• Viduthalai
வடலூர் இராமலிங்க அடிகளார் பிறந்த நாளான அக்டோபர் 5 தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வள்ளலார் கருத்துக்களையும் தந்தை பெரியாரின் கருத்துக்களையும் தொகுத்து தருகிறது இந்தத் தொகுப்பு/
ஊருக்குப் பெயரும் பெருமையும் உண்டாவது அங்கு தோன்றிய பெரியார்களால்தான் என்பது சர்வசாதாரணமான உண்மை . பெரியார் இராமசாமி அவர்கள் தலைசிறந்த சீர்திருத் தத் தந்தை என்னும் பெருமை, மலைவிளக்கென இன்று விளங்கிவிட்டது; பகைவனும் பாராட்டிமகிழும் பெருந்தொண்டினை இன்று பெரியார் ஆற்றிவருகின்றார். இதனை மறுப்பவன், ஒன்று அறிவிலியாக இருக்கவேண்டும்; இன்றேல் சூழ்ச்சிக்காரக் கும்பலைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும்.
இங்கும் அங்குமாக சில பல மாறுபாடுகள் இருப்பினும், சமூகத்தைச் செப்பனிடும் தொண்டில் வடலூராரும், ஈரோட் டாரும் தன்னிகரற்ற பெரியார்கள் என்பது பலருக்கும் ஒப்ப முடிந்தது. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், ‘ அன்பே ஆண்டவன்’ என்னும் நோக்கத்தையும் மக்களுக்குப் போதிக் கவே, இராமலிங்க அடிகளார், 1867-ஆம் ஆண்டில் “சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினைத் தோற்றுவித்தார்கள் : தான் எண்ணியவாறு ஜாதிசமயக் கட்டுப்பாடுகள் ஒழிந்துபோக வில்லை என்று இறுதியில் வருந்தினார்கள். பகுத்தறிவு வளரமூடப்பழக்க வழக்கங்கள் ஒழிய-ஜாதி மதக் கொட்டங்கள் மறைய-மனிதன் மனிதனாக வாழ - ஈரோட்டுப் பெரியார், 2-5-1925-ல் தமது சுயமரியாதை இயக்கத்திற்கு “குடிஅரசு “ என்னும் வார இதழை ஆரம்பித்தார்கள். அன்று பெரியார் கூறியவைகளைக் கவனியுங்கள்:
“மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும்.
உயர்வு, தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்று என்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளரவேண்டும்.
இதனோடு ஒப்பிட்டு வடலூர் அடிகளாரின் பொன் மொழி களையும் நோக்குங்கள்:
‘’பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசார பேதங்களும் போய், சுத்த சன் மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்,
(அருட்பா )
இன்று, வடலூர் சென்று வள்ளலாரின் திருவாக்குகளைப் பாராயணம் செய்து பக்திப்பரவசமடையும் அடியார்களில் எத் தனைபேர், அடிகளாரின் உண்மை எண்ணம் நிறைவேற - ஜாதிமதம் ஒழிய- புராணக் குப்பைகள் நீங்கத் தியாகம் செய்து செய்கை முறையில் வெளிவந்து, மக்களிடையே பாடுபடுகிறார் கள் என்று கேட்கின்றோம். அந்த அடிகளார் எண்ணத் தையும் நிறைவேற்றி வைக்க அரும்பாடு படுபவர் அந்த ஈரோட்டுப் பெரியார்தானே என்பதையாரே மறுக்க வல்லார்! ஆனால் ஒன்று:
அன்றைய தினமே வடலூரார் ஒரு உண்மையினைத் தெளி வாகக் கூறிவிட்டார். ஜாதி, மத, சமய, புராண, வேத கால மெல்லாம் மலையேறி விட்டது. உலகம் இனி இவைகளைப் பின் பற்றாது. பிற்காலத்தில் ஞானிகள் வருகின்றனர்; புது உலகை உண்டாக்குவர் என்று கூறிவிட்டார். இவ்வுண்மையினை, அடிகளார் மறைந்து, அய்ந்து ஆண்டுகட்குப் பின்னர்த் தோன் றிய ஈரோட்டுப் பெரியார் செய்துகாட்டி வெற்றி காணுகின்றார் என்பது மிகையாகாதன்றோ? வடலூரார் தெளிவு படுத்தி யதைக் காணுங்கள் :
“இதுவரையில் கர்ம சித்தருடைய காலம். அதனால் சம யங்களும், மதங்களும் பரவியிருந்தன. இப்போது வரப்போ கிறது ஞானசித்தருடைய காலம் - இனி, ஜாதி சமய முதலான ஆசாரங்களெல்லாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும். சமய, மதங்களில் சொல்லுகிற கர்த்தாக்கள், மூர்த்திகள், ஈசுவரன், பிரமம், சிவம், முதலிய தத்துவங்கள் காலப்பிரமாண பரியந்தம் இருப்பதே யொழிய அதற்குமேலிராது”
