பக்கங்கள்

சனி, 12 டிசம்பர், 2020

பார்ப்பன வெறி பிடித்த பாரதியார்...



மகா க(காவி)வி பாரதியார்..❓

பார்ப்பன வெறி பிடித்த பாரதியார்...

அகண்ட பாரதம் ஆரியநாடு!
நால்வர்ணம் நாட்டுநலன்!
பசுவதை தெய்வக்குற்றம்!
இந்தி பொதுமொழி!
சமஸ்கிருதம் தெய்வபாஷை!
மதமாற்றம் தடைசெய்!

RSS எனும் பச்சைப் பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. RSS இயக்கத்தின் முன்னோடி! தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிக் கொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி!

அதனால்தான்

"வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல
 வித்தை தெரிந்தவன் பார்ப்பான்"

என்றான் போலும்!

அகண்ட பாரதம் ஆரியநாடு!

"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"-என்றும்

"வானாறு பேரிமய வெற்பு முதல்
 பெண்குமரி யீராகும் ஆரியநா டென்றே யறி!"-என்றும்

இந்திய நாட்டை முன்று சதவீத பார்ப்பனர்களின் நாடாகப் பாடி மகிழ்ந்தான்!.

 
“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
  பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே"

 
“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
 ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்".

- என்று புலம்பினான்!.

நால்வர்ணம் நாட்டுநலன்!

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும். நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம வெறிபிடித்த பாரதி

"நாலு குலங்கள் அமைத்தான் - அதை
 நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்"

- என்றான்.

"நான்கினில் ஒன்று குறைந்தால்
 வேலை தவறிச் சிதைந்தே - செத்து
 வீழ்ந்திடும் மானிடச் சாதி"

- என்று ஒப்பாரி வைத்தான்.

சர்.பிடி.தியாகராயர், டி.எம்.நாயர், சி.நடேசனார் ஆகியோர் தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற பெயரில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை தோற்றுவித்தபோது, அதற்கு எதிர்வினையாற்றியவன் பாரதி!

“பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும். இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன" என்றான்.

பசுவதை தெய்வக்குற்றம்!

   "பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்" என்று 1917லேயே சுதேசமித்திரன் ஏட்டில் பசுவதை தடை கோரியவன் பாரதி!

இந்தி பொதுமொழி!

    இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று 1906ல் "இந்தியா" வார ஏட்டில் "இந்திபாஷை பக்கம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதினான்.

“தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். ஹிந்திப் பாஷையை எதிர்க்க என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்கிறோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க, அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும்". (பாரதி தரிசனம்)

சமஸ்கிருதம் தெய்வபாஷை!

செத்தமொழி சமஸ்கிருதத்தை தெய்வபாஷை என்று உயர்த்திப் பிடித்தவன் பாரதி!

“நம் முன்னோர்களைப் பின்பற்றி புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் சமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்".(பாரதியார் கட்டுரைகள்)

 
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
 இனிதாவ தெங்கும் காணோம்"

 
என்கிற பாடலைக்கூட பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இப்பாடலும் பாரதிக்கு தமிழ்மேல் இருந்த காதலால் எழுதப்பட்டது அல்ல என்பது புலனாகிறது.

மதமாற்றம் கூடாது!

பஞ்சத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவந்த கிறித்துவப் பாதிரியார்கள் மீது சீறிப் பாய்ந்தான் பாரதி.

"எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள். 

ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை மீண்டும் நமது இந்து சமூகத்திலே சேர்க்க வேண்டும்." (பாரதியார் கட்டுரைகள்)

1921 இல் "லோக குரு பாரதமாதா" என்ற தலைப்பில் "இந்தியாவிற்குச் சுதந்திரம் கேட்பதே இந்து தர்மத்தைக் காப்பாற்றத்தான்" என்று எழுதியுள்ளான்.(பாரதியார் கட்டுரைகள்)

பாரதியும் மீசையும்!

பார்ப்பன தர்மத்திற்கு எதிராக மீசை வளர்த்தான் பாரதி என்று சிலாகிப்பர் சிலர். பாரதியின் மீசை பார்ப்பன தர்மத்திற்கு எதிரானதா? தான் மீசை வளர்த்த கதையை அவரே சொல்கிறார்:

“வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா? என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்." என்கிறார். (பாரதியார் கட்டுரைகள்).

எனவே வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றியே பாரதி மீசையை வைத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோருவதும், வெள்ளையன் கையில் அகப்படாமல் ஓடிஒளிந்து, தலைமறைவு வாழ்கை வாழ்வதுமாக இருந்த பாரதியின் மீசையை வீரத்தின் அடையாளமாக பலர் புகழ்வதைக் கண்டு எப்படி சிரிப்பது எனத் தெரியவில்லை!

"அச்சமில்லை அச்சமில்லை" என்று அவன் பாடியதை நினைக்கையில், கோழைகள் இருள் சூழ்ந்த பகுதிகளைக் கடக்கும்போது பயம் தொற்றிக்கொள்ளாமல் இருக்க உரத்த குரலில் பாடிக்கொண்டோ, பேசிக்கொண்டோ நடக்கும் பழக்கம் இன்றும் கிராமப்பகுதிகளில் உண்டு. அதுதான் நினைவிற்கு வருகிறது. பாரதியின் "அச்சமில்லை அச்சமில்லை" பாடலும் அந்தவகையில் எழுந்தது தானோ?

பாரதி ஆராய்ச்சி!

திராவிட இயக்கத் தோழர்களே கூட பாரதியின் ஒருசில பாடல் வரிகளை பார்த்துவிட்டு தவறான மதிப்பீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். 1937லேயே "பாரதி ஆராய்ச்சி" என்ற தலைப்பில் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரை இதற்கு தக்க பதிலாக அமையும்!.

"பாரதியை ஒரு தெய்வமாக பாவித்து, அவருடைய படத்துக்கு மாலைபோட்டு, தீப நெய்வேத்தியங்கூட சிலர் செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குக் காரணம் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிகையுமே ஆகும்.

இந்தக் கொண்டாட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் , ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்பழக்கமுடையவனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்குளியாய் இருந்தாலும் அவனைப் பற்றி  அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து "இந்திரன்" என்றும் "சந்திரன்" என்றும் உயர்த்திப் பேசி, எழுதி அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்கு தகுந்த வசதிகள் அவர்களுக்குத் தாராளமாய் இருக்கின்றன.

மனு ஆட்சி எப்படியாவது  ஏற்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கொண்டிருக்கும் பொழுது, அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களை பார்ப்பனர்கள் கை நழுவ விடுவார்களா? பாரதி அநேக பாடல்களை குடிவெறியில் பாடியிருக்கிறார். அவர் நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம்.

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும், இந்தியா அவர்களுக்கு சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான்!. பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக அவரைப் பற்றி நினைத்துகொள்ள  "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே", "தமிழ்மொழி போல் எங்கும் காணோம்"  என்ற வரிகள் எடுத்துக்காட்டப் படுமானால் அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி என்று தான் சொல்லவேண்டும்" (குடியரசு 17.10.1937)
- சண்முகசுந்தரம் முகநூல் பக்கத்திலிருந்து, 11.12.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக