பக்கங்கள்

ஞாயிறு, 28 நவம்பர், 2021

மகாத்மா' ஜோதிராவ் புலே


உலகமே மகாத்மா என்றால் காந்தி என்று பேசிக்கொண்டு இருந்த நேரம்; இந்தியாவில் 1954ஆம் ஆண்டு  மராட்டிய மாநி லத்தில் மகாத்மா புலே என்ற மராட்டி திரைப்படம்  வெளியானது.

அப்படத்தின் அறிமுகக் காட்சியில் மராட்டி மற்றும் ஆங்கிலத்தில் இப்படி எழுதப் பட்டிருக்கும்.  "இந்திய மண்ணில் வேறு எங்குமில்லாத ஜாதியம், ஒடுக்குமுறையாக, சுரண்டல் முறையாக, அடிமைத்தனமாக மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. பார்ப்பனீய ஆதிக்கத் தின் நால்வருணப் பேதத்தின் உச்சபட்சக் கொடுமைகளை அனுபவித்த மாநிலம் மராட்டிய மாநிலமாகும்.  அங்கே ஆதிக்க ஜாதியினரால் சூத்திரர்கள். ஆதி சூத்திரர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளானார்கள். கொடுமைகளுக்கு எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட மக்களினம்-மகர். மாங் ஜாதியினர் வீதிகளில் பகலில் நடக்க முடியாது; நடக்கவும் கூடாது. ஏனெனில் அவர்களின் நிழல் பார்ப்பனர் களுக்குத் தீட்டாகும். பார்ப்பன பேஷ்வாக்கள் ஆட்சியில் பார்ப்பனீய ஆதிக்கம் மிக வலிமையுடன் வேரூன்றியிருந்தது. மராட்டியத்தில் பிறந்த மகாத்மா புலேவின் கதை" என்று அத் திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கும்.

1848இல் புனாவில் ஒரு 'சூத்திர' வகுப்பைச் சேர்ந்த படித்த இளைஞன், தன்னுடைய பார்ப்பன நண்பனின் திருமண மாப்பிள்ளை வரவேற்பில் கலந்து கொண்டான். அப்பொழுது அவ்விளைஞன் மாலி இனத்தைச் சார்ந்த சூத்திரன் என்று பார்ப்பனர்கள் கண்டு கொண்டனர். அவர்கள் கடுஞ் சீற்றத்துடன் அவனைப் பார்த்து 'ஏய் மாலியே-சூத்திரனே, எங்க ளுடன் சரிசமமாக நடந்து வர உனக்கு எவ்வளவு துணிச்சல்? ஜாதிக்கட்டுப்பாடுகளை மறந்து விட்டாயா? ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டால், நீ மேலானவன் ஆகிவிட முடியுமா? பிரிட்டிஷ் காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக் கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட் டோம்! மரியாதையாக ஓடிவிடு' என்று கூறி அவமானப் படுத்தி, ஊர்வலத்திலிருந்து துரத்தி விட்டனர்.

அவ்விளைஞன் இச்சம்ப வத்தைக் குறித்து ஆத்திரமுடன் தன் நண்பர்களிடம் விவரித்தான். நண்பர்கள், 'நாம் சூத்திரர்கள், பிராமணர்களோடு சமமாக எப்படி நடந்து வர முடியும்? உனது நல்லகாலம் உன்னை அடித்து உதைக் காமல் விட்டுவிட்டனர்! பேஷ்வா ஆட்சிக்காலமாக இருந் திருந்தால், உன்னைக் கலகக்காரன் என்று முத்திரை குத்திக் கடுமை யாகத் தண்டித்திருப்பார்கள், நல்லவேளை, பிரிட்டிஷ் ஆட்சி நடைபெறுகிறது! தப்பித்தாய் தண்டனையிலிருந்து!' என்று கூறி, நண்பர்கள் அவனை சமாதானப் படுத்த முயன்றார்கள். ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை.

பின் தன் தந்தையிடமும் கூறி வருந்தினான். 'பார்ப்பனர்களை விரோதித்துக் கொள்ளாதே! அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையிலுள்ளவர்கள். அவர்கள் என்ன வேண்டு மானாலும் செய்ய வல்லவர்கள். ஆட்சியதிகாரம் அவர்கள் கையில். எனவே அவர் களை அனுசரித்துப் போய்விடு' என்று தந்தையும் அறிவுரை புகன்றார். மகன் எரிமலையாக மாறினான்.

அவமானமடைந்த அந்த இளைஞன் தான், சனாதன-பார்ப்பனீய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய  சமூகப் போராளியான மகாத்மா ஜோதி ராவ் புலே.

அவரின் மறைவு நாள் (1890) இன்று.

- மயிலாடன்
28.11.19

1 கருத்து: