- மரு.கவுதமன்
துருக்கிய, பாரசீக, மங்கோலிய, தைமூர் இனத்தைச் சேர்ந்த “பாபர்” முதலாம் பானிபட் போரில், இங்கு ஆண்டு வந்த இப்ராகீம் லோடியை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். 1712 வரை பெரும் பேரரசாக இவர்கள் ஆட்சி இருந்தாலும் 1857இல் தான் ஆங்கிலேயர்களால் இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. மிகவும் புகழ்பெற்ற இந்தப் பேரரசு இந்த மண்ணில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாபருக்குப்பின் ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகிய பேரரசர்களுக்குப் பின் வந்த பேரரசர்தான் “அவ்ரங்கசீப்”. முகலாயர்களின் ஆறாவது பேரரசர் இவர். இவர் ஆட்சி ஏறக்குறைய இந்தத் துணைக் கண்டம் முழுதும் பரவியிருந்தது. இவர் 1658 முதல் 1707 வரை ஆட்சியிலிருந்தார். 88 வயது வரை (1618-1707) உயிர் வாழ்ந்த முகலாயப் பேரரசர் இவர். மிகவும் பரந்து, விரிந்த முகலாயப் பேரரசு, இவர் காலத்தில் உருவானது.
இவரது ஆட்சியின் பிற்பகுதியில் மாராட்டியத்தில் சிவாஜி தலைமையில் ஆட்சி அமைந்தது. சிவாஜியின் ஆட்சியில் “பேஷ்வாக்கள்” என்ற சித்பவன் பார்ப்பனர்கள் முழுமையாக ஆட்சியை பின்னணியில் இருந்து நடத்தினர். சிவாஜியின் பேரன் இரண்டாம் சாகுஜியைக் கொன்று பாஜிராவ் பேஷ்வா, பார்ப்பன ஆட்சியை நிறுவினார். சிவாஜியும், பேஷ்வாக்களும் முழு பேஷ்வா ஆட்சியையே நடத்தினர். அவுரங்கசீப்பை, சிவாஜி எதிர்த்த காலகட்டத்தில் பார்ப்பனர் ஆட்சியை நிலைநாட்ட, அவ்ரங்கசீப்பைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அது இன்றளவும் நிலை பெற்றுள்ளது.

பேஷ்வாக்கள் என்ற பரம்பரையில் வந்த சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது தான் R.S.S. அமைப்பு. அவ்ரங்கசீப்பின் மேல் இருந்த வெறுப்பு அவர்களுக்கு இன்னும் மாறவில்லை. R.S.S.இன் அரசியல் வடிவமான BJP ஆட்சியில் டில்லியில் இருந்த “அவ்ரங்கசீப் மார்க்”, (Aurangaship Marg) அப்துல் கலாம் சாலையாக மாற்றப்பட்டது. மராட்டியத்தில் இருந்த “அவ்ரங்கபாத்” என்ற நகர் “சம்பாஜி நகர்” (இவர் சிவாஜியின் மூத்த மகன், மராட்டியத்தின் இரண்டாம் அரசர்) என்று மாற்றப்பட்டது. உண்மையில் “அவ்ரங்கசீப்” யார்? கொடுங்கோலனாகச் சித்திரிக்கப்பட்ட அவரின் உண்மை முகம் என்ன? இதைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முகயல்தீன் முகம்மது என்ற அவ்ரங்கசீப் தான் முகலாயப் பேரரசின் ஆறாவது பேரரசர் (1618-1707). ‘அவ்ரங்க சீப்’ என்றால் “அரியணையின் ஆபரணம்” என்று பொருள். முதலாம் “ஆலம்கீர்”என்ற பட்டத்துடன் பதவியில் அமர்ந்த இவர் அரியணையைப் பிடிக்க ஒரு பெரும் போராட்டமே நிகழ்த்தினார். ஆட்சியைக் கைப்பற்றிய அவ்ரங்கசீப் 1658 முதல் 1707 வரை (தன் இறப்பு வரை) ஆட்சியில் இருந்தார். பேரரசர் ஷாஜஹானுக் கு நான்காவது மகனாகப் பிறந்தவர் இவர். ஒவ்வொரு மகனையும் ஷாஜஹான் தன் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளுக்கு ஆளுஞர்களாக நியமித்திருந்தார்.தன் முதல் மகன் தாராசிக்கோவை தனக்கு அடுத்த பேரரசராக ஷாஜஹான் அறிவித்தார்.அதை அவ்ரங்கசீப் ஏற்றுக் கொள்ள வில்லை.தன் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைத்தார். அவ்ரங்கசீப்பின் தங்கை சகாதாரா, தந்தையைக் கவனித்துக் கொள்ள பேரரசரால் அனுமதிக்கப்பட்டார். தன் மூத்த அண்ணன் தாராசிக்கோவைக் கொன்று அவரது துண்டித்தத் தலையை ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்த தந்தைக்கு அனுப்பி வைத்தார். 1658இல் தன்னைத் தானே பேரரசராக அறிவித்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்த அவ்ரங்கசீப் தன்னுடைய மற்ற சகோதரர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கொன்றார். அவர் காலத்தில் ஏறத்தாழ இந்திய துணைக் கண்டம் முழுவதும் முகலாயப் பேரரசின் ஆட்சி விரிவடைந்தது. இந்தியாவை ஆண்ட எந்தப் பேரரசர் காலத்திலும் இவ்வளவு பரந்த பேரரசு இருந்ததில்லை.
கி.பி. 1707இல் அவ்ரங்க சீப் மரணமடைந்தார்.அவர் உடல் மஹாராஷ்ட்ராவில் உள்ள குல்தாபாத் என்னும் ஊரில் அடக்கம் செய்யப் பட்டது என்பது உங்களுக்குத தெரியுமா?
வரலாற்று ஆசிரியர்கள் அவ்ரங்கசீப்பைப் பற்றி பலவாறு தாக்கிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் மறைக்க முடியாத பல வரலாற்றுக் குறிப்புகளும் அவரைப் பற்றி உண்டு. இஸ்லாம் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். தன் கையாலே இஸ்லாமியர்களின் வேதமான
“குர்ஆன்” எழுதியவர். இஸ்லாமியர்களுக்கு விதிக்கப்பட்ட அய்ந்து கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றியவர் அவர். தான் அணியும் தொப்பியைக்கூட தன் கையாலே தைத்து பயன்படுத்தியவர் அவ்ரங்கசீப். ஆடம்பரங்களை வெறுத்தவர். பேரரசராக இருந்தாலும் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவரே அவர் கைப்பட உயில் எழுதி வைத்தார். அவரது எளிய வாழ்க்கையை விளக்கும் வண்ணம் அந்த உயில் இருந்தது.
அவ்ரங்கசீப் தன்கையாலேயே எழுதிய உயிலில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார், “நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய், இரண்டணாக்கள் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன.அதைக் கொண்டு என் உடல் மீது போர்த்த வேண்டிய “கஃபன்” துணியை வாங்கிக் கொள்ளுங்கள். என் கையால் திருக்குர்ரானை எழுதிப் பிரதியெடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப் பெற்ற ரூபாய் முன்னூற்று அய்ந்து என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்து விடுங்கள். என் தலையை எதைக் கொண்டும் மூடாமல் திறந்து வைத்து விடுங்கள். இறைவன் எனக்குக் கருணை காட்ட அது உதவும். என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்” என்பதே அந்த உயில். முகலாயப் பேரரசர்கள் அனைவரும் ஆடம்பரமாகவே வாழ்ந்த நிலையில் அவ்ரங்க சீப் மட்டும் எளிமையாக வாழ்ந்தார்.
இப்படிபட்ட அவ்ரங்கசீப்பை ஒரு கொடுமைக்கார மன்னனாகவே நமக்கு வரலாற்று நூல்கள் அறிமுகம் செய்துள்ளன.ஆனால், உண்மை வேறு விதமாகத்தான் இருந்தது. மிகவும் எளிமையாக வாழ்ந்த அவர் தன் மணி மகுடத்தில் கூட ஒரே, ஒரு சிறிய கல்லைத்தான் பொறித்திருந்தார். டில்லிக்கும், ஆக்ராவுக்கும் அருகே ஒரு துண்டு நிலத்தை அவர் தனக்கென வாங்கினார். அதில் ஆட்களை வைத்து விவசாயம் செய்தார்.அந்த செலவுகளையும் கூட குர்ரானை தன் கைப்பட எழுதி, விற்ற காசில் செலவு செய்தார். நிலமும் அவர் சொந்தக் காசில்தான் வாங்கினார். அந்த நிலத்திலிருந்து வந்த வருமானத்தில்தான் அவர் உணவுக்கே செலவழித்தார். தன் சொந்த பயன்பாட்டுக்கு என்று அரசாங்கப் பணத்தை அவர் பயன்படுத்தவே இல்லை. அவர் புலால் உணவை அறவே தவிர்த்தார். சைவ உணவையே உட்கொண்டார். மாம்பழம் அவருக்கு மிகவும் பிடித்த பழம். இஸ்லாமியர்களின் அய்ந்து கடமைகளில் ஒன்றான அய்ந்து நேரத் தொழுகையைத் தவறாமல் கடைப் பிடித்தார். போர்க்களத்தில் இருந்த காலத்திலும் அவர் தொழுகையை நிறுத்தியதில்லை. ஒரு நாளில் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கும் வழக்கமுடையவர் அவ்ரங்கசீப். இரவில் தரையில்தான் படுப்பார். மேலே ஒரு புலித்தோலைத் தான் போர்த்திக் கொண்டு தூங்குவாராம்.
அரண்மனையிலும், மற்ற அரசாங்கக் கட்டடங்களிலும் இருந்த தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்தப் பொருள்களை நீக்க உத்தரவிட்டார். தன் மேஜை மீதிருந்த தங்க மைப்புட்டியை மாற்றிவிட்டு கல்லாலான மைப்புட்டியை வைத்துக் கொண்டாராம்.
பாபர் காலத்தில் இருந்து ஷாஜஹான் காலம் வரை இசையிலும், பாடல்களிலும் மற்ற கலைகளிலும் அதிகளவு நாட்டம் கொண்டிருந்தனர். அவர்கள் அவையில் இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் எப்பொழுதும் பேரரசர்களை மகிழ்ச்சிப் படுத்தினர். அவ்ரங்கசீப் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் இவை அனைத்தையும் தடை செய்து விட்டார். ஆனால் அவர்களுக்கு அரசு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தவில்லை.தன்பேரரசின் கீழ் உள்ள எந்த மன்னரும், பிரபுக்களும் இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அவ்ரங்கசீப் கட்டளையிட்டார். தன் நேரடி நிருவாகத்தில் இருந்த கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்.
(தொடரும்…)
- உண்மை இதழ்,16.30.09.25
அவ்ரங்கசீப் மதவெறியரா? மனித நேயரா? (2)
நாட்டில் எந்தவித உல்லாச விடுதிகளும் நடக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். பிறந்தநாள் கொண்டாட் டங்களுக்குத் தடை விதித்தார். பிறரிடமிருந்து பரிசுப் பொருள்கள் வாங்குவதை அறவே தவிர்த்தார். ஆண்கள் தாடி, மீசை வைப்பதற்குக் கூட கட்டுப்பாடுகள் விதித்தார்.
உதடுகள் தெரியும்படி மீசை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் பெயரை உச்சரிக்கும்போது தடையிருக்காது என்பது அவர் எண்ணம். மதுவை வெறுத்தவரான அவர் தன் பேரரசில் மது உற்பத்தி, விற்றல் ஆகியவற்றைத் தடை செய்தது அவரது அரசாங்கம். கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கினார்.
இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மக்கள் ஒரு ஒழுங்கான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான். அதைவிட முக்கியமான சீர்திருத்தங்களாக அவர் செய்தது, தன் பேரரசிலும், தன் கீழ் இருந்த இராஜபுத்திரர்கள் நாடுகளிலும் “சதி” என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்தார்.
ராஜபுத்திரர்கள் அந்தக் கொள்கைக்கு எதிராக பேரரசரிடம் பெரிய அளவில் விவாதித்தனர். ஆனால் பேரரசர் அதற்கு இணங்கவில்லை. விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்தார். அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள், சனாதனத்திற்கு எதிரான கொள்கைகள் அவரை ஒரு கொடுங்கோலராகச் சித்தரிக்க வேத விற்பன்னர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அவ்ரங்கசீப் இந்துக்களுக்கு
“ஜிஸியா” என்ற தலைவரி
விதித்ததைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பெரிதாகக் குறிப்பிடுகிறார்கள். பேரரசில் வாழும் பிற மக்களின் பாதுகாப்புக்காக ஆகும் செலவினங்களுக்காக இந்த வரி விதிக்கப்பட்டதாக பேரரசர் அறிவித்தார். இது இந்து மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.ஆனால். முதியோர், பிச்சைக்காரர்கள், ஊனமுற்றோர், துறவிகள், கிறிஸ்துவ குருமார்கள், குழந்தைகள் முக்கியமாக பார்ப்பனர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஜிஸியா வரியைப் பற்றி இவ்வளவு பேசுகின்ற வரலாற்று ஆசிரியர்கள் அவ்ரங்கசீப்பின் மற்ற வரி விதிப்புக் கொள்கைகளைப் பற்றி அதிகம் பேசவில்லை.
வரிவிலக்கு
பேரரசர் அவ்ரங்கசீப், இந்துக்கள் தீபாவளியன்று வீடுகளில், வீதிகளில் கோவில்களில் வரிசையாக விளக்குகள் ஏற்றுவர். இதற்கு வரி விதிக்கப்பட்டிருந்தது.இது இந்துக்களுக்கு மட்டுமல்ல. ஷியா முஸ்லிம்களும் முகரம் பண்டிகையின் போது விளக்குகள் ஏற்றும் வழக்கம் வைத்திருந்தனர்.அரசு அதற்கு வரி விதித்திருந்தது. அவ்ரங்கசீப் அந்த வரியை நீக்கினார்.
முகலாயர்கள் ஆட்சியில் கங்கை நதியில் நீராட வரி விதிக்கப்பட்டது. அதே போல் இறந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைக்க இந்துக்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது.அவ்ரங்கசீப் இந்த வரிகளை இனிமேல் கட்ட வேண்டியதில்லை என்று உத்தரவு பிறப்பித்தார். நதிகளில் மீன் பிடிப்பவர்களுக்கு வரி, பால் கறந்து விற்பவர்களுக்கு வரி, காய்கறிகள் விற்பவர்களுக்கு வரி, வரட்டியைத் தட்டி விற்பவருக்கும் வரி என்று மக்கள் மீது வரி விதிப்புத் தாக்குதல்கள் பல வகையிலும் நடந்தன. அவை அனைத்தையும் பேரரசர் அவ்ரங்கசீப் நீக்கி அதற்கெல்லாம் இனிமேல் வரி கட்ட வேண்டியதில்லை என்று ஆணையிட்டார்.கோவில் திருவிழாக்களின் போது வணிகர்கள் போடும் சந்தை கடைகளுக்கு வரி செலுத்த வேண்டும். அதையும் நீக்கினார் பேரரசர்.இது போன்று வரிகளை நீக்கியது பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்தது.
மதம் சார்ந்த கொள்கை முடிவுகள்:
அவ்ரங்கசீப் மற்ற மதத்தினரை முக்கியமாக (இந்து?)க்களைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுவது உண்மையில்லை தன் கீழ் பணியாற்றிய வாரணாசி கவர்னருக்கு அவ்ரங்கசீப் ஓர் உத்தரவிட்டுள்ளார்.(Maasir | Alamgiri – அவ்ரங்கசீப்பின் அதிகாரபூர்வ அவைக்குறிப்பு, 15th of Jumada A.H.1069 “நமது பேரரசில் வாழும் அனைத்து நிலை மக்களின் நலனுக்காகவும், நமது மத விதிகளின்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புராதனக் கோயில்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும்.
புதிய கோயில்கள் கட்ட அனுமதிக்க வேண்டாம். வாரணாசியிலும், அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும், இந்துக்கள் வாழ்விடங்களிலும், கோயில்களிலும் துன்புறுத்தப்படுவதாகக் கேள்விப்பட்டேன். இந்த உத்தரவு உங்கள் கைக்குக் கிடைத்ததும், இது போன்ற செயல்கள் தொடராமல் உடனடி நடவடிக்கை எடுக்கவும். இறைவனை அமைதியாக வழிபடும் யாருக்கும், எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது” என்பதே அந்த உத்தரவு. சைவ சமயத்தைப் பரப்பியவர்களில் (அந்தக் காலகட்டத்தில் “இந்து” என்ற சொல்லோ, மதமோ கிடையாது. சைவம், வைணவம் என்றேதான் இருந்தது.) குமரகுருபரர் என்பவர் முக்கியமானவர்.(1625–1688)
அவ்ரங்கசீப் காலத்தில் சைவ சமயத்தைப் பரப்பியவர்களில் முக்கியமானவர் அவர். குமரகுருபரர் காசியில் சைவ மடங்களை நிறுவ அரசு நிலங்களை இலவசமாக வழங்கியவர் அவ்ரங்கசீப். அதேபோல் பல சைவ, வைணவக் கோயில்களுக்குள் மானியங்கள் அவர் வழங்கியதற்கான குறிப்புகளும் உள்ளன. மற்ற மதத்தினரை அவ்ரங்கசீப் எப்படி நடத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டான நிகழ்வுகள் இவை.
கோயில்களை இடித்தாரா?
சைவ, வைணவக் கோயில்களை இடிக்கச் சொல்லி அவ்ரங்கசீப் உத்தரவிட்டார் என்று ஒரு பரப்புரை அவருக்கு எதிராகச் செய்யப் படுகிறது. ஆனால், அதுபோன்று எதுவும் நிகழவில்லை என்பதே உண்மை. மற்ற மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க வேண்டாம் என்று அவர் கூறியது உண்மை. ஆனால், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழைய வழிபாட்டுத் தலங்களை அழிக்க வேண்டாம் என்ற அவ்ரங்கசீப், புதிய வழிபாட்டுத் தலங்களைக் கட்ட அனுமதியில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்ததுதான் உண்மை. ஆனால், டில்லியைச் சுற்றியுள்ள மசூதிகளை அவர் புதுப்பித்தார். (டில்லியைச் சுற்றியுள்ள 600 மசூதிகளை அவர் புதுப்பித்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. இந்த வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து தெரிகின்ற செய்தி என்னவென்றால், அவர் மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்திருந்த அவர், மற்ற மதத்தினரை அவர் தொல்லைப்படுத்தவில்லை என்பதே உண்மை.
வாராணாசி விஸ்வநாதர் கோயிலை இடித்தது ஏன்?
வாரணாசிக்கு அய்ந்து மைல்களுக்கு முன்பே தன் பரிவாரங்களோடு கூடாரமிட்டு அவ்ரங்கசீப் தங்கினார். இந்து மன்னர்களின் ராணிகள் காசி, கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரைத் தரிசிக்கச் சென்று அந்த வழிபாடு முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்தார் ஆலம்கீர் அவ்ரங்கசீப்.அப்பொழுது அவருக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலும், கோரிக்கையும் வந்தது. கங்கையில் குளித்து விட்டு, விஸ்வநாதரைத் தரிசிக்கச் சென்ற ராணிகள் எல்லோரும் திரும்பி விட்டனர், ஒருவரைத் தவிர.
அவர் “கட்ச்” தேசத்து ராணி. மிகவும் அழகான அவர் விஸ்வநாதரை வணங்கச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி பேரரசரிடம் கோரிக்கை வந்தது. அவர் தன் படை வீரர்களை அனுப்பி அரசியைத் தேடச் சொன்னார். அவர்கள் தேடிச் சென்ற போது கட்ச் ராணி கோயிலின் கருவறைக்குக் கீழே மிகவும் அலங்கோலமான நிலையில் அழுது கொண்டிருந்தார்.
அவரைப் பாலியல் வன்முறை செய்து அலங்கோலமாக்கியவர்கள் கோயிலின் தலைமை அர்ச்சகப் பார்ப்பனரும், அவரின் சீடர்களும்! இந்தச் செய்தி அவ்ரங்கசீப்பின் காதுகளுக்கு எட்டியது. ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பான அவர் கடும் கோபம் கொண்டார்.இந்த இழி செயலால் பார்ப்பனர்கள் கோயிலின் புனிதத்தையே (அதுவும் விஸ்வநாதரின் சிலை அமைந்திருந்த இடத்திற்கு நேர் கீழே) கெடுத்து விட்டார்கள் என்று கூறி, அந்த அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குக் மரண தண்டனை விதித்தார்.
அந்தக் கோயிலையும் இடிக்க உத்தரவிட்டார். அந்தக் கோயிலை இடித்ததைப் பற்றி பெரிதாகப் பேசும் சங்கிக் கூட்டங்கள், நடந்த அக்கிரமத்தைப் பார்ப்பனர்கள் செய்ததால் அதை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்து விட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? (அன்று கருவறைக்குக் கீழ் தொடங்கிய பார்ப்பனர்கள் வன்புணர்வு அக்கிரமம் இன்று வரை காஞ்சிபுரம் மச்சேசுவர் கோயில் அர்ச்சகன் தேவநாதன் முதல் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் வரை நீள்கிறது!
[“முகலாயர்கள்” by முகில், பக்கம் 310, 311]
(நிறைவு…)
- உண்மை இதழ்,01.15.10.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக