஅனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளசிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி _ இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆரிய சம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவில் உள்ள குகைக்கோயில், ஆக்ராவில் உள்ள ராஜ் மஹல், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் _ இவை-யனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. எனவே, ஆரிய சம்பத்தாவது ஹிந்துஸ்-தானத்தின் நாகரிகம்.’ (பாரதியார், ‘புனர்ஜென்மம்_1’; கட்டுரைகள்_தத்துவம்)
ஒரு விதத்தில், பாரதி ‘ஆரிய’ எனும் வேத வார்த்தையைத் தீர்மானமாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதை, காலனியவாதிகள் அப்பெயருக்கு அளித்த இனவாதப் பொருளுக்கு எதிரான ஓர் எதிர்வினையாகவே நாம் காண வேண்டும்.

பாரதியும், அம்பேத்கரும், விவேகாநந்தரும் எதிர்த்த இந்த இனவாதக் கோட்பாடு, வேதத்தின் மீது சுமத்தப்பட்டு, நம் குழந்தைகள் மீது திணிக்கப்படுவதன் காரணம் என்ன? அய்ரோப்பிய மனம் ஆராய்ச்சிக்கு உள்நோக்கங்-கள் இருக்க முடியாது என நாம் நினைக்கிறோம்.
முதலில் ஓர் ஆய்வாளனின் அறிவு நாணயம் என்பது, அவர் கூறுகின்ற கருத்துகளுக்கு ஆதாரங்களைக் காட்ட வேண்டும். விவேகாநந்தர் கூறியவை என்ன? அதற்கு என்ன ஆதாரம்? அம்பேத்கர் கூறியது என்ன? அதற்கு என்ன ஆதாரம்? என்பவற்றை தவறாது குறிப்பிட வேண்டும் என்பதுதான். ஆனால், எந்த ஆதாரமும் இன்றி ஒரு கருத்தை இவர் நிலைநாட்ட விரும்புகிறார். இதுதான் ஹைடெக் மோசடி.
ஆரியர்கள் வந்தேறிகளா? இல்லையா? என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விவேகாநந்தரும், பாரதியும் வரலாற்று ஆய்வாளர்கள் அல்லர். எனவே, அவர்களின் கருத்துகளை இதற்கு ஆதாரமாகக் காட்ட முற்படுவது மோசடியானது. அம்பேத்கர் வரலாற்று ஆய்வாளர். அவர் கருத்தை இவர் எடுத்துக்காட்டவில்லை.
இந்தியா முழுமைக்கும் வாழ்ந்த தொன்மைக் குடிகள் நாகர்கள் (தமிழர்கள்) என்று அம்பேத்கர் தமது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளார்.
அம்பேத்கரின், இனம் சார்ந்த ஆய்வும் முழுமையான, சரியான, ஏற்றுக்கொள்ளத்தக்க ஆய்வு என்று கொள்ள இயலாது. காரணம் அவர் ஆய்வு செய்த காலத்தில் இனம் சார்ந்த முழுமையான ஆய்வுகள் நடைபெற்று முடியவில்லை.

அம்பேத்கர் ஆய்வு மேற்கொண்ட காலத்திற்குப் பின் தொல்பொருள், அகழ் ஆய்வுகள் நிறைய நடந்துள்ளன. ஞிழிகி சோதனைகளும் அண்மையில் நடந்துள்ளன. இவையெல்லாம் இந்தியாவின் தொல்குடி மக்கள் தமிழர்கள் என்பதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்கின்றன.
மறுபுறம் இந்த ஆய்வுகள் அனைத்தும் ஆரியர்கள் வந்தேறிகள் என்பதையும் உறுதி செய்கின்றன.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை உள்பட எல்லா இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ் ஆய்வுகள், தொல்பொருள் ஆய்வுகள் எல்லாம் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தொன்மைக்குடி தமிழ்மக்களே என்கின்றன.

‘பரதேசி’ என்ற வார்த்தையே ஆரியர் அயல்நாட்டார் என்பதை உறுதி செய்கின்றது. இந்தியாவிற்குள் பிழைப்பதற்காக வந்த ஆரியர்கள், தொடக்க காலத்தில் தமிழர்களிடம் பிச்சையெடுத்தே வாழ்ந்தனர். அவ்வாறு அவர்கள் பிச்சை கேட்டபோது, தமிழ் மக்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?’’ என்று கேட்டபோது, ‘பரதேசி’ என்று பதில் சொன்னார்கள். பரதேசம் என்றால் அயல்நாடு; பரதேசி என்றால் அயல்நாட்டான் என்று பொருள்.
அன்று ஆரியர்களைக் குறித்த “பரதேசி’’ என்ற சொல். நாளடைவில் பிச்சைக்காரர்-களைக் குறிப்பதாய் மாறிவிட்டது. தொடக்கத்தில் வாயில் காக்கும் பணிக்கு ‘கூர்க்கர்’ இனத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டனர். காலப்போக்கில் ‘கூர்க்கர்’ என்னும் சொல், வாயில் காக்கின்றவர்-களைக் குறிப்பதாய் மாறியது போலவே, பார்ப்பனர்களைக் குறித்த பரதேசி எனும் சொல், பிற்காலத்தில் பிச்சைக்காரர்களைக் குறிப்பதாய் மாறியது. ஆக, ‘பரதேசி’ என்னும் சொல்லே பார்ப்பனர் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.
‘ஆர்ய சம்பத்’ பற்றி பாரதி கூறிய பைத்தியக்கார உளறல்களை, இந்த அரவிந்தன் நீலகண்டன் எடுத்துக்காட்டுவதன் மூலம் இவரும் ஒரு பைத்தியம் என்பது உறுதியாகிறது.
ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளான தமிழர்களிடம் பகைமை கொண்டு, தமிழர்களுக்கு எதிராய், தமிழர்கள் தோற்க வேண்டும், அழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவையே வேதங்கள்.
இந்த வேதங்கள் கூறப்படுவதற்கு முன்னமே சிறந்த மொழி வளமும், இலக்கிய வளமும் பெற்று விளங்கியவர்கள் தமிழர்கள். அப்படி தமிழர்களின் ஈடு இணையற்ற திருக்குறள் ஆரிய சம்பத்தாம்! இஸ்லாமியரால் கட்டப்பட்ட தாஜ்மகால் ஆரிய சம்பத்தாம்! இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயில் ஆரிய சம்பத்தாம்! ஆண்டாள் திருமொழியும் ஆரிய சம்பத்தாம்! தமிழர்கள் உருவாக்கிய கலை, கட்டுமானம், சிற்பம் எல்லாம் ஆரிய சம்பத்தாம்! இதைவிட பைத்தியக்கார உளறல் உலகில் வேறு இருக்க முடியுமா? இந்த உளறலைத் தன் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டும் அரவிந்தன் நீலகண்டன் ஆய்வும் எப்படிப்பட்ட பிதற்றல் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
(தொடரும்…)

பாரதியாரும் பார்ப்பனர்களும்என்ற தலைப்பில் குடிஅரசில் தோழர் அ.பொன்னம்பலம் அவர்கள் எழுதியவை. (எதிர்வினை)- (106)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (106)


பாரதியாரும் பார்ப்பனர்களும்
என்ற தலைப்பில் குடிஅரசில் தோழர் அ.பொன்னம்பலம் அவர்கள் எழுதியவை.
நேயன்

‘பாரதியார் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களும் தமிழர்களா? தமிழர்கள் ஏன் பாரதியார் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை?’ என்பதாக பாரதியார் தினக் கொண்டாட்டத்-தன்று கனம் மந்திரி டாக்டர் ராஜன் அவர்கள் பேசும்பொழுது கேட்டாராம். காங்கிரஸ் பார்ப்பனக் கும்பல்கள் கொண்டாடும் கொண்டாட்டங்களிலெல்லாம் தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது கனம் மந்திரியாரின் கபடமற்ற ஆசைபோலும்! காலஞ் சென்ற சுப்பிரமணிய பாரதியார் ஒரு பார்ப்பனர். அவர் உயிரோடிருந்த காலத்தில் அவருக்கு உதவி செய்தவர்கள் மிகச் சிலர். அவர் அடிக்கடி வறுமையால் பீடிக்கப்பட்டு கலக்கமடைந்த காலங்களுண்டு. அடிக்கடி அவருக்கு பணம் உதவும் சில குறிப்பிட்ட நண்பர்களிடமே அவர்உதவி பெற்று குடும்பத்தைக் காப்பாற்றினார். அவருக்கு கஞ்சா, அபின் இல்லாமல் காலம் கடத்துவது பெரிதும் கஷ்டமாகவே இருக்கும்.
கடன்காரர்கட்கு அடிக்கடி தவணை கூறும் சமயங்களில் மட்டும் அவர் நாஸ்திக வெறியடைவ துண்டு. மற்ற சமயங்களில் அவருக்கு மதபக்தி, தேச பக்தி, கடவுள் பக்தி, காளி பக்தி, மாரியம்மன் பக்தி, ஆரியர் மோகம் யாவும் ஒருங்கே ஏற்படும். பாரதியார் மன எழுச்சியுள்ள சமயங்களில் பாடிய பாட்டுகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி அவர் காலத்திற்குப் பிறகே பாரதியார் கீதங்கள் என்ற பெயருடன் சில புத்தகங்கள் வெளியிட்டனர். இப்புத்தக விற்பனைகூட அவரது மனைவி செல்லம்மாள் அவர்களின் குடும்ப உதவிக்காக என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.

பாரதியார் பாட்டு தமிழில் எளிய நடையோடு கூடியது. அவர் பாட்டில் பல உயர்ந்த கருத்துகளுமிருக்கின்றன என்றாலும் ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) மேன்மையைப் பற்றியும் புராண இதிகாச தத்துவங்களைப் பற்றியும், கடவுள் மத நம்பிக்கைகளைப் பற்றியும் அதிகம் பாடியுள்ளார். சிற்சில இடங்களில் பார்ப்பனர்களின் நடவடிக்கைகளை நன்றாகக் கண்டித்துமிருக்கிறார். பாரதியார் பார்ப்பனர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பாடிய சில பாட்டுகள் இப்பொழுது பாரதியார் கீதங்களிலிருந்து மறைந்து வருகின்றன. இதற்கு பார்ப்பனர்களும் பாரதி பிரசுராலயத்தார்களும் பாரதியார் கீதச் சுருக்கத்தில் அப்பாட்டுகள் இல்லாமலிருக்கலாம் என்று சமாதானம் கூறக்கூடும்.
பாரதியார் கீதங்கள் ஒரு மாதிரி கதம்பமாகயிருக்கிறது. பாரதியார் கீதத்தை எல்லாப் பார்ப்பனரும் தங்கள் வீட்டில் வைத்து பூஜிக்கத் தகுந்தது என்று கருதுவதற்கு உண்மையாகவே அதில் பொருளிருக்கின்றது.

பாரதியார் பாடல்கள் தமிழ் இலக்கிய இலக்கணத்தோடு பாடப்பட்டவையல்ல. பாரதியாருக்கிருந்த படிப்புத் திறமையில் அவர் சமூகத்தின்மீதும் இந்து மதம், கடவுள், புராணம், தேசம் இவை மீதும் கொண்ட அளவற்ற அன்பாலும், பக்தியாலும், வறுமையால் பாதிக்கப்பட்டபொழுதும், கஞ்சா, அபின் போதை உணர்ச்சியாலும் மனோ எழுச்சி பெற்றபொழுதும் வீரப் பாடல்களும் காதல் பாடல்களும் காளி பாடல்களும், முத்துமாரி பாடல்களும் அல்லா மீது பாடல்களும் வேள்விப் பாடல்களும் தாய் வணக்கப் பாடல்களும் கொடி வணக்கப் பாடல்களும் எல்லாப் பாடல்களும் பாடிவிட்டுப் போய்விட்டார். இவரை வரகவி, தேசியகவி, தெய்வீகக் கவி என்றெல்லாம் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் புகழ ஆரம்பித்தார்கள்; புகழ்ந்து கொண்டிருக்-கிறார்கள். தமிழ்நாட்டில் தோன்றிய வள்ளுவர், கபிலர், கம்பர், ஒட்டக்கூத்தர், திருமூலர், இளங்கோ, தாயுமானவர், வடலூரார், அருணகிரியார் ஆகியவர்களைப் பற்றியும் அவர்களியற்றிய தமிழ் நூல்களைப் பற்றியும் தென்னாட்டுப் பார்ப்பனர்கட்கு ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட முடியாது. பாரதியாரைக் காட்டிலும் பல கோடி மடங்கு மதிக்கத் தகுந்த தமிழ்ப் பேரறிஞர்கள் தோன்றி மறைந்த இத்தமிழ் நாட்டில் பாரதியார் தினம் கொண்டாட பார்ப்பனக் கும்பல்கள் முன்வருகிறார்கள்.

வள்ளுவர் தினம், கபிலர் தினம், கம்பர் தினம், அவ்வையார் தினம், திருமூலர் தினம் கொண்டாடுவதற்கு எந்தப் பார்ப்பனர்களாவது முன்வந்தார்களா? இனிமேல்தான் முன்வருவார்களா? இவற்றை நாம் எடுத்துக் கூறினால், தென்னாட்டுப் பார்ப்பனர்களும் காங்கிரஸ் பார்ப்பனர்களும் அவர்கள் கூலிகளும் நம்மை வகுப்புத் துவேஷி என்றும், தேசத் துரோகி என்றும் கூறி, கூச்சல் போட ஆரம்பிக்கிறார்கள்.
காலஞ்சென்ற பாரதியார் அவர்களைப் பற்றி காங்கிரஸ் பார்ப்பனர்கள் செய்த விளம்பரம் சொல்ல முடியாததாகும். பாரதியார் பார்ப்பனராய்ப் பிறவாமல் மட்டும் போயிருந்தால் அவர் எவ்வளவு கீதங்கள் பாடிவிட்டுப் போயிருந்தாலும், தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அவர் பெயரை உச்சரிக்கக்கூட முன்வர மாட்டார்கள். இது அனுபவ உண்மையாகும். ஏன்? சரித்திர உண்மையாகும். இந்தப் பாரதியார் பாடல்களை சர்க்கார் பொதுப் பள்ளிக் கூடங்களிலும் பொதுச் சட்ட சபையிலும் தேசிய கீதங்கள் என்கிற பெயரால் பாட வேண்டுமென்று தென்னாட்டுக் காங்கிரஸ் பார்ப்பனர்கள் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.

அவர்கள் அக்கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்துவதற்காகவேதான் பாரதியார் தினம் கொண்டாடுகிறார்கள். பல ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களிலும், பாரதியார் கீதத்தைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்யப்படுகிறது. சில இடங்களில் பாரதியார் பள்ளிக் கூடங்களும், பாரதியார் நிலையங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. பாரதியார் கீத புத்தகம் விலை ரூபாய் ஒன்று என்றாலும் மூன்று ரூபாய் என்றாலும் (அதிக விலை கொடுத்து மடித்துப்போன கதர்வேஷ்டி-யையும் கதர்வேடத்திற்காக தெரிந்தே வாங்குவதுபோல்) பார்ப்பனரல்லாத தேசபக்தர்கள் பாரதியார் கீதப் புத்தகங்கட்கு கேட்ட ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராயிருக்கிறார்கள்.
இவை யாவும் பார்ப்பனர்களின் கட்டுப்-பாடான விளம்பரங்களினால் நடக்கின்றன. மற்றொரு தேசியக்கவி நாமக்கல் தோழர் ராமலிங்கம் பிள்ளை அவர்களிருக்கிறார். இவரைப் பற்றி காங்கிரஸ் பார்ப்பனர்கட்கு நன்கு தெரியும். பார்ப்பனர்கள் விரும்பினால் இவரைக் கருவேப்பிலை மாதிரி உபயோகப் படுத்திக்கொண்டு வேண்டாத பொழுது வெளியில் ஒதுக்கி விடுவார்கள்.

நாமக்கல் தேசியக் கவியார் தினம் கொண்டாட வேண்டுமென்று நாம் கூற வரவில்லை. அவரும் விரும்பமாட்டார் என்பது நமக்குத் தெரியும். நமது நாட்டுப் பார்ப்பனர்-களின் மன உணர்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவே உதாரணமாகக் கூறினேன். கிருஷ்ணஜயந்தி, ராமஜயந்தி கொண்டாடு-வதைப் போன்றே இப்பொழுது ஆரியப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி, திலகர் ஜயந்தி கொண்டாடி வருகிறார்கள். அதைப் பின்பற்றி பாரதியார் தினம் கொண்டாடுகிறார்கள்.
(‘குடிஅரசு’ – 31.10.1937)
ஆக, பெரியார் முதற்கொண்டு பொன்னம்பலனார் வரை, அறிஞர்கள், சிந்தனையாளர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் பாரதியார் பற்றித் திறனாய்வு செய்து கூறிய கருத்துகள் அனைத்தும், நாம் முன்னமே பாரதி பற்றி எழுதிய முடிவுகளோடு நூறு விழுக்காடு ஒத்துப் போவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, பாரதியின் ஆழ்மனத்தில் ஆழப் பதிந்தவை, ஜாதி, வருண வேறுபாடு வேண்டும் என்பதும், சனாதனமே சிறந்த தருமம் என்பதும், பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டு கடமை செய்ய வேண்டியவள் என்பதும், பொதுவுடைமை கூடாது என்பதும், திராவிட இயக்க எதிர்ப்பு என்பதும் ஆகும்.

பொன்னம்பலனாரும், மற்றவர்களும் கூறுவது போல, கஞ்சா மயக்கத்தில், கடன் தொல்லையில், பார்ப்பனர்கள் தனக்கு உதவவில்லை என்ற வெறுப்பில் கூறிய, பாடியவையே பார்ப்பன எதிர்ப்பும், பெண்ணுரிமையும், ஜாதி உயர்வு தாழ்வு இல்லை என்பதும், அவையும் பாரதியால் தொடக்க காலத்தில் கூறப்பட்டவை. பின்னாளில் அவர் முழுக்க முழுக்க சனாதனவாதியாகவே மாறி கருத்துகளைக் கூறினார் என்பதே நாம் இதுவரை உறுதி செய்த உண்மைகள். எனவே, பாரதி ஆர்.எஸ்.எஸ். முன்னோடி என்பது அய்யத்திற்கு இடமில்லா அப்பட்டமான உண்மையாகும்!.

ஞாயிறு, 26 மே, 2024

அய்யப்பன் கோயில் – தெரியாத உண்மைகள்

விடுதலை ஞாயிறு மலர்
Published November 25, 2023

பாணன்

புத்தரை வணங்கிய அரச குடும்ப இளவரசனே அய்யப்பன்

சபரிமலை அய்யப்பன் ஒரு அரசர்.. கடவுள் அல்ல.. அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே. அய்யப்பன் கோயில் – தெரியாத உண்மைகள் பல. கேரளா சபரிமலையில் உள்ள அய்யப்பன், உண்மையில் புராண கதை அல்ல, அது வரலாற்று பூர்வமான- உண்மை. ஆனால் அந்த உண்மை இந்து பக்தர்கள் விரும்பும் உண்மை அல்ல, அய்யப்பன் உண்மையில் இந்து கடவுள் அல்ல, அது ஒரு பவுத்த கோயில், அதை விட வினோதம் என்னவென்றால், அய்யப்பனே புத்தரை வணங்கி வந்த ஒரு அரசகுடும்ப இளவரசன் என்பது தான். இங்கு சொல்லப்பட்டிருப்பது, கற்பனை அல்ல, பந்தள அரசவம்சத்தில் வந்த, கேசரி பாலக்ருஷ்ண பிள்ளை எழுதிய ‘Followers’, மற்றும் ‘ஈழவர் செம்பாட்டு’ என்ற நூல்களில் இருந்து பெரும்பகுதியும், நலன்கல் கிருஷ்ணபிள்ளை மற்றும் டாக்டர்.எஸ்.கே.நாயர் ஆகியோரின் புத்தகங்களிலிருந்தும், ஜம்னாதாஸ் எழுதிய ‘திருப்பதி புத்தர் கோயிலே’ என்ற புத்தகத்திலிருந்தும் சொல்லப்படும் வரலாறே அய்யப்பன். புராண கதைகளை சுருக்கமாக பார்த்தால், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்தவன், கழுத்தில் மணியுடன் காட்டில் குழந்தையாக பந்தள ராஜனால் கண்டெடுக்கப் பட்டு, அவனிடம் வாழ்கிறான் (காது கேளாத வாய்பேச முடியாத குருவின் மகனை குணப்படுத்துகிறான்.)

அய்யப்பனின் உண்மை வரலாறு

(கேரள கிருஸ்த்துவ மதத்தின் தாக்கம்), சின்னம்மாவின் சூழ்ச்சியால் காட்டுக்கு புலிப்பால் கொண்டு வர போகிறான், அங்கே மகிஷியை கொல்கிறான், பின்னர் உதயணன் என்ற கொள்ளையனை கொல்கிறான், பின் சபரி மலையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறான். உண்மையிலேயே நான் படித்த புராண கதைகளில் அந்த கதாசிரியரின் ஒரு தனித்துவ முத்திரை (Author’s Personal Touch) இல்லாத கதை இதுவென்று தான் சொல்வேன். அய்யப்பனின் உண்மை வரலாறு என்னவென்று பார்ப்போம், இதற்கு முன் பாலக்காட்டில் நம்பூத்ரிகள் அந்நாட்டு மன்னனால் விரட்டி அடிக்கப் பட்ட வரலாறில் நாம் கி.பி.1200இல் சடவர்ம  சுந்தரபாண்டியன் மற்றும் சடவர்ம வீரபாண்டியன் இருவருக்கும் ஏற்பட்ட வாரிசு தகராறில் மாலிக்காபூர் (உண்மையில் மாலிக்காபூர் இஸ்லாமிய மதத்தை தழுவிய குசராத்தி பார்ப்பனன்), அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாக வேலை பார்த்து பின்னர் படைதளபதியாக உள்ளே நுழைந்து பஞ்சாயத்து செய்ததை பார்த்தோம். இதில் தோற்று ஓடிய வீரபாண்டியனும் அவனது குழுவும் கேரளா நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

அங்கே பந்தள நாட்டில் கைபுலத்தம்பன் என்ற மன்னன் அவர்களுக்கு அடைக்கலம் தந்தான். கைபுலத்தம்பன் வாரிசு இல்லாமல் இறந்து போக நாயர்கள், தமக்குள் ஏற்பட்ட சண்டையில், யாருக்கும் வேண்டாம், பாண்டியனே  மன்னனாக இருக்கட்டும் என்று அவனுக்கு முடிசூட்டுகின்றனர். கி.பி. 1300-களில், பஞ்சம் காரணமாக பாண்டிய நாட்டிலிருந்து சிறு படை களோடு, கொள்ளையடிக்க கேரள காட்டுப் பகுதிக்கு வருகிறான் உதயணன் என்ற பாண்டிய மறவர் வீரன். இவன் அங்கு தலப்பாரா, இஞ்சிப்பாரா, கரிமலா ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டி  வருவோர் போவோரிடம் கொள்ளை அடித்து வருகிறான். இந்த பாதை, பழங்காலத்திலிருந்தே, கடல் வழியே வரும் அராபிய ராவுத்தர்கள் (இஸ்லாம் வருவதற்கு முன் குதிரை வணிகர்களின் பெயர்), முண்டகாயம், இடுக்கி, பந்தனம்திட்ட பகுதிகளில் வெள்ளாளர்கள் (விவசாய குடிகள்) வியாபாரத்திற்கு பயன் படுத்தி வந்த  பாதையாகும். சபரிமலையில் இருந்த புத்த கோயிலின் பழைய பெயர், அவலயோகிச்வர விகாரம், அங்கே மக்கள் வழி பட்ட தெய்வம் தர்ம சாஸ்தா என்ற அவலயோகிச்வர சிறீபுத்தர்.

உதயணன் பந்தள நாட்டைக் கொள்ளையடித்து இளவரசியைக் கடத்தினான்

சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகளின் பேர்கள் பெரும்பாலும் பள்ளி, காவு என்ற சொல்லை கொண்டிருக்கும் கருநாகப்பள்ளி, பள்ளிக்கால், பரணிக்காவு, புத்தனுர்(போத்தனூர்). சாத்தன், புத்தஞ்சன், சாச்த்தவு போன்ற பெயர்கள் புத்தரை குறிக்கும் சொற்களே. முன்னர் சொல்லப்பட்ட கொள்ளையன் உதயணன், பலமுறை அவலயோகிச்வர விகாரத்தை கொள்ளையடிப்பது வழக்கம், அங்கே அருகே இருந்த அலங்காடு, அம்பலப்புழா என்ற இரண்டு ஊர்மக்கள் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டையில் இருந்தது. உதயணனுக்கு, தன் கொள்ளை வேட்டைக்கு வசதியாக இருந்தது. ஒருமுறை உதயணன், பந்தள நாட்டிக்கு வந்தான், (பந்தளம் – பத்து தளம் – பத்து ஊர்களை கொண்ட ஒரு சிறு நாடு), அவன் வந்த போது நாட்டில், அரசன் மற்றும் முக்கிய வீரர்கள் யாரும் இல்லை. 

வயதான தளபதி காம்பிள்ளில் பணிக்கர் மட்டுமே இருந்தார். வந்த உதயணன் அரசனின் தங்கையான இளவரசியையும் தூக்கி செல்கிறான். அவளை காதலித்து வந்த பணிக்கரின் மகன், உதயணன் கோட்டைக்குள் ரகசியமாக புகுந்து அவளை மீட்கிறான். ஆனால் தப்பித்த இளவரசி நாட்டுக்கு திரும்பினால் தான் ‘புனிதம்’ இல்லாதவள் என்று நம்பூதிரிகள் சொல்லுவார்கள் என சொல்ல இருவரும், பொன்னம்பலமேடு காட்டுப் பகுதிக்குள் சென்று வசிக்கிறார்கள், அவர்களுக்கு அய்யப்பன் என்ற மகன் பிறக்கிறான். இங்கு அவர்களுக்கு பெரிதும் உதவுவது பெரிசெரி பிள்ளை என்ற வேளாளகுல தலைவன், இவரே பின்நாளில் அய்யப்பனின் மாமன் என்று  அழைக்கப்படுகிறார். அய்யப்பன் பிறகு செம்பொறா குருகுலத்தில் களரி பயின்று வருகிறான். பிறகு ஒரு நாள் பந்தள ராஜா, பொன்னம்பலமேடு பகுதியில் வேட்டைக்கு வரும் போது, தன தங்கையை பார்த்துவிட, எனக்கும் வாரிசு இல்லை, என் மருமகன் தான், இனி நாட்டை ஆளவேண்டும் என்று கூறி அழைத்து செல்கிறான்.

ஒருமுறை, காட்டெருமைகளின் தொல்லை அதிகமாக இருக்க, அய்யப்பன் அவற்றை விரட்ட, சிலகாலம் தங்கி வேட்டையாடிய இடமே எரிமேலி (எருமை கொல்லி) பகுதி. இறுதியாக உதயணனை அழித்து, அவலயோகிச்வர விகாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தன் பொறுப்பை நிறைவேற்ற அய்யப்பன் முடிவுசெய்கிறான். உதயணன் இதற்குள் பெரும்  பலத்துடன் வளர்ந்து விட்டதால், தனியாக முடியாது என்று சுற்றி உள்ள மற்ற அரசர்களின் உதவியை நாடுகிறான், முதலில் காயம்குளம் அரசனை நாடுகிறார், அவர் தன மக்கள் கடற்கொள்ளையரால் அவதிப்படுவதாகவும், அவர்களை அடக்கினால், தான் உதவ தயார் என்று கூறுகிறார். காரணவர் என்ற அந்த நாட்டின் படைத்தலைவனின் உதவியோடு, அய்யப்பன் கடற்கொள்ளையரை வெல்கிறான்.

அய்யப்ப பக்தர்களின் சரம்குத்தி பழக்கத்திற்குக் காரணம் என்ன?

அந்த கொள்ளையர் தலைவன் வாவர் என்ற பெயர் கொண்ட இஸ்லாமியன், அய்யப்பன் அவனின் வீரத்தை மெச்சி தன் படைகளுடன் சேர்த்து கொள்கிறான். பின்னர், நட்பு அரசர்கள் படைகளுடன், பந்தள நாட்டின் தலைமை தளபதி கடுத்தநாயர், வில்லன், மல்லன் என்ற இருசிறந்த வீரர்கள் மற்றும் வாவர் ஆகியோரின் தலைமையில் பெரும் படையை சேர்த்துக்கொண்டு உதயணனை அழிக்க புறப்படுகிறான். தன் படைகளை மூன்று பிரிவுகளாக அய்யப்பன் பிரிக்கிறார். 1. வாவரின் தலைமையில் ஆலங்காட்டு யோகம் 2. கடுத்தநாயர் தலைமையில் அம்பலப்புழா யோகம் 3. வில்லன் மல்லன்  தலைமையில் பந்தளநாடு யோகம் என்பவை அவற்றின் பெயர்கள். ஆலங்காட்டு யோகம் மற்றும் அம்பலப்புழா யோகம் படைகள் போரிட்டதையே இன்று பெட்டதுள்ளல் என்ற பழக்கமாக மாறிவிட்டது. சண்டைக்குப் புறப்பட்ட படைகள் அவலயோகிச்வர விகாரத்தை நெருங்கிய போது, அமைதியான கோயிலின் அருகே செல்லும் போது போர்கருவிகளை எடுத்து செல்லக் கூடாது என்று அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே வைத்து விட்டு செல்ல சொல்லப்பட்டது. அதுவே இன்று பக்தர்களின் சரம்குத்தி என்ற பழக்கமாக மாறிவிட்டது.

இம்மூன்று படைகளும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று திசைகளிலிருந்து தாக்க நாலாவது திசையில் அரபிக்கடல் வழிமறிக்க இறுதியாக கொள்ளையன் உதயணன் கொல்லப்படுகிறான். அவலயோகிச்வர விகாரத்தை புனரமைத்து, புதிய அவலயோகிச்வரர் சிலையை நிர்மாணிக்கும் வரை இப்போது சபரி மலையில் மணிமண்டபம் இருக்கும் இடத்தில் அமர்ந்து மேற்பார்வை செய்துவந்தான். பின்னர் தன் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்தான் 1300இல்  நடந்த இந்த வரலாறு எப்போது புராணமாக மாற்றப்பட்டது என சரிவர தெரியவில்லை.

ஆனாலும் சபரி மலை தர்ம சாஸ்தா கோயில் என்பதை அங்கே உள்ள வழக்கங்களை கொண்டு அறியலாம்.

பவுத்த நிகழ்வுகள் அனைத்தும் விஷ்ணு, அய்யப்பன் கதைகளாக மாற்றப்பட்ட கயமைத்தனம்

எடுத்துக்காடாக தர்மம் (அ) தம்மம் என்பது புத்தமத வார்த்தையே, புத்தமத நூலான அமரகோசம் “சத்தா தேவ மனுசானாம்” சாத்தான் என்றால் புத்தர் என்று சொல்கிறது. பழைய புராண நூலான விஷ்ணு புராணத்தில் அய்யப்பனை பற்றிய எந்த குறிப்பும் இல்லை ஆனால், பிற்காலத்தில் எழுதப்பட்ட சிறீமத் பாகவதத்தில் அய்யப்பன் வருகிறார், இதிலிருந்து நாம் அறிவது பிற்காலத்தில் பாகவதத்தில் அய்யப்பன் சேர்க்கப்படிருக்க வேண்டும் அல்லது பாகவதமே 1400-பின் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். அய்யப்பன் கையில் காட்டும் சின் முத்திரையை, உலகில் உள்ள எல்லா புத்தர் சிலைகளிலும் காண முடியும். அய்யப்பனின் ஆயுதங்கள் எல்லாமே போதிசத்துவரின் ஆயுதங்களே.  பிரபல வரலாற்று ஆசிரியர் வானமாமலை கூறுவது என்னவென்றால், புத்தமதம், தமிழ்நாட்டில் அழியவில்லை பவுத்த கதைகள் அனைத்தும் விஷ்ணு கதைகளாக மாற்றப்பட்டுவிட்டன, அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே. இவை எல்லாவற்றையும் கடந்து அய்யப்பன் கோயில் வழி பாட்டில் ஒருவித சமத்துவத்தை காணலாம், எல்லா ஜாதியினரும் தன குழுவுக்கு குருசாமி ஆகலாம், தீவிரமான விரதங்கள், விரதம் இருக்கும் ஒரு பார்ப்பானை காட்டுங்கள் பார்போம். 

பத்மசம்கிதை என்ற வேதபுராண நூல், அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய வேண்டியது பரசவா என்னும் சூத்திரனாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், அதையும் பார்ப்பனர் ஏமாற்றி அவர்களே எடுத்துக் கொண்டார்கள். இதில் மற்றும் ஒரு வேடிக்கை என்னவென்றால், கேரளாவில் இருக்கும் கோயிலில், தலைமுறை தலைமுறையாய் பூஜை செய்பவர்கள் ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு பார்ப்பனர், விஜயநகர பேரரசை கடைசி வம்சமான அரவிடு வம்சத்தினரான நாயக்கர்கள் ஆண்ட போது இந்த அவலயோகிச்வரர் இந்து அய்யப்பனாக மாற்றப்பட்டிருக்கலாம்.

பவுத்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே சபரிமலை அய்யப்பன் கோயில்

இதற்கும் ஒரு கதை உண்டு. பரசுராமன் ஆந்திர தேசத்தில் இருந்து இரண்டு பார்ப்பனரை அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய கூட்டிவந்தான், அவர்களை ஆற்றை கடந்து வர சொன்ன போது, ஒரு பார்ப்பான் தண்ணியின் மீது ஏறி நடந்துவந்தான், அவனை பரசுராமன் தாரைநேன்னிள்ளார் என்றான், அடுத்தவன் ஆற்றுநீரை இரண்டாக பிளந்து நிற்கச்செய்து அடியிலிருந்த மண் தரையில் நடந்து வந்தான் அவனை தாளமண் என்று அழைத்து நீ தான் உயர்ந்தவன். எனவே, நீ தான் அய்யப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றான். அன்று முதல் இன்றுவரை தாளமண் குடும்பத்தினரே அங்கு பூஜை செய்து வருகின்றனர். 1821இல் பந்தளம் ராஜ்ஜியத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் சேர்க்கும்போது, சுமார் 48 கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சேர்க்கப்பட்ட போது சபரி மலையும் சேர்க்கபடுகிறது. பின்னர் இப்போது அங்கிருக்கும் சிலையே 1910இல் தான் நிறுவப்படுகிறது. 1975இல் அங்கிருந்த கோயில் தீக்கிரையாகிறது (அல்லது ஆக்கப்பட்டதா எனத் தெரியாது) அதன் பின் இப்போது நாம் பார்க்கும் வடிவில் கோயில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு அதன் பழைய பவுத்த அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது.

சனி, 18 மே, 2024

புரட்சி வீரர் லெனின் ( 23.4.1870 – 21.1.1924 )

விடுதலை ஞாயிறு மலர்
Published April 6, 2024

மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனை ரஷ்யப் புரட்சி அந்தப் புரட்சியின் நாயகன் லெனின். அவர் பிறந்த நூற்றாண்டு விழா 22.4.1970இல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இச்சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள வோல்கா கரையில் சிம்பிர்ஸ்க் என்னும் நகரில் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி விளதிமிர் இலியிச் லெனின் பிறந்தார். உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர் லெனின் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். ஆனால், மாணவர்களது புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டமைக்காக ஜார் அதிகாரி களால் அவர் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக வகுப்புகளுக்குச் செல்லும் உரிமை அவருக்கு மறுக்கப் பட்டது. வீட்டில் இருந்தே கல்வி கற்று 1891இல் அவர் பல்கலைக்கழகத் தேர்வை எழுதி அதில் சிறந்த முறையில் தேறினார். சட்டத் துறைப் பட்டமும் பெற்றார்.

முதல் புரட்சி
1895இல் அவர் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள தொழிலாளர் மார்க்சிஸ்ட் குருக்கள் அனைத்தையும் ஒரேஸ்தாபனமாகத் திரட்டினார். அதற்கு தொழிலாள வர்க்க விடுதலைக்கான போராட்டம் லீக் என்ற பெயரிடப்பட்டது. ரஷ்யாவின் பிரசித்தி பெற்ற புரட்சிகர தொழிலாளர் கட்சியின் வித்து அதுவேயாகும்.

1895 டிசம்பரில் லெனின் நாடு கடத்தப்பட்டார். 1900 ஜனவரியில் நாட்டை விட்டே வெளியேறி சில காலம் சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் வசித்தார்.
1905 ஜனவரியில் ரஷ்யாவில் முதலாவது பூர்ஷ்வா – ஜனநாயகப் புரட்சி வெடித்தது. போராட்டம் உச்சக் கட்டத்திலிருந்தபோது லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். கட்சியின் எல்லா வேலைகளையும் அவரே நேரடியாக இயக்கினார். புரட்சியை நசுக்குவதில் ஜார் மன்னனின் அதிகாரிகள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் கட்சியின் முடிவின்படி அவர் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறினார்.

2ஆவது புரட்சி
பிப்ரவரியில் இரண்டாவது பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி தொடங்கிற்று தொழிலாளர்கள் விவசாயிகளது தாக்குதலின் கீழ் ஜார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்ந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கம், நாடு, மக்களின் நலன்களைப் புறக்கணித்தது. ரஷ்யாவை அந்நிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாற்ற அந்த அரசாங்கம் முயன்றது.
லெனின் வெளிநாட்டிலிருந்து திரும்பினர். ரஷ்யாவில் பாட்டாளி மக்கள் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான போராட்டத்திற்கு மக்களைத் தட்டி எழுப்பினார். இடைக்கால அரசு லெனினை குறி வைத்தது. எனவே, அவர் தலைமறைவானார்.

அக்டோபர் புரட்சி
ரஷ்யாவில் அக்டோபர் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்றது மனிதகுல வரலாற்றிலேயே முதன் முறையாக அதிகாரம் தொழிலாளர் விவசாயிகள். போர் வீரர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் வசம் வந்தது.
உலகின் முதலாவது சோஷலிச அரசின் முதலாவது அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் லெனின் அமர்ந்தார். அன்றிலிந்து 1924 ஜனவரி 21இல் அவர் இறக்கும் வரை ஒரு ராஜியவாதிக்குரிய மேதாவிலாசத்துடன் அவர் நடந்து கொண்டார்.
ரஷ்யாவில் புதியதொரு சமூகத்தை அமைப்பதற்கு முதற்கண் ஒரு நவீன தொழில்துறையை உருவாக்குவதிலும் சிறிய தனியார் பண்ணைகளைப் பெரிய எந்திர முறைக் கூட்டுப் பண்ணைகளாக்க விவசாயிகளுக்கு உதவுவதும் ஒரு கலாச்சாரப் புரட்சியை நடத்துவதும் அவசியமென லெனின் நம்பினார்.
மெய்யான ஜனநாயகம் சுதந்திரத் தினடிப்படையிலான புதிய சமூகத்தின் அஸ்திவாரம் மனிதன் மனிதனை சுரண்டுவதை ஒழிப்பதும் எல்லாப் பொருளாதாரங்களையும் மக்களின் உடைமையாக மாற்றுவதுமே ஆகும். இதுவே லெனினது போதனைகளின் சாராம்சமாகும்.
(‘விடுதலை’ – 22.4.1970)

ஞாயிறு, 12 மே, 2024

புரட்சி வீரர் லெனின் ( 23.4.1870 – 21.1.1924 )


புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று- 22.04.1870

விடுதலை நாளேடு
Published April 22, 2024

உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை ரஷ்யாவில் ஏற்படுத்தி, இந்தியா உள்பட பல நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கிய புரட்சியாளர் லெனின் பிறந்த நாள் இன்று.

பள்ளிப்புத்தகங்கள் லெனின் வரலாற்றை கட்டாயம் தாங்கி வர வேண்டிய காலகட்டத்தில் இந்த உலகம் உள்ளது.

1. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பேராயுதங்கள் என்பது புரட்சியாளர் லெனினின் புகழ் பெற்ற வாசகம். புத்தகங்களை ஆயுதங்களாக ஏந்தியவர் அவர்.
2. கற்றுக் கொள்ளல், ஒழுங்கமைத்தல், ஒன்று படல், போராடுதல் இவற்றின் மூலம் இளைஞர் சக்தி தம்மையும் தயாரித்துக் கொண்டு, உலகையும் ஒழுங்கமைக்க வேண் டும் என்று இளைஞர்களை செதுக்கியவர் அவர்.
3. 1870 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 இல் பிறந்து, விளாடிமிர் இலியிச் உல்யானவ் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டு, ரஷ்யாவில் ஓடிய லீனா நதியின் பெயரால் லெனின் என அழைக்கப்படலாயினார்.
4.1905ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, ரஷ்யாவில் ஜார் மன்னரின் அரண்மனையை நோக்கி நடந்த தொழிலாளர் கூட்டத்தில், ஓர் ஞாயிறன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொழி லாளர்கள் உயிரிழந்தனர்.
சிவப்பு ஞாயிறு என்று அழைக்கப்பட்ட இந்தப் படுகொலையே 1917ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்த மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு காரணமாயிற்று.
5. சமூகம், அரசியல், பொருளாதாரம், மதம் இவற்றில் அடிப்படை மாற்றங்களை செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், புதுமையான வாழ்வியல் முறைகளோடு, அவற்றிற்கான செயல்களை நடைமுறைப்படுத்துவதே புரட்சி என்றார்.
6. நிலத்தின் மீது உரிமை கொண்டாடும் தனி உடைமை உரிமையை அகற்றினார்.
7. பெரிய பண்ணைகள், தேவாலய நிலங்கள், அரச குடும்ப நிலங்கள் இனி அரசின் சொத்தென அறிவித்தார்.
8. உலகின் மாபெரும் தத்துவமேதை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை முதலில் நடைமுறைப்படுத்திய ஆட்சி லெனி னுடையது.
9. சுரண்டும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான, பாட்டாளி மக்களின் பொதுவுடைமை அரசை நிறுவி, மாபெரும் அக்டோபர் புரட்சியின் விளைவுகள் இன்றுவரை உலகை நிர்மாணிக்கும் சக்தியாக பார்த்துக் கொண்டார், அதனைத் தொடரச் செய்தார்.
10. உலகின் 60 சதவீத வளங்களை, 10% முதலாளித்துவ வர்க்கம் ஏகபோகமாய் ஆளுமை புரியும் இந்த வேளையில், புரட்சி யாளர் லெனின் இன்னும் அதிகமாகவே உலகிற்குத் தேவைப்படுகிறார்.

புரட்சி வீரர் லெனின் ( 23.4.1870 – 21.1.1924 ) விடுதலைஞாயிறு மலர்

Published April 6, 2024

மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனை ரஷ்யப் புரட்சி அந்தப் புரட்சியின் நாயகன் லெனின். அவர் பிறந்த நூற்றாண்டு விழா 22.4.1970இல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இச்சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள வோல்கா கரையில் சிம்பிர்ஸ்க் என்னும் நகரில் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி விளதிமிர் இலியிச் லெனின் பிறந்தார். உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர் லெனின் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். ஆனால், மாணவர்களது புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டமைக்காக ஜார் அதிகாரி களால் அவர் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக வகுப்புகளுக்குச் செல்லும் உரிமை அவருக்கு மறுக்கப் பட்டது. வீட்டில் இருந்தே கல்வி கற்று 1891இல் அவர் பல்கலைக்கழகத் தேர்வை எழுதி அதில் சிறந்த முறையில் தேறினார். சட்டத் துறைப் பட்டமும் பெற்றார்.

முதல் புரட்சி
1895இல் அவர் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள தொழிலாளர் மார்க்சிஸ்ட் குருக்கள் அனைத்தையும் ஒரேஸ்தாபனமாகத் திரட்டினார். அதற்கு தொழிலாள வர்க்க விடுதலைக்கான போராட்டம் லீக் என்ற பெயரிடப்பட்டது. ரஷ்யாவின் பிரசித்தி பெற்ற புரட்சிகர தொழிலாளர் கட்சியின் வித்து அதுவேயாகும்.

1895 டிசம்பரில் லெனின் நாடு கடத்தப்பட்டார். 1900 ஜனவரியில் நாட்டை விட்டே வெளியேறி சில காலம் சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் வசித்தார்.
1905 ஜனவரியில் ரஷ்யாவில் முதலாவது பூர்ஷ்வா – ஜனநாயகப் புரட்சி வெடித்தது. போராட்டம் உச்சக் கட்டத்திலிருந்தபோது லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். கட்சியின் எல்லா வேலைகளையும் அவரே நேரடியாக இயக்கினார். புரட்சியை நசுக்குவதில் ஜார் மன்னனின் அதிகாரிகள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் கட்சியின் முடிவின்படி அவர் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறினார்.

பிப்ரவரியில் இரண்டாவது பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி தொடங்கிற்று தொழிலாளர்கள் விவசாயிகளது தாக்குதலின் கீழ் ஜார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்ந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கம், நாடு, மக்களின் நலன்களைப் புறக்கணித்தது. ரஷ்யாவை அந்நிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாற்ற அந்த அரசாங்கம் முயன்றது.
லெனின் வெளிநாட்டிலிருந்து திரும்பினர். ரஷ்யாவில் பாட்டாளி மக்கள் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான போராட்டத்திற்கு மக்களைத் தட்டி எழுப்பினார். இடைக்கால அரசு லெனினை குறி வைத்தது. எனவே, அவர் தலைமறைவானார்.

அக்டோபர் புரட்சி
ரஷ்யாவில் அக்டோபர் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்றது மனிதகுல வரலாற்றிலேயே முதன் முறையாக அதிகாரம் தொழிலாளர் விவசாயிகள். போர் வீரர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் வசம் வந்தது.
உலகின் முதலாவது சோஷலிச அரசின் முதலாவது அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் லெனின் அமர்ந்தார். அன்றிலிந்து 1924 ஜனவரி 21இல் அவர் இறக்கும் வரை ஒரு ராஜியவாதிக்குரிய மேதாவிலாசத்துடன் அவர் நடந்து கொண்டார்.
ரஷ்யாவில் புதியதொரு சமூகத்தை அமைப்பதற்கு முதற்கண் ஒரு நவீன தொழில்துறையை உருவாக்குவதிலும் சிறிய தனியார் பண்ணைகளைப் பெரிய எந்திர முறைக் கூட்டுப் பண்ணைகளாக்க விவசாயிகளுக்கு உதவுவதும் ஒரு கலாச்சாரப் புரட்சியை நடத்துவதும் அவசியமென லெனின் நம்பினார்.
மெய்யான ஜனநாயகம் சுதந்திரத் தினடிப்படையிலான புதிய சமூகத்தின் அஸ்திவாரம் மனிதன் மனிதனை சுரண்டுவதை ஒழிப்பதும் எல்லாப் பொருளாதாரங்களையும் மக்களின் உடைமையாக மாற்றுவதுமே ஆகும். இதுவே லெனினது போதனைகளின் சாராம்சமாகும்.
(‘விடுதலை’ – 22.4.1970)

கருத்தியல் வல்லுநர் சாமி கைவல்யம் நினைவுநாள் இன்று (22.4.1953)


சுயமரியாதை இயக்கச் சுடரொளிகளின் தொண்டு வரிசை – 1 – கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை நாளேடு
Published April 22, 2024

கருத்தியல் வல்லுநர் சாமி கைவல்யம் நினைவுநாள் இன்று (22.4.1953)

முகவுரை

“புத்தகங்களுக்கு முகவுரை எழுதுவது என்பது புத்தக ஆசிரியரை அறிமுகப்படுத்தவும், அதிலுள்ள விஷயங்களின் மேன்மையை ஒருவாறு சுருக்கமாக எடுத்துக்காட்டவும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்பது எனதபிப்பிராயம்.

அந்த முறையில் முதலாவதான அறிமுகப்படுத்தும் விஷயத்தில், இப்புத்தகத்தில் காணும் கட்டுரைகளை எழுதிய ஆசிரியராகிய தோழர் கைவல்ய சுவாமியாரவர் களைத் தமிழ்நாட்டுக்கு இனி, புதியதாய் ஏதும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த 10 வருஷ காலமாக ‘குடிஅரசு’வில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் மூலமாக அவரைப் பற்றி அறியாதார் யாரும் இருக்க மாட்டார்கள். இரண்டாவது விஷயமான இப்புத்தகத்தில் கண்டுள்ள கட்டுரைகளின் மேன்மையைப் பற்றி எடுத்துக் கூறுவது என்பதிலோ அதற்கும் நான் தகுதி யுடையவனல்ல. ஏனெனில், எந்த விஷயங்களுக்கு யார் முகவுரை எழுதுகிறார்களோ. அவர்கள் அப்புத்தக ஆசிரியருக்கு எவ்வளவு ஞானமும், பயிற்சியும், ஆராய்ச்சியும் இருக்கின்றதோ, அதைவிடச் சற்றாவது அதிகமாகவோ அல்லது கிட்டத்தட்டவோவுள்ள ஞான மும் பயிற்சியும் ஆராய்ச்சியுமுள்ளவர்களே அவ்விஷ யங்களின் மேன்மையை எடுத்துக்காட்ட அருகரா வார்கள். அந்தப்படிப் பார்த்தால் நான் அதற்கு ஒரு சிறிதும் அருகனல்லன் என்பதை மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பின் எந்த நிலையில் நான் இந்தப் புத்தகத்திற்கு ஒரு முகவுரை எழுத முன்வந்தே னென்றால், தோழர் கைவல்ய சுவாமியாரவர்களுடைய சரித்திரச் சுருக்கத்தைப் பற்றிச் சிலருக்குத் தெரியாத சில விஷயங்களையும் இப்புத்தகத்தில் கண்ட விஷயங் களாகிய அவரது கட்டுரைகளை நான் என் ‘குடிஅரசு’ பத்திரிகை மூலம் பிரசுரித்து, பொது ஜனங்களறியும்படிச் செய்து வந்தேன் என்பதையும் எடுத்துக்காட்டுவதற்குச் சிறிது உபயோகித்துக் கொள்ளலாம் என்று கருதியே முகவுரையென்னும் பெயரால் சில வரிகள் எழுத முற்பட்டேன்.

தோழர் கைவல்ய சுவாமியார் அவர்கள், சோழிய வேளாள ஜாதி என்பதைச் சேர்ந்தவர்கள். அவரது முன் னோர்கள் பட்டாளத்தில் இருந்தவர்கள். தந்தையாரும், சகோதரர்களும் சுகஜீவிகளாயும், வேதாந்த விசாரணைப் பாண்டித்தியம் முதலியவைகளில் மிக்க பரிச்சயமுடைய வர்களாகவும் இருந்தவர்கள். தோழர் கைவல்ய சுவாமியார் ஈஸ்வர வருஷம், ஆவணி மாதம், எட்டாந் தேதி மலையாளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர். அவர் தமது அய்ந்தாம் வருஷம் வரை கள்ளிக்கோட்டையிலிருந்து, பிறகு அய்ந்து முதல் பதினோராம் வருஷம் வரை பாலக்காட்டிலும், பதி னொன்று முதல் பதினான்கு வரை மதுரையிலும், பதி னான்கு முதல் பதினெட்டு வரை திருச்சியிலுமிருந்தவர். திருச்சியில் இரண்டாவது பாரம் வரையில் படித்துவிட்டுப் பள்ளிக்கூடம் விட்டு விரக்தியின்மீது கோயமுத்தூர் ஜில்லாவுக்கு வந்துவிட்டார். இந்த நிலை வரையில் அவருடைய பெயர் பொன்னுசாமி என்றும், செல்லப் பெயர் பொன்னு என்பதாகவும் அழைக்கப்பட்டது. இதன்பிறகு இந்தியா முழுவதும் சாமியாராய் யாத்திரை செய்தார்.

இப்படியிருக்கையில், இவருக்கு கைவல்ய சாமியார் என்று பெயர் வந்த விதம் எப்படி என்றால், இவரது சுற்றுப்பிரயாண யாத்திரையில் கரூருக்குச் சென்றிருந்த சமயம் அங்குள்ள மவுனசாமி மடத்திற்குப் போயிருந்தார். அந்த மடத்திலுள்ள சாமியாரிடம் பலர் வேதாந்த விசாரணைக்கு வந்து, பல விஷயங்கள் தெரிந்து போவதில் கைவல்ய நூலைப் பற்றியும் பலர் பேசுவ துண்டு. அப்பொழுது தோழர் கைவல்ய சாமியார் அதில் முக்கியப் பங்கெடுத்துக் கொண்டு சற்று அதிகமான தர்க்கம் புரிவார். அந்தக் காரணத்தால் இவரை இவர் இல்லாத சமயத்தில் அங்கு வந்தவர்களில் ஒருவர், “கைவல்ய சாமியார் எங்கே?” என்று கேட்டார். அந்தச் சமயம் இவரும் அங்குவர, அங்கிருந்த பலர், “இதோ கைவல்ய சாமியார் வந்துவிட்டார்” என்றார்கள். அதுமுதல் அவருக்கு அந்தப் பெயர் வழங்கி வந்ததாகும். எந்தக் காரணத்தாலேயோ அவருக்குத் தர்க்க உணர்ச்சி ஏற்பட்டது முதல், பார்ப்பன மதக் கொள்கைகளை வெறுப்பதும், அது சம்பந்தமான ஆதாரங்களைப் பற்றித் தர்க்கித்து வருவதும் அவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு ஊக்கமுள்ள பழக்கமாகிவிட்டது. அந்தக் காலத்தில் சங்கராச்சாரியார் கோயமுத்தூர் ஜில்லாவில் சுற்றுப்பிர யாணம் செல்லுமிடங்களிலெல்லாம் சென்று அவருக்கு எதிரிடையாகப் பிரசாரம் செய்வதும், அவர் மதக் கொள்கையைக் கண்டிப்பதும் முக்கியமாய் பராசுர ஸ்மிருதிக்கும் மனுதர்ம சாஸ்திரத்திற்கும் விரோதமாகப் பேசுவதுமான வேலைதான், அவர் முதன்முதல் வெளி யிறங்கிப் பிரசாரம் செய்த வேலையாகும்.

இந்த நிலையில் கோயமுத்தூர் ஜில்லாவிலுள்ள பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களும், சற்று எழுத்து வாசனையும் நகரப் பழக்கமுமுள்ள மிராஸ்தாரர்களும் சுவாமியாருக்கு ரொம்பவும் பழக்கம் ஏற்பட்டு, இவரிடம் பேசிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கொரு திருப்தியும் சந்தோஷமும் உண்டாகி, யாரும் வெகு கிராக்கியாய் சுவாமியாரைத் தேடுவதும். கூடவழைத்துக் கொண்டு போவதும், நன்மை தீமைகளுக்கு அழைப்பதுமான நிலைமை ஏற்பட்டது. இதோடு சற்று வைத்தியமும் வைத்திய ஆராய்ச்சியும் நன்றாய்த் தெரிந்திருந்ததனால் சாதாரண மக்களும் சுவாமியாரைத் தேடித் திரிவதாயிற்று. இவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்த ஜில்லாவில் வந்து மிராசுதாரர்களிடம் கவி பாடிக் கவுரவ யாசகம் வாங்கும் பண்டிதர்கள். புலவர்கள், வித்துவான்கள், புராண இதிகாசப் பிரசங்கிகள் முதலியவர்களும் சுவாமி யாரைக் கண்டால் சற்று பயப்பட வேண்டியதாகவும் ஏற்பட்டது. ஏனெனில், ஜில்லாவிலுள்ள எல்லாப் பெரிய மனிதர்களும், மிராசுதாரர்களும் சாமியாரைச் சிநேகிதர் போல் பாவித்து, மிக்க நெருக்கமாகவும், மரியாதை யாகவும் பழகினதால், மேல்படி பண்டிதர்கள் இவர் தயவில்லாவிட்டால் சரியானபடி பிச்சை கிடைக்காதே என்கின்ற பயத்தால், இவருக்கு அதிக மரியாதை செய்வார்கள். புராணப் பிரசங்கங்கள். புராணப் படங்கள் நடக்கும் இடத்திற்கு கைவல்ய சுவாமியார் போய் விட்டால், எல்லோரும் சுவாமியாரையே பார்ப்பார்கள். புராணப் பிரசங்கப் பண்டிதருக்கும் நாக்கில் ஜலம் வற்றிப் போகும்; தொண்டை வறண்டு போகும். இந்த நிலையில் சுவாமியார் தானாகவே மிக்க பிரக்கியாதியாய் விட்டதோடு, தானாகவே மறுபடியும் அநேக சாஸ் திரங்கள் பார்த்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

இது இப்படியிருக்க, அந்தக் காலத்தில் ஈரோட்டில் நம் வீடானது வித்வான்களுக்கும். பாகவதர்களுக்கும் சற்றுத் தாராளமாய் வந்து போகக்கூடியதான வீடாய் இருந்ததாலும் அவர்களை நம் வீட்டார்களும் பிரியமாய் வரவேற்று, சற்று மரியாதை செய்து, பக்தி காட்டுகின்ற வழக்கமாயிருந்ததாலும் நம் வீட்டிலும் நான் அடிக்கடி பல வித்வான்களையும், பாகவதர்களையும் சந்திப்பதும் அவர்களிடம் சற்று வாய்த்துடுக்காய் ஏதாவது பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதுமான ஒரு குணம் நமக்கு எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்டது. நான் எங்கள் கடையில் எனது தகப்பனாருக்கு அடங்கிய காரியஸ்தனாயிருந்தாலும் சாயந்திரமானால் பலருடன் சேர்ந்து அரட்டையடிப்பதும், அந்த அரட்டை முழு வதும் புராணங்களைப் பற்றித் தர்க்கம் பண்ணுவதும் மற்றவர்கள் சிரிப்பதுமாகவேயிருந்தது. இந்தக் கூட்டத் தில் ஒருநாள் கைவல்ய சுவாமியார். அவர்கள், எனக்கும் அவருக்கும் பொதுவான சில நண்பர்களோடு விஜயம் செய்தார். அது 1903ஆம் வருஷம் – அந்தக் காலத்தில் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பே எம்மிருவருக்குள்ளும் தர்க்கமேற்படத் தக்கதாயிருந்தது அந்தத் தர்க்கம் ஒருவருக்கொருவர் அதிருப்தியோடு கலைய வேண்டியதானாலும் பிறகு அடிக்கடி பொது இடங்களில் இருவரும் சந்திக்க ஏற்பட்டதனாலும் ஜாதி மத சாஸ்திர சம்பந்தமான அபிப்பிராய ஒற்றுமையி னாலும் இருவருக்கும் அதிக சிநேகமாகி ஒன்றிரண்டு வருஷங்களுக்குள் ஈரோட்டிற்கு வந்தால், நம் வீட்டிற்கே வரும்படியான நிலைமையும், நெருங்கிய சிநேகமும் ஏற்பட்டு விட்டது.

பிறகு காலம் நேரமில்லாமல் எப்போது பார்த்தாலும் இந்த விஷயங்களிலேயே அதிக நேரம் செலவழிக்க நேர்ந்தது. 15, 20 வருஷத்திற்கு முன் ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக்கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது. அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடளே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப் பானைப் பார்த்து, என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்’ என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையா லேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து, ‘யாரடா சூத்திரன்?” என்று கேட்டார். அப் போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி இன்னும் பல சம்பவங்களில் நாங்கள் கலந்திருந்ததுண்டு.

மற்றும் சுவாமியாரவர்கள் எப்போது பார்த்தாலும் தேர்த் திருவிழா, கோயில் செலவு, விக்கிரக பூசை, சமுதாய் வாழ்க்கையில் உள்ள பல சடங்குகள் ஆகிய இவைகளே இந்த நாட்டுக்குப் பெரும் க்ஷயரோகம் போன்ற வியாதி என்று சதா சொல்லி வருவார் பார்ப்பனியச் சடங்குகளின் புரட்டுகளைச் சிறிதும் தாட்சண்யமில்லாமல் எப்பேர்ப்பட்டவர்களுடனும் தர்க்க ரீதியாய் எடுத்துச் சொல்லிக் கண்டித்து வருவார் – இவ்வளவு செய்தும் இவருக்குப் பொதுமக்களிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவர் தனக்கென்று இடுப்பு வேஷ்டி யைத் தவிர, சாப்பாட்டைத் தவிர, வேறு ஒரு சாதனத்தையும் விரும்பியதுமில்லை வைத்துக் கொண்டிருந்ததுமில்லை ஆதலால், அவரைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற் போயிற்று.
இதுவே அவரைப் பற்றி நமக்குத் தெரிந்த சேதிகளா கும். மற்றப்படி அவர் எழுதி வந்த சாஸ்திர ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களை நாம் வெளிப்படுத்தி வந்ததற்குக் காரணம் என்னவென்றால், நாம் எடுத்துக் கொண்ட முயற்சியில் நம்மால் பேசப்பட்டும். எழுதப் பட்டும் வரும் விஷயங்கள் எல்லாம் சற்று ஏறக்குறைய நமது சொந்த அனுபவமும் பொது பகுத்தறிவுக்குட் பட்டவையுமாகவே இருப்பதால், அவை முழுதும் யுக்தி அனுபவக்காரர்களுக்குப் போதியதாகவோ, அல்லது விவரிக்கக் கூடியதாகவோ இருந்தாலும் வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணங்கள் என்பவைகளைப் பிரமாதமாய் எண்ணிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும், அதில் ஊறிப் பிழைக்கின்ற மக்களுக்கும், அதன் மூலமா கவும் உண்மை வெளியாகட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயே புராண, சாஸ்திர, இதிகாசங்களிலுள்ள விஷயங்களையும் வெளியாக்கி, அந்த முறையிலும் நமது கொள்கைகளை மெய்ப்பிக்க இவற்றை உபயோ கப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசை கொண்டே அவற்றை வெளியிட்டு வந்தோம். சுவாமியார் அவர்களும் அந்தக் கருத்தின்மீதே எழுதி வந்தார்.
இப்போது அவைகளைத் தொகுத்துத் தொகுத்துச் சிறுசிறு புத்தகங்களாக ஆக்கி வெளியிட்டால், பிற்காலத் திற்கு ஒரு ஆதாரமாயிருக்கலாமென்கிற எண்ணத்தின் மீதே தொகுத்துப் புத்தகமாக ஆக்கி, கைவல்யம் அல்லது கலைக்கியானம் (இப்பொழுது கலைக்கியானம் அல்லது கைவல்ய சாமியார் கட்டுரை என்று திருத்தி யிருக்கிறது) என்று பெயர் கொடுத்து வரிசையாய் வெளி யிட உத்தேசித்துள்ளோம். இதில் அவரது பாஷையானது சற்று நீண்ட வாக்கியங்களாயிருக்கலாம். ஆனால், பின்னால் வரவர படிப்பவர்களுக்குச் சுலபமாய் விளங் கும் என்பதோடு, பாஷையும் மிகத் தெளிவாக இருக்கு மென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”

ஈரோடு, ஈ.வெ. ராமசாமி
7.12.1936

(இது 6-1-1931இல் வெளியிட்ட கைவல்யம் அல்லது கலைக்கியானம் என்னும் இப்புத்தகத்தின் முதற்பாகத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் எழுதிய முகவுரையாகும்.)
சாமி கைவல்யம் அவர்கள் சுயமரியாதை இயக்கத் தைத் தந்தை பெரியார் அமைத்தபோது, அதன் சிந்தனை ஊற்றாகவும் பெரியார் என்ற ஜீவநதியில் கலந்த முக்கொம்பு போன்ற மூதறிஞர்களில் முக் கியமானவரும் ஆவார்.

கைவல்யம் அல்லது கலைக்கியனம் என்ற பிரபல தத்துவங்களினைக் கரைத்துக் குடித்து சிக்கலான அதன் தத்துவாதாரத்தை எளிமையாக விளங்கிய காரணத்தால், இவரது இயற் பெயர் மறைந்து கைவல் யமாகவே மக்களால் அறியப்பட்டவர்; அழைக்கப் பட்டவர்.

தந்தை பெரியாருக்கு உள்ள கொள்கைப் பயனாளி – சுயமரியாதை இயக்கத்தை செப்பனிட்ட கட்டட எழிற் கலைஞர்களில் முதற்வரிசைத் தத்துவவாளர்! போதகாசிரியர்!
பச்சை அட்டைக் குடிஅரசின் காலத்தை வென்ற கருத்துப் பேழைகளில் அதன் அணிமணிகளில் முதன்மையானவர்!

ஈரோடு கச்சேரி வீதி ‘குடிஅரசு’ அவலுலகத்தின் முன்புறத் திண்ணையில், நரைத்த தாடியுடன், ஒரு வேட்டி, வெள்ளை ஜிப்பா போன்ற சட்டை- கணக்குப் பிள்ளை கீழே அமர்ந்து எழுதுவதை – ஈரோட்டு பயிற்சிப் பாசறை திராவிட மாணவர்களாகிய நாங்கள் கண்டு மரியாதை செலுத்திய பேறு பெற்றவர்கள்.

பெரியாரைத் துணை கொண்டவர் என்பதுடன் தந்தை பெரியாருக்கும் துணையாக நின்றவர்; வென்றவர்!

1949இல் தந்தை பெரியார் – அன்னை மணியம் மையார் “திருமண ஏற்பாட்டினை”க் குறைக் கூறியவர் களுக்கு இவர் தந்த விளக்கம் ஆணித்தரமானது என்பதுடன் கழக வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்று என்ற தனித் தகுதியைப் பெற்றதுமாகும்!

தளபதி அழகிரி, பூவாளூர் பொன்னம்பலனார், அறிஞர் அண்ணா, பழையக்கோட்டை பட்டயக்காரர் தளபதி அர்ஜூனன், குருசாமி, ஈ.வி.கே.சம்பத், கலைஞர், நாவலர் போன்ற பலரும் அவரிடம் உரையாடிய அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள்.

இந்த ‘சாமியார்’ குடும்ப சாமியார்தான். துறந்து ‘குடிஅரசு’ குருகுலத்தில் கண்காணிப்பாளராக கருத்தளிக்கும் விருந்தாளியாகவும், தமது இறுதிக் காலத்தை முடித்தவர் என்ற தனிப் பெருமைக்குரியவர்.

கோவை – சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள குடும்பத்தில் இவரது அருமை மகன் நம் நினைவிற்குரிய வாதத் திறமைமிக்க நகைச்சுவையாளரான ‘உ.க.’ என்ற உ.கந்தசாமி அவர்கள். திராவிட இயக்க பிரச்சார பீரங்கி திவாகர் கைவல்யம் போன்ற விழுதுகள் உண்டு!
கைவல்யம் அவர்களது பெயரில்தான் திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், முதலில் தொடங்கப் பெற்ற சாமி கைவல்யம் முதியோர் (காப்பு) இல்லம் சிறப்பாக இன்றும் இயங்குகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு துவங்கவிருக்கும் இக்காலகட்டத்தில், கைவல்யத்தின் கலங்கரை வெளிச்சத்தை நினைவூட்டி அவரது அருங்கருத்தியல் திராவிடர் இயக்கப் பாடங்களாக இன்று அனை வருக்கும் வழிகாட்டட்டும். வாழ்க கைவல்யம்!

கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்

இன்று (22.04.1946) திராவிடர் கழகக் கொடி உருவாக்கம்

இன்று பிறந்த நாள் (11.4.1827 – 28.11.1890) இந்தியாவின் மூத்த சமூகப் புரட்சியாளர் ஜோதிராவ் பூலே



விடுதலை நாளேடு
Published April 11, 2024

“கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது;
அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது;
நல்லொழுக்கக் குறைவால், முன்னேற்றம் நின்று போனது;
முன்னேற்றம் நின்றுபோனதால், செல்வம் மறைந்தது;
செல்வக்குறைவினால், சூத்திரர்கள் அழிந்தனர்;
கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும்
ஊற்றெடுக்கின்றன”

– ஜோதி ராவ் பூலே

“Without education, wisdom was lost;
without wisdom, morals were lost;
without morals, development was lost;
without development, wealth was lost;
without wealth, the Shudras were ruined;
so much has happened through lack of education.”

– Jyotirao Phule

இந்தியாவில் கல்வி கற்க வாய்ப்பு இருந்தாலும் சமூகத்தில் படிக்க முடியாது. அப்படியிருந்த சூழலை மாற்றியமைக்க பல ஒப்பற்ற தலைவர்கள் போராடினார்கள். அதில் முதன்மையான தலைவராக ஜோதிராவ் பூலே அவர்களைச் சொல்லலாம். ஏப்ரல் 11 அவரின் பிறந்த நாள்.

ஏதோ ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு நபரிடம் “உங் களை யார் படிக்க வைத்தது” என்று கேட்டால், “என் பெற்றோர்” என்று பதில் வரும் அதைப் பின்னோக்கி! பின் னோக்கி! கேட்டுக் கொண்டே போனால் அந்தந்த குடும்பத் திற்குக் கிடைத்த வாய்ப்பைப் பொறுத்து ஒரு புள்ளிக்கு மேல் பதில் இல்லாமல் நின்று விடும். ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இங்கு நிலவி வந்த கல்வி முறை, வேதக்கல்வி, திண்ணைக்கல்வி முறைகள் என்று ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தினருக்கு மட்டுமே வழங்கி வந்தது.

ஜோதி ராவ் பூலே 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் கோவிந்த்ராவ், சிம்பாய் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ‘சுடர் ஒளி’ என்ற பொருளில் ஜோதி என இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்த சுடர் ஒளிதான் ஒடுக்குமுறை என்னும் இருளினை எதிர்த்து, மாந்தர் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை நீக்கி, அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சும்

கல்வியை அனைத்து மக்களுக்கும் பொதுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பரப்பியது.
இந்திய சமூகத்தில் குரு சிஷ்யன் முறை என்னும் குலக் கல்வி முறையே கல்வியாக இருந்தது. தச்சனின் மகன் தச்சனாக இருக்க வேண்டும் என அக்காலத்தின் நடை முறையைப் போலவே, தோட்டக்காரனின் மகனான ஜோதி ராவ் பூலே பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தோட்டக் காரனாகவே வருவான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோதி ராவ் பூலே மற்றவர்களின் வழியைப் பின்பற்றுபவரல்ல; அவரே ஒரு வழிகாட்டியானார்.மக்களின் நல்வாழ்வும், அவர் களுக்கு ஊழியம் புரியவேண்டுமென்ற உணர்வும் அவரது சிந்தனையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

கல்வி கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்தார். தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றார்; தன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். ஸ்காட்டிஸ் பிரிட்டிஷ் மிஷன் நடத்தி வந்த பள்ளியிலும், புத்வர் அரசுப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். ஜோதி ராவ் பூலே இளமையில் சிவாஜி, ஜார்ஜ் வாசிங்டன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தார். அவர்களின் துணிச்சல், நாட்டுப் பற்று, உயர்ந்த குறிக்கோள் இவரது மனதில் பதிந்தது. தாய் நாட்டின் விடுதலைக்கு அவர்களைப் போலவே ஈடுபடத் தூண்டியது. மேலும், தாமஸ் பெயினின் படைப்பான ‘மனித உரிமைகள்’- என்ற புத்தகம் ஜோதி ராவ் பூலேயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறியாமையில் உழன்று கிடந்த சக குடிமக்களை முன்னேற்றத் துடித்தார். காலம் கடந்துபோன மூட நம்பிக்கைகளுக்கு, அடிமைகளாக இருந்து வந்த அவர்களை எழுச்சிக் கொள்ளத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

அவர் போராட்டத்தை தொடங்கிய காலகட்டம் என்பது பெண் கல்வி என்பது நெருப்பாற்றில் நீந்துவது போல. ஆதிக்க சமூகத்துக்கு மட்டுமே கல்வி என்றாலும் அதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த உரிமை. பெண்களுக்கு கிடையாது என்ற நிலை. ஆனால் அக்கல்வி முறையும் மூட நம்பிக்கையும் பிற்போக்குத் தனங்களையும் உயர்த்திப் பிடிக்கும் கல்வி முறையாகவே இருந்தது. பெண் கல்வியைப் பொறுத்த வரையில் 2000 ஆண்டு வரலாறு என்று எடுத்துப் பேசினால் மிகையாகத் தெரிந்தால், 18ஆம் நூற்றாண்டை எடுத்துக் கொண்டாலே அது பெண் பிள்ளை நரபலிகள், உடன்கட்டை ஏறுதல், இளம் வயதில் விதவை என்ற நிலையே இருந்தது.

1832ஆம் ஆண்டு ஆங்கில கல்வி முறை வந்தது. அதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 400 பேர் கொண்ட கிராமத்தில் 18 ஆண்கள் கல்வி கற்றனர் என்று புள்ளி விவரம் சொன்னது. அதிலும் ஒருவர்கூட பெண்கள் கிடையாது. இந்து குலக்கல்வியின் தாக்கமும் , இஸ்லாமிய மதராசக்களின் தாக்கமும் ஆங்கில கல்வி முறை வந்த பின்னரும் பெண் களை இரும்புச் சங்கிலி போட்டு வீட்டில் அடைத்தது. ஆனால் அந்த அடிமை சங்கிலியை தனது மனைவிக்குக் கல்வி போதித்து – உடைத்தெறிந்தார் ஜோதிராவ் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆனார் `சாவித்திரிபாய் பூலே”.

தான் பெற்ற கல்வியின் பயன் அது எதற்குப் பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத் தான் இருக்கிறது. அதை இந்த இணையர் உணர்ந்து பள்ளிக்கூடங்களைத் தொடங்கினர். ஆனால், இந்த சமூகம் அவர் ஆசிரியை பணியை நிம்மதி யாகச் செய்துவிட அனுமதிக்கவில்லை. அவர் காலைப் பொழுதில் பள்ளிக்கு நடந்து வருகையில் சாணியை, அழுகிய முட்டையை, மனித மலத்தைக் கரைத்து ஊற்றியது. அதற்காக ஒரு மாற்றுச் சேலையை எப்போதும் வைத்திருந்தார். பள்ளி வந்தவுடன் அதை மாற்றி தனது பணியைத் தினமும் தொடர்ந்து கொண்டு இருந்தார்.இந்த எல்லா சூழ்நிலைகளிலும் உற்ற துணையாக நின்றவர் மகாத்மா பூலே.

நெருப்பாற்றைச் சற்றே நீந்திக் கடந்தவர்கள் 200 பள்ளிகளைத் திறந்தனர். `balhatya pratibandhak எனக் கைவிடப்பட்ட பெண்களுக்காக இல்லம் ஒன்றையும் நடத் தினார். பெண் சிசுக்கொலைக்கு எதிராக இல்லம் தொடங்கி அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள் .1882ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்து களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, `ஸ்திரீ புருஷ் துலானா’ என்பதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே தலைவர் ஜோதி ராவ் பூலே ஆவார்.

ஆதிக்க ஜாதி ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காகவும், இளம் வயதில் வயதானவர்களுக்கு மணமுடிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்காகவும் தனியாக பள்ளியைத் தொடங்கினார். ஏட்டுக்கல்வியை தாண்டி கைவினைப் பொருட்கள், ஓவியம், தையல் என்று பன்முகத் திறமைகளை கற்றுத்தந்தார். இதைப் பொறுத்து கொள்ள முடியாமல் பல பொய் வழக்குகள் அவர் மேல் தொடரப்பட்டது. அதை தன் மனைவி சாவித்திரி பாய் பூலேயோடு இணைந்து வென்றெடுத்தார்.

“எல்லோரும் சமம்” என்ற அண்ணல் அம்பேத்கருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினார். ஒரு பெண்ணாக இன்று பொறியாளராகவோ , மருத்துவராகவோ, ஏதோ ஒரு துறை யில் படித்து முன்னுக்கு வந்த பெண்ணாக நீங்கள் இருக் கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் ஜோதிராவ் பூலே . பஞ்மர்களுக்கும் கீழானவள் பெண் என்னும் நிலை இருந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக போராடி கல்வி பயின்று, பள்ளி தொடங்கி, தனது வாழ்நாளயே அர்ப்பணித்த ஜோதிராவ் பூலே – இருளை விலக்கி அறிவாயுதம் ஏந்த வைத்த பேரொளி!