• Viduthalai
தேவதத் பட்நாயக்
[கி.மு. நூறாம் ஆண்டைச் சேர்ந்த நான்கு கைகள் கொண்ட ஒரு இந்து கடவுள் விஷ்ணுவின் தெய்வச் சிலை மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மல்ஹார் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது]
1800 ஆண்டுகளுக்கு முன்னர் வார்க்கப்பட்ட குஷான் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்து நாணயங் களில், நிறைய கொம்புகளைக் கையில் வைத்திருக்கும் ஒரு பெண்ணின் உருவத்தை நம்மால் காண இயலும். ரோமாயர்களின் பெண்தெய்வம் ஃபார்சுனாவுடனும் (Fortuna), கிரேக்கர்களின் பெண் தெய்வம் டைச் சுடனும் (Tyche), மத்திய ஆசியாவைச் சேர்ந்த அர்டாச்ஷோவுடனும் (Ardochsho) புத்த மதத்தைச் சார்ந்த ஹரிதியுடனும் (Hariti) இந்து மத பெண் கடவுள் லட்சுமி என்ற இந்த பெண் உருவம் அடை யாளம் காணப்படுவதை நாம் பார்க்கலாம். தொடக்க கால புத்த ஸ்தூபங்களிலும், பதக்கங்களிலும் லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இன்றைய இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் காணப்படும் உருவத்தைப் போலவே, தாமரை மலர்கள் நிரம்பியிருக்கும் ஒரு குளத்தில், யானைகளால் சூழப்பட்டு, ஏராளமான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நின்று கொண்டு இருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கிடையே மிகமிக முக்கியமானதொரு வேறுபாடு உள்ளது. லட்சுமியின் பழைய சித்திரத்தில் இரண்டு கைகளைக் கொண்டவராகத்தான் அவர் காட்டப்பட்டுள்ளாரே யன்றி, இன்றைய உருவங்களில் இருப்பது போல நான்கு கைகளைக் கொண்டவராகக் காட்டப்பட வில்லை.
1,700 ஆண்டுகளுக்கு முன்னர் குப்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், மக்களிடையே புத்த மதத்தின் செல்வாக்கும் புகழும் பின்னுக்கு தள்ளப்பட்டபோது, புராணங்களின் மூலம் தங்களுக்கு ஒரு மாற்று விளக்கத்தை அளிக்கும் வேதகால வழியை மறு படியும் நடை முறைப்படுத்தியபோதுதான் இரண்டு கைகள் கொண்ட லட்சுமியின் உருவம் நான்கு கைகள் கொண்ட லட்சுமியாக உருவ மாற்றம் பெற்றது. இந்த மாற்றம் குஷான் வம்ச அரசர்களின் ஆட்சிக் காலத் தொடக்கத்திலேயே தொடங்கியது. இந்து கலையி னால் நம்பத் தகுந்ததொரு வழியில் ஏற்பட்ட திருப்பம், நான்கு கைகள் கொண்ட இத்தகைய தெய்வங்களின் எழுச்சியினைக் குறிப்பதாக அமைந்தது.
இரண்டுக்கும் மேற்பட்ட
கைகள் இருக்கவில்லை
இந்தியாவில் முதன் முதலாகக் கலை என்பது ஹரப்பாவில் இருந்து தோன்றியதுதான். இங்கு, தவம் செய்யும் மனிதர்களின் உருவங்கள் அல்லது புலியிடமிருந்து தப்பி ஓடும் மனிதர்களின் உருவங்கள், அல்லது எருதுகளின் மீது தாவி ஏறும் மனிதர்களின் உருவங்கள், ஊர்வலமாகப் பெண்கள் செல்லும் உருவங்கள், அல்லது வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கூறி முடிக்கும் மனிதர்களின் உருவங்கள் ஆகிய வற்றை நாம் பார்க்கலாம். இந்த உருவங்களில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இரண்டு கைகள் மட்டும்தான் இருந்தன. ஹரப்பாவின் காலத்துக்குப் பிறகு 2,000 ஆண்டுகள் கழிந்த பிறகு, குறிப்பிடத் தக்க அளவில் நாம் காந்தாரக் கலையையும் மதுரா கலையையும் உருவாக்கிப் பின்பற்றி வந்துள்ளோம். பெரும்பாலும் அவற்றில் உள்ளவை, புத்தரின் வாழ்க்கை வரலாற்றில் இருக்கும் கதைகளைக் கூறுவதாகவோ அல்லது ஜடகா கதைகளில் இருந்து உற்சாகம் பெற்ற நாடோடிக் கதைகளாகவோ இருப்ப வையாகும். மதுரை கலையில் ஒரு புத்தகத்தைக் தனது கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் சரஸ்வதியின் தொடக்க கால உருவத்தை ஒரு ஜைனர் கோயில் இடத்தில் இருந்து பார்க்க முடிகிறது. அவருக்கும் இரண்டு கைகள் மட்டுமே இருக்கின்றன. குதிரைகளின் சிறகுகள், தலைகள் மற்றும் உடல்கள் கொண்ட விண்ணிலிருந்து வந்தது போன்ற உயிரினங்களை இங்கு நாம் காண முடிகிறது. இவை கிரேக்க மற்றும் பெர்சியன் கலை களின் செல்வாக்கினை பெற்றிருந்தது என்பது தெளி வாகத் தெரிகிறது. ஆனால் நான்கு கைகள் கொண்ட எந்த உயிரினத்தையும் அங்கு நம்மால் காண இயலவில்லை.
இந்து கடவுள்களின் தொடக்க கால உருவங்கள் நாணயங்கள் மீது காணப்படுகிறது. கி.மு.200 ஆம் நுற்றாண்டை சேர்ந்த இந்திய, கிரேக்க நாணயங்களில் சக்கரத்தை ஏந்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் படங்கள் காணப்படுகின்றன. அவருக்கும் இரண்டு கைகள்தான் உள்ளன. கி.பி.200 ஆம் ஆண்டில் அதாவது 2ஆம் நூற்றாண்டில் குஷான் வம்ச அரசர் களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் திரிசூலம் ஏந்திய சிவனின் உருவம் ஒன்று காணப்படுகிறது. அதன் பல உருவங்களில் அவருக்கு நான்கு கைகள் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரப் பிரதேசத்தில் குடிமல்லம் என்ற இடத்தில் கிடைத்த கி.மு. 300 ஆம் ஆண்டைச் சேர்ந்த காலத்திய மிகப் பழைய சிவலிங்க உருவத்துக்கு இரண்டு கைகள்தான் உள்ளன. ஒரு எருமையைக் கொல்வது போன்ற, குஷான் வம்ச அரசர்கள் காலத்தைச் சேர்ந்த தொடக்க கால துர்காவின் உருவத்தை நம்மால் காண முடிகிறது. அந்த துர்கா உருவத்திற்கும் பல கைகள் உள்ளன. தென்மேற்கு சீனாவில் இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்த குஷான் வம்சத்தினருக்கு எந்த ஒரு மதத்தின் சார்பும் இருக்கவில்லை. அதனால்தான் அவர்களது சாம்ராஜ்யத்தின் மேற்கத்திய எல்லை ஓரத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் கிரேக்க, ரோமானிய, சைதின்ய செல்வாக்கு பெற்றவையாகவும், அவர்களது சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லை ஓரத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் புத்த மதம், மற்றும் இந்து மதங்களின் செல்வாக்கு பெற்றவையாகவும் இருந்தன. குப்தர் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத் தில் இருந்த புத்த மத செல்வாக்கும் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறையத் தொடங்கியது.
மத்திய பிரதேச மாநில மல்ஹார் என்ற இடத்தில் இருந்து கிடைத்த, நான்கு கைகள் கொண்ட விஷ்ணு உருவம் ஒன்று, கி.மு. 100 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மிகமிகப் பழைய இந்து தெய்வ உருவ வரைக் கலை என்று காட்டுகிறது. குப்தர் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த தியோகர் இந்து கோயில் ஒன்றில் இது வெகு வெளிப்படையாகத் தெரிவதாக இருந்தது. நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவை, கருட வாகனத்தில் பறந்து செல்வது போலவும், பாம்புப் படுக்கையில் படுத்திருப்பது போலவும், ஒரு ஆசிரியராகவும், மூன்று வடிவங்களிலும் நாம் காணலாம். அவர் படுத்திருக்கும்போது லட்சுமி அவரது கால் பக்கம் உட்கார்ந்து இருப்பதாகக் காணப் படுகிறது. ஆனால், லட்சுமிக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன.
தெய்வ வடிவங்களுக்கு இவ்வாறு பல கைகளும், பிற்காலத்தில் பல தலைகளும் முளைக்கச் செய்த காரணத்தால், சராசரி மனித உயிர்களில் இருந்து இயற்கைக்கு மாறான உயிரினங்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. புத்த மதக் கலையில், பிரம்மாவும், இந்திரனும் புத்தரை வணங்குவது போலவே பெரும்பாலும் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு சாதாரண அரசராகவோ அல்லது பூசாரியாகவோ இருக்கக்கூடும் என்பதை அறிந்து கொள்வது ஒருவரால் எவ்வாறு முடியும்? பிரம்மாவின் தெய்வீக அந்தஸ்தையும், இந்து மத வேர்களைப் பற்றியும் உறுதி செய்வது போல பிரம்மா நான்கு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். தொடக்க கால ஜைனக் கலையில், தீர்த்தங்கர ரிஷபதேவர் நான்கு திசைகளையும் எதிர்கொள்வது போன்ற நான்கு உருவங்களை நாம் காண்கிறோம். ஆனால், இந்து கலையிலோ, சிவனின் தலையை நான்கு பக்கங்களிலும் காட்டும் சதுர்முக லிங்கத்தை நாம் காண்கிறோம். ஜைனக் கலையில், நான்கு கைகள் கொண்ட யக்சர்களையும் யட்சிணிகளையும் நாம் காணலாம். ஆனால், தீர்த்தங்கரருக்கு எப்போதுமே இயற்கைக்கு மாறான, இயற்கைக்கு மீறிய வடிவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அவரது கணுக்கால்கள் வழக்கத்தை விட சற்று பெரிதாக முழங்கால் வரை இருந்தன. அதுவே அவரது சிறப்புக்கான அடை யாளம்.
தெய்வச் சிலைகள் எவையும்
இங்கு இருக்கவில்லை
பல கைகள், தலைகள், கால்கள் கொண்ட ஒரு கடவுள் என்ற கருத்து முதன் முதலாக வேத இலக்கியத்தில் காணப்படுகிறது. மேலும் அது பகவத் கீதையிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணர் தனது பேருருவை எடுத்து, தனது வடிவை விரிபுடுத்திக் கொண்டும், தனது தலைகள், கைகள், கால்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவி நிற்கிறார். வேதகால பூசாரிகள் தங்கள் கடவுள்களை மனக் கண்ணினால் கண்டனரே அன்றி, தங்கள் தெய்வங்களை கல் அல்லது உலோகத்தில் சிலைகளாக ஆக்கிக் கொள்ளவில்லை. உள்ளூர் பழங்குடி மக்கள் அவர்களது கடவுள்களுக்கு வடிவம் அளித்தனர். என்றாலும், பாறைகள், மரங்கள், ஆறுகள், உணவு மற்றும் தண்ணீரால் நிரப்பப்பட்ட சட்டிகள், கூடைகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் தெய்வங்களை அடையாளம் கண்டு வணங்கினர். மனிதர்களின் உடல் அமைப்பும் தன்மையும் கொண்ட கடவுள்கள் மனித வடிவில் வந்தது (அவதாரம் எடுத்தது) வெகு காலத்துக்குப் பின்னர் நேர்ந்தது. பலதலைகள், கைகள் கொண்ட கடவுள்களின் உருவங்கள் வந்தது அதற்கும் வெகு காலத்துக்கு பின்னர் நேர்ந்தது. மாயோன், சீயோன், பெருமாள் போன்ற கடவுள்களைப் பற்றி , அவர்களது உடல் நிறம், அமைப்பு, அவர்களது வாழ் விடம், அவர்களது பதாகைகள், புனித விலங்குகள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. என்றாலும், பல கைகள் இருந்ததைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் அவற்றில் இல்லை.
பல தலைகளும், கைகளும் கொண்ட இயல்புக்கு மாறான உயிரினங்களைப் பற்றிய கருத்து முதலில் மஹா யானாவாலும் பின்னர் தந்திரிக் பள்ளிகளாலும் புத்தமத கலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வடிவம், நிர்வாண நிலையை இன்ன மும் அடையாத போதிசத்துவருடன் தொடர்பு படுத்தப்பட்டது. துன்பற்றுக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பல உயிர்களுக்கு உதவுவதற்காக பல தலைகளையும், கைகளையும் அவர் முளைக்கச் செய்தார். புத்தரைப் போல நிர்வாண நிலையை அவர் அடைந்துவிட்டால், அவர் மிகப் பெரிய வடிவத்தைப் பெறக்கூடும்; என்றாலும் அவர் இரண்டு கைகளை மட்டுமே வைத்திருந்தார்.
சரஸ்வதி என்று அடையாளப்படுத்தப்பட்ட பெண் தெய்வம் சாரதாவை வழிபடுவதை ஆதி சங்கராச்சாரியா, ஏறக்குறைய 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கி நிலைப்படுத்தியதாகக் கூறப்படு கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் பெண்ணின் அடையாளங்கள், அவர் நான்கு கைகள் கொண்டவர் என்று காட்டுகிறது. இந்த மர்மத்தை எவ்வாறு நாம் முடிவுக்குக் கொண்டு வரமுடியும்? சங்கரரின் செல்வாக்கினால் இந்துவாக ஆன புத்தமத பெண் தெய்வமா அவர்? பிரசன்ன புத்தா அல்லது ரகசிய புத்தர் என்று அவரது எதிர்ப்பாளர்களால் விவரிக்கப்படுபவர் சங்கரர். இந்திய மண்ணில் இருந்து புத்த மதத்தையே மறையச் செய்வதில் ஒரு மிக முக்கியமான பங்களிப்பை சங்கரர் அளித்துள்ளார். எதையுமே நிச்சயமாக எப்போதுமே நம்மால் அறிந்து கொள்ள முடியாது.
ஆனால், நாம் இன்று அறிந்திருப்பதெல்லாம், லட்சுமி முதல் கணேசர் மற்றும் சரஸ்வதி வரையிலான கடவுள்கள் எல்லாம் எப்போதுமே நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ராமர் அல்லது கிருஷ்ணர் போன்ற மனித வடிவில் அவதாரங்கள் எடுத்த போது அவர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருந்தன. கிறித்துவக் கலையில் தெய்வத்தின் தலையைச் சுற்றி எழுந்த ஒளிவட்டத்தின் வேலையை இந்து கலையில் நான்கு கைகள் செய்கின்றன. அதாவது, யார் தெய்வீகமானவர், யார் இயல்புக்கு மேலானவர், இயற்கைக்கு மாறானவர், மற்றும் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை பார்ப்பவர்களிடையே விரைவில் நிலைநாட்டும் வேலையே அது.
நன்றி: 'தி இந்து' 10-10-2021
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக