நாம் அறிந்ததும், அறியாததும்
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற எந்தச் சமூக மாற்றமும், பெரியாரின் கொள்கைத் தாக்கம் இல்லாமல் நடைபெறவில்லை. இந்தியாவில் வேறு எந்தத் தலைவரின் பணியாலும், அவரது மாநிலத்தில் இத்தகைய மாற்றத்தை உருவாக்கி, அது இன்றுவரை நீடித்திருக்கிறது என்று கூற முடியாது.
இந்தப் பெருமை சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் ஒருவருக்கு மட்டும் தான் உண்டு என நாம் பெருமையோடு பறை சாற்றலாம். இத்தகு புரட்சியாளரின் கொள்கையையும், சமூகத்தில் ஏற்படுத்தி யிருக்கும் தாக்கத்தையும் அறிந்து கொண்டவர்களைவிட, பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என மேலோட்டமாக அவரைப் புரிந்து கொண்டவர்களும், இம்மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
அண்மைக் காலத்தில், சமூக நீதி, இட ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அரசின் ஆணைகளும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், சார்ந்தும், எதிர்த்தும் வந்துள்ளன. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டம், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு செல்லாமல் தடுத்திட, அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்துள்ள நிலையிலும், அதனையும் மறுபரிசீலனை செய்திட தங்களுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், ஒவ்வொரும் ஆண்டும் மருத்துவ கல்லூரியில் இடம் வழங்கிட, சட்டத்திற்கு முரணாக செயல்பட்டும் வருகின்றது.
இவை குறித்து இன்றைய தலைமுறையினருக்கு புரிதல் ஏதும் அவ்வளவாக இல்லை; இருப்பினும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இட ஒதுக்கீடு குறித்து எதிர்மறையான கருத்தை இதுவரை பதிவு செய்யவில்லை என்பதற்கும், ஏனைய மாநிலங்கள் தமிழ கத்தையே சமூக நீதியின் தலைநகராக நோக்குகின்றன என்பதற்கும் உரிய பொருள் இல்லாமல் இல்லை; அதுதான் பெரியார் என்ற புரட்சியாளர் ஏற்படுத்திச் சென்ற தாக்கம் என்பதை குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினர், அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மையாகும்.
1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைகிறது; புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, 26.1.1950 அன்று நாடாளுமன்றத்தால், இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில், தமிழகத்தில் அனைத்து வகுப்பினர்க்கும், இட ஒதுக்கீடு அளித்திடும் வகுப்புவாரி உரிமை (கம்யூனல் ஜிஓ) 1921 முதல் நடை முறையில் இருந்ததையும், இந்த வகுப்புரிமை தான், தமிழகத்தைச் சமூக நீதியின் தலைநகராக இன்றும் பிற மாநிலத்தவர் கருதிட அடிப்படை என்பதையும் சற்று நினைவில் கொள்க.
இந்தியா ஓர் குடியரசு என 26.1.1950 அன்று அறிவித்த நிலையில், நாட்டு மக்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் என அனைவரும் அவ்வாறே புரிந்து கொண்ட நிலை யில், பெரியார் அவர்கள் கூறிய கருத்து மிக வியப்பாகவும், அதிர்ச்சி கலந்த உண்மையாகவும் இன்றும் கருதப்படுகிறது.
பெரியார் பேசுகிறார்: நமது முக்கியக் கொள்கை களில் ஒன்றாகிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒழிப்பு வேலை துவக்கமாகிவிட்டது. தோழர்களே, இனி நம் வேலை, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திலும் அதிக கவனம் செலுத்துவதுதான். இது நம் மக்களுக்கு உணர்ச்சி ஊட்டுவதற்கும் ஓர் நல்ல வாய்ப்பாகும். இதையொட்டி நாம் விடாப்போர் நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. எது எதெற்கென்று நாம் அழுவது? தொல்லைமேல் தொல்லை வருகிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுவிட்டால் இன்றைய சூழ் நிலையில் நம் வாழ்வு, நம் பின் சந்ததியார் வாழ்வு எல்லாம் பாழாகிப் போய்விடும். மறுபடி நம் சந்ததியார் பழையபடி காட்டுமிராண்டிகளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும். (கரூரில் பெரியார் பேச்சு விடுதலை 5.2.1950)
இவ்வாறு பெரியார் பேசியதற்கு அர்த்தம் இல்லாமல் இல்லை; சென்னை மாகாண சட்டமன்றத்தில் 4.3.1950 அன்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் கரந்த், தமிழ கத்தில் உள்ள வகுப்புவாரி உரிமை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என பேசுகிறார். ராதா கிருஷ்ணன் தலைமையில் அமைந்த பல்கலைக்கழகக் குழு, வகுப்புவாரிமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதம் எனக் கூறிய நிலையில், அன்றைய பல்கலைக் கழக சிண்டிகேட்டோ, அதனை, நீதியும், நேர்மையான செயல் எனக் கருத்து கூறியது. (விடுதலை 7.6.1950)
இவற்றைக் கவனித்து வந்த பெரியார், 13.6.1950 அன்று விடுதலையில் எழுதிய தலையங்கம், வகுப்புரிமைத் தத்துவத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது இந்திய மக்கள், பல மதம், பல ஜாதி, பல வகுப்பு, பல லட்சிய முடையவர்கள் என்பதாகப் பிரிந்திருப்பதனா லேயே, இந்திய மக்களுக்கு ஆட்சித் துறையிலும், உத்யோ கத்திலும், ஜனப் பிரதிநிதித்துவத்திலும், விகிதாச்சாரம் என்பதாக உரிமையும், சந்தர்ப்பமும், கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. இந்தக் கொள்கைக்கு விரோதமாக, யாருக்காவது, ஏதாவது அதிக உரிமை, அதிக வசதி, அதிக வாய்ப்பு இருக்க வேண்டுமானால், இருக்க நேருமானால், அந்த நிலையைப் பொதுமக்கள் ஆதிக்கம் என்றோ, பொதுமக்கள் ஆட்சி என்றோ, சமதர்ம நாடு என்றோ, சொல்வதற்கு இடமிருக்காது (விடுதலை தலையங்கம் 13.6.1950). பெரியார் முன்னரே எச்சரித்தது போலவே, உயர்நீதி மன்றத்தில் வகுப்பு ரிமைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. செண்பகம் துரைராசன் என்ற பெண்மணி, வகுப்புரிமைக் காரணமாகத் தனக்கு மருத்துவக் கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் 14.6.1950 அன்று வழக்கு தொடருகிறார். உயர்நீதிமன்றம் வழக்கினை ஏற்றுக்கொண்டு அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறது. விடுதலையில் வகுப்புரிமை சம்மந்தமாகச் செய்தி களைத் தொடர்ந்து வெளியிடுகிறார் பெரியார்; பம்பாயிலும், பஞ்சாபிலும் இட ஒதுக்கீடு கோரிப் போராட்டம் நடைபெறுகிறது. 1930இ-ல் ஜீலை 13-ஆம் தேதி எழுதிய கட்டுரை ஒன்று மீண்டும் மக்களின் நினைவுக்காக விடுதலையில் 9.7.1950 அன்று வெளியிடப் படுகிறது. அந்த கட்டுரையில் தங்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் வேண்டும் என ஆங்கிலேயரிடம், இந்தி யர்கள் என்ற பெயரில் பார்ப்பனர்கள் போராடியதும், அதற்கு காங்கிரஸ் கட்சி துவக்கப் பட்டதையும் பெரியார் குறிப்பிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை காங்கிரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததை எதிர்த்து, தான் 1925இ-ல் காங்கிரசிலிருந்து வெளியேறியதையும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வகுப்புரிமைக்கு எதிரான வழக்கின் விவாதம் ஜூலையில் நடைபெறுகிறது. இறுதியாக 28.7.1950 அன்று, இந்திய அரசமைப்புச் சட்டம் 15, 29(2) விதிகளுக்கு கம்யூனல் ஜி.ஓ., எதிரானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, 1928 முதல் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி உரிமையை ரத்து செய்தது. அன்றைய தினம் விடுதலையில் கம்யூனல் ஜி.ஓ., தீர்ப்பும், கடமையும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கம், வகுப்புரிமைக்குப் போராட மக்களை அழைக்கும்விதமாக இருந்தது.
பெரியாரின் கட்டுரைகளின் எதிரொலியாக, சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 31.7.1950 அன்றும், மீண்டும் 1.8.1950 அன்றும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்தினார்கள். 1.8.1950 அன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்ட கூட்டத்தில், வகுப்புரிமை ஆணையை நிறைவேற்றிய எஸ்.முத்தையா முதலியார் கலந்து கொண்டு, இவ்வாறு பேசுகிறார்:
அரசியல் சட்டத்தின் 37 விதியில் கூறப்பட்டுள்ள நேரடியான கடமையை ஒரு சர்க்கார் அமல் செய்ய வில்லை என்றால், எந்தக் குடிமகனும், சர்க்காரை நியாயப்படி கட்டாயப்படுத்தவோ, கட்டளையிடவோ முடியாது. ஆனால், சர்க்கார் தனது நிர்வாக முறையில், அக்கடமையை நிறைவேற்ற நேரிட்டால், அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறுவதும், கண்டிப்பதும் எவ்வாறு பொருத்தமானதாகும் என்றார் முத்தையா முதலியார். அதே நாளில், திருச்சியில் ஏறத்தாழ முப்பதாயிரம் மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசினார்.
சென்னை மாகாண சட்டமன்றத்தில் கம்யூனல் ஜி.ஓ. தேவை என உறுப்பினர்கள் கோசல்ராம், ஏ.சுப்ரமணியம் ஆகியோர் பேசினர். வகுப்புரிமைக் கிளர்ச்சி துவக்கக் கூட்டத்தினைப் பெரியார் துவக்கினார். 7.8.1950 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் கூட்டம் நடைபெற்றது. அம்பதாயிரம் மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய அந்தக் கூட்டத்தில் அனைத்துப் பிரிவினரும் போராட அழைப்பு விடுத்தார் பெரியார்.
இந்தப் போராட்டம் சாமானியமானது அல்ல; இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இதில் இறங்குவோம். இந்தப் போராட்டத்தின் ஆரம்பக்கட்டமாய் இரண்டு காரியங்களைச் செய்திட வேண்டும். முதலாவது, ஆகஸ்டு-14, நாடு முழுவதும், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஓங்குக என்ற வாழ்த்தொலிகளுடன் ஊர்வலம் வரவேண்டும். நம்முடைய வியாபாரிகள், அன்றைய தினம், கடையடைப்பு செய்ய வேண்டும். நம் முடைய தாய்மார்கள் ஊர்வலமாகச் செல்லவேண்டும். ஊர்வலத்திற்குத் தடை செய்தால், அந்தத் தடைகளை லட்சியம் செய்யக்கூடாது. இந்தக் காரியத்தை நீங்கள் ஆகஸ்டு 14-ஆம் தேதி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரிக்காத பத்திரிக்கைகளை, நம் கிளர்ச்சியைக் கேலி செய்யும், கிண்டல் செய்யும் பத்திரிக்கைகளைப் பொது மக்கள் வாங்கிப்படிக்கக் கூடாது. இந்த இரண்டு காரியத் தையும் முதலில் செய்யுங்கள். பிறகு மேலே செய்ய வேண்டி யது என்ன என்று சொல்லுகிறேன் எனக் கூறினார் பெரியார்.
தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில், சென்னை, காஞ்சி பச்சையப்பன் கல்லூரி, விருதுநகர், சேலம், ஆரணி ஆகிய ஊர்களில் உள்ள கல்வி நிலைய மாணவர்கள், ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர். சென்னை மாகாண சட்டமன்றத்தில் 9.8.1950 அன்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.என். கோபால்சாமி, பலவீன வகுப்பினர் பட்டியலை மந்திரியார் தரமுடியுமா என கேட்க, பதில் அளித்த கல்வி அமைச்சர் மாதவமேனன், பார்ப்பன சமூகத் தைத் தவிர மற்ற சமூகத்தினர் அனைவரும் பலவீன சமூகத்தி னர்களே என்பது உறுதிப்பட்டதாகும் எனக் கூறினார்.
ஆகஸ்டு 14-இல் கடையடைப்பு நடத்திட மக்களைக் கேட்டுக் கொண்ட பெரியார், உரிமை வேண்டுவது வகுப்புவாதமா? என்ற தலைப்பில் 11.8.1950-இல் கட்டுரை வெளியிட்டார். தமிழகத்தின் பல நகரங்களில் வகுப்பு ரிமைக்கு ஆதரவாக அடுத்த மாதத்தில் மாநாடு நடை பெற உள்ளதாக அறிவித்தார்.
வகுப்புவாரி உரிமைக்கு ஆதரவாக, முதன்முறையாக, சென்னைக் கால் நடைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்தனர். லிபரேட்டர் என்ற ஆங்கில ஏடு, ஆதரவு செய்திகளை வெளியிட்டது. கேரளாவி லிருந்து வெளிவரும் கேரளகவுமதி இதழ் செய்தி வெளி யிட்டது.
வகுப்புரிமைக்கு ஆதரவாக அருப்புக்கோட்டையில் 20.8.1950 அன்றும், ஈரோட்டில் 24.8.1950 அன்றும் பெரியார் மக்களிடையே கருத்துக்களை எடுத்துக் கூறினார். திருச்சியில் 10.9.1950 அன்று கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில் ஒவ்வொரு மாதமும் 14-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் கம்யூனல் ஜி.ஓ. நாள் கடைப் பிடித்து, மக்களிடம் விளக்கக்கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை மாகாண கவுரவ மாஜிஸ்டிரேட் ஜி.வி.ரெட்டி, பெரியாருக்கு ஆதரவு அளிக்கிறார். கம்யூனல் ஜி.ஓ. இல்லையேல், நம் வாழ்வு மண்ணில் போய்விடும். சிறு கூட்டம், 75 சதவிகித ஸ்தானத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் என லயோலோ கல்லூரியில் ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பேசுகிறார்.
பெரியாரின் தலைமையில் தொடர்ச்சியான போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடைபெறுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எச்.வி.காமத் என்ற உறுப்பினர் 26.11.1950 அன்று கேள்வி எழுப்புகையில், அதற்கு உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், கிளர்ச்சி பற்றிய விவரங்களைத் தமிழக அரசிடம் கேட்டுள்ளதாகப் பதிலளிக்கிறார்.
சென்னை மாகாண அரசின் மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, வகுப்புரிமை செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து 27.3.1951 அன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
விடுதலை, தீர்ப்பைக் கண்டித்து அன்றே தலையங்கம் தீட்டியது. 2.4.1951 அன்று கூடிய திராவிடர் கழக நிர்வாகக்குழு கூட்டம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டுவது என்றும், மந்திரிகள் ராஜினாமா செய்ய வற்புறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, 11.4.1951 அன்று, திருச்செங்கோட்டிற்கு வருகை தந்த அன்றைய சென்னை மாகாண முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது.
வகுப்புவாரி உத்தரவு செல்லத்தக்கது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததனால் எழுந்துள்ள பிரச்சினையின் காரணமாக, சென்னை கோரும் வகுப்புவாரி உத்தரவு பற்றிய கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாகப் புதிய மசோதாவினை மத்திய அரசு கொண்டு வரும் என பிரதமர் நேரு, 12.5.1951 அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இது தொடர்பான விவாதத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்வது வகுப்புவாத நோக்கமாகாது. சட்ட நுணுக்கச் சிக்கலைத் தீர்க்கத்தான் திருத்த மசோதா என பிரதமர் நேரு அவர்களும்,
கம்யூனல் ஜி.ஓ. பற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு திருப்தியற்றது. பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு உதவி புரிவதே அரசின் கடமை. முன்னேற்றமடையாத மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக 29(2) வது விதியும், 16(4) விதியும் குறுக்கிடாமலிருக்க, 15-ஆவது விதியைத் திருத்த வேண்டியது அவசியம் என அன்றைய சட்ட அமைச்சர் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களும் 18.5.1951 அன்று நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றுக் கருத்து கூறினர்.
அனைத்து விவாதங்களும் முடிந்து 1.6.1951 அன்று அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 15-இல் பிரிவு 4 சேர்க்கப்பட்டு, மசோதா மக்களவையின் 245 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக, சமூக நீதி, வகுப்புவாரி உரிமை எனத் தொடர்ச்சியாக மாநாடுகள், போராட்டங்கள், விடுதலையில் தலையங்கங்கள், அறிக்கைகள் எனப் போராடிய தலைவர் இந்திய துணைக்கண்டத்தில், பெரியார் ஒருவரே என்பதை இன்றைய தலைமுறையினர் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மான வாழ்வுக்காக சாகும்வரையிலும் போராடிய அந்தப் புரட்சியாளரின் போராட்ட சரித்திரத்தில், ஒரு சில பக்கங்களே இங்கு நாம் சுட்டிக்காட்டியவை; ஆகஸ்டு 14 வகுப்புரிமை நாள் போராட்டம் இதில் ஒரு பகுதிதான்.
பெரியாரைப்பற்றி இன்னும் நாம் அறிந்திராதச் செய்திகளைத் தெரிந்துக் கொள்ள இன்றைய நாள் ஆகஸ்டு 14 (1950)இ-ல் நடைபெற்ற போராட்டம் பற்றிய செய்திகள் ஓர் தூண்டுகோலாக அமைந்திடவே விரும்புகிறோம். இளைய சமுதாயம் பெரியாரைப் பற்றி அறிந்திடுமாயின், வெற்றி சமுதாயத்திற்கே.
வாழ்க பெரியார் வெல்க சமூக நீதி; ஆகஸ்டு 14 போராட்டம் வெல்க.
-
_ -குடந்தை கருணா
-விடுதலை,14.8.14