(அருட்பா)
மேற்கூறிய தெய்வீகக் கோளாறுகளும், கற்பனைகளும் நாட்டில் மறைந்துவிடும் காலம் வந்தே தீரும் என்றார். இன்று நம் கண்முன் பொய்ச்சாத்திரக் குப்பைகளையும், தேவாதிதேவக் கூட்டங்களையும் வெறுத்தொதுக்கி உண்மையினை நம் பெரியார் நமக்கு உரைத்தே வருகின்றார்:
“இந்தநாட்டின் படிப்பு, மக்கள் தொட்டதை யெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லி, முயற்சியை அலட்சியப் படுத்தவும், சோம்பேறியாக்கவும், உட்காரவுமே பயன்படுகிறது. அதனால் சோம்பேறிகளும், சாதுக்களும், சந்நியாசிகளும் இங்கு அதிகமாகி விடுகிறார்கள்.”- பெரியார் (மேல்நாடும், கீழ்நாடும்)
வெறியர்களை உண்டாக்கும் மதத்தை வேரோடு களைந் தெறிவோம். சாத்திரங்கள் ஒழிந்தால்தான் சமாதானம் நிலவும்.’’
பெரியார் (13-3-1948]
தாய்மொழிப் பற்று
அந்தக் காலத்திலேயே அடிகளுக்கு, வடமொழி வெறுப்பும், தாய்மொழிப்பற்றும் அளவு கடந்திருந்தது என்பதையறிய நாம் வியப்புற வேண்டியிருக்கின்றது. வடமொழியின், டம்பமான - கற்பனையான - விரும்பத்தகாத குணபாவங்களையும் அடிகளார் குறித்துத் தன் தாய் மொழியின் மேம்பாட்டினை இலகுவாக எடுத்துக் காட்டி விட்டார்கள் .
“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும், பெருமறைப்பையும், போது போக்கையும் உண்டுபண்ணுகிற ஆரியம் (சமஸ்க்ருதம்) முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும், அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடைய தாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி (தமிழ்) ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென் மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்’’
இவ்வாறு தனதுள்ளத்தைத் திறந்து காட்டி, கருணையும், அன்புமே ஆண்டவன் என்று அறுதியிட்டுக் கூறிய இராம லிங்கப் பெருமான் தமிழ் மொழியின் அருமையினைக்கூறி மகிழ்ந்தார். மொழிப்பற்றே வேறு எந்தப்பற்றுக்கும் அடிப் படையானது என்பதைப் பெரியார் பலமுறையும் எடுத்துக் காட்டியுள்ளார். 1924-ஆம் ஆண்டில், திருவண்ணாமலையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை தாங்கிய பொழுது பெரியார் கூறினார்:
‘’ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்று களுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப் பற்றிராதாரிடத்துத் தேசப்பற்றிராதென்பது நிச்சயம். தேசம் என்பது பாஷையை அடிப்படையாகக் கொண்டிலங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண் டுமென்பது எனது பிரார்த்தனை. “
“ இந்நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, வடமொழிக்கு உயர்வு கொடுக்கப் பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து, உலக வாழ்க்கையில் ஒரு, ஒடிந்துபோன குண்டுசிக் கும் பயன்படாத பாஷையாகிய அவ்வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்பது, வெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்துவரும் செய்தியாகும் - பெரியார் (10-5-1931)
“ என்னருந்தமிழே! நீதான் மலையாளம்; நீயே தெலுங்கு; நீயே கன்னடம் “-
பெரியார் (சென்னைப் பேச்சு)
நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும் போது மொழி போச்சு” மொழி போச்சு’ என்று கூப்பாடு போடுந்தோழனே! எங்கள் முயற்சியால் எதுபோகும்? உன் அறியாமை வேண்டுமானால் போகுமேயொழிய, உண்மையில், தமிழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகளவேனும் தீமை வருமா?”
- பெரியார் (சென்னைப் பேச்சு)
ஒரு வேடிக்கை!
நாட்டிற்கென்று தமது உடல் பொருள் ஆவி அனைத்தை யும் அர்ப்பணம் செய்த பெரியோர்களின் வாழ்க்கையினைத் துருவி ஆராயுங்கால், கேவலம் பள்ளிப் படிப்பினால் அவர்கள் மேதாவிகளாக, அல்லது சமூக சீர்திருத்தத் தலைவர்களாக விளங்கினார்கள் என்று யாரும் கூறமுடியாது. பெரியார் கூறு வன நம்மை வியப்புறச் செய்கின்றன:
நான் பள்ளியில் படித்தகாலம் மிகச்சொற்ப காலமே யாகும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3-வருடமும், பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக்கூடத்தில் 2-வருடமும் தான் படித்தவன்...... எனக்குப் படிப்பே வராது என்று என் பெற்றோர் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும், ஆதலால் என்னைப் பள்ளியில் பகலெல்லாம் பிடித்து வைத்திருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தை பிழையறக்கூட எழுத முடியாது என்பது தான்.’’
பெரியார் (21-7-1939 கோவை)
தோழர்களே! இன்றைய பெரியார் அவர்களை நம்முன் காணுகின்ற நாம், அவர்கள் மேலே கூறிய வார்த்தைகளை நினைத்து வியப்புறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இஃது உலக இயற்கையே போலும்!
கல்வி கற்கவில்லை என்பதனால் நமது வடலூர் வள்ள லாருக்கு உணவு உடை முதலியன கொடுக்காதே என்று, நமது அடிகளை வளர்த்துவந்த அவரது தமையனார் சபாபதி பிள்ளை அவர்கள், தனது மனைவியாரிடம் கீழ்க்கண்டவாறு கூறிவிட்டார்!
“நம்முடைய தம்பி இராமலிங்கம் நமது கருத்துக் கிணங்க கல்வி பயிலாது பலவகையான துறையில் காலத்தை வீணே போக்குகின்றான். ஆதலால் அவனுக்கு இன்று முதலாக நம் வீட்டில் உணவும் உடையும் அளிக்க வேண்டாம்‘’
இந்தக் கடுமையான உத்தரவைக் கேட்ட அடிகளாரின் அண்ணியார், அடிக்கடி அடிகளாரிடத்தில் பின்வருமாறு கூறுவ துண்டு :
“தங்கள் தமையனார் சொற்படி கல்வி பயிலுவதில் கருத்தைச் செலுத்தினால் இத்துணைத் துன்பங்களும் நேராவே; ஆதலால் இனியாவது எனக்காகத் தாங்கள் கல்வி பயிலுவதில் கருத்தைச் செலுத்த வேண்டும்“
உலகம் உய்யும் அன்பு நெறியினை-சகோதரத்துவம் என் னும் மெய்ந்நெறியினைப் புகட்டித் தந்தருளிய இராமலிங்க வள்ளலாரின் இளமைப் பருவம் நம்மைத் திகைக்க வைத்து விடுகின்றது என்பது மிகையாகாது.
வேறுபாடு
அடிகளார் அன்று ஆரம்பித்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் முழு வெற்றியினையும் அடையவில்லை என்று கூற முடி யும். காரணம் அவர்கள் எண்ணங்கள், ஜாதிக்கொடுமைகளும், மதத்திமிரும் பிடித்தாட்டிய நாட்டில், புரட்சிகரமானதாகவே காணப்பட்டன. புரட்சிகரமான எண்ணங்களை நாட்டில் புகுத்த அவர்கள், புரட்சிகரமான பாதையில் செல்லவில்லை. செல்லு வதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அதற்குக் கார ணம் அவர்கள் எல்லாம் வல்ல சர்வ வியாபியான ஆண்ட வனை மக்களுக்குக் காட்டி, ஜாதி மத சமய பேதங்களைக் கண்டித்தார். சுருங்கக் கூறவேண்டுமானால் “மயிலே இறகு போடு’ என்னும் பழமொழியைப்போல் அவரது நோக்கமும் பாதையும் சென்றன என்றும் கூறலாம்.
“ அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ் ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரேயுள்ளார் என்கின்ற மெய்யறிவை விளக்கி வைத்தருளினீர். சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாக அளவிறந்த சமயங்களும், அச்சமயத்தில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும் தத்துவசித்தி விகற்பங்களும், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் கற்பனைக் கலைகள் என்றும்அவைகளை அடையாதபடி தடை செய்வித்தருளினீர்” (அருட்பா)
“ஆதலால், இனியேனும் ஜீவர்களாகிய நாம் விரைந்து, விரைந்து, வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெறுவோம்“
ஜாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணேநீர் அழிவது அழகு அலவே
(அருட்பா)
இவ்வாறு வடலூரார் உள்ளமும், நோக்கமும் ஆசையும் அளவிலாது இருந்தன; உருகி உருகிப்பாடினார்கள்; பிரசங் கித்தார்கள். ஆரியத்தில் மூழ்கிய மக்கள் எளிதில் பின்பற்றி னார்களா? மேலும் அடிகளார் நெஞ்சு கொதித்துக் கூறியவை களைப் பார்ப்போம்.
“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் கொள்வாரில்லை ; முன் உள்ளவர்கள் உண்மை யைத் தெரிய வொட்டாது மண்ணைப்போட்டு மறைத்து விட் டார்கள்”
(அருட்பா)
வள்ளலாரின் இந்தக் கொள்கைகளை அப்படியே இன்று நமது பெரியார் வாழ்க்கையிலும் கண்டு தான் வருகின்றோம். ஜாதி மத சமய பேதங்களை அழித்துப் பொசுக்கவே ஈரோட் டுப் பெரியார், சுயமரியாதைச் சங்கத்தை நிறுவித் தொண்டாற்றி வருகின்றார். அரும்பாடு படுகின்றார்; “மயிலே இறகு போடு” என்ற பாதை வெற்றியளிக்காது என்பது பெரியார் நோக்கம். இங்குதான் வடலூராருக்கும் ஈரோட்டாருக்கும் உள்ள வேறுபாடு காணக்கிடக்கின்றது. புரட்சி மனப்பான்மையொன்றே கைமேல் பலன் தரும் என்பதைப் பெரியார் நன்கு கண்டவர்கள். நாட்டில் மலிந்து கிடக்கும் நாசக்காரக் கொள்கைகள் மடிய எதையும் தியாகம் செய்ய வேண்டுமென்கிறார். ஆண்டவனை முன்னே நிறுத்தி மக்களை மூடவழக்கங்களிலிருந்து விடுவித்து, அன்பு-சமத்துவம்-சகோதரத்துவம், இவைகளைப் போதித்த வடலூரார் போலல்லாது, உலகத்தை நம் கண்முன்னே நிறுத்திக்கொண்டு மக்களுடைய காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கையினை எடுத்துக்காட்டி-புரட்சி மனப்பான்மையுடன் செயல் முறையில் இன்றே செய்ய வேண்டுமென்று பெரியார் கர்ச்சனை செய்து வருகின்றார்:
“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில்கூட நடக்கக்கூடாது. கோயிலுக்குள் போகக் கடாது; குளத்தில்கூடத் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்ற கொள்கைகள் உள்ள இந்த நாட்டைப் பூகம்பத்தால் அழிக்க லாயா, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்கலாமா?”
- பெரியார்
‘’உனக்கு உரிமை மறுக்கும் சட்டத்தையும், சாஸ்திரத் தையும் நெருப்பிலிட்டுப் பொசுக்க வேண்டும். இந்த உரிமை யினை மறுக்கும் மதத்தை மடியச் செய்யவேண்டும்“- பெரியார்
- (திருச்சிப் பேச்சு)
“உயர்ந்த ஜாதி என்று எவனெவன் திமிரோடு உங்கள் முன் வருகிறானோ, அவனைக் குறுக்கேவரும் பாம்பைப்போல் கருதித் துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் ஜாதி ஒழிப்புக் குச் சரியான மருந்து. அது இன்ஜெக்ஷன் மாதிரி உடனே வேலைசெய்ய ஆரம்பித்துவிடும்.”- பெரியார் (28-1-48
“ அறியாமையால் சில அற்பர்கள் நம்மை வகுப்பு வாதி கள் என்று குறைகூறி வருகிறார்கள். நாம் வகுப்பு வாதிகள் அல்ல. எல்லோருக்கும் மேலாக வகுப்புகள் ஒழிய வேண்டுமென்று கூறிவருவது நாம்தான். வகுப்புகளை ஒழிப்பதுதான் நமது முக்கிய வேலையாகவும் இருந்து வருகிறது.”
பெரியார் [13-3-48]
ஆரிய மதப்பித்தலாட்டங்களும், ஆணவத் திமிர்பிடித்த ஜாதிக்கும்பல்களும் மலிந்து வேரூன்றி விட்ட இந்த நாட்டில் கைகண்ட மருந்து பெரியார் கொடுக்கும் புரட்சி மனப்பான்மையேயாகும் என்பதை யாரும் அறிவார். வடலூரார் இக் கொடுமைகளை கண்டு அழுது அழுது கண்ணீர் வடித்தார் - மனம் கசிந்தார் - விசனப்பட்டார் - ஜாதி மதப் பேய்கள் ஓடுவதைக் காணோம்-”கடை விரித்தோம், கொள்வாரில்லை” என் றும் கூறிவிட்டார். அடிகளார் நெஞ்சு நெக்குவிட உருகி உருகிப் பாடினார் அவைகளைச் செயல் முறையில் இன்று நாட்டில் நிறுத்திக்காட்ட முனைந்து நிற்பவர் ஈரோட்டுப் பெரியார் ஒருவரேயன்றி, அருட்பாப் புத்தகங்களைப் பாராயணம் பண்ணிக்கொண்டு சாதுகளாய் இருக்கும் கூட்டம் அல்ல என்று வெளிப்படையாகக் கூறுவோம். வடலூரார் வருந்திக் கூறினார்:
1. வேதநெறி அகமத்தின் நெறிபவுராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவனைத்தும் காட்டி
2. கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக
3. அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல்
வேண்டும்
இச்சாதி, சமய, விகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல்
4. ஜாதி, குலம், சமயமெலாம் தவிர்த்து எனை
தனித்த திரு அமுதளித்த தலைமைப் பொருளே
5. நால் வருணம் ஆச்சிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச் சரித மெலாம் பிள்ளை விளையாட்டே
6. ஜாதி சமயங்களிலே வீதி பல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எலாம் பாத்திரம் அன்று
எனவே
7. ஜாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு அறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்
8. இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்
இவை முதலா இந்திர ஜாலம் கடையா யுரைப்பார்
மயலொரு நூல் மாத்திரந்தான் ஜாலமென அறிந்தார்
மகனே நீ நூலனைத்தும் ஜாலமென அறிக!!
9. சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே
“ஜாதி மதம் தவிர்த்தவரே அணையவாரீர்!” என்று இவ்வாறாக வடலூரார் பதறிப் பதறி அழுதார்கள். சமூகத் தைக்கண்டு கண்ணீர் வடித்தார்கள். மூடப்பழக்க வழக்கங்களை அறவே கண்டித்தார்கள். ஆனால் அவருடைய பொன்னே போன்ற கருத்துக்களை இன்று நாட்டில் செயல் முறையில் செய்ய ஒருவரேனும் வந்துளரா? ஒரே ஒரு பெரியார் ஈரோட்டு இராமசாமியைத் தவிர்த்து வேறு எவர் காட்டில் வெளியில் வந்து பொதுமக்களிடைக் கூறினார்கள்? கோயில்களில் தேங்காய் உடைப்பதும், புஷ்பங்களால் அலங்கரித்து அழகு படுத்துவதும் இறைவனை வணங்கும் வழிகள் அல்லவே என்றார் வடலூரார்.
தேங்காயும் பூவும்
“தெய்வத்திற்குப் பலியிடும் கொடிய வழக்கத்தைச் சுவாமிகள் கண்டிப்பாகத் தடுத்து வந்தார்கள். அத்துடன் தேங்காயைக் கூடப் பலியிடுதல் கூடாது என்றும், ஆண்டவரை வாயார வாழ்த்துவது தவிர, புஷ்பத்தால் அர்ச்சித்தல் முறையானதல்ல வென்றும், அபிஷேகாதிகள், புஷ்ப அலங்காரங்கள், தீப அலங் காரங்கள் முதலியனவும், வாகனங்களில் ஏற்றி ஆடம்பரங்க ளுடன் உலவி வருதல் முதலியனவும், சன்மார்க்கத்துக்கு உரி யன அல்லவென்றும்; இப்படிப்பட்ட ஆரவாரங்கள் கூடா தெனவும், அரிதிற் கிடைக்கும் பணத்தை ஏழைகளின் பசி நிவர்த்திக்கே உபயோகிக்க வேண்டுமென்றும் அடிக்கடி மெய் யன்பர்களுக்கு உபதேசித்து வந்தார்கள் “
(வள்ளலார் திவ்ய சரித்திரம்)
அன்பர்களே! சிந்தித்துப் பாருங்கள். இவ்வுண்மைகளை வாழ்க்கையில் நடை முறையில் இன்று காண்கிறோமா? இவ்வாறு பெரிய மாறுதல்களை நாட்டில் நிலைநிறுத்த ஆசைப்பட்ட இராமலிங்க வள்ளலாரை அக்காலத்திலேயே பார்ப்பனர்களும் ஜோதித்துக் குறும்பாட்டங்களும் செய்து வந்தனர் என்பது அருட்பாவினைக் கற்போர் நன்கு அறிவர். ஒரு சந்தர்ப்பத்தில் வடலூரார்
“பாலும் நீரும் போலும் பார்ப்பன சிநேகம்“
என்று கூறும்படியான சந்தர்ப்பமும் உண்டாகியிருந்தது அருட்பாவில் காணப்படுகின்றது. எதனை எண்ணி இவ்வாறு கூறினார் என்று நாமே முடிவு கட்டிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
மூடப் பழக்க வழக்கங்கள்
அறிவுக்கும்-அன்புக்கும் வாழ்க்கைக்கும் சிறிதும் ஒத்திராத மூடப்பழக்கங்களை அடிகளார் அறவே கண்டித்தார்கள். மதங் கள்-சமயங்கள் - இவற்றை இப்படித்தான் கண்டித்தார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. அவ்வளவு வேகம் அவ ருடைய உள்ளத்தில் இருந்ததென்பதை அவருடைய பாடல்கள் எளிதில் எடுத்து இயம்பிவிடுகின்றன.
1. மதமென்று சமயமென்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்,
பதமென்று பதமடைந்த பத்தர் அனுபவிக்கும்
பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா
விரிந்த விதமொன்றும் தெரியாதே மயங்கினேன்
2. மதத்திலே அபிமானங்கொண்டு உழல்வேன்
வாட்டமே செயு கூட்டத்தில் பயில்வேன்
3. ஜாதியே மதமே வாழ்க்கையே யென
வாரிக் கொண்டலைந்தேன்
4. கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும், அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்,
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்
காட்சிகளும் காட்சி தரும் கடவுளரும் எல்லாம்
--பிள்ளை விளையாட்டு
“மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி என்று பெய ரிட்டுக்கொண்ட பெரியவர்களும், உண்மையறியாது, சமய வாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆனதினால், நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம்
(அருட்பா)
மேற்கூறியவைகளும், இன்னும் இவை போன்று தமது உரைகளையெல்லாம் இந்த மதங்களை ஒழிப்பதற்காகவே - அலறி அலறி வடலூரார் எழுதியுள்ளார்கள். இந்த உண்மைகளைக் கடந்த முப்பது ஆண்டுகட்கு மேலாகப் பெரியாரும், சுயமரி யாதைச் சங்கமும் பிரசாரம் செய்து வந்திருக்கிறது என்பதைப் பலரும் அறிவர். இதனையறியாப் புல்லர்கள் - பேயர்கள் - பேதைகள் பெரியாரைக் குறை கூறினால் “ இந்த நாடு உருப் படுமா?” என்றுதான் நாம் கேட்கவேண்டியிருக்கிறது. -
“இந்த மதங்களால் பிரத்தியட்சத்தில் நடமாடுகிற மனிதனையே மனிதன் அறியாமல் அடி, உதை, துவேஷம் வெறுப்புக்கொண்டு விலகி பிரிந்து இருக்கும்போது இனிக்காண முடியாததாய் இருக்கிற கடவுளை எப்படி அறிய முடியும்? சிந்தித் துப் பாருங்கள்”
- பெரியார் (தத்துவ விளக்கம்)
மனிதரில் அறிவாளி பரோபகாரி, தயவு தாட்சண்யம் உள்ளவன் என்று பிரிக்கலாமே தவிர தெய்வத் தன்மையுடைய வன், தெய்வீகத் தன்மையோடு உண்டாக்கப் பட்டவன் என்று சொல்ல என்ன நியாயமிருக்கிறது” பெரியார் (தத்துவவிளக்கம்)
“ எல்லா மதங்களும் ஒழிந்தே தீரவேண்டும். மதம் மக்க ளுடைய அறிவைத் தடைப்படுத்தக் கூடாது. உரிமையைப் பறிமுதல் செய்யக்கூடாது. மக்களனைவரும் ஒன்றென்னும் உண்மை நிலவ வேண்டும். இவை வாயளவில் அல்லது நூலளவில் இருத்தல் போதாது”
(பெரியார் கொள்கை)
மதம் என்பது ஒரு போதை தரும் (வெறி உண்டாக்கும்) வஸ்து என்று பல அறிஞர்கள் கூறியிருப்பதுபோல் மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்பவர்களுக்கு ஆவேசமும், வெறியும் உண்டாவதுதான் முக்கிய பலனாக இருக்கின்றதேயொழிய, அது கஷ்டப்படுகிற ஒரு பாவமும் அறியாத பாமரமக்களுக்குக் காரியத்தில் இன்று என்ன நன்மை செய்திருக்கிறது? செய்கிறது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டிருக்கிறது
- பெரியார் (இலங்கைச் சொற்பொழிவு).
மிருக ஜாதிகளிடைக் காணப்படும் ஒற்றுமைகூட மனித ஜாதிகளிடை கானோமே!” - பெரியார் (12-3-1948)
வள்ளலாரும் மயங்கினார்
வடலூர் வள்ளலார் ஆரம்ப காலங்களில் சைவம், வைணவம் என்கிற மதங்களாகிய மயக்கத்தில் ஆழ்ந்து விட்டதாகக் கூறி நமக்கு எச்சரிக்கை செய்கின்றார். அருட்பாவில் அவர் எழுதியுள்ளவைகளை அப்படியே தருகின்றோம்:
“நாம் பார்த்தும், கேட்டும், லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், முதலியவைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்“-
நான் முதலில் சைவசமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. நான் பாடிய முதலாவது திருமுறையில் நன்றாகத் தெரியும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் அப்போது இருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதனால் ஆண் டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார்
கைலாசபதி யென்றும், வைகுண்டபதி யென்றும், சத்திய லோகபதி யென்றும், இடம், வாகனம், ஆயுதம், வடிவம் ரூபம் முதலியவையையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார் கள். ‘ தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?’ என்று கேட்பவருக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்.”
இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர் களும் உண்மையறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கின்றார்கள். ஆனால், இதை மறைத்தவன் ஒரு வல் லவன் -
......” இதுபோல், சைவம், வைணவம், முதலிய சமயங்களி லும், வேதாந்தம், சித்தாந்தம், முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்“
[அருட்பா]
இன்றைய மக்கள் வள்ளலார் உரைகளைப் பின்பற்றுகிறார் களா? இல்லை. ஏன்? அவர் ஆரிய மதத்தைக் கண்டித்தார். எனவே ஆரியர்கள் ஒரு திராவிடத் தமிழ்ப்பெரியாரைப் புகழ்ந்து போற்றவில்லை.
“ஆரியர் எவ்வழி அவ்வழி நாங்களும்“ என்று பகுத் தறிவு இழந்து- இனப்பற்றை மறந்து-ஆரிய அடிமைகளான தமிழர்களும் வடலூராரைப் பின்பற்றாது சென்றனர். இன்று அவர் பாடலைப்பாடினால் போதுமா? ஏட்டுச் சுரக்காயாக இருக் கவா வள்ளலார் எழுதினார்? செயல்களில் நிலைநிறுத்த முனைந் தார்களா?
- பெரியார் அவர்கள் கூறுவதைக் கூர்ந்து கவனியுங்கள் :
வருணாச்சிரமம் இருக்க வேண்டும் ; ஜாதி இருக்கவேண் டும் ; ராஜாக்கள் இருக்கவேண்டும்; முதலாளிகள் இருக்கவேண் டும்; மதம் இருக்க வேண்டும்; வேதம், புராணம் இதிகாசம் இருக்க வேண்டும் ; இன்றைக்கு இருக்கிற இவைகள் எல்லாம் இருக்கவேண்டும்- என்கிற கட்சிகள் எதுவாயிருந்தாலும் அவைகள் சுயமரியாதை இயக்கத்தின் வைர வரிகள்.
பெரியார் (1933)
“மதம் இல்லாவிட்டால், மேல் மகனும், மேல் ஜாதியும், கீழ் மகனும், கீழ் ஜாதியும், சாதாரண ஆத்மாவும் மகாத்மா வும் இருக்கமுடியாது” --பெரியார் (தத்துவ விளக்கம்)
மதத்தைக் காப்பாற்றுவதன் பயனாய் மக்கள் ஜீவனை இழக்கும்படியான தொல்லை அனுபவிக்கின்றனர். சுருங்கச் சொன்னால், மதத்தால் மக்கள் வேறுபாடும், குரோதமும், ஏற் பட்டு மனிதாபிமானம் இல்லாமல், நாடு துன்பத்தை அனுபவிக் கிறது என்று சொல்லலாம்“ - பெரியார் (மேல்நாடும் கீழ்நாடும்)
“தமிழ்ப் புலவர் சிலர் ஆரியர் கொணர்ந்த பொய்வழக் கினைப் பருகி அறிவு மயங்கி அப்பொய்யினை மெய்யாகப் பிறழக் கொண்டு, இராமாயணம் பாரதம் முதலிய பொய் நூல்களை ஆக்கினர்”
- பெரியார் (திருச்சி பிரசங்கம்)
புரோகிதனும், மற்றச்சடங்குகளும் கூட, திராவிட மக் களைப் பொறுத்த வரையில், ஏன், பிற மக்களைப் பொறுத்த வரையிலும்கூட, இடைக்காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.”
- பெரியார் (12-3--48)
(“வடலூரும் ஈரோடும்“ எனும்
திருக்குறள் வீ.முனுசாமி அவர்களின் நூல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக