பனகல் அரசரின் இயற்பெயர் இராமராயநிங்கார் என்பதாகும். பழைய சென்னை மாகாணத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த பனகாலு என்ற ஜமீன் குடும்பத்தில் 9.7.1866-இல் இவர் பிறந்தார். இளமையில் தெலுங்கையும், சமற்(ஸ்)கிருதத்தையும் இவர் காளஹஸ்தியில் பயின்றார்.
ஆங்கிலக் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். முதலாம் படிவத்தில் (ஆறாம் வகுப்பு) திருவல்லிக்கேணி பெரியதெருவில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க முயன்றனர். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி தெலுங்கு மொழி பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்தது. இவர் பார்ப்பனரல்லாதார். எனவே அங்கு இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். பின்பு சர்.பிட்டி. தியாகராயர் நேரில் வந்து இவரை அப்பள்ளியில் சேர்த்துவிட்டுச் சென்றார். அப்பள்ளியில் இவர் சிறப்பாகப் படித்துப் பதினொன்றாம் வகுப்பில் அப்பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
பனகல் அரசர் உயர்கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். 1892இல் எம்.ஏ., சமற்(ஸ்)கிருதத்தில் தேர்ச்சி அடைந்து முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்தில் இருந்த சிற்றரசர்கள் குடும்பங் களில் எம்.ஏ., படித்தவர் இவர் ஒருவர் மட்டுமே.
1912-இல் டில்லி சட்டசபைக்கு, உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915-வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார்.
1912இல் சென்னையில் டாக்டர். நடேச முதலியார் தொடங்கிய முதல் பார்ப்பனரல்லாதார் அமைப் பான திராவிடர் சங்கத்தில் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.1916இல் பார்ப்பனரல் லாதார் நலனுக்காக சர்.பிட்டி, தியாகராயர். டாக்டர். டி.எம். நாயர், டாக்டர் நடேச முதலியார் ஆகியோரின் முயற்சி யால் தொடங்கப் பட்ட “South Indian Liberal Federation” (S.I.L.F.) – தென் இந்தியர் முற்போக்குக் கூட்டமைப்பில் (நீதிக் கட்சி என்றும் அழைப்பர், பலர் இதை தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்று மொழி பெயர்க்கின்றனர்.) தீவிரமாகச் செயல் படத் தொடங்கினார்.
முதலமைச்சர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 11.7.1921 இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதனை அடுத்து பனகல் அரசர் முதலமைச்சரானார்
11.7.1921 முதல் பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார்.
பனகல் அரசர் ஆட்சியின் சிறப்புகள்
இந்தியாவிலேயே முதன்முதலாக 5ஆம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வியை (Free & Compulsory Education)1922 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தியவர் பனகல் அரசரே ஆவார்.
20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற கொள்கையும் 500 பேர்கள் உள்ள பகுதிக்கு (அ) கிராமத்திற்கு ஒரு பள்ளி என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. தொடக்கக் கல்விக்கு, முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பணம் செலவிடப்பட்டது.
அதிகப்பள்ளிகள் திறக்கப்பட்டன
பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் மட்டும் 1921-1926 வரை புதியதாக 12,384 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பனகல் ஆட்சி முடிவடையும் போது (1926) சென்னை மாகாணத்தில் அரசுக் கல்வி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 50,941
உயர்கல்வியில் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோருக்கு அதிக இடம் கிடைக்கும் வகையில் 1922 சூன் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேர்வுக் குழுக்கள் (Selection Committee) அமைக்கப்பட்டன.
உயர்கல்வியில் 50% இடங்கள் பார்ப்பனருக்கும், 50% இடங்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்பட்டது. இதற்கான அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக் குழுவில் சர்.ஏ. இலட்சுமணசாமி முதலியார் நியமிக்கப்பட்டு, பார்ப்பனரல் லாதாருக்கு இடம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
1923இல் சென்னைப்பல்கலைக் கழகச் சட்டம் கொண்டு வந்து அப்பல்கலைக் கழகத்தை மாகாண அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அங்கிருந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தார். சமற்கிருதம் தெரியாமல் தமிழ் எம்.ஏ. படிக்க முடியாத நிலையை, 1926இல் மாற்றினார். சமற்கிருதம் தெரியாமல் மருத்துவம் படிக்க முடியாது என்ற நிலையையும் 1924இல் மாற்றினார்.
பெண்களுக்கு வாக்குரிமை, கல்வி
பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்கியது சென்னை மாகாணத்தில்தான். 04.07.1921 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த உரிமை வழங்கப்பட்டது. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. எல்லாப் பெண்களுக்கும் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு அரைக்கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. பெண்களுக்கு விடுதிகளும் திறக்கப் பட்டன.. கைம்பெண்கள் தங்கிப் படிக்கவும் தனி விடுதி திறக்கப்பட்டது. அதில் 42 பார்ப்பன கைம் பெண்களும், பார்ப்பனரல்லாத கைம்பெண்கள் 7 பேரும் கல்வி கற்றனர்.
இந்துமத பரிபாலன போர்டு
கோவில்களில் பார்ப்பனக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த இந்துமத பரிபாலனச் சட்ட மசோதாவை 18.12.1922-இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதபடி பார்ப்பனர்கள் தடுத் தனர். ஆளுநரை வலியுறுத்தி நடைமுறைப் படுத்துவதற்குள் 1923 நவம்பர் மாதத்தில் முதல் அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவுற்றது.
இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் 19.11.1923இல் பனகல் அரசரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்துமதபரிபாலனச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவண்ணம் பார்ப்பனர்கள் சதி செய்து, ஆளுநரும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.
பனகல் அரசர் சளைக்கவில்லை . எப்படியாவது இதை நிறைவேற்றியே தீருவது என்று முடிவுசெய்து, மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம் முறை சத்தியமூர்த்தி அய்யர் சென்னைப் பல்கலைக்கழக பட்டதாரித் தொகுதி மூலமாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் இதை எதிர்த்து ஓயாமல் சட்டமன்றத்தில் பேசினார்: திட்டினார். 475 திருத்தங்களை அவர் ஒருவர் மட்டுமே கொண்டு வந்தார். மொத்தம் 800 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு மட்டும் விலக்கு அளித்தால் ரூ.5 இலட்சம் கையூட்டு தருவதாக பனகலிடம் பேசிப் பார்த்தனர். எதற்கும் பனகல் மசியவில்லை. 1925 நவம்பரில் வெற்றிகரமாகச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார்.
பனகல் அரசுமீது மடாதிபதிகளும் கோவில் நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதனால் காங்கிரசில் இருந்த பெரியாருக்கு, பனகல் அரசர் மீது நேசம் ஏற்பட்டது. காங்கிரசைவிட்டுப் பெரியார் வெளியேறிய காலகட்டமும் அதுதான்.
காவிரி நீர்பங்கீடு
பனகல் அரசர் காலத்தில்தான் 1924 இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணை கட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று 1924 முதல் 1933க்குள் 10 ஆண்டுகளில் 5,91,38,000 ரூ. செலவில் கட்டி முடிக்கத்திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப் பட்டு 3.10,000 ஏக்கர் பாசன வசதி பெற்றுத் தமிழ்நாடு பஞ்சமில்லாமல் இருக்க வழிவகை செய்தார்.
வகுப்புவாரி உரிமை
பனகல் அரசர் 1921 முதலே வேலை வாய்ப்பில் வகுப்புரிமை அளிக்க முயற்சி மேற்கொண்டார். முதல்முறை ஆட்சியில் அவர் அதை நடைமுறைப் படுத்த விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தனர். ஆனால் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டார். அரசுப் பணியாளர் தேர்வுக் குழுவை (Staff Selection Board) 1924இல் ஏற்படுத்தினார். இதில் பார்ப்பனர்ரல்லாதவர்களைத் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமித்து அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வழிவகை செய்தார்.
1.4.1924இல் முதன்முதலில் வகுப்புரிமை அடிப்படையில் அரசுத் தேர்வுக்குழு மூலமாக நிரந்தரப் பணி நியமனம் செய்தார். அரசு ஆணை து எண் 658 – நாள் 15.8.1922இன் படியும், அரசு து, ஆணை எண் 563 – நாள் 21.7.1923இன் படியும் இப்பணி நியமனம் செய்யப்படுவதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டது.
உயர் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் மற்றும் ஆதித் திராவிடர்களுக்கு அதிக இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம். அப்போது படித்தவர்களில் நம்மவர் அதிகமில்லை என்பது தான். 1924 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி இதுபோன்ற அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். Madras Presidency Administrative Report Communal Representation இல், கடைசிப் பக்கம் வகுரிமை அடிப்படையில் பணி நிரப்பட்ட விவரத்தை 1924-1925 முதல் தவறாமல் வெளியிட்டு வந்தார்கள்.
- விடுதலை நாளேடு, 9.7.25