பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2024

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது? - எதிர்வினை (51)

 

ஜனவரி 01-15 2020

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது?

கேள்வி: ஈ.வெ.ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்கிற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்கிற பயமா?

பதில்: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது நல்ல ஓர் எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கிப் பரப்பலாமே? ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டு.

பெரியாரின் மூத்த தொண்டர் ஒருவர் வெளியிட்ட நூலிலே பெரியார் பாஸ்போர்ட் இல்லாமல் அயல்நாடு போனார் என்று தவறான கருத்து வெளிவந்த வரலாறு உமக்குத் தெரியாது. இதுபோன்ற தவறு நிகழக் கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டதே அது!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இலாப நோக்கில் நூல் வெளியிடுவதில்லை என்பது உமக்குத் தெரியுமா? தெரிந்தால் சில்லறைத்தனமாக இப்படிக் கேட்க மாட்டீர்!

கேள்வி : பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்புச் சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பதில் : அசல் அயோக்கியத்தனமான கேள்வி இது! பூணூலும் கருப்புச் சட்டையும் ஒன்றா? கருப்புச் சட்டை என்பது ஓர் இயக்கத்தின் சீருடை. அது இழிவு நீக்கவந்த ஏற்பாடு. அது யாரையும் எப்போதும் இழிவு படுத்தாது.

ஆனால், பூணூல் என்பது பெரும்பாலான மக்களை இழிவுபடுத்தும் அடையாளம். 3% ஆரியப் பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இழிமக்கள்; தீட்டு உள்ளவர்கள் என்று இழிவு செய்யும் ஏற்பாடு பூணூல். ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக அவர்களால் அணியப்படுவது.

ஒரு தெருவில் இது பத்தினியின் வீடு என்று ஒரு வீட்டில் எழுதி வைத்தால் அதன் பொருள் என்ன? மற்ற வீடெல்லாம் விபச்சாரிகளின் வீடுகள் என்பதுதானே! நான் மட்டும் உயர்ந்தவன் என்று ஆரிய பார்ப்பனர்கள் பூணூல் மாட்டிக்கொள்வது மற்றவர்கள் இழிமக்கள் என்று கூறத்தானே?

அப்படியிருக்க கருப்புச் சட்டை போடுவது போல்தான் பூணூல் போடுவது என்கிற உமது வாதம் அறிவற்ற, அடிமுட்டாள்தனமானது என்பதை இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். கருப்புச் சட்டை இழிவு நீக்கப் பாடுபடும் தொண்டர்களின் அடையாளம். அப்படிப் பாடுபடும் எவரும் அதை அணியலாம். ஆனால், பூணூலை எல்லோரும் அணிய முடியுமா?

பூணூல் அணிவது உரிமை என்கிறீரே… அந்த உரிமையைக் கொடுத்தது யார்? அந்த உரிமை ஆரியப் பார்ப்பானுக்கு மட்டும் எப்படி வந்தது? உம்மால் பதில் சொல்ல முடியுமா?

97% மக்களை ஏமாற்ற சாஸ்திரங்களை தாங்களே எழுதி, அதில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் இழிவானவர்கள், எங்களுக்கு மட்டுமே பூணூல் என்று எழுதிக்கொண்ட மோசடிக் கூட்டம்தானே ஆரிய பார்ப்பனக் கூட்டம். அப்படிப்பட்ட ஏமாற்றுக்கும், பித்தலாட்டத்திற்கும் உரிமை என்று பெயரா?

கேள்வி : ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதைப் பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் திட்டியே பொழப்பு நடத்துகிறீர்களே, உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?

பதில்: மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் கூட்டம் இந்தக் கேள்வியைக் கேட்பதுதான் வேடிக்கை! தன் வீட்டுச் சாப்பாடு, தன் பணம், பதவி  பலன் எதிர்பாராத ஆனால், இழிவு, ஏச்சு, பேச்சு எல்லாவற்றையும் ஏற்று இந்த மக்கள் சுயமரியாதையும், சூடு, சொரணையும், விழிப்பும் சமவாய்ப்பும் பெற உழைப்பவர்கள் நாங்கள். இதில் பிழைப்புக்கு, வருவாய்க்கு வழியேது? மூடநம்பிக்கையால் அறிவு, மானம், உரிமை, உயர்வு இழந்து, அடிநிலையில் உழலும் மக்களை சிந்திக்கச் செய்து அவர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக்கி, அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, பார்ப்பனர்களை விடவும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து, உயர்ந்து வர பாடுபடுபவர்கள் நாங்கள்.

 இது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நன்கு தெரியும். இந்து என்கிற போர்வையில் நீங்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று பகற்கனவு காணாதீர்கள்! பார்ப்பனரல்லாதார் விரைவில் விழிப்புடன் வீறு கொண்டு எழத்தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் உங்கள் நிலை! எச்சரிக்கை!

நேயன்

                                                                  (தொடரும்)

 

வெள்ளி, 5 ஜூலை, 2024

இந்து மதம் ஒழிவதே நல்லது! --டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

 

சுவடுகள் : இந்து மதம் ஒழிவதே நல்லது!

டிசம்பர் 01-15, 2020

-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து…)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்.

(1929இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்…)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்.’’ -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில்,

இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே, இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

நினைவு நாள்: 6 டிசம்பர், 1956.

வியாழன், 4 ஜூலை, 2024

பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா? -எதிர்வினை (62)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (62): பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா?

செப்டம்பர் 16-30, 2020

நேயன்

கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்படி இருந்தும், பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது மோசடியாகும்.

பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் பற்றி கால்டுவெல் கூறியதாவது.

“திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளி-லிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வடஇந்திய மொழிகளைப் போலவே, சமசுகிருதத்திலிருந்து பிறந்தவையாகச் சமசுகிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.’’ (ஆதாரம்: கால்டுவெல், திராவிடம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)

1915இல் சூலைத் திங்களில் ‘ஞானபானு’ என்னும் இதழில் பாரதியார் தமிழில் எழுத்துக் குறை என்னும் தலைப்பில் “சமஸ்கிருதத்தில் க, ச, ட, த, ப, ற போன்ற வல்லின எழுத்துகளுக்கு வர்க்க – எழுத்துகள் இருப்பதுபோல், தமிழில் வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழில் எழுத்துக் குறையுள்ளது’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)

ஒரு மொழியிலுள்ள ஒலிகள், அதற்குண்டான குறியீடுகள் மற்ற மொழியில் இல்லாதிருந்தால், அது அம்மொழியின் குறைபாடு ஆகாது. ஏனெனில், ஒலிப்பு, ஒலிக்குறியீடு என்பவை அம்மொழிக்கே உரிய இயற்கையான இயல்புகள் ஆகும். ஆகவே சமசுகிருத வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லை என்று பாரதியார் குறைபட்டுக் கொள்வது ஏற்புடையது ஆகாது.

பாரதியின் இக்கூற்றை அறிஞர் வ.உ.சி. அவர்கள் 1915 செப்டம்பர்த் திங்களில் அதே ‘ஞானபானு’ ஏட்டில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார். “தமிழில் எழுத்துக் குறை என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருதச் சார்புடையவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் என்னும் உன்னத நூலையும், அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)

தமிழில் எழுத்துப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி, அதையே வாய்ப்பாகக் கருதி, வேண்டுமென்றே தமிழில் வடமொழிச் சொற்களை அளவுக்கு அதிகமாகக் கலந்து எழுத ஆரம்பித்தார் பாரதியார். இதை அவருடைய பிற்கால எழுத்துகளில் காணலாம்.

“மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்தியா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்தபானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா, இந்த ரிஷிகளெல்லாரும் என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதிப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.’’ (ஆதாரம்: பாரதி தமிழ், புதூரன்)

இது 1917 சூன் 21இல் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘ப்ராயச் சித்தம்’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய கதையின் ஒரு பகுதி. (பாரதியார் தன் பெயரைக் கூட ஸி. ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார்.)

பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா. குறிப்பிடுவதாவது.

“தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்

மூன்றும் மொழி மூவிடத்து மாகும்

இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படி-யெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.’’ (ஆதாரம்: வ.ரா. _ மகாகவி பாரதியார்)

ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக் கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா, எவ்வளவு உண்மை! (ஆதாரம்: கவிக்குயில் பாரதியார் _ சுத்தானந்த பாரதி) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்.

இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர் பாரதியே! 1906இலேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். 15.12.1906 “இந்தியா’’ வார ஏட்டில் ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்னும் தலைப்பில் இவர் கூறுவதாவது: “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்திப் பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று (என்பதை?) சொல்லுகின்றோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும், ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்-பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளலாம்.’’ (ஆதாரம்: பாரதி தரிசனம், சி.எஸ்.சுப்பிரமணியம்)

(தொடரும்…)

புதன், 3 ஜூலை, 2024

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

அக்டோபர் 16-31 2019

 நேயன்

அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.

10.          தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?

1.            ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.

2.            ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

3.            தங்க நகைகள் அணியக் கூடாது.

4.            மண்குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

5.            ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6.            அடிமையாக இருக்க வேண்டும்.

7.            சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

8.            திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

9.            பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

10.          குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.

11.          வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

12.          பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

13.          சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

14.          பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

15.          மேல் அங்கியோ, துண்டு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது.

16.          பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

17.          நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.

பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்று தலைப்பில் 24.11.1929 “குடிஅரசில்” எழுதினார்.

அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதினார்.

ஆதிதிராவிடர், தீயர், தீண்டாமை விலக்க மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

21.7.1929இல் சென்னையிலும், 25.8.1929இல் இராமநாதபுரத்திலும், 10.6.1930இல் திருநெல்வேலியிலும், 16.5.1931இல் சேலத்திலும், 7.6.1931இல் லால்குடியிலும், 5.7.1931இல் கோவையிலும், 4.7.1931இல் தஞ்சையிலும், 7.12.1931இல் கோவையிலும், 7.2.1932இல் லால்குடியிலும், 28.8.1932இல் அருப்புக்கோட்டையிலும், 7.8.1933இல் சென்னையிலும், 1.7.1938இல் சீர்காழியிலும், 7.3.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.5.1936இல் கொச்சியிலும், 2.9.1936இல் சேலத்திலும், 6.5.1937இல் சிதம்பரத்திலும், 4.7.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டனத் தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்ப்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.

ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும்  பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 9.2.1982இல் ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’, தலித்திய ஏடுகள் போன்றவற்றைப் படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: “நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை; இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாகக் கருதவேண்டாம். ஆதிதிராவிடன் – திராவிடன் என்கிற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன்: திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதைச் செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்று வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்கிற உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்று மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.

நான் மிக எதிர்பார்த்திருந்தேன் _ அவரின் ஒத்துழைப்பை – இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால், எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ  அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாள்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்ற நான் அஞ்சுகிறேன்.

எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இருக்கும் இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.

                                                                      (‘விடுதலை’ 8.7.1947)

சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கும் பி.என்.சர்மாவுக்கும் தந்த பதவியை சிவராஜுக்கு, வீரய்யனுக்கும் தராதது ஏன்? - எதிர்வினை 27

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 27

ஜனவரி 1-15 2019

சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கும் பி.என்.சர்மாவுக்கும் தந்த பதவியை சிவராஜுக்கு, வீரய்யனுக்கும் தராதது ஏன்?

’குடிஅரசு’ கேள்வி

நேயன்

இப்படிப்பட்ட தரவுகள் கொண்டு மிகக் கனமான, செறிவான வரலாற்றை எழுதலாம். இது எல்லாம் தெரியாததால்தான் தலித் அரசியலை பெரியார் மறைக்க நினைத்தார் என்றும், அம்பேத்கர் தவிர மற்ற தலித் தலைவர்களை பெரியார் மறைத்தார் என்றும் எழுதுகிறார்கள்.

‘சென்னையில் கலவரம்’ என்ற செய்தியைப் பாருங்கள்; சென்னை திருவல்லிக்கேணி கடல்கரையிலும், மவுன்ட்ரோடு நேப்பியர் பார்க்கிலும் எழுமூர் ஏரியிலுமாக மூன்று பொதுக் கூட்டங்கள் ஆதி திராவிட மகாஜனசபையாரால் கூடப் பெற்று திருவாளர்கள் வீ.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ.,பி.எல்., எம்.எல்.சி., எம்.சி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியவர்கள் தலைமையில் 11.10.1931, 14.10.1931, 18.10.1931 ஆகிய மூன்று தினங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல்நாள் 1,000 பேரும், 2ஆம் நாள் 2,000 பேரும், 3ஆம் நாள் 7,000 பேரும் விஜயம் செய்திருந்தார்கள். அக்கூட்டங்களில் வட்டமேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட வர்களுக்குத் தனித்தொகுதி வேண்டாமென்று கூறிய திரு.காந்தியைக் கண்டித்தும் அவர் மீதும் காங்கிரஸ் மீதும் தங்கட்கு நம்பிக்கையில்லை யென்றும் தங்கள் பிரதிநிதிகளான டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சீனிவாசன் ஆகியவர்களால் வேண்டப்படும் கொள்கை-களையே முழு மனதோடு ஆதரிப்பதாகவும் தீர்மானம் செய்தார்கள். அதனையொட்டி திருவாளர்கள்: பொன்னு, கே.ஆர்.சாமி, கே.ஆர்.எத்திராஜுலு, தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதம், வி.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., பாலகுரு முதலி, சிவம், து.பொன்னம்பலம் ஆகிய கனவான்கள் நன்கு விளக்கி ஆதிதிராவிடர்களின் நிலைமையையும், வட்ட மேஜை மகாநாட்டையும், காந்தி காங்கிரஸ் முதலியவைகளைப் பற்றியும் எடுத்துப் பேசினார்கள். இந்நிகழ்ச்சியை சகியாத பார்ப்பனர்கள் கடல்கரை கூட்டத்தில், ‘வந்தே மாதரம்! காந்திக்கு ஜே!’ எனறு சத்தமிட்டு குழப்பத்தையுண்டாக்கி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தார்கள். பொது ஜனங்களில் இருவர் கூச்சல் போட்டு குழப்பம் செய்தவர்கட்கு நல்ல புத்திமதி கொடுத்தார்கள். அதன்பின் ஓட்டம் பிடித்தார்கள். அமைதியும் ஏற்பட்டது. அதேபோல் 14.10.1931 தேதியிலும் பொதுக்-கூட்டம் முடிந்து பஜனையாகப் போய்க் கொண்டிருந்த ஆதிதிராவிட மகாஜனங்களை பெரியமேட்டு பெரியண்ண மேஸ்திரி தெரு பக்கத்தில் ஒரு வீட்டு மாடியிலிருந்து கொண்டு கல்லாலும், சோடாப் புட்டிகளாலும் (தேச பக்தர்கள்) தாக்கியிருக்கின்றார்கள். அவர்கள், கையில் பஜனையில் கொண்டு போன படத்தையும் கீழே பிடுங்கி உடைத்திருக் கிறார்கள். பின்னர் இரு சாரார்கட்கும் ஆவேசம் ஏற்படவே, அது சமயம் போலீஸ் படைகளும் சோல்சர்களும் வந்து கூட்டத்தை கலைத்தனராம். பிறகு 18ஆம் தேதி கூட்டம் முடிந்த பிறகும் ஆயிரம் விளக்குக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கலகம் நடந்து இரு கட்சியிலும் பலர் காயமடைமந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பார்ப்பன தேச பக்தர்களின் ஏவுதலின்படி நம்மவர்களும் சிலர் கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது. பார்ப்பனர்களுடைய தேசபக்தி இதுபோன்ற கலவரம் இனியும் பல ஏற்பட்டு சைமன் கமிஷன் காலத்தில் நடந்ததுபோல் திருவல்லிக்கேணியிலும், மைலாப்பூரிலும் போய் புகும்வரையில் நிற்காது என்பதாகவே தெரிகின்றது.

திருவாளர்கள்: பொன்னு, கே.ஆர்.சாமி, கே.ஆர்.எத்திராஜுலு, தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதம், வி.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., பாலகுரு முதலி, சிவம், து.பொன்னம்பலம் ஆகிய கனவான்கள் நன்கு விளக்கி ஆதிதிராவிடர்களின் நிலைமையையும், வட்ட மேஜை மகாநாட்டையும், காந்தி காங்கிரஸ் முதலியவைகளைப் பற்றியும் எடுத்துப் பேசினார்கள்.

இன்னும் பல கூட்டங்கள், பலயிடங்-களில்வட ஆதிதிராவிடர்கள் ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள். அதிலும் சில பார்ப்பனர்கள் வழக்கம்போல் தங்கள் விஷமத்தையும், காலித்தனத்தையும் கையாளக் கூடும். ஏன் இவ்வாறு அவர்கள் பொறாமை கொண்டு காலித்தனம் செய்யவும், கலகம் செய்யவும் முன்வருகிறார்கள், அல்லது பிறரைத் தூண்டி விடுகின்றார்கள் என்பது எல்லாருக்கும் தெரியாததல்ல. ‘தேசியம்’ என்பதற்கே பொருள் ‘பார்ப்பனியம்’ என்றுதான் அர்த்தம். எனவே, பார்ப்பனீயம் சென்னையில் நடக்கும் தாழ்த்தப்-பட்டடவர்கள் பொதுக் கூட்டங்களைக் கண்டு தங்கள் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் வெளிப்-படுமென்று எப்படியாவது கலவரத்தை-யுண்டாக்கி பார்ப்பனரல்லாத சமூகத்தின் முக்கியஸ்தர்-களுக்கு கெட்ட பெயரைச் சூட்டி அவர்கள் முயற்சியை தடைப்படுத்தவே பார்ப்பனப் பத்திரிகைகள் நடந்த செயலை மறைத்து பொய் பிரச்சாரமும் அவதூறாகவும் எழுதுகிறது. பார்ப்பனரல்லாத வியாபாரப் பத்திரிகைகளும் பார்ப்பனீயத்திற்குத் தான் ஆதரவளிக்கின்றன. எப்படி இருந்தபோதிலும் ‘தேசிய’ப் பார்ப்பனர்கள் முயற்சிக்கும் சூழ்ச்சிக்கும் இந்தக் காலத்தில் எந்த மனிதனும் பின்வாங்கப் போவதில்லை. இனியும் தொடர்ச்சியாக பல கூட்டங்கள் போட்டு  காந்தியின் செயலைக் கண்டிக்கத்தான் போகிறார்கள். தேசியத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியை வெளியிடத்தான் போகிறார்கள். ஆதிதிராவிடர்-களில் குறைந்தது 5,000 பேராவது ஜெயிலுக்குப் போவது என உறுதி கொண்டு விட்டார்கள். பார்ப்பனீயம் ஜெயிக்குமா? சமதர்மம் ஜெயிக்குமா? என்று பார்த்துவிட உறுதி-கொண்டு விட்டார்கள்.

ஒன்றாக மனிதத்தன்மை அடைவது அல்லது வாழ்வது இரண்டிலொன்றுதான் முடிவு. எத்தனை நாட்களுக்கு ஒரு சமூகம் ஏமாற்றப்-பட்டு அடிமையாகவே இருக்க சம்மதிக்கும். இனியும் இப்பகுதியில் நடைபெறும் பொதுக்-கூட்டங்கட்கு தோழர் அ.பொன்னம்-பலனார், காளியப்பன் முதலானவர்கள் வர ஒப்பியுள்ளார்கள்.

சைமன் கமிஷனில் யாரை நியமிக்கலாம் என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தபோது பெரியார் என்ன எழுதினார் என்றால்…

சிவபூஷனம் (‘குடிஅரசு’ 25.10.1931)

அதாவது சுயமரியாதை இயக்கம் ஒரு கூட்டம் நடத்தி அதில் ஒரு கலவரம் ஏற்பட்டால் எப்படி செய்தி வெளியிட்டு இருப்பார்களோ, அப்படி ஆதிதிராவிட மகாஜனசபை கூட்டம் குறித்த செய்தியை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது. வி.பி.எஸ். மணியர், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் பங்கெடுத்த கூட்டம் இது. டாக்டர் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசனுக்கு ஆதரவான கூட்டம் இது. இதை தனது கூட்டமாக பெரியார் நினைத்து செய்தி வெளியிட்டுள்ளார்.

1928இல் சென்னையில் ஆதிதிராவிடர் மகாநாடு நடைபெற்றது. இதனை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை, ‘சர்க்கார் தாசர்களின் மாநாடு’ என்றும், ‘சுயநலக்காரர்கள் மாநாடு’ என்றும், ‘30 பேர்தான் கலந்து-கொண்டார்கள்’ என்றும் எழுதியது. இதை மிகக் கடுமையாகக் கண்டித்து எழுதியவர் பெரியார்-தான். இந்த நாட்டில் ஆதிதிராவிடர்-கள் என்ற சமுதாயம் இருப்பதாகவே மறைத்து சூழ்ச்சி செய்து வந்தவர்கள், ஆதிதிராவிடர்கள் மாநாடு நடத்துகிறார்கள் என்றதும் அதையும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஏற்பட்டு 42 வருடங்களாகியும், சீர்திருத்தம் ஏற்பட்டு 20 வருடங்களாகியும் ஏழு கோடி ஆதிதிராவிடர்களில் ஏதாவது ஓர் ஆதிதிராவிடர் ஸ்டேட் கவுன்சில் முதல் கிராமப் பஞ்சாயத்து வரையில் ஏதாவதொன்றில் பொதுப் பிரதிநிதியாக சர்க்கார் தயவில்லாமல் உட்கார இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்று கேட்கிறோம். (‘குடிஅரசு’ 22.1.1928)

இந்த மாநாட்டில் 500 பேர் கலந்து கொண்டதாகவும் ‘சுதேசமித்திரன்’ செய்தியை ‘குடிஅரசு’ மறுத்துள்ளது. ஆளுநரின் நிர்வாக சபையில் ஸ்ரீமான்களான பி.என்.சர்மாவுக்கும், சி.பி.ராமசாமி அய்யருக்கும் கொடுத்திருக்கும் உத்தியோகங்களை ஸ்ரீமான்களான எம்.சி.ராஜாவுக்கும் ஆர்.வீரய்யனுக்கும் கொடுத்தால் பார்க்க மாட்டார்களா? (‘குடிஅரசு’ 22.11.1925) என்று கேட்டது பெரியாரின் ‘குடிஅரசு’.

சைமன் கமிஷனில் யாரை நியமிக்கலாம் என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தபோது பெரியார் என்ன எழுதினார் என்றால்…

சைமன் கமிஷனில் கருப்பு மூஞ்சி ஆசாமி ஒருவரைப் போடுவதாக வெள்ளைக்காரன் சம்மதிப்பதாகவே வைத்துக்கொள்வோம். கருப்பு மூஞ்சியில் யாரைப் போடச் சம்மதிப்பது? எங்கள் சகஜாநந்தா சாமியையாவது, எம்.சி.ராஜாவையாவது, ஆர்.வீரய்யனையாவது போடச் சம்மதிப்பார்களா? ஒருகாலும் போட சம்மதிக்க மாட்டார்கள். (‘குடிஅரசு’ 29.11.1928)

இப்படி இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சகஜானந்தா, ஆர்.வீரய்யன் ஆகிய தலைவர்களை தனக்கு இணையாக, பல இடங்களில் தன்னைவிட உயர்த்தி எழுதியும் பேசியும் வந்தவர் பெரியார். இணைந்து செயல்பட்டவர் பெரியார். இதனுடைய உச்சமாகத்தான் இவர்கள் அனைவருமே ஒரே மேடையில் நிற்கும் மகத்தான நிகழ்வு 1939ஆம் ஆண்டு நடந்தது. வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய அந்த நிகழ்வு 8.10.1939ஆம் நாள் சென்னையில் நடந்தது.

தொடரும்…

தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்! - எதிர்வினை 26

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 26

டிசம்பர் 16-31 2018

’தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்!

– நேயன்

என்.சிவராஜ் நியமனத்தைப் பாராட்டி ‘குடிஅரசு’ எழுதியிருக்கும் குறிப்பு, அவரை பெரியார் எப்படி மதிப்பிடுகிறார் என்பதற்கான சான்றாகும். (‘குடிஅரசு’ 23.5.1937)

“இந்திய சட்டசபையில் ராவ்பஹதூர் எம்.சி.ராஜா அவர்களின் இராஜிநாமாவால் காலியான பதவிக்கு ராவ்சாஹிப் என்.சிவராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் சிவராஜ் அவர்கள் பல வருடங்களாக பொது வாழ்வில் அதிக பங்கு எடுத்துக்கொண்டு வருகிறார் என்பது சகலருக்கும் தெரிந்ததே. அவர் தன்னினத்தாருடைய நன்மதிப்பைப் பெற்று வந்திருக்கிறார் என்பதோடு மற்ற வகுப்பாருடைய ஆதரவையும் மதிப்பையும் தன்னுடைய உண்மையான உழைப்பாலும் கபடமற்ற செய்கைகளாலும் பெற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகம் நமது பொது வாழ்க்கையில் பாடுபடக்கூடிய பல தலைவர்-களைத் தந்திருக்கிறது. அவர்களில் தோழர் சிவராஜ் போன்ற நாவன்மையும், பிறர் உள்ளத்தைக் கவரக்கூடிய பேச்சும் பொருந்தியவர் இருப்பது மிக அரிது.

நம்மால் நினைப்பதற்குக்கூட முடியாத அவ்வளவு சீக்கிரத்தில் அவர் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக அவர், இந்திய சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்டதை மனதார வாழ்த்துகிறோம்.

தீண்டாமைப் பிரச்சினையை தீர்த்துவைக்க இடமிருப்பாதாகவே தெரியவில்லை. தீண்டாமை-யின்று விலகவேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினர் ஹிந்து மதத்தைவிட்டு விலக வேண்டும். ஆனால், வேறு மதத்தில் சேர வேண்டியது இல்லை. அவர்கள் புதியதொரு மதத்தை உண்டு பண்ண வேண்டும்.’’ (1936 ஜனவரி ‘குடிஅரசு’) மகாராஷ்டிராவில் 11.1.1936இல் நடந்த ஆதி இந்து வாலிபர் மாநாட்டில் என்.சிவராஜ் பேச்சை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது.

சிவராஜ் மறைந்தபோது, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக உழைத்த தீரத் தலைவர்’ என்று பட்டம் சூட்டியது விடுதலை.

மேலும், 30.9.1964 தேதியிட்ட ‘விடுதலை’யில், “திரு.சிவராஜ் சென்னயில் வெஸ்லி கல்லூரி, மாநிலக் கல்லூரி, சட்டக்கல்லூரி இவைகளில் பயின்று பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். பல ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்தவர். சென்னை நகரத்தின் கவுன்சிலராக பல ஆண்டுகள் இருந்து 1945ஆம் ஆண்டில் மேயராகவும் பணிபுரிந்து கவுரவம் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் சேவை புரிந்தவர். நீதிக்கட்சியில் ஈடுபாடு கொண்டு மிகவும் பாடுபட்டவர். அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவர் மறைவு பின்தங்கிய வகுப்புனர்க்கு பேரிழப்பாகும்’’ என்று செய்தியும் வெளியிட்டிருந்தது.

சிவராஜ் அவர்களைப் பற்றி கீழ்க்கண்ட செய்திகளும் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிடப்-பட்டு, இவை மட்டுமல்ல அவரின் பெருமைகள் மக்கள் மத்தியில் பெரியாரால் கொண்டு சேர்க்கப்-பட்டன.

“மத சம்பந்தமான நமது அபிப்பிராயம் ஒரு விதமாக இருந்தாலும்கூட தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மனிதத்தன்மை பெறவும் அரசியல் விகிதாச்சார உரிமை பெறவும் வாழ்க்கையில் சம உரிமை பெறவும் இந்து மதத்தை விட்டுவிட்டுக் கிறிஸ்தவர்களாகவோ முக்கியமாய் இஸ்லாமியர்களாகவோ ஆகிவிடுங்கள் என்று பல தடவை வற்புறுத்தி வந்ததை அச்சமூகம் இலட்சியம் செய்யவே இல்லை.

இதற்குக் காரணம் நம் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுடைய மதப்பற்றேதான் காரணம் என்பதாக நாம் சிறிதும் நினைக்கவில்லை. மற்றென்னவென்றால், சென்னை மாகாணத்தில் உள்ள வகுப்புவாரிப்-பிரதிநிதித்துவ முறையின் பயனாய் சில பெரிய பதவிகளும் உத்தியோகஸ்தர்களும் தாழ்த்தப்-பட்ட சமூகத் தலைவர்கள் என்பவர்களுக்குக் கிடைக்கக் கூடுமாதலால் அதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆசையானது இந்துக்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் செய்துவரும் எவ்வளவோ இழிவுகளையும் இன்னல்களையும் சகித்துக் கொண்டு சிறிதும் சுயமரியாதை இல்லாதவர்களாகித் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உயிர்வாழ வேண்டி இருக்கின்றதே தவிர வேறு காரணம் இருக்க நியாயமில்லை என்றே படுகின்றது. என்றாலும் தேதி 29.1.1935 சென்னை சட்டசபை கூட்டத்தில் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பற்றிய விவாதத்தின்போது தோழர் என்.சிவராஜ் அவர்கள் தெரிவித்த அபிப்பிராயத்தில் பெரும் பாகத்தை நாம் மனப்பூர்வமாய் ஆதரிக்கிறோம். அதாவது,

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாரும் நாங்கள் இந்து மதங்கள் அல்லவென்றும், நாங்கள் இந்துக்கள் அல்ல என்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக்-கொள்வது என்று கேட்கலாம். உங்களுக்கு துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச் சொல்லிக்கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும் இழிவும் அணுகாதோ, அதைச் சொல்லுங்கள். (‘குடிஅரசு’ 13.01.1945)

“இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் எந்த ஒரு அரசியல் திட்டத்திலும் ஷெட்யூல் வகுப்பாருக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படாமல் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறான முடிவுகளே இருக்குமேயானால், கல்வித் திட்டத்தை முழுச் சக்தியுடன் எதிர்ப்போம்’’ என்று ராவ்பகதூர் என்.சிவராஜ் அவர்கள் லார்ட் லெவலுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில்  குறிப்பிட்டிருக்கிறார். திரு.சிவராஜ் அகில இந்திய ஷெட்யூல் வகுப்புப் பெடரேஷனின் தலைவர். தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். டாக்டர் அம்பேத்கரைப் போலவே, ஷெட்யூல் வகுப்பினரின் முன்னேற்றத்தில் பல ஆண்டுகளாகத் தொண்டாற்றி வருபவர். எனவே, இவரது கருத்தை எந்த அரசியல்-வாதியும் அலட்சியப்படுத்த முடியாதென்றே கூறலாம்.’’ (‘விடுதலை’ 25.4.1945)

“…. என்று சொல்லிக்கொண்டே அம்பேத்கர் கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட சபையோர் அத்தனை பேரும் (1,000 பேர்) மனம் இளகி தாங்களும் கண்ணீர் விட்டார்கள். இந்தத் தீர்மானத்தை தோழர் சிவராஜ் அவர்கள் (பல இடங்களிலும்) மனப்பூர்வமாய் ஆதரித்திருக்கிறார். இந்தத் தீர்மானம் செய்த உடன் இராமாயணம், மநுதர்ம சாஸ்திரம், கீதை முதலிய சாஸ்திர புராண இதிகாசங்கள் அம்மாநாட்டிலேயே கொளுத்தப் பட்டிருக்கின்றன. (இவை 21.10.1935ஆம் தேதி ‘குடிஅரசு’ முதலிய பத்திரிகைகளில் இருக்கின்றன) நாசிக்கில்இவை நடந்தவுடன் நமது மாகாணத்தில் சுமார் 20, 30 இடங்களில் இத்தீர்மானத்தை ஆதரித்துப் பல மாநாடுகள் கூட்டி ஆமோதிக்கப்பட்டது. திருநெல்வேலியி-லேயே டாக்டர் ஆர்.வி.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் 10.11.1935ஆம்  தேதியிலும், திருச்செங்கோட்டில் 11.11.1935லும் தூத்துக்-குடியில் 7.11.1935லும், கோபியில் 27.10.1935லும், சென்னையில் 30.10.1935லும் மீனாம்பாள் அவர்கள் தலைமையில் 19.10.1935ஆம் தேதி திருச்சி மாநாட்டிலும் மற்-றும் சென்னையில் தோழர்கள் ஜகநாதம், சிவஷண்முகம், பாலகுரு சிவம் முதலானவர்கள் தனித்தனி மாநாடு-களிலும் வெகு ஆவேசமாய் ஆதரித்துப் பேசியும் தீர்மானங்கள் பல நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகும் பல இடஙகளில் ஆதி திராவிடர்கள் இஸ்லாமியர்-களாக ஆகி இருக்கிறார்கள். பல இடங்களில் தோழர்கள் மீனாம்பாள், சிவராஜ் முதலியவர்கள் தலைமையில் இராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் ஆகியவை கொளுத்தப் பட்டிருக்-கின்றன. இவை யாவும் பூனா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்தவை என்பதையும், பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்ட இரு தலைவர்களாகலேயே நடத்திச் செய்யப்பட்டவை என்பதையும் நினைவுறுத்திக் கொண்டு மேலால் சிந்திக்க வேண்டுகிறோம். (‘குடிஅரசு’ 4.8.1945)

(தொடரும்)

இரட்டைமலை சீனிவாசன் அவர்களை இமயமாகக் காட்டியவர் பெரியார்! - எதிர்வினை 25

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 25

டிசம்பர் 1-15 2018

இரட்டைமலை சீனிவாசன் அவர்களை இமயமாகக் காட்டியவர் பெரியார்!

– நேயன்

‘குடிஅரசு’, ‘விடுதலை’யில் வந்த இரட்டைமலையார் பற்றிய செய்திகள்

1. ஆதி திராவிடர்களுக்கு உதவி! கமிட்டி சிபாரிசு! திவான்பகதூர் ஸ்ரீனிவாசன் திட்டம். (12.4.1936 ‘குடிஅரசு’)

2. 6.5.1937 சிதம்பரம் அம்மாப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் பேச்சு (23.5.1937 ‘குடிஅரசு’)

3. கவர்னர்களுக்கு விசேஷ அதிகாரம் வேண்டும். தாழ்த்தப்பட்டாருக்குக் கொடுமை செய்த காங்கிரஸ்காரர்கள் திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் அறிக்கை. (9.5.1937 ‘குடிஅரசு’)

4. பூனா ஒப்பந்தத்தை ஒழிக்க வெகு சீக்கிரம் கிளர்ச்சி தொடங்கப்படும் என திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறுவது நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. வெகுசீக்கிரம் தொடங்க வேண்டுமென்று நாம் திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசனைக் கேட்டுக்கொள்கிறோம். (5.5.1937 ‘விடுதலை’)

5. மும்மூர்த்திகள் கண்டனம் (ஜின்னா முகமது யாகூப், திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன்)  (9.5.1937 ‘குடிஅரசு’)

6. நமக்கு உயர்ஜாதி ஹிந்துக்கள், கோயில், குளம், கிணறு, பள்ளி பாதை முதலில் எல்லாவற்றிலும் சமத்துவமான உரிமையளிக்கும் வரை தனித்தொகுதி வேண்டியதென்றும் அதாவது 20 ஆண்டுகட்குத் தனித்தொகுதி வேண்டியதென்றும் கூறியிருக்கிறோம்.

சுயமரியாதைக் கட்சியினர் நமக்காக உண்மையாக உழைத்து வருவதை யான் மனமாரப் போற்றுகிறேன்.

வடாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மாநாட்டில் ராவ்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் பேச்சு. (29.5.1932 ‘குடிஅரசு’)

7. தீண்டாதவர்களின் உரிமைகள் முழுவதும் சட்டமூலமாக ஏற்பட வேண்டும். ராவ்பகதூர் ஆர்.சீனிவாசன் அவர்கள் கூறுவதுபோல தீண்டாமை என்பதைக் குற்றமாகக் கருதும்படி சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். (2.10.1932 ‘குடிஅரசு’)

8. தாழ்த்தப்பட்டவர்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளித்தாலும்கூட, உயர்ந்த ஜாதி இந்துக்களின் ஓட்டர்கள் தொகையே அதிகமாக இருக்கும். இந்நிலையில், தாழ்த்தப்பட்டவர்களாலேயே பூர்வாங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுத்  தொகுதியில் நிறுத்தப்படும் நான்கு அபேட்சகர்-களில் யார் உயர்ந்த ஜாதி இந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருக் கிறார்களோ, அவர்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்க முடியும். முற்றும் தாழ்த்தப் பட்டார் உரிமைக்கு அஞ்சாமல் போராடும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. உதாரணமாக ஒரு ஸ்தானத்திற்கு நடைபெற வேண்டிய பூர்வாங்க தேர்தலில், ராவ்பகதூர் சீனிவாசன், டாக்டர் அம்பேத்கர், திரு.வி.அய்.முனிசாமி பிள்ளை, ஒரு வெற்றிவேலு, இன்னுஞ்சிலர் போட்டி போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்களில் முதல் மூவரும், அவ்வகுப்பினரின் மெஜாரிட்டியான ஓட்டர்களால் தெரிந்தெடுக்கப்–படுவார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

நான்காவதாக உள்ள வெற்றிவேலு என்பவரிடம் அச்சமூக மக்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெரிய மிராசுதார்கள், அய்யர், அய்யங்கார்கள் முதலியவர்களின் முயற்சியால் அவர் நான்காவது அபேட்சகராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்ற வைத்துக் கொள்வோம். இவ்வாறு பூர்வாங்கத் தேர்தலில், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் முழு ஆதரவோடும் முதன்மை-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராவ்பகதூர் சீனிவாசன், டாக்டர் அம்பேத்கர், திரு.வி.அய்.முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் இந்து மிராசுதார்கள், அய்யர், அய்யங்கார்கள் ஆகியவர்களின் சொல்லுக்குத் தாளம் போடும் வெற்றிவேலு ஆகிய நால்வரும் ஒரு ஸ்தானத்திற்குப் போட்டி போடுவார்களானால், இவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கேட்கின்றோம். பணக்கார மிராசுதார்-களின் சொல்லையும் அய்யர், அய்யங்கார்களின் சொல்லையும் கைகட்டி, வாய்பொத்திக் குனிந்து நின்று கேட்டு அதன்படி நடக்கத் தயாராக இருக்கும் வெற்றிவேலு என்பவரே தேர்ந்-தெடுக்கப்–படுவார் என்பதை யார் மறுக்க முடியும்? ஆகவே, இத்தகைய பிரதிநிதிகளாகவே சட்டசபைக்கு வந்து சேர்வார்களாயின் அவர்களால் அச்சமூகத்திற்கு என்ன நன்மை உண்டாகிவிட முடியும்? இத்தகைய பிரதிநிதி-களின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தால்தான் என்ன? (9.5.1937 ‘குடிஅரசு’)

9. தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாய் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட தலைவர்கள் அத்தனை பேரும் இன்று அழ ஆரம்பித்து விட்டார்கள். தோழர்கள் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் முதலியவர்கள் எல்லாருமே தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். சாமி சகஜாநந்தம் என்பவரும் அழ ஆரம்பித்துவிட்டார். ஆகவே, தாழ்த்தப்-பட்ட மக்கள் காங்கிரஸ்காரர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமாக ஆகிவிட்டது.

தோழர் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் இது விஷயமாய் விடுத்த அறிக்கை மற்றொரு பக்கம் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதை வாசகர்கள் படிக்க விரும்பு-கிறோம். அதில் காணும் முக்கிய விஷயங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்’’ என்பன, இரட்டைமலை சீனிவாசன் பற்றி ஏராளமான செய்திகளை ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகள் வெளியிட்டதோடு, அவர் மறைந்தபோது,

“ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகிய திவான்பகதூர் ஸ்ரீனிவாசன் தம் 86வது வயதில் இன்று பிற்பகல் மரணமடைந்து விட்டார்.

இவர் கோயமுத்தூர் கலாசாலையில் கல்வி பயின்று பின் கணிதத்தில் விசேஷ பயிற்சி பெற்று நிபுணரானார். 1891இல் இவர் பொது வாழ்வில் புகுந்து சென்னை ஆதிதிராவிட ஜன சபையை ஏற்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவிப்பதற்காக 1893இல் இவர் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்.  1895இல் டிசம்பரில் ஆதிதிராவிட முதல் தூதுக் கோஷ்டியின் தலைவராக வைசிராயைப் பேட்டி கண்டு பேசினார்.

இவர் 1900இல் லண்டன் சென்று, அங்கிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் போய், 1904இல் தென்னாப்பிரிக்க யூனியன் காங்கிரஸில் சேர்ந்தார். 16 ஆண்டுக்காலம் அங்கே உத்தியோகம் செய்துவிட்டு கிழக்காப்பிரிக்காவில் 2 ஆண்டுக்காலம் ஓய்வு பெற்றிருந்து 1923இல் இந்தியாவுக்குத் திரும்பினார். பிறகு இவர் சென்னை கவுன்ஸில் சபைக்கு அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். அங்கே இவர் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.

இவர் லண்டனில் நடந்த முதல் வட்ட மேஜை மாநாட்டிலும் 2வது வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டார். இம்மாகாணத்தில் நடந்த ஒடுக்கப்பட்ட வகுப்பின மாநாடுகள் பலவற்றில் இவர் தலைமை வகித்துள்ளார். இவர் தம் சமூக மக்களின் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் மகஜர்கள் பலவற்றை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். இவர் மரணமடையும் வரை சென்னை மேல் சட்டசபையின் அங்கத்தினராக இருந்தார்’’ என்று செய்திகள் வெளியிட்டதோடு, ‘ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்’ என்ற அடைமொழியையும் அவருக்கு ‘விடுதலை’ வழங்கியது. (18.9.1945)

மேலும், இரட்டைமலை சீனிவாசன் வெளியிட்ட முக்கிய அறிக்கையையும் ‘குடிஅரசு’ ஏடு வெளியிட்டது. அந்த அளவிற்கு இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு பெரியாரும், இயக்கமும், ‘குடிஅரசு’ ஏடும் முக்கியம் கொடுத்து அவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தன.

“இந்த நாட்டுக்கு எத்தகைய சட்டம் புகுத்தப்பட்டாலும் சரி.. ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்ளத் தக்கதாயிருக்க வேண்டு-மென்பதுதான் நமது ஆசை… இந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாதார் கோரும் சுயராஜ்யம், சுயராஜ்ஜியத்திலும் ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை அடிமை கொள்ளாமலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலும் இருக்க வேண்டுமென்பதே யாகும்’’ என்ற அறிக்கை இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.இராஜா, என்.சிவராஜ் ஆகியோர் கையொப்பம் இட்டு வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையைக் கண்டித்து அன்றைய விளம்பர மந்திரி வெளியிட்ட அறிக்கைக்கு இரட்டைமலை சீனிவாசன் அளித்துள்ள பதில் 22.10.1939 ‘குடிஅரசு’வில் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை 25.10.1939 கூடிய நீதிக்கட்சி நிர்வாகக் கமிட்டி ஏற்றுக்கொண்டது.

(தொடரும்…

ஞாயிறு, 30 ஜூன், 2024

இந்தியாவா ? பாரதமா ?-3

 

இந்தியாவா ? பாரதமா ? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

மே 1-15, 2024

(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்  – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation
– A Comparative Study’ என்னும் தலைப்பில் வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம்.
-தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்.)

சென்ற இதழ் தொடர்ச்சி…

ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?
இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு, அந்தப் பகுதியைக் காரவேல மன்னன் கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

17 அடிகள் கொண்ட அந்த கல்வெட்டிலே பத்தாம் அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல மன்னன் பாரத வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. காரவேல மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும் ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும் ‘கலிங்க நகரி’ என்றும் காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றான் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.

இந்தக் காரவேல மன்னனை, 113 ஆண்டுகளாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக்களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டு காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:

1. கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா நாடு அமைந்திருந்தது.
2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே !
3. அந்தக் காலகட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தியப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்கவில்லை.

சமண மதத்தின் பரத மன்னன்

பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல்லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும்கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் என்னும் சொல் மத ரீதியான சொல்லாடல் இல்லை. அது பல பண்பாடுகளைத் தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின்படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன்களில் ஒருவன்தான் பரதன். ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது

அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத்துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.
கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின்படி, ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால், பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து, அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான். இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால், பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டுத் தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.

இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவணபெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.

மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் ஸ்ரீமத் பாகவதமும் உறுதி செய்கின்றது. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் (5-4-9) அறுதியிட்டுச் சொல்கின்றது.
மேலே சுட்டப்பட்ட வேதிய இந்துமதப் புராணங்களின் படியும் சமண மத ஆதி புராணத்தின் படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள்

பாரத் என்று அறியப்படும் இந்தியா அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர் அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுக்கப்பட்டது. இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துகளைக் கீழே பார்ப்போம்.
திரு. அனந்த சயனம் அய்யங்கார்
இந்தியா என்ற சொல்லுக்குப் பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு.லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.
திரு.சிபன் லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்றும், வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.
திரு.எச் வி காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றி, பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்
இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு, பல மொழி
களைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்
என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது
கருத்தை முன்வைத்து, உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச்
சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும், இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சனைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.
திரு. எச் வி காமத் அவர்களும் திரு.சேத் கோவிந்த் தாஸ் அவர்களும்
பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.
திரு. காலா வெங்கட் ராவ் அவர்கள்,
ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற்சொற்கள்
என்னும் கருத்தியலால் ஹிந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.
திரு.கமலபதி திரிபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.
இந்த நிலையிலே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு, இந்த விவாதங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார். பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு
அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன்படி ‘India that is Bharat’ – ‘இந்தியா எனும் பாரத்’ என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
முடிவுரை :
இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.
1. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்
களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப்
போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
2. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப்பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
3. பாரத் என்னும் பெயரும் வெகு காலமாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
4. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம் நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (Exonym of Endonym) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.
5. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற்சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.
6. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுலகில்(?) வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்க்கிறதாம். அதனால் நெருப்புக்கு பரதா என்னும் பெயர் வந்ததாம்! இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.
7. பரதப் பழங்குடியினர் வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச் சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத்தார்கள்.
8. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை, துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.
9. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் ஸ்ரீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்.
10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மநுவின் ஸ்ருமிதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.
11. மிகப் பழமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திக்கும்பா கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணை
யாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.
12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் ஹிந்தி மொழியின் மேல் கொண்ட அபிமானத்தாலும் இந்து மதத்தின்பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியா என்னும் பாரத் என்னும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா, பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.
14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது.
(முடிவுற்றது)