பக்கங்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2017

சிந்தனை முத்துகள்


எது சோஷலிசம்? - தந்தை பெரியார்



மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சோஷலிச உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணம் பிறவியில் மேல் - கீழ் எனும்படியான ஜாதிபேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு ஜாதிபேத ஒழிப்பு என்ற சமுதாய சோஷலிசம் பற்றிச் சொல்லி, பிறகு பொருளாதார சோஷலிசம் பற்றி சொன்னால்தான் உணர்ச்சி உண்டாக்க முடிகிறது.

ஆகவே பொருளாதார சோஷலிசத்துக்காக வேண்டியே ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், ஜாதியை ஒழிப்பதற்கு அதன் ஆதாரமாகவுள்ள மதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகிறோம்.

மனிதரில் சிலரை மேல் ஜாதியாக்கி பாடுபடாமல் ஊரார் உழைப்பில் உண்டு கொழுக்கும்படியும், மற்ற பலரைக் கீழ் ஜாதியாக்கி அவர்கள் பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாளியாய், கட்டக் கந்தையற்று குந்த குடிசையற்று இருக்கும் படி செய்தது கடவுள் என்றால் அக்கடவுளைவிட அயோக்கியன் உலகில் வேறு யார் இருக்க முடியும்? அப்படிப்பட்ட அயோக்கியக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், விடுதலை -16.9.1970

யாருக்கு லாபம்?

பரமசிவம் அருள்புரிய வந்து வந்து போவார்:
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தானமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும் போகும்!
மகரிஷிகள் கோயில்களும் - இவைகள் கதாசாரம்,
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

- புரட்சிக்கவிஞர், திராவிடன் 14.1.1950, பொங்கல்மலர்

வளர்ச்சியைத்
தடுப்பது எது?



பல நூற்றாண்டாக ஜாதி முறை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடு என்றே கருதுகிறேன். அதுவே இந்தியாவைப் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்தியது மட்டுமின்றி, அது இந்தியாவை கேவலபடுத்திக் காட்டியதுடன் வெளிநாட்டுப்படை எடுப்பாளரிடம் நம்மை அடிமைகளாக்கி விட்டது. ஏனெனில் ஜாதியே நம்மைப் பிளவுபடுத்தும் சாதனமாகும். பெரும்பாலான நமது மக்களை சாதி கேவலப்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்தான் இக்கேவலத்தைச் சுமத்தினர் பலர். இக்கேவலத்தை ஏற்றுக் கொண்டோம். இன்றைய உலகத்தில் ஜாதிக்கு இடமே கிடையாது. அது இன்று இருக்குமானால் நமது சோஷலிச - சமதர்ம -லட்சியத்தை நாம் அடைவதைத் தடைப்படுத்தவே செய்யும்.

இந்தியா தனது மதமவுடிகங்களை களைந்து, விஞ்ஞான பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங்களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச்சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.  -ஜவகர்லால் நேரு

மதத்தின் குத்துச்சண்டை!

உலகக் குத்துச்சண்டை மாவீரனாகிய முகம்மது அலியையும் மதத்தின் கொடுமை விடவில்லை. கிருஸ்துவக் குடும்பத்திலே பிறந்த அவர், தன்னை கறுப்பு மனிதன் என்று வெள்ளை இனம் இழித்துப் பழித்ததைக் கண்டு தாள முடியாமல், தன்னை முஸ்லிமாக மாற்றிக் கொண்டார். மதம் மாறி விட்டார் என்றதும் மதவாதிகளின் ஆத்திரம் பன்மடங்காக ஆகிவிட்டது. எப்படியும் அலியை ஒழித்துக் கட்டுவது என்று திட்டம் தீட்டினார்கள்.

வியட்நாம் போரில் அவரைக் கட்டாயமாக அமெரிக்க இராணுவத்தில் சேர உத்திரவு பிறப்பித்தனர். அலி மறுக்கவே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலே தள்ளப்பட்டார்.

சிந்தனை முத்துகள்

ணிபொருத்தமில்லாதவைகளைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவன் ஆதாரமின்றி பேசுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளுவதுதான் மத நம்பிக்கை.

- ஆம்ப்ரோசுபியர்ஸ் - அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்.

சந்நியாசி என்பவன் திருத்தியும் புகழ்ந்தும் கூறப்படும் ஒரு மாண்டுபோன பாவி!

ஓர் எசமான், ஓர் எசமானி, இரண்டு அடிமைகள். ஆக மொத்தம் இரண்டே பேர் கொண்ட சமூகத்தின் நிலைமை - அதுதான் திருமணம்.

மன்னிப்புக் கேட்பது மீண்டும் தவறு செய்வதற் காகப் போடப்படும் அடிக்கல்.

சமாதானம் என்பது பன்னாட்டு விவகாரங்களில் இரண்டு போர்க்காலங்களுக்கு இடையே உள்ள ஏமாற்றுங் காலம்.
-ஜோஷ் பில்லிங்ஸ் என்னும் புனைப் பெயர் கொண்ட அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்.

மதங்கள் பைத்தியக்காரத்தனமாகப் காமச் சுவைகளையே சுற்றி வருகின்றன.
- கூர்மான்ட் ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்

குற்றமற்றவனாக இருப்பதை விட குற்றம் கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
- பெஞ்சமின் டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்.

மருத்துவன் நோயைத் தீர்க்கிறான். ஆண்டவன் நன்றியைப் பெறுகிறான்.
-பீடர்ஃபின்லே, அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்

பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்காமலேயே மத வழிபாட்டிலுள்ள அபத்தங்களை அம்பலப் படுத்தலாம்.
- அனடோல் ஃரான்ஸ் - அமெரிக்க எழுத்தாளர்

அற்புதம் என்பது காணாதவர்கள் கண்டதாகச் சொன்னதைக் கேட்பவர்கள் வர்ணிக்கும் கற்பனை நிகழ்ச்சியே.

குழந்தைக்குப் பாடம் சொல்லித் தருவதன் குறிக்கோள் - ஆசிரியர் துணையின்றி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான்.

மனிதன், ஆண்டவனின் ஓர் அற்புதப் படைப்பு அப்படிச் சொல்வது யார்? மனிதன் தான்!
- எல்பர்ட்ஹப்பர்ட், அமெரிக்க எழுத்தாளர்

மதம் மனிதனை நாகரிகம் அடையச் செய்யவில்லை. மனிதன் தான் மதத்தை நாகரிகப்படுத்தி வருகிறான்.
- ராபர்ட் க்ரீன் இங்கர்சால்

என்ன பரிதாபம்! ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று யாருக்குமே தெரிவதில்லை - பிரம்மச் சாரியைத் தவிர!
- ஜார்ஜ் கோல்மன், ஆங்கில நாடகாசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக