பக்கங்கள்

சனி, 18 நவம்பர், 2023

வ உ சி யும் பெரியாரும்

'ஈ.வெ.இரா.விடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு அவர் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் என்னால் ஆன உதவியை அவ்வியக்கத்திற்கு செய்து வருகிறேன். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களைவிட பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையினால் அவருடைய திருஉருவப் படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை, மாலை பகல் முதலிய வேளைகளில் வணங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்" (நாகப்பட்டினத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்துப் பேசியது - குடிஅரசு 10.6.1928 ) என்று சொன்னவர் பெருந்தமிழர் - பேரறிஞர் ­தியாகிகளுக்கெல்லாம் பெரிய தியாகியான வ.உ.சிதம்பரனார்.

அதே விழாவில் பெரியார் படத்தை நோக்கி விழுந்து வணங்கினார் வ.உ.சி. “இப்படி நீங்கள் பேசலாமா? இப்படி எனது படத்தை விழுந்து வணங்கலாமா?" என்று கேட்டிருக்கிறார் பெரியார். “அதில் என்ன தவறு?” என்று திருப்பிக் கேட்டுள்ளார் வ.உ.சி.

தலைவர்களுக்கெல்லாம் தலைவர்களான பெரியாருக்கும் வ.உ.சி.க்கும் இடையில் இருந்த தலைமைப் பண்புக்கு உதாரணமான காட்சிகள் இவை.periyar and voc
(பெரியாரும் வ உ சி யும்)

வ.உ.சி.யைப் பார்த்து அரசியலுக்கு வந்தவர்தான் பெரியார். இதனைக் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் வெளிப்படையாகவே பெரியார் சொல்லி இருக்கிறார். “அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஜனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன்" என்று பேசியவர் பெரியார். ( குடிஅரசு 26.6.1927) இத்தகைய காவிய நட்பு அவர்கள் இருவருக்குள்ளும் இருந்துள்ளது.

வ.உ.சி.யின் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்து பார்க்க வேண்டும். 1904-1912 அரசியல் விடுதலைக் காலம் 1918-1936 சமூக விடுதலைக் காலம் - என்பதாக பிரித்துக் காண வேண்டும். இதில் சமூக விடுதலைக் கால வ.உ.சி.குறித்த சில பதிவுகளை மையமாக வைத்து இக்கட்டுரை விரிகிறது.

வ.உ.சி. அவர்கள் 1908 ஆம் ஆண்டு கைதாகி 1912 வரை சிறையில் இருக்கிறார். இது பெரியார் அவர்கள் தீவிர அரசியலில் இறங்காத காலம் ஆகும். சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி. தொடங்கிய காலத்தில் ஈரோட்டில் நிதி திரட்டித் தந்ததாக பெரியார் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்கள். (7.11.1948 சேத்துப்பட்டு வ.உ.சி. இளைஞர் கழக இலவச நூல் நிலையத் திறப்பு விழா) சிறையில் இருந்து வெளியில் வந்த வ.உ.சி. தீவிர அரசியலில் இருந்து விலகி நிற்கிறார். அப்போது காங்கிரசு கட்சிக்குள் சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு உதயமானது. நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கமானது பார்ப்பனரல்லாதார் நலனுக்காக பேசத் தொடங்கிய (1916-17) காலம் அது. இது காங்கிரசு கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. காங்கிரசுக்குள் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்கள் இணைந்து - ஒரு அமைப்பைத் தொடங்குகிறார்கள். அதற்கு 'சென்னை மாகாண சங்கம்' என்று பெயர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர் வ.உ.சி. அவருடன் இணைந்து திரு.வி.க., பெரியார், டாக்டர் வரதராஜூலு ஆகியோர் இயங்கினார்கள். இந்த சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா ( 1919 ) ஈரோட்டில் நடந்துள்ளது. அதன் தீர்மானத்தை வடிவமைத்ததில் வ.உ.சி. முன்னின்றதாக பிற்காலத்தில் பெரியார் பேசி இருக்கிறார். ( குடிஅரசு 20.12.1925 ) அந்த வகையில் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க ஊக்கியாக இருந்தவர் வ.உ.சி.அவர்கள்.

1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியாமல் பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். ஆனாலும், இதன் தொடக்கம் என்பது 1920 திருநெல்வேலி மாநாடு ஆகும். இங்கு அடித்தளமாக இருந்தவர் வ.உ.சி. 1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த 26 ஆவது சென்னை மாநில அரசியல் மாநாட்டில், வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை வ.உ.சி. அவர்கள் கொண்டு வந்தார்கள்.

அப்போதுதான் காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் அனைவரும் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டார்கள். பெரியார் தலைமையில் அந்த மாநாட்டுப் பந்தலில் பார்ப்பனரல்லாதார் கூட்டம்  ஒன்று நடந்துள்ளது. வகுப்புரிமைத் தீர்மானத்தை இம்மாநாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்று அதில் கலந்து கொண்ட பலரும் வலியுறுத்தினார்கள். இதில் மிக முக்கியமானவர்கள் நாவலர் சோமசுந்தரபாரதி, வ.உ.சி., தண்டபாணி (பிள்ளை) உள்ளிட்டவர்கள். மாநாட்டுத் தீர்மானங்களை வடிவமைக்கும் கமிட்டிக்கு அன்றைய பெயர் விஜயாலோசனைக் கமிட்டி என்பதாகும்.

அக்கூட்டத்தில் இத்தீர்மானத்தைப் பெரியார் முன்மொழிகிறார். வ.உ.சி.யும் தண்டபாணியும் வழிமொழிகிறார்கள். அப்போது என்ன நடந்தது என்பதை இதோ 'குடிஅரசு' சொல்கிறது:

“ காலஞ்சென்ற திரு. எஸ். கஸ்தூரி ரெங்கய்யங்கார் எழுந்து வீதாசாரம் (Percentage) என்கிற வார்த்தைக்குப் பதிலாக 'போதுமான' என்னும் அர்த்தத்தைக் கொடுக்கத் தகுந்த (Adequately) 'அடிகுவேட்லி' என்கிற பதத்தைப் போட்டுக் கொள்ளும்படி ஒரு திருத்தப் பிரேரேபணை கொண்டு வந்தார்.

இந்த 'அடிகுவேட்லி' என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று திரு. ராமசாமி நாயக்கர் அம் மாநாட்டுக்கு அக்ராசனாதிபதியாக இருந்த திரு. சீனிவாசய்யங்கார் அவர்களைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தந்தான்; ஆனால், பர்சன்டேஜ் என்பதைவிட அடிகுவேட்லி என்பது நல்ல வார்த்தையென்று சொல்லி தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்.

இது சமயம் திரு. ராஜகோபாலாச்சாரியார் முதலியோர்களும் அக்கூட்டத்தில் ஆஜராகித் தானிருந்தார்கள். அதோடு ராஜாங்கக் கல்வித்துறைகளில் சமஸ்கிருதக் கல்விப் பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும் செய்முறையும் தமிழ் கல்விக்கும் இருக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் திரு. ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு திரு. வி.ஓ.சிதம்பரம் பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. (ஆனால், விஜயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வெளியில் வந்து திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சில ஆங்கிலம் படித்தவர்களைக் கண்டு 'அடிகுவேட்லி' என்பதற்கும் 'பர்சென்டேஜ்' என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது அவர்கள், அடிகுவேட்லி என்பது இருபொருள் கொண்டதென்றும், அதாவது யோக்கியதைக்குத் தகுந்த என்கிற பொருள்கூட கொள்ளலாமென்றும், பர்சன்டேஜ் என்கிற வார்த்தைதான் மிகத் தெளிவானது என்றும் சொன்னார்கள்.)

பிறகு மாநாட்டில் இத்தீர்மானம் வரும்போது 'பர்சன்டேஜ்' என்கிற வார்த்தையையே போட்டுக்கொள்ள வேண்டும் என்று திரு. நாயக்கரும், திரு. தண்டபாணி பிள்ளையும் அக்ராசனர் திரு. சீனிவாசய்யங்காரிடம் சொன்னார்கள். அவரும் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக் கொண்டார்.

கடைசியாக மாநாட்டில் இது தவிர மற்ற தீர்மானங்கள் முடிந்தவுடன் அக்ராசனாதிபதி எழுந்து திடீரென்று தமது முடிவுரையை ஆரம்பித்து விட்டார். திரு. தண்டபாணிப் பிள்ளை தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் என்ன ஆயிற்றென்று அக்ராசனரைக் கூட்டத்தில் கேட்டார்.

அக்ராசனர் திரு. சீனிவாசய்யங்கார், அது பொது நன்மைக்கு விரோதமான தீர்மானமானதால் அவற்றை ஒழுங்குத் தவறானதென்று தீர்மானித்து விட்டதாகச் சொல்லிவிட்டார். உடனே திரு. தண்டபாணிப்பிள்ளை எழுந்து, விஜயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்டதன் தீர்மானம் இங்கு எப்படி ஒழுங்குத்தவறு என்று கேட்டார். அப்போது, அங்கிருந்த பிராமணர்கள் திரு. பிள்ளையை உட்காரும்படி கூச்சல்போட்டு அடக்கி விட்டார்கள். கடைசியாக முடிவுரையில் திரு. அய்யங்கார், காஞ்சி மாநாட்டில் திரு. முதலியாரைக் கொண்டு சமாதானம் சொல்லச் சொன்னதுபோல் வருத்தப்படுவதாகப் பொய் வேஜம் போட்டு மறைத்து விட்டார்." (குடி அரசு 6.12.1925)

-இதுதான் உண்மை வரலாறு. இதில் வ.உ.சி.யின் பங்களிப்பை முழுமையாக அறியலாம். வகுப்புவாரி உரிமையை மட்டுமல்ல, தமிழ்க் கல்விக்காக பெரியாரும் வ.உ.சி.யும் இணைந்து கொடுத்த குரலையும் நாம் அறியலாம். சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்த்தேசிய வரலாற்றிலும் கவனிக்கத் தக்கவராக வ.உ.சி. இருந்துள்ளார். நெல்லையில் தோற்ற தீர்மானத்தை தஞ்சை, திருப்பூர், மதுரை, திருச்சி,சேலம், திருவண்ணாமலை ஆகிய மாநாடுகளுக்கும் கொண்டு சென்று அங்கும் தோற்ற பிறகுதான் காஞ்சிபுரத்திலும் கொண்டு வந்தார் பெரியார். அங்கும் காங்கிரசில் நுழைக்க முடியவில்லை. காங்கிரசை உடைத்து வெளியேறினார் பெரியார். அந்த வகையில் திருநெல்வேலி மாநாடு ( 1920) தொடக்கமாக அமைந்தது. வ.உ.சி.முக்கியக் காரணமாகவும் அமைந்திருந்தார்.

பெரியாரின் வாழ்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்திய நூல், 'ஞானசூரியன்'. இதனை எழுதியவர் சுவாமி தயானந்தசரஸ்வதி. இந்நூலை முதலில் வெளியிட்டவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம். இந்நூலைப் பெரியாருக்கு கொடுத்தவரும் அவரே. இதனை 1928 ஆண்டு மறுபதிப்பு செய்து பெரியார் வெளியிட்டார். இந்நூலுக்கு மூன்று பேரிடம் சிறப்புரை பெற்றுள்ளார் பெரியார்.

வ.உ.சி., மறைமலையடிகள், கா.சுப்பிரமணியனார் ஆகியோரே அந்த மூவர். இந்தச் சிறப்புரையை 7.10.1927 அன்று கோயிற்பட்டியில் இருந்து எழுதியதாக வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், பார்ப்பனர் எதிர்ப்பில் மட்டுமல்ல, எத்தகைய சீர்திருத்தச் சைவராகவும் வ.உ.சி. இருந்துள்ளார் என்பதை இதன் சிறப்புரை மூலமாக அறியலாம்.

"பிராமணப் புரோகிதர்களும் பூசாரிகளும் பிராமணரல்லாதாருடைய பொருள்களைக் கவருவதற்குத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும் மோசங்களையும் கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர்களையும் பூசாரிகளையும் விரும்புகிறார்களா என ஞானசூரியன் வினவுகிறான். இந்து சமயம் என்பதன் பொய்களையும் புரட்டுகளையும் ஆபாசங்களையும் அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகவும் பிராமணரல்லாதாரின் பொருள்கள் கொள்ளையிடப் படுவதையும் பிராமணரல்லாதார் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்ளைகளின்றும் தாழ்வினின்றும் பிராமணரல்லாதார் தப்புவதற்குரிய அவசியத்தையும் வழிகளையும் ஞான சூரியன் நன்கு விளக்குகின்றான்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி.

1927 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது அரசியல் மாநாட்டில் ( 5.11.1927) அவர் ஆற்றிய உரை என்பது வ.உ.சியின் முழு முகத்தைக் காட்டும் உரையாகும். அந்தக் காலக்கட்டத்தில் தன் மீது என்னமாதிரியான விமர்சனங்கள் எல்லாம் வைக்கப்படுகின்றன என்பதை வ.உ.சி. பட்டியலிடுகிறார்.

* தேசாபிமானமும் என்பால் உளதோ - என்று சிலர் ஐயப்படுகிறார்கள்.

* ராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு தேசத்துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை- என்று பத்திரிக்கை அதிபர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

* பிராமண அபிமானி - என்று பிராமணரல்லாத சிறுவர்கள் சிலர் சொல்கிறார்கள்.

* வஞ்சக சொரூபி - என்று பிராமணர்களாலும் தான் அநியாயமாகப் பழிக்கப்படுவதாக அந்த உரையில் சொல்கிறார்.

“இந்த மாநாட்டில் குழுமியிருப்போரில் பெரும்பாலும் பிராமணரல்லாதார் தாம். யானும் ஒரு பிராமணரல்லாதான். இந்த ஜில்லா சிறந்த ஓர் தமிழ்நாடு. யானும் ஒரு சிறந்த தமிழன்" - என்ற தனது இரட்டை அடையாளத்தைச் சொல்கிறார். தமிழன் - பிராமணரல்லாதான் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். ஜாதியால் வேளாளன் ஆனாலும் அனைவரையும் சமமாகக் கருதுவதால் ஜாதியார்களால் விமர்சிக்கப்படுவன் என்றும் சொல்லிக் கொள்கிறார். சுய அரசாட்சி இந்தியாவில் உருவாக வேண்டும் என்று சொல்லும் அவர், பல ஜாதி, மதத்தலைவர்கள் ஒன்றுபட்டு ரத்தம் சிந்தினால் தான் அதனைப் பெற முடியும் என்கிறார். இந்து - முஸ்லீம் மதக் கோட்பாடுகளுக்குள் இருக்கும் வேற்றுமையைக் களைய வேண்டும் என்றும், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி பாகுபாடு என்ற எதுவும் இல்லை என்றும் சொல்கிறார். மத, ஜாதிகளில் இருக்கும் இதனைக் களைந்தபிறகுதான் போராட முடியும் என்கிறார். சுய அரசாட்சி உருவாகிவிட்டால், மக்களுக்குள் இருக்கும் வேறுபாடு தானாக நீங்கிவிடும் என்று சிலர் சொல்லியதை அவர் ஏற்கவில்லை. பொதுவானவை அனைத்தும் அனைவர்க்கும் பொதுவானவை என்று சொன்னார்.

இது நீதிக்கட்சி ஆட்சி அமைந்திருந்த காலம் என்பதால் வகுப்புவாரி உரிமை தொடர்பாக வ.உ.சி. விரிவாகப் பேசுகிறார். 'வகுப்புவாரி உரிமையானது நாட்டில் உள்ள ஒற்றுமையின்மையையும் பகைமையையும் குறைக்கவல்லது' என்கிறார் வ.உ.சி.' நமது தேசத்தில் நிலவும் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட அநியாயமான ஜாதி வேற்றுமைகளையும், உயர்வு தாழ்வுகளையும் கடுமையாக நான் எதிர்க்கிறேன்' என்றார்.

நம் நாட்டு மக்களிடம் ஒற்றுமை ஏற்படாமல் போனதற்குக் காரணம் அரசு பணிகளிலும் சட்டசபைகளிலும் பொது நிறுவனங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படாததுதான் என்றும், வகுப்புவாரி உரிமை வழங்குவதே உண்மைத் தேசாபிமானி ஒவ்வொருவரது கடமையாகும் என்றார்.

இதே உரையில்தான் பிராமணர், பிராமணரல்லாதார் குறித்தும் விரிவாகப் பேசினார். பிராமணரல்லாதார் யார் என்பதற்கு வ.உ.சி. கொடுத்த அடைமொழிகள் அழுத்தமானவை.

 'பிராமணரல்லாதார்' என்னும்போது முகமதியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துக்கின்ற ஹிந்துக்கள் என்னும் நான்கு வகுப்பினர்களையும் குறிக்கின்றேன் - என்பது வ.உ.சி.யின் வரையறையாகும். பிராமணர் - பிராமணரல்லாதார் வேற்றுமையை உருவாக்கியவர்கள் ஆங்கில ஆட்சியாளர்கள் என்று அப்போதும் சிலர் சொல்லி இருக்கிறாரகள். (தமிழ்நாட்டின் இப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வதைப் போல! )

இதனையும் மறுத்து வ.உ.சி. பேசி இருக்கிறார். 'இது முழுமையான பொய்' என்கிறார் வ.உ.சி. பிரிட்டிஜார் ஆளாத சுதேச மன்னர்கள் ஆட்சியில் பிராமணர் - அல்லாதார் வேறுபாடு இல்லையா என்றும் கேட்கிறார் அவர்.

* பிராமணர்கள்தான் மேல், மற்றவர்கள் கீழ் என்று சொல்வதால்தான் இது ஏற்படுகிறது.

* பிறப்பு முதல் இறப்பு வரையிலான பிராமணரல்லாதார் சடங்குகள் அனைத்திலும் புகுந்து பிராமணர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

* அரசு பணிகள் அனைத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்கிறார்கள் பிராமணர்கள்.

-              இந்த மூன்றும் தான் பிராமணர் - பிராமணரல்லாதார் மோதலுக்கு முக்கிய காரணம். இதனை ஒழிக்க வேண்டும் என்கிறார் வ.உ.சி. இதற்கு தீர்வும் சொல்கிறார் வ.உ.சி.

* பிராமணர்கள் உங்களை எப்படி இழிவாக நடத்துகிறார்களோ அதே போல் நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

* பிராமணர்களை வைத்து சடங்கு செய்யாதே என்று திருவாளர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதைக் கடைப்பிடியுங்கள்.

* அனைத்து அரசுப் பணிகளும் ஒவ்வொரு சமூகமும் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறதோ அதற்கு ஏற்ற விகிதப்படி தர வேண்டும்.

-இவைதான் வ.உ.சி. சொல்லும் தீர்வுகள். (வ.உ.சி.யின் சேலம் மாநாட்டு உரையை முழுமையாக வாசிக்க வ.உ.சி. பன்னூல் திரட்டு பக்கம் 199-236, தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விக்கழகம் )

வ.உ.சி.யும் பெரியாரும் ஒரே குரலில் பேசி வந்த காலம் இது. 1926 - மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாடு, 1927 சூலை மாதம் கோவையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாடு, அதே ஆண்டு நவம்பரில் சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கிரசு அரசியல் மாநாடு ஆகிய அனைத்திலும் வ.உ.சி. ஆற்றிய உரைகள் அவரது நாட்டு விடுதலையுடன் கூடிய தன் விடுதலை உரைகளாக அமைந்திருந்தன.

சிறப்புப் பாயிரமாக அவர்கள் எழுதியதை வள்ளுவர் எழுதியதாக பிற்காலத்தில் சேர்த்து விட்டார்கள் என்றும் மொத்தமே 130 அதிகாரங்கள் தானே தவிர 133 அதிகாரங்கள் அல்ல என்றும் வ.உ.சி. சொல்கிறார். ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற அந்தணருக்கும் பிறந்தவர் வள்ளுவர் என்பது கட்டுக்கதை என்கிறார் வ.உ.சி.

தொல்காப்பியத்தில் இளம்பூரணர் உரையை 1928 ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி. அதில் ஆரிய இடைச்செருகல் உள்ளதாக எழுதுகிறார். " இவ்வகைத் தனிச்சிறப்பு பொருந்திய இத்தமிழ் இலக்கணத்துள்ளும் ஆரியமொழிகள் சிலவற்றையும் ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் ஆரியர் கொள்கைகள் சிலவற்றையும் இந்நூலின் கண் நுழைத்திருத்தலை ஆங்காங்கு காணலாம்" என்று எழுதுகிறார் வ.உ.சி.

வ.உ.சி.யின் சிவஞானபோதம் உரை 1935 ஆம் ஆண்டு வெளியானது. அவர் மறைவுக்கு முந்தைய ஆண்டு இது. ஏனைய உரைகளில் காணப்படும் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்த உரையில் இருக்காது என்று சொல்லும் வ.உ.சி., அனைத்து மதங்களும் ஒரே இறைவனைப் பற்றியே பேசுகின்றன என்கிறார். மத, ஜாதி உள்ளிட்ட மற்ற அனைத்து வேற்றுமைகளையும் பேசுபவர்கள் தேசத்துக்கு தீங்கிழைப்பவர்கள் என்றும் சொல்கிறார்.

1936 நவம்பர் 18 ஆம் நாள் வ.உ.சி. மறைகிறார். அதே ஆண்டு மே 3 ஆம் நாள் அன்று திருச்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடக்கிறது. அது தொடர்பாக அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார் வ.உ.சி.

 நமது சென்னை மாகாணத்தில் - அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் என்று அந்தக் கடிதத்தைத் தொடங்குகிறார். அதாவது 1936 ஆம் ஆண்டே 'தமிழ்நாடு' என்று சொல்லத் தொடங்கிவிட்டார் அவர். பார்ப்பனரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு பார்ப்பனரல்லாதார் பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும், பார்ப்பனருடைய ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டுப் பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன் என்றும், அதற்கு அனைத்துக் கட்சியிலும் இருக்கும் பார்ப்பனரல்லாதார் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார் வ.உ.சி. இதைச் செய்தால் உங்களைத் தேசத்துரோகிகள் என்பார்கள் என்கிறார் வ.உ.சி. (இன்று வரை இது தான் நடக்கிறது!) அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

பார்ப்பனரல்லாச் சகோதரர்களே ! சாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலியவற்றை யெல்லாம் விடுத்து நீங்களெல்லாம் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும் தன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக. உங்கள் அன்புள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை" என்பதுதான் வ.உ.சி. விடுத்த வெளிப்படையான குரல். இதுதான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் குரல். (குடிஅரசு 17.5.1936)

 - நன்றி: தோழர் ப.திருமாவேலன்.

செவ்வாய், 14 நவம்பர், 2023

வைகுண்டர் பற்றிய விஜயபாரதத்தின் விமர்சனத்திற்கு பதிலடி

 விஜயபாரதத்தின் வெண்டைக்காய்

விளக்கெண்ணெய்க் கட்டுரை

12
திருவள்ளுவர்           வைகுண்டர்

ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்‘ (23.6.2023) செங்கோலைப் பற்றி எழுத ஆரம்பித்து, இடையில் வைகுண்டரை இழுத்துக் குளிர் காயும்  ஆர்.எஸ்.எசுக்கு உரிய திருகுதாளத்தில் ஈடுபட்டதை நினைத்தால், இவர்கள் எப்பொழுதும் திருந்தப் போவ தில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதோ "விஜயபாரதம்" பேசுகிறது:

"அறம் என்பதன் சமஸ்கிருத சொல் தர்மம். தர்மம் என்றால் என்ன? 19 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் ஐயா வைகுண்டர். அவரது திருநூல் அகிலத்திரட்டு. அன்று திரு விதாங்கூரில் மதமாற்றக் கொடுமை இருந்தது. அதன் பின்னால் சாதியக் கொடுமைகள் இருந்தன. அதற்கும் பின்னால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம் பெனியாரின் சூழ்ச்சியும் கொடுமையும் நிறைந்த வரிவசூல் தகிடுதத்தங்கள் இருந்தன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் திருநெல்வேலி கலெக் டரே ஐயா வைகுண்டரை கைது செய்ய வேண்டு மென்று திருவிதாங்கூர் அரசருக்கு அழுத்தம் அளித்தவன். அவனது அறிக்கையில் ஐயா வைகுண்டரின் இயக்கம் பிரிட்டிஷாரை பாரதத்தி லிருந்தே விரட்டி யடிக்க ஆயத்தமாவதாக சொல் லியிருக்கிறான். துரதிருஷ்டவசமாக இந்த தேசபக்த பரிமாணம் ஐயா வைகுண்டரின் வரலாற் றில் அதிகமாக பேசப்படுவதில்லை. ஐயா வைகுண் டரின் அகிலத் திரட்டில் அவர் தர்மத்தை இப்படி விவரிக்கிறார்: 'தாழக் கிடப்பவரை தற்காப்பதே தர்மம்'.

வலிமையற்றவர்களை குரலற்றவர்களை காப்பாற்ற வேண்டும். ஆனால் எப்படி காப்பாற்ற வேண்டும்? அவர்களை ஒருவர் தன்னை போலவே நினைந்து காப்பாற்ற வேண்டும்.நான் மேலானவன். நீ பரிதாபத்துக் குரியவன். எனக்கு வலிமை இருக்கிறது உனக்கு இல்லை எனவே நான் உன்னை காப்பாற்றுகிறேன் என்று காப் பாற்றக் கூடாது. நீயும் நானும் ஒன்று. ஒரே பிரம்மமே.உன்னிலும் என்னிலும் இருக்கிறது என்பதை உணர்ந்து வலிமையற்றவர்களை குரலற்றவர்களை காப்பாற்ற வேண்டும். குருஜி கோல்வல்கர் இதை இப்படி சொல்வார். சேவை செய்யும் போது நான் உதவுகிறேன் என்று செய்யக் கூடாது. இன்னலில் இருப்பவர்கள் அவர்கள் எந்த மதமோ எந்த இனமோ அவர்களை இறைவனே சேவை மூலம் தனக்கு வழிபாடு செய்ய நமக்கு ஒரு வாய்ப்பை அருளுகிறான் என்கிற உணர் வுடன் மட்டுமே சேவை செய்ய வேண்டும். அரசில் இருப்பவர்களுக்கும் அது சேவை என்கிற போது அவர்கள் குடிமக்களை தெய்வமாகவே எண்ண வேண்டும்."

27

உண்மையிலே வைகுண்டர் யார்? அவர் எப்படி எல்லாம் வேத மரபை மறுத்தார்? என்பதை எண்ண வேண்டும்!

வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்தக் காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள் ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப் பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர் ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர்.

 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார்.

குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ் தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட் டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு போராடினார் வைகுண்டர். 110 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடார் சமூகம், அப்போது ‘தீண்டப்படாதவர்களாக’ கருதப்பட்டது. ஒரு நாடார், நம்பூதிரி பார்ப்பனரிட மிருந்து 36 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திலும் நின்றுதான் சந்திக்க வேண்டும். பொதுச் சாலையில் நடக்க உரிமை இல்லை.

 கோயில்களில் நுழையும் உரிமை இல்லை. கோயில்களுக்கு அருகே பள்ளிகள், அரசு அலுவலகங் கள் இருந்தால் அங்கேயும் போக முடியாது. குடை பிடிக்கவோ, செருப்பு அணியவோ முடியாது. பெண் கள் ‘ரவிக்கை’ அணியும் உரிமையை மறுத்தார்கள்.

 இந்தக் கொடுமைகளை எதிர்த்து களமிறங்கிய வைகுண்ட சாமிகள், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ‘சமத்துவ சங்கம்’ ஒன்றைத் தொடங்கினார். ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் அதில் உறுப்பினர்களானார்கள். ஊர் ஊராகச் சென்று வேத வைதிக மரபுகளுக்கு எதிராக சமத்துவக் கொள்கைகளை பரப்பினார். 

கன்யாகுமரி மாவட்டத்தில் ஊர் தோறும் தனது கொள்கைகளைப் பரப்பிட ‘நிழல்தாங்கல்’ என்ற நிறு வனத்தை உருவாக்கினார். இது வழிபாட்டுத் தலமாக வும், கல்வி நிலையமாகவும், வைகுண்ட சாமிகளின் கருத்துகளைப் பரப்பும் மய்யமாகவும் செயல்பட்டது.

கடவுளை சிலைகளுக்குள் அடைத்துவிட முடியாது என்று கூறிய அவர், தமது வழிபாட்டு முறையில் அர்ச்சகர்கள், உருவ வழிபாட்டை ஒதுக்கினார்.

 பேய்-பிசாசு-மாந்திரிக நம்பிக்கை - தமது மக்களிடையே தீவிரமாக பரவி இருந்ததை எதிர்த்தார். “பேயுமில்லை பிசாசுமில்லை, பில்லியின் வினை களில்லை” என்று கூறினார்.

 கோயிலுக்குள்ளே நாடார் சமூகத்தைவிட மறுத்த புரோகிதர்கள், அவர்களின் காணிக்கையை இழக்கத் தயாராக இல்லை. எனவே தொலைவில் நின்று காணிக்கைகளை வீசவேண்டும்; பதிலுக்கு புரோகிதப் பார்ப்பனர்கள் இலையில் கட்டிப் பிரசாதத்தைத் தூக்கி வீசுவார்கள். இந்த இழிவை எதிர்த்து கோயிலுக்கு காணிக்கை வழங்காதீர் என்று வைகுண்டசாமி பரப்புரை செய்தார்.

“காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ

வீணுக்குத் தேடு முதல் விருதாவில் போடாதுங்கோ”

- என்று காணிக்கைத் தருவதை ‘விருதா வேலை’ என்று பாமரர் மொழியில் எடுத்துச் சொன்னார்.

அந்தக் காலங்களில் ஒரு நாடார் சமூக இளைஞனுக்கு 16 வயதில் தலையில் தலைப்பாகைக் கட்டி கையில் பிச்சுவா கத்தி கொடுப்பார்கள். பல இடைநிலை ஜாதியினரிடம் இந்த வழக்கம் உண்டு. அதேபோல் குடும்பத் தலைவர் இறந்ததும் அவரது மகனுக்கு தலைப்பாகைக் கட்டுவார்கள். இதற்கு ‘உறுமால் கட்டு’ என்று பெயர். இடைக்காலத்தில் பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் இந்த உரிமையை நாடார் சமூகத்துக்கு மறுத்தனர். சுமை தூக்கக்கூட தலைப்பாகை அணிய அனுமதிக்க வில்லை. ‘சும்மாடு’ எனும் பெயரில் வைக்கோலை மட்டும் தலையில் வைக்க அனுமதிக்கப்பட்டனர். வைகுண்டர் வெகுண் டெழுந்தார். தன்னை சந்திக்க வருவோர் தலைப்பாகை யுடன் தான் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். இப்போதும் அவரது இயக்கத்தினர் தலைப்பாகை அணிந்து வழிபடும் முறையை பின்பற்றுகிறார்கள்)

 ஒடுக்கப்பட்ட ஜாதியினர் ஓட்டு வீடு, மாடி வீடு கட்ட வேத புரோகித கூட்டம் அனுமதி மறுத்தது. வைகுண்ட சாமிகள் ஒரே திசையில் முன் கதவு வைத்த வீடுகளை அடுத்தடுத்து கட்டுமாறு கூறி, ‘சமதர்ம குடியிருப்பை’ உருவாக்கினார்.

 தனது சீடர்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி, ‘தீண்டப்படாத’ ஜாதியினர் வீட்டில் உணவு அருந்த பணித்தார். தனது சொந்த ஊரில் அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தும் பொதுக் கிணற்றை வெட்டினார்.

 முகாம் நடத்தி, மக்களுக்கு சமத்துவ-வேத மறுப்பு கருத்துகளைப் பயிற்றுவித்தார். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ‘துவையல் பந்தி’ என்று அதற்குப் பெயர்.

 பார்ப்பனப் புரோகிதர்களையும் மன்னர்களையும் ஒரே நேரத்தில் துணிவுடன் எதிர்த்து நின்றவர். வைகுண்ட சாமிகள், “பிராமணர்களை பயம் காட்ட நாம் வருவோம்” என்று அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். புரோகிதத்தை ‘வேடம்’ என்றார். “பிராமண வேசம் போட பக்தன்மாரே நீங்கள் உண்டு” என்று துணிவுடன் கூறினார். 

 தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களை துணிவாக ஜாதித் தடைகளை எதிர்த்து தோள் சேலை (ரவிக்கை) அணியுமாறு வற்புறுத்தினார். 

அவரது மறைவுக்குப் பிறகு இந்து, கிறிஸ்துவ நாடார் இரு பிரிவினர் இணைந்து, ‘தோள் சீலை’ உரிமைப் போராட்டத்தை நடத்தினர். 1859இல் நாடார் பெண்களுக்கு ‘தோள் சீலை’ அணியும் உரிமையை திருவிதாங்கூர் அரசு வழங்கியது. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 1865இல் ஏனைய ஒடுக்கப் பட்ட ஜாதி பெண்களுக்கும் இந்த உரிமை கிடைத்தது.

உண்மை வரலாறு இப்படியாக இருக்க, சனாதன வாதி  ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால் கரையும் சனாதனத்தையும் சல்லி வேரோடு வீழ்த்த வீறு கொண்ட வைகுண்டரையும் முடிச்சுப் போடுவது போக்கிரித்தனம் என்பதைவிட - "பார்ப்பனத்தனம்" என்று பளிச்சென்று சொல்லி விடலாம்.

திருவள்ளுவர் கூறும் அறமும், சமஸ்கிருதத்தின் தர்மமும் ஒரே பொருள் கொண்டதாம்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அறம் எங்கே? பிறப்பின் அடிப்படையில் வர்ண தர்மம் பேசும் பார்ப்பன வேதத் தர்மம் எங்கே?

நடக்கவே முடியாதவனை நடராஜன் என்றும், பேசவே முடியாத ஒரு பெண்ணைத் தேன்மொழி என்றும், பார்வையிழந்தவனைக் கண்ணாயிரம் என்பதும் எவ்வளவுக் கேலியோ அதைவிட வெகு மோசம் தமிழர்களின் அறமும் - பா£ப்பனர்களின் தர்மமும் ஒன்றே என்பதாகும்.

மார்புச் சீலை அணியக்கூடாது என்று சட்டம் செய்தது திருவரங்கம் சமஸ்தான ஹிந்து ராஜ்யம்தானே. வெள்ளைக்காரனா அவ்வாறு சட்டம் போட்டான்.

எப்படியெல்லாம் திசை திருப்புகிறது இந்தத் திரிநூல் கூட்டம் - இதில் அவர்கள் ‘வல்லவர்கள்' என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம் - கொஞ்சம் ஒலியின் சுருதியைக் குறுக்கி நல்லவர் என்று ஆக்கி விடுவார்கள் - சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிம் என்று சொல்லவில்லையா?

கல்லையும், செம்பையும் காட்டி - ‘இது கடவுள்' - ‘விழுந்து கும்பிடு!' என்பதை ஏற்றுக் கொண்டவரல்லவர் வைகுண்டர்.

"தாழக் கிடப்பவரை தற்காப்பதே தர்மம்" என்று வைகுண்டர் கூறிய கருத்தை தன்னை அறியாமலேயே விஜயபாரதம் ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறது.

தாழக்கிடப்பது அவனுடைய கர்ம பலன் என்று கூறும் ஹிந்து சனாதனத்தோடு எப்படி வைகுண்டரை ஒப்பிட முடியும்.

உண்மையைச் சொன்னால் கடைசி வரை சுருதி பேதம் வராது. ஆனால் பொய்யைப் புளுகினால் கடைசி வரை அதைக் காப்பாற்றவே முடியாது என்பது உளவியல். ஆரியத்தின் அண்டப் புளுகுத்தன்மை அவ்வப்போது அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். விஜயபாரதங்களின் வெண்டைக்காய், விளக்கெண் ணெய் வழியும் கட்டுரையும் அதுதான்!