சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

அண்ணாவின் கடவுள் மறுப்பு
“மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு இன்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை. மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்குவதாகும். எப்படியென்றால், “ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ?” என்பது மத நூற்றுணிபாகும். எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும் – தந்தையாயும் – எல்லாமாயும் – எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியாமையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும், அதற்குச் சட்டமியற்றவேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது! கடற் சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது இயற்கைக்கு மாறுபட்டதாகாது. என்றாலும், அது பலருக்கு வியப்பைத் தருகின்றது. காரணம்: கடற்சிப்பியில் முத்து என்ற ஒரு மதிப்புடைய பொருள் இருக்கிறதென்பதை அதனை அறிந்தான் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும். ஆனால் “நமது” கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற்சிப்பி முத்து போல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்பவருமன்று.
ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாதுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், என்ன தன்மையோடு இருக்கிறதென்று, அறிந்தான் ஒருவன் அதனை அறியார்க்கு அறிவிக்க வேண்டும். அங்ஙனமின்றி எல்லாமாய் – எங்குமாய் – அணுவுக்கணுவாய் – அகண்டமாய் – எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை, ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை. ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதாமொரு கருவியாலோ – அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும். ஆனால், கடவுள், அளப்பரும் இயல்பினதாய்-மறை முதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அளவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனாவானா? அதன் கவுரவத்தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா? அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப்படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந்தாலன்றி முடியுமா?
ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவானாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டுமன்றோ! எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் ‘கடவுள், என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்ட தாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் என்பது மத நூலார் கொள்கை. எனவே, காண முடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது. அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போலக் கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூற்கள் இடந்தருவதில்லையே! கடவுள் இல்லாத இடமே இல்லை என்பது தான் அந்த நூற்களின் முடிந்த முடிவாகும். எனவே கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்து விடுமென்றும் கருதும் ‘நிறைமதியாளனும்’ மணற் சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.
இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, ‘தேடினால் கிடைப்பார்!’ என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கை களை நம்பி, அவ்வழி சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பியுள்ளனர். பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலாயினோர் அவ்வழிபோய் மீண்ட பலருட் சிலராவார். ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன் றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளைத் தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மதநூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள், தாங்கள் கருதிப்போன கடவுள்’ காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்! எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ, அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருககிறது- வருகிறது. ஆனால் உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக்கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால், பொய்யைப் பொய் எனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது.இதனால் உண்மைகளை உருவாக்குவதற்குப் பெருமுயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும, இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமை யாது வேண்டப் படுகின்றது. இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றிபெற்று வருவது கண்கூடு. காரணம்! மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறி வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலமாக விளங்குகிறது என்க.
– ‘திராவிட நாடு’ 2-1-1949
————-
கலைஞரின் ஆத்மா மறுப்பு
உள்ளபடியே எனக்கு ஆவியில் நம்பிக்கை கிடையாது. அதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் கூட இன்று அதில் வேறுபடக் கூறுகிறார்கள்.
தந்தை இறந்துவிட்டால் ஆண்டுதோறும் தெவசம் கொடுக்கவேண்டுமென்று சொல்கிறார்கள். ஏனென்று கேட்டால் அவர்களுடைய ஆவி இருந்து, நாம் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் என்று சொல்கிறார்கள். அவர்களே உன்னுடைய தந்தை இன்ன பிறவியாக பிறந்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள்.
ஒன்று மறுபிறவியை மறுக்க வேண்டும்; அல்லது ஆவியை மறுக்கவேண்டும்.
மறுபிறவி என்று சொன்ன பிறகு ஆவி என்று ஒன்று எப்படி இருக்கமுடியும்? ஆவிக்குக் கொடுப்பதற்காக தெவசம், திதி என்று நாம் கொடுப்பதெல்லாம் எங்கே போகிறது என்று எனக்குத் தெரியும்.
இன்னும் யாராவது இறந்துவிட்டால் இன்னார் சிவ லோகபதவி அடைந்துவிட்டார் என்று போடுகிறார்கள். மனிதனுக்கு இறந்தும் பதவி ஆசை விடவில்லை என்பதற்கு இது உதாரணம். வைகுண்டபதவி அடைந்து விட்டார் என்றும் போடுகிறார்கள். எல்லோரையுமே இப்படி போட்டுவிட்டால் யார் தான் நரகலோகத்திற்குப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
பொய் பேசுபவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று சொன்னால், பத்திரிகை போடுகிறவர்கள் தவறாக- பொய்யாக – சிவலோகத்திற்குப் போவதாகப் போடுவதே பொய்; அதுவே ஒரு குற்றச்சாட்டு.
– முதலமைச்சர் கலைஞர்,
8-9-1972 சங்கரதாஸ் சுவாமிகள் விழாவில்