பக்கங்கள்

புதன், 25 மே, 2016

கடவுள் அழாது என் செய்யும்?

தென்னிந்தியாவிலுள்ள சில கோவில்களிலும், வட இந்தியாவிலுள்ள சிலகோவில்களிலுமுள்ள சுவாமிகளின் (விக்ரகங்களின்) கண்ணிலிருந்து கண்ணீர் வடிவதாக சில மாதங்கட்கு முன்னர் பத்திரிகையில் பார்த்தேன். சில பகுத் தறிவுவாதிகள் இவைகளெல்லாம் சுத்தப்புரட்டு என்றனர். என்னமோ எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு இருக்கக்கூடாது என்ற அய்யமுண்டானது கடைசியில் ஓர் முடிவுக்கு வந்தேன்.
இத்தெய்வங்கள் விஷயம் கண்டிப்பாய் உண்மை யாகத்தானிருக்கும். ஏன் கிரேதாயுகம், திரேதாயுகம் துவாபர யுகங்கள் தெய்வம் மனிதரையாண்டு வந்தது. இந்தக் கலியுகத்தில் மனிதன் தெய்வத்தை அடக்கியாளத் துணிந்து விட்டான். பழைய யுகங்களில் இத்தெய்வங்கள் யதேச்சையாய் காடுகளிலும், நாடுகளிலும் உலாவிக்கொண்டு சுதந்திரமாய்க் குடித்து வெறித்து ஆடு, மாடு மனிதர்களைக் கொன்றுதின்று பல மனைவிகளை மணந்து கொண்டதும் போதாதென்று அகலிகை, பிருந்தை, சரஸ்வதி, தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் முதலிய பெண்களையும் பல பக்தர்களின் மனைவியையும் பலவித தந்திரோ பாயங்களாலும் பலாத் காரத்தாலும் புணர்ந்து இன்பம் துய்த்துக்கொண்டிருந்த தோடமையாது.
ஆயிரக்கணக்கான தேவதாசிகளையும் தானும் தன்னை நம்பி வந்த பக்தர்களும் அனுபவித்துக் கொண்டிருந்திருக்க இக்கலிகால மக்கள் கடவுளுக்கென்று ஒருவரும் பொட்டுக் கட்டகூடாது தாசியென்றொரு கூட்டம் இருந்து விபசாரம் செய்தாலே தண்டிக்க வேண்டும் என்றும் சட்டம் செய்து வருவதோடு ஒருவன் ஒரு மனைவிக்கு மேல் கல்யாணம் செய்யக்கூடாது என்று சட்டஞ் செய்யமுயற்சிப்பதும் பிறர் மனைவி சோதரியை பலாத்காரமாகவோ,
வஞ்சனையாகவோ அபகரித்துச்செல்பவர்களுக்கு, 10 வருஷம் தண்டிக்கப்படும் செய்திகளும், கடவுள் செய்த லீலா வினோதத் திரு விளையாடல்களெல்லாம். விபசாரம், அயோக்கியத்தனம் என்று கூறுவதோடு அக்கடவுளைக் கண்டால் கழுத்தை அறுப்பேன் என்றும் அத்திருவிளையாடல் புராணங்களை யெல்லாம் சுட்டெரிக்க வேண்டும் என்று பகுத்தறிவுவாதிகள் பேசுவதையும் எழுதுவதையும் அறிந்தும் கடவுள்கள் அழாது என்னதான் செய்யும்?
சிறீ ரெங்கநாதர்
விவாகரத்து செய்வாரா?
முஸ்லிம் வைதீக அறிஞர்கள் தங்கள் வேதப்படி ஒரு முஸ்லிம் ஒர் கிறிஸ்தவப்பெண்ணை மணந்துகொள்ளலாம் என்கின்றனர். சீர்திருத்தவாதிகளான முஸ்லீம்களோ விக்ரக வணக்கஞ் செய்யாத எந்த மதப்பெண்ணையும் நாங்கள் மணந்து கொள்ளலாம் - ஆனால் ஒரு முஸ்லிம் பெண் பிற மதஸ்தனைக் கல்யாணம் பண்ணுவது கூடாது என்றுதான் குர்ஆன் கூறுகிறது என்று கூறுகிறார்கள்.
எனவேதான் ஜாதி, மத வித்தியாசமின்றி தமிழர்கள் (இந்து முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் மணந்து கொள்ளலாம் என்று ஒர்தீர்மானம் மலேயாவிலுள்ள கோலககன்சாரில் கூடிய அகில மலேயா நான்காவது சீர்திருத்த மாநாட்டில் கொண்டு வந்த பொழுது முஸ்லீம்கள் பலமாக எதிர்த்ததின் பலனாக பிரேரேபித்தவரால் அத்தீர்மானம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் தமிழர்களின் ஒரு பகுதியாரின் தெய்வமாகிய சிறீ ரெங்கநாதர் ஒர் துலுக்கப்பெண்ணை மணந்து நீண்ட நாளாக வாழ்த்துவரும் பொழுது அவரது அடிச் சுவட்டைப் பின்பற்றி ஒழுகும் மக்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுப்பதும், எதிர்ப்பதும் நியாயமாகுமா?
உண்மையில் அது தங்கள் மதத்திற்கு விரோதமாயிருக்கிறது என்று முஸ்லிம்கள் கருதினால் சிறீ ரெங்கநாதர் செய்கையைத் தண்டித்துப் பெருங்கிளர்ச்சி செய்து சிறீ ரெங்நாதர் விவாகரத்து செய்து கொள்ளும்படி இந்தப் பிரிட்டிஷ் கோர்ட்டிலோ அல்லது தேவலோகக் கோர்ட்டிலோ ஒரு தாவா தொடர்ந்து விவாஹரத்து வெற்றி பெற்று விட்டால் துலுக்க நாச்சியார் விக்ரகத்தை சிறீ ரெங்கம் கோவிலிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் துலுக்கப்பெண்ணும் இந்து ஆணும் கலப்பு மணம் செய்து கொள்ளலாம் என்ற விஷயத்தை எவரும் பேசவே பயப்படுவார்கள் எனவே சிறீரெங்கநாதரை விவாஹரத்து செய்யும்படி  கோர முஸ்லிம்கள் முன் வருவார்களா?   


-விடுதலை,1.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக