பக்கங்கள்

புத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஜூன், 2024

பிராமணன் யார்? தம்மபதத்தில் தோலுரிப்பு


கட்டுரை – 

2023 கட்டுரைகள் செப்டம்பர் 1-15,2023 உண்மை Unmai

– தஞ்சை பெ. மருதவாணன்

புத்தர் தனது வாதிடும் முறையைப் பின்பற்றித் தனது படைப்பாகிய தம்மபதம் எனும் அற நூலில் பிராமணன் யார்? என்ற ஒரு வினாவை எழுப்பி அதற்கு விடை, அளிக்கும் வகையில் தனது பிராமண கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தம்மபதத்தின் 26 ஆவது அத்தியாயமாகிய பிராமண வர்க்கம் (ப்ராஹ¢மண வக்கோ என்பது பாலிமொழி) என்பதில் இடம்பெற்றுள்ள 41 செய்யுள்களில் முதன்மையான சிலவற்றில் உள்ள புத்தரின் கருத்துகளை இங்குக் காண்போம்.

1) மன ஒருமையிலிருந்து, குற்றங்களை நீக்கி அமைதியாக இருந்து, கடமைகளைச் செய்து, காம இன்பங்களைத் துறந்து உயர்நிலை அடைந்தவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்று அழைக்கிறேன் (386)
2) யாரும் பிராமணனை அடிக்கக் கூடாது. அடிக்கப்பட்டால் பிராமணனும் கோபப்படக் கூடாது. பிராமணனை
அடிக்கிறவன் வெட்கப்பட வேண்டும். தன்னை அடிக்கிறவனைக் கோபிக்கிற பிராமணனும் வெட்கப்பட வேண்டும் (389)

3) மனம், வாக்கு, காயத்தினால் தீய காரியங்களைச் செய்யாமல் இம்மூன்றினையும் அடக்கி ஆள்கிறவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்றுஅழைக்கிறேன்(391)

4) சடைமுடி (உச்சிக்குடுமி) வைத்திருப்-பதாலோ, பிறவியினாலோ, கோத்திரத்தி
னாலோ ஒருவர் பிராமணர் ஆகமாட்டார். எவரிடத்தில் உண்மையும் நல்லறமும் இருக்கின்றனவோ, எவர் தூயவரோ அவர்தான் பிராமணர் ஆவார். (393)
5) ஓ! தூர்த்தனே! உன்னுடைய சடை முடியால் (அதாவது உச்சிக் குடுமியால்) பயன் என்ன? உன்னுடைய மான் தோலினால் பயன் என்ன? உன்னுடைய மனத்தில் (ஆசையாகிய) காடு இருக்கிறது. புறத்தை மட்டும் (உடம்பை மட்டும்) சுத்தம் செய்கிறாய் (394)

(குறிப்பு: தூர்த்தன் எனும் சொல்லுக்குத் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம் வெளியிட்டுள்ள தமிழ் அகர முதலியில் (பக்கம் 607) கீழ்க்கண்ட மூன்று பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. காமுகன்

2. பரத்தமை கொண்டொழுகு வோன்

3. கொடியோன்)

6) கந்தைகளை ஆடையாக உடுத்து, உடல் மெலிந்து, காட்டில் தன்னந்தனியே தியானம் செய்கிறவர் எவரோ அவரையே நான் பிராமணன் என்று சொல்கிறேன்.(395)

7) (பார்ப்பனத்) தாயின் வயிற்றில் கருவாகக் கிடந்து பிறக்கிறவரை பிராமணன் என்று கூறமாட்டேன். கிஞ்சனம் (செல்வம்) உடையவராக இருப்பதால் அவரை ‘அய்யன்’ என்று அழைக்கலாம். பொருட்பற்றுகளை விட்டவர் யாரோ ஆசையை விட்டவர் யாரோ அவரைப் பிராமணன் என்று அழைக்கிறேன். (396)

8) ஆசைத் தளைகளை எல்லாம் அறுத்து அச்சம் இல்லாமல் இருக்கிறவர் யாரோ எல்லாப் பற்றுகளையும் நீக்கி உலக இச்சைகளை விட்டவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (397)

9) (பகை என்கிற) வாரையும் (ஆசை என்கிற) விலங்கையும் (நிந்தனை என்கிற) கயிற்றையும் (அஞ்ஞானம் என்கிற) தடைகளையும் அறுத்த ஞானியானவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்று அழைக்கிறேன். (398)

10) நிந்தனைகளையும் அடிகளையும் சிறையிடுவதையும் மனத்தாங்கல் இல்லாமல் பொறுத்துக்கொண்டு பொறுமையையே தனது சேனையாகக் கொண்டுள்ளவர் யாரோ அவரையே பிராமணன் என்கிறேன். (399)

11) கோபத்தை விட்டு, தன் கடமையைச் செய்து, ஞானம் உள்ளவராய் ஆசையற்று அடக்கமாக இருந்து இதையே கடைசி உடம்பாகக் கொண்டிருப்பவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (400)

12) தாமரை இலையில் தண்ணீர் போலவும் துறப்பணத்தின் நுனியில் (ஒட்டாத) கடுகைப் போலவும் காம சுகங்களில் பற்று விட்டவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (401)

13) முழுஞானம் பெற்று அறிஞராகி நன்மையும் தீமையும் ஆன மார்க்கங்களை நன்கறிந்து உயர்நிலையை (அர் ஹந்த நிலையை) அடைந்தவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (403)

14) எந்த விலங்கையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (405)

15) பொறுமை இல்லாதவரிடத்தில் பொறுமையுடையவராகவும் துன்பப்படுத்துகிறவர் இடத்தில் அன்புள்ளவராகவும், அவா உள்ளவர்கள் இடையே அவா அற்றவராகவும் யார் இருக்கிறாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (406)

16) துறப்பணத்தின் நுனியிலிருந்து கடுகு நழுவிப் போவதைப் போன்று சினம், பகை, இறுமாப்பு, பொறாமை ஆகிய தீய குணங்கள் யாரிடத்திலிருந்து போய்விட்டனவோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (407)

17) உண்மை பேசி இனிய வார்த்தைகளைச் சொல்லி நல்லதைப் போதித்து கடுமொழி கூறாதவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (408)

18) இவ்வுலகத்தில் நீண்டதாயினும் குட்டையாயினும், பெரியதாயினும் சிறியதாயினும் நல்லதாயினும் கெட்டதாயினும் யாதொரு பொருளையும் களவு செய்யாதவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (409)

19) முன்பும், பின்பும், இப்போதும் பற்றுகள் இல்லாமல் உலக ஆசைகளை விட்டுப் பற்றற்றவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன். (421)

20) உயர்ந்தவரும், தலைவரும், வீரரும், பெரியவரும், வெற்றியுள்ளவரும், ஆசையற்றவரும், தீமைகளைப் போக்கினவரும், ஞானம் பெற்றவரும் ஆக இருப்பவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன். (422)

(பிக்கு சோமானந்தா அவர்களால் பாலி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சென்னை எழும்பூர் மகா போதி சொசைடியால் வெளியிடப்பட்ட தம்மபதம் நூல் – 2014) இதுகாறும் எடுத்துக்காட்டப் பெற்ற புத்தரின் தம்மபதத்தில் உள்ள பிராமண வர்க்கம் எனும் இயலில் காணும் கருத்துகளின் உட்பொருள் என்ன? இன்னின்ன குற்றங்கள் இல்லாதவனே பிராமணன் என்று புத்தர் குறிப்பிடுவதன் உட்பொருள் அத்தனைக் குற்றங்களும் பிராமணன் என்று தன்னைச் சொல்லிக்கொள்பவனிடம் உள்ளன என்பதாகும். அது போல் இன்னின்ன நற்குணங்கள் உள்ளவனே பிராமணன் என்பதன் உட்பொருள் அத்தனை நற்குணங்களும் பிராமணன் என்று மார்தட்டிக் கொள்பவனிடம் இல்லை என்பதாகும். மொத்தத்தில் கயமைப் பண்புகளின் கொள்கலமே பிராமணியம் என்பதாகும். ♦


பிராமணப் பெருமை பேசி புத்தரை நேருக்கு நேர் இழிவு செய்த பார்ப்பனர்கள் – தஞ்சை பெ. மருதவாணன்


2023 ஆகஸ்ட் 16-31,2023 
புத்தர் 45 ஆண்டுகள் ஏறத்தாழ  வட இந்தியா முழுவதும் கால்நடையாகவே சென்று தனது பரப்புரைப் பயணத்
தினை மேற்கொண்டார்.   மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்களின் அய்யங்களைத் தீர்த்தபடியே இடம் விட்டு இடம் ஊர் விட்டு ஊர் என்று அவர் சென்றுகொண்டே இருந்தார். தங்கக்கூட இடமின்றி பெரும்பாலான சமயங்களில் அவர் சாலை ஓர மரங்களின் நிழலில் தங்கினார். ஒரு துறவியாய் அவர் மூன்று துவராடைகள் மட்டுமே வைத்திருந்தார்.  ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு வாழ்ந்தார்.  ஒவ்வொரு நாள் காலையிலும் வீடு வீடாகச் சென்று உணவைக் கொடையாகப் பெற்றே உண்டார். பிற்காலத்தில் தான் அவரது உபாசக சீடர்களால் தோப்புகளும் கட்டடங்களும், தங்குமிடங்களும் அளிக்கப்பட்டு அவற்றில் அவர் தங்கினார்.
இவ்வாறு புத்தர் பரப்புரை செய்த காலம் எப்படிப்பட்டது?  சென்னை எழும்பூர் மகா போதி சங்கத்தில் ஆற்றிய உரையில் தந்தை பெரியார் “புத்தர் பிறந்த காலம் ஆரியம் தலைசிறந்து மக்கள் ரொம்பவும் காட்டுமிராண்டிகளாக ஆக்கப்பட்டிருந்த காலம்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்  (விடுதலை 17.5.1957). ஆரியம் அங்கிங்கெனாதபடி எங்கும் தலைகொழுத்துத் திரிந்த காலத்தில், புத்தர் தனது பரப்புரைப் பயணத்தின்போது ஆரியப்பார்ப்பனர்களால் சந்தித்த எதிர்ப்புகளும் இழிமொழிகளும் ஏராளம்.  பல இடங்களில் புத்தரைத் தடுத்து நிறுத்தி தமது பிராமணப் பெருமையையும் உயர்ஜாதி ஆணவத்தையும் நேருக்கு நேர் சுட்டிக்காட்டி பண்பாடு அற்ற முறையில் அன்பே உருவான அறவோன் புத்தரை இழிவுபடுத்திய நிகழ்ச்சிகள் பல உண்டு.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.” (குறள் எண் 151) 
என்பதற்கிணங்க அவற்றை எல்லாம் புன்னகையோடு எதிர்கொண்டு விழிப்புணர்வூட்டும் தக்க விடைகளை ஆங்காங்கே அளித்துக்கொண்டே தனது பரப்புரைப் பயணத்தை அவர் தொடர்ந்து மேற்கொண்டார்.  அவற்றுள் ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்குக் காண்போம்.
1.அ) தனது பரப்புரைப் பயணத்துக்கிடையில் சிராவஸ்தியில் உள்ளஜேதவனம் என்ற இடத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஆசுவலா
யனன் என்ற பார்ப்பனனின் தலைமையில் ஒரு கூட்டம் புத்தரைக் கண்டு உரைத்த ஆணவச் சொற்கள் இவை:
“கோதமரே! பிராமண ஜாதியே உயர்ந்தது. மற்ற ஜாதிகள் தாழ்ந்தவை, பிராமணர் வெள்ளை நிறத்தவர். மற்றவர் கருப்பர்கள். பிராமணர்களுக்குத்தான் முக்தி
கிடைக்கும். மற்றவர்களுக்குக் கிடைக்காது.
பிராமணர்கள் பிரம்மனின் வாயிலிருந்து பிறந்தவர்கள். அவர்கள் அவனுடைய சொந்தப் பிள்ளைகள். எனவே, அவர்கள்தாம் பிரம்மனிடம் செல்வதற்கு உரிமை உடையவர்கள். இதைப்பற்றித் தங்கள் கருத்து என்ன?”  இதற்குத் தக்க விடையைப் புத்தர் அளித்தார்.
ஆசுவலாயனா! பிராமணர்களின் மனைவியர்
பூப்படைகிறார்கள்; கருத்தரிக்கிறார்கள்; குழந்தைகள் பெறுகிறார்கள்; பாலூட்டுகிறார்கள்; இவ்வாறு பிராமணர்களும் மற்ற ஜாதிக்காரர்களைப் போலவே தாயின் வயிற்றிலிருந்தே பிறக்கிறார்கள். அப்படியிருக்க அவர்கள் மட்டும் பிரம்மனுடைய வாயிலிருந்து தோன்றியதாகக் கூறிக்கொள்வது வியப்பாக இல்லையா? பிராமணர்கள் தான் ஜாதிகள் அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளுவதற்கு ஆதாரம் என்ன?” என்று கேட்டார் புத்தர்.
ஆ)மற்றொருமுறை புத்தர் ஜேதவனத்தில் இருந்தபோது ஏசுகாரி என்ற பார்ப்பனன் புத்தரைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு உயர்ஜாதித் திமிரோடு கூறினான்.
“கோதமரே! பிராமணர்களுக்கு மற்ற மூன்று ஜாதிக்காரரும் தொண்டூழியம் செய்யப் பிறந்தவர்கள் என்றும், சத்திரியருக்கு வைசிய, சூத்திரரும் வைசியருக்குச்  சூத்திரரும் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்றும், சூத்திரர்கள் மற்ற மூன்று ஜாதியினர்க்குத் தொண்டூழியம் செய்யப் பிறந்தவர்கள் என்றும் பிராமணர்கள் கூறுகிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டான். இதற்கு விடை அளிக்கையில் ”பிராமணரே! அந்தப் பிராமணர்களின் இந்தக் கருத்தை
மக்கள் எவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்களா?  இவ்வாறு பிராமணர்களுக்கு மற்றவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று சொல்ல அவர்களுக்கு யார் எப்போது உரிமை கொடுத்தது? என்று வினவினார் புத்தர்.
(மச்சிம நிகாயம் ஆசுவலாயன சூக்தம் மற்றும் தர்மானந்த கோசம்பி எழுதிய பகவான் புத்தர் ஆகிய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.  குருவிக்கரம்பை வேலு எழுதிய ‘இவர்தான் புத்தர்’ எனும் நூல் பக்கங்கள் 98 மற்றும் 102)
2. பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதி தமிழ்நாடு பவுத்த சங்கம் (சென்னை 40. இரண்டாம் பதிப்பு 2014) வெளியிட்ட புத்தம் சரணம் என்ற நூலில் (பக்கம் 79) எடுத்துக்காட்டப்படும் நிகழ்ச்சி வருமாறு:-
இதே ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஒரு நாள் வழக்கம் போல் பாத்திரத்தை ஏந்தி உணவுக்கொடை பெறுவதற்காகப் புறப்பட்டுச் செல்கையில் பரத்வாஜன் என்ற பார்ப்பனனின் வீட்டருகே சென்றார்.  புத்தரைக் கண்ட பரத்வாஜன்  “வா ஸ லா நில் அங்கே! என ஆணையிட்டான். மழித்த தலையை உடையவரே! அனுதாபத்துக்கு உரியவரே! தீண்டத்தகாத இழிந்தவரே! நில் அங்கே!” என்று ஜாதி வெறியுடன் கத்தினான். புத்தர் கோபம் கொள்ளவில்லை.  அமைதியாய்ப் புன்னகைத்தார். நிற்கவும் இல்லை.  பரத்வாஜனை அணுகிச் சென்று பேசினார்.   யார் தீண்டத்தகாதவர்? எவையெல்லாம் ஒருவரை இழிந்த நிலைக்கு உள்ளாக்குகின்றன என அறிவாயா நீ ? அந்தணனே சொல்! பிறப்பால் ஒருவர் இழிந்தவராவதில்லை.  பிறப்பால் எவரும் பிராமணன் ஆவதுமில்லை. அவரவர் செயலால் ஒருவர் இழிந்தவர் ஆகிறார். அவரவர் செயலால் ஒருவர் அந்தணர் ஆகிறார். அந்தப் பார்ப்பனருக்குப் புத்தர் கொடுத்த பதிலடி இது.
3) ஆசிய ஜோதி என்ற பெயரில் (சென்னை பாரி நிலையம் வெளியீடு. 1941) புத்தரின் கதையை ஒரு காவியமாகப் பாடிய கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்களின் கீழ்க்கண்ட கவிதை வரிகளை இங்குச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக அமையும்.
“ஓடும் உதிரத்தில் வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப்பார்த்தாலும்  – சாதி
தெரிவதுண்டோ – அப்பா
எவர் உடம்பினிலும்  – சிவப்பே
இரத்த நிறமப்பா
எவர் விழி நீர்க்கும் – உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா
நெற்றியில் நீறும் _- மார்பில்
நீண்ட பூணூலும்
பெற்றிவ்வுல குதனில் _ – எவரும்
பிறந்ததுண்டோ  – அப்பா
பிறப்பினால் எவர்க்கும் _ உலகில்
பெருமை வராதப்பா
சிறப்பு வேண்டுமெனில்  – நல்ல
செய்கை வேண்டுமப்பா
பிராமணியத்துக்கு எதிராக வாதிடுவதில் புத்தர் கடைப்பிடித்த உத்தி என்ன?
உயர்ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தும் பிராமணர்களிடம் அதனை மறுத்து வாதிடு
வதற்குப் புத்தர் என்ன உத்தியைக் கடைப்பிடித்தார்? புத்தரின் பேருரைகள் பலவற்றைச் சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மூன்று தொகுதிகளாக அளித்த பவுத்த அறிஞர் ரைஸ் டேவிட்ஸ்(Rhys Davidas) அவர்கள் புத்தர் வாதிடுவதற்குப் பின்பற்றிய முறையைப் பற்றிக்
கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
கேள்வி கேட்கிற அல்லது விவாதிக்கிற எதிராளியின் மனநிலையில் தன்னை அவர் நிறுத்திக் கொள்வார். எதிராளியின் புனித நம்பிக்கை எதையும் அவர் தாக்குவதில்லை.  எதிராளியின் அடிப்படைக் கருத்துகளிலிருந்து தான் வேறுபடவில்லை என்றே தொடங்கிப் படிப்படியாகப் பயன்படுத்துகிற சொல்லாடல்களில் புதுப்புதுப் பொருள்களைத் திணிப்பதன் மூலம் அவர் எதிராளியைத் தன் கருத்துக்கு இணங்க வைப்பார்.
எடுத்துக்காட்டாக, பிறவியிலேயே பார்ப்பனர் உயர்ந்தவர் என எதிராளி சொன்னால், பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் தான் என்று தொடங்கி, ஆனால் அது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்று நிறுவுவார்.  பிறவியில் பார்ப்பனரானவர்கள் இழிவானவர்களாகவும் இருக்கமுடியும் என முடிப்பார்.
 எதிராளியின் நிலைப்பாட்டையும் மொழியையும் கைக்கொள்ளும் இம்முறையை ‘உபய கவ்சல்ய’ என்பர்.(Rhys Davids Dialogues of Buddha 3 vol. Delhi. 2000. பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய புத்தம் சரணம் நூல் பக்கங்கள் 77-78)
(தொடரும்)

வெள்ளி, 21 ஜூன், 2024

புத்தரின் தம்மபதத்தில் பிராமணியம் தோலுரிப்பு! – தஞ்சை பெ. மருதவாணன்

  


2023 ஆகஸ்ட் 1-15,2023 கட்டுரைகள்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பகுத்தறிவு ஒளி பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு, இன்றைக்கு இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பகுத்தறிவாளர் புத்தர் ஒரு முன்னோடி! தந்தை பெரியார் அவர்களுக்கு 2442 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரை இன்றைய உலகுக்குச் சரியாக அடையாளம் காட்டியவர்களுள் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்களே! காலம் காலமாக பவுத்தத்தின் மீது படிந்திருந்த ஆரியக் கசடுகளைத் கழுவிக் களைந்து உண்மையான புத்தரைத் துலக்கிக் காட்டியவரும் அவரே!

புத்தர் யார்? எப்படிப்பட்டவர்?

தந்தை பெரியார் அடையாளம் காட்டிய புத்தர் யார்? எப்படிப்பட்டவர்?

கடவுள் என்னும் கற்பிதத்தைப் புறந்தள்ளிய கருணைமிகு பேராசான்!

கடவுளைவிடக் கேடான ஆத்மா எனும் அபத்தத்தைத் தோலுரித்துக்காட்டிய தொல் பழம் பெரியார்!

ஆரிய வேதங்கள் பயனற்ற வெற்றுரைகள் என்று ஒதுக்கித் தள்ளிய சீரிய செம்மல்!

ஆருயிர்களைக் கொடியமுறையில் கொன்றழிக்கும் ஆரிய வேள்வி என்பது ஓர் அடாத செயல் என்று ஆணித்தரமாக எதிர்ப்புக்குரல் எழுப்பிய அருளாளன்!

வேதிய நெறி விளைத்த பிறவிப்பேதத்தை வெறுத்தொதுக்கிச் சமத்துவ நெறியை வலியுறுத்திய சான்றோன்!

பிராமணியமே உயர்ந்தது எனும் ஆணவத்தை அறவழியில் வீழ்த்திய ஆன்றோன்!

ஆரியம் பிறப்பித்த கர்மம்,மறுபிறப்பு ஆகிய தீ நெறிகளை அடியோடு மறுத்த அறவோன்!

வேதிய சடங்குகள், சாஸ்திரங்கள், சொர்க்கம், நரகம், பிரார்த்தனை, பூசை, புனஸ்காரம் ஆகியவற்றை விட்டொழித்து அறிவு வழியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்திய அறிவன்!

ஒரு கருத்தினை நீ செவி வழியில் கேட்டது என்பதற்காகவோ, அது மரபு வழியாகக் கூறப்பட்டு வருகிறது என்பதற்காகவோ,
பெரும்பான்மையான பலரும் கூறுகிறார்கள் என்பதற்காகவோ, கற்றறிந்த பண்டிதர்கள் கூறுகிறார்கள் என்பதற்காகவோ, புனித மதக் கொள்கையில் இடம் பெற்றிருக்கிறது என்பதற்காகவோ மதிப்புக்குரிய மூத்தோர் அல்லது குருநாதர் போதித்தவை என்பதற்காகவோ அதனை நீ நம்பி ஏற்றுக் கொள்ளாதே! எதையும் தீர ஆராய்ந்து உன் பகுத்தறிவுக்குச் சரி என்று தோன்றினால் மட்டும் அதனை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து கொள் என்று கூறியதன் மூலம் சிந்தனைச் சுதந்திரமே ஒரு மனிதனின் பிறப்புரிமை என்று உலகுக்குப் பிரகடனப்படுத்திய பெரியோன்! ஏறத்தாழ வடஇந்தியா முழுதும் கால்நடையாகவே சுழன்றுலவி மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வுப் பரப்புரையை ஒரு பெருங்கூட்டத்துடன் ஓர் இயக்கமாகவே நடத்திய உலகின் முதல் பகுத்தறிவுவாதி! மூடநம்பிக்கை முடை நாற்றத்தை முற்றாகத் துடைத்தெறிய முனைப்புடன் பாடுபட்ட அன்றைய பெரியார்! புத்தரைப்பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தம்மபதம் – திரிபிடகத்தில் ஒரு மணிமகுடம்

தமிழ் கூறும் நல்லுலகம் படைத்தளித்த சங்க நூல் தொகுதிகளில் தலைசிறந்த அறநூலாகத் திருக்குறள் எவ்வாறு திகழ்கிறதோ அவ்வாறே திரிபிடகம் எனும் பவுத்த இலக்கியத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ள தம்மபதம் எனும் அறநூலும் சிறப்புக்குரியதாகவே காணப்படுகிறது. தம்மபதத்தைப்பற்றி அறிந்துகொள்ளுமுன் திரிபிடகம் எனும் நூற்றொகுதி குறித்து ஒரு சிறிது தெரிந்து கொள்வது பொருத்தமாக அமையும்.

1) சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்
(கி.மு 551-478) புத்தரின் சம காலத்தவர். அவர் தனது கருத்துகளைப் பேசினார்; எழுதவில்லை. சமண சமயத் தலைவரான மகாவீரரும் (கி.மு.599-527) புத்தரின் சம காலத்தவரே. அவரது போதனைகள் பேச்சு வடிவிலேயே அமைந்தன. அவரது சீடர்கள் அவற்றைப் பிற்காலத்தில் எழுத்து வடிவில் தொகுத்து அளித்தனர். புத்தரும் (கி.மு.563 – 483) தனது பகுத்தறிவுக் கருத்துகளைப் பேச்சு வடிவிலேயே தனது தாய்மொழியாகிய பாலிமொழியில் பரப்புரை செய்தார். ஏனெனில் அக்காலத்தில் எழுத்துகள் தோன்றியிருக்கவில்லை.

2) புத்தரின் மறைவுக்குப் பிறகு, மகதப் பேரரசின் தலைநகராக விளங்கிய ராஜகிரகம் என்ற இடத்தில் புத்தரின் முக்கிய சீடராக விளங்கிய மகாகாசிபர் தலைமையில் (இவர் பிக்குவாக மாறிய பார்ப்பனர்). பல நூறு தொண்டர்கள் கூடிய முதற்பேரவை (First council) புத்தரின் போதனைகளைத் தொகுக்கும் பணியை மேற்கொண்டது. அந்தப் பேரவையில் உபாலி எனும் முக்கிய சீடர் (நாவிதராக இருந்து பிக்குவாக மாறியவர்) விநயபிடகம் எனும் பெயரில் புத்தர் வழங்கிய நெறிமுறைகளின் தொகுப்பினை வாய்மொழியாக ஓதினார். அணுக்கத் தொண்டரும் புத்தரின் சிறிய தந்தை சுக்கிலோதனரின் மகனுமாகிய ஆனந்தர் அபிதம்மபிடகம் எனும் புத்தரின் உயர்ஞானத் தொகுதியினை அவ்வாறே ஓதினார். பிற்காலத்தில் சுத்தபிடகம் எனும் புத்தரின் பேருரைத் தொகுப்பானது அபிதம்ம பிடகத்திலிருந்து பிரித்து எடுத்துத் தனியே தொகுக்கப்பட்டது. இம்மூன்று தொகுப்புகளும் திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(பிடகம் என்பது கூடை-  பெட்டி – வகுப்பு. பகுதி என்று பொருள்படும்)

3) திரிபிடகங்கள் எனும் மூன்று தொகுதிகளில் 31 நூல்கள் இடம் பெற்றுள்ளன. விநயபிடகத்தில் 5 நூல்களும் அபிதம்ம பிடகத்தில் 7 நூல்களும் சுத்தபிடகத்தில் உள்ள 5 நூல்களில் ஒன்றாகிய குந்தகநிகாயத்தில் அடங்கியுள்ள 15 நூல்களும் ஆக மொத்தம் 31 நூல்கள் திரிபிடகங்கள் என்று அழைக்கப்
படுகின்றன. இந்த குந்தக நிகாயத்தில் உள்ள 15 நூல்களில் ஒன்றுதான் தம்மபதம் எனும் அறநூலாகும்.

4) இம்மூன்று தொகுப்புகளும் எழுதாக்கிளவியாக செவிவழியில் வாய்மொழியாக பல நூற்றாண்டுகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், இலங்கைத் தீவை கி.மு.முதல் நூற்றாண்டில் அரசாண்ட (கி.மு. 29 – 17) வட்டகாமினி அபயன் என்ற அரசன் காலத்தில் திரிபிடகங்கள் முதன் முதலாக எழுத்துவடிவில் பாலி மொழியில் தொகுக்கப்பட்டு இலங்கையில் பாதுகாத்து வைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.

5) திரிபிடக நூல்கள் (தம்மபதம் உள்பட) அனைத்திலும் புத்தரின் போதனைகளுக்கு மாறான ஆரிய சனாதனக் கருத்துகள் ஊடுருவிக் கலக்காதவை இல்லை என்ற புரிதலோடும் அந்நூல்களில் உள்ள உண்மையான பவுத்தக் கருத்துகளைக் கண்டறியும் தெளிவோடும் அவற்றை அணுக வேண்டியுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

6) தங்கவயல் லோகிதாசன் எழுதிய ‘பவுத்தமும் சமணமும்’ என்னும் நூலில் (பாண்டியன் பதிப்பகம் சென்னை. முதற்பதிப்பு. 1994. பக்கம் 72) திரிபிடகங்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.:- பெரும்பாலும் புத்தரின் வாக்குகளைக் கொண்டிருப்பனவாகக் கருதப்படும் திரிபிடகங்களே (முக்குடலை) பவுத்தத்திற்கு அடிப்படை நூல்களாகும். இப்பிடகங்களில் கையாண்டுள்ள சொற்களெல்லாம் புத்தர் மொழிந்தவை என பவுத்த அறிஞர்கள் நம்புவதில்லை. புத்தரின் கருத்துகளை இவை பெரும்பாலும் சார்ந்து உள்ளன என்றே நம்புகிறார்கள்.

தம்மபதத்தின் அமைப்பும் சிறப்பும்.

1. தம்மபதம் எனும் அறநூலில் 26 அத்தியாயங்களும் 423 செய்யுள்களும் அடங்கி உள்ளன. புத்தரின் படைப்பாகிய தம்மபதம் சொல்லழகும் கருத்தாழமும் நிறைந்த ஒரு சிறந்த அற நூலாகும். இந்நூல் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி, ரஷ்யா, லத்தீன், சீனம், திபெத்து, வங்காளி, இந்தி, கன்னடம் உள்பட உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் இலங்கையைச் சேர்ந்த மறைந்த பிக்கு சோமானந்தா அவர்களால் பாலிமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

2. கிருஷ்ண தத்தபட் என்பவர் எழுதி மதுரை காந்தி அருங்காட்சியகத்தைச் சேர்ந்த காந்தி இலக்கிய சங்கம் வெளியிட்ட பவுத்தம் எனும் நூலில் (பக்கம் 53) தம்மபதத்தைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இந்து மதத்தில் கீதை எப்படியோ அப்படியேதான் புத்த மதத்தில் தம்மபதம். கீதை மகாபாரதத்தில் ஒரு பகுதியாக இருப்பதைப்போல தம்மபதமும் சுத்த பிடகத்தினது குந்தக நிகாயத்தின் ஒரு பகுதியாகும். புத்த மதத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு தம்மபதம் ஒன்றை மட்டும் படித்தால் போதும். மனிதனை அஞ்ஞான இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துப்போவதற்கு உதவும் சுடர் விளக்காகும் அது.

தம்மபதத்தில் காணும் அறமொழிகள்

தம்மபதத்தில் உள்ள அனைத்து அறமொழிகளையும் அறிந்து கொள்வது வரவேற்கத்தக்கது என்றாலும் விரிவஞ்சி. அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டுகளாக இங்கு காண்போம்:-

1) அழுக்குகளில் எல்லாம் அறியாமை என்னும் அழுக்கு மிகக் கொடியது. இது பெரிய குற்றம். பிக்குகளே! இந்த அழுக்கை நீக்குங்கள். அழுக்கற்று இருங்கள். (243)

2) கற்பாறை சூறாவளிக் காற்றுக்கும் அசையாமலிருப்பதைப்போல, அறிஞர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைய மாட்டார்கள். (81)

3) அறிஞர்கள் எப்பொருளிலும் பற்றுவைப் பதில்லை. இன்பத்தினாலும் துன்பத்
தினாலும் பற்றப்படாமையால் அவர்கள் பெருமை அடைவதுமில்லை; தாழ்மையடைவதுமில்லை. (83)

4) ஒருவர் தன் குற்றத்தை அறிவாரானால் அதனாலேயே அவர் அறிவாளி
யாகிறார். தான் அறிவாளி என்று நினைக்கிற ஒரு மூடன் உண்மையிலேயே மூடனாக இருக்கிறான் (63).

5) குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால் செல்வப் புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக் கருதி அவரோடு நட்புக் கொண்டு பழக வேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமே அன்றி தீமை பயக்காது. (76)

6) பிறர் தீமை செய்வதைக் கண்டித்து அறிவு புகட்டுகிறவர்கள் நல்லோருக்கு அருமையானவர்கள். ஆனால், தீயவர்களுக்கு வெறுப்பானவர்கள். (77)

7) சிறிது இன்பத்தை விடுதலினாலே பெரிய இன்பத்தை அறிஞர் ஒருவர் காண்பாரானால் அப்பெரிய இன்பத்திற்காகச் சிறிய இன்பத்தைத் துறப்பாராக. (290)

8) உடல் வாக்கு மனம் இவற்றை அடக்கி ஆள்கின்ற அறிஞர் உண்மையாகவே நல்ல அடக்கமுடையவர் ஆவார். (234)

9) அடக்கியாள்வதற்கும் காப்பதற்கும் அருமையானதும், சலித்துக் கொண்டே இருக்கிறதும் உறுதியற்றதுமான மனத்தை அறிவாளிகள் வளைந்த அம்புகளை
வேடன் நீட்டிப்பது போலச் செம்மைப்படுத்துகிறார்கள். (33)

10) நீயே உனக்குத் தலைவன். உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவனாகக் கூடும்? ஒருவர் தம்மைத் தாமே அடக்கி ஒழுகக் கற்றுக் கொண்டால் அவர் பெறுதற்கரிய தலைமையைப் பெற்றவராவார். (160).

11) முன்பு அசட்டையாயிருந்து பிறகு விழிப்படைந்து முயற்சியோடிருப்பவர் மேகத்தில் மறைவுண்டிருந்த வெண்ணிலா அதை விட்டு வெளிப்பட்டதைப் போன்று பிரகாசிக்கிறார். (172)

12) ஒருவர் தான் உபதேசிப்பது போல செய்கையிலும் நடவாமலிருப்பாரானால் அவருடைய உபதேசம் மணமில்லாத பூவைப் போலப் பயனற்றதாகும். (51)

13) வழக்கில் தீர்ப்பளித்ததனாலேயே ஒருவர் நீதிபதியாக மாட்டார். பண்டிதரான ஒருவர் மெய்யையும் பொய்யையும் ஆராய்ந்து பார்த்து யோசனையோடு விருப்பு வெறுப்பின்றி நேர்மையாகத் தீர்ப்பளிக்கிறார். அறநெறியைப் போற்றும் அந்த அறிஞர் பண்டிதர் எனப்படுவார்.(256 – 257)

14) நல்லவர்கள் தூரத்தில் இருந்தாலும் இமயமலை போன்று காணப்படுகிறார்கள். தீயவர் இருட்டில் எய்யப்பட்ட அம்பு போல், காணப்படாமல் இருக்கிறார்கள். (304).

15) நற்செயல்களைச் செய்கிறவர்கள் தாம் செய்யும் நற்செயல்களின் விளைவு முதிர்ச்சி அடையாதவரையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால், நற்செயல்கள் முதிர்ந்து பயன் தரும்போது இன்பங்களைக் காண்கிறார்கள். (120)

16) தீமைமைகளைச் செய்கிறவர்கள் தாம் செய்யும் தீமையின் விளைவு முதிர்ச்சியடையாதவரையில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். ஆனால், தீயசெயல்கள் முதிர்ந்து விளைவைத் தரும்போது துன்பங்களை அனுபவிக்கிறார்கள். (119)

17) கையில் புண் இல்லையானால் அதில் நஞ்சினை எடுக்கலாம். புண் இல்லாத கையை நஞ்சு தாக்காது. தீய செயலைச் செய்யாதவரைத் தீமை ஒன்றும் அணுகாது. (124).

18) யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே! கடுஞ்சொல் பேசியவர்கள் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர். கடுஞ்சொற்கள் உண்மையாகவே துன்பம் தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கப்படும். (133)

19) பிறருடைய குற்றம் எளிதில் காணப்படுகிறது. ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது. பிறருடைய குற்றங்களைப் பதரைத் தூற்றுவதுபோலத் தூற்றுகிறவர் தந்திரமுள்ள சூதாடி தன் தோல்வியை மறைப்பதற்காகச் சூதுக்காயை ஒளிப்பதுபோலத் தன் சொந்தக் குற்றத்தை மறைக்கிறார். (252)

20) இரும்பில் உண்டான துரு இரும்பையே அழித்து விடுவது போல தீய நெறியில் செல்வோர் தம் தீய செயல்களால் அழிக்கப்படுகிறார்கள். (240)

21) கோபத்தை அன்பினால் வெல்க! தீமையை நன்மையினால் வெல்க! ஈயாத கருமியைக் கொடையால் வெல்க! பொய்யை மெய்யால் வெல்க! (225)

22) நன்கு வளர்க்கப்பட்ட குதிரையானது தன்மீது குறடா அடி விழாதபடி நடந்து கொள்வதுபோல தீய செயல்களினால் வரும் பழிக்கு அஞ்சி நிபந்தனைக்கு நாணி நல்வழியில் ஒழுகுவோர் மிகச் சிலரே. (143)

23) இளமையில் தூய வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகாதவரும் செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும் (தமது முதுமையில்) மீனில்லாத குளத்தில் இரை தேடிக் காத்திருக்கும் கிழக் கொக்கைப் போலச் சோர்ந்து அழிவர். (155)

24) முழுதும் இகழப்படுபவரும் முழுதும் புகழப்படுபவரும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை; என்றும் இல்லை. (228)

25) தன்னை விட மேலான அல்லது தன்னைப் போன்று அறிவுள்ள நண்பர்களை அடைய முடியாவிட்டால் அறிஞர் தன்னந்தனியே உறுதியாக இருக்கட்டும். ஏனென்றால் மூடர்களோடு நேசம் கூடாது.(61)

(தொடரும்)

ஞாயிறு, 26 மே, 2024

அய்யப்பன் கோயில் – தெரியாத உண்மைகள்

விடுதலை ஞாயிறு மலர்
Published November 25, 2023

பாணன்

புத்தரை வணங்கிய அரச குடும்ப இளவரசனே அய்யப்பன்

சபரிமலை அய்யப்பன் ஒரு அரசர்.. கடவுள் அல்ல.. அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே. அய்யப்பன் கோயில் – தெரியாத உண்மைகள் பல. கேரளா சபரிமலையில் உள்ள அய்யப்பன், உண்மையில் புராண கதை அல்ல, அது வரலாற்று பூர்வமான- உண்மை. ஆனால் அந்த உண்மை இந்து பக்தர்கள் விரும்பும் உண்மை அல்ல, அய்யப்பன் உண்மையில் இந்து கடவுள் அல்ல, அது ஒரு பவுத்த கோயில், அதை விட வினோதம் என்னவென்றால், அய்யப்பனே புத்தரை வணங்கி வந்த ஒரு அரசகுடும்ப இளவரசன் என்பது தான். இங்கு சொல்லப்பட்டிருப்பது, கற்பனை அல்ல, பந்தள அரசவம்சத்தில் வந்த, கேசரி பாலக்ருஷ்ண பிள்ளை எழுதிய ‘Followers’, மற்றும் ‘ஈழவர் செம்பாட்டு’ என்ற நூல்களில் இருந்து பெரும்பகுதியும், நலன்கல் கிருஷ்ணபிள்ளை மற்றும் டாக்டர்.எஸ்.கே.நாயர் ஆகியோரின் புத்தகங்களிலிருந்தும், ஜம்னாதாஸ் எழுதிய ‘திருப்பதி புத்தர் கோயிலே’ என்ற புத்தகத்திலிருந்தும் சொல்லப்படும் வரலாறே அய்யப்பன். புராண கதைகளை சுருக்கமாக பார்த்தால், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்தவன், கழுத்தில் மணியுடன் காட்டில் குழந்தையாக பந்தள ராஜனால் கண்டெடுக்கப் பட்டு, அவனிடம் வாழ்கிறான் (காது கேளாத வாய்பேச முடியாத குருவின் மகனை குணப்படுத்துகிறான்.)

அய்யப்பனின் உண்மை வரலாறு

(கேரள கிருஸ்த்துவ மதத்தின் தாக்கம்), சின்னம்மாவின் சூழ்ச்சியால் காட்டுக்கு புலிப்பால் கொண்டு வர போகிறான், அங்கே மகிஷியை கொல்கிறான், பின்னர் உதயணன் என்ற கொள்ளையனை கொல்கிறான், பின் சபரி மலையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறான். உண்மையிலேயே நான் படித்த புராண கதைகளில் அந்த கதாசிரியரின் ஒரு தனித்துவ முத்திரை (Author’s Personal Touch) இல்லாத கதை இதுவென்று தான் சொல்வேன். அய்யப்பனின் உண்மை வரலாறு என்னவென்று பார்ப்போம், இதற்கு முன் பாலக்காட்டில் நம்பூத்ரிகள் அந்நாட்டு மன்னனால் விரட்டி அடிக்கப் பட்ட வரலாறில் நாம் கி.பி.1200இல் சடவர்ம  சுந்தரபாண்டியன் மற்றும் சடவர்ம வீரபாண்டியன் இருவருக்கும் ஏற்பட்ட வாரிசு தகராறில் மாலிக்காபூர் (உண்மையில் மாலிக்காபூர் இஸ்லாமிய மதத்தை தழுவிய குசராத்தி பார்ப்பனன்), அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாக வேலை பார்த்து பின்னர் படைதளபதியாக உள்ளே நுழைந்து பஞ்சாயத்து செய்ததை பார்த்தோம். இதில் தோற்று ஓடிய வீரபாண்டியனும் அவனது குழுவும் கேரளா நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

அங்கே பந்தள நாட்டில் கைபுலத்தம்பன் என்ற மன்னன் அவர்களுக்கு அடைக்கலம் தந்தான். கைபுலத்தம்பன் வாரிசு இல்லாமல் இறந்து போக நாயர்கள், தமக்குள் ஏற்பட்ட சண்டையில், யாருக்கும் வேண்டாம், பாண்டியனே  மன்னனாக இருக்கட்டும் என்று அவனுக்கு முடிசூட்டுகின்றனர். கி.பி. 1300-களில், பஞ்சம் காரணமாக பாண்டிய நாட்டிலிருந்து சிறு படை களோடு, கொள்ளையடிக்க கேரள காட்டுப் பகுதிக்கு வருகிறான் உதயணன் என்ற பாண்டிய மறவர் வீரன். இவன் அங்கு தலப்பாரா, இஞ்சிப்பாரா, கரிமலா ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டி  வருவோர் போவோரிடம் கொள்ளை அடித்து வருகிறான். இந்த பாதை, பழங்காலத்திலிருந்தே, கடல் வழியே வரும் அராபிய ராவுத்தர்கள் (இஸ்லாம் வருவதற்கு முன் குதிரை வணிகர்களின் பெயர்), முண்டகாயம், இடுக்கி, பந்தனம்திட்ட பகுதிகளில் வெள்ளாளர்கள் (விவசாய குடிகள்) வியாபாரத்திற்கு பயன் படுத்தி வந்த  பாதையாகும். சபரிமலையில் இருந்த புத்த கோயிலின் பழைய பெயர், அவலயோகிச்வர விகாரம், அங்கே மக்கள் வழி பட்ட தெய்வம் தர்ம சாஸ்தா என்ற அவலயோகிச்வர சிறீபுத்தர்.

உதயணன் பந்தள நாட்டைக் கொள்ளையடித்து இளவரசியைக் கடத்தினான்

சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகளின் பேர்கள் பெரும்பாலும் பள்ளி, காவு என்ற சொல்லை கொண்டிருக்கும் கருநாகப்பள்ளி, பள்ளிக்கால், பரணிக்காவு, புத்தனுர்(போத்தனூர்). சாத்தன், புத்தஞ்சன், சாச்த்தவு போன்ற பெயர்கள் புத்தரை குறிக்கும் சொற்களே. முன்னர் சொல்லப்பட்ட கொள்ளையன் உதயணன், பலமுறை அவலயோகிச்வர விகாரத்தை கொள்ளையடிப்பது வழக்கம், அங்கே அருகே இருந்த அலங்காடு, அம்பலப்புழா என்ற இரண்டு ஊர்மக்கள் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டையில் இருந்தது. உதயணனுக்கு, தன் கொள்ளை வேட்டைக்கு வசதியாக இருந்தது. ஒருமுறை உதயணன், பந்தள நாட்டிக்கு வந்தான், (பந்தளம் – பத்து தளம் – பத்து ஊர்களை கொண்ட ஒரு சிறு நாடு), அவன் வந்த போது நாட்டில், அரசன் மற்றும் முக்கிய வீரர்கள் யாரும் இல்லை. 

வயதான தளபதி காம்பிள்ளில் பணிக்கர் மட்டுமே இருந்தார். வந்த உதயணன் அரசனின் தங்கையான இளவரசியையும் தூக்கி செல்கிறான். அவளை காதலித்து வந்த பணிக்கரின் மகன், உதயணன் கோட்டைக்குள் ரகசியமாக புகுந்து அவளை மீட்கிறான். ஆனால் தப்பித்த இளவரசி நாட்டுக்கு திரும்பினால் தான் ‘புனிதம்’ இல்லாதவள் என்று நம்பூதிரிகள் சொல்லுவார்கள் என சொல்ல இருவரும், பொன்னம்பலமேடு காட்டுப் பகுதிக்குள் சென்று வசிக்கிறார்கள், அவர்களுக்கு அய்யப்பன் என்ற மகன் பிறக்கிறான். இங்கு அவர்களுக்கு பெரிதும் உதவுவது பெரிசெரி பிள்ளை என்ற வேளாளகுல தலைவன், இவரே பின்நாளில் அய்யப்பனின் மாமன் என்று  அழைக்கப்படுகிறார். அய்யப்பன் பிறகு செம்பொறா குருகுலத்தில் களரி பயின்று வருகிறான். பிறகு ஒரு நாள் பந்தள ராஜா, பொன்னம்பலமேடு பகுதியில் வேட்டைக்கு வரும் போது, தன தங்கையை பார்த்துவிட, எனக்கும் வாரிசு இல்லை, என் மருமகன் தான், இனி நாட்டை ஆளவேண்டும் என்று கூறி அழைத்து செல்கிறான்.

ஒருமுறை, காட்டெருமைகளின் தொல்லை அதிகமாக இருக்க, அய்யப்பன் அவற்றை விரட்ட, சிலகாலம் தங்கி வேட்டையாடிய இடமே எரிமேலி (எருமை கொல்லி) பகுதி. இறுதியாக உதயணனை அழித்து, அவலயோகிச்வர விகாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தன் பொறுப்பை நிறைவேற்ற அய்யப்பன் முடிவுசெய்கிறான். உதயணன் இதற்குள் பெரும்  பலத்துடன் வளர்ந்து விட்டதால், தனியாக முடியாது என்று சுற்றி உள்ள மற்ற அரசர்களின் உதவியை நாடுகிறான், முதலில் காயம்குளம் அரசனை நாடுகிறார், அவர் தன மக்கள் கடற்கொள்ளையரால் அவதிப்படுவதாகவும், அவர்களை அடக்கினால், தான் உதவ தயார் என்று கூறுகிறார். காரணவர் என்ற அந்த நாட்டின் படைத்தலைவனின் உதவியோடு, அய்யப்பன் கடற்கொள்ளையரை வெல்கிறான்.

அய்யப்ப பக்தர்களின் சரம்குத்தி பழக்கத்திற்குக் காரணம் என்ன?

அந்த கொள்ளையர் தலைவன் வாவர் என்ற பெயர் கொண்ட இஸ்லாமியன், அய்யப்பன் அவனின் வீரத்தை மெச்சி தன் படைகளுடன் சேர்த்து கொள்கிறான். பின்னர், நட்பு அரசர்கள் படைகளுடன், பந்தள நாட்டின் தலைமை தளபதி கடுத்தநாயர், வில்லன், மல்லன் என்ற இருசிறந்த வீரர்கள் மற்றும் வாவர் ஆகியோரின் தலைமையில் பெரும் படையை சேர்த்துக்கொண்டு உதயணனை அழிக்க புறப்படுகிறான். தன் படைகளை மூன்று பிரிவுகளாக அய்யப்பன் பிரிக்கிறார். 1. வாவரின் தலைமையில் ஆலங்காட்டு யோகம் 2. கடுத்தநாயர் தலைமையில் அம்பலப்புழா யோகம் 3. வில்லன் மல்லன்  தலைமையில் பந்தளநாடு யோகம் என்பவை அவற்றின் பெயர்கள். ஆலங்காட்டு யோகம் மற்றும் அம்பலப்புழா யோகம் படைகள் போரிட்டதையே இன்று பெட்டதுள்ளல் என்ற பழக்கமாக மாறிவிட்டது. சண்டைக்குப் புறப்பட்ட படைகள் அவலயோகிச்வர விகாரத்தை நெருங்கிய போது, அமைதியான கோயிலின் அருகே செல்லும் போது போர்கருவிகளை எடுத்து செல்லக் கூடாது என்று அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே வைத்து விட்டு செல்ல சொல்லப்பட்டது. அதுவே இன்று பக்தர்களின் சரம்குத்தி என்ற பழக்கமாக மாறிவிட்டது.

இம்மூன்று படைகளும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று திசைகளிலிருந்து தாக்க நாலாவது திசையில் அரபிக்கடல் வழிமறிக்க இறுதியாக கொள்ளையன் உதயணன் கொல்லப்படுகிறான். அவலயோகிச்வர விகாரத்தை புனரமைத்து, புதிய அவலயோகிச்வரர் சிலையை நிர்மாணிக்கும் வரை இப்போது சபரி மலையில் மணிமண்டபம் இருக்கும் இடத்தில் அமர்ந்து மேற்பார்வை செய்துவந்தான். பின்னர் தன் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்தான் 1300இல்  நடந்த இந்த வரலாறு எப்போது புராணமாக மாற்றப்பட்டது என சரிவர தெரியவில்லை.

ஆனாலும் சபரி மலை தர்ம சாஸ்தா கோயில் என்பதை அங்கே உள்ள வழக்கங்களை கொண்டு அறியலாம்.

பவுத்த நிகழ்வுகள் அனைத்தும் விஷ்ணு, அய்யப்பன் கதைகளாக மாற்றப்பட்ட கயமைத்தனம்

எடுத்துக்காடாக தர்மம் (அ) தம்மம் என்பது புத்தமத வார்த்தையே, புத்தமத நூலான அமரகோசம் “சத்தா தேவ மனுசானாம்” சாத்தான் என்றால் புத்தர் என்று சொல்கிறது. பழைய புராண நூலான விஷ்ணு புராணத்தில் அய்யப்பனை பற்றிய எந்த குறிப்பும் இல்லை ஆனால், பிற்காலத்தில் எழுதப்பட்ட சிறீமத் பாகவதத்தில் அய்யப்பன் வருகிறார், இதிலிருந்து நாம் அறிவது பிற்காலத்தில் பாகவதத்தில் அய்யப்பன் சேர்க்கப்படிருக்க வேண்டும் அல்லது பாகவதமே 1400-பின் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். அய்யப்பன் கையில் காட்டும் சின் முத்திரையை, உலகில் உள்ள எல்லா புத்தர் சிலைகளிலும் காண முடியும். அய்யப்பனின் ஆயுதங்கள் எல்லாமே போதிசத்துவரின் ஆயுதங்களே.  பிரபல வரலாற்று ஆசிரியர் வானமாமலை கூறுவது என்னவென்றால், புத்தமதம், தமிழ்நாட்டில் அழியவில்லை பவுத்த கதைகள் அனைத்தும் விஷ்ணு கதைகளாக மாற்றப்பட்டுவிட்டன, அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே. இவை எல்லாவற்றையும் கடந்து அய்யப்பன் கோயில் வழி பாட்டில் ஒருவித சமத்துவத்தை காணலாம், எல்லா ஜாதியினரும் தன குழுவுக்கு குருசாமி ஆகலாம், தீவிரமான விரதங்கள், விரதம் இருக்கும் ஒரு பார்ப்பானை காட்டுங்கள் பார்போம். 

பத்மசம்கிதை என்ற வேதபுராண நூல், அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய வேண்டியது பரசவா என்னும் சூத்திரனாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், அதையும் பார்ப்பனர் ஏமாற்றி அவர்களே எடுத்துக் கொண்டார்கள். இதில் மற்றும் ஒரு வேடிக்கை என்னவென்றால், கேரளாவில் இருக்கும் கோயிலில், தலைமுறை தலைமுறையாய் பூஜை செய்பவர்கள் ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு பார்ப்பனர், விஜயநகர பேரரசை கடைசி வம்சமான அரவிடு வம்சத்தினரான நாயக்கர்கள் ஆண்ட போது இந்த அவலயோகிச்வரர் இந்து அய்யப்பனாக மாற்றப்பட்டிருக்கலாம்.

பவுத்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே சபரிமலை அய்யப்பன் கோயில்

இதற்கும் ஒரு கதை உண்டு. பரசுராமன் ஆந்திர தேசத்தில் இருந்து இரண்டு பார்ப்பனரை அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய கூட்டிவந்தான், அவர்களை ஆற்றை கடந்து வர சொன்ன போது, ஒரு பார்ப்பான் தண்ணியின் மீது ஏறி நடந்துவந்தான், அவனை பரசுராமன் தாரைநேன்னிள்ளார் என்றான், அடுத்தவன் ஆற்றுநீரை இரண்டாக பிளந்து நிற்கச்செய்து அடியிலிருந்த மண் தரையில் நடந்து வந்தான் அவனை தாளமண் என்று அழைத்து நீ தான் உயர்ந்தவன். எனவே, நீ தான் அய்யப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றான். அன்று முதல் இன்றுவரை தாளமண் குடும்பத்தினரே அங்கு பூஜை செய்து வருகின்றனர். 1821இல் பந்தளம் ராஜ்ஜியத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் சேர்க்கும்போது, சுமார் 48 கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சேர்க்கப்பட்ட போது சபரி மலையும் சேர்க்கபடுகிறது. பின்னர் இப்போது அங்கிருக்கும் சிலையே 1910இல் தான் நிறுவப்படுகிறது. 1975இல் அங்கிருந்த கோயில் தீக்கிரையாகிறது (அல்லது ஆக்கப்பட்டதா எனத் தெரியாது) அதன் பின் இப்போது நாம் பார்க்கும் வடிவில் கோயில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு அதன் பழைய பவுத்த அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது.

புதன், 10 ஜூலை, 2019

புத்தரும் - இராமனும் ஒன்றா? பார்ப்பனர்களின் பாடபேதம்!



மின்சாரம்


கே: ராமர் காலத்தில் இலங்கையில் நடந்த பல சம் பவங்கள், ராமாயணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனால், இன்றுவரை அதுபோன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடந்ததாக இலங்கை காட்டிக் கொள்ளவே இல்லையே ஏன்?

ப: இதற்கு நம்முடைய முந்தைய அரசுகள்தான் முக்கியக் காரணம். புத்த மதம் பரவிய பிறகு, இலங்கையில் ராமாயண பாரம்பரியம் மங்கியது உண்மை, ஆனால், மறையவில்லை. நம் நாட்டுக்கும் இலங்கைக்கும் புத்தரும், ராமரும் இருவழிப் பாலம் போல். ஆனால், இலங்கை அரசு புத்தரைக் கொண்டாடி யது. மதச்சார்பற்ற நம் அரசு ராமரைக் கொண்டாடவில்லை. எனவே, இலங்கை யில் ராம பாரம்பரியம் மங்கியது. ஆனால், இப்போது ராமாயண தொடர்புள்ள இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது துவங்கியிருக்கிறது. (https:// www.inditales.com/ramayana-places-to-see-sri-lanka/) 2016-ஆம் ஆண்டு மோடி அரசும், இலங்கை அரசும் இந்தியா வில் புத்தர் தொடர்புள்ள இடங்களையும், இலங்கையில் ராமர் தொடர்புள்ள இடங்களையும் இணைத்து சுற்றுலாத் திட்டம் தயாரித்து, அது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (இந்தியா டுடே 14.7.2016) இதை 70 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால், நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது.

(‘துக்ளக்’, 8.5.2019 பக். 25)

பார்ப்பனர்களைப்போல பாடத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்டல்கள் உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சாணியைக் கடவுளாக்கிக் காட்டும் சாமர்த்திய சாலிகள் ஆயிற்றே!

தவமிருந்தான் சூத்திரன் சம்புகன் என்று கூறி அவன் கழுத்தை வாளால் வெட்டிக் கொன்ற தலை வெட்டித் தம்பிரான் அல்லவா இராமன்! வருண தருமத்தைக் கட்டிக் காக்க அவதாரம் எடுத்தவனாயிற்றே!

அந்த வருண தருமத்தை ஒழித்துக் கட்டப் புறப்பட்ட புத்தர் எங்கே - வருணதருமத்தைக் காப்பாற்ற கற்பிக் கப்பட்ட இராமன் எங்கே?

‘துக்ளக்’ தூக்கி கூத்தாடும் அந்த இராமாயணம் பவுத்தர்களைப் பற்றி என்ன சொல்லுகிறது?

யதா ஹி சவ்ர;

ஸ்யத தயாஹி புத்த;

ததாகதம் நாஸ்திக மகர வித்தி

(வால்மீகி இராமாயணம் அயோத் தியா காண்டம், சுலோகம் 1502)

“ஒரு திருடன் எப்படிப்பட்டவனோ அப்படிப்பட்டவன் புத்தன். வேதத்திற்கு எதிரானது புத்தனுடைய கருத்துகள். புத்தியுள்ள மக்களே நாத்திகவாதிக ளாகிய புத்தர்களுக்கு முகம் கொடாதீர் கள்” என்று சொல்லுகிற இராமாயணமும் அதன் கதாநாயகனாகிய இராமனும், புத்தரும் நம் நாட்டுக்கும் இலங்கைக்கும் இரு வழி பாலமாம் - கூறுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

விவேகானந்தரைப் பற்றி குருமூர்த்தி கும்பல் எப்படி எப்படியெல்லாம் ஆரா திக்கின்றன. கல்விக் கூடங்களுக்குக் கெல்லாம் விவேகானந்தர் ஊர்தி என்று அழைத்துச் செல்கின்றனர். அந்த விவேகானந்தர் இராமாயணத்தைப் பற்றி என்ன கூறுகிறார்?

“தென் இந்தியாவில் இருந்த மக்களே தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும்  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

- (“சுவாமி விவேகானந்தர் அவர் களது சொற்பொழிவுகளும், கட்டுரை களும்” எனும் நூலில் ‘இராமாயணம்’ எனும் தலைப்பில் பக். 587)

இதுபோன்ற இடங்களில் எல்லாம் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரவம் தெரியாமல் ஒளிந்து கொள்

வார்கள். வேதங்களையும் பார்ப்பனர்களை யும் கவுதமப் புத்தர்எப்படி எல்லாம் விமர்சிக்கிறார் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

புத்தர் ஒரு சமயம் கோசல நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ‘மானசாக தம்’ என்ற அக்கிரகாரத் திற்குள் வந்து அதன் அருகிலுள்ள அயிரா வதி (தற்போது ரப்தி) ஆற்றங்கரையி லிருந்த மாந்தோப்பில் தங்கியிருந்தார். அந்த அக்கிரகாரத்தைச் சேர்ந்த இரண்டு பார்ப்பன இளைஞர்கள், உண்மையைச் சொல்லுகிறவரிடம் சென்று,

“பகவானே, எங்களுக்குள் பிரம்மத் தைக் காணுகின்ற வழிகளைப் பற்றிக் கருத்துவேறுபாடுள்ளது. நான் பொக்கர சாதிப் பிராமணன் சொல்லுகின்ற வழிதான் நேரானது, என்கிறேன். எனது தோழன் தாருகாப் பிராமணன் சொல்லுவதுதான் நேரடியாகப் பிரம்மத்தை அடையும் வழி என்கிறான். இக்கிராமத்திற்குள் வருவதற் குப் பலவழிகள் உள்ளன. அதுபோல பிரம்மத்தைப் பார்க்க எந்தவழியில் சென்றாலென்ன?'' என்றான் ஒரு இளைஞன்.

புத்தர் இளைஞர்களிடம் திருப்பி வினாக்களைத் தொடுத்தார்.

“எல்லா வழிகளுமே சரியான வழிதா னென்று நினைக்கிறீர்களா? நீங்கள்” என்றார்.

“ஆமாம் கோதமரே, அவ்வாறு தான் நினைக்கின்றோம்.”

புத்தர் “வேதத்தில் உள்ள எந்தப் பாட்டிலாவது பிரம்மனை நேருக்கு நேராகப் பாத்ததாகப் பாடியுள்ளார் களா?"

“இல்லை கோதமரே” - இளைஞர் களின் பதில்.

“அது எப்படி நித்தியமான பிரம்மாவை அநித்திய மான மனிதன் நேருக்கு நேராகப் பார்க்க முடியும்?” என்று இரண்டு இளைஞரும் திருப்பிக் கேட்டனர் புத்தரை.

“ஒருவன் நான்கு சாலைகள் ஒன்றிணையும் - நாற்சந்தியில் மாடிப் படிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறான். அந்த வழியாகச் சென்றவர்கள், எந்தக் கோட்டைக்கப்பா படிகள் கட்டிக் கொண்டிருக்கிறாய்? கோட்டை யில்லை, ஆனால் படிகளை மட்டிலும் கட்டிக் கொண்டிருக்கிறாயே? உன் கோட்டை கிழக்கேயா? மேற்கேயா? தெற்கேயா? வடக்கேயா? எப்பக்கம் உள்ளது? சிறியதா? நடுத்தரமானதா? பெரியதா?'' என்று கேட்டனர்.

“அது எனக்குத் தெரியாது” என் றான் படிகளைக் கட்டிக் கொண்டிருந் தவன்.

“கோட்டை எங்கே இருக்கிறது என்பதைத் தெரியாமல், ஏனப்பா படிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்” என்றனர் அவ்வழியே சென்றவர்கள்.



“நான் படிகட்டத்தான் செய்வேன். கோட்டையைப் பார்க்க முடியாதென்பது எனக்குத் தெரியும்” என்று சொன்னான்.

“படிகட்டுகிறவன் சொல்லுகின்ற பதிலைப் போலத் தான் உள்ளது பிரம்மம் பற்றி வேதம்பாடியவர்கள் சொல்லுகிற பதிலும்''.

“சரி இந்த ஆகாயக் கோட்டைக்கு படிகட்டுகிறவனின் செயலும் பதிலும் அறியாமை நிறைந்ததாகத் தோன்றவில் லையா உங்களுக்கு?” என்று கேட்டார் புத்தர்.

இரண்டு பார்ப்பன இளைஞர்களும் “ஆமாம் உண்மையிலேயே மூடத்தன மான செயல்தான்; பேச்சுத்தான்” என்றனர்.

அப்போது புத்தர் “அப்படியானால் பார்ப்பனர் தங்களுக்குத் தெரியாத, அவர்களுடைய வேத ரிசிகளும் பார்க்காத, அறியாத ‘பிரம்மா'வை அடை யும் வழியை மட்டிலும் காட்டுவோம் என்பதும் வீணான வேலை வெட்டித் தனமானது என்று தோன்றவில்லையா?” என்று கேட்டார்.

“மெய்யாகவே வீணான வேலை தான்” என்றான் ஓர் இளைஞன்.

“தெரியாத, பார்க்காத, காணமுடியாத ஒன்றுக்கு வேதம் வழிகாட்டும் என்பது மடத்தனமானது. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு செல்லுகின்ற குருடர் களின் தன்மையைப் போன்றது வேதம் என்று சொல்லுவதும். முன்னால் செல்லு கின்றவனுக்கும் ஒன்றும் தெரியாது. நடுவில் செல்லுகின்றவனும் காணமுடி யாது. இறுதியாகப் போகின்றவனும் பார்க்கமுடியாது. அதுபோலவே வேதப் பாடல்களும் குருட்டுத் தனமானது. பைத்தியக்காரத்தன மானது. பொருள் அற்ற வெற்றுச் சொற்கள்”.

புத்தர் தொடர்ந்து கூறினார்

“ஓர் ஆற்றின் கரைக்கு ஒருவன் வரு கிறான். அக்கரைக்கு அவன் போக வேண்டும்.

“ஓ இந்திரா - ஓ அக்னியே - ஓ சோமனே இங்கே வா, என்னை அந்தக் கரையில் கொண்டு போய் விடு'' என்று அவன் வேண்டினால் அந்தக் கரைக்குச் செல்ல முடியுமா?''.

“நிச்சயமாக முடியாது கோதமரே'' என்றனர் அவ்விருவரும்.

“இந்தப் பிராமணர்கள் அதைத்தானே செய்கிறார்கள். இந்திரா! சோமா! வருணா! அக்கினி! எங்களுக்கு எதிரிகளுடைய ஆடு மாடுகளைக் கொடு, அவர்களு டைய செல்வத்தைக் கொடு, அவர்களை எங்களுக்கு அடிமைகள் ஆக்கு?” என்று தானே குடித்துவிட்டுப் பாடுகிறார்கள்.

“பிராமணர்களிடத்தில் வெறும் காம வெறிதான் உள்ளது. அவர்களிடத்தில் பொறாமையும், சோம்பேறித்தனமும், கொலை வெறியும், அகந்தையும் தான் நிறைந்திருக்கிறது'' என்று புத்தர் சொல்லிக் கொண்டே இருக்கையில் ஒருவன் “அவ்வாறெல்லாம் இல்லை” என்றான். அதே சமயம் மற்றொரு இளை ஞன் “நீங்கள் சொல்வதெல்லாம் உண் மைதான். மறுப்பதற்கில்லை” என்றான்.

“இந்தப் பிராமணர்கள் காமவெறி, பொறாமை, கர்வம், வஞ்சகம் நிறைந்த வர்கள். இப்படிப்பட்டவர்கள் உங்க ளுக்கு நல்லவழி காட்ட முடியும் என்று நம்புகிறீர்களா? பிராமணர்கள் நல்லவர் கள் ஆவது அவர்கள் பிறவிக் குணத் திற்கே மாறுபட்டது. அவர்களுடைய வேதம் என்பது நீரற்ற பாலைவனம். வழியற்ற காடு. பாழடைந்த வீடு. பொட்டல்காடு ” என்றார் புத்தர்.

போதுமா? இந்தப் புத்தரைத்தான் பார்ப்பன தருமத்தைக் காக்க வந்த இராமனோடு ஒப்பிடுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.

பார்ப்பனீய வருணாசிரமத்தை வீழ்த்த வந்த புத்தரையே மகா விஷ்ணு வின் பத்தாவது அவதாரமாக்கி புராணம் எழுதியது இந்தக் கூட்டம். அதுகூட அவர்களுக்கு எதிரானதே. ஆகம அதர்மம் தலைவிரித்தாடி தர்மம் குன்றி அதர்மம் தலைதூக்கியதால்அதனை ஒழித்துக் கட்டத்தான் விஷ்ணு பத்தாவது அவதாரமாகப் புத்தர் வந்தார் என்கிறார்களே. இதில் எது உண்மை?

புரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை!

கிருஷ்ணன் கற்பிதம்


புத்தர் பிரான் அற மொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமானது ‘பிறன் மனைவியை விரும்பாதே’ என்பது. அந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணன் அவதாரத்தை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பியது. காமவிளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே, கிருஷ்ணன் கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அயோக்கியக்கதை இட்டுக் கட்டப்பட்டது.

(என்சைக்ளோபீடியோ பிரிட்டானிக்கா தொகுதி - 4)

-  விடுதலை ஞாயிறு மலர், 11.5.19