பக்கங்கள்

சனி, 22 செப்டம்பர், 2018

தினமலரின் அருள்வாக்கு

கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! -தினமலரின் அருள்வாக்கு

தினமலரின் அருள்வாக்கு

***கவிஞர் கலி. பூங்குன்றன்***


கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! என்று தினமலரில் ஒரு கடிதம் வெளிவந்துள்ளது.
ராமானுஜரும், பாரதியாரும் தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பூணூல் போட்டு பெரிய புரட்சியைச் செய்ததாகப் புலம்பும் பேர் வழிக்கு ஒரே ஒரு கேள்வி.
அந்த ராமானுஜரும், பாரதியாரும் அதில் ஏன் வெற்றி பெறவில்லை? அந்த ராமானு ஜரையும், பாரதியையும் பெருமைக்குரிய இடத்தில் வைத்துப் பேசும் பேர்வழிகளை நோக்கி ஒரே ஒரு கேள்வி. அந்தப் பணிகளை இப்பொழுது செய்ய ஏன் தயக்கம்?
சங்கராச்சாரியாரையும், ஜீயரையும் பார்த்துக் கேள்வி கேட்கும் திராணி - நல்ல புத்தி இவர்களுக்கு உண்டா?
காஞ்சிப் பெரியவாளே, சிறீப்பெரும்புதூர் ஜீயர் வாளே மரியாதையாக ராமானுஜரும், பாரதியாரும் மேற்கொண்ட அந்த வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள் - அப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால், இந்த வீரமணிகள் எல்லாம் இப்படித் துள்ளு வார்களா? என்று கேள்வி கேட்கும் அறிவு நாணயம் தினமலர் வகையறாக்களுக்கு உண்டா?
இவற்றிற்கெல்லாம் மூல காரணம் ஜாதிதானே. பூணூல் - கீணூல் பிரச்சினை எல்லாம் இந்தப் பாழாய்ப் போன ஜாதியால் தானே - கடவுள் படைப்பில் மேல்ஜாதி - கீழ்ஜாதி என்று எப்படி இருக்க முடியும்? எல்லாம் நாமாகப் பார்த்து செய்த ஏற்பாடு தானே!
வைஷ்ணவ பெரியவா ராமானுஜர், திருக் கச்சி நம்பி என்ற பிராமணரல்லாதாரைக் குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் - அப்படி இருக்கும்போது, சங்கர மடத்திலும், வைணவ மடத்திலும் திருக்கச்சி நம்பி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை அமர்த்த என்ன தடை? அது சாஸ்திரத் தடையாக இருந்து தொலையட்டும் - எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன - இதில் ஒரு மாற் றத்தைக் கொண்டு வந்தால் வீண் பிரச்சினை கள் தொடை தட்டி வெடித்துக் கிளம்பாதோ என்று சங்கர, ஜீயர் மடாதிபதிகளிடம் கோரிக்கை வைக்க முன்வருவார்களா?
இதே ஜீயரிடம் ஆனந்தவிகடன் சார்பில் திருவாளர் மணியன் பேட்டி கண்டபோது, என்ன சொன்னார்?
இதுதானே இன்றைய நிலை? இதற்கு நாணயமாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் திராவிடர் கழகத் தலைவரைப் பார்த்து வக்கணைப் பேசி என்ன பயன்?
இன்னவர்தான் பூணூல் போட வேண்டும் என யாரும் கூறவில்லையாம் - அடேயப்பா - பொய்யைச் சொல்லு வதற்கு இந்தப் பூணூல் கும்பல் சற்றும் வெட்கப்படாது என்பதற்கு இது ஒன்று போதாதா?
விடுதலையில் ஆதாரத்தோடு எந் தெந்த வருணத்தைச் சார்ந்தவர்கள் எத்த கைய நூலால் பூணூல் தரிக்கவேண்டும் என்பதை அவர்களின் மனுதர்ம சாஸ் திரத்திலிருந்தே எடுத்துக்காட்டப்பட்டு இருந்தது. ஜாக்கிரதையாக மறந்து போயிருந்தால், இப்பொழுதுகூட மீண்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
மனுதர்மம் - அத்தியாயம் இரண்டு; சுலோகம் 42 என்ன கூறுகிறது?
பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும்,
க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை யொத்த முறுவற் புல்லினாலும்,
வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல்லிதாகப் பின்னி மூன்று வடமா மேலே அரைஞாண் கட்ட வேண்டியது.
அடுத்த 43 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
இந்த மூன்றும், அகப்படாத காலத்தில், மேற்சொன்ன மூன்று வருண பிரம்மச்சா ரிகளுக்கும் கிரமமாக தருப்பை நாணல் சவட்டைக் கோரை - இதுகளினால் மூன்று வடம் அல்லது தங்கள் குல வழக்கப்படி அய்ந்து வடமாவது ஒரு முடியுடன் கட்ட வேண்டியது.
அதற்கடுத்த சுலோகம் (44) என்ன கூறுகிறது?
பிராமணனுக்குப் பஞ்சு நூலிலானும்,
க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும்,
வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிரா லும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்கவேண்டியது.
தினமலர் திரிநூல் கூட்டத்துக்கு ஒரே ஒரு கேள்வி.
இத்தனை சுலோகங்களிலும் எந்த இடத்திலாவது சூத்திரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட் டுமே பார்க்கலாம்.
அப்படி சொல்லியிருந்தால், அடே யப்பா எப்படியெல்லாம் சலாம் வரிசை ஆடியிருக்கும் இந்த அக்கிரகார அம்பிக் கூட்டம்!
சொல்லாதது மட்டுமல்ல, தப்பித்தவறி சூத்திரர்கள் அந்தப் பூணூலை அணிந் தால் அவர்களின் கெதி என்னவாகி இருக் குமாம்!
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டி விடவேண்டும். (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 224).
தினமலர் வகையறாக்களுக்கு இப் பொழுது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. விடுதலைக்கோ, வீரமணி அவர்க ளுக்கோ முந்திரிக் கொட்டை மாதிரி பதில் எழுத பேனாவைக் கையில் எடுப்பதற்கு முன்பு அந்த வேலை முடிந்தாகவேண்டும்.
இந்து மதத்தில் இந்த மனுதர்மம் என்பது வெறும் குப்பை - இதனை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறுவதோடு அமைந்துவிடாமல், காஞ்சிபுரத்திலோ அல்லது ஜீயர் சுவாமிகள் சஞ்சரிக்கும் இடத்திலோ ஒரு மாநாடு கூட்டி மனு தர்மத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்திட முன்வரவேண்டும்; அதற்குப் பிறகு வீரமணிகளுக்குச் சவால் விடலாம். தயாரா என்ற சவால் விட்டே கேட்கிறோம்.
