சென்னையில் 5.6.1983 அன்று பகுத்தறிவாளர் கழகம் நடத்திய சங்கராச்சாரி _- யார்? விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் பேச்சிலிருந்து:
நான் மொழி ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், இலக்கிய ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், வரலாற்று ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், ஏன் சமய ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும் உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாத சில உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஸ்மார்த்தர்கள்
இந்தியாவிலே சைவ ஆகமங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் ஸ்மார்த்தர்கள். இவர்கள் கடவுள் உண்டு என்று சொல்லக்கூடிய சைவம், வைணவம் ஆகியவற்றோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.
ஒரு செய்தியைச் சொன்னால் எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள், இந்த பிராமணர்கள்தான் ஆதிசங்கரரைக் கொன்ற-வர்கள். நாங்கள் ஏழுபரம்பரையாக ஆதிசங்கரரைப் பின்பற்றிய குடும்பத்தில் வந்தவர்கள். நான் எளிதாக பெரியார் இயக்கத்தில் சேர்ந்ததற்குக் காரணமே- ஆதிசங்கரருடைய கொள்கைகள்தான்.
சங்கராச்சாரியார் கடைசியில் எழுதியது மனோசாப்பஞ்சகம் என்பது. அது அய்ந்து சுலோகங்கள் அடங்கியது. அதில் ஒரு சுலோகம் கடவுளை எதிர்ப்பது;- கடவுள் இல்லை என்று மறுப்பது.
இரண்டாவது சுலோகம் மதச் சின்னங்கள் அணிவது தவறு என்பது, மூன்றாவது உருவ வணக்கம் தவறு என்பது, இன்னொன்று ஜாதிகளை எதிர்ப்பது; இப்படி அய்ந்து கருத்துகள்.
இவை திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கருத்துகளாகும். இதை ஆயிரமாண்டுகளுக்கு முன்னே சொன்னவர் ஆதிசங்கரர். இதுதான் அவருடைய செயல்.
தன் 32 ஆவது வயதில் புதைக்கப்பட்டார்
ஆதிசங்கரர் இந்நூலை எழுதிய பின் உயிரோடு சமாதியில் உட்கார வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார் என்று நான் கேள்விப்படுகிறேன். அவர் சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ளது.
இதைப்போல்தான் அண்மையில் திருவருட்பா பாடிய வள்ளலாரும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் என்று சொல்கிறார்கள். அதேபோல் திருஞான சம்பந்தரும் குடும்பத்தோடு எரிக்கப்பட்டார் என்று நான் நம்புகிறேன். ஸ்மார்த்தர்களால் தங்கள் நலத்திற்கு எதிரி என்று கருதி எதிர்த்து அழிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் உண்டு.
பெண்களைக் கொடுக்கத் தயங்காதவர்கள் அதைவிட முக்கியமானது. ஆட்சியிலுள்ள-வர்கள் தங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய பெண்களை அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தயங்காதவர்கள் இந்த ஸ்மார்த்தர்கள்.
அக்பருடைய அரண்மையில் _ ஜஹாங்கீர் ஷாஜஹானுடைய அரண்மனைகளிலே கண்ணனுடைய கோயில் இருந்தது. ஏனென்றால், அவர்களுடைய பல மனைவியர்-களில் தலைமை சான்ற ஆற்றல் வாய்ந்த மனைவியர்கள் இந்துக்கள்.
வெள்ளைக்காரரை எதிர்த்து சிப்பாய் கலகம் அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர் என்று சொல்கிறார்களே; அதைச் செய்தவர்கள் பெரும்பாலும் இந்த ஸ்மார்த்தர்கள்தான்.
சிவாஜி பரம்பரையை அழித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள்.
என்னை ஆதிதிராவிடன் என்று நினைத்தே நடத்தியிருக்கிறார்கள். சைவர்களுடைய ஓட்டல்களில் என்னை வெளியிலே தள்ளி சாப்பிட வைத்திருக்கிறார்கள். நாடார்களுடைய ஓட்டல்களிலே என்னை வெளியிலே தள்ளி உண்ண வைத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் என்னுடைய சுயமரியாதை அனுபவங்கள், வாழ்க்கை வரலாறு எழுதினால்தான் இதையெல்லாம் எழுத முடியும்.
அதேபோல், ஆற்றுக்குக் குளிக்கப் போனால் அங்குள்ள பிராமணர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்.
இங்கே ஒரு சூத்திரன் இந்தி கற்றுக் கொடுக்க வந்து விட்டானாம் என்று.
இராஜகோபாலாச்சாரியார் ஆட்சியிலே இருந்தபோது ஒரு நான்-பிராமின் இந்திக் கற்றுக் கொடுப்பதா என்று ஒரு ஜி.ஓ.வே. போட்டார்கள்.
அது திருநெல்வேலி இந்துக் கல்லூரியைத் தவிர வேறு எந்தக் கல்லூரிக்கும் செல்ல-வில்லை. நான் பக்கத்திலே உள்ள மற்ற கல்லூரிகளிலெல்லாம் இந்த ஜி.ஓ. வந்ததா என்று விசாரித்தேன். வரவில்லை எனச் சொல்லிவிட்டார்கள்.
ஒரு தடவை எனக்கும், அற்புத உலகம் என்ற நூலை எழுதிய அப்புசாமி அய்யருக்கும், நானே தலைவனாயிருந்த சங்கத்தில் பாராட்டுவிழா நடத்தினார்கள். அதற்குத் தலைமை தாங்க சி.பி. இராமசாமி அய்யரை அழைத்திருந்தார்கள். சி.பி.இராமசாமி அய்யர் வரும்பொழுது நாங்கள்இருவரும் முன் வரிசையிலே இருந்தோம்.
பேசிக்கொண்டே வந்த சி.பி.இராமசாமி அய்யர், அப்புசாமி அய்யரிடம் கைகுலுக்கி அய்ந்து நிமிடம் பேசிவிட்டு நேரே சென்று விட்டார்.
எனக்கு மேடையில் இடம் தராத சர்.சி.பி.இராமசாமி அய்யர்
மேடைக்குச் சென்றதும் அப்புசாமி அய்யரைக் கூப்பிட்டு பக்கத்திலமர்த்திக் கொண்டார்: அவர் என்னைக் கூப்பிட வில்லை. வலது பக்கம் அப்புசாமி அய்யர் இருந்தார், எனவே, விழா நடத்தியவர்கள் இடது பக்கம் ஒரு நாற்காலியைப் போட்டு என்னை அழைத்தார்கள்.
உடனே சி.பி.இராமசாமி அய்யர் கூட்டத்திலிருந்த ஒரு பிராமணப் பெண்ணை அழைத்து அதில் அமரச் செய்து கொண்டார். கூட்டத்திலிருந்தவர்கள் இன்னொரு நாற்காலியைப் போட்டனர். அதிலும் மற்றொரு பிராமணப் பெண்ணைக் கூப்பிட்டு அமர்த்திக் கொண்டார். இப்படி எனக்கு உட்கார இடம்விடாமல் செய்தார்.
நானே பின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லி பின்பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். மேடையில் பேசும்போது சி.பி.இராமசாமி அய்யர் என்னுடைய பெயரைச் சொல்லவில்லை. பாராட்டும்போது என்னுடைய பெயரைப் பாராட்டவில்லை. மாலை போடும் போதும் எனக்கு மாலை போடவில்லை.
அதேபோல், நான் பொன்னியில் ஆசிரியராக இருந்தபோது இராஜகோபாலாச்சாரியாரிடம் வாழ்த்து வேண்டுமென்று கேட்டேன். பதிலே இல்லை.
எப்படியும் சந்தித்து விடவேண்டுமென்று ஒரு இடத்தில் சந்தித்தபொழுது எனக்கு வாழ்த்தும் வழங்கவில்லை என்று சொல்லி-விட்டார். இதிலிருந்து பிராமணர்கள் நமக்கும், நம் தமிழ் மொழிக்கும் எவ்வளவு கேடு செய்பவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பன்மொழிப் புலவரவர்கள் பேசினார்கள்.
(‘விடுதலை’ - 15.6.1983 - பக்கம் 3)
ஆரியர் சூழ்ச்சி : ஆதி சங்கரரை கொன்றவர்களும் ஆரிய பார்ப்பனர்களே!
- உண்மை இதழ், 16-31.5.21