பக்கங்கள்

திங்கள், 29 அக்டோபர், 2018

அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் அனுமதி: வழக்குத் தொடுத்தவர்கள் யார்? இதோ ஆதாரம்!

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதா? அய்யய்யோ இது என்ன அநியாயம்! சம்பிரதாயங்களைச் சாம்பலாக்கலாமா?


ஒவ்வொருக் கோயிலுக்கென்றும் ஒவ்வொரு சம்பிர தாயம் உள்ளனவே. உரிமை முழக்கம் என்றால் அதனை உருக்குலையச் செய்யலாமா?

கடவுள் இல்லை என்று கூறும் தி.க.வும், கம்யூனிஸ் டுகளும் இதில் மூக்கை நுழைக்கலாமா?

சட்டமும், தீர்ப்பும் என்ன சொல்லுகின்றன என்பது முக்கியமல்ல. சம்பிரதாயங்களும், சாஸ்திரங்களும் என்ன சொல்லுகின்றன என்பதுதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!" என்று அடேயப்பா! ஆகாயத்துக்கும், பூமிக்கும் குதித்துவரும் ஆன்மிகப் போர்வையில் ஒளிந்திருக்கும் பார்ப்பனர்களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் முகத்தி ரையைக் கிழிக்கும் வண்ணம் ஆதாரம் என்ற ஏ.கே.47 துப்பாக்கி இதோ வெடிக்கிறது - வெடிக்கிறது!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களும் போக அனுமதி வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர்கள் யார் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ்.தான் பக்கா - ஆர்.எஸ்.எஸ்தான்! ஆர்.எஸ்.எஸின் மகளிர் பிரிவான ராஷ்டிரிய சேவிகா சமிதி என்பதுதான்.

இதன் முக்கிய குறிக்கோள் என்ன தெரியுமா? இந்துப் பெண்களை ஒருங்கிணைத்து இந்துத்துவா கொள்கைகள் மூலம் இந்துக் கலாச்சாரத்தையும், இந்து மரபுகளையும் மீட்டெடுப்பது தான் இதன் நோக்கமும் - போக்கும்!

வழக்கைத் தொடுத்த அந்தப் பெண்மணிகள் யார்? அவர்கள் வகித்த பொறுப்பென்ன? இதோ:

ராஷ்டிரிய சேவிகா சமிதியின் இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பிரேரனாகுமாரி, பசரிஜா சேத் மற்றும் மகளிர் உரிமை செயல்பாட்டாளர்கள் லட்சுமி சாஸ்திரி, சுதாபால் இவர்கள்தாம் 2006 ஜூலை மாதம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்கள்.

வழக்குத் தொடுத்த நிலையில் டில்லியில் செய்தி யாளர்களிடம் அவர்கள் பேசியது என்ன?



இதோ:

"சபரிமலையில் 1987-ஆம் ஆண்டு  கன்னட நடிகை ஜெயமாலா என்பவர் கோவிலில் நுழைந்தார் என்பதற்காக அவரது கோவில் நுழைவு குறித்து பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பின; ஒரு பெண் கோவிலில் நுழைவது தவறா? கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது, ஒரு பெண் நுழைவதைத் தடை செய்வது என்பது அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியாகும். சமூகம் இன்றளவும் பழைமையில் ஊறி இருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு ஏதுவுமில்லை. நாங்கள் இது குறித்து எங்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தோம். அதன் படி இன்று வழக்கைத் தொடர்ந்தோம்"

"ஆன்மிகம் என்பது பால்வேறுபாடுகளுடன் கூடியது அல்ல, கோவிலில் பெண்கள் நுழையக்கூடாது என்று கூறுவதும் ஒரு தீண்டாமைக் கொடுமை ஆகும். அது இந்திய அரசமைப்புச் சட்டம் 17-அய் அவமதிக்கும் செயலாகும்.

மேலும் நாங்கள் இதை கேரள பெண்களுடன் தொடர்புபடுத்தியும் பார்க்கவில்லை. பெண்களின் உரிமை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 15-இல் அனைவருக்கும் உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதை நாம் பின்பற்றவேண்டும்" என்று கூறினர்.

இவர்கள் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 2006-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதாடிய ஆர்.எஸ்.எஸ் பெண் அமைப்பின் அமைப்பாளரும், ஒருங்கிணைப் பாளருமான பிரேரனா குமாரி வாதிட்ட போது, "இது ஒரு ஆரோக்கியமான விவாதமாகும். உச்சநீதிமன்றம் கோவில் களில் அனைவரும் நுழைவது தொடர்பாக வழக்கை சிறப்பு கவனமெடுத்து விசாரிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் "கோவில் என்பது அனைவருக்கும் பொது வானது, அங்கு ஆண், பெண் என்ற பாகுபாடு கூடாது, அங்கு பழங்கதைகளைக்கூறி மூடநம்பிக்கைகு இடம் கொடுக்கக்கூடாது, கடவுள் எப்போதும் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறியது இல்லை. பெண் ஒருவர் கோவிலுக்குச்செல்கிறார் என்றால் அதைத் தடுக்க தனிமனிதருக்கோ, அமைப்பிற்கோ உரிமை இல்லை.. அப்படிச்செய்வது தவறான வழிகாட்டுதலுக்கு எடுத்துக் காட்டாகிவிடும். அப்படி நடக்க விடக்கூடாது, பல்வேறு உரிமைப்போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது, சபரி மலைக் கோவில் விவகாரத்திலும் உரிமைப்போராட்டம் வெற்றி பெற வேண்டும். இதில் நீதிமன்றம் உத்தரவிட்டு நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும்" என்று கூறினர்.

இந்தப் பேட்டியைப் படிக்கும் வாசகர்களே உங்களுக்குத் தோன்றுவது என்ன?

பேட்டியளித்தது திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரரா என்ற சந்தேகம் வருகிறதா இல்லையா?

இவ்வளவையும் பேசிவிட்டு, வழக்கும் தொடுத்து விட்டு இன்றைக்கு இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பார்ப்பனர் வட்டாரம் பல்டி என்றால் சாதாரண பல்டியல்ல - அந்தர் பல்டி அடிக்கின்றனர் என்றால், இந்தக் கூட்டத்தின் அறிவு நாணயத்தை எண்ணி, எள்ளி நகையாடுங்கள்!

இவர்கள் எந்த மோசமான எல்லைக்கும் செல்லக் கூடிய "ஏய்ப்பர்கள்" என்பது விளங்கிடவில்லையா?

கோணிப்புளுகன் கோயபல்சும் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டுமல்லவா! இந்த வழக்கைத் தொடுப்பதற்கு முன் ஆர்.எஸ்.எஸின் முக்கியமானவர்களையெல்லாம் கலந்து ஆலோசித்தோம் என்று ஊசியைக் குத்திப் பலூனை வெடிக்கச் செய்துள்ளாரே!

இதன் மூலம் ஆர்.எஸ்.எஸின் முக்கிய தலைவர்களின் யோக்கியதையும் கிழிந்து தொங்கிடவில்லையா!

வழக்குப் போட்டது யார்? எப்பொழுது போட்டார்கள் ஆதாரம் உண்டா? என்று சமூக வலைதளங்களில் நீட்டி முழங்கும் - மார்தட்டும் அறிவு ஜீவிகள்(?) இதற்குப் பிறகாவது மன்னிப்புக் கேட்க வேண்டாம் (அதுதான் அவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கலாயிற்றே!) மரியாதை யாக உண்மையை ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸில் உள்ள அப்பாவி தமிழர்களோ புரிந்து கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த உடனடியாக அதனை உச்சி முகர்ந்து வரவேற்றவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. "மிகச் சிறந்த தீர்ப்பு! ஒரு ஜாதி அல்லது பாலினத்திற்கான மதமாக இல்லாமல் எல்லோரையும் உள்ளடக்கியதாக இந்து மதம் மாறுவதற்கு இது வழி வகுக்கிறது" என்று கருத்துச் சொன்னாரே - இதற்கு என்ன பதில்? பிஜேபியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் சோபா சுரேந்திரன் எல்லா அம்சங்களையும் பரிசீலித்தே உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்று கூறவில்லையா! மக்கள் மறதி என்ற நினைப்பா?

திராவிடர் கழகமோ, அதன் தலைவரோ, 'விடுதலையோ' எதையும் ஆதாரமில்லாமல் ஒரே ஒரு வார்த்தையைக்கூட எழுதாது என்பதைத் தெரிந்து கொள்க!



அடையாளம் காண்பீர்!


"பெண் ஒருவர் கோயிலுக்குள் செல்லுகிறார் என்றால் அதைத் தடுக்க தனி மனிதருக்கோ அமைப்பிற்கோ உரிமையில்லை; அப்படி செய்வது  தவறான வழி காட்டுதலுக்கு எடுத்துக்காட்டாகி விடும்; சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் இப்படி டில்லியில் பேட்டியும் கொடுத்தனர்! கொடுத்தனர்!!

- கலி. பூங்குன்றன்

 - விடுதலை நாளேடு, 27.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக