பக்கங்கள்

வியாழன், 9 மார்ச், 2023

மானமிகு ஆ.இராசா மீது பெண் எம்.பி.க்கள் புகாரா? 'பலே' 'பலே!'


மின்சாரம்

'தினமலர்', 'இந்து தமிழ் திசை', 'துக்ளக்' பார்ப்பன வகையறாக்கள் மானமிகு ஆ. இராசாமீது அவதூறுச் சேற்றை கூச்ச நாச்சமில்லாமல் அள்ளி வீசுகின்றார்கள். அவர் கூறியதில் என்ன குற்றம் என்று அவர்களால் எடுத்துச் சொல்ல முடியவில்லை; காரணம் - அவர் கூறியதெல்லாம் உண்மை - ஆதாரப் பூர்வமானவை.

இந்த நிலையில் ராசாவுக்கு எதிராக பெண் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் செய்துள்ளார்களாம். 

இதைவிடக் கேவலம் ஒன்று இருக்க முடியுமா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மனு தருமத்தை முதலில் கொளுத்த வேண்டியவர்கள் பெண்கள்தான்.

இதைவிடக் கேவலமாக எழுத முடியாது - பேச முடியாது - புழுத்த நாய் குறுக்கே போனது என்பதுபோல அவ்வளவுக் கேவலமாக பெண்களைப்பற்றி மனுதர்மம் சாக்கடைக் கும்பி எழுதுகோலால் கிறுக்கித் தள்ளியுள்ளது.

எடுத்துக்காட்டுக்காக, ஒன்றிரண்டு இதோ! 

மனுதர்மம் அத்தியாயம் - 5 பாலியத்தில்' தகப்பன் ஆஞ்சையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாது, ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (சுலோகம் 148).

- இதன்படி பார்த்தால் பெண்கள் படிக்கலாமா? உத்தியோகம் செல்லலாமா? தேர்தலில் நிற்கலாமா? அமைச்சராகலாமா? நீதிபதியாகலாமா?

மனுதர்மம் அத்தியாயம் 9 என்ன கூறுகிறது?

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள் (சுலோகம் 14).

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (சுலோகம் 17).

மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ்   - சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன (சுலோகம் 19).

மனுதருமத்தில் உள்ளதை உள்ளபடியே மானமிகு ஆ. இராசா எடுத்துக் கூறினால் கோபம் கொப்பளிக்க கூக்குரல் போடும் அருமைச் சகோதரிகளான பெண் எம்.பி.க்களே!

மனு தர்மத்தில் கூறப்படும் பெண்கள்பற்றிய இந்தக்  கேவலத்தை, இழிவை ஏற்றுக் கொள் கிறீர்களா?

மனுதர்மம் தான் எங்கள் வழிகாட்டி என்று கூறும் மங்கையர்த் திலகங்களே, மனுதர்மம் கூறுவதை ஏற்று உங்கள் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வீர்களா?

அடுத்து என்ன செய்யப் போகிறார்களாம்? 

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளனராம்.

அதில் ராசாவின் பேச்சு தொடர்பான பத்திரிகை செய்திகள், 'வீடியோ'வின் எழுத்து வடிவம் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து உள்ளனராம்.

லோக் சபாவில் மக்களவைத் தலைவர் இல்லாத நேரத்தில் சபையை நடத்துவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக  மக்களவைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அதில் ஒருவரான ஆ.ராசாவை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வலியுறுத்தி உள்ளனராம்.

இது போன்றவற்றை வித்தாரமாக, விஸ்தாரமாக வெளியிடுவதற்கென்றே 'தினமலர்' என்ற திரிநூல் ஏடு 'அவதாரம்' எடுத்திருக்கின்றது ('தினமலர்' 22.9.2022 பக்கம் 9).

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் முறையிடும் பெண் எம்.பி.க்களே, உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?

யார் இந்த ஓர்பிர்லா?

'பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. 

லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு'

ஜெய்ப்பூர் (11.9.2019) பிராமணர்கள் பிறப்பால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. அதில் ஓம் பிர்லா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அக்கூட்டத்தில் பிர்லா பேசுகையில், "மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான்.

இன்று கூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும் கூட மற்றவர்களை அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களை விட உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர்" என்று கூறியிருந்தார்.

அத்தோடு நில்லாமல், இதுதொடர்பாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கூடஅவர் கருத்து கூறியிருந்தார். அதில், பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா சிறீவாத்சவா கூறு கையில், பிர்லா பேச்சு மிகத் தவறானது, கண்டனத்துக்குரியது. அவர் உடனடியாக இதை திரும்பப்  பெற வேண்டும்

ஒரு சமூகத்தை உயர்த்திப் பேசுவதன் மூலம் அவர் மற்ற சமூகங்களை தாழ்த்தியுள்ளார். இது அரசியல் சாசனச் சட்டம் 14ஆவது பிரிவின் படி தண்டனைக்குரியது. ஜாதிய துவேஷத்தை பரப்பியுள்ளார் ஓம் பிர்லா. இதுதொடர்பாக அவர் மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் மனு கொடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் கவிதா.

பிறப்பால் உயர்ந்தவர்கள் பிராமணர்கள் என்று பிராமணர் மாநாட்டிற்குச் சென்று - அரசமைப்புச் சட்டத்தின்படி உயர்ந்த பதவிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஒருவர் கூறுகிறாரே - இதற்குப் பெயர்தான் மனுதர்மப்புத்தி என்பது!

மனுதர்ம சிந்தனை உள்ளவர்கள், அதற்கு விரோதமாக அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் ஒருவர் சபாநாயகராக இருக்க லாமா என்று கேட்க வேண்டிய பெண்கள் மனு தர்மத்தை எதிர்த்து அரசமைப்புச் சட்டத்திற்கு உகந்த வகையில் உயர்ந்த வகையில் பேசிய மானமிகு ஆ. இராசாவைக் குறை கூறிப் புகார் செய்யலாமா?

மானமிகு ஆ. இராசா கூறியது எவ்வளவுப் பொறுப்பானது! வழிகாட்டத் தகுந்தது; மனிதத்தை உயர்த்தி மனு தர்மத்தின் கீழ்க் குணத்தை விமர்சித்தது - அவர் செய்துள்ள மகத்தான மானுடத்தொண்டாகும். குறிப்பாகப் பெண்கள் அவருக்கு ஒரு பாராட்டு விழாவையே நடத்த வேண்டும்.

பரவாயில்லை - இதைப் பூதாகரப்படுத்தியதன் மூலம் மனுதர்மத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டும் நல்லதோர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக