பக்கங்கள்

சனி, 15 பிப்ரவரி, 2020

கண் எதிரே கன்னக்கோலா? தில்லு முல்லா? ( வள்ளலார்)

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் தைப்பூசம் என்பதையொட்டி ஏடுகள் பலவும் அவரைப்பற்றி பலவாறாக எழுதுகின்றன.

‘இந்து தமிழ் திசை’ தனது ஆனந்தஜோதி பகுதியில் (8.2.2020) இவ்வாறு எழுதுகிறது.

முருகப் பெருமானும் சிவபெருமானும் குருவாக வாய்க்கப்பெற்ற அருளாளர், சிவபெருமானே அடியெடுத்து தந்து பாடுமாறு பணிக்கப்பட்டவர். திருவருட்பாவின் ஈற்றடியைச் சிவபெருமானே முடித்துத் தந்த பேறு பெற்றவர். திருவொற்றியூர் வடிவுடையம்மன், அண்ணியார் வடிவில் வந்து பசிப்பிணி நீக்கிய பேறு பெற்றவர் என்றெல்லாம் சகட்டு மேனிக்கு அள்ளிக் கொட்டியுள்ளது ‘இந்து தமிழ் ஏடு’.

தனது ஆறாம் திருமுறையில் இந்த மூடநம்பிக்கைகளையெல்லாம் தகர்த்து தவிடு பொடியாக்கியவர் வள்ளலார் என்பதுதான் உண்மை.

இதோ வள்ளலார் பேசுகிறார்.

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுராணங்கள்

விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்

ஓதுகின் ற சூது அனைத்தும் உ ள வனைத்தும் காட்டி

கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும்

கண் மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக

அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

இச்சாதி, சமய , விகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல்

சாதி, குலம், சமயமெலாம் தவிர்த்து எனை

தனித்த திரு அமுதளித்த தலைமைப் பொருளே

நால் வருணம் ஆச்சிரமம் ஆசாரம் முதலா

நவின்ற கலைச் சரித மெலாம் பிள்ளை விளையாட்டே

சாதி சமயங்களிலே விதி பல வகுத்த

சாத்திரக் குப்பைகள் எலாம் பாத்திரம் அன்று எனவே

சாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு அறியேன்

சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்ட றியேன்

இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்

இவை முதலா இந்திர ஜாலம் கடையா யுரைப்பார்

மயலொரு நூல் மாத்திரந்தான் ஜாலமென அறிந்தார்

மகனே நீ நூலனைத்தும் ஜாலமென அறிக!!

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போல் காட்ட நேராவே

“சாதி மதம் தவிர்த்தவரே அணையவாரீர்! என்று இவ்வாறாக வடலூரார் பதறிப்பதறி அழுதார்கள். சமூகத்தைக் கண்டு கண்ணீர் வடித்தார்கள். மூடப்பழக்க வழக்கங்களை அறவே கண்டித்தார்கள். ஆனால் அவருடைய பொன்னே போன்ற கருத்துகளை இன்று நாட்டில் செயல் முறையில் செய்ய ஒருவரேனும் வந்துளரா? ஒரே ஒரு பெரியார் - ஈரோட்டு இராமசாமியைத் தவிர்த்து வேறு எவர் நாட்டில் வெளியில் வந்து, பொதுமக்களிடைக் கூறினார்கள்? கோயில்களில் தேங்காய் உடைப்பதும், புஷ்பங்களால் அலங்கரித்து அழகுபடுத்துவதும் இறைவனை வணங்கும் வழிகள் அல்லவே” என்றார் வடலூரார்.

“தெய்வத்திற்குப் பலியிடும் கொடிய வழக்கத்தைச் சுவாமிகள் கண்டிப்பாகத் தடுத்து வந்தார்கள், அத்துடன் தேங்காயைக்கூடப் பலியிடுதல் கூடாது என்றும், ஆண்டவரை வாயார வாழ்த்துவது தவிர, புஷ்பத்தால் அர்ச்சித்தல் முறையான தல்லவென்றும், அபிஷேகாதிகள், புஷ்ப அலங்காரங்கள், தீப அலங்காரங்கள் முதலியனவும், வாகனங்களில் ஏற்றி ஆடம்பரங்களுடன் உலா வருதல் முதலியனவும், சன்மார்க்கத்துக்கு உரியன அல்லவென்றும்; இப்படிப்பட்ட ஆரவாரங்கள் கூடாவெனவும், அரிதிற்கிடைக்கும் பணத்தை ஏழைகளின் பசி நிவர்த்திக்கே உபயோகிக்க வேண்டுமென்றும் அடிக்கடி மெய்யன்பர்களுக்கு உபதேசித்து வந்தார்கள், (வள்ளலார் திவ்ய சரித்திரம்)

அறிவுக்கும் - அன்புக்கும் - வாழ்க்கைக்கும் சிறிதும் ஒத்திராத மூடப்பழக்கங்களை அடிகளார் அறவே கண்டித்தார்கள்.

மதங்கள் -  சமயங்கள் - இவற்றை இப்படித்தான் கண்டித்தார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. அவ்வளவு வேகம் அவருடைய உள்ளத்தில் இருந்ததென்பதை அவருடைய பாடல்கள் எளிதில் எடுத்து இயம்பிவிடுகின்றன.

மதமென்று சமயமென்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்றதேவர் என்றும் மற்றவர்கள் வாழும்,

பதமென்று பதமடைந்த பத்தர் அனுபவிக்கும்

பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரித்த

விதமொன்றும் தெரியாதே மயங்கினேன்

மதத்திலே அபிமானங்கொண்டு உழல்வேன்

வாட்டமே செயு கூட்டத்தில் பயில்வேன்

சாதியே மதமே வாழ்க்கையே யென

வாரிக் கொண்டலைந்தேன்

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்

கூட்டமும், அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்,

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்

காட்சிகளும் காட்சி தரும் கடவுளரும் எல்லாம்

- பிள்ளை விளையாட்டு

“மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி என்று பெயரிட்டுக்கொண்ட பெரியவர்களும், உண்மையறியாது, சமய வாதிகளைப் போலவே ஒன்று ‘கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆன தினால், நீங்கள் அஃது ஒன்றையும் நம்ப வேண்டாம்’’ (அருட்பா)

-கலி.பூங்குன்றன்

- விடுதலை ஞாயிறு மலர் 15 2 20

1 கருத்து:

  1. பகுத்தறிவு பகலவன் விட்டுசென்ற பணியை நேர்த்தியுடன்(இக்கால சூழலில்)செய்து வருகின்றீர்கள்.நன்றி!

    பதிலளிநீக்கு