(1931 - புதுவை முரசிலிருந்து)
ஏசுவானவர் பாவிகளை ரட்சிக்கும் பொருட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்று கிறித்துவப் பாதிரிமார்கள் உபன்யாசம் செய்கிறார்கள். “ஏழைகளைக் காப்பாற்றும் பொருட்டு தனது ரத்தத்தைச் சிந்தினார்” என்று பிரசங்கம் செய்கிறார்கள். நமது ஜனங்களும் அதை நம்புகிறார்கள். எப்படியோ 60 லட்சம் கிறிஸ்துவர்களும் இந்தியாவில் சேர்ந்து விட்டார்கள். அதைப்பற்றி நமக்கு எள்ளளவும் கவலை கிடையாது.
ஏனெனில் இந்த 60 லட்சம் பேர்களும் இந்துமதத்தில் இருந்து சாதித்ததைவிட அதிக மாகவோ, குறைவாகவோ கிறிஸ்துமதத்திலும் சாதித்து விடப் போவதில்லையென்பதே நமது அபிப்பிராயம்.
வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்ததைவிட சற்று மதவெறி அதிகம் பிடிக்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் எதற்கெடுத்தாலும் சைத்தான் என்று சொல்லி விடலாம் இதைத் தவிர வேறு பகுத்தறிவோ அனுபவ முதிர்ச்சியோ கிறிஸ்துமதத்தில் அதிகமாய்க் கிடைத்துவிடும் என்று நாம் சிறிதுகூட சந்தேகிக்கவில்லை.
ஆகவே கிறிஸ்து மதத்திற்கு இருக்கும் பணக் கொழுப்பும் அரசாங்க ஆதரவும் இருக்கும் வரையில் அது அவ்வளவு பயமில்லாமல் இருக்கலாம்!. இருந்து விட்டு போகட்டும் ஒன்றும் மூழ்கிப் போகாது ஆனால் நாம் கேட்பதெல்லாம் ஒரு விஷயந்தான். கிறிஸ்துவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறார்களா?
உனது ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று வேதநூல் .. உனது மேலங்கியை எடுத்துக் கொண்டவனுக்கு உனது கோட்டையும் கொடுக்கத் தயங் காதே என்று கூறுகிறது ஆனால் என்ன நடக்கிறது? எவ னாவது பாதிரிமார்கள் புரட்டை எடுத்துச் சொன்னால் அவன்மீது மான நஷ்ட வழக்கு தொடரலாமா அவனது ஆயுதத்தைப் பிடுங்கலாமா அவனைக் கஷ்டப்படுத்தலாமா என்று யோசனை போகிறதே தவிர யோக்கியமாய், நாணயமாய், மனுஷத் தன்மையோடு சுயஅறிவோடு பதில் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
மிஸ். மேயோ இந்து மதத்தைப் பற்றி இடித்துக் கூறியபோது இந்துமதப் பித்தர்கள் எப்படி தலைகால் தெரியாமல் காய்ச்சின எண்ணையில் போட்ட எள்ளுப் பொட்டணம் மாதிரி துள்ளினார்களோ அதைப்போலவே தான் நமது கிறிஸ்துவ சகோதரர்களும் குதிக்கிறார்கள். சக்கரைகளுக்கும், ஜோசப்பு களுக்கும், செல்வங்களுக்கும், அற்புத ஆரோக்கியசாமி களுக்கும் ஆவேசம் வந்து விட்டது. ஒரு மதத்திலும் சேராத நம்மைப் போன்றவர்களுக்கே, எங்கே 2ஆவது ஏசு கிறிஸ்து திடீரென்று வந்து எல்லோரையும் அழித்து விடு வாரோ என்று பயமாயிருக்கிறது! பாவம்!
ஆஹா என்ன வேடிக்கை பல நூறு வருஷங்களா பரம் பரையாய் கிறிஸ்துவர்களாக இருந்த தேசங்களும் மக்களும் கிறிஸ்து மதத்தை புறக்கணித்து விட்டு சும்மாயிருக்கும்போது நேற்று செட்டியாராயிருந்தவர்களும் 2 நாளைக்கு முந்தி உடையார்களாய் இருந்தவர்களும் இன்றும் கூட அந்த அநாகரீகப் பட்டங்களை தங்கள் புனித மார்க்கத்தைச் சேர்ந்த பெயர்களோடு கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருக்கி றவர்களும் ஏதோ உலகத்திற்கே அபாயம் வந்துவிட்டது போல் சீறிவிழுவதும் தலைவிரி கோலமாய் ஆடுவதும் ஒரு வெட்ககரமான காரியமாகவே இருக்கிறது.
கிறிஸ்துவத் தலைவர்களே! பாதிரிமார்களே! ஏன் இத்தனை ஆத்திரம்? உங்கள் மதத்தில் சிறிது கூட அப்பு அழுக்கு இல்லையென்றால் எந்த காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் உபயோகப்படக்கூடியது என்றால் எல்லா உண்மைகளும் உடையது என்றால் புனிதமான மார்க்க மென்றால், கடவுள் அருள் பெற்றவர்களாலேயே ஸ்தாபிக்கப் பட்டது என்றால் இந்த சுயமரியாதை இயக்கமோ இந்த பகுத்தறிவு இயக்கமோ, இந்த ரஷியாவோ இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் அதை ஒரு அங்குலமாவது நகர்த்த முடியுமா?
அப்படியிருக்க உங்களுக்கென்ன ஆவேசம்? அன்று மோஸசைப் போல் ஒரு ஆள் கடவுளுக்குத் தூதுபோகக் கிடைக்கமாட்டானா? அன்றி கிறிஸ்துவக் கடவுள் கொஞ்சம் கண் திறந்து பார்த்தால் (இப்போது கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை) போதாதா? இந்த அறிவு இயக்கத்தார் எல்லாம் அழிந்துவிட மாட்டார் களா? அப்படியிருக்க நமது நாடார்,
முதலியார், வாண்டையார், உடையார் கிறிஸ்துவர்களுக்கு மாத்திரம் ஏன் இத்தனை ஆத்திரம் வரவேண்டுமென்பது நமக்கு விளங்கவில்லை கிறிஸ்து மதமே உண்மையான கொள்கைகளையுடைய மதமென்றால் தானாகவே நிலை பெற்று விடுமல்லவா?
ஓ! ஒரு வேளை இப்படியிருக்கலாம்! கடவுளின் பத்துக் கட்டளைகளுள், நான் ஒரு பொறுமையான கடவுள், மற்றொரு கடவுளை மனிதர் வணங்குவதைப் பொறுக்க மாட்டேன். ஒருவன் இவ்வாறு செய்தால் அவனுடைய மூன்றாவது நான்காவது தலைமுறைவரையில் துன்பப் படுத்துவேன் என்று கிறிஸ்துக் கடவுள் சொல்லியிருக்கிறாரல்லவா? அத னால் தான் கிறிஸ்துப் பாதிரிகளும் தலைவர்களும் பதறுகிறார்கள்.
மதம் ஒழிந்த மனிதனே, மனித சமுதாயத்திற்குப் பயன்படுவான்.
-விடுதலை,4.3.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக