Published January 6, 2024

டாக்டர் சு.நரேந்திரன்
சுமார்த்தப் பிராமணர் பஞ்சாங்கத் திற்குப் பதிலாகத் தயாரித்த சைவ பஞ்சாங்கத்தின் மூலமாகத் தமிழகம் முழுவதும் சைவப் பெருங்குடி மக்களிடையே அறிமுகமாகிய பெரும் புலவர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை சுயமரியாதை இயக்கத்தில் ஆரம்பகாலத் தூண்களில் ஒருவராகப் பணியாற்றி இருக்கின்றார் என்றால் பலர் இதனை நம்ப மறுக்கின்றனர். காதில் கடுக்கனுடன் அவரது தோற்றமும், சைவத் திருமேனியும் பகுத்தறிவு பாசறைக்குப் பெரிதும் முரண்பட்ட ஒன்றாகத் தென்படுகிறது.
சுமார்த்தப் பிராமணர்கள் சிவாகமங் களின் செல்வாக்கை ஒழித்து சைவ சமயத்தை அடிமைப்படுத்தி வரு கிறார்கள் என்ற வெறுப்பு இவரிடம் வேரூன்றியிருந்தது. இதிலென்ன அதிசய மென்றால் சுயமரியாதை இயக்கத்தில் நுழைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை ‘ஆசாரிய அபிஷேகம் பெற்று சிவாச் சாரியாகச் சிவபூசை செய்தவர். 1924 கார்த்திகை மாதம் கடைசிச் சோம வாரத்தன்று எடுத்த சிவ பூசையை வாழ்நாள் இறுதிவரை கடைப்பிடித்தார்.

தந்தை பெரியார் சந்திப்பு
இராமாயண, பாரத ஆபாசங்களை உலகறிய எடுத்தியம்பி, பண்மையை நிலைநாட்டக் கங்கணங்கட்டி அது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றது என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கை இந்தியர் சங்கத்தாரால் நடத்தப் பெற்று வந்த ‘இந்தியன்’ என்ற மாத வெளியீட்டில் ‘இராமன் வரலாறு’ என்னும் கட்டுரை எழுதி, 1923 ஜூலை 10ஆம் நாள் வெளியிட்டார். இக்கட்டுரையைப் படித்த தந்தை பெரியார் அக்கட்டுரை ஆசிரியரைச் சந்திக்க விரும்பினார்.
1921இல் கோவிற்பட்டி பத்திவிளை ஆண்டு விழாத் தலைவராக வந்த பெரியாருக்கு இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை அறிமுகம் செய்து வைக்கப் பெற்றார். அப்போது பெரியார் தம் வார இதழான ‘குடிஅரசில்’ இராமாயணத்தை ஆய்ந்து தொடர் கட்டுரை எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார்.
சந்திர சேகரப் பாவலர்
இது பற்றி பெரியார் அவர்கள் இ.மு.சுப்பிரமணியப்பிள்ளைக்குத் தம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் உண்டு. 25.12.1927 முதல் வாரந்தோறும் ‘இதிகாசங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளிவரத் தொடங்கியது. பாலகாண்டம் பதினைந்துக் கட்டுரை களோடு 22.7.1928இல் முற்றுப் பெற்றது. அயோத்தியா காண்டம் 26.8.1928இல் தொடங்கிப் பதினாறு கட்டுரைகளுடன் 21.4.1929திலும், ஆரணிய காண்டம் 5.5.1929இல் தொடங்கி பத்துக் கட்டுரை களுடன் 27.10.1929லும், சுந்தரகாண்டம் 3.11.1959இல் தொடங்கிப் பதினைந்து கட்டுரைகளுடன் 2.3.1930லும், யுத்த காண்டம் 9.3.1930இல் தொடங்கிப் பத்தொன்பது கட்டுரைகளுடன் 20.7.1930லும், உத்தரகாண்டம் 3.8.1930இல் தொடங்கிப் பன்னிரண்டுக் கட்டுரைகளுடன் 9.11.1930லும் முற்றுப் பெற்றன. இக்கட்டுரைகள் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைக் காட்டுத் தீ போல நாடெங்கிலும் பரவச் செய்தன. இவையனைத்தையும் இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை தன் தாய் வைத்த பெயரான சந்திரசேகரன் என்ற பெயரை ‘சந்திரசேகரப் பாவலர்’ என்ற புனைபெயராக மாற்றி எழுதி வெளியிட்டார்.

எதிர்ப்பு மயம்
இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகள் வால்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு முரண்பாடான வற்றை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தன.
ஆனாலும் கடுமையாக இராமாயணத் தைத் தாக்கும் வகையில் இருந்தன. தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்பக் கம்பன் செய்த மாற்றங்களைப் ‘புளுகு’ என்று கண்டித்தன. ‘வால்மீகி வாய்மையும் கம்பன் புளுகும்’ என்ற வாதத்தின் அடிப் படையில் அமைந்தன. வால்மீகி கூற்று வாய்மையெனக் கொண்டு அது ஆபாசம் நிறைந்தது என்கின்றார் ஆசிரியர் இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை.
இக்கட்டுரைகளுக்கு எங்கும் எதிர்ப்பு வலுத்தது என்றாலும் இ.மு.சுப்பிர மணியப்பிள்ளையின் பெயர் தமிழ்நாடு எங்கும் பரவியது.
குடிஅரசு வெளியீடுகள்
காகிதப் பஞ்சம் தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்தில், பெரியார் பெரும் இடையூறுகளுக்கிடையே இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை, ‘சந்திர சேகரப் பாவலர்’ என்ற புனைப்பெயரில் எழுதிய தொடர் கட்டுரைகளை நூல் வடிவில் ‘இராமாயணத்தின் ஆபாசம்’ என்ற தலைப்பில் பாலகாண்டம் 12.12.1929இல் புத்தக வடிவில் வெளிவந்தது. பின் ‘இராமாயண ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் பாலகாண்டம் 1930இலும், அயோத்தியா காண்டம் 1931இலும், ஆரணிய காண்டம் 1935இலும், கிட்கிந்தா காண்டம் 1936இலும் வெளிவந்தன. காகித விலை ஒன்றுக்குப் பத்தாக இருந்து காகிதமே கிடைப்பது அருமையாக இருந்த நிலையில் 1940இல் எஞ்சியுள்ள சுந்தரகாண்டம், யுத்தகாண்டம், உத்தர காண்டம் ஆகிய மூன்றும் வெளிவத்தன.

பெரியார் குறித்து இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை
1927இல் கோவிற்பட்டியில் உயர்நிலைப் பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராக வேலை பார்க்கும் பொழுது தந்தை பெரியாரைச் சந்தித்தையும், அவர் தம் இல்லத்திற்கு வந்திருந்தமையையும் நினைவு கூர்ந்து தம் குறிப்புக்களில் இ.மு.சு. பெரியாரின் குணநலன்களைச் சிறப்பித்து எழுதியுள்ள வெண்பா வருமாறு,
‘அஞ்சாத நெஞ்சுடையான் அன்புகனி சொல்லுடையான்
வஞ்சனை யாவும் வகுத்தறிவான் . மிஞ்சவிடா
வீரன் விளங்கும் இராமசா மிப் பெரியார்
தீரன் திகழ்வான் சிறந்து’
என்று பெரியாரின் அரும்பெரும் இயல்புகளை இவ்வெண்பா அருமையாக சுருங்கச் சொல்லுகிறது.
30.12.1947இல் பெரியார் இ.மு.சுப்பிர மணியப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வருமாறு
ஈ.வெ.ரா சென்னை, நாள்.30.12.1947
அன்புள்ள தோழர் சுப்ரமணியம் அவர்கட்குத் தங்கள் கடிதம் கிடைத்தது. ஈ.வெ.ரா. வணக்கம் – “விடுதலை’ ஜனவரி 1 தேதியிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. விடுதலைக்குச் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை, பிரசுரிக்கும்படியாக வாரந்தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தால் நன்றியறிதலோடு ஏற்றுக் கொள்ளுகிறேன். அதற்காக விடுதலை ஆபிசிலிருந்து ஆண்டுக்கு ரூ.100 வீதம் அனுப்பி வருவார்கள். இராமாயண ஆராய்ச்சி திருந்திய பதிப்பு பிரசுரித்து வெளியிட நேர்ந்தால் அதற்காகவும் தங்கட்கு ஏதாவது மொத்தமாக அனுப்பச் செய்கிறேன். என்னுடைய பிரசுரம் எல்லாம் மிக மிகக் குறைந்த விலையாக இருக்கும். விற்பனையில் ஒழுங்கு இருக்காது. பெரும்பாலும் இலவசமாகவும் போய்விடும். ஆகையால் ஒரு வியாபார முறைக்குக் கட்டுப்பட்டு நடப்பது மிகவும் கஷ்டமான காரியம். ‘குடிஅரசு என் வசம் இல்லை’ அதை 3 வருட வாய்தா, ஒரு குத்தகத் தொகையின் மீது கொடுத்து விட்டேன். ஆனாலும் அனுப்பலாம். புதுக்கட்டுரை இருந்தால் அருள்கூர்ந்து அனுப்புங்கள். வணக்கம். பதில் எதிர்பார்க்கிறேன்.
தங்கள் அன்புள்ள,
ஈ.வெ.ரா
பாரதிதாசனின் பாராட்டுப்’பா’
இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, சைவ சித்தாந்தியாக இருந்து கொண்டு தன்மான இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதனைப் பாரதிதாசன் நன்கு புரிந்து கொண்டு,
‘நேர்மை நீதி அஞ்சாமை
நிறைந்த பன்னூல் தேர் புலமை
சீர்மை கணிய நூலறிவு
சித்தாந்தத்தில் பேரறிவுக்
கூர்மை, ஆர்யக் கூட்டத்தைக்
குப்பை கூளப் புராணத்தைத்
தீர்ப்புரைக்கும் திறனாய்வால்
தெளியச் செய்தான் இ.மு.சு’
என்று படைத்துள்ளார்.
பார்ப்பனர் கொட்டம் அடங்கியது
சந்திரசேகரப் பாவலர் என்னும் புனைப்பெயரில் மிகக் கடுமையாகப் பார்ப்பன ஆதிக்கத்தின் மீது இ.மு.சுப்பிர மணியப்பிள்ளை படையெடுத்தார். அதனால் பார்ப்பனர் கொட்டம் அடங்கியது என்பதைப் பாரதிதாசன்.
‘செந்தமிழுக்குத் தீதென்றால்
சிறுகுறும்புப் பார்ப்பனர்கள்
முந்துவார்கள் அவர்கள்தம்
மூக்கறும்படி செய்யும்
தந்தை பெரியாருக் கொருதுணைவன்
தமிழன் குடியர சேடுதனில்
சந்திரசேகரப் பாவலனாய்ச்
சாய்த்தான் பார்ப்பார் கொட்டத்தை’
என்று படைத்துள்ளார்.
இராமாயணம் – மகாபாரத எதிர்ப்பு
இராமாயணம், பாரதம் ஆகிய இதிகாசங்கள் பெரிய தத்துவப் புதை யல்கள் அல்ல. தமிழர்களைத் தாழ்த்தும் முயற்சிகள் என்று உண்மை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இ.மு.சு என்பதனை மேலும் இரு விருத்தப்பாக்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சுட்டியுள்ளதை,
‘இராமாயணத்தின் இழிவெல்லாம்
எத்துப் புலவர் கூற்றெல்லாம்
பராவி வணங்கும் வால்மீகி
பல்லைப் பிடித்துக் காட்டியவன்
வராத தீமை வந்ததெலாம்
வழிபட் டேற்ற கம்பனவன்
திராவிடத்தில் செய்யும்தீமை
தெரியச் செய்தான் இ.மு.சு.
பாரதத்தில் பார்ப்பனரின்
பழக்க வழக்க ஒழுக்கமின்றி
வீரம் நீதி ஒண்ணுமில்லை
வெட்கம் கெட்ட குடும்பத்தின்
சோரம் போன கதையென்று
தோலுரித்துக் காட்டியதார்?
சாரம் மிகுந்து எங்களுயர்
சந்திர சேகரப் பாவலனே’
என்று இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை யைச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அமைத்த இ.மு.சுவும் தந்தை பெரியாரும்
1932இல் பாடநூல்களுக்கான அரசு கலைச்சொற்கள் சமஸ்கிருதமாக இருந்ததால் இதற்கு எதிர்ப்புக்கூறி 1936இல் இ.மு.சுப்பிரமணியத்தின் தலைமையில் கூடி சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து 10.000 தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கித் தந்தனர். இதன்பிறகு 1940இல் சீனிவாச சாஸ்திரிக் குழுவை அரசு நியமித்து, புதிய கலைச்சொற்களை உருவாக்க தென்னிந்திய மொழி இணைச் சொற்களின் உருவாக்கத்தின் போது திராவிட மொழிகளுக்குச் சமஸ்கிருத மொழியை அடிப்படையாகவும், உருது மொழிக்குப் பாரசீசு, அராபிய மொழிகளை அடிப்படையாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்றது. இதன் காரணமாகச் சாஸ்திரி குழுவை இ.மு.சு எதிர்த்தார். இந்நிகழ்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் இராமாயண, மகாபாரத் தொடர்களின் புனைப் பெயரில் எழுதியதற்கு பிறகு ஆகும்.
அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி என பல இடங்களில் சீனிவாச சாஸ்திரி குழுவின் கலைச்சொற்களுக்கு எதிராகக் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இ.மு.சு தந்தை பெரியாரைச் சந்தித்து அரசின் நோக்கம் தமிழ்மொழியை உருக்குலையச் செய்வதே என்றார். இதனைத் தொடர்ந்து கோகலே மண்டபத்தில் தமிழ் அறிஞர் கழகத்தாரால் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு (31.08.1941) சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர். முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி, டி.எஸ்.நடராசபிள்ளை, ரெவரவண்ட் அருள் தங்கையா, தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.என்.அண்ணாதுரை, மு.இராசாக்கண்ணு, கே.எம்.பாலசுப்பிர மணியம், டி.சண்முகம் பிள்ளை ஆகியோர் பேசுவதாக அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலைச் சொல்லாக்கக் குழுவில் தமிழறிஞர் யாரும் இடம் பெறாதது கண்டிக்கத்தக்கது என்று எடுத்துக் காட்டப்பட்டது. இதன் விளைவாகச் சீனிவாச சாஸ்திரி குழுவில் இரா.பி.சேதுப்பிள்ளை, இ.மு.சுப்பிர மணியம், அ.முத்தையா போன்ற தமிழன்பர்கள் பின்னர் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பொதுவாக மொழிப் பிரச்சினையில் தீவிர தூயவாதத்தை ஏற்றுக் கொள்ளாத பெரியாரே அரசாங்க முயற்சி ஆபத்தானது என உணர்ந்து விடுதலை ஏட்டில் “குதிரைக்கு முன் வண்டி” என்ற தலையங்கத்தையும் (6.7.1946) “கலைச்சொற்கள் பெயரால் தமிழ்க் கொலையா” என்ற தலையங்கத்தை (11.10.1946)யும் இவ்விதழில் எழுதினார்.
“பழைய சொற்கள் பெயரால் பட்டியல் ஒன்றிருக்கும்போது மற்றொரு பட்டியல் ஏற்பாடு செய்வதன் உட்கருத்து என்னவென்று விளங்கவில்லை. ஒருகால் பழைய பட்டியலைக் காட்டிலும் அதிக வடசொற்கள் இந்தப் பட்டியலில் நுழைப் பதற்காகவா? அப்படியானால் தமிழ் அமைச்சரான தோழர் அவினாசிலிங்கம் அதற்கு இணங்கியது எப்படி?” (விடுதலை 11.10.1946) என்று பெரியார் கேள்வியை எழுப்பினார்.
மேலும், “எனவே பழக்கமான தண்ணீர் இருக்கும்போது ‘ஜலம்’ வேண்டியதில்லை என்கிறோம்! தூக்கம் இருக்கும்போது நித்திரை வேண்டாம் என்கிறோம். இதைப் போலவே இதர மொழிச் சொற்களைப் பற்றியும் கூடுமான வரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச்சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூலே இனி இயற்றப்படுதல் வேண்டும். வழக்கத்தில் இருந்து வந்தது என்ற காரணத்திற்காகக் கரடுமுரடான வடமொழிச் சொற்களைத் தமிழில் திணித்து விட வேண்டாமென்று எச்சரிக்கின்றோம். இப்போதே, அதாவது தொடக்கத்திலேயே கலைச் சொற்களைத் தூய தமிழ்ச் சொற்களாக அமைத்துக் கொண்டால், பிறகு போகப் போக அவைகளே புழக்கத்தில் வந்துவிடும்” என்று கூறுகின்றார். இந்த விடுதலைத் தலையங்கத்தின் நுட்ப, திட்பம் இன்றும் பாராட்டத்தக்கது. இதைத் தொடர்ந்து கலைச்சொற்களை எப்படி தரப்படுத்துவது? என்பது குறித்தும் பெரியார் கூறுவது அவரது நுண்ணறிவை விளக்குகின்றது.
“சென்னை அரசாங்கத்தார் தொகுத்து வரும் கலைச்சொற்பட்டியலை, எல்லாத் தமிழ் புலவர்களுக்கும், தமிழாசிரியர்களுக்கும், தமிழ் பத்திரிகை யாசிரியர்களுக்கும் அனுப்பி அவர்களது திருத்தங்களையும் கேட்ட பிறகுதான், சர்க்கார் அந்தப் பட்டியலை ஒப்புக் கொள்ள வேண்டும்.” “ஏதோ சதிகார முறையில் நடந்து கொண்டால், எதிர்ப்பை சமாளிக்க முடியாது” என்று கலைச்சொற்களைத் தரப்படுத்தும் முறையை நுட்பமாகக் கூறுகின்றார். இது எதிர்கால தமிழ் வளர்ச்சி குறித்து கணித்து எழுதிய கருத்தாகக் கருதவேண்டியதாக உள்ளது.
இ.மு.சு சமார்த்தர்களுக்கு எதிராக சைவ பஞ்சாங்கத்தை வெளியிட்டதையும், 1940இல் சாஸ்திரி கலைச் சொல்லாக்கக் குழு, புதிய சொற்களை உண்டாக்க முனைந்ததற்கும் சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தற்கு ஆதரவு அளித்ததையும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரு புதிராகத் தெரியக்கூடும்.
ஆனால் இது குறித்த அடிப்படைக் கருத்தை ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இ.மு.சு.வின் மகன் பேராசிரியர் இ.சு.முத்துசாமி எழுதிய “இ.மு.சுப்பிரமணிய பிள்ளை” என்ற நூலில் விளக்கமாகக் கூறுகிறார். “மவுண்ட்ரோடு மீரான் சாகிப் தெருவில் பெரியார் அவர்கள் வாழ்ந்த பொழுது, இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் அய்யாவைப் பார்க்க வந்திருந்தார். இ.மு.சு அவர்களின் சிவக்கோலத்தைக் கண்டவுடன் தோழர்கள் மாறுபட்ட பாசறையிலிருந்து யாரோ ஒருவர் பெரியாரை எதிர்த்துப் பேசுவதற்காக வந்துள்ளதாக நினைத்துக் கொண்டு அவரைத் தடுக்கப் பார்த்தனர்.
யார் அனுமதியும் பெறாமலே, மாடி ஏறி அய்யா அவர்களைப் பார்க்கச் சென்றார். அய்யா அவர்கள் முன்பே இ.மு.சு அவர்களைப் பற்றியும், சந்திரசேகரப் பாவலரைப் பற்றியும் என்னிடம் சொல்லியிருந்ததனால் மற்றத் தோழர்களைக் கையமர்த்தித் தடுத்தேன். தந்தை பெரியார் அவர்கள் பெரிதும் ஈடுபட்டு அன்புடன் இ.மு.சு அவர்களுடன் உரையாடியது நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தில் சைவ சித்தாந்தியாக இருந்து கொண்டே குடிஅரசில் சுமார்த்தர்களை எதிர்த்து இ.மு.சு அவர்கள் எழுதியதைப் பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
எங்கள் தோழர்களில் கூடப் பலராலும் அதனைச் செரிக்க இயலவில்லை. மறைந்த மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்கள் விடுதலை தலையங்கத்தில் இ.மு.சு அவர்களைக் குறிப்பிட்டது எப்படிப் பொருந்தும்? என்று கேட்டார். தன்மான இயக்கத்தில் இருந்து அவர் சமயத்தை நோக்கிச் சாய்ந்தார். நாம் சமூகத்தை நோக்கிச் சாய்ந்தோம். கா.சு.பிள்ளை அவர்களையும், மறை மைலையடிகளையும் போல, இ.மு.சு. அவர்களும் தமிழினப் பற்றுக் கொண்டு ஆற்றிய பணி மறக்கற் பாலதன்று. நமக்கும் அவருக்குமுள்ள கருத்து வேறுபாடுகளைவிட ஒன்றுபட்டு ஆற்றிய தொண்டுதான் பெரிது என்று வெள்ளையனாருக்குச் சுட்டிக் காட்டினேன்.
1970இல் விடுதலை அலுவலகத்திற்கு அடிக்கடி இ.மு.சு வருவார். உரிமை யுடன் உள்ளே நுழைந்து அன்புடன் அளவளாவு வார். சுற்றியுள்ள தோழர்களுக்கு இது வியப்பான காட்சியாக இருந்தது. ‘சித்திர ராமாயணம்’ ஒன்று எழுத வேண்டுமென்று விரும்பினார். அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் நடைபெற்றன. ஆயினும் முதுமை காரணமாக அவரால் அப்பணியினை ஆற்ற இயலவில்லை” என்று கழகத்தின் அடிப்படைக் கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுபோல தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழில் தமிழுக்கான கலைச்சொற்களுக்கான தன் ஆதரவு என்பதை குறிப்பிடும்போது எழுதுவதாவது “வடமொழியை ஆதரிக்கப் புகுந்து தானே நாம் பல மூடநம்பிக்கைகளுக்கும் பல இழிவுகளுக்கும் ஆட்பட்டுத்தவிக்கிறோம். வடமொழியில் நமக்குப் பெயர் சூத்திரன்? நாம் ஏன் சூத்திரர்கள் என்று இன்று கேட்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்கு நம் தமிழ் மொழியில் ஒரே ஒரு ஆதாரமாவது காட்டட்டுமே. ஒன்று கூட இல்லையே. வடமொழியை எடுத்துக் கொள்ளுங்கள் எவ்வளவு ஆதாரங்கள், கடவுள் வாக்குகளே அதற்கு ஆதாரமாய் வந்து விடுமே, இதே போல் மேலே கூறிய எந்த மூட நம்பிக்கைகளுக்கும் தூய தமிழ்மொழி இலக்கியத்திலிருந்து ஒரு ஆதாரங்கூட காட்ட முடியாதே. தற்போது தமிழில் வந்து புகுந்து கொண்ட வடமொழி வார்த்தைகளை எடுத்துவிட்டால் நம் குறைகள் தொல்லைகள் எவ்வளவு நீங்கும் என்பதும், தொடர்பை ஏற்றுக் கொண்டால் எவ்வளவு இழிநிலைக்கு ஆளாக வேண்டியிருக்கிறதென்பதும் புரிகின்றதல்லவா” என்று ‘குடிஅரசு’ இதழில் வினவியுள்ளார். (மொழி எழுத்து, குடிஅரசு பதிப்பகம், பக்.8, 1919)
இக்கருத்தைப் போற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஒரு மொழிக்குள் இன்னோர் மொழி வெறும் சொல்லை மட்டும் அழைத்து வருவதில்லை; ஓர் இனத்தின் மரபணுக்களை மாற்றும் கலாச்சாரக் கிருமிகளோடு தான் நுழைகிறது என்பதை ஆய்ந்தறிந்த பண்பாட்டு விஞ்ஞானி பெரியார்” என்று கூறி நம் சிந்தனையைத் தூண்டுகிறார்.
சங்க இலக்கியத்தில் காணப்படும் மொழிக் கலப்பைக் கவிப்பேரரசு, பிறமொழிக் கலப்பு 2 விழுக்காடு. திருக்குறளில் 3 விழுக்காடு. சிலப்பதிகாரம் மணிமேகலையில் 6 விழுக்காடு. தேவார திவ்வியப் பிரபந்தங்களில் 15 விழுக்காடு. வில்லி பாரதம், கம்பராமாயணத்தில் 20 முதல் 25 விழுக்காடு. தலபுராணங்களிலும் திருப்புகழிலும் 60 முதல் 70 விழுக்காடு என்பது தமிழ்ச் சொல்லியல் வரலாறு. பெரியார் கொடுத்த பெருங்குரலுக்குப் பிறகுதான் பிறமொழிகளின் ஊன்றுகோல் இல்லாமல் தன் சொந்தக் கால்களால் நடக்கத் தலைப்பட்டது தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமயத்தில் பெரியார் “தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத் தான் இருந்தது. இன்று வடமொழிக் கலப்பில் இடதுகைபோல் பிற்படுத்தப் பட்டுவிட்டது. இந்நோய்க்கு முக்கியக் காரணம் தமிழ்மொழி மதச் சார்புடையோரிடம் சிக்கிக் கொண்டது தான் என்கிறார். இக்கருத்தைக் கால்டு வெல் அவர்கள் வேறுவிதமாக பதிவிடுவது குறிப்பிடத்தக்கது தமிழின் வரலாற்றில் பின்னோக்கிச் செல்லச் செல்ல சமஸ்கிருதச் சொற்களின் எண்ணிக்கை தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது.
பெரியாரின் மேற்கண்ட கூற்றுகளைக் காணும்போது தமிழ்மொழியை இருவகையில் நோக்குவதை உணர முடிகின்றது. முதலில் தமிழ்நாட்டு மக்களிடம் இழிவுகளைக் கொண்டு வந்தது வடமொழி. இந்த இழிவுகளைத் தொடர்ந்து பேணுவதற்கு இந்தித் திணிப்பு, தமிழ்மொழிப் பற்று, சுயமரியாதை உணர்வுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. ஆனால் தமிழில் வடமொழியைக் கலந்து, தமிழ்ப் புலவர்கள் மதவாதிகள் கெடுத்துவிட்டார்கள். தமிழ் பற்றிய இந்தக் கருத்து பெரியார் வாழ்வின் பிள்பகுதியில் மேலும் வலிமை பெறுகிறது.
மேற்கூறிய கருத்துக்களை விட முத்தாய்ப்பாகப் பெரியார் கூறுவது “தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்ப செம்மைப்படுத்த வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப் படவேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்க வேண்டும். இன்றைய தமிழ் மிகவும் பழையமொழி. வெகுகாலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது. மற்ற மொழிகளைப் போல் திருத்தப்படாதது என்பவை ஒரு மொழிக்கு குறைவாகுமே தவிர பெருமையாகாது என்பேன். (தமிழ்) “மேன்மையடையவும், காலத்தோடு கலந்து செல்லவும், எதையும் மாற்றவும், திருத்தவும் வேண்டும்” (மொழி எழுத்து, குடிஅரசு பதிப்பகம், பக். 12, 1919) என்று பொட்டில் அடித்தது போல் கூறுவது “தமிழுக்கு ஏற்றம் கொடுக்க என்ன செய்தார் பெரியார்?” என்பதை நினைவூட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக