எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (94) : பாரதியும் பொதுவுடைமையும்
நேயன்
“கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதார்களும் பல சில்லரை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், ‘அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிருவாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்-தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்தக் கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்-களின் இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்படி தொழில் நிருவாகச் சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனை-பேரும் தொழில் செய்ய வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கி-றோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும், பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தாரெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள்.’’
பாரதியின் மேற்கண்ட கருத்துகளைக் கூர்ந்து நோக்கினால் கீழ்க்கண்ட கருத்துகளை (கொள்கைகளை) அவர் கொண்டிருந்ததும், வலியுறுத்தியதும் புலப்படும்.
1. இரஷ்ய புரட்சியாளர் லெனின் வழி சிறந்த வழியல்ல.
2. இந்திய முதலாளிகள் அய்ரோப்பிய முதலாளிகளைப் போல மோசமானவர்-கள் இல்லை.
3. இந்திய முதலாளிகளின் உடைமைகளைப் பிடுங்க வேண்டும் என்பது நியாயம் ஆகாது. இதை நம் நாட்டு ஏழைகளே விரும்ப மாட்டார்கள்.
4. ஏழைகளின் பசியைத் தீர்ப்பதற்குத்தான் நாம் வழிகாண வேண்டும். முதலாளி-களின் செல்வக் குவிப்பைப் பற்றி கவலைப்படக் கூடாது.
5. ஒரு கிராமத்தில் உள்ள ஏழைகளும் பணக்காரர்களும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்படி முதலாளிகள் யார் யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.
6. அவ்வாறு ஒதுக்கப்பட்ட வேலையை தொழிலாளர்களின் பிள்ளைகளும் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டும்.
7. இந்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று சத்தியப் பத்திரம் எழுதி வைக்க வேண்டும்.
8. இந்த ஏற்பாட்டின் மூலம் எல்லா ஏழைகளுக்கும் வயிறார சோறு கிடைத்துவிடும்.
9. இந்தத் திட்டத்தை எல்லா இடங்-களுக்கும் பரப்ப வேண்டும்.
இப்படிப்பட்ட கருத்துகளைக் கூறிய பாரதிதான் புரட்சியாளராம், பொதுவுடைமைப் போராளியாம். அவரைப் பொதுவுடைமை வாதிகள் போற்றிப் பாராட்டுகிறார்கள். இதைவிட பிற்போக்கான, முதலாளித்துவ ஆதரவு நிலை, தொழிலாளர் எதிர்நிலை வேறு இருக்க முடியுமா?
இது அப்பட்டமான ஆவண அடிமை முறை (Bonded Labour) அல்லவா? ஒரு தொழிலாளி-யின் தலைமுறையையே ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அடிமைப்படுத்துவது அல்லவா? இது வருணாஸ்ரம தர்மத்தின் மறு வடிவம் அல்லவா?
ஏழை ஏழையாய் இருக்க வேண்டும்; முதலாளி முதலாளியாய் இருக்க வேண்டும்; தொழிலாளியின் பிள்ளை படித்து உயர் பதவிகளுக்கு வரக் கூடாது; அவன் அப்பன் தொழிலையே தலைமுறை தலைமுறையாய் செய்ய வேண்டும்.
உழைப்பதற்குப் பதிலாய் வயிறு நிறைய சோறு கிடைக்கும். சோத்துக்கு உத்தரவாதம் தந்து தொழிலாளிகளை முதலாளிகளுக்கு அடிமையாக்கும் இந்தப் பாரதிதான் புரட்சிக்காரராம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றைக்கும் பாரதியை புரட்சியாளர் என்றும், பொதுவுடைமைவாதி என்றும் பொது வுடைமைக் கட்சியினர் பாராட்டிப் பேசி வருவதுதான்.
வேதத்தையே படிக்காமல் வேதம் உயர்ந்தது என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் போற்றி வருவதைப் போன்ற ஓர் அறியாமையே _ பாரதியை புரட்சியாளர் என்பதும். பாரதியை முழுமையாகப் படித்துவிட்டு, ஏன், இதுவரை நான் எழுதியவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, பொதுவுடைமைவாதிகள் தங்கள் உள்ளத்தைத் தொட்டுச் சொல்லத் தயாரா? இப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு வாதியை முற்போக்காளராய் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடைமை சித்தாந்தத்திற்கே செய்திடும் துரோகம் ஆகும்! எந்த ஒன்றையும் சரியாக அறியாமல், ஆய்வு செய்யாமல் பாராட்டுவது, போற்றுவது பொதுவுடைமை இயக்கத்தவருக்கு அழகு அல்ல.
ஒரு சிந்தனையாளர் வாழ்வில் பரிணாம வளர்ச்சி இருக்க வேண்டும். காந்தியார் வாழ்வில்கூட, தான் தொடக்க காலத்தில் கொண்டிருந்த பல கருத்துகளை, பின்னாளில் மாற்றிக்கொண்டார்.
சமூகநீதி, இடஒதுக்கீட்டை பின்னாளில் ஆதரித்தார். ஆரிய பார்ப்பனர்கள் வேதந்தானே ஓத வேண்டும். ஸ்டெதாஸ்கோப் ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்டார். இராமராஜ்ஜியம் பேசிய காந்தி பின்னாளில் மதம் அரசியலில் கலக்கக் கூடாது என்றார். இது பாராட்டப்பட வேண்டிய கொள்கை வளர்ச்சி.
இராமலிங்க வள்ளல், 5 திருமுறைகள் முடித்த பின் ஆறாம் திருமுறை எழுதிய காலத்தில் புரட்சிச் சிந்தனைகளை அதிகம் பேசினார். இது அவரது கொள்கை, சிந்தனையில் பரிணாம வளர்ச்சி. இப்படி உலகில் பலரைச் சொல்லலாம்.
ஆனால், பாரதி தொடக்க காலத்தில் புரட்சியாளராய் கருத்துகளைக் கூறிவிட்டு, இறுதிக் காலத்தில் சனாதனவாதியாய், பிற்போக்குவாதியாய், ஆதிக்கவாதியாய் மாறிப் போனார். இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய மாற்றம்.
ஆக, பாரதி வர்ணாஸ்ரமவாதி; சனாதனவாதி, பெண்ணடிமை, உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தவர்; முதலாளித்துவத்தை ஆதரித்து, கொத்தடிமை முறையை வலியுறுத்தியவர்; பிற மத வெறுப்பும், இந்து மத வெறியும் கொண்டவர்; சமஸ்கிருதப் பற்றும், ஆரிய மேலாண்மையில் நாட்டமும் கொண்டவர்.
உண்மை இப்படி இருக்க ஒரு சில வரிகளைப் பிடித்துக்கொண்டு உண்மைக்கு மாறாய் ஏற்றிப் போற்றுவது _ ஒன்று, அறியாமை அல்லது மோசடிச் செயலேயாகும்!
(தொடரும்...)
- உண்மை இதழ், 16-28.2.22