1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநில பிரதமராக வந்தபோது ஓர் உத்தரவு போட்டார் - அது என்னவென்று தெரியுமா?
இனி ஆசாரிகள் ஆச்சாரியார் என்று போடக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு - இப்படி உத்தரவு போட்டவருக்கு உடம் பெல்லாம் மூளையாம்! (ஹி... ஹி....)
தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று கூறும் கூட்டம் வக்கணையாக எழுதுவது பாரு...
'எச்சல் பொறுக்கும்  ................... க்கு
ஏப்பத்தைப் பாரு'
என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலை(க்)கிறது.
இன்னொரு பெரிய கேள்வியைக் கேட்டுவிட்டதாக சிண்டை வெளியில் எடுத்து விட்டுக் கேள்வி கேட்கிறது தினமலர்.
கி.வீரமணி ஜாதி பேதம் பார்க்காதவ ரானால், ஈ.வெ.ரா. அறக்கட்டளை தி.க. சொத்துகளுக்கு அதிகாரமிக்கவராக ஆதி திராவிடர் ஒருவரை அப்பதவியில் அமர்த்தி விட்டு, தான் விலகட்டும் பார்க்கலாம்; அப்போது அவரைப் பாராட்டலாம் என்கிறது  தினமலர்.
சபாஷ் சரியான கிடுக்கிப்பிடி - வீரமணி யைத் திணற அடித்துவிட்டதாக ஒரு நினைப்பு.
பெரியார் அறக்கட்டளையில் தாழ்த்தப் பட்டோர் இருக்கக் கூடாது; அதற்குத் தலைவராக வரக் கூடாது என்று எந்த சட்ட விதிமுறையும் கிடையாது. தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்ட தாழ்த்தப் பட்டவர் ஒருவர் தாராளமாக வரலாம் - அதற்கான தடை ஏதும் கிடையாது.
ஆனால், தினமலர் ஜெகத்குரு என்று தூக்கிச் சுமக்கும் சங்கர மடத்தில் பார்ப்ப னரைத் தவிர வேறு யாராவது சங்கராச் சாரியாராக வர முடியுமா?
பார்ப்பனர் அல்லாதார் வரக்கூடாது என்ற தடை. அங்கே இருக்கிறதா, இல் லையா? சங்கர மடத்தில் சமைக்கப்படும் மீதியான உணவைக் கூட சூத்திராள், பஞ்சமாள் சாப்பிட்டு விடக்கூடாது என்று குழிதோண்டிப் புதைக்கும் கும்பலா சமத்துவம்பற்றி எல்லாம் பேசுவது?
திராவிடர் கழகத்தைப் பொருத்த வரையில் கட்சிக்குள் ஜாதி கிடையாது. அந்த எண்ணம் உள்ள எவருக்கும் இடமும் கிடையாது. பொறுப்பில் இருப்பவர்கள் யார்? என்ன ஜாதி? என்று அறிந்திருக்கவும் கிடையாது.
இந்து மதத்தில் உள்ள எந்த ஜாதியி னரும் அதற்குப் பயிற்சி கொடுத்து கோவில் அர்ச்சகராகலாம் என்று சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு 12 பார்ப்பனர்கள் சென்றார்களே - அப் பொழுது எங்கே சென்றது இந்தத் தினமலர் கும்பல். ஜீயரும், சங்கராச்சாரியார்களும், ராஜாஜிகளும் அதற்கு எதிர்நிலை எடுத்தது ஏன்? அடியாட்கள் தேவைப்பட்டால் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்பதும், நாங்களும் இந்துக்கள்தானே - முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று விட்டோமே நாங்களும் ஏன் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கேட் டால், ஆகமங்களைக் காட்டி ஏய்ப்பதும் தானே பார்ப்பனப் புத்தி!
உண்மையான தொண்டினால் கழகத் தின் எந்த முக்கிய பொறுப்புக்கும் எவரும் வரலாம். அதுதான் இங்கு நடைமுறை.
தினமலர்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக்கூடாது.
பிராமணர்கள் உடல், பொருள் அனைத் தும் இழந்து தேச விடுதலைக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் போராடியதை மறக்க முடியுமா? என்று கேள்வி கேட்கும் தினமலருக்கு ஒரு கேள்வி. அது உண்மையாக இருந்தால், இந்து மதத்தின் நான்கு திசைகளிலும் உள்ள சங்கராச்சாரி யார்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு அறிக்கையைக் கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் - ஜீயர்கள் அவர்களோடு சேர்ந்து வரமாட்டார்கள் - அவர்கள் வேண்டு மானால், தனியாகவே அறிக்கை கொடுக் கட்டும்.
இந்து மதத்தில் நிலவும் தீண்டாமையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - தீண்டாமையையும், அதற்கு மூல வேரான ஜாதியும் ஒழிக்கப்பட வேண்டியவைதான் - இந்துக்களே இன்று முதல் இவற்றை விட்டுத் தொலையுங்கள் - இந்துக்கள் அனைவரும் சரி சமம் என்று ஒரே ஒரு அறிக்கையை வெளியிடச் செய்யுங்கள் பார்க்கலாம்.
தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியார், காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியை பாலக்காட்டில் (15.10.1927) சந்திக்கச் சென்றபோது (மாட்டுக் கொட்ட கையில்தான் காந்தியாரை உட்கார வைத் துப் பேசினார் சங்கராச்சாரியார் என்பது நினைவில் இருக்கட்டும்) காந்தியாரிடம் சங்கராச்சாரியார் என்ன பதில் சொன்னார்?
ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்க ளையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார் களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியி ருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.
(நூல்: தமிழ்நாட்டில் காந்தி, பக்கம் 576).
கடைசியாக ஒரு கேள்வி: திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரைக் கிலோ எடையில் தங்க பூணூலையும், திருப்பரங் குன்றம் சுப்பிரமணிய சாமிக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்கப் பூணூலையும், காஞ்சி சங்கராச்சாரியார் அணிவித்தாரே, சிறீரங் கம் ரங்கநாதனுக்கு ரூ.52 லட்சம் செலவில் நாராயண ஜீயரும் தங்கப் பூணூலை அணிவித்தாரே, (தினமணி, 27.2.2014) கடவுளையும் பார்ப்பன ஜாதியில் சேர்த்து விட்டதை என்ன சொல்ல! பார்ப்பானை ஒழித்தால் கடவுளும், கடவுளை ஒழித்தால் பார்ப்பானும் ஒழிந்துவிடுவான் என்பது தானே உண்மை.


பார்ப்பனர்களிலேயே உயரமான பீடாதிபதியாக இருக்கக்கூடிய லோகக் குரு ஒருவரின் மனப்பான்மையே இப்படி பச்சை யாக தீண்டாமையை வலுவாகப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது, தினமலர்க் கும்பல் எந்தப் பார்ப்பனரை நம்பச் சொல்லு கிறது என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் அரிய கேள்வியே!
******************************************************************************************

இதுதான் இந்து மதத்தின் ‘ஜாதி பாராமைக்கான’ இலட்சணமா?


கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே... அதைப் பற்றி?

சங்கராச்சாரி: அர்ச்சனை நடந்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரி இல்லை.

கேள்வி: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்கு பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி அவர்களுக்கு ஏற்படலாமே?

சங்கராச்சாரி: அவர்களுக்கு தகுதி இல்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றி விவாதத்திற்கே இடமில்லை.

கேள்வி: ‘சாதுர்வர்ணயம்மயா சிருஷ்டம்’ என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றிச் சுவாமிகள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சங்கராச்சாரி: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

கேள்வி: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியர் கூறுகிறார்?

சங்கராச்சாரி: 
இக்காலத்துக் குணகர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குணகர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சுலோகத்தில் சொல்லப்படும் குணகர்மா முற்பிறவி சம்பந்தப்பட்ட குணகர்மாவாகும். ஒரு பிராமணன் தன்னுடைய கடமைகளைச் செய்யாவிட்டால் அடுத்த பிறவியில் கடவுள் அவனைத் தண்டிப்பார்.




- பூரி சங்கராச்சாரியாரிடம் மணியன் பேட்டி,
‘ஆனந்த விகடன்’, 16.6.1974

                ------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 22-9-2018  ‘விடுதலை’ ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக