“திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் ஜாதியினர், “பார்த்தாலே தீட்டுப்படும்’’ ஜாதியினராக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பகலில் வெளியே வர முடியாது. இவர்கள் இரவில் மட்டுமே புழங்க முடியும். தீண்டப்படாதவர்கள் நாகரிகம் எதற்கும் உரிமை படைத்தவர்கள் அல்லர்.
இதுதானா இந்துமதப் பண்பாடு’’ எனக் கேட்டார் அம்பேத்கர். “ஆதிப் பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லையே, ஏன்? ஜாதி அமைப்பு இந்து மதத்தை மேலும் பரவலாக்க முயல்வதைத் தடுக்கிறது, நான்கு வர்ணக் கோட்பாடு சூத்திரர்களை, தீண்டாதோரை கவுரவக் குறைவான வழிகளிலும் குற்ற வழிகளிலும் பொருளீட்டும் நிலைக்குத் தள்ளிவிட்டது. நால்வர்ணம் இந்துமதத்தின் அடிப்படைக் கூறு. தீண்டப்படாதோரின் விடுதலைக்கு இந்து மதத்தில், நம்பிக்கையூட்டும் வழிவகைகள் கிடையாது. எனவே, இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது’’ என எழுதிய அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?
இந்துக்களின் தலைவராக பம்பாயில் அப்போதிருந்த ஜனாப்பூர் சாஸ்திரி பேசுகையில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இருக்கும் உறவு, ஒரு மனிதனுக்கும் செருப்புக்கும் இருப்பதுபோன்றதுதான் என்றாராம். இந்த உவமை துல்லியமானது என்றார் அம்பேத்கர். இத்தகைய உவமை இன்றைக்கும் பொருந்தும் வகையில்தானே இந்து மதமும் இந்துக்களும் இருக்கிறார்கள்?
“இந்து சமுதாயம் என்பது ஜாதிகளின் வீடு. இந்துக்கள் என்போர் ஒரு மக்களினம் அல்லர். ஜாதிகளாக அமைந்த மக்கள் குழுக்களின் ஒட்டுமொத்தம் ஆவர். இதுதான் இந்து சமுதாயத்தின் தனித்தன்மை’’ என்றார் அம்பேத்கர். இதுவா இந்துத்வா? இப்படி ஓர் இந்துத்வாவாதி பேசுவாரா? பேசத்தான் முடியுமா? சாட்டையால் அடித்த மாதிரி இந்து மதத்தின் உண்மைச் சொரூபத்தைத் தோலுரித்த அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்? எவ்வளவு பெரிய மோசடியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செய்கின்றனர்?
பார்ப்பனர்களுக்குக் கீழே நான்கு ஜாதிகள் (தீண்டாதோர் உள்பட?) வந்தன என எழுதினார் அம்பேத்கர். இந்துமத ஜாதிகளின் ஆக உச்சத்தில் இருப்போரான பார்ப்பனரின் தகுதியைப் பட்டவர்த்தனமாகப் பரிகாசம் செய்தவர் எப்படி இந்துத்வா அம்பேத்கர் ஆவார்?
இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்லர். அவர்களில் 1886 பிரிவினர் உள்ளனர். திராவிட பார்ப்பனர்கள் 5, மராட்டியப் பார்ப்பனர்கள் 31, ஆந்திரப் பார்ப்பனர்கள் 16, தமிழ்ப் பார்ப்பனர்கள்11, கர்நாடகப் பார்ப்பனர்கள் 7, குர்ஜாப் பார்ப்பனர்கள் 147, கவுட பார்ப்பனர்கள் 5, சரஸ்வத பார்ப்பனர்கள் 3, பஞ்சாப் சரஸ்வதப் பார்ப்பனர்கள் 222, மலைநாட்டு சரஸ்வதப் பார்ப்பனர்கள் 35, நாட்டுப்புறப் சரஸ்வதப் பார்ப்பனர்கள் 57, காஷ்மீர் சரஸ்வதப் பார்ப்பனர்கள் 155, காஷ்மீர் பார்ப்பனர்கள் 221, சிந்து சரஸ்வதப் பார்ப்பனர்கள் 6, கன்யா குப்ஜ பார்ப்பனர்கள் 10, இதில் மிஸ்ரா, சுக்லா, திவாரி, துபே, பதக், பாண்டே, உபாத்யா, கவுபே, தீட்சித் மற்றும் வாஜ்பேயி ஆகியோர் அடக்கம்) இதிலும் பல பிரிவுகளும் உள் பிரிவுகளும் உள்ளனவாம். இவை தவிர மிஸ்ராக்கள் 41, சக்லாக்கள் 26, திவாரிகள் 38, துபேக்கள் 21, பதக்குகள் 5, பாண்டேக்கள் 25, உபாத்யாக்கள் 10, சவுபே 10, தீட்சித் 7, வாஜ்பேயி 15, கவுட பார்ப்பனர்கள் 17, உத்கல பார்ப்பனர்கள் 6, ஷாஷானி பார்ப்பனர்கள் 12, சுரோத்ரிய பார்ப்பனர் 4, மைதில்ய பார்ப்பனர் 6, மிஸ்ராக்கள் 5, தென்னிந்திய பார்ப்பனர்கள் 7, இவர்கள் தவிர மேலும் 5 பிரிவுகள். குர்ஜர் பார்ப்பனர்கள் 29.
இந்த லட்சணத்தில் பார்ப்பன பாரதியார் எழுதினார். “என்னடா, இது! பறையில் 18 ஜாதியாம், நுளையில் 108 ஜாதியாம்’’ என்று! (படிக்க: பாரதியார் கட்டுரைகள்) இவன் முதுகில் 108 முடிச்சுகளை வைத்துக் கொண்டு மற்றவர்களைக் கேலி பேசினான். அம்பேத்கர் தந்துள்ள பட்டியலில் அத்தனை ஜாதிகளின் பெயர்களையும் தந்துள்ளார். (தொகுப்பு நூல்_பாகம் 10)
இப்படிப் பலவகையிலும் இந்துமத வினோதங்களையும், குரோதங்களையும் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டு, இந்துமதம் ஒழிக்கப்பட்டால் ஒழிய மக்கள் முன்னேற வழியே இல்லை என்று நிரூபித்துள்ளார் அம்பேத்கர். அவரைப் போய், இந்து மதத்தை அழிக்க நினைத்தவரல்லர் என்றும், இந்துத்வவாதி யென்றும் கூறுகின்றனர் என்றால், அறிவு நாணயம் என்பார்களே, அது கொஞ்சமாவது வேண்டாமா? அம்பேத்கரின் ஜாதி இந்துமத ஒழிப்புக் கொள்கை, கோட்பாடுகள் உலகம் எங்கும் பரவியுள்ள நிலையில், 1927 டிசம்பர் 20இல் மனுஸ்மிருதியை அம்பேத்கர் தீயிட்டுப் பொசுக்கினார்.
மகத் எனும் ஊரிலுள்ள சவுதார் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கத் தீண்டாதோருக்குள்ள உரிமையை நிலைநாட்டும் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக மனுநூல் எரிப்பு! ஒரு மாநாடு கூட்டி ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நூற்றுக் கணக்கானோர் கொளுத்தினர். ஏன் கொளுத்த வேண்டும் மனுநூலை? இதனை விளக்கி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
“இந்து சமுதாயத்தின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கதாக, இரங்கத் தக்கதாக பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது என்று இம்மாநாடு உறுதியாகக் கருதுகிறது. சமூக அநீதியைக் கண்டும் காணாமல் பொறுத்துக் கொள்வதன்மூலம், பொய்யான சமய நம்பிக்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம், ஒரு சமுதாயம் எவ்வாறு சீரழிந்துபோகும் என்பதற்கு இந்துச் சமுதாயத்தின் இன்றைய அவலநிலை எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. எல்லா இந்துக்களுமே பிறந்தது முதல் சமமானவர்கள். சமூக அந்தஸ்தில் வேறுபாட்டை உண்டு பண்ணக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை உறுதியாக மாநாடு எதிர்க்கிறது. வன்மையாகக் கண்டிக்கிறது.’’
“ஏற்றத்தாழ்வுச் சித்தாந்தத்தை இந்து சமூக அமைப்பின் அடித்தளமாகச் சித்தரிக்கும் இந்துக்களின் எல்லா இலக்கியங்களையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன் அடியோடு நிராகரிக்கிறது.’’
“வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்துக்களில் சில வகுப்பினர் அனுபவித்துவரும் சமூக, மதச் சலுகைகளை இம்மாநாடு மறுதலிக்கிறது.’’
“பொதுச் சாலைகளையும், கிணறு, குளம் போன்றவற்றையும் பொதுக் கோயில்களையும் இதர எல்லாப் பொது வசதிகளையும் எவரும் பயன்படுத்திக் கொள்வதற்கு எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது. இடைஞ்சல் செய்பவர்களையும் இடையூறு விளைவிப்பவர் களையும் மக்களின் விரோதிகள் என இம்மாநாடு கருதுகிறது.’’
“இந்து ஜாதி அமைப்பு முறை சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மக்களின் ஒப்புதலைப் பெற்றதாக இருக்கிறது. இத்தகைய ஜாதி அமைப்பை இம்மாநாடு ஏற்க மறுக்கிறது.’’
வேறு பல மதங்கள் காலப்போக்கில் அழிந்துபோன நிலையிலும் இந்து மதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருவதைப் பார்த்தால் _ அந்த மதங்களில் இல்லாத ஒன்று _ ஜாதி அமைப்பு இந்து மதத்தில் மட்டுமே இருப்பதுதான் அதன் தனித்தன்மை என்ற “தெய்வத்தின் குரலை’’ நினைத்துக் கொள்ளுங்கள். பூரி சங்கராச்சாரியின் கருத்தான தீண்டாமை ஷேமகரமானது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். காஞ்சி, பூரி சங்கராச்சாரிகளின் தீய கருத்துகளை மனதில் கொண்டுதானே இந்த மறுதலிப்புக் கருத்துகள்? எப்படி அம்பேத்கர் இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?
(கேள்விகள் தொடரும்)
-சு.அறிவுக்கரசு
-உண்மைஇதழ்,16-31.7.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக