பக்கங்கள்

திங்கள், 24 அக்டோபர், 2022

மதமாற்றத்தை எதிர்த்த பாரதி! (88)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (88) மதமாற்றத்தை எதிர்த்த பாரதி!

நவம்பர் 16-30,2021

நேயன்

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதை பாரதி வன்மையாகக் கண்டித்தார். மற்ற மதங்களை வெறுத்ததோடு, இந்துக்கள் மதம் மாறுவதையும் கண்டித்த பாரதி மதவெறியின் உச்சத்திற்கே சென்று, இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கூறினார்.

“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது…

ஆம். ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்-கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்’’ என்றார்.

மற்ற மதங்களை வெறுத்த பாரதி இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றார். இந்து மதவெறி கொண்டு கருத்து-களைக் கூறினார்.

“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப் பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்த-தென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.’’

“இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.

“வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராமணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்.

வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்-தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்’’ என்றார்.

மேலும், இந்துமதம் ஜாதியைக் காக்கின்ற மதமாக இருந்தாலும் அந்த மதத்தால் பல கேடுகள் வந்தாலும், அது ஏழ்மைக்கும் வறுமைக்கும் காரணமாய் அமைந்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்து மதத்தையும் அதன் சாஸ்திரங்களையும் நாம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் அழிந்தே போவோம் என்கிறார்.

“ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்-களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தைக் கவனியாமல் அசிரத்தையாக இருப்போ-மேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை’’ என்கிறார் பாரதியார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார்.

“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம்…. சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில் தான் பாரதி இதை எழுதியுள்ளார்).

இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்-கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்-களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.’’

சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம், மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இராம கோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஒன்று பட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்

மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்’’ என்கிறார் பாரதியார்.

(தொடரும்…)

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ் (90)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

டிசம்பர் 16-31,2021

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ்

நேயன்

பசுவதைத் தடைச் சட்டம் என்று இன்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி, வன்முறையில் ஈடுபடுவதை, ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்-படுவதற்கு முன்னரே கூறியவர் பாரதி.

1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளார் கீழ்க்கண்டவாறு:

“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும் யாகசாலையையும் கோவிலையும் நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை விபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே விபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும் யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியே-தான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்துமாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்.

இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள் என்று எழுதியுள்ளார் பாரதி.

கிறித்துவப் பள்ளிகளில் இந்துப் பிள்ளை-களைச் சேர்க்கக் கூடாது என்று இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துவதை, 18.8.1906ஆம் ஆண்டிலேயே பாரதி ‘இந்தியா ஏட்டில்’ தலையங்கம் எழுதியுள்ளார். அப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இந்துக் கடவுள் பற்றிக் கூற மாட்டார்கள். அதனால் இந்துப் பிள்ளை-களுக்கு இந்துக் கடவுள் பற்றித் தெரியாமல் போகிறது.

அதனால் அவர்களுக்குத் தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளார்.

பாரதியார் கிறித்துவர்களைத் தேசபக்தி அற்றவர்கள், இந்த மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று 1906இல் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்துபோய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு-கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரிகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.

இதைப் போன்று 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவில் மொழிப் பிரச்சினை தீர ஒரே வழி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்கின்றனர்.

இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமஸ்கிருதம்தான் வரவேண்டும் என்று 1920 இலேயே எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமஸ்கிருதம் மட்டும்தான் (தேவ பாஷை) தெய்வமொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார்.

பாரதி, இன்னும் தீவிரமாக ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப் படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி.’’

பாரதி அகண்ட பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர். பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்கிறார்:

“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம், ஜாதி பேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், என்று கூறும் பாரதி,

பாப்பா பாட்டில் கூட,

“சேதமில்லாத இந்துஸ்தானம் -_ அதை

தெய்வமென்று கும்பிடடி பாப்பா’’

என்று பாப்பா பாட்டில் கூறியுள்ளார் பாரதி.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன் கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார்.

செத்துப்போன காஞ்சி பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரலில், உடன்கட்டை ஏறுதலை மிகவும் போற்றி எழுதியுள்ளார். அந்த நெருப்பு சுடாது, சந்தனம்போல் குளிர்ச்சியாய் இருக்கும், புடவைகூட எரியாது என்றும், அவ்வாறு உடன்கட்டை ஏறும் பெண்கள் உத்ததமிகள் என்று எழுதியுள்ளார்.

இதே கருத்தை அன்றைக்கே பாரதி எழுதியுள்ளார், என்பதிலிருந்து அனைத்து சனாதன செயல்பாடுகளுக்கும் பாரதி முன்னோடி என்பது விளங்குகிறது.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின், இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும், கிறித்துவரும் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்துவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. முகமதியர்களும், கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும் என்று தனது இந்து மத வெறியை வெளிப்படுத்திய பாரதி மற்ற மதங்களின் மீது வெறுப்பைக் கக்கினார் என்று உறுதியாகிறது.

(தொடரும்…)

ஆர்.எஸ்.எஸ் கருத்தை அன்றே கூறிய பாரதி - (89)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (89)

டிசம்பர் 1-15,2021

ஆர்.எஸ்.எஸ் கருத்தை அன்றே கூறிய பாரதி

நேயன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்-கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர். எஸ். எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

இந்தியாவிற்குப் பாரத தேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார்.

“பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்திய படியால் இந்நாட்டிற்கு பாரத தேசம் என்ற பெயர் உண்டாயிற்று.’’

இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தப் பெயர்தான் வேண்டும் என்கின்றனர்.

பாரதியார் கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காணமுடிகிறது.

ஆங்கிலேயர் வருவதற்குமுன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மத மாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது:

“திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்-களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்-கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்’’ என்கிறார் பாரதியார்.

ஆனால் உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்புசுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. திப்புவின் ஆட்சியில் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக் கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரி-யாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு, சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791 இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது.

“There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras.’’

இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க, சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாள்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார்.  இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல், பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தியிருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது.

பறையர்களின் பேரில் பாரதி இரக்கங் காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விடுகிறார்கள் என்ற எண்ணத்தில் தான் “1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்த போது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”

.. எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்-களையும், முக்கியமாகத் திக்கற்ற குழந்தை-களையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள் ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதி பயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது.

மடாதிபதிகளும், ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம் நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள்.

ஜாதிக் கொடுமையினால் ஒடுக்கப்-பட்டவர்கள் அதிக அளவில் மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பான் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார். கிழச்சாம்பான் சொல்லுகிறார், “ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொரு-வனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.’’

பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார்.

(தொடரும்…)

பெரியார் என்றால் பதறுவது ஏன்?

 

சிந்தனைக் களம் : பெரியார் என்றால் பதறுவது ஏன்?

நவம்பர் 16-30,2021

கி.தளபதிராஜ்

இந்து சமய அறநிலையத் துறையால் கொளத்தூரில் தொடங்கப்பட்டிருக்கும் கல்லூரி பணி நியமனம் தொடர்பாக அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் 16.10.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில், “1928க்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லிம் மாணவர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது. அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சிதான் மாற்றியது. காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து. அவரது அறக்கட்டளை மூலம் நடத்தப்-படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டு காலம் இருந்ததை தந்தை பெரியார் _- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது” என்று குறிப்பிட்டிருந்தார். மேற்படி அறிக்கை குறித்து ‘தமிழ் இந்து’ நாளிதழில் ம.வெங்கடேசன் என்பவர் அக்டோபர், 22ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்-கள் சேர்த்துகொள்ளப்பட்ட நிகழ்வு _- பட்டியல் சமூகத் தலைவர்களின் போராட்ட வெற்றியின் குறியீடு. அதை மறைத்து பெரியார் கணக்கில் அந்தப் புகழைச் சேர்க்கப் பார்ப்பது நியாயம் இல்லை என்று கொந்தளித்திருக்கிறார். பெரியார் மீது ஏன் இந்த வெறுப்போ தெரியவில்லை.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்-களைச் சேர்க்க முடியாது என்று பல ஆண்டு காலம் இருந்ததை தந்தை பெரியார் -_ சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது என்று தான் ஆசிரியர் வீரமணி அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அது தானே உண்மை!

1917ஆம் ஆண்டிலேயே சேலத்தில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் “பஞ்சமர் சமுதாய மாணவர்களுக்கு இலவசக் கல்வி தரவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி.

1919இல் நடைபெற்ற தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் நிறைவேற்றப்-பட்ட “பார்ப்பனரல்லாதாரால் முழுமையாக நிர்வகிக்கத் தக்கதானதும், பார்ப்பனரல்லாத மாணவர்களின் சிறப்பு நலன் கருதுவதுமான மாணவர் விடுதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள் மாகாணத்தின் பல இடங்களிலும் திறக்கப்படவேண்டும்” என்ற  தீர்மானம்தான் 3.2.1919 நாளிட்ட கடிதமாக அரசுக்கு அனுப்பப்பட, அது கவர்னரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, 17.3.1919இல் அரசாங்கப் பொதுப்பள்ளிகளில் பஞ்சமர்களைச் சேர்த்துக்கொள்வது பற்றி ஒரு நீண்ட ஆணையை அரசு வெளியிடக் காரணமாக அமைந்தது.

“அக்ரஹாரத்திலும், சாவடிகளிலும், கோவில்களிலும் உள்ள பள்ளிகளை  எல்லா ஜாதியினரும் அணுகக் கூடிய வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். பள்ளிக்கு வாடகைக்கு இடம் தருபவர்கள் பஞ்சமர் பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கூறினால் அவ்விடத்தில் உள்ள பள்ளிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். எல்லா ஜாதியாரும் அணுகக் கூடிய இடத்தில் பள்ளி உள்ளது என சான்றிதழ் அளிக்கப்பட்டாலொழிய,  பொதுப் பணத்தில் பள்ளிகள் கட்டப்படக்கூடாது.” என்றெல்லாம் பல்வேறு வரைமுறைகளை வகுத்திருந்தது அந்த ஆணை. அத்துடன் பாடிசன் கீழ் பணியாற்றும் பல துணை கலெக்டர்களால் தாழ்த்தப்-பட்டவர்களுக்கென பல பள்ளிகளும் திறக்கப்பட்டன.

19.11.1919 அன்று நடைபெற்ற லெஜிஸ்லேடிவ் கவுன்சில் கூட்டத்தில் எம்.சி.ராஜா, பஞ்சமர் மாணவர்களைச் சேர்க்காத அரசு உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலை அரசு அறிவிக்கக் கோரியபோது முழுமையான பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்று கூறி சென்னை பச்சையப்பன் கல்லூரி, கள்ளிக்கோட்டை ஜாமரின் கல்லூரி, திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளி போன்றவற்றை சான்றாக அரசு அறிவித்தது.

(1920 நவம்பரில் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றவர் எம்.சி.ராஜா. அப்போதைய சட்டசபைக்கு நீதிகட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்-பட்டார். சென்னை மாகாண சட்ட-மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட சமூக உறுப்பினர் எம்.சி.ராஜா.

1919ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அணுக முடியாத இடங்களிலுள்ள பள்ளிகளை இத்தகைய தடைகள் இல்லாத கட்டடங்களுக்கு மாற்றவேண்டுமென அரசு வெளியிட்டிருந்த ஆணையைப் பின்பற்றி நகராட்சிகளும், ஜில்லா போர்டுகளும் எடுத்த நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக அளிக்கும்படி ஆணை பிறப்பித்திருந்தது நீதிக்கட்சி.

கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்றுவந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எண்ணிகையை பல மடங்காக உயர்த்தி 1923இல் ஆணையிட்டது நீதிக்கட்சி.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்து 17.10.1922இல் ஆணை பிறப்பித்ததும் நீதிக்கட்சியே.

காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார், தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். 1925ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

“பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைவிட தீண்டப்-படாத சமூகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்து சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ முன்னேறவே இல்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச் சமூகங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கப்-பட்டிருக்கு-மேயானால் இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும், பிராமணக் கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?” என்று கேட்டார். (‘குடிஅரசு’ – 8.11.1925)

மேலும் “தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடமையாகும். ஏனெனில் தீண்டாதார்களின் முன்னேற்றம்தான் பிராமணரல்லாதார் முன்னேற்றமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலம்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும்.” என்று எழுதினார். (‘குடிஅரசு’ – 15.11.1925)

பச்சையப்பன் கல்லூரியில் பார்ப்பனர் ஆதிக்கம் தலைதூக்குவதை அறிந்த பெரியார் அங்கு பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன சமையல்காரரை எதிர்த்து பார்ப்பனரல்லாத ஒருவரை சமையல்காரராக நிறுவிடச் செய்ததை தனது ‘குடிஅரசு’ இதழில் எழுதினார். அதனைத் தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் போராடி பார்ப்பனரல்லாத ஒருவரை சமையல்காரராக நிறுவவே அதனை வரவேற்று, எல்லா பாடசாலைகளிலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். (‘குடிஅரசு’ 6.3.1927)

சுயமரியாதை இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த இந்த காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியின் தமிழக வருகைச் செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

பச்சையப்பன் கல்லூரியில் 7.9.1927 அன்று பேசிய காந்தி, ‘பச்சையப்பன் கல்வி நிறுவனங்-களில் பஞ்சமர்கள் மற்றும் முஸ்லிம்களை அனுமதிக்க வேண்டும்’ என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர்-களுக்கு வேண்டுகோள் விடுக்க, காந்தி பேசிய பிறகு, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தனது நன்றியுரையில், ‘கல்லூரியை அனைத்துத் தரப்பு இந்தியர்களும் சேர்ந்து பயிலத்தக்கதாக மாற்ற முயற்சிப்பதாக’ கூறினார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ம.வெங்கடேசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியை அங்கு அப்படி பேசவைத்த காலச் சூழலைப் பற்றியும் நாம் சற்று அறிந்துகொள்ள வேண்டும். தமிழகம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மைசூர் சென்ற காந்தி வர்ணாசிரம தர்மம் பிறவியிலேயே ஏற்பட்டது என்றுதான் பேசினார். இப்படி அவர் தொடர்ந்து பேசி வந்ததை அறிந்த பெரியார் காந்தியின் தமிழக வருகை பற்றி “குடிஅரசு’ ஏட்டில் தலையங்கம் எழுதினார்.

“சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வரப்போகிறார். தீண்டாமை பற்றிப் பேசும்போது அவரது வழக்கப்படியேதான் பேசித் தீருவார். அதன் மூலம் நமது எதிரிகளுக்கு அதிகமான பலம் ஏற்பட்டு நமது முயற்சியை ஒழிக்க அதை அவர்கள் உபயோகப்படுத்திகொள்வார்கள். அதை இப்போதே நாம் வெளிப்படுத்திவிடுவது மேலானதென்று கருதுகிறோம். அதாவது, மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொன்னது போலவே நமது சமூக வாழ்வில் வர்ணாசிரம தர்மம் உண்டு என்றும், அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லி வருகிறார்.

சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப்பற்றிப் பேசும்போதும், “இந்த சமூகத்தில் வர்ணாசிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும், அந்தந்த வருணத்தார் அந்தந்த தருமத்தைச் செய்யும்-போது அவரவர் அம்மட்டில் உயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும்போது உயர்ந்தவனாகிறது போலவே மற்ற வர்ணத்தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான்’’ என்பதாகப் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்குக் காரணங்களாகச் சொல்லி வருகிறார்கள்.

தீண்டாமை விஷயத்தில் மகாத்மாவுக்கு உள்ள குழப்பத்தைக் காண்பித்து, அவரும் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டவரே அல்லாமல் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவராகப் புலப்படவில்லை என்பதைக் காட்டுவதற்கே எழுதுகிறோமே அல்லாமல் அவர் மீது குறை கூறுவதற்காக அல்ல .”  என்று எழுதினார். (‘குடிஅரசு’ – 7.8.1927)

பெரியார், காந்தியின் வர்ணாசிரமக் கொள்கையை விமர்சித்து எழுதிய கட்டுரை தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. இது குறித்து பெரியாரும் எஸ்.இராமநாதனும் காந்தியை நேரிலும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள்.  இந்தியாவின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் காங்கிரஸ், இந்துமதம், பார்ப்பன ஆதிக்கம் மூன்றையும் ஒழிக்க வேண்டும் என்று காந்தியிடம் சொன்னதாக பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். மேற்படி பெரியார் சந்திப்பின் விளைவால் மைசூரில் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பேசிய காந்தி, பச்சையப்பன் கல்லூரியில் அப்படி பேசியிருக்கக் கூடும். எப்படியாயினும் காந்தியின் பேச்சு வரவேற்கக் கூடியதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே நேரத்தில் மன்னார்குடியில் பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட தேசிய உயர்நிலைப் பள்ளிக்கு காந்தி சென்றபோது அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் இங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்டபோது, அப்படி யாரும் இங்கே படிக்கவில்லை என அந்தப் பார்ப்பனர் இறுமாப்புடன் பதிலளித்ததையும் அறிவோம்.

1927இல் இக்கல்லூரியின் பழைய மாணவர்களான எஸ்.துரைசாமி அய்யர், கே.வெங்கடாஸ்வாமி நாயுடு, என்.கிருஷ்ணமாச்சாரி ஆகிய மூவரும் ‘ஆதிதிராவிடர்களும் இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாகையால், பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவர்களை அனுமதிப்பதற்கு ஏற்ப அறக்கட்டளை விதிகளை மாற்றியமைக்குமாறு’ சென்னை உயர் நீதி-மன்றத்தை அணுகினார்கள். மனுவில் இருந்த சில பிழை-களால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் சொல்வதுபோல ஆதிதிராவிடர்களை ஏன் சேர்க்கக் கூடாது எனக் கேட்டது உயர் நீதிமன்றம். பிறகு, அறங்காவலர்கள் ஆதிதிராவிடர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதன்படி, 1927இல்தான் ஆதிதிராவிட மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டனர். என்று அந்தப் பிரச்சனைக்கு மங்களம் பாடி முடித்துவிட்டார் கட்டுரையாளர். பிரச்சனை அத்துடன் முடிந்து விடவில்லை.

1927இல் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ந.சிவராஜ் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது மேலும் ஒரு வழக்கு தொடந்ததன் விளைவே அறங்காவலர்கள் கூடி தாழ்த்தப்பட்டவர்களை தங்கள் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்தனர் என்ற செய்தியையும் காண்கிறோம். ஏனோ வசதியாக சிவராஜை அவர் மறைத்துவிட்டார்.

தீர்ப்பு வந்த பிறகும் அறக்கட்டளையினர் கூடி உனடியாக தாழ்த்தப்பட்டோரை கல்லூரியில் சேர்ப்பதற்கு முடிவெடுக்க இயலவில்லை. ஆறு டிரஸ்டிகளில் பார்ப்பனராக இருந்த ஒருவர் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

1927 அக்டோபர் 22, 23 தேதிகளில் சென்னையில் பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி (முதலியார்), தந்தை பெரியார் உள்ளிட்ட நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாட்டில் “பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை கல்லூரியின் அறங்காவலர்களுக்கு இந்த மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்களைச் சேர்க்காமல் ஒதுக்குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்பதாகும். இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்று செயல்படத் தவறினால் அக் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.

பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் தொடர்ந்து எழுதினார், “ஆதி திராவிடர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று அய்க்கோர்ட் தீர்ப்பு சொன்னதின் பலனாக பச்சையப்பன் கலாசாலையில் அவர்களைச் சேர்த்துகொள்ள தர்மகர்த்தாக்களில் பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்-கிறார்களாம். பச்சையப்பன் டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பனர் இருப்பதாகத் தெரியவருவதுடன், அந்த ஒரு பார்ப்பனரும் ஆதி திராவிடர்கள் இந்துக்களானாலும் அவர்களை கலாசாலையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அபிப்பிராயம் கூறி இருப்பதாகவும் காணப்-படுகிறது.” என்று எழுதி அந்தப் பூனைக்-குட்டியை இழுத்து சந்தியில் விட்டார்.

மேலும், “ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்துவர்-களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள், இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது.

ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்துக் கோவிலுக்குள் போகக்கூடாது என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்”.  என்று கல்லூரி நிருவாகத்தை கடுமையாகச் சாடினார். (‘குடிஅரசு’ – 27.11.1927)

அடிப்பவர் அடித்தால் தான் அம்மியும் நகரும் என்பது போல் கல்லூரி நிருவாகத்தில் ஊடுருவியிருந்த பார்ப்பன நாகம் தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. இதைத்தான் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் _- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் தாக்கம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பெரியார் என்றாலே சிலருக்கு எட்டிக்காயாய்க் கசப்பது ஏன்?

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ‘சென்னை பச்சையப்பன் கலாசாலை டிரஸ்டிகள் ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொண்டதோடு, அவர்களையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கு இம்மாநாடு மகிழ்கின்றது’ (‘குடிஅரசு’ – 11.12.1927) என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டும் சுட்டிக்காட்டும் வெங்கடேசன், பச்சையப்பன் அறக்கட்டளையில் ஆதிதிராவிடர் சேர்க்கப்-படுவதற்குத் தடையாயிருந்த திரு.வெங்கடேச சாஸ்திரலு பார்ப்பனரை அந்த தீர்மானம் கண்டித்ததையும் மறைத்துவிட்டார்.

பாரதியின் பிற மத வெறுப்பு (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (87)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (87)

நவம்பர் 1-15,2021

பாரதியின் பிற மத வெறுப்பு

நேயன்

“இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும்பாடு சொல்லுந்தரமன்று. அதோ பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவேயிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன ஒற்றுமை இல்லை என்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவருக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவருக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறார். குலாப்பிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை’’ என்ற  கற்பனைச் சித்திரத்தை 25.5.1920இல் எழுதினார்.

இதை ஓர் உண்மைச் சம்பவம் போலவே பாரதி எழுதியிருக்கவே, ஓர் இசுலாமியர் அதைப் படித்துவிட்டு, பாரதியிடம் வந்து, ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாக நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?’’ என்றார். “வெறும் கற்பனை’’ என்று நான் சொன்னேன். “என்ன கருத்துடன் எழுதினீர்’’ என்று கேட்டார் வந்தவர்.

இந்த ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதனின்றும் அவனுக்குக் கஷ்டம்தான் விளையும் என்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும் என்றேன். அப்போது அந்த முஸ்லிம் நண்பர் (‘அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது’ என்றார். ‘என்ன பிழை?’ என்று கேட்டேன். அக்கதையில் ஒரு முகமதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண் (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக் கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை என்று அந்த முகமதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான்: ‘சரிதான். எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாதலால் அதுபோல் முஹம்மதியர் களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதிவிட்டேன்.

எனவே, அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தாரென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தாரென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதி விடுகிறேன் என்றேன்’ என்று பாரதி எழுதியுள்ளார். தன்னிடம் வந்தவரிடம் பாரதி, ‘உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய கோஷா வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?’ என்று கேட்டார்.

அந்த முகமதிய நண்பர்: ‘முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப் போய்விட்டது. பிறகு முகமது நபி அதை மீளவும் விதியாக்கினார்’ என்றார்.

‘அதிலே திருத்தங்கள் செய்யக் கூடாதா?’ என்று பாரதி கேட்க, அந்த முஸ்லிம் நண்பர், ‘கூடாது. ஏனென்றால் முகமதுதான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை’ என்றார்.

பாரதியார்: தென்ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லிம் (ராவுத்தர்)களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! என்று கேட்டார். இப்படிப் பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே சென்றது. பாரதி கடைசியாகத் துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரமாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும், ‘கோஷா’ வழக்கத்தை ஒழித்து விட்டு, கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைவதையும் கூறினார். வந்த முஸ்லிம் எனக்குத் தெரியாது என்று கூறிச் சென்று விட்டார்.

பாரதியார் அல்லாவைப் பற்றிப் பாடல் பாடியுள்ளாரே, அவரை எப்படி நீங்கள் குறை சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். 20.6.1920இல் பாரதி கடயத்தில் இருந்தபோது சில இசுலாமியர்கள் பாரதியை அழைத்து பொட்டல் புதூரில் இசுலாம் மார்க்கம் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தக் கூறினார்கள். அப்போதுதான் பாரதியார் அல்லா, அல்லா என்ற பாடலைப் பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் பேசி முடிக்கும் தறுவாயில், நபிகள் ஏன் ஏசு நாதனை ஒரு மகானாக, கடவுளின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் வந்தார்.

இசுலாமியர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்பது பாரதியின் கருத்து. இதை ‘இந்தியா’ ஏட்டில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு பாரதி விளக்கியுள்ளார். மே 1, 1909இல் இப்படம் வெளியிடப்பட்டது. (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார், பக்கம் 80-83)

அதேபோல் கிறித்துவ மதத்தையும், பாதிரியார்களையும் கடுமையாக எதிர்த்தார் பாரதியார்.

கிறித்துவ மதத்தையும் பாரதி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்து மதத்தைப் புகழும் பாதிரிகளை மிக நல்லவர்கள் என்கிறார். இந்து மதத்தைக் குறை கூறும் பாதிரிகளை மூடப் பாதிரிகள் என்கிறார்.

“சென்னை கிறித்து கலாசாலையில் டாக்டர் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார்.

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரச்சாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரீகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.’’

இன்னும் ஒரு படி மேலே போய் பாரதியார், “கிறிஸ்துவ விவிலிய நூலில் வரும் தேவகுமாரன் என்பது வேறு யாருமல்ல; நம்முடைய சுப்ரமணியன்தான்” என்கிறார். (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்,

பக்கம் 83-84)

(தொடரும்…)

திங்கள், 17 அக்டோபர், 2022

பாரதியின் இந்துமத வெறியும் மற்ற மத வெறுப்பும்! (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (86)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (86)

அக்டோபர் 16-31,2021

பாரதியின் இந்துமத வெறியும் மற்ற மத வெறுப்பும்!

நேயன்

பாரதி எல்லா மதங்களையும் சமமாக மதித்தவர் என்று பலரும் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல. பாரதியின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்தால் அவர் ஓர் இந்து மதவெறியர் என்பதை எளிதில் தெளியலாம்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது வெறியும் பிற மதத்தின் மீது வெறுப்பும், எதிர்ப்பும், பகையும் கொண்டுள்ளார்களோ அதற்குச் சற்றுங் குறையாத வெறியும், வெறுப்பும் பகையும் கொண்டவராகவே பாரதி இருந்தார்; தன் கருத்துகளை அந்த உணர்வுகளை வெளியிட்டார்.

உலகிலே உயர்ந்த மதம் இந்து மதம் மட்டுமே என்று அவர் பலமுறை கூறியுள்ளார். புத்த மதத்தைக் கடுமையாக வெறுத்தார். கிறித்துவ மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் வெறுத்துப் பேசினார்.

இந்து மதத்தை உயர்வாக எண்ணியதால்-தான் இந்து மதத்தின் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுப் போற்றி எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

இந்து சாஸ்திரங்கள் எழுதப்பட்ட சமஸ்கிருதத்தை உலகின் உயர்மொழி, மூலமொழி என்று உண்மைக்கு மாறாய் உயர்த்திப் பேசினார்.

இந்து மதத்தின் முக்கிய செயல்முறையான ‘யாகம்’ செய்வதைக் கட்டாயக் கடமை என்றார். அதுவே இவ்வுலகை வாழ்விக்கும் என்றும் வலியுறுத்தினார். இதனால் யாகங்களை முற்றாக வெறுத்த புத்த மதத்தைக் கண்டித்தார்.

பாரதியின் பார்வையில் இந்துமதம் ஒன்றுதான் உலகிலேயே உயர்ந்த மதம், மற்றவையெல்லாம் தாழ்வான மதங்களே என்பது அவரின் கருத்து. முதலில் பவுத்த மதம் குறித்துப் பாரதியின் கருத்துகளைப் பார்ப்போம்:

“யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழி என்ற போலி வைதிகரைப் பழிசூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும், இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்ற ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துகளைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் சேர்த்துக் கொண்டார். அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் (ஆதிசங்கரனை) பரமசிவனுடைய அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.

பவுத்த மதமே துறவு நெறியை உலகில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில சில மனிதர் துறவிகளாகவும், சில சில இடங்களில் துறவிக் கூட்டத்தாராகவும், ஓரிரு இடங்களில் வல்லமை உடையவர்களாகவும் இருந்தனர். பவுத்த மதம்தான் எங்கு பார்த்தாலும் இந்தியாவை ஒரே சந்நியாசி வெள்ளமாக ஆக்கியது.

உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்தது. உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது. பின்னிட்டு புத்த தருமத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்தமதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.’’

1912இல் பகவத்கீதைக்கு முன்னுரை எழுதும்போது, பாரதியார் பவுத்த மதத்தின் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம்.

பவுத்த மதத் துறவிகளைக் கொலைகள் செய்தே அழித்து ஒழித்த ஆதிசங்கரனைப் பாரதியார், சிவபெருமானின் அவதாரமாகவே காண்கிறார். சோவியத்தில் புரட்சி என்றால் கொலைகள், கொள்ளைகள் அதை ஏற்க முடியாது என்பவர், ஆதிசங்கரனின் கொலைகளை மட்டும் ஆதரிக்கக் காரணம் என்ன?

பவுத்தத்தால் ஆட்டங்கண்ட நால்வருணத்-தையும் பார்ப்பனர்களின் உயர்வையும், மீண்டும் புத்துயிர் பெறச் செய்தவன் ஆதிசங்கரன் என்பதால்தானோ?’’

இஸ்லாமிய மதத்தை, அதன் கொள்கை-களை இழிவுபடுத்தினார். அவர் 22.5.1920 சுதேசமித்திரனில் எழுதிய கீழ்க்கண்ட “ரெயில்வே ஸ்தானம்’’ என்ற கதையே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரு நாள் தென்காசி இரயில்வே ஸ்டேஷன் வெளிப்புறத்தில் பலர் உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், பாரதியார் அங்குச் சென்றதாகவும், இரயில் வண்டி அன்று 1 மணி நேரம் தாமதமாக வருவதாகக் கூறினார்களாம். பாரதியார் தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் சென்றாராம். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு மகமதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டாராம். அவன் கணகளிலிருந்து தாரைதாரையாகக் கண்ணிர் வந்து கொண்டிருந்ததாம். தம்பி ஏன் அழுகிறாய்? என்று பாரதியார் உருது மொழியில் அவனிடம் கேட்டதாகவும், அதற்கு அந்த முகமதிய வாலிபன் சொல்லியதாகப் பாரதி எழுதுகிறார்: எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்… என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கினார். அதில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. அதை வைத்து வியாபாரம் செய்து ஏழு கோடி பணம் சேர்த்தார்.

என் தந்தைக்கு நான் ஒரே மகன். எனக்கு 15 வயது ஆகும்போது என் தந்தை இறந்துவிட்டார். அந்தச் சொத்து முழுவதும் எனக்கு வந்தது. என் வீட்டை மேற்பார்வை செய்ய என் சிறிய தகப்பனார் நியமிக்கப்-பட்டிருந்தார். என் தந்தை இறக்கும் தறுவாயில் என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார் முதலாவது வேலையாக, தம்முடைய மூன்று குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்த இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே, என்னுடைய சொத்து வெளிக் குடும்பங்-களுக்குப் போய்விடக் கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. என் தாயாருக்கு எனக்கு ஒரே பெண்ணைத்தான் மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணம். அதனால் சிறிய தகப்பனார் என்னை வேறு ஊருக்கு அழைத்துப் போய் என் தாயாருக்குத் தெரியாமல் அவருடைய மூன்று பெண்-களையும் எனக்கு மணம் முடித்து வைத்துவிட்டார்.

சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையால் ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலேயே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது…

(தொடரும்…)