பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2019

கடவுள் சக்தியைப் பார்த்தேளா?

கழிவுநீர் வாய்க்காலில் ஆண்டாள் சிலையாம்!

கும்பகோணம், அக்.25 கும்ப கோணத்தில் கழிவுநீர் வாய்க்காலிலிருந்து சாக் குப்பையில் கட்டி தூக்கி வீசப்பட்ட சிலையை துப்புர வுத் தொழிலாளர்கள் கண் டெடுத்துள்ளனர்.

கும்பகோணத்தில் வாய்க் காலை சுத்தம் செய்தபோது, சாக்குமூட்டையில் இருந்து, 2 அடி உயரமுள்ள, அய்ம் பொன் ஆண்டாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஓலைப்பட்டினம் கழிவுநீர் வாய்க்காலை, நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, கால்வாயில், சாக் குப்பை ஒன்று, கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அதை, துப்புரவு பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது, சிலை ஒன்று இருந்தது. இதுகுறித்து, கும்பகோணம் மேற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. காவல்துறையினர் சென்று, சிலையை மீட்டு, ஆய்வு செய்த போது, 2 அடி உயரமுள்ள, அய்ம் பொன்னாலான ஆண்டாள் சிலை என்பது, தெரிய வந்தது.

பட்டறையில் இருந்து மெருகேற்றம் செய்வதற்கு முன் சிலையைத் திருடியவர் கள், அச்சிலையை மறைத்து வைக்க, கழிவுநீர் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப் படுகிறது.

அப்பகுதிகளில் உள்ள சிலைகள் செய்யும் பட்ட றைகளில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

வாய்க்காலில் கண்டெ டுக்கப்பட்ட ஆண்டாளின்  சிலை கும்பகோணம் வட் டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

- விடுதலை நாளேடு 25 10 19

சனி, 19 அக்டோபர், 2019

சதி மாதா ஆகப் போகிறதா - நமது தாய்க் குலம்?

மகளிர் சிந்திக்க வேண்டிய தருணம்

சதி மாதா ஆகப் போகிறதா - நமது தாய்க் குலம்?


கலி. பூங்குன்றன்
இந்தியா ஒரே நாடு - ஈங்கு ஒரே கலாச்சாரம் - இது இந்து நாடு - இந்துக்கலாச்சாரமே நமது கலாச்சாரம் என்று கதையளப்போர் யார்? அவர்கள் எத்தகையவர்கள்? அவர் களின் இதயத்தில் குடிகொண்டு கொழுந்து விட்டு எரியும் தீ எத்தகையது? என்பதைத் தந்தை பெரியார் மொழியிலோ, திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திலோ நம்ப வேண்டாம் - நம்ப வைக்கவும் வேண்டாம்!

பிறப்பில் பேதம் பேசும் இழிதன்மை கொண்டது இந்து மதம் என்று நாம் சொன்னால் ஏற்க வேண்டாம் - ஏற்கவே வேண்டாம்.

மண்ணுக்கும் கேடாய் மங்கையரை நினைக்கக் கூடிய மாபாதகச் சிந்தனை கொண்டது எது?

இந்த மனு மந்தாதாவின் இந்து மதம் என்று கூறும் கருஞ்சட்டையினர்தம் கருத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டாம் - கொள்ளவே வேண்டாம்!

மாறாக இந்து மதம் கூறுவதையே கவனியுங்கள். இந்து ராஜ்ஜியத்தைச் சமைக்கப் போகிறோம் என்று மீசை முறுக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கருத்தையே கவனியுங்கள், கவனியுங்கள்!

ஆர்.எஸ்.எஸின் தலைவர் - சர்சங்சாலக் மோகன் பாகவத் கூறும் மோகனசுந்தர அருள் வாக்கைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

கருஞ் சட்டையினர் கதறிக் கதறி கூறும் கருத்துகளை இந்த இடத்தில் கண்டிப்பாக தள்ளி வைத்து விட்டு, இந்தக் காவித் தலைவரின் கருத்து என்ன என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள்! கேளுங்கள்!!

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸின் தலைமைப் புரியாகிய நாகபுரியில், அதன் தலைவர் அறிவிக்கும், பிரகடனப்படுத்தும் செய்தி முக்கியமானது என்று அந்தமுகாமைச் சேர்ந்தவர்கள் சொல்லுவது வழக்கம். அது போல்தான் நடந்துமுடிந்த விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் திருவாளர் மோகன் பாகவத் முழங்கி யிருக்கிறார். (8.10.2019)

"இது பெண்கள் அனைவரையும் தாய்மார்களாகக் கருதப்பட்ட நாடு. பெண்களின் சுய மரியாதையைக் காக்க மாபெரும் போர்கள் நடந்த நாடு இது. அவை ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைக் களங்களாகவும் இருந்துள்ளன. பெண்களின் கற்புக்கு களங்கம் ஏற்படும் அபாயக் கட்டங்களில் "ஜோஹர்" போன்ற அக்கினிப் பிரவேச நிகழ்வுகளால் (உடன் கட்டையால்) பெண்கள் அமரத்துவம் பெற்ற நாடு இது. இப்படிப்பட்ட நம் நாட்டில் இன்று நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - நம் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பாதுகாப்பு  அறவே இல்லை என்பதை உணர முடிகிறது. இது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்!" என்றார் மோகன் பாகவத்.

இப்படியெல்லாம் இதோபதேசம் செய்திருப்பவர் சாதாரணமானவர் அல்லர். ஆர்.எஸ்.எஸின் பிதாமகன் சர்சங்சாலக் ஆர்.எஸ்.எஸின் தலைமைப் பீடத்திலிருந்து பேசியிருக்கிறார் - அதுவும் இந்துக்களின் 'புனித நாளான'  (?) விஜயதசமியன்று விண்டுரைத்திருக்கிறார்.

பெண்கள் தங்கள் சுய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்  மரணம் அடைந்த கணவனை எரியூட்டும் போது அதனை மலர்ப் படுக்கையாகக் கருதிமனையாளும் அந்தத் தீயிலே வெந்து மடிய வேண்டும்.

அதுதான் பெண்ணின் சுயகவுரவத்துக்கும், கற்புக்கும் அணிகலன் இதனை வெள்ளைக்கார மிலேச்சர்கள் சட்டம் போட்டுத் தடுத்து விட்டார்கள்.

எமதருமைச் சகோதரிகளே! இதை ஏதோ இந்த மோகன் பாகவத்துதான் பகர்ந்து விட்டார் என்று தவறாகக் கருத வேண்டாம்.

இவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்த அர்த்தமுள்ள (?) இந்து மதத்தின் ஆணி வேர்க் கலாச்சாரத்தைத்தான் காலட்சேபம் செய்திருக்கிறார்.

ஆரியர்களின் ருக்வேதம் இதனைக் கூறுகிறது.

"இன்னமும் விதவையாகாமல்  மாங்கலிகளாய் இருக்கிற பெண்கள் விலையுயர்ந்த தைலம், வாசனைத் திரவியங் களுடனும், மலர்ந்த முகத்துடனும், ஆபரணாதிகள் அணிந்து எவருக்கும் முன்னதாக கணவனின் சடலம் வைக்கப்பட்ட கட்டையண்டே வருவர்" என்று ருக் வேதம் கூறுகிறது.

கருட புராணமும் கூறுகிறது "சுத்தி" என்று நாம கரணம் சூட்டப்படுகிறது.

"மாசுடைய பொன்னை அக்னியானது அம்மாசை மாத்திரம் போக்கி, அப்பொன்னை கெடுக்காமை போல கொழுனனோடு உயிர் விடும் புண்ணியவதியின் மேனியை மாத்திரம் அக்னியானவன் தகனிப் பானே யன்றி அவளைச் சிறிதும் வருத்தான். தாய், தந்தை, மகன், பேரன், அண்ணன், தம்பி முதலியோரையும் மற்றுமுள்ள சுற்றத்தாரையும், மனை முதலிய பொருள்களையும், உயிரையும் துறந்து, கணவனே தெய்வம், அவனைப் பிரிந்து வாழ்வது என்பது அடுக்காது என்று தனது கணவனுடனே துஞ்சும் உத்தமியை ஒப்பவர் உலகில் யாருள்ளார்? சகமனம் (உடன்கட்டை ஏற்றல்) செய்த புண்ணியவதி  மூன்றரைக் கோடி தேவ வருஷ காலமும் சுவர்க்கத்தில் கணவனோடு இன்பம் துய்ப்பாள். அவ்வாறு நாயகனுடன் உடன்கட்டை ஏறி இறக்காத மங்கை எந்த ஜென்மத்திலும் துக்கமே அடைவாள்"

- இப்படி கூறுவது விஷ்ணு புராணம் (அத்தியாயம் 14)

அன்று ருக்வேதமும், விஷ்ணு புராணமும் கூறும் 'அர்த்தமுள்ள' ஆபாச இந்து மதத்தின் 'அர்த்த புஷ்டியான வாக்கிய மலர்களைத்தான்' இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பாச மணமாய்த் தூவுகின்றார்.

பாகவத் மட்டுமல்ல; உண்மையான இந்துக் கலாச் சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் 'தூதுவர்கள்' யாராக இருந்தாலும் இவ்வாறு தான் கூறுவார்கள்.

மறைந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்ததென்ன?"ஆஞ்சநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பாதி வரத்யத்தால் (கற்புச் சக்தியால்) அவரைப் பாதிக் காமலேயே இருந்தது. குமாரில பட்டர் உமிக் காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற (சங்கர) ஆசார்யாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில் லென்று இருந்தது. அனேக பதிவிரதைகளுக்கு அவர் களுடைய பதி பக்தியினாலேயே  சிதாக்னி சந்தனமாக  இருந்திருக்கிறது. அவர் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம், அதை எடுத்து வைத்துப் பூஜை பண்ணுவதுண்டு" ('தெய்வத்தின் குரல்' இரண்டாம் பகுதி 'உடன்கட்டை ஏறுதல்' எனும் பகுதியில் பக்கம் 967,968).

அருமைச் சகோதரிகளே! இதுதான் அர்த்தமுள்ள இந்து மதக் கலாச்சாரத்தின் உச்சம். கணவன் இறந்த நிலையில் அவன் மனைவியை என்னென்னவெல்லாம் செய்வார்கள்?

பெண்களின் உணர்ச்சியை அழிக்கவும், அவர்களை சுயநினைவற்றவர்களாக ஆக்கவும் அபின் போன்ற போதைப் பொருட்களையும் ஊட்டுவார்கள். உடன்கட்டை ஏறவேண்டிய பெண்ணைக் குளிப்பாட்டி அவளின் உடலில் மஞ்சள் பூசி வாசனைத் திரவியங்களைத் தடவி நெற்றியில் குங்கும திலகம் இட்டு, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்தி; ஆபரணங்களை எல்லாம் பூட்டி அவள் விதவையாகையால் சுமங்கலிகளின் கண்களில் படக்கூடாது என்பதற்காக அவளது உடல் முழுதும் மலர்ந்த மலர்களால் மறையும்படி மூடி, அவளது மடியில் ஏராளமான எலுமிச்சம் பழங்களையும் கட்டி, சூடத்தையும் கட்டிவிட்டு மேளவாத்தியம் தாரை தப்பட்டை, முதலியவற்றுடன் கணவனின் பிணத்திற்குப் பின்னதாக ஊர்வலமாகச் சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்லுவார்கள்.

சுடுகாட்டில் 15 சதுர அடி பரப்பு உள்ளதாயும், இரண்டு முழ ஆழம் உள்ளதாயும் வெட்டப்பட்ட குழியில் அகில், சந்தனம், துளசி ஆகியவற்றின் கட்டைகளை அடுக்கி அதன்மீது இறந்தவன் சடலத்தை வைத்து ஈமக்கிரிகைகளைத் துவங்குவார்கள்.

விதவை மனைவியானவள் கணவன் சடலம் வைக்கப்பட்ட சிதையை மூன்று முறை வலம் வந்து தமது குலதெய்வத்தைக் கைகூப்பி வழிபடுவாள். பிறகு, தான் அணிந்து இருக்கும் நகைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றித் தமது உறவினர்களிடம் கொடுப்பாள். பிறகு, அவள் கையில் எண்ணெயை ஊற்றுவார்கள். அதை வாங்கித் தனது தலையில் தேய்த்துக் கொள்ளுவாள். பிறகு, மீண்டும் மூன்று முறை சிதையை வலம் வந்து ஈமப்படுக்கையில் தனது கணவனின் சடலத்தின் பக்கத்தில் படுப்பாள். பிறகு, கயிறிட்டு கட்டி மேலும் விறகுகள் அடுக்குவதுடன் எளிதில் தீப் பிடிக்கக்கூடிய உலர்ந்த இலைகள், வைக்கோல் முதலியவற்றைச் சிதையின்மீது போட்டுத் தீ வைப்பார்கள்.

இப்படித் தீ வைப்பதற்கு முன்னதாகவே விதவைப் பெண்ணின் உறவினர்கள் இரண்டு பச்சை மூங்கில்களைக் கொண்டு அப்பெண் சுடுபட்டு எழுந்து ஓடிவிடாத வண்ணம் அழுத்திப் பிடித்துக் கொள்ளுவார்கள்.

நெருப்பின் சூடு பொறுக்க மாட்டாமல் அந்தப் பெண் அலறும் சப்தம் வெளியே கேளாதபடி தாரை, தப்பட்டை, ஊதுகொம்பு முதலிய முரட்டு வாத்தியங்களை வேகமாக முழக்கிக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் இப்படித் தீயில் இடப்பட்ட பெண்கள் சூடு பொறுக்க முடியாமல், எழுந்து ஓடுவதும் உண்டு. அப்படி எழுந்து ஓடும் விதவைகளை முரட்டுத் தடிகொண்டு அடித்து நெருப்பில் தள்ளிக்கொன்று சாம்பலாக்குவார்கள்.

இப்படிப் பெண்ணானவள் எழுந்து ஓடிவிடக் கூடாதே என்பதற்காக விதவை பெண்ணின் உறவினர்கள் தீ  இடப்பட்ட உடன் அத்தீயில் குடங்குடமாக எண்ணெய், வெண்ணெய், நெய் முதலியவற்றைக் கொட்டி தீயின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். இந்தக் காட்டுமிராண்டித்தனமான கோரக் கொலை நிகழ்ச்சிகள் பழம்பெரும் பூமி, ஞான பூமி, புண்ணிய பூமி என்று புகழப்படும் இந்தப் பாரதத்தில் பண்டைக்காலம் தொட்டு சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்வரையிலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்காக நடந்த வண்ணமாகவே இருந்து இருக்கின்றன.

எத்தகைய மனிதநேயம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்?  - நம்புங்கள், உண்மையான பத்தினிப் பெண்ணாக அவள் இருந்தால், அந்தப் பெண்ணை நெருப்பு சுடாதாம் - நம்புங்கள், சங்கராச்சாரியார்  அப்படித்தானே சொல்லி யிருக் கிறார்.

ஆகா, எத்தகைய இளகிய உள்ளம், கருணா சாகரம்!

மனிதாபிமானமற்ற மட்டரகமான இந்தக் காட்டு விலங் காண்டித் தனத்தை மனம் பொறுக்காமல் ஒழித்திடத்  தடை சட்டம் கொண்டு வந்தவர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநராக இருந்த லார்ட் வில்லியம் பெண்டிங்.

1829ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 4ஆம் தேதியை மனித நேயத்துடன் மனிதகுலம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.

கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் 'சதி' தடை செய்யப்பட்ட போது, இந்திய இராணுவத்தில் கமாண்டர் - இன் சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று கண்டு தேசிய பழக்க வழக்கங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு உறுதியளித்து இருப்பதை அவருக்கு நினைவூட்டியபோது, அதற்கு நேப்பியர் சொன்ன பதில்: "என்னுடைய தேசத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது. பெண்களை உயிருடன் எரிக்கும் ஆண்களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக்கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படிதான் நடக்கிறோம்" என்றாரே பார்க்கலாம்.

(''The Week  -  அக்டோபர் 11 - 1987)

மதவாத வெறித்தனத்துடன் பெண்ணை துடிக்கத் துடிக்க தீயில் வைத்துக் கொளுத்திய கொடுமையை ஒழிந்த வெள்ளைக்காரன் இவர்கள் பாஷையில் 'மிலேச்சன்!'

ஈவுரக்கமின்றி பெற்ற மகளையும், உடன் பிறந்த சகோதரிகளையும் பதைக்கப் பதைக்கத் தீயிட்டுப் பொசுக்கும் குரூரம்தான் மகத்துவமாம் - இந்த அர்த்தமுள்ள இந்து மத அகராதியில்.

பிறப்பால் இந்து வாக்கப்பட்ட நமது தாய்க்குலம் உரக்கச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இங்கு ஒரு இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லுகின்ற ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன்பாகவத்  - பெண்களின் சுயகவுரவம் என்பது உடன்கட்டை ஏறுவதுதான் இப்பொழுது சொல்லுகிறார்.

அதைத் தடுத்து விட்டார்களே என்று ஆவேசப்படுகிறார். இவர்கள் விரும்பும் இந்து ராஜ்ஜியம் இங்கு வந்தால் இதுதான் நடக்கும் எச்சரிக்கை!  பிஜேபி ஆண்ட ராஜஸ்தானில் என்ன நடந்தது?

ரூப்கன்வரை மறந்து விட முடியுமா? சதிமாதா கோயில் இன்றும் இருக்கிறதே! இவர்கள் கூறும் இந்து ராஜ்ஜியம் அமைந்தால் உடன்கட்டை என்ற காட்டு விலங்காண்டித்தனம் தேவை என்று சட்டம் செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா? எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

இந்த இந்து ராஜ்ஜியம் விரும்பிகளுக்குப் பாடம் கற்பிப்பதில் முதல் வரிசையில் நிற்க வேண்டியது நம் நாட்டுத் தாய்மார்கள் அல்லவா! ஏன், பார்ப்பனப் பெண்கள்கூட சிந்திக்க வேண்டியவர்களே! இந்து ராஜ்ஜியம் வந்தால் ஒட்டு மொத்த பெண்களின் உரிமையே சதியில் எரிந்து விடும் - எச்சரிக்கை!

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு  விழா ஆண்டு இது!

தாய்க் குலமே சிந்திப்பீர்!

- விடுதலை நாளேடு 12 10 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

மூடநம்பிக்கையால் முடிந்துபோன ராஜ்ஜியம்தஞ்சையை ஆண்ட முதலாம் மராட் டிய மன்னர் வெங்காஜி, இந்த வெங்காஜி பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவின் படைத் தளபதி ஆவார். இவரது திறமையைப் பாராட்டி பெங்களூர் நிர்வாகத்தை ஒப் படைத்திருந்தார் அடில்ஷா. இந்த நிலை யில் சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி சனவரி 1676இல் தஞ்சையை நோக்கி நகர்ந்தார்.

அப்போது மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சையை ஆண்டு வந்தார்.

வெங்காஜி  தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமய மானது, ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களது ஆயுதங்கள் அனைத்தும் பூஜைக்காக புதிதாக்கப்பட்டு சந்தனம் பொட்டு வைத்து கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.

வெங்காஜியின் படையெடுப்பை அறிந்த மன்னன் அழகிரி நாயக்கருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பனக் குருமார் களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட் டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படை யெடுத்து வருபவன் சுல்தான் அடில்ஷா வின் தளபதியான வெங்காஜியாவான். அவனோ இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.

மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லை யில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.

வெங்காஜியின் படைகளின் குதிரை களோ, குவித் திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயாசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.

இதனைக் கேள்வியுற்ற மன்னன் அழ கிரி நாயக்கர் வைணவனான  வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்து ழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி மதுரையில் தஞ்சமடைந்தான்.  வெங் காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்கா மலும் எளிதில் தஞ்சையினைக் கைப் பற்றின. அன்றிலிருந்து  தஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் ஆளுமைக்குச் சென்றது.  வரலாற்றில் எந்த ஒரு பதிவிலும் தஞ்சாவூரைக் கைபற்ற வெங்காஜி போரிட் டதாக இல்லை. அப்படியே இருந்தாலும் அது மதம் தொடர்பான கற்பனைக் கதையாக உள்ளது. 1680இல் நாயக்க மன்னரின் முட்டாள் தனத்தால் எளிதாக கைப்பாற்றிய தஞ்சை சமஸ்தானத்தில் 1855-ஆம் ஆண்டுவரை மராட்டியர்கள் ஆட்சி செய்தனர்.  எந்த நாயக்கர்களின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர பார்ப்பனர்களின் ஆலோசனை காரணமாக அமைந்ததோ அதே பார்ப்பனர்களால் தான் மராட்டியர் களின் ஆட்சியையும் முடிவிற்கு வந்தது.  கடைசி மன்னர் தஞ்சாவூர் சிவாஜி தனக்கு வாரிசு இல்லாதாதால் தனது சகோதரி மகனை முடிசூட்ட முயற்சி செய்தார். ஆனால் சூத்திரனான தஞ்சாவூர் சிவாஜி தனது வாரிசாக யாரையுமே நியமிக்க முடியாது என்று மனுதர்மத்தை சுட்டிக் காட்டி ஆங்கிலேய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், அங்கு வாதாடிய பார்ப் பனர்கள் கலியுகத்தில் பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள் மட்டுமே, சத்திரியர் வைசியர் என யாருமே கிடையாது என்று கூறி விட்டனர். இதனை அடுத்து டல்ஹொசி பிரபு கொண்டுவந்த அவகாசியிலிக் கொள்கை என்ற வாரிசு இழப்புக் கொள்கையின் படி தஞ்சை ஆங்கிலேயர் வசம் சென்றது. அப்போது பார்ப்பனர்கள் தான் தஞ்சையின் முன்சீப் ஆக நியமிக் கப்பட்டனர்.

நாயக்கர் தஞ்சையைப் பறிகொடுத்ததை வைத்தே ”பார்ப்புப் பெருத்தல்லோ நாயக் கர் துரைத்தனம் கெட்டது”! என்ற பழமொழி ஏற்பட்டது.  ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்தது, அதன் பிறகு பார்ப்பனர்களால் மராட்டிய சாம்ராஜியமும் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆனால், தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் மட்டுமே வளமாக வாழ்ந்துகொண்டு வந்தனர்.

- விடுதலை ஞாயிறு மலர், 5 .10 .19

வெள்ளி, 4 அக்டோபர், 2019

சிந்தனைத் திரட்டு

அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததை பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.

பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பிப் பின்பற்றமாட்டான்.

கடவுள் நம்பிக்கைகூட மனிதனுக்கு அநேகமாய்ப் பேராசையினாலும் பயத்தினாலும் ஏற்படுவதே அல்லாமல் உண்மையைக் கொண்டல்ல.

எந்தக் காரியத்தையும் வெளிப்படையாய்ச் செய்கிறவன் திருடனானாலும் கொலைகாரனானாலும் அவன் யோக்கியனே.

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல.

கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது.

கடவுளைக் காப்பாற்ற மக்கள் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகின்றது.

அரசனும் செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்கவேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும், ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.

ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இம்மூன்றும் உயிர் ஒன்றும் உடல் மூன்றுமாயிருக்கின்றன.

கொள்ளைக்காரர்களாய் இருந்தவர்களே அரசரா கிறார்கள். கொடுமைக்காரராய் இருந்தவர்களே பிரபுக் களாகின்றார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்காரர்களாகின்றார்கள்.

வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியா. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியா.

******


இப்பொழுது மத சம்பந்த மாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டு களுக்குக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம் தான் இருந்து வருகின்றது. அது என்ன வென்றால் கடவுளை நம் பாதவன் நாஸ்திகன் என்பதுவே.

- பெரியார் ஈ.வெ.ரா.

 - விடுதலை நாளேடு, 4 .10. 19