பக்கங்கள்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

பதிலடிப் பக்கம் – சிந்து – சரஸ்வதி நாகரிகமா? - 2


விடுதலை நாளேடு

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

– கவிஞர் கலி.பூங்குன்றன்

26.7.2024 அன்றைய தொடர்ச்சி…
8. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர். ஆரியர்கள் தந்தை வழிச் சமூகத்தினர். ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் தாய்த் தெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் தாய்வழிச் சமூக அமைப்புடைய திராவிடர்களாவர் என்பதில் சந்தேகம் இல்லை.
9. அது மட்டும் அல்ல, சிந்து வெளி எழுத்துகள் கட்டாயம் இந்தோ ஆரியன் மொழியை எழுத பாவிக்கப் படவில்லை. ஏனென்றால் ஆரியர்கள் கி.மு.1700 ஆண்டுவரை இந்தியா வரவில்லை. கி.மு. 1600 போன்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் நலிவடைய ஆரம்பித்தது. இந்த நாகரிகத்தின் அழிவும் ஆரியக் குடியேற்றங்களும் ஒரே காலத்தில் நடந்தது என்று ஜான் மார்ஷல் கருதுகிறார். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், பூர்வ குடியினரான தாசர்களுக்கும், (திராவிடர்களை வேதங்களில் தாசர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிடுகின்றன) ஆரியக் குடியேறிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்தன என்றும், தாசர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தம் வசப்படுத்த உதவுமாறு இந்திரன், அக்னி போன்ற கடவுளரை வேண்டினர் என்றும் சில ரிக் வேதப் பாடல்கள் கூறுகின்றன, உதாரணமாக “இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய எதிரிகளை (தாசர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்.” என்று மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3 கூறுகிறது.
10. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப் பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப் படவில்லை.
11. வேத காலத்திற்கும் முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் ஆரமில்லாச் சக்கரங்கள் கொண்ட மாட்டு வண்டிகள் இருந்தன என்பதற்கு அங்குக் கிடைத்த சுடுமண் பொம்மைகள் ஆதாரம், ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன.

– – – – –

தமிழகமும், ஹரப்பன் நாகரிகமும்
நடன.காசிநாதன், இயக்குநர், அகழ்வாராய்ச்சித் துறை
இந்திய நாட்டின் மிகப் பழைமையான நாகரிகம் என்பது ஹரப்பன் கால நாகரிகம் ஆகும். ஹரப்பன் கால நாகரிகம், மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதாகும். இந்நாகரிகம் நிலவிய காலம் கி.மு. 2300 முதல் கி.மு. 1750 முடிய என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நாகரிகத்தை உருவாக்கியவர்கள் யார் என்பதில் இன்னமும் ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்நாகரிகம் திராவிடர்களின் முன்னோர்களைச் (Proto Dravidians) சார்ந்தது என்னும் கருத்தே மேலோங்கி நிற்கிறது. அதற்கான சான்றுகளாகக் கீழ்க்காணும் காரணங்கள் கூறப்படுகின்றன.
1. இந்நாகரிகம் நகர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
2. மண்சுவர் மற்றும் செங்கற் சுவர்களால் கட்டடங்கள் காணப்படுவது.
3. எழுத்துகள் உருவ அமைப்பில் உள்ளன.
4. கடவுளர் உருவங்கள் காணப்படுகின்றன.
5. எழுத்துகள் வலப்புறமிருந்து இடப்புறம் எழுதப்பட்டுள்ளன.
6. பசுபதி மற்றும் சக்தி வழிபாடு நிலவியிருக்கிறது.
7. குதிரை பயன்படுத்தப்படவில்லை.
8. கோட்டை அமைப்பு, தானியக் கிடங்குகள், நீராடும் பெரும் குளம் ஆகியவை காணப்படுகின்றன.
9. வேள்விச் சாலைகள் யாதும் இல்லை.
10. சோப்புக்கல் அல்லது மாவுக்கல் எனும் மிருதுவான கல்லில் செதுக்கப்பட்ட காளை, நீர்யானை, யானை, ஒட்டகம். நாய், மனிதன், பறவைகள் போன்ற உருவங்களோடு சில உருவ எழுத்துகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
ஹரப்பன் நாகரிகத்தைப் புலப்படுத்தும் இடங்களாக இதுவரை 1000 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்திய ஆசியப் பகுதியிலிருந்து, இந்தியாவில் குஜராத் மாநிலம் வரை பல இடங்கள் தெரியவந்துள்ளன. இந்நாகரிகத்தின் தொடக்கநிலை, நல்ல வளர்ச்சியடைந்த நிலை, சார்ந்த நிலை ஆகிய அனைத்து நிலைகளின் சான்றுகளும் கிடைத்துள்ளன. குறிப்பாக உருவ எழுத்துகள் செதுக்கப்பெற்று, முத்திரைகள் கணிசமான அளவில் அனைத்து இடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளன.
இம் முத்திரைகளில் காணப்பெறும் உருவ எழுத்துகளைப் படிக்க முயன்ற அறிஞர்களில் இங்கிலாந்து நாட்டு ஹன்டர், ஸ்பெயின் நாட்டு ஹீராஸ் பாதிரியார், வேடல், மார்ஷல், ருஷ்ய நாட்டு கொரானோ, பின் லாந்து நாட்டு அஸ்கோபர் போலோ, இந்திய நாட்டு டாக்டர் எஸ்.ஆர்.ராவ், தமிழ்நாட்டு அய். மகாதேவன், அமெரிக்க நாட்டு ஃபேர்சர்வீஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேற்காணும் அறிஞர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ள இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள்:-
1. உருவ எழுத்து வலப்பக்கமிருந்து இடப்பக்கம் எழுதப்பட்டிருப்பது.
2. இவ்வுருவங்களின் சில சொல்லையும் (Logo) சில எழுத்துத் தொகுப்பையும். (Syllables) குறிக்கின்றன என்பதாகும்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஃபேர்சர்வீஸ் என்னும் புகழ்பெற்ற தொல்லியலாளர் இந்நாகரிகம் தமிழ் – கன்னட மொழி பேசி யோரைச் சேர்ந்ததாகும் என்று அறிவித்துள்ளார்.
இலங்கையைச் சார்ந்த யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள ஆனைக் கோட்டையில் அகழாய்வின்போது ஒரு செப்பு முத்திரை கிடைத்துள்ளது. இதில் ஒரு வரியில் ஹரப்பன் கால உருவ எழுத்துக்களும் மற்றொரு வரியில் பண்டைத் தமிழ் எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த டாக்டர் இந்திரபாலா அவர்கள் ‘கோவேந்தன்’ என்ற தமிழ்ச் சொல் இரு வகை எழுத்துகளிலும் காணப்பெறுவதாகக் கொள்ளலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள கருத்து சரியானது எனில் இவ்விரு உருவ எழுத்துகளும் ‘அரசன்’ என்னும் பொதுப் பெயரைக் குறிப்ப தாகக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பெருங்கற்காலப் பானை ஓடுகளில் கணிசமான அளவில் குறியீடுகள் (Graffiti) ஹரப்பன் கால உருவ எழுத்துகளையே ஒத்துள்ளன. இக்குறியீடுகள் ஹரப்பன் கால உருவ எழுத்துக்களின் வளர்ச்சியாக இருக்கலாம் என்று பி.பி.வால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் விழுப்புரம் மாவட்டம், கீழ்வாலைப் பாறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருங்கற்கால ஓவியங்களின் அருகே சில குறியீடுகள் வரையப் பெற்றிருப்பதுவும் தெரியவந்துள்ளன. சக்கரம், மத்தளம் போன்ற குறியீடுகள் காணப்படுவதால் இவை ஹரப்பன் கால எழுத்துக்களோடு தொடர்பு கொண்டவை என்பது உறுதியாகிறது. அவ்வாறெனில் பெருங்கற்காலத் தொடக்கத்தில் ஹரப்பன் கால உருவ எழுத்துகள் தமிழ்நாட்டில் இருந்தது என்பதும் அதை மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.
இக் கருத்துக்கு வலிவூட்டுவதாக யாப்பருங்கல உரையில் காணப்பெறும் மேற்கோள் பாடல்கள் அமைந்துள்ளன.
“காணப்பட்ட உருவ மெல்லாம்
மாணுக்காட்டும் வகை மைநாடி
வழுவிலோவியன் கைவினைபோல
எழுதப்படுவது உருவெழுத்தாகும்”
நன்றி: குமரிக்கண்டம் மற்றும் சிந்துவெளி
மாநாட்டு மலர் 1994 பக்கம் 17-20

– – – – –

சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்த ஆரியர்கள்
புராதன பொதுவுடைமையில் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது. சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும்போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும், ரோமிலும் இருந்தது போன்ற அடிமை முறை சிந்து சமூகத்தில் இருந்திருக்க வில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் – அடிமைகள் – எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்கு பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.
இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கே உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது… அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாததுமான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும் இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கைகளுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.
– ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய “இந்திய வரலாறு” என்னும் புத்தகத்தின்
36-ஆம் பக்கத்திலிருந்து

மொகஞ்சதாரோ ஆரிய நாகரிக நகரமாம்!
பார்ப்பனர்களின் தகிடுத்தத்தம்!
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் சிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய இடம் பிடித்த மொகஞ்சதாரோ பெயரில் திரைப் படம் ஒன்றை தயாரித்துள்ளார். 2016 ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் முழுக்க முழுக்க திராவிட கலாச்சாரம் என்பதை மறைத்து வேத காலத்தின் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைக்க ஆரியக் கலாச்சாரம் முழுவதும் திரைப்படத்தில் காண்பித்தி ருக்கின்றனர். இதன் பின்னணியில் பார்ப்பன சக்திகள் இருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு பாஜக முதல் முத லாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட அடையாளங்களை முற்றிலும் சிதைக்கும் வேலையை தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தது. 1999 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் வாஜ்பாய் மற்றும் மகாராட்டிராவில் சிவசேனா-பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்திரபதி சிவாஜி) வைக்கப்பட்டிருந்த சிந்து சமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதி யில் திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் என்ற பெயரை நீக்கிவிட்டு அடையாளம் தெரியாத நாகரிக மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இன்றுவரை அது அப்படியே உள்ளது.

ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டிலா?
தற்போது சிந்து சமவெளி நாகரிகம் குறித்து அது ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில் என்று காண்பிக்கும் வேலை திரைப்படங்கள் மூலம் நடந்து வருகிறது. விமானம் என்பது வேத காலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று என்று கூறி, சில கட்டுகதைகளை வைத்து “ஹவாய்ஜாதா” என்ற திரைப்படமே எடுக்கப்பட்டுவிட்டது. அதில் ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியாவில் விமான சாஸ்திரம் என்ற வேதகால நூல் ஒன்றை வைத்து மராட்டிய இளைஞன் ஒருவன் விமானத்தை தயாரித்ததாகவும், அதை மும்பை கடற்கரையில் வெற்றி கரமாக பறக்கவிட்டதாகவும் காட்டப்பட் டிருந்தது.
தற்போது திராவிட பண்டைய கலாச்சாரத்தின் சின்னமாகத் திகழும் மொகஞ்சதாரோ என்னும் அழிந்து போன நாகரிக நகரை ஆரியர்களின் நகரமாகக் காண்பித்துள்ளனர். இந்தத் திரைப்படத் தின் பின்னணியில் மாடு பூட்டிய அலங் கார வண்டி, பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகள், உலோக ஆயுதங்கள், உழவுக்கருவிகள் போன்றவை அன்றைய கால கட்டத்தில் (கி.மு.3000) கிடைத்த புதை பொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும் என்று கூறிய அசுதோஷ் கோவரிகர் நாங்கள் வேதகால மொகஞ்சதாரோவை மக்களின் கண் களுக்கு முன்பாகக் கொண்டு வந்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள சிந்து சம வெளி நாகரிக எச்சங்களை ஆரியக் கலாச் சார நாகரிகம் என்று காண்பிக்கும் பணி களை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக நடத்தி வந்தனர். தங்களது அடையாளங்களைத் திணிக்க முடியாத இடங்களை அழித்து குடியிருப்புகளாக உருவாக்கிவிட்டனர். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக குஜராத்தில் உள்ள தொலவீரா என்ற இடத்தைக் கூறலாம், ஆங்கிலேயர் காலத் தில் மிகப்பெரிய அளவு அகழ்வாராய்ச் சிக்கு உட்பட்ட இந்த இடத்தை சுதந்திரத் திற்குப் பிறகு முற்றிலும் அழித்து தற்போது ஒரு சிறுபகுதியை விட்டு விட்டு மற்ற பகுதிகள் அனைத்தையும் தனியார்களுக்கு சுண்ணாம்புப் பாறைகளை வெட்டி எடுக்க ஒப்பந்தத்தில் விட்டுவிட்டார்கள்.

சிந்து வெளியில் குதிரைகள் எங்கே வந்தன?
இதன்மூலம் சுமார் 3000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பகுதி 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழித்தொழிக் கப்பட்டு விட்டது. இந்தப் படத்தில் குதிரை கள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை. அகழ்வாராய்ச்சிகளில் சில இடங்களில் கட்ச் கழுதைகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. இவை விவசாயத்திற்கும், ஏற்றம் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் என்று ஒரு கருத்தை ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர் (1858-1931) கூறியிருந்தார்.
ஆனால் அந்தக் கழுதை எலும்புகள் கிடைத்த காலம் குறித்து இன்றுவரை சரியான முடிவுகள் இல்லை. அப்படி இருக்க அந்தப் படத்தில் குதிரைகளைக் காண்பிப்பது ஏன் என்றால் ரிக் வேதத்தில் குதிரை முதன்மையான விலங்காக காட்டப் பட்டுள்ளது. முக்கியமாக அசுவமேத யாகத்தில் குதிரைதான் மன்னருக்கெல்லாம் மன்னன் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்பட் டுள்ளது. அந்த வாசகங்களை உண்மை யாக்க இந்த தந்திரங்களை திரைப்படத்தில் புகுத்தியுள்ளனர்.
திரைப்படத்தில் பல இடங்களில் சிவ லிங்கங்களை காண்பித்துள்ளனர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் சமலா நதிக் கரையில் (கர்நாடகா) நேர்த்திக்கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கிவைத்த சிவ லிங்கங்களை காண்பித்து அந்த பகுதி மொகஞ்சதாரோ மக்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்று காண்பித்துள்ளார்கள்.

சிந்து சமவெளியில் சமஸ்கிருதமாம்
மிகவும் முக்கியாக அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் இந்தோ-அய்ரோப்பியன் மொழி என்றும் திராவிட நாகரிகத்தில் சமஸ்கிருதமோ அல்லது இந்துமத வழிபாடோ எங்கும் காணப்படவில்லை என்றும் வரலாற்று உண்மைகள் இருக்கும்போது மிகப்பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்து சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் ஸநாதன மதம் என்று பல்வேறு புரட்டுக்களை திணித்து திராவிட நாகரிகத்தை அழிக்கும் செயலை மொகஞ்சதாரோ என்ற திரைப்படம் வாயிலாக காவி அமைப்புகள் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளன.
முக்கியமாக இந்தத் திரைப்படத்திற்கு ஸநாதன பிரச்சார அறக்கட்டளை என்ற வெளிநாட்டு அமைப்பு பல்வேறு வகையில் நிதி உதவி செய்ததாக திரைப்பட நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இத்திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் கூறியிருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதா அக்பர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அக்பர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தாலும் இந்து மதத்திற்கு முக்கி யத்துவம் கொடுத்திருந்தார் என்றும் அவர் சைவ உணவுப் பிரியர் என்றும் படத்தில் காட்டி இருந்தனர். மேலும் பசுவதை செய் பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பவராக இருந்தார் என்றும் படத்தில் காட்டியிருந்தனர்.
வரலாற்றைத் திரிப்பது, உருமாற்றுவது என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையே! வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த முரளி மனோ கர் ஜோஷி, கணினியைப் பயன்படுத்தி சிந்து சமவெளிபற்றிய கல்வெட்டுகளைத் திரிக்கும் வகையில் காளையை குதிரை யாக்கிக் காட்டினார் என்பது நினைவில் இருக்கட்டும்.
ஆரியராவது, திராவிடராவது என்று நம்மிடம் பேசுவார்கள்; அதேநேரத்தில், பார்ப்பனர்கள் தாங்கள் ஆரியர்களே என்ற உள்ளார்ந்த உணர்வோடு செயல்படுவார் கள் என்பதற்கு இந்தத் திரைப்படமும் ஓர் எடுத்துக்காட்டே!

– – – – –

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது
– அய்ராவதம் மகாதேவன்
சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது என்று கல்வெட்டு ஆய்வாளரும், தினமணி மேனாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல் லியல் துறை சார்பில் நடைபெற்ற முனைவர்கள் எ.சுப்ப ராயலு, செ.ராசு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்ச தாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்து கிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது.
இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும் போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்ததால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழியில் காணப்படு கின்றன என்பது என் கருத்து.

பாண்டியர்களின் மூதாதையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய ஆரியப் பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்துவெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டைவிட காலத்தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிகமாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என்பது எனது முடிவு என்றார் அய்ராவதம் மகாதேவன்.
(தினமணி, 29.1.2015)
கல்வெட்டு: மொகஞ்சதாரோ – அரப்பா…
மொகஞ்சதாரோ அரப்பா தொல் நகரங்களில் காணப்படும் சித்திர எழுத்துகளை முன்னரே பலர் ஆராய்ந்து அங்கு வாழ்ந்தோர் திராவிடரே எனச் சொல்லியுள்ளனர். 1980 ஆம் ஆண்டில் அவ்விரு எழுத்துகளைப் புதுமுறை எந்திரங்களின் துணை கொண்டு நன்காராய்ந்து அவை திராவிடர் புழங்கியதே என்று ரஷ்யப் பேரறிஞர் குனோரோசோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது வால்டர் பேர் செர்வி என்ற அமெரிக்க மாந்தவியலறிஞரும் அவை திராவிடர்களின் மொழியே என்று மறுவுறுதிப்படுத்தி உள்ளார். அவர்தம் ஆய்வுக் கட்டுரை அறிவியற் துறை அமெரிக்கன்(Scientific American) எனும் மாத இதழில் (மார்ச் 1983) வெளிவந்துள்ளது.

நாட்டுப்பண்ணிலிருந்து “திராவிடம்”
என்ற சொல்லை நீக்குவீர்களா?
டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் 2000-2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து “திராவிடியன் என்சைக்ளோபீடியா” என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வ. அய். சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, நீங்கள் நாட்டுப்பண்ணிலிருந்து “திராவிடம்” என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து “திராவிடம்” என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான ‘”DLA news” இல் காணப்படுகின்றது.

– தமிழ்த் தென்றல் திரு.வி.க. நூற்றாண்டு விழா மலர்,
வெளியீடு: தமிழர் முன்னேற்றக் கழகம், இலண்டன்