பக்கங்கள்

திங்கள், 29 அக்டோபர், 2018

அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் அனுமதி: வழக்குத் தொடுத்தவர்கள் யார்? இதோ ஆதாரம்!

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதா? அய்யய்யோ இது என்ன அநியாயம்! சம்பிரதாயங்களைச் சாம்பலாக்கலாமா?


ஒவ்வொருக் கோயிலுக்கென்றும் ஒவ்வொரு சம்பிர தாயம் உள்ளனவே. உரிமை முழக்கம் என்றால் அதனை உருக்குலையச் செய்யலாமா?

கடவுள் இல்லை என்று கூறும் தி.க.வும், கம்யூனிஸ் டுகளும் இதில் மூக்கை நுழைக்கலாமா?

சட்டமும், தீர்ப்பும் என்ன சொல்லுகின்றன என்பது முக்கியமல்ல. சம்பிரதாயங்களும், சாஸ்திரங்களும் என்ன சொல்லுகின்றன என்பதுதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!" என்று அடேயப்பா! ஆகாயத்துக்கும், பூமிக்கும் குதித்துவரும் ஆன்மிகப் போர்வையில் ஒளிந்திருக்கும் பார்ப்பனர்களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் முகத்தி ரையைக் கிழிக்கும் வண்ணம் ஆதாரம் என்ற ஏ.கே.47 துப்பாக்கி இதோ வெடிக்கிறது - வெடிக்கிறது!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களும் போக அனுமதி வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர்கள் யார் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ்.தான் பக்கா - ஆர்.எஸ்.எஸ்தான்! ஆர்.எஸ்.எஸின் மகளிர் பிரிவான ராஷ்டிரிய சேவிகா சமிதி என்பதுதான்.

இதன் முக்கிய குறிக்கோள் என்ன தெரியுமா? இந்துப் பெண்களை ஒருங்கிணைத்து இந்துத்துவா கொள்கைகள் மூலம் இந்துக் கலாச்சாரத்தையும், இந்து மரபுகளையும் மீட்டெடுப்பது தான் இதன் நோக்கமும் - போக்கும்!

வழக்கைத் தொடுத்த அந்தப் பெண்மணிகள் யார்? அவர்கள் வகித்த பொறுப்பென்ன? இதோ:

ராஷ்டிரிய சேவிகா சமிதியின் இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பிரேரனாகுமாரி, பசரிஜா சேத் மற்றும் மகளிர் உரிமை செயல்பாட்டாளர்கள் லட்சுமி சாஸ்திரி, சுதாபால் இவர்கள்தாம் 2006 ஜூலை மாதம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்கள்.

வழக்குத் தொடுத்த நிலையில் டில்லியில் செய்தி யாளர்களிடம் அவர்கள் பேசியது என்ன?



இதோ:

"சபரிமலையில் 1987-ஆம் ஆண்டு  கன்னட நடிகை ஜெயமாலா என்பவர் கோவிலில் நுழைந்தார் என்பதற்காக அவரது கோவில் நுழைவு குறித்து பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பின; ஒரு பெண் கோவிலில் நுழைவது தவறா? கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது, ஒரு பெண் நுழைவதைத் தடை செய்வது என்பது அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியாகும். சமூகம் இன்றளவும் பழைமையில் ஊறி இருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு ஏதுவுமில்லை. நாங்கள் இது குறித்து எங்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தோம். அதன் படி இன்று வழக்கைத் தொடர்ந்தோம்"

"ஆன்மிகம் என்பது பால்வேறுபாடுகளுடன் கூடியது அல்ல, கோவிலில் பெண்கள் நுழையக்கூடாது என்று கூறுவதும் ஒரு தீண்டாமைக் கொடுமை ஆகும். அது இந்திய அரசமைப்புச் சட்டம் 17-அய் அவமதிக்கும் செயலாகும்.

மேலும் நாங்கள் இதை கேரள பெண்களுடன் தொடர்புபடுத்தியும் பார்க்கவில்லை. பெண்களின் உரிமை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 15-இல் அனைவருக்கும் உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதை நாம் பின்பற்றவேண்டும்" என்று கூறினர்.

இவர்கள் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 2006-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதாடிய ஆர்.எஸ்.எஸ் பெண் அமைப்பின் அமைப்பாளரும், ஒருங்கிணைப் பாளருமான பிரேரனா குமாரி வாதிட்ட போது, "இது ஒரு ஆரோக்கியமான விவாதமாகும். உச்சநீதிமன்றம் கோவில் களில் அனைவரும் நுழைவது தொடர்பாக வழக்கை சிறப்பு கவனமெடுத்து விசாரிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் "கோவில் என்பது அனைவருக்கும் பொது வானது, அங்கு ஆண், பெண் என்ற பாகுபாடு கூடாது, அங்கு பழங்கதைகளைக்கூறி மூடநம்பிக்கைகு இடம் கொடுக்கக்கூடாது, கடவுள் எப்போதும் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறியது இல்லை. பெண் ஒருவர் கோவிலுக்குச்செல்கிறார் என்றால் அதைத் தடுக்க தனிமனிதருக்கோ, அமைப்பிற்கோ உரிமை இல்லை.. அப்படிச்செய்வது தவறான வழிகாட்டுதலுக்கு எடுத்துக் காட்டாகிவிடும். அப்படி நடக்க விடக்கூடாது, பல்வேறு உரிமைப்போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது, சபரி மலைக் கோவில் விவகாரத்திலும் உரிமைப்போராட்டம் வெற்றி பெற வேண்டும். இதில் நீதிமன்றம் உத்தரவிட்டு நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும்" என்று கூறினர்.

இந்தப் பேட்டியைப் படிக்கும் வாசகர்களே உங்களுக்குத் தோன்றுவது என்ன?

பேட்டியளித்தது திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரரா என்ற சந்தேகம் வருகிறதா இல்லையா?

இவ்வளவையும் பேசிவிட்டு, வழக்கும் தொடுத்து விட்டு இன்றைக்கு இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பார்ப்பனர் வட்டாரம் பல்டி என்றால் சாதாரண பல்டியல்ல - அந்தர் பல்டி அடிக்கின்றனர் என்றால், இந்தக் கூட்டத்தின் அறிவு நாணயத்தை எண்ணி, எள்ளி நகையாடுங்கள்!

இவர்கள் எந்த மோசமான எல்லைக்கும் செல்லக் கூடிய "ஏய்ப்பர்கள்" என்பது விளங்கிடவில்லையா?

கோணிப்புளுகன் கோயபல்சும் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டுமல்லவா! இந்த வழக்கைத் தொடுப்பதற்கு முன் ஆர்.எஸ்.எஸின் முக்கியமானவர்களையெல்லாம் கலந்து ஆலோசித்தோம் என்று ஊசியைக் குத்திப் பலூனை வெடிக்கச் செய்துள்ளாரே!

இதன் மூலம் ஆர்.எஸ்.எஸின் முக்கிய தலைவர்களின் யோக்கியதையும் கிழிந்து தொங்கிடவில்லையா!

வழக்குப் போட்டது யார்? எப்பொழுது போட்டார்கள் ஆதாரம் உண்டா? என்று சமூக வலைதளங்களில் நீட்டி முழங்கும் - மார்தட்டும் அறிவு ஜீவிகள்(?) இதற்குப் பிறகாவது மன்னிப்புக் கேட்க வேண்டாம் (அதுதான் அவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கலாயிற்றே!) மரியாதை யாக உண்மையை ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸில் உள்ள அப்பாவி தமிழர்களோ புரிந்து கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த உடனடியாக அதனை உச்சி முகர்ந்து வரவேற்றவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. "மிகச் சிறந்த தீர்ப்பு! ஒரு ஜாதி அல்லது பாலினத்திற்கான மதமாக இல்லாமல் எல்லோரையும் உள்ளடக்கியதாக இந்து மதம் மாறுவதற்கு இது வழி வகுக்கிறது" என்று கருத்துச் சொன்னாரே - இதற்கு என்ன பதில்? பிஜேபியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் சோபா சுரேந்திரன் எல்லா அம்சங்களையும் பரிசீலித்தே உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்று கூறவில்லையா! மக்கள் மறதி என்ற நினைப்பா?

திராவிடர் கழகமோ, அதன் தலைவரோ, 'விடுதலையோ' எதையும் ஆதாரமில்லாமல் ஒரே ஒரு வார்த்தையைக்கூட எழுதாது என்பதைத் தெரிந்து கொள்க!



அடையாளம் காண்பீர்!


"பெண் ஒருவர் கோயிலுக்குள் செல்லுகிறார் என்றால் அதைத் தடுக்க தனி மனிதருக்கோ அமைப்பிற்கோ உரிமையில்லை; அப்படி செய்வது  தவறான வழி காட்டுதலுக்கு எடுத்துக்காட்டாகி விடும்; சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் இப்படி டில்லியில் பேட்டியும் கொடுத்தனர்! கொடுத்தனர்!!

- கலி. பூங்குன்றன்

 - விடுதலை நாளேடு, 27.10.18

'மைலீசுவரன்!'



தந்தை பெரியார் சொல்லிய பர்லாங்கேசுவரன், மைலீசு வரன் என்பது இதுதானோ? சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக முட்புதர்கள் மண் டிக்கிடக்கின்றன. விபத்துகளை ஏற்படுத்தும் சாலைகளால் உயிர்ப் பலிகள் நாளும் நடக்கின்றன. இன்று போட்ட சாலை அடுத்த மாதத்தில் காணாமல் போய்விடுகிறது. நேற்று கட்டிய பாலம் இன்று உடைகிறது. இவற்றைத் தடுக்க வழி காணாமல் மைல் கல்லுக்கு பூஜை போட்டு என்ன பயன்?

(தகவல்: அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி)

படிப்பிற்கும்,பகுத்தறிவுக் கும் சம்பந்தமேயில்லை என்ப தற்கு இது ஒன்று போதாதா?

கற்கள்தான் பிற்காலத்தில் கடவுளாயின என்று திராவிடர் கழகத்தினர் கூறினால், இவர் களுக்கு இதுதான் வேலை!' என்று மே(ல்)தாவிதனத்துடன் பேசும் பிரமுகர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?

சில காவல் நிலையங்களில் கிடா வெட்டிப் பூஜை போடு கின்றனர். எதற்குத் தெரியுமா? சம்பந்தப்பட்ட காவல் நிலைய வட்டார எல்லைக்குள் குற் றங்கள் அதிகரித்து விட்டன வாம் - அவற்றை நிரூபிப்பதில் சிரமங்கள் இருக்கின்றனவாம். அதற்காக ஆடு வெட்டிப் பூஜைகள், யாகங்கள் நடத்து கிறார்கள்.

போட்டிருப்பது காக்கி - மனப்பான்மையோ காவி.

மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ-எச்). முதலில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு இதனை உணர்த்தவேண்டும்.

நடைபாதைக் கோவில் களைஅகற்றவேண்டும்என்ற உச்சநீதிமன்ற ஆணை ஏற்கெனவே இருக்கிறது.என்ன வெட்கக்கேடுஎன்றால், நீதிமன்ற வளாகங்களுக்குள் ளேயே கோவில்களைக் கட் டுகிறார்கள் - குடமுழுக்கு நடத்துகிறார்கள் - அந்த வளா கத்தில் உள்ள நீதிபதிகள் சாஷ்டாங்கமாக விழுந்து கும் பிடுகிறார்கள் (அண்மைத் தகவல் - தருமபுரி நீதிமன்ற வளாகம்).

வேலியே பயிரை மேய்ந் தால்பாதுகாப்புக்குவழி எங்கே?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 27.10.18

வியாழன், 25 அக்டோபர், 2018

தினமலரின் மூன்று கடிதங்கள் திமிர் அடங்கவில்லை என்பதற்கான அடையாளமே!



தினமலர் எனும் பார்ப்பன ஏடு கடந்த ஒரு வாரத்தில் திராவிடர் கழகத்தையும், அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களையும் பற்றி மூன்று கடிதங்களை வெளியிட்டுள்ளது.

அரைத்த மாவையே அரைப்பது என்ப தற்கு அட்சரம் பிறழாமல் எடுத்துக்காட்டாக இந்தக் கடிதங்கள் நூற்றுக்கு நூறு துல்லிய மாகப் பொருந்தும். ஏற்கெனவே பதில் சொல்லப்பட்டது என்றாலும் மூடனும் முதலையும் கொண்டது விடான் என்பது தெரிந்திருந்தாலும் வாசகர்கள் தெளிவு பெறவே மீண்டும் நாம் எழுத நேர்கிறது.

(1.) தினமலர் கேள்வி

கடவுள் நம்பிக்கைகளே இல்லாத திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் போவது  என்ற பிரச்சினையில் தலையிடுவானேன்?

நமது பதில்

கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்பது மனித உரிமை; கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவு என்ற ஒன்று இருந்தால் சிந்தித்துப் பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற கூட திராவிடர் கழகம் பாடுபட்டு வெற்றி பெற்றுள்ளதே.

கோயிலில் தமிழில் வழிபாட்டு உரிமை வேண்டும் என்பதற்காகவும், திராவிடர் கழகம் குரல் கொடுத்து வந்துள்ளதே, தமிழ்வழி பாட்டு உரிமை கூடாது என்பதற்குக் கூறப்படும் காரணம் என்ன? சமஸ்கிருதம் தேவபாஷை, தமிழ் நீஷப்பாஷை என்று கூறப்படும் காரணம்தானே.

தமிழைக் கேவலப்படுத்தும்போது, கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் வழிபாட்டு உரிமை பற்றிப் பேசக்கூடாதா? மாநாடு நடத்தக்கூடாதா?

கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் இவற்றில் தலையிடக்கூடாது என்றால் கடவுள் நம்பிக்கையுள்ள தினமலர் கூட்டம் இதற்காக போராடாதது ஏன்?

கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்று கூறி விட்டு, குறிப்பிட்ட கோயிலுக்குள் பெண்கள் போகக் கூடாது என்பது கடவுளையே அவமதிக்கும் காரியம் இல்லையா?

கண்ணனூர் பகவதியம்மனின்  மாத விடாயை முன்னிறுத்தி விழா எடுக்கும் நிலையில் மாத விடாயை காரணம் காட்டி, அய்யப்பன் கோயிலுக்குள் வழிபடப் போகக்கூடாது என்பது இந்துமதத்திற்குள் நெளியும் முரண் பாடல்லவா!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகக்கூட தந்தை பெரியார் அவர்கள் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையாரும், கி.வீரமணி அவர்களும் போராடிக்கொண்டு வந்த நிலையில், இப்பொழுது அதில் வெற்றியும் கிடைத் துள்ளதே! அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக்கப்பட்டுள்ளாரே! - இதுபற்றி தினமலர் கூறுவது என்ன?

தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகரானால் கோயிலும், கடவுளும் தீட்டுப்பட்டு விடும், சாமி செத்து விடும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வைகனாச ஆகமங்களை எடுத்துக் காட்டி வாதாடியவர்கள் யார்? 13 பேர் வழக்கு தொடுத்தார்களே அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள் தானே.

தாழ்த்தப்பட்டவர்களை இந்து என்று ஒரு பக்கத்தில் கூறிக்  கொண்டு, தேவைப் படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று அழைப்புக் கொடுத்துக் கொண்டே, கோயிலுக்குள் அந்த இந்துக்களான தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராக அரு கதையற்றவர்கள் - அது இந்துக்களின் ஆகமத்துக்கு விரோதமானது என்றே தினமலர் கூட்டம் இன்றும் நியாயப் படுத்தும் போது பார்ப்பனர்கள் பற்றி விடுதலை எழுதினால், திராவிடர் கழகத் தலைவர் பேசினால், அது குற்றம் என்று கூறுவதிலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் திருந்தவில்லை என்பது தெரியவில்லையா?

கடவுள் நம்பிக்கை இல்லாத தி.க.வினர் இதற்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்பது தினமலர்களின் கருத்தானால், தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்று கூறும் தினமலர் அவர்களுக்காகக் குரல் கொடுக் காதது ஏன்? நாங்களும் தாழ்த்தப்பட்ட வர்களை அனுமதிக்க மாட்டோம் - நீங்களும் அதற்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்று தினமலர் எழுதுவது பார்ப்பனர்களின் ஜாதித் திமிர் இன்னும் தறிகெட்டு நிற்கிறது என்று தானே பொருள்!

தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,  பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், திராவிடர் கழக இடஒதுக்கீட்டு கோரினால்  பகுத்தறிவாளர் களுக்கும் மட்டும்தான் அது தேவை என்றா குரல் கொடுக்க முடியுமா?

(2) தினமலர் கேள்வி

பார்ப்பனர்கள் என்று சொல்லித் திட்டுகிறார்கள் தி.க.வினர்.

நமது பதில்:

பார்ப்பனர்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்லாமல் வேறு எப்படிதான் சொல்ல முடியும்? இப்படிஅவர்கள் சொல்லுவதன் நோக்கம் என்ன தெரியுமா? பிராமணன் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர் என்று பொருள்.

பார்ப்பனன் பிராமணர் என்றால் பார்ப்பனர் அல்லாதார் தங்களை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டதாகத் தானே பொருள். பிராமணன் என்றால் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் -வைதிகமாக இருந்தாலும், லௌகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 317) என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.  சூத்திரன் என்றால் விபசாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415), என்று நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தினமலர் கூறுகிறது என்றால் -தினமலரின் பூணூல் ஆணவம் இன்னும் கொக்கரிக்கிறது என்றுதானே பொருள்.

பார்ப்பான் என்பதுதானே தமிழ்ச்சொல்- 'பார்ப்பன மாந்தர்காள்' பகர்வது கேண் மின் என்று கபிலர் கூறவில்லையா? பார்ப்பான் பிறப்பொழுக்கம் என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா? 'சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண் ணும் பார்ப்பானுக்கொரு நீதி, சாத்திரம் சொல்லிடு மாயின் சாத்திர மன்று சதி என்று கண்டோம்' என்று பார்ப்பன பாரதி கூறிட வில்லையா?

(3) தினமலர் கேள்வி

பிராமணர் -அறிவு ஜீவிகளாம்.

நமது பதில்: பார்ப்பனர் அறிவு ஜீவிகள் என்று தினமலர் இன்றைக்கும் எழுதுகிறது என்றால் இவர்கள் சுலபத்தில் அடங்கமாட்டார்கள் - அடக்கப்பட வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு இதுபோதாது என்ற உணர்ச்சியைத் தானே இது ஏற்படுத்தும்? மறைந்த காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட பார்ப்பனர்தாம் - அவரின் அறிவு ஜீவிதம் எதற்குப் பயன்பட்டது என்று உலகிற்கே தெரியுமே! காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் அர்ச்சகர் தேவநாதனை எந்தப்பட்டியலில் சேர்ப்பதாக உத்தேசம்?

(4) தினமலர் கேள்வி

பூணூலைப் பிராமணர்கள் மட்டும்தானா போடுகிறார்கள்?

நமது பதில்:

மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது. அப்படி பூணூலை சூத்திரன் அணிந்தால் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும். (மனுதர்மம், அத்தியாயம் -9, சுலோகம் 224)

இதற்கெல்லாம் தினமலர் என்ன பதில் சொல்லப்போகிறது? மனுதர்மம் எப்பொழுதோ எழுதியது என்பதுதான் அவாளின் சமாதானம் என்றால், அந்த மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எரித்தது போல தினமலர் கூட்டம் நாள் குறித்து தீ வைத்துச் சாம்பலாக்கத் தயார்தானா?

திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங் குன்றம் முருகனுக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தங்கப் பூணூல் அணிவித்தது, சிரீங்கம் ரெங்கநாதனுக்கும் ஜீயர் தங்கப் பூணூலும் அணிவித்ததும் - எந்த அடிப்படை? கடவளும் பார்ப்பானும் ஒரே ஜாதியா? உள்நோக்கம் புரிகிறதா?

(5) தினமலர் கேள்வி

ஜாதிக்கலவரம் பிராமணர்களாலா உண்டாகிறது?

நமது பதில்:

ஜாதியின் மூல ஊற்று இந்துமதம் - வேதம்- இதிகாசங்கள் - சாஸ்திரங்கள் இந்து மதத்தில் ஜாதி அமைப்பு என்பது ஏணிப்படி முறை (GRADED IN EQUALITY) என்றார் அண்ணல் அம்பேத்கர்.

நோயை ஒழிக்க அதன் மூலக்கிருமியை ஒழித்தாக வேண்டும் -இதற்கு காரணமான பார்ப்பனர்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டாமா? சங்கரமடத்தில் ஒரு தாழ்த்தப் பட்டவர் சங்கராச்சாரியாக வரட்டும்; கோயில் களில் அர்ச்சகர்களாக அதிகமான வகையில் தாழ்த்தப் பட்டவர்கள் அர்ச்சகர்களாக வரட்டும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்கு பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்ற திருத்தம் வரட்டும் - சங்கராச்சாரியார் ஜாதி ஒழிக என்று ஒரே ஒரு முறை உதிர்க்கட்டும். ஜாதிவேர் அறுகிறதா இல்லையா? என்று அப்புறம் சொல் லுங்கள்.

யார் யார் அருகில் பழகுகிறார்களோ, குடியிருக் கிறார்களோ, வேலை செய்கிறார் களோ அவர்களிடை யேதான் சச்சரவு களும் வரும்.  சேரிகளுக்கும் - அக்ர காரத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட்டால் இதற்கான காரணமும் எளிதில் விளங்கும். சுடுகாட்டில் கூட ஜாதி அடிப்படையில் தான் இருக்க வேண்டும் (மதுரை பேட்டி, 1982) என்று கூறும் சங்கராச்சாரி பற்றி தினமலர் என்ன கூறுகிறது.

(6) தினமலர் கேள்வி

பார்ப்பன எதிர்ப்பு இனி செல்லாது!

நமது பதில்: இப்படி சொல்லுவதன் அர்த்தம் என்ன? நாங்கள் ஜாதி ஆணவத்துடன்தான் இருப்போம் - உங்களால் என்ன செய்ய முடியும் என்று சவால் விடுவதாகத்தானே அர்த்தம். நாடு ஆஸ்திகர்கள் வாழத்தகுதி இழந்து விட்டது. மகா புருஷர்கள் எல்லாம் வெளிநாடு செல்லத் திட்ட மிட்டுள்ளனர் என்று ராஜாஜி அவர்களை எழுத வைத்த பெரியார் பூமி இது-இந்த சவால்கள் எல்லாம் இங்கு வேண்டாம்!

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் பார்ப்பனர் ஒரே ஒருவர்தானே- இதுதான் பெரியார் பூமி நினைவிருக்கட்டும்!

(7) தினமலர் கேள்வி

தி.க.தலைவர் வீரமணிக்காக தினமலர் பக்கங்களை வீணடிக்க வேண்டாம்.....

நமது பதில்:

அடேயப்பா, எவ்வளவு பெரிய மனசு! தினமலர் களையும், சங்கரமடங்களையும், விஜயபாரதங்களையும், துக்ளக்குகளை யும் நோக்கி விடுதலையும், அதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் ஏவும் கணைகளின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் ஒரு பாதுகாப்பு எண்ணத்துடன் இப்படி சரண் அடைந் திருக்கிறது தினமலர்.

கடைசி பூணூல் உள்ள வரை, சங்கரமடங்களில் தாழ்த்தப்பட்டவர் அமரும் வரை, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமத்துவ நிலை உருவாகும் வரை வேதங்களும், மனுசாஸ்திரங்களும், மகாபாரதங்களும், இராமயணங்களும், ஆட்டம் போடும் வரை, பார்ப்பன எதிர்ப்பு என்பது தவிர்க்கப்பட முடியாது -  ஆமாம் தவிர்க்கப்படவே முடியாது!

எங்கள் கைகளில் இருக்க  வேண்டிய ஆயுதங்களை முடிவு செய்வது நமது எதிரிகள்தானே!

குறிப்பு: பார்ப்பனர்களுக்கு சர் சிபி ராமசாமி அய்யர் கூறிய (1946) அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஒரு முறை தினமலர் மட்டுமல்ல - பார்ப்ப னர்கள் அனைவரும் படிக்கட்டும்!

இன்னொன்று பார்ப்பனர்கள் பற்றி எழுதும்போது தினமலரின் ரத்தம் கொதிப்பது -ஏன்? 'அந்த உணர்வு'தானே காரணம்!

- விடுதலை ஞாயிறு மலர், 13.10.18

புதன், 24 அக்டோபர், 2018

பார்ப்பனர் பற்றி மார்க்ஸ்& பெரியார்

பார்ப்பனர் பற்றி மார்க்ஸ்


நம்முடைய சமுதாய இழிநிலையைக் காரல் மார்க்ஸ்கூட தெளிவாகப்படம் பிடித்துக் காட்டுகிறார் பாருங்கள். இந்தப் புத்தகம் ‘டாஷ் கேப்பிடல்’ என்ற மார்க்ஸின் புத்தகம். இதில் 241ஆவது பக்கத்தில்,

“இந்தியாவில் பசுவைத் தெய்வமாக நினைக்கும் மூடநம்பிக்கை உள்ளது. பார்ப்பானுக்காகவும், பசுவுக்காகவும் உயிரைக் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று மனுநீதி கூறுகிறது”.

எனப் பெரியார் சொல்லவில்லை. நாங்கள் சொல்லவில்லை. காரல் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார்! அதுதான் மிக முக்கியம்.

எழுதி வைத்தது என்ன?

புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் எழுதி இருந்தாலும். முதலிலும் கடைசியிலும் “இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக் கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் பணமும் பொருளும் சேருமென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுக்கப்படும்” என்றும் எழுதி வைத்ததே காரணமாகும்.

குடி அரசு தொகுதி 10, ப: 37

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதச் சமுதாயத்தில் பிறவியால் மனிதனுக்கு மேம்பட்டவன் என்று எவனும் இருக்கக் கூடாது. அவனை ஒழித்துவிட்டு நாம் தூக்குப்போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. எங்களுடைய லட்சியம் எதைச் செய்தாவது, என்ன செய்தாவது மனிதனை மனிதனாக்க வேண்டும் என்பது தான்.

குடி அரசு தொகுதி 25, ப: 184

ஜாதிக்கென்று தொழில்செய்வதால்தானே ஈன ஜாதி, இழி ஜாதி என்ற சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்.

குடி அரசு தொகுதி 11, ப: 24

வாய்ப்பினால் மாத்திரம் தொழிலாளிகளல்லாமல் பிறவியினால், சட்டத்தினால், சாஸ்திரங்களால், கடவுள்களால், கடவுள் சிருஷ்டியினால் நாங்கள் தொழிலாளி களாக ஆக்கப்பட்டவர்கள் - அப்படிப்பட்ட தொழிலாளிகள்தான் திராவிடர்கள்.

குடி அரசு தொகுதி 4, ப: 100

ஜாதி காரணமாகப் பாடுபடாமல் கடவுளையும், மோட்சத்தையும் காட்டி ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும்படியான சவுகரியம் இருக்கும்போது பலாத்காரத்துக்கோ அல்லது தண்டனைக்கோ அல்லாமல் எவனாவது ஜாதி ஒழியச் சம்மதிப்பானா?

குடி அரசு தொகுதி 11, ப: 104

பெரியாரால் படித்தோம்

வகுப்புவாரி அரசாணை செல்லாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தபோது தந்தை பெரியார் வெகுண்டு எழுந்ததால்தான் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் இன்று பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்தன 69 விழுக்காட்டில். இன்று நீட் தேர்வு கோர்ட்டில் இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டுப் பேசாமல் இருந்தால் மருத்துவக் கல்வி படிக்கலாம் என்று இருக்கிற ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு உள்ளது.

குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்கப் பெட்ரோலும், தீப்பந்தமும் ஏந்தச் சொன்ன பெரியாரால்தான் இன்று நாம் படித்தோம். மருத்துவராகப் போகின்றோமா, மண்ணாகப் போகின்றோமா நம் கையில்தான் இருக்கிறது.

கறுப்புச்சட்டை

கறுப்புச்சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல; அது இழிவின் அறிகுறி. இழிவிற்காக அவமானப்படுகிறோம்; துக்கப்படுகிறோம்; அதைப்போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி.

குடி அரசு தொகுதி 5, ப: 231

- தொகுப்பு க.பழநிசாமி

தெ.புதுப்பட்டி

- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17

திங்கள், 22 அக்டோபர், 2018

கன்னித்திரை

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கஞ்சர்பட் என்னும் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அந்த சமூகத்தில் ஒரு விசித்திர வழக்கம் உள்ளது. அந்த சமூகப் பெண்கள் திருமணத்துக்கு முன்பு கன்னித்தன்மை பரி சோதனை செய்துகொள்வது அவசியம் ஆகும். இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் அந்த பெண் இவ்வாறு பரி சோதனைக்கு உட்பட மறுத்து உள்ளார்.

கன்னித்தன்மை பரிசோத னைக்குஉட்படுத்துவது தன்னை அவமானப்படுத்தும் செயல் என அவர் கூறியுள்ளார். அதற்கு அந்த சமூகத்தினர் ஒப்புக்கொள் ளாததால்சமூகத்தினரைமீறி  காவல்துறையினர்பாதுகாப்பு டன் திருமணம் செய்து கொண்டார். அது முதல் அந்தப் பெண்ணிடம் அவருடைய சமூகத்தினர் பேசுவதை தவிர்த்துள்ளனர்.

இந்தஆண்டுநவராத் திரி விழாவில் திருமணமான அந்தப் பெண் கலந்துகொண்டு கோலாட்டம் ஆடி உள்ளார். திடீரென அந்த விழாவில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஊரார்ஒலிபெருக்கிமூலம் குறிப்பிட்ட பெண் ஊர் நிகழ்ச் சியில் கலந்து கொண்டதால் விழா நிறுத்தப்படுவதாக அறி வித்தனர். இதனைஅடுத்துஅந்தப் பெண்ணும் அவரது உற வினரும் விழாநடைபெறும் இடத்தை விட்டு வெளியேறி னர். அதன் பிறகு மீண்டும்  விழா தொடங்கப் பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அறிவியல் காலத்தில் மதம் உயிர் வாழத் தகுதியற்றது என்ப தற்கு இது ஒன்றே போதும்.

மருத்துவ ரீதியாக கன் னித்தன்மை (Virginity) இழப்பு என்பது எப்பொழுதும் எந்த பெண்ணுக்கும் ஏற்பட லாம். சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண்கள், விளையாட்டில் பங்குகொள்ளும் பெண்கள், மாடிப் படிகளை அடிக்கடி பயன்படுத்தும் பெண்கள் இதற்கு ஆட்படலாம்.

மருத்துவ ஆய்வு என்ன கூறுகிறது?

அதீத மன உளைச்சல் காரணமாக அந்த மன அழுத் தத்தை சமாளிக்க ஆக்சிடாக் சின்என்றஹார்மோன் உடலுக்குள் சுரக்கிறது. அந்த ஹார்மோன்அதிகம்சுரக்கும் பொழுது, அதை சமன்படுத்திட உடலில் சுரக்கும் எதிர் ஹார் மோன்களால் கன்னித்தன்மை இழக்கும் நிலை ஏற்படும். வேதிப் பொருள் அதிகம் கலக் கப்பட்ட உணவை எடுத்துக் கொள்வதாலும் இது நிகழலாம்.

அறிவியல் என்ன சொல் கிறது என்பதுதான் முக்கியம்.  மூட அறியாமையாம் மதத்தின் கால்மாட்டில் உட்கார்ந்து முடிவு செய்யக்கூடாது.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 20.10.19

வெள்ளி, 19 அக்டோபர், 2018

'இந்துத்துவா'

இந்துத்துவா என்றால் மதமல்ல - ஒரு தத்துவம் என்றெல்லாம் பேசுவார்கள் - இந்த வார்த்தையின் மூலமே இதனைக் காட்டிக் கொடுத்து விடும். இன்றைக்குப் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் நிலை என்ன?

இதோ சில:

உத்தரப்பிரதேச மாநில துணை அரசுப்பணியாளர்கள் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி,   சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-

பண்டித் மனைவியை பண்டித்தாயின் என்று அழைப் பார்கள், சமாரின் மனைவியை எப்படி அழைப்பார்கள்?

(இந்தியில்)

சமார் மனைவி .................

சமாராயின்

சமாரின்

சமாரி

சமீர்

அதாவது பார்ப்பான் மனைவியை பிராமணத்தி என்று அழைப்பார்கள் சக்கி லியனின் மனைவியை எப்படி அழைப்பார்கள்? (தமிழில்)

சக்கிலியன்  மனைவி .................

சக்கிலிச்சி

சக்கிலியி

சக்கிலி

சக்கி

புதுடில்லி (12, மார்ச் 2018): சி.பி.எஸ்.இ. பாடப் பிரிவில் 6 ஆம் வகுப்பு தேர்வில்.....

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பிரிவுகளுக்கு என்.சி.ஆர்.டி. எனப்படும் பாட நூல் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 6 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றுள்ளது. அதில் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு 4 விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் என்று தரப்பட்டுள்ளன.

இந்தக் கேள்வி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்தக் கேள்வித்தாள் வேகமாகப் பரவியது.

இந்த லட்சணத்தில் தேசிய கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் புதிய புதிய முகமூடிகளை அணிந்துகொண்டு இந்துத்து வாவை இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் நஞ்சாக விதைக் கும் விபரீதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமஸ்கிருத வாரம் நடத்தச் சொல்லுவது, யோகா' நடத்தச் சொல்லுவது என்பதெல்லாமே இந்துத்துவாவை புகுத்தும் ஏற்பாடுதான்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- மயிலாடன்
-  விடுதலை நாளேடு, 18.10.18

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பெரியாரும் ஜீவாவும்

வழக்கறிஞர் இரா.அருணாசலம்

 


 

உயிர் இனங்களில்  உயர்வாகக் கருதப்படுவது மனித இனமே. அச்சிறப்பிற்குக் காரணம் மனிதன் பெற்றுள்ள சிந்திக்கும் ஆற்றல் தான்.ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தன் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு, உலகம் என பல்முனைப்புகளில் தன் சிந்தனைகளைச் செலுத்துவது இயல்பாகும். அவற்றுள் சமூகம் மற்றும் உலகம் பற்றிய சிந்தனை முனைப்போடு செயல்படுபவர்களே தலைவர்களாகப் பரிணமிக்க முடியும். அந்த வகையில் வந்த தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், தோழர் ப.ஜீவானந்தமும்.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் தோன்றியது என்பது வரலாறு.

சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை அமைத்ததற்கான சூழ்நிலையை விளக்கும்போது பெரியார் சொல்கிறார் “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவுமுள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அந்தப் பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறேதா இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்’’ என்று.

பொதுவுடைமை இயக்கத் தோழர் ப.ஜீவானந்தம், சுயமரியாதை இயக்கத்தில், ஆரம்ப காலத்தில் தன்னை இணைத்துக் கொண்டதைப் பற்றி, “சட்டமறுப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை மீண்டு வந்த நேரம்; சிறையில் பகத்சிங் தோழர்களுடன் பழகி சமதர்ம உறுதியோடு வெளி வந்திருந்த நான் அன்றையச் சூழ்நிலையில் சமதர்ம பிரச்சாரத்திற்கு சுயமரியாதை இயக்கத்தைப் பயன்படுத்துவது மிக மிகத் தேவை என்ற முடிவில் ஈ.வெ.ரா சமதர்மதிட்டத்தை முழு மூச்சோடு ஆதரித்தேன்’’ என்கிறார்.

ஈரோடு சமதர்ம திட்ட மாநாட்டிற்கு ஜீவா சென்றிருக்கிறார். அங்கு தோழர் ம.சிங்காரவேலரின் பேச்சைக் கேட்டிருக்கிறார். புரட்சிகரமாக சமதர்ம முழக்கம் புதுமையிலும் புதுமையாக இருந்தது என்று ஜீவா எழுதுகிறார். அதன் பின்னர் மாநாடுகள், கூட்டங்கள் என்று  பெரியாருடன் பணியாற்றியது நினைவு கூறத்தக்கது. “ஜீவா சுயமரியாதைப் பிரச்சாரம் செய்த காலத்தில் அது மிக மிகக் கஷ்டம். அந்த மாதிரி கஷ்டத்திலும் பிரச்சாரம் செய்வதில் எனக்கு உதவியாக இருந்தார்.’’ என்றார் பெரியார். தொண்டறம் செய்பவர்களை பெரியார் என்றுமே மறந்ததில்லை. அதற்கு எடுத்துக் காட்டு ஜீவா குடும்பத்தின் மீது அவர் காட்டிய பரிவும் பாசமும் என்பதை ஜீவா மூத்த மகள் திருமணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜீவாவின் துணைவியார் திருமதி பத்மாவதி அம்மையார் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடி பெரியாரிடம் சென்றபோது திராவிடர் கழகக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தோழரையே (இக்கட்டு ரையாளர்) மணமகனாகத் தேர்ந்தெடுத்து திருச்சி பெரியார் மாளிகையில் தன் பொறுப்பில் மணவிழாவை நடத்தி வைத்தார். அப்போது  (1967) அய்யா, “நான் மணமகன் வீட்டுக்காரன். இன்றைய தினம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சிக்கு சொந்தக்காரனாகவும் உரிமைக் காரனாகவும் இருந்து உங்களை வரவேற்கிறேன். இந்நிகழ்ச்சிக்கு நானே தலைமை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன்.’’ என்று பேசினார்.

தந்தை பெரியாருக்கு பின்னரும் ஜீவாவின் குடும்பத்தை மறவாமல் தமிழர் தலைவர் ஆசிரியர் ஜீவாவின் இளைய மகள் மற்றும் மகன் ஆகியோரின் திருமணங்கள் பெரியார் திடல் இராதா மன்றத்தில் கட்டணமின்றி சீரும் சிறப்புடன் நடைபெற துணையாக இருந்ததை நெஞ்சார நினைத்து உளமகிழ நன்றி  சொல்லுவது எம் கடமை.

நூல்கள் படிப்பதில் ஜீவா பல தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளைப் படிப்பதோடு வெளிநாட்டு அறிஞர் பெருமக்களின் நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். படித்த நூல்களின் கருத்துகளை உள்வாங்கியும் மேற்கோள் காட்டியும் மணிக்கணக்காக மேடைதோறும் முழங்கி வந்தார்.

பெரியார் எதனை எதிர்த்து கண்டனம் செய்வாரோ அவற்றை முழுமையாகப் படித்தப் பின்னரே அப்பணியில் ஈடுபடுவார் என்பதற்கு எடுத்துக்காட்டு கந்தபுராணம், மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களை ஒன்று விடாமல் படித்தறிந்தார் என்பதுதான்.

பெரியார் ஒரு சுயசிந்தனைவாதி. அவரே ஓர் இயக்கம் அவர் ஒரு சித்தாந்தம். அய்யாவை படிப்பதும் ஆய்வு செய்வதும் அறிஞர் பெருமக்களின் கடமை. மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத செய்திகளை எழுதியிருக்கிறார். இன்றைய உலகத்தில் அவர் கூறிய பல கருத்துக்கள் நடைமுறையில் வந்திருப்பதைக் காண முடிகிறது.

மொழியின் நடைக்காகவோ சொற்களின் அலங்காரத்திற்காகவோ அவர் படிப்பதில்லை. சமுதாய சீரழிவுக்கு எந்த சொல்  எழுத்து காரணமாக இருக்கிறதோ அதை ஆழமாகப் படித்தார். சீரழிவை தடுப்பதற்கும் ஒழிப்பதற்குமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டார்.

பெரியார்  ஜீவா அன்பர்கள்

பெரியார் அவர்களின் தன்மான இயக்கத்தின் தளபதியாகவும் அவரது வலது கையாகவும் விளங்கியவர், ஜீவா தனிப்பட்ட முறையில் பெரியார் மீது பேரன்பும் அதேபோல் ஜீவாவின் மீது பெரியார் பேரன்பும் கடைசி வரை குறையாமல் இருந்தது. (‘தாமரை’  ஜீவா மலர் 1963)

ஒத்த சிந்தனை  ஒருமித்தக் கருத்து

மனித வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கிய நிகழ்வு என்றும் புனிதமானதும் என்றும் நிலவும் கருத்தை பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவருடைய விமர்சன நூல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் நோக்கில் 21.11.1934இல் இராபர்ட்சன்பேட்டையில் ஒரு திருமண வாழ்த்தில் ஜீவா பேசுகிறார். திருமணம் தற்கால நிலையில் ஓர் அவசியமான கேடாக இருக்கிறது. சுயமரியாதைக்காரர் களாயிருப்போர் தாலியறுப்பு இயக்கமொன்று ஆரம்பிக்க வேண்டியது பெண்டிர் சரிநிகர் சமமானவர் என்பதை ஸ்தாபிக்கும். திராவிடர் கழகம் பெரியார் திடலிலும் (14.4.2015) மற்ற இடங்களிலும் தாலி அகற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்

1926இல் வ.வே.சு.அய்யர் சேரன்மாதேவியில் பரத்வாஜ் ஆசிரமம் தொடங்கி பிராமண மாணவர்களுக்கு மட்டும் ஒரு தனி இடத்தில் உணவு பரிமாறும்படி செய்தார். அதைக் கண்டித்து குருகுலப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் பெரியாருடன் ஜீவாவும் வரதராஜுலு நாயுடுவும் கலந்து கொண்டார்கள்.

நான் ஏன் நாத்திகன் ஆனேன்

தோழர் பகத்சிங் எழுதிய, ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை ஜீவா மொழிபெயர்த்து பெரியார் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி, ‘உண்மை விளக்கம் பிரஸ்’ மூலம் வெளியிட்டார். அதற்காக இந்தியன் பினல்கோட் 124ஏ செக்ஷன்படி இராஜத் துரோகம் குற்றம்சாட்டி இருவரையும் சிறையில் அடைத்தனர். நாத்திகத்தைப் பரப்புவதில் பெரியாருக்குத் துணையாக ஜீவா இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

ஜீவா எழுதிய பாடல்கள் பலவும் பெரியாரின் பேச்சுகளுக்குப் பரப்புரையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

கொள்ளைச் சிரிப்பு வந்ததே - குப்பன்

குழவிக் கல் சாமியென்று கும்பிட்டபோது

மடமையுற்ற வாழ்க்கையே மடங்கள் தந்ததாலே

கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்பதில்லையே

பெண்ணுரிமை

பெண்ணுரிமைக்காக பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வி கேட்டு அதற்குத் தீர்வும் சொல்லியிருக்கிறார் பெரியார். பெண்கள் எந்தெந்த காரணங்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுச் சுதந்தரமாக வாழ முடியும் என்பதை எடுத்துக் காட்டவுமான கருத்தையும் எழுதியிருக்கிறார். ஜீவா அவர்களின் பெண்ணுரிமையைப் பற்றிய கருத்தும் பெரியாரைப் பின்பற்றியே அமைந்திருந்தது.

காந்திக்கு எதிர்ப்பு

காந்தியின் வர்ணாசிரம கொள்கை ஆதரவுக்கு பெரியாரும் ஜீவாவும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார்கள் என்பது உண்மை.

ஒரு சமயம் காந்தியை சந்தித்தபோது, பார்ப்பன எதிர்ப்பு பற்றிய சர்ச்சையில் காந்தி ஏன் பார்ப்பனர்களில் நல்லவரே இல்லையா? கோபாலகிருஷ்ண கோகலே இருக்கிறாரே என்று சொல்ல, மகாத்மாவாகிய தங்களுக்கே ஒருவர் தானே நல்லவராகத் தெரிகிறார். சாதாரண எங்களுக்கு அதுகூடத் தெரியவில்லை என்ற பொருள்படக் கூறி காந்தியின் பிற்போக்குத் தன்மையை வெளிப்படுத்தினார்.

ஜீவா 1926இல் காரைக்குடி அருகில் சிராவயலில் ஓர் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அப்போது ஒரு நாள் காந்தியார் அந்த ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். அப்போதுதான் ஜீவா நீங்கள்தான் தாய்நாட்டின் சொத்து என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அங்கு வருகை தந்த காந்திக்கு அளித்த வரவேற்பு வாசகத்தில் வர்ணாசிரம தர்மத்தைக் கண்டித்து ஜீவா எழுதியிருந்தார். அதன் பின்னர் நாங்குனேரியில் சில நண்பர்களுடன் ஜீவா காந்தியைச் சந்தித்தார்.

குணத்திற்கும் கருமத்திற்கும் தக்கபடி நான்கு வர்ணங்கள் பற்றி பேசும்போது சாத்வீகத் தன்மையிலும் நன்னெறி ஒழுக்கத்திலும் சிறந்தவரான நீங்கள் ஒரு பிராமணன் அல்லவா என்ற வினாவுக்கு நான் நல்ல வைசியன். தீய ஒழுக்கங்கள் உடைய பிராமணன் கெட்ட பிராமணன் என்ற காந்தியின் விளக்கத்தைக் கேட்ட ஜீவாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் முனைப்புக் காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தின் மீது விமர்சனம்

காங்கிரஸ் எதிர்ப்பு, காந்தி வர்ணாசிரம எதிர்ப்பு, பெண்ணுரிமைக் குரல், ஜாதி, மத ஒழிப்பு, பொதுவுடைமைக்கு வரவேற்பு என பல்வேறு முனைப்புகளில் பெரியாரும் ஜீவாவும் ஒன்றுபட்டு செயல்பட்டனர்.1935இல் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி சுயமரியாதை மாநாட்டில் தான் ஜீவா அவர்கள் பெரியாருடன் மாறுபட்டு பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தது ஜஸ்டிஸ் கட்சியை பெரியார் ஆதரித்ததுதான்.

1935-_37இல் பெரியார் சமதர்மப் பிரச்சாரத்தில் சற்று தீவிரம் குறைந்து போன சூழ்நிலை. அதற்கு பெரியார் பேசுகிறார் நான் இரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தைச் சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ஆனால் சர்க்காரால் பொதுவுடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகு எனக்குப் புத்திசாலித்தனமாகச் சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடைமைப் பிரச்சாரம் நிறுத்திக் கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது. (‘குடிஅரசு’_29.3.1936) இப்படி வெளிப்படையாகப் பேசும் தலைவர்களைப் பார்ப்பது அரிது. அதனால்தான் அவர் பெரியார்.

ஜீவா வாழ்க்கையில் திருத்துறைப்பூண்டி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜீவா சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறினார். ஆனாலும் பிற்காலத்தில் பெரியாரின் பெருந்தொண்டை போற்றிப் பாராட்டி பேசியுள்ளார். “இன்றைய  தினம் பெரியார் அவர்களுடைய பெரிய சமூகச் சேவையெல்லாம் கண்டபிறகு தமிழ்நாட்டின் தலைவர் பெரியார் என்று மனப்பூர்வமாக மட்டுமல்ல, அறிவுப்பூர்வமாக  சரித்திரத்தின் நடைமுறையிலே. கண்ட உண்மையின் பூர்வமாக பெரியார் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு கட்சி உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதிலே உழைத்து வந்திருக்கிறார்.’’ என்று ஜீவா பேசினார். (பெரம்பூர் செம்பியம் பொதுக்கூட்டத்தில் 23.11.1951 அன்று ஜீவா பேசியது ‘விடுதலை’ _ 27.11.1953 பக்.3)

காலங்கள் மாறலாம்; கொள்கைகள் மாறாது. அணிகள் வேறுபடும்; பணிகள் தொடரும். பகுத்தறிவு சமதர்மத்தை முன்னெடுத்துச் சென்ற தந்தை பெரியாரையும் அவருக்குத் துணையாக  தளபதியாக இருந்த தோழர் ஜீவாவையும் நினைவு கூர்வோம். அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வோம். வாழ்க பெரியார்,  ஜீவா புகழ்!
- உண்மை இதழ், 16-31.8.18