சிந்தனை செய்வோம்
வெள்ளி, 16 ஜனவரி, 2026
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி எழுதவே இல்லை..!
வெள்ளி, 9 ஜனவரி, 2026
மனுவின் சித்தாந்தத்தை வீழ்த்திய மராட்டியப் புயல்கள்: காந்தாபாய் – ஷிலாபாயின் வீர வரலாறு!
“வாழ்நாள் முழுவதும் ஆடாக வாழ்வதை விட ஒரு நாள் சிங்கமாக வாழ்ந்து மடிவோம்”
வரலாற்றுப் பக்கங்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே நிரப்பப்படுகின்றன. ஆனால், அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் கால நதியில், ஒரு பெரும் பாறையை எறிந்து அலைக்கழிப்ப வர்கள் சாமானிய உழைக்கும் வர்க்கத்தினர் தான். 2018ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முன் நின்றிருந்த மனுவின் சிலைக்குக் கருப்புச் சாயம் பூசி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காந்தாபாய் அஹிரே மற்றும் ஷிலாபாய் பவார் ஆகிய இரு பெண்களின் வரலாறு, நவீன இந்தியாவின் மிக முக்கியமான அறப்போர்.
அடுப்பங்கரையில் மூண்ட புரட்சித் தீ
காந்தாபாய் அஹிரே மகாராட்டிராவின் சத்திரபதி சம்பாஜி நகரில் பிறர் வீடுகளில் பாத்திரங்கள் கழுவும் வேலையும் ஊதுபத்தி விற்கும் வேலையும் செய்துவந்தார். வறுமைதான் இருப்பினும் அரசமைப்புச் சட்டத்தின் மீது அபார பற்று. இன்று சுவாசிப்பதற்கு பாபாசாகேப் கொடுத்த அரசமைப்புச்சட்டம் எங்களின் வாழ்க்கை நூல் என்று கூறிவந்தார்
2018-ஆம் ஆண்டு டில்லியில் ஒரு கும்பல் அம்பேத்கருக்கு எதிராக கோஷம் போட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எரித்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. காந்தாபாய் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் பெண்மணி “நீ கூறுவாயே எனது உரிமைக்கான நூல் என்று அந்த அரசியலமைப்பை எரித்துவிட்டார்கள்” என்று ஏளனமாகச் சொன்னபோது, அது காந்தபாயின் இதயத்தில் தகிக்கும் நெருப்பை மூட்டியது.
இதற்கு காந்தாபாயின் பதில், “உங்கள் கணவர் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றுவது மனுஸ்மிருதியாலா அல்லது அரசியலமைப்பாலா?” என்று அவர் கேட்ட கேள்வி, அதிகார வர்க்கத்தின் முகத்தில் அறையப்பட்ட சவுக்கடி. அங்கிருந்து வெளியேறிய காந்தாபாய்க்கு, வெறும் கோபம் மட்டும் வரவில்லை; ஒரு தெளிவான இலக்கும் பிறந்தது.
வறுமையைத் தாண்டிய
லட்சியப் பயணம்
காந்தபாயும் அவரது தோழி ஷிலாபாயும் அன்றாடக் கூலிகள்.ஷீலாபாய் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர்களிடம் ஜெய்பூர் செல்லப் பணம் இல்லை. ஆனால், இருந்தாலும் தாங்கள் அன்றாடம் சிறுகச்சிறுக சேமித்துவைத்த பணத்தை எடுத்துகொண்டு இருவரும்ரயிலைப் பிடித்து ஜெய்பூர் நோக்கிப் புறப்பட்டனர்.
1927-இல் பாபாசாகேப் அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்த அதே புரட்சி மனோபாவம், 90 ஆண்டுகளுக்குப் பிறகு மராட்டியப் பெண்களிடம் வெளிப்பட்டது. ஜெய்பூர் நீதிமன்றத்தின் முன் உள்ள மனு சிலை, பெண்களுக்கு எதிரானது, சமத்துவத்திற்கு எதிரானது என்பதை அவர்கள் ஆணித்தரமாக நம்பினர்.
நீதிமன்ற வளாகத்தில் ஒரு போர்க்களம்
ஜெய்ப்பூர் சென்ற அவர்களுக்கு நீதிமன்றம் எங்கே உள்ளது சிலை எங்கே உள்ளது என்று தெரியவில்லை. ரயில் நிலையத்தில் இருந்து தொலைவில் இருந்த நீதிமன்றத்திற்கு நடந்தே சென்று சேர்ந்தனர்.
நீதிமன்றத்தின் முன் இருந்த மனு சிலையைப் பார்த்ததும் ஆவேசமடைந்தனர். சிலையை உடைக்கத் திட்டமிட்டிருந்தாலும், போதிய கருவிகள் இல்லாததால் தங்களிடம் இருந்த கருப்புச் சாயத்தை அச்சிலை மீது பூசினர். “அரசியலமைப்பு வாழ்க!” என்ற முழக்கம் அந்த வளாகத்தையே அதிர வைத்தது.
அங்கிருந்த உயர்ஜாதி வழக்குரைஞர்கள் இவர்களைத் தாக்கினர். காவல்துறை இவர்களைக் கைது செய்தது. 6 நாட்கள் காவல் துறையினரின் காவல், 18 நாட்கள் சிறைவாசம் எனத் தண்டனைகள் தொடர்ந்தன. சிறையிலும் அவர்களைக் கேவலமாக நடத்தி, பாத்திரங்களைக் கழுவச் சொல்லியும், தரையைத் துடைக்கச் சொல்லியும் ஒடுக்கப் பார்த்தனர். ஆனால், “மனுவின் சித்தாந்தம் இறந்துவிட்டது, அந்தச் சிலை அகற்றப்பட வேண்டும்” என்ற ஒற்றை இலட்சியத்தில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
போராட்டத்திற்குப் பின் தொடர்ந்த இன்னல்கள்
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்களுக்கு அமைதி கிடைக்கவில்லை. அவர்கள் செய்த செயல் சமூக ஊடகங்களில் வைரலானதால், “ஆபத்தான பெண்கள்” என்று முத்திரை குத்தப்பட்டு, காந்தாபாய் தங்கியிருந்த வீட்டிலிருந்து உரிமையாளரால் வெளியேற்றப்பட்டார். கையில் காசில்லாமல், பசியோடு அலைந்து, உணவகங்களில் பாத்திரங்கள் கழுவித் தான் அவர்கள் மீண்டும் ஊர் வந்து சேர்ந்தனர்.
இருப்பினும், காந்தாபாய் சொல்கிறார்: “வாழ்நாள் முழுவதும் ஆடாக வாழ்வதை விட, ஒரு நாளாவது சிங்கமாக வாழ வேண்டும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். நாங்கள் அதைத்தான் செய்தோம்.”
மனு சிலை – ஒரு வரலாற்று முரண்
1989-இல் “அழகுபடுத்துதல்” என்ற பெயரில் அமைக்கப்பட்ட அந்த மனு சிலை, இன்றும் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் ஒரு கறையாகவே பார்க்கப்படுகிறது. பல போராட்டங்கள் நடந்தும், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் அச்சிலை அகற்றப்படவில்லை. ஆனால், படித்தவர்கள் செய்யத் தயங்கிய காரியத்தை, படிப்பறிவில்லாத (ஆனால் சமூக அறிவுள்ள) இரு பெண்கள் செய்து முடித்தனர்.
காந்தாபாயும் ஷிலாபாயும் வெறும் பெண்கள் அல்ல; அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி அடையாளம். வறுமை, பசி, சமூகம் கொடுத்த அழுத்தம் என அனைத்தையும் தாண்டி, “இந்த நாடு இயங்குவது அரசியலமைப்பால் தான்” என்பதை உரக்கச் சொன்ன இந்தப் புயல்கள், மராட்டிய மண்ணின் வீர வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்கள். மனுவின் சித்தாந்தம் மடியும் வரை, இந்த எளிய கரங்களின் போராட்டம் ஓயாது என்பதே அவர்கள் உலகிற்குச் சொல்லும் செய்தி.
- விடுதலை ஞாயிறு மலர்,3.1.26
வியாழன், 8 ஜனவரி, 2026
அவ்வளவுதானா அய்யப்பனின் சக்தி? கோயில் தங்கக் கவசம் துபாய் வழியாக கடத்திச்சென்று பன்னாட்டு கும்பலிடம் விற்றவர்கள் கைது!
திருவனந்தபுரம், டிச. 22- சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடு ஆகியவை திருடப்பட்டிருந்தன.இதுதொடர்பாக எஸ்அய்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மேனாள் தலைவர் பத்ம குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது சபரிமலை அய்யப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று முன்தினம் (20.12.2025) கைது செய்யப்பட்டார். துவார பாலகர் சிலைகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கருநாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரையும் அதிகாரிகள் திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்அய்டி) சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம்.
இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்அய்ஆர்) உட்பட அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத் துறைக்கு எஸ்அய்டி அதிகாரிகள் வழங்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு, சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் பல்வேறு உண்மைகளை மறைத்து வருவதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத் துறை களமிறங்கி யிருப்பதால் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னாட்டு கடத்தல் காரர்களுக்கு தொடர்பு மிகவும் உயர்ரக தங்கத்தகடுகள் பன்னாட்டுச் சந்தையில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும் இதனால் பழைய தங்கத்தை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் அதனை எடுத்து அங்கு தரம் குறைந்த தங்கத்தை வைத்துவிட்டு ஒரிஜினல் தங்கத்தை துபாய் வழியாக பன்னாட்டு கொள்ளை கும்பலுக்கு விற்பனை செய்துள்ளனர்.
வியாழன், 18 டிசம்பர், 2025
பெரியாருக்கும் முந்தைய பெரியாராம் பாரதியார்! சொல்கிறார் பார்ப்பனப் பத்திரிகையாளர்!

இப்படி எல்லாம் யார் தான் பேச முடியும் – பார்ப்பனர் குல சிகாமணி கி.வைத்தியநாதன்களைத் தவிர? (ஆசிரியர் ‘தினமணி’) .
மாலன் (நாராயணன்) அய்யர்வாள் எழுதிய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தான் இப்படிப் பேசி இருக்கிறார் (தினமணி, 13.12.2025, பக். 2).
அப்பொழுதுகூட பெரியார் என்று பேச அவர் நாக்கு சுளுக்கி வி(ழு)டுகிறது – ஈ.வெ.ரா. பெரியாராம்!
காஞ்சிமட சங்கராச்சாரியார்களை சந்திரசேகரன் என்றும, சுப்பிரமணியன் என்றும் சொல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்? பாரதியாரை சுப்பிரமணியன் என்று எழுத, பேச இயலாதா?
தந்தை பெரியார் தம் கொள்கை எதிரியானவரை ராஜ கோபாலன் என்றா எழுதுகிறோம் – பேசுகின்றோம்? ராஜாஜி என்று தானே குறிப்பிடுகின்றோம்.
அதுதான் நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பண்பாட்டு இடைவெளி!
அது இருக்கட்டும்; தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் முந்தைய பெரியார் பாரதியாராம்!
38ஆம் வயதில் மரணமடைந்தவர் பாரதி; அதனால் வயதை வைத்து பெரியார் என்று பாரதியாரைக் குறிப்பிடவில்லை திருவாளர் வைத்தியநாத அய்யர்வாள்!
பெரியார் என்றால் இந்த நாட்டில் ஒருவரை மட்டும் தானே குறிக்கிறது! அதனை மட்டந்தட்டும் மட்டரகமான புத்திதான் இதற்குள் அடக்கும்!
ஆசிரியர் என்று சொன்னால் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களைத்தான் குறிக்கும் என்பது கைப்பிள்ளைக்கும் தெரிந்த செய்தி!

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியைத்தான் ஆசிரியர் என்று இனிமேல் குறிப்பிட வேண்டும் என்றவர் இதே வைத்தியநாதய்யர் – எதிலும் பார்ப்பனப் பார்வை.
என்ன காரணம் சொல்லுகிறார்? சமூக சீர்திருத்தக் கருத்துகளை தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கருக்கு முன்பாகவே பாரதியார் எழுதினாராம்! அதற்காகத்தான் பெரியாருக்கும் முந்தைய பெரியார் பாரதியார் என்று பேசினாராம்.
சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் பேசி இருக்கிறார்கள். அவர்களைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் பெரியார் என்று அடைமொழி கொடுத்து எழுதியிருக்கிறதா இந்தக் கூட்டம்?
பெரியார் இராமலிங்க அடிகள் என்றோ, பெரியார் நாராயணகுரு என்றோ, பெரியார் அம்பேத்கர் என்றோ குறிப்பிட்டதுண்டா?
ஈ.வெ.ரா. பெரியார் எனறோ, பெரியாருக்கு முந்தையப் பெரியார் பாரதியார் என்றோ, பார்ப்பனர்கள் சொல்லிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருக்கும் பொழுதுதான், தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் ஆன நிலையிலும், பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் பார்ப்பனர்களை அன்றாடம் அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார் – வயிற்றைக் கலக்கிக் கொண்டே இருக்கிறார் என்பது வெளிப்படை!
‘மயக்க’ நிலையில் அவ்வப்பொழுது பார்ப்பனர்களைக் கேலி செய்தும், சில சீர்திருத்தக் கருத்துகளையும் பாரதியார் பாடியிருக்கிறார் என்பது உண்மைதான்!

அதைவிட ஆரியப் பார்ப்பனர்களையும், பிறவியால் பேசும் வேதங்களையும், சாஸ்திரங்களையும், புராணங்களையும் பாடிக் குவித்ததுதான் அனந்தம் அனந்தம்!
அதற்கான எடுத்துக்காட்டுகளை எழுத ஆரம்பித்தால் ஏடுகள் தாங்காது.
“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்று எழுதுகிறார் பாரதியார்.
தமிழை ஆதிசிவன் பெற்றானாம்; அகத்தியன் என்ற புராணக் கற்பனை பாத்திரம் தான் தமிழுக்கு இலக்கணம் செய்தானாம் – எத்தகைய பித்தலாட்டம்! (அகத்தியன் குடத்தில் பிறந்தவன் என்பது புராணம்).
இதில் பார்ப்பனப் பாரதி என்ற அடையாளம் தெரியவில்லையா?
வேதமறிந்தவன் பார்ப்பான் – பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதிநிலை தவறாமல் – தண்ட
நியமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்று ஓர்வகுப்பில்லை – தொழில்
சோம்பரைப் போல் இழிவில்லை
நாலுவகுப்பும் இங்கு ஒன்றே – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிட சாதி!
– இதைப் பாடியவனும் பாரதிதானே.
படிப்பு – பார்ப்பானுக்கு, உடல் உழைப்பு மற்றவனுக்கு என்ற குலத் தொழில்தானே இதில் குடிகொண்டு இருக்கிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வெறிக் கூச்சல் போடும் ஹிந்துத்துவாவுக்கு முன்னோடி தான் இந்த பாரதி!
இந்தியா – இந்து – ஹிந்து ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் – இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி என்பவரும் பாரதியே!
***
“சதுர் வேதங்கள் மெய்யான சாஸ்திரங்கள்
எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்க
கூறும் துப்பான மதத்தினையே ஹிந்து
மதமெனப் புவியோர் சொல்லுவாரே!
நான்கு வேதங்களும், மனுசாஸ்திரங்களும் பிறப்பில் பேதம் பேசும் வருண – ஜாதிப் புத்திதானே!
பெண்களைப் பற்றி என்ன பாடுகிறார் பாரதி.
“கண்கள் இரண்டிருந்தும்
காணும் திறமையற்ற
பெண்களின் கூட்டமடி கிளியே
என்றும்,
‘நெட்டை மரங் களென நின்று
புலம்பும் பெட்டைப் புலம்பல்
பிறர்க்குத் துணையாமோ” என்றும் பாடுகிறாரே பாரதி – அது என்ன பெட்டைப் புலம்பல்?
தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் புரட்சி எங்கே – பாரதியின் பெட்டைப் புலம்பல் எங்கே? தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூல் உலகின் பல மொழிகளில் பரவி சிந்தனைக் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதே!
யாரை யாருடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண்டாமா?
இவர்தான் தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னதாகவே சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பெரியாராம்.
“மனிதன் தின்னும் அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயம்” என்று கூறுபவனும் பாரதியே!
பாரதி போற்றும் வேதங்களில் கூறப்படும் யாகங்களில் குதிரைகளையும், பசுக்களையும் போட்டுப் பொசுக்கி வயிறு முட்ட உண்டது பற்றி ஒரு வரி எங்காவது குறிப்பிட்டதுண்டா?
“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில்
கடைக்கண் வைத்தாள்! அங்கே
ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி!” என்று எழுதுகிறார். ருசியப் புரட்சியின் வரலாற்றை அறிந்தவர்கள், புரட்சியாளர்களின் தியாக சீலங்கனை உணர்ந்தவர்கள் பாரதியின் இந்த சின்னப் புத்தியைக் கண்டு வாயால் சிரிக்க மாட்டார்கள். (அது லெனின் நடத்திய 1917, சோசலிசப் புரட்சி பற்றியதல்ல. 1905ஆம் ஆண்டு நடந்ததைப் பற்றிதான் பாரதி எழுதினார் என்பது கவனிக்கத்தக்கது.)
பாரதியின் பாடல்களைவிட, உரைநடைகளில் வெளிப்படுத்திய கருத்துகள் பச்சைப் பார்ப்பனத்தனமே!
அதைவிட மிகப் பெரிய பார்ப்பனத் தனம் என்ன தெரியுமா?
“பகவன் என்ற பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் அவ்வை, திருவள்ளுவர், கபிலர், புராணக் குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும், நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை” என்கிறார் பாரதியார். (‘பாரதி மரபும் – திரிபும்’ என்ற கட்டுரை (தொகுதி 4)) இதற்குப் பிறகும் வைத்தியநாத அய்யர்வாள் பாரதியாரை பெரியார், அம்பேத்கருக்கு முந்யைத பெரியார் என்று சொல்லுவதற்குக் கூச்சப்பட வேண்டாமா? என்ன செய்வது – பூணூல் ரத்தப் பாசம் என்பது சாதாரணமானதா?
தினமணி ஆசிரியர் குறிப்பிடும் ஒரு சில சீர்திருத்தங்கள் கூட வெறும் ஏட்டுச் சுரைக்காயே!
ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்ட களத்தில் இறங்கிப் போராடியவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்!
அண்டை மாநிலமான கேரளாவில் வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புக்காகக் களம் இறங்கிப் போராடி சிறைவாசம் கண்டவர் தந்தை பெரியார்.
அதுவும் திருவாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் அனுபவித்த கொடுமை சாதாரணமானதா?
கே.பி.கேசவ மேனன் தனது சுய வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கும்போது மனித இதயங் கொண்டோர் இரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.
“கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்திலே கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை, இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைக்காரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல இரு மடங்கு வேலை செய்கிறார்.
ஒரு ‘ஜாதி இந்து’ என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்தில் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக் கூடிய நாட்டுப் பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே இந்த அளவுக்கு காண முடியுமா? இந்த மாநிலத்தில் மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக தான் எவ்வளவுக் கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி, ஒரு தலைவர் வந்தாரே – அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கம் ஏற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி எறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வரவேண்டாமா?
(கே.பி.கேசவ மேனன் ‘மலையாளத்தில் தன் வரலாறு’ , பக். 108).
இந்தத் தலைவர் எங்கே? பிரிட்டீஷார் எங்கே தன்னைக் கைது செய்து விடுவார்களோ என்று அஞ்சி நடுங்கி, புதுச்சேரியில் தஞ்சமடைந்து, அதன் பின்னர் சென்னை பிரிட்டீஷ் கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து ‘சரண்டர்’ ஆன பாரதி எங்கே?
பார்ப்பனப் பாசம் கண்ணை மறைக்கிறதா? இன்றைக்குப் பெரியார் உலக மயமாகிக் கொண்டு இருக்கிறார். கதிரவனைப் பார்த்து கரையான்கள் சீண்ட வேண்டாம்!
எப்படிப்பட்டவர் பெரியார்?
“சிறீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்திருக்க உண்டாட்டில் திளைத்தவர் – ஈரோட்டு வேந்தரென விளங்கியவர்” என்று படம் பிடித்தார் திரு.வி.க. (24.5.1924 நவசக்தியில் திரு.வி.க. எழுதியது)
இத்தகைய செல்வச் சீமான் கால்களில் விலங்கு – கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் அவர்களை விட இரண்டு மடங்கு வேலை செய்தவர் பெரியார். அவரோடு யாரை ஒப்பிடுவது? மகத் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு இறங்கிப் போராடிய அண்ணல் அம்பேத்கர் எங்கே? இந்த அம்பி எங்கே?
அந்தோ பாவம்! பூணூல் பாசத்தால் புத்தியும் பாழ்படுகிறதே!
தந்தை பெரியாருக்கு ‘பெரியார்’ என்று பெண்கள் மாநாடு கூட்டி அளித்த பட்டம்! பாரதிக்கு அந்தப் பட்டத்தைக் கொடுக்க முயலுகிறார் வைத்தியநாதய்யர் என்ற ஒரு தனி மனிதர் – இன உணர்வாளர்!
சிரிப்புதான் வருகுதய்யா!
- விடுதலை நாளேடு,17.12.25
செவ்வாய், 16 டிசம்பர், 2025
டிசம்பர் 6இல் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனை (2) ஒருவர் ஹிந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு

இந்தியா பல்வேறு சமுதாயங்களின் தொகுதி ஆகும். இதில் பார்சிகள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஹிந்துக்கள் இருக்கிறார்கள். இந்தச் சமுதாயங்களுக்கு அடிப்படையாக இருப்பது இனம் அல்ல. மதமே இவற்றின் அடிப்படையாகும். இது ஒரு மேற்போக்கான கருத்தேயாகும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயம் ஒரு பார்சி தம்மைப் பார்சி என்றும், ஒரு கிறிஸ்தவர் தம்மை ஒரு கிறிஸ்தவர் என்றும், ஒரு ஹிந்து தம்மை ஹிந்து என்றும் ஏன் கூறிக்கொள்கின்றனர் என்பதேயாகும். பார்சி, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோரைப் பொறுத்தமட்டில் இதற்கு விடை காண்பது எளிது. ஒரு பார்சி தம்மைப் பார்சி என்று கூறுவது ஏன் என்று அவரிடம் கேட்டால், இந்தக் கேள்விக்கு விடை கூறுவது அவருக்குக் கடினமாயிராது. தாம் ஜொராஸ்டரைப் பின்பற்றுவதால் தாம் ஒரு பார்சி என்று அவர் கூறுவார். இதே கேள்வியை ஒரு கிறிஸ்த வரிடம் கேளுங்கள். அவருக்கும் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினமாயிராது. ஏசு கிறிஸ்துவை நம்புவதால் அவர் கிறிஸ்தவர். இதே கேள்வியை ஒரு முஸ்லிமிடம் கேளுங்கள். அவருக்கும் இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதில் தயக்கம் இருக்காது.தாம் இஸ்லாமை நம்புவதால் தாம் ஒரு முஸ்லிம் என்று அவர் பதிலளிப்பார்.
இதே கேள்வியை ஓர் ஹிந்துவிடம் கேட்டீர் களானால், அவர் என்ன சொல்லுவதென்று தெரியாமல் முற்றிலும் திகைத்துப் போவார் என்பதில் சந்தேகம் இல்லை
ஹிந்துச் சமுதாயம் வணங்குகின்ற கடவுளர்களைத் தாம் வணங்குவதாகவும் அதனால் தாம் ஹிந்து என்றும் அவர் கூறினால் அவரது பதில் உண்மையாயிருக்க முடியாது. எல்லா ஹிந்துக்களும் ஒரே கடவுளை வணங்கவில்லை. சில ஹிந்துக்கள் ஒரு கடவுளை மட்டும் வணங்குவோராகவும், சிலர் பல கடவுளர்களை வணங்குவோராகவும், மற்றும் சிலர் எல்லாவற்றையும் கடவுளாக வணங்குவோராகவும் இருக்கிறார்கள், ஒரு கடவுளை மட்டும் வணங்குவோர் அனைவரும் ஒரே கடவுளை வணங்கவில்லை. சிலர் விஷ்ணுவையும், சிலர் சிவனையும், சிலர் இராமனையும், சிலர் கிருஷ்ணனையும் வணங்குகிறார்கள். சிலர் ஆண் கடவுளர்களை வணங்கவில்லை. இவர்கள் ஒரு பெண் தெய்வத்தை வணங்குகிறார்கள். இவர்களும் கூட ஒரே பெண் தெய்வத்தை வணங்கவில்லை. இவர்கள் வெவ்வேறு பெண் தெய்வங்களை வணங்குகிறார்கள். சிலர் காளியையும், சிலர் பார்வதியையும், சிலர் லட்சுமியையும் வணங்குகிறார்கள்.
பல கடவுளர்களை வணங்குவோர் எல்லாக் கடவுளர்களையும் வணங்குகிறார்கள். இவர்கள் விஷ்ணுவையும் சிவனையும் வணங்குவார்கள்.
இராமனையும் கிருஷ்ணனையும் வணங்குவார்கள் இவர்கள் காளி, பார்வதி, லட்சுமி ஆகியோரையும் வணங்குவார்கள். ஒரு ஹிந்து சிவனுக்குப் புனிதமான சிவராத்திரி நாளில் விரதம் இருப்பார். விஷ்ணுவுக்குப் புனிதமான ஏகாதசி நாளிலும் விரதம் இருப்பார். சிவனுக்குப் புனிதமானது என்பதால் வில்வ மரத்தை நடுவார், விஷ்ணுவுக்கு விருப்பமானது என்பதால் துளசிச் செடியை நடுவார்.
ஹிந்துக்களில் பல கடவுளர்களை வணங்குவோர் ஹிந்துக் கடவுள்களை வணங்குவதோடு நின்றுவிட வில்லை. ஒரு முஸ்லிம் பீரையோ அல்லது கிறிஸ்தவ மாதாவையோ வணங்குவதற்கு ஒரு ஹிந்து தயங்குவதில்லை. ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் முஸ்லிம் பீரிடம் சென்று காணிக்கை செலுத்துகிறார்கள். உண்மையில் சில இடங்களில் முஸ்லிம் பீர்களின் பரம்பரை அறங்காவலர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள் இவர்கள் முஸ்லிம் பீரின் உடையை அணிகிறார்கள். ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பம்பாய்க்கருகே உள்ள கிறிஸ்தவ மாதாவான மந்த் மவுலி ஆலயத்துக்குச் சென்று காணிக்கை செலுத்துகிறார்கள்.
இவ்வாறு முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ கடவுளர்களை வணங்குவது ஏதேனும் சில நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால் மதவிசுவாசம் நிரந்தரமான முறையில் மாற்றமடைந்துள்ள நிகழ்ச்சிகளும் உள்ளன. ஹிந்து என்று கூறப்படும் பலருடைய மதத்தில் வலுவான முகமதிய அம்சம் காணப்படுகிறது. இந்த வகையில் பஞ்ச்பிரியா என்ற விசித்திரமான பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அய்ந்து முகமதிய ஞானிகளை வழிபட்டு அவர்களுக்குச் சேவல்களைப் பலியிடுகிறார்கள். இதற்கு முகமதிய தபாலி பக்கீர் ஒருவர் புரோகிதராகச் செயல்படுகிறார். இந்த அய்ந்து புனிதர்கள் யார். அவர்களின் பெயர் என்ன என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை.இந்தியா முழுவதிலும் பல ஹிந்துக்கள். பஞ்சாபில் உள்ள சக்கி, சாவார் போன்ற முகமதிய புனித தலங்களுக்கு யாத்திரை செல்கிறார்கள்.
மல்கானாக்கள் என்பவர்களைப் பற்றி திரு.ப்ளன்ட் குறிப்பிடுகையில் அவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஹிந்துக்களிலிருந்து மதம் மாற்றப்பட்டவர்கள் என்று கூறுகிறார். இவர்கள் ஆக்ராவையும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களையும் முக்கியமாக மதுரா, எட்டா, மைன்புரி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ராஜ்புத், ஜாட் பனியா வகுப்பினர்களின் பரம்பரையில் வந்தவர்கள். இவர்கள் தங்களை முஸல்மான்கள் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை. பொதுவாகத் தங்களுடைய பூர்வீக ஜாதிப் பெயர்களையே கூறுகிறார்கள். மல்கானா என்ற பெயரை இவர்கள் ஒப்புக்கொள்வது அரிது. இவர்களுடைய பெயர்கள் ஹிந்துப் பெயர்களாக உள்ளன. இவர்கள் பெரும்பாலும் ஹிந்துக் கோவில்களில் வழிபடுகிறார்கள். ராம் ராம் என்ற வணக்கச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்களுக்குள் மட்டுமே திருமணத் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்றொரு புறம் இவர்கள் சில சமயங்களில் மசூதிக்குச் செல்லுகிறார்கள்: சுன்னத்துச் செய்துகொள்கிறார்கள்: இறந்தவரின் உடலைப் புதைக்கிறார்கள் முகமதியர்கள் முக்கியமான நண்பர்களாகயிருந்தால் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பார்கள்.
குஜராத்தில் இதுபோன்ற பல வகுப்புகள் உள்ளன. மாட்டியா குன்பி என்ற வகுப்பினர் தங்களுடைய முக்கிய சடங்குகளைப் பிராமணர்களை வைத்து நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் இமாம் ஷா என்ற பிரானா ஞானியையும் அவரது வழிவந்தவர்களையும் பின்பற்றுகிறார்கள்; முகமதியர்களைப் போலவே இவர்களும் இறந்தவரின் உடலைப் புதைக்கிறார்கள். ஷோக்கடா என்ற வகுப்பினர் தங்கள் திருமணங் களை ஹிந்து, முகமதியர் ஆகிய இரண்டு மதப்புரோகிதர் களையும் வைத்து நடத்துகிறார்கள். மோமன் என்ற வகுப்பினர் சுன்னத்துச் செய்து கொள்கிறார்கள்: இறந்தவர் உடலைப் புதைக்கிறார்கள்; குஜராத்தி குரானைப் படிக்கிறார்கள்: மற்றப்படி இவர்கள் ஹிந்துப் பழக்க வழக்கங்களையும் சடங்கு களையும் பின்பற்றுகிறார்கள்.
“ஹிந்துக்களின் நம்பிக்கைகளை நான் கொண்டிருக்கிறேன் அதனால் நான் ஹிந்து” என்று ஒருவர் கூறினால் அது சரியாக இருக்க முடியாது. ஏனென்றால் ஹிந்து மதத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட சமயக்கோட்பாடு கிடையாது. எல்லோராலும் ஹிந்துக்கள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டவர்களின் நம்பிக்கைகளில் காணப்படும் வேறுபாடு கிறிஸ்தவர்கள் மற்றும் முகம்மதியர்கள் நம்பிக்கைகளில் காணப்படும் வேறுபாடுகளைவிட மிக அதிகம். மிக முக்கியமான சமய நம்பிக்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் கூட இவற்றிலும் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. ஹிந்து சமய சாத்திர நூல்கள் எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலர் தந்திர சாத்திரங்களை வியந்து பாராட்டுகிறார்கள்; மற்றும் சிலர் வேதங்கள் மட்டுமே முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறார்கள். மற்றும் சிலர் கர்மம், மறுபிறப்பு என்ற கொள்கையில் நம்பிக்கை வைப்பது தான் ஒரே முக்கியமான அம்சம் என்று கருதுகிறார்கள்.
ஹிந்து மதம் பல்வேறு கொள்கைகளும் கோட்பாடு களும் ஒன்று சேர்ந்த கலவைத் தொகுப்பாகும். ஏகதெய்வவாதிகள். பலதெய்வக் கொள்கையினர். எல்லாம் இறைவனே என்பவர்கள், சிவன், விஷ்ணு ஆகிய பெருங்கடவுள்களை அல்லது இவர்களின் தேவிகளான பெண் தெய்வங்களை வணங்குவோர். தேவ மாதாக்களை அல்லது மரங்களிலும் பாறை களிலும் நீரோடைகளிலும் உறைவதாகக் கருதப்படும் ஆவிகள், கிராம தேவதைகள் ஆகியோரை வணங்கு வோர் என்ற பல திறத்தவருக்கும் ஹிந்துமதத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய தெய்வங்களைத் திருப்தி செய்வதற்காக எல்லா விதமான இரத்தப்பலிகளையும் அளிப்பவர்கள், எந்த உயிரையும் கொல்வதில்லை என்பது மட்டுமின்றி, வெட்டு’ என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கை உள்ளவர்கள், பிரார்த்தனையும், பஜனையுமே முக்கியமாக இடம் பெறும் சடங்குகளைப் பின்பற்றுவோர், மதத்தின் பெயரால் சொல்லமுடியாத வெறியாட்டங்களில் ஈடுபடுவோர் ஆகியோருக்கும் அது இடமளித்துள்ளது: வெவ்வேறு அளவில் முரண்பாடுகள் கொண்ட எத்தனை எத்தனையோ பிரிவுகளும் இதில் உள்ளன. இவற்றில் சில பிரிவுகள் பிராமணர்கள் எல்லோரினும் உயர்ந்தவர்கள் என்பதை மறுக்கின்றன அல்லது குறைந்த பட்சம் பிராமணரல்லாத மதத்தலைவர்களைக் கொண்டிருக் கின்றன.
மற்ற ஹிந்துக்கள் பின்பற்றும் பழக்க வழக்கங் களையே தாமும் பின்பற்றுவதால் தாம் ஓர் ஹிந்து என்று ஒருவர் கூறினால் அவருடைய கூற்று உண்மையாயிருக்க முடியாது. ஏனென்றால் எல்லா ஹிந்துக்களும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதில்லை.
வட நாட்டில் நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தென்னாட்டில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை விடவும் நெருக்கமான உறவுத் திருமணங்களும் அனுமதிக்கப்படுகின்றன. பொதுவாகப் பெண்களின் கற்பொழுக்கம் உயர்வாக மதிக்கப்படுகின்றன.
ஆனால் சில சமுதாயங்கள் இதைப் பெரிதாகக் கருதுவதில்லை. குறைந்தபட்சம் திருமணத்துக்கு முன் அப்படிக் கருதுவதில்லை. மற்றும் சில சமுதாயங்கள் ஒரு மகளை மதரீதியாக விபச்சார வாழ்க்கை நடத்துவதற்கு அர்ப்பணிப்பதை வழக்கவிதியாகப் பின்பற்றுகின்றன. நாட்டின் சில பகுதிகளில் பெண்கள் தாராளமாக நடமாடுகிறார்கள். வேறு சில பகுதிகளில் அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். சில பகுதிகளில் பெண்கள் பாவாடை அணிகிறார்கள் வேறு சில பகுதிகளில் காற்சட்டைகள் அணிகிறார்கள்.
தாம் ஜாதி முறையில் நம்பிக்கை கொண்டிருப்ப தால் தாம் ஒரு ஹிந்து என்று ஒருவர் கூறினால் அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எந்த ஒரு ஹிந்துவும் தம்முடைய அண்டை வீட்டுக்காரர் எதை நம்புகிறார் என்பதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதும், அவருடன் சேர்ந்து தாம் உணவு உண்ணலாமா, அவர் கையிலிருந்து தண்ணீர் பெறலாமா என்பதை அறிவதிலேயே அவருக்கு அக்கறை அதிகம் என்பதும் உண்மையே. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஜாதி முறைமை ஹிந்து மதத்தில் இன்றியமையாத அம்சம் என்பது இதன் பொருளாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிந்துச் ஜாதி ஒன்றைச் சாராத ஒருவர் ஹிந்துவாயிருக்க முடியாது. இவையெல்லாம் உண்மை தான் என்றாலும் கூட ஜாதி முறைமையைப் பின்பற்றுவது மட்டும் போதாது என்பதை மறக்கக் கூடாது. பல முஸல்மான்களும் பல கிறிஸ்தவர்களும் கூட ஜாதி முறைமையைப் பின்பற்றுகிறார்கள். கலந்து உணவு உண்பதில் இதைப் பின்பற்றாவிட்டாலும், கலப்புத் திருமணம் செய்துகொள்வதில் நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள். இதன் காரணமாக இவர்களை ஹிந்துக்கள் என்று கூறிவிட முடியாது. இரண்டு அம்சங்களும் இருக்க வேண்டும். ஒன்று, அவர் ஹிந்துவாக இருக்க வேண்டும். இரண்டு, ஜாதி முறைமையையும் பின்பற்ற வேண்டும். இது நம்மை மீண்டும் ‘ஹிந்து’ என்பவர் யார் என்ற பழைய கேள்விக்குக் கொண்டு செல்கிறது. நாம் இப்போது இருக்கும் இடத்திலேயே இது நம்மை விட்டுச் செல்கிறது.
தம்முடைய மதத்தைப் பற்றிய விஷயத்தில் தமது நிலை இவ்வாறு சங்கடமாகவும் குழப்பமாகவும் இருப்பது ஏன் என்பது ஒவ்வொரு ஹிந்துவும் சிந்திக்க வேண்டிய பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு பார்சியும், ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒவ்வொரு முஸ்லிமும் விடை அளிக்க முடிகின்ற ஒரு எளிமையான கேள்விக்கு அவர் விடை அளிக்க முடியாமலிருப்பது ஏன்? இந்த மதக் குழப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்று அவர் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ளத் தருணம் வந்துவிடவில்லையா?
– பி.ஆர்.அம்பேத்கர்
நன்றி: சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ள
‘ஹிந்து மதத்தில் புதிர்கள்’ நூல்
-விடுதலை நாளேடு,6.12.25
டிசம்பர் 6இல் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனை இந்து மதத்தில் புதிர்கள் என்ற நூலில் உள்ள சிந்தனை முத்துகள்
அண்ணல் அம்பேத்கர்
எழுதிய முன்னுரை
இந்தப் புத்தகம் பிராமணிய இறையியல் என்று அழைக்கப்படக் கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு விளக்கவுரையாகும். இது சாதாரண ஹிந்து மக்களுக்காக எழுதப்பட்டுள்ள நூல். பிராமணர்கள் அவர்களை எத்தகைய புதை சேற்றில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும், பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில் அவர்களை இட்டுச் செல்வதற்காகவும் இது எழுதப்பட்டுள்ளது. பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள்: ஹிந்து மதம் ஸநாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் ஹிந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், ஹிந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். இது தொடர்பாக இந்தப் புத்தகத்தில் ‘இம்சையிலிருந்து அகிம்சைக்கு’ என்ற புதிரையும், அகிம்சையிலிருந்து மீண்டும் இம்சைக்கு’ என்ற புதிரையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். ஹிந்து மதம் ஸநாதனமானது அல்ல என்பதைச் சாதாரண மக்கள் உணரச் செய்ய விரும்புகிறேன்,
இந்தப் புத்தகத்தின் இரண்டாவது நோக்கம், பிராமணர்களின் தந்திரங்களைச் சாதாரண ஹிந்து மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, பிராமணர்கள் எப்படியெல்லாம் தங்களை ஏமாற்றியும் திசை திருப்பியும் வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களைச் சுயமாகச் சிந்திக்கத் தூண்டுவதாகும்.
பிராமணர்கள் எவ்வாறு மாறியும் முரண்பட்டும், வந்திருக்கிறார்கள் என்பதும் எடுத்துக் காட்டப்படும். ஒரு காலத்தில் அவர்கள் வேதங்களில் கூறப்படும் கடவுளர்களை வணங்கி வந்தார்கள். பின்பு ஒரு காலத்தில் அந்தக் கடவுளர்களைக் கைவிட்டு வேதங்களில் இல்லாத கடவுளர்களை வழிபடத் தொடங்கினார்கள். எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை ஒருவர் கேட்கலாம், அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணனையும் பிரமாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லிம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள். இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தைக் குறிப்பிலாம். பம்பாய்க்கு அருகே கல்யாண்’ என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்தத் தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர். அவர் முஸ்லிம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணை தான், உண்மையில், பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக ஆக்கிவிட்டார்கள், யூதர்களை வெற்றிகொண்ட மன்னன் நெபுகாத்நெசார், அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டுத் தனது மதத்தை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியபோது கூட யூதர்கள் தங்கள் கடவுளிடம் காட்டிய விசுவாசத்தைப் பிராமணர்களின் இந்த விசுவாசமின்மையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.’
“மன்னனாகிய நெபுகாத்நெசார் அறுபது முழ உயரமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை யொன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்தின் துரா என்ற சமவெளியில் அமைத்தான்.
பின்பு மன்னன் நெபுகாத்நெசாா சிற்றரசர்களையும், ஆளுநர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், ஆலோசனைக் குழுவினர்களையும், கருவூல அதிகாரிகளையும், அமைதிக் காவலர்களையும், மாகாணங்களின் ஆட்சியாளர்களையும் தான் அமைத்த சிலையின் பிரதிட்டைக்கு வருமாறு கட்டளையிட்டான்.
அவ்வாறே சிற்றரசர்களும், ஆளுநர்களும், தலைவர்களும், நீதிபதிகளும், கருவூல அதிகாரிகளும், ஆலோசனைக் குழுவினர்களும், அமைதிக் காவலர்களும், மாகாணங்களின் ஆட்சியாளர்களும் நெபுகாத்நெசார் மன்னன் அமைத்த சிலையின் பிரதிட்டைக்கு வந்த சேர்ந்து, சிலையின் முன்னால் நின்றார்கள்.
அப்போது கட்டியக்காரன் உரத்த குரலில் கூறினான்; (இதன் பின் வருவது ‘பழைய ஏற்பாடு’ தானியேல் அதிகாரம் 3-இல் இருந்து தரப்படுகிறது) “இதனால் மக்கள் அனைவருக்கும், எல்லா இனத்தினருக்கும், மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்… எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லாவகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்டவுடன் நீங்கள் எல்லோரும் கீழே விழுந்து மன்னன் நெபுகாத்நெசார் அமைத்த பொற்சிலையை வணங்க வேண்டும்.”
“யாராவது அப்படி விழுந்து வணங்கவில்லை யென்றால், அவன் அப்போதே எரிகிற தீச்சூளையின் நடுவில் போடப்படுவான்,” ஆகவே, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்டவுடனே எல்லா மக்களும், எல்லா இனத்தவரும், எல்லா மொழியினரும் கீழே விழுந்து மன்னன் நெபுகாத்நெசார் அமைத்த பொற்சிலையை வணங்கினார்கள்.
அப்போது கல்தேயரில் சிலர் அருகில் வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள். மன்னன் நெபுகாத்நெசாரிடம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்; “மன்னரே, நீர் நீடு வாழ்க! மன்னரே, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லாவகை இசைக்கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் கீழே விழுந்து பொற்சிலையை வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தீர்;
யாரேனும் கீழே விழுந்து வணங்கவில்லை யென்றால் அவன் எரிகிற தீச்சூளையில் போடப் படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர்:
ஆனால், பாபிலோன் மாகாணத்தின் காரியங் களைக் கவனிப்பதற்காக நீர் நியமித்த ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதர்கள் உமது கட்டளையை அவமதித்து உமது தெய்வங்களிடம் பற்றில்லாதவர்களாகவும், நீர் அமைத்த பொற்சிலையை வணங்காமலும் இருக்கிறார்கள்.”
அப்போது நெபுகாத்நெசார் கடும் சினம் கொண்டு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவர்கள் மன்னன் முன் கொண்டு வரப்பட்டார்கள். நெபுகாத்நெசார் அவர்களை நோக்கிக் கூறினான்: “ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, நீங்கள் மூவரும் என் தெய்வங்களிடம் பற்றில்லாதவர்களாகவும், நான் அமைத்த பொற்சிலையை வணங்காமலும் இருப்பது உண்மைதானா?
இப்போதாவது, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலான எல்லா வகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்கும்போது நீங்கள் கீழே விழுந்து, நான் அமைத்த பொற்சிலையை வணங்கத் தயாராயிருந்தால் நல்லது; வணங்கவில்லையென்றால் அப்போதே நீங்கள் எரிகிற தீச்சூளையில் போடப்படுவீர்கள். உங்களை என்னிடமிருந்து காப்பாற்றக் கூடிய கடவுள் யார் இருக்கிறார்?”
அதற்கு ஷாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ ஆகியோர், “நெபுகாத்நெசாரே, இந்த விஷயத்தில் உமக்குப் பதில் கூற எங்களுக்கு அக்கறையில்லை”
ஏனென்றால் அரசே, நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள் எரிகின்ற தீச்சூளையிலிருந்தும், உம்முடைய கைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மீட்டு விடுவார்.
அப்படி ஆகாமற்போனாலும் உம்முடைய தெய்வங்களுக்கு நாங்கள் பணிசெய்யமாட்டோம். நீர் அமைத்த பொற்சிலையை வணங்க மாட்டோம் என்பதை நீர் தெரிந்துகொள்ளும்” என்றார்கள்.
அப்போது நெபுகாத்நெசாருக்குக் கடும் சினம் மூண்டது; அவன் கடுகடுப்பான முகத்தோடு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பார்த்தான். தீச்சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைவிட ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி அவன் கட்டளையிட்டான்.
பின்பு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவரையும் கைகால்களைக் கட்டி, அந்த எரிகிற தீச்சூளையில் போடும்படித் தன் படைவீரர்களுள் மிகுந்த உடல்வலிமை உள்ளவர்களுக்குக் கட்டளை யிட்டான்.
உடனே அந்த மனிதர்களை அவர்களுடைய மேலங்கிகளோடும் நிசார்களோடும், தொப்பிகளோடும், மற்ற ஆடைகளோடும் கட்டி எரிகின்ற தீச்சூளையின் நடுவில் போட்டார்கள்,
மன்னனின் ‘கட்டளையை உடனடியாக நிறை வேற்ற வேண்டியிருந்ததாலும், தீச்சூளை மிக அதிக வெப்பமாய் இருந்ததாலும், ஷாத்ராக், பேஷாக், ஆபேத்-நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்றவர்களைத் தீயின் சுவாலை கொன்றுவிட்டது.
ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவரும் கட்டப்பட்டவர்களாய் எரிகின்ற , தீச்சூளையின் நடுவில் விழுந்தார்கள்”.
இந்தியாவின் பிராமணர்கள் தங்கள் கடவுளர் களுக்கும் தங்கள் மத நம்பிக்கைக்கும் இத்தகைய உறுதியான விசுவாசத்தையும் பற்றுதலையும் காட்டமுடியுமா?
பக்கிள் (Buckle), நாகரிகத்தின் வரலாறு” என்னும் தமது நூலில் கூறுகிறார்:
“அய்யம் எழத் தொடங்காதவரை முன்னேற்றம் ஏற்படமுடியாது என்பது தெளிவு. நாகரிகத்தின் முன்னேற்றம் முற்றிலுமாக மனித அறிவு பெறுகின்ற வளங்களையும், அந்த வளங்கள் எந்த அளவுக்கு மக்களிடையே பரப்பப்படுகின்றன ‘என்பதையும் பொறுத்தது என்பதை நாம் ஏற்கெனவே தெளிவாகக் கண்டோம். ஆனால், தங்களது சொந்த அறிவைப் பற்றி முழுமையாகத் திருப்தியடைந்திருப்பவர்கள் அதை வளர்க்க ஒரு போதும் முயற்சி செய்யமாட்டார்கள். தங்களுடைய கருத்துகள் சரியானவை என்று முழுமையாக நம்புகின்றவர்கள் அவற்றின் அடிப் படையை ஆராய முயலமாட்டார்கள். தங்கள் தந்தையர் களிடமிருந்து பரம்பரையாகப் பெற்ற கருத்துகளுக்கு முரணான கருத்துகளை அவர்கள் வியப்புடனும் பல சமயங்களில் வெறுப்புடனும் பார்க்கிறார்கள்; அவர்கள் இத்தகைய மன நிலையில் இருக்கும் போது, தாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ள முடிவுகளில் குறுக்கிடுகின்ற எந்தப் புதிய உண்மைகளையும் வரவேற்க மாட்டார்கள்.
இந்தக் காரணத்தினால், புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் அய்யம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும். ஏனென்றால், அய்யம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது: ஆய்வு இல்லையென்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல; தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத் தான் அறிவு கிட்டுகிறது.
ஆனால், தாங்கள் ஏற்கெனவே முழுமையாகத் திருப்தியடைந்திருக்கும் விஷயங்களுக்காக மனிதர்கள் அத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் மேற்கொள்வார்கள் என்று எண்ணுவது தவறாகும். இருளை உணராதவர்கள் ஒளியைத் தேட மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்திலேனும் நாம் நிச்சயமான கருத்தை அடைந்துவிட்டால் அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்யமாட்டோம்; ஏனென்றால் அது பயனற்றது மட்டுமின்றி ஒரு வேளை ஆபத்தானதாகவும் இருக்கலாம். அய்யம் குறுக்கிட்டால் தான் ஆய்வு தொடங்கும். எனவே அய்யப்படும் செயல் தான் எல்லா முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது, அல்லது முன்னேற்றத்துக்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்.”
பிராமணர்கள் அய்யம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை; ஏனென்றால், அவர்கள் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தை மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கிடமற்றவை என்பதே இந்தக் கருத்து. ஹிந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், ஹிந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கவேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள் தான் அவற்றைப் புனிதம் என்றும் பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பிற்காலத்திய இடைச் செருகலான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள், பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன. இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள். எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, தங்களை வழிபடுவோருக்குக் கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்ளும் வேண்டுகோள்களைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமற் போயிற்று. ஆனால் பிராமணர்கள் பரப்பியுள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியில் (‘பிடி’ என்ற சொல் எங்களால் சேர்க்கப்பட்டது. கையெழுத்துப் பிரதியில் இந்தச் சொல் படிப்பதற்குத் தெளிவாகத் தெரியவில்லை) இருந்து ஹிந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல் இந்தியாவுக்கு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை (‘அபாயத்தை’ என்ற சொல்லும் மூலப் பிரதியில் இல்லை) நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத்தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.
– பி.ஆர்.அம்பேத்கர்
நன்றி: சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ள
‘இந்து மதத்தில் புதிர்கள்’ நூல்
இது ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு எழுத்துப் பிரதி. இதில் டாக்டர் அம்பேத்கர் தமது கையெழுத்தில் திருத்தங்கள் செய்திருக்கிறார். தட்டச்சு செய்யப்பட்ட பிரதியின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் கைப்பட எழுதிய சில பத்திகள் சேர்க்கப்பட்டன.
– பதிப்பாசிரியர்கள்
- விடுதலை நாளேடு,5.12.